எழுபது ஆண்டுகள் கடந்தும் காசுமீர் மக்கள் பிரச்சனை இன்னும்
முடிவுக்கு வரவில்லை. காசுமீர் மக்களின் விருப்பத்தை அறியாமலேயே, அங்கு மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இல்லாத சமயத்தில், மத்திய அரசால்
நியமிக்கப்பட்ட ஆளுநரின் ஆட்சியின் கீழ், அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன்பு அந்த
மக்களுக்கு அரசியல் சாசன அடிப்படையில் உறுதியளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்த
மாதம் (ஆகஸ்ட்) 5 ஆம் தேதி நீக்கியுள்ளது மோடியின் அரசு. மத்திய அரசில் தனக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி
எதேச்சதிகாரத்துடன் இந்த ஜனநாயகப் படுகொலையை மோடி அரசு நிகழ்த்தியுள்ளது.
இலட்சக்கணக்கான இராணுவ வீரர்களை அங்கு நிறுத்தி வைத்து, மக்களை வீதிகளில் நடமாட
விடாமல் வீடுகளில் முடக்கி வைத்து விட்டு, அந்த மக்களின் வளர்ச்சிக்காகவே இதைச்
செய்ததாகக் கூசாமல் பொய்யைக் கட்டவிழ்த்து வருகிறது இந்த அரசு.
1947ல்
பிரிட்டன் ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் இந்தியாவின் அரசியலதிகாரத்தை இந்திய முதலாளிய வர்க்கத்திடமும்
பாகிஸ்தானின் முதலாளி வர்க்கத்திடமும் இரண்டாகப் பிரித்துக் கை மாற்றியது. தமது
எல்லைப் பகுதிகளுக்குள் பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இருந்த சமஸ்தானங்களை அந்தந்த
நாட்டு ஆளும் வர்க்கங்கள் தம்மோடு இணைத்துக் கொண்டன. இணைய மறுத்த ஹைதராபாத்,
ஜுனாகத் போன்ற சமஸ்தானங்கள் இந்தியாவுடன் வலுக்கட்டாயமாக இணைத்துக் கொள்ளப்பட்டன.
அந்த
நேரத்தில், எல்லைப் பகுதியில் அமைந்திருந்த காசுமீரைக் கைப்பற்ற இரண்டு நாட்டு
ஆளும் வர்க்கங்களும் முயற்சி செய்தன. காசுமீரின் இயற்கை வளங்களைச் சூறையாடவும், சந்தையைக்
கைப்பற்றவும், விரிவாதிக்க நோக்கத்தோடு காசுமீரை முழுமையாகக் கையகப்படுத்த
இந்தியாவும் பாகிஸ்தானும் தொடர்ந்து முயற்சித்து வந்தன.
ஹரி சிங்
மன்னர் தன் ஆட்சியின் கீழ் இருந்த காசுமீரை இந்தியாவுடனும் பாகிஸ்தானிடமும்
இணைக்காமல் தனியாக வைத்துக் கொள்ள
விரும்பினார். அந்த நிலையில் பாகிஸ்தானின்
ஆதரவுடன் அதன் எல்லைப் புறப் பகுதியிலிருந்த பழங்குடி மக்கள் 1947 அக்டோபரில்
காசுமீரில் உள் நுழைந்தனர். ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். இந்தியப்
படைகள் காசுமீரில் நுழைந்தன. இது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான
முதலாவது யுத்தமாகும். அந்த யுத்தம் 1948 இறுதி வரையிலும் நீடித்தது. யுத்த
முடிவில் காசுமீரின் ஒரு பகுதி பாகிஸ்தானிடமும் இன்னொரு பகுதி இந்தியப் படையின்
கீழும் வந்தது.
யுத்தம்
நடந்து கொண்டிருக்கும் போதே 1948 இன் தொடக்கத்தில் காசுமீர் பிரச்சினை ஐக்கிய
நாடுகளின் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஜம்மு-காசுமீரில் உள்ள
மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் காசுமீர் இந்தியாவிடம்
இணைவதா, பாகிஸ்தானிடம் இணைவதா அல்லது சுதந்திர நாடாக இருப்பதா என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என முடிவு
செய்யப்பட்டது. அதற்கு முன் நிபந்தனையாக பாகிஸ்தானும் இந்தியாவும் தனது படைகளை
காசுமீர் பகுதியிலிருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் 1949 ஜனவரியில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் தொடர்ந்து
இரு நாடுகளும் அதைச் செய்ய முன் வரவில்லை.
இவ்வாறு இரண்டு அரசுகளும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக காசுமீரைப்
பங்கு போட்டுக் கொண்டன.
1952ல்
காசுமீரின் அரசியல் நிர்ணய சபை தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த அரசியல் நிர்ணய
சபையின் முடிவுப்படி காசுமீரின் பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் தொடர்பு ஆகிய
பொறுப்புகள் இந்தியாவிடம் இருக்கும். பிற
அதிகாரங்கள் அனைத்தும் காசுமீர் அரசிடம் இருக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்கான சிறப்பு அந்தஸ்தை அரசியல் சட்டப் பிரிவு 370 அளித்தது.
ஆனால்,
இந்தத் தன்னாட்சி அதிகாரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்பட்டு, இந்திய அரசின்
அதிகார வரம்பிற்குட்பட்ட ஒரு மாநிலமாக காசுமீர் ஆக்கப்பட்டது. பெயரளவில் மட்டுமே
சிறப்பு அந்தஸ்துகள் சட்டத்தில் இருந்தன. ஆக்கிரமிப்பிற்கு எதிரான மக்களின் தொடர்
போராட்டங்களை ஒடுக்குவதற்காக நிரந்தரமாக
இராணுவத்தைக் காசுமீரில் இந்திய அரசு
நிறுத்தியுள்ளது. உண்மையில், இந்தியாவின் தன்னாட்சி பெறாத மற்ற பகுதிகளைக்
காட்டிலும் காசுமீர் மக்கள் பெரும் ஒடுக்குமுறைக்கு உள்ளாகியுள்ளனர்.
காசுமீர்
மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தானது எந்தவிதத்திலும் காசுமீர்
மக்களின் நலனைக் காக்கவில்லை, அங்கு சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் எதுவும்
எள்ளளவும் கிடையாது. காசுமீர் மக்களின் உண்மையான நலன் என்பது அங்கு உள்ள மக்களின்
விருப்பத்தைச் சார்ந்தது. எனவே அந்த மக்கள் தன்னுடைய நிலையை (எந்தநாட்டுடன் இணைவது
அல்லது தனியரசாக அமைவது) தானே தீர்மானித்துக் கொள்ளும் சுயநிர்ணய உரிமையை (பிரிந்து
செல்லும் உரிமையை ) அங்கீகரிப்பது ஒன்றே இதற்குச் சரியான தீர்வாக இருக்கமுடியும்.
இந்தியாவில்
உள்ள எந்த ஒரு தேசிய இனமும் சுயவிருப்பத்தின் அடிப்படையில் இணைந்தவை அல்ல, ஆனால், அவற்றில்
பெரும்பாலான தேசிய இனங்கள் தங்களை இந்திய நாட்டின் ஒரு பகுதியாக பிரிட்டனின் ஆட்சிக்குப்
பிறகும் நீட்டித்துக் கொண்டன. சில தேசிய இனங்களில் மட்டும் தேசிய விடுதலைக்கான
கோரிக்கைகள் ஒலிக்கின்றன. காசுமீர் மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள
அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை என்பது அங்கீகரிக்கப்பட வேண்டும்.
எந்த ஒரு
தேசிய இனத்திற்கும் சுயநிர்ணய உரிமைக்கான உத்திரவாதத்தை ஆளும் முதலாளித்துவ அரசு
அங்கீகரிக்க மறுக்கிறது. தன்னை ஜனநாயக அரசு என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும்
இந்திய அரசானது, சிறுபான்மை முதலாளி வர்க்கத்திற்கான ஜனநாயகமாகவும், பெரும்பான்மை
உழைக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமாகவும் உள்ளது. எனவே, ஜனநாயகத்தின் ஒரு பகுதியான
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பது முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தில்
செயலாக்கத்திற்கான சாத்தியம் கிடையாது. பாட்டாளிவர்க்கத்தின் தலைமையில்
அரசதிகாரத்தை வென்றெடுக்கும்பொழுது மட்டுமே, சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து
ஜனநாயகக் கோரிக்கைகளையும் செயல்படுத்த முடியும். உழைக்கும் மக்களுக்கான, பெரும்பான்மை
மக்களுக்கான உண்மையான ஜனநாயகம் நிலவமுடியும். விதிவிலக்காக மட்டுமே சில இடங்களில்
சுயநிர்ணய உரிமை செயலாக்கம் பெறுகிறது. அதுவும் கூட ஆளும்வர்க்கத்திற்கிடையே எழும்
முரண்பாடுகளால் இது நடைபெறுகிறது.
ஆளும்
பிஜேபி அரசானது, சட்டத்தில் மட்டுமே பெயரளவில் இருந்த தன்னாட்சி சிறப்பு அந்தஸ்தை
இல்லாமல் செய்ததோடு, ஜம்மு-காஷ்மீர் பகுதியை இரண்டாகப் பிரித்து, அதனைத் தன்னுடைய
நேரடி கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. காஷ்மீரை
சட்டமன்றத்துடன் கூடிய யூனியன் பிரதேசம் என்று வகைப்படுத்தி, எந்த விதத்திலும்
மக்களின் பிரதிநிதிகளுக்கு (உண்மையில் அவர்கள் மக்களின் பிரச்சனையில் அக்கறை
காட்டப்போவதில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும்) எவ்வித அதிகாரமும் இல்லாமல்
செய்துள்ளது. லடாக் பகுதியை இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டிலான யூனியன்
பிரதேசமாக மாற்றியமைத்துள்ளது.
இதன்
மூலம், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் உள்ள நிலங்களை அபகரிக்கவும், இயற்கை வளங்களையும்,
குறைந்த விலையிலான உழைப்பு சக்தியையும் சுரண்டுவதற்கும் இந்திய முதலாளிகளுக்கும்
பன்னாட்டு முதலாளிகளுக்கும் வழி செய்துள்ளது. இதற்காக இந்திய முதலாளிகளின் மாநாடு
ஒன்றை அடுத்த மாதம் ஜம்மு-காசுமீரில் நடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
பிஜேபி
அரசானது, தன்னுடைய நடவடிக்கை, அந்தப் பகுதி மக்களின் நலனையொட்டியே
எடுக்கப்பட்டுள்ளதாகப் பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. உண்மையில், இந்த
முடிவுகள் மக்களின் நலனுக்கானவை என்றால் ஏன் அங்கு இலட்சக்கணக்கில் இராணுவத் துருப்புகள் குவிக்கப்பட வேண்டும்?
ஊரடங்கு உத்தரவு, தொலைத்தொடர்புகள் துண்டிப்பு, ஊடக இருட்டடிப்பு, சர்வதேசச்
செய்தியாளர்கள் வெளியேற்றம் என காசுமீரில் என்ன நடக்கிறதென்று வெளி உலகிற்கு
தெரியாத வண்ணம் மறைப்பது ஏன்?
அரசின்
இந்த முடிவுகளை ஏற்காமல் மக்கள் வீதிக்கு வந்து போராட்டங்களில் ஈடுபடக் கூடாது
என்பதற்காக வீட்டிற்கு ஒரு இராணுவ வீரர் என்ற அளவில் இராணுவத்தைக் குவித்தும், சர்வதேச
சமூகத்திற்கு காசுமீர் மக்களின் உண்மையான விருப்பம் என்னவென்பது தெரியக்கூடாது
என்பதற்காகக் காசுமீரை உலகத் தொடர்பிலிருந்து துண்டித்தும் அங்கு என்ன நடக்கிறது
என்பது யாருக்கும் தெரியாமல் இருட்டடிப்பு செய்து வருகிறது.
பிஜேபியின்
நடவடிக்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் மற்ற முதலாளித்துவக் கட்சிகள் காசுமீரின் (எந்த விதத்திலும் செயல்பாட்டில்
இல்லாத)தன்னாட்சி அதிகாரம்
பறிக்கப்பட்டதைப் பெயரளவில் மட்டுமே எதிர்க்கின்றன. ஆனால், காசுமீர்
முழுவதும் இராணுவமயமாக்கப்பட்டு, மக்கள் வதைபட்டு
வருவது குறித்து இவர்கள் வாய் திறப்பதில்லை. மேலும், காசுமீர் மக்களின்
சுயநிர்ணய உரிமையை செயல்படுத்த வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று இவர்கள்
கோருவதில்லை. இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமை
வேண்டும் என்பதை இவர்கள் ஒப்புக்கொள்வதில்லை.
சுயநிர்ணய
உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்பதால் ஒவ்வொரு தேசிய இனமும் தனியான அரசை
அமைத்துக் கொள்ளவேண்டும் என்று அர்த்தம் கிடையாது, பாட்டாளி வர்க்கமானது அரசு
பெரியதாக இருப்பதையே விரும்புகிறது, இதன் சாதகங்கள் அனைத்து தேசிய இனப் பாட்டாளி
வர்க்கத்திற்கும் பலன் அளிக்கும். எனினும், இந்த ஒற்றுமையானது தேசிய இனங்களின்
சுயவிருப்பத்தினால் அமைந்த ஒன்றாக இருக்க வேண்டுமே தவிர பலாத்காரத்தால், வன்முறையால்
கட்டப்பட்ட ஒன்றாக இருக்ககூடாது.
காசுமீர்
தேசிய இனத்திற்கு மட்டுமல்ல, அனைத்து தேசிய இனங்களுக்கும் சுயநிர்ணய உரிமையை
செயல்படுத்த வேண்டுமாயின் முழுமையான ஜனநாயகம் நிலவவேண்டும். முழுமையான ஜனநாயகம்
நிலவ வேண்டுமாயின், அங்கு பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான சோசலிச அரசு அமைய
வேண்டும். இந்திய அரசியலதிகாரத்தை ஆளும் முதலாளிய வர்க்கத்திடமிருந்து கைப்பற்றி, பாட்டாளி
வர்க்கத்தின் தலைமையிலான ஜனநாயக சர்வாதிகாரத்தை படைக்கும்பொழுது மட்டுமே, பெரும்பான்மை
உழைக்கும் மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தையும், சுயநிர்ணய உரிமை உள்ளிட்ட அனைத்து
ஜனநாயகக் கோரிக்கைகளையும் செயல்படுத்த முடியும். அனைத்து தேசிய இனப் பாட்டளி
வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டமே அதைச் சாத்தியமாக்கும்.
-
குமணன்
பிரிவு 370 இருப்பதால்தான் காசுமீர் வளர்ச்சியடையவில்லை
என்று மோடியும் அமித்சாவும் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது எவ்வளவு
அபத்தமான பொய் என்பதைப் பொருளாதார அறிஞர் ழீன் திரேழே (Jean Dreze) என்பவர் குஜராத்தையும் ஜம்மு-காசுமீரையும் ஒப்பிட்டுச்
சில விவரங்களைத் தருகிறார். அவை பின் வருமாறு:
|
|||
|
குஜராத்
|
காசுமீர்
|
வருடம்
|
வாழ் நாள் காலம் (ஆண்டுகளில்)
|
69
|
74
|
2015-16
|
பிறந்த ஐந்து வருடங்களுக்குள் குழந்தைகள் இறப்பு (%)
|
33
|
26
|
2015-16
|
குழந்தைப் பேறு (குழந்தைகள்/பெண்)
|
2.2
|
1.7
|
2015-16
|
15-19 வயதுப் பெண்களில் 8வருடப் பள்ளிப் படிப்பு முடித்தவர்கள்
(%)
|
75
|
87
|
2015-16
|
எடை குறைவான குழந்தைகள் (%)
|
39
|
17
|
2015-16
|
முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் (%)
|
50
|
75
|
2015-16
|
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள கிராமப்புற மக்கள் (%)
|
22
|
12
|
2011-12
|
ஆண் விவசாயக் கூலித் தொழிலாளிக்கு கூலி (நாள் ஒன்றுக்கு
ரூபாயில்)
|
208
|
445
|
ஜூன் 2018
|
(Source: NHFS;
RBI, SRS Bulletin)
|
|||
மேலும், நட்ட ஈடு எதுவும் கொடுக்காமல்
நிலப்பிரபுக்களிடமிருந்து நிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்குப் பகிர்ந்து
கொடுத்ததன் மூலம் நிலச் சீர்திருத்தத்தை முழுமையாகச் செய்த முதல் மாநிலம்
காசுமீர்தான். அதன் மூலம் கிராமப் புறத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்த மக்களின்
எண்ணிக்கையைப் பெரும் அளவு குறைத்த பெருமையும் அந்த மாநிலத்திற்கு உண்டு. இதை
எல்லாம் மறைத்து விட்டு, பிரிவு 370 இருப்பதால்தான் காசுமீர் மிகவும் பின்
தங்கியுள்ளது என அண்டப் புளுகை
அவிழ்த்து விட்டுத் தன் ஜனநாயக விரோத நடவடிக்கைக்குப் பொய்யாக நியாயம்
கற்பிக்க முயலுகின்றனர் ஆட்சியாளர்கள்.
|
Comments
Post a Comment