Skip to main content

முதலாளிய சமூகமும் வேலையில்லாத் திண்டாட்டமும்



     இந்த ஆண்டு தமிழ் நாட்டில் உள்ள 459 பொறியியல் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 48% இடங்களே நிரம்பியுள்ளன. அதாவது மொத்தம் உள்ள இடங்கள் 1,67,000. அவற்றில் சுமார் 80,000 இடங்களே நிரம்பியுள்ளன.

ஏன் இந்த நிலை?

     தமிழ் நாட்டில் முன்பு 550 பொறியியல் கல்லூரிகளுக்கும் மேல் இருந்தன. அவை வருடம்தோறும் சுமார் இரண்டு இலட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்கி வேலைச் சந்தையில் குவித்தன. பட்டதாரிகளின் எண்ணிக்கை குவிந்ததால், வேலைக்கான போட்டி அதிகரித்தது. ஐ.டி.. கம்பனி முதலாளிகளுக்கும் இதரத் தொழில்துறை முதலாளிகளுக்கும்  குறைந்த சம்பளத்தில் பொறியியல் பட்டதாரிகள் கிடைத்தனர். ரூபாய் நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் எனச் சம்பளம் இருந்த இடத்தில் பத்தாயிரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் வேலை செய்ய வேண்டிய நிலைக்குப் பட்டதாரிகள் தள்ளப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானப் பட்டதாரிகளுக்கு அந்த வேலைகள் கூடக் கிடைக்கவில்லை; படிப்புக்குச் சம்பந்தமில்லாத வேலைகளுக்கும், மிகக் குறைந்த சம்பளத்திற்கும் கூடச் செல்ல வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.

     இதன் காரணமாகப் பொறியியல் படிப்புக்கான மதிப்பு சமூகத்தில் வீழ்ந்தது. அதனால் பல பொறியியல் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளன. இன்னும் பல கல்லூரிகள் மூடப்படும் நிலையில் உள்ளன.

வீணாக்கப்பட்ட சமூகத்தின் சேமிப்பு

     ஒரு மாணவனுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம் ,உணவுக் கட்டணம், போக்குவரத்துச் செலவு என்று  ஓராண்டுக்குச் கல்லூரிச் செலவு ரூபாய் ஒரு இலட்சம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, இரண்டு இலட்சம் மாணவர்களுக்கு வருடம் ஒன்றிற்கு மொத்தச் செலவு ரூபாய் இரண்டாயிரம் கோடி ஆகும். நான்காண்டுப் படிப்புக்கு மாணவர்களுக்காகப் பெற்றோர்கள் செய்த மொத்தச் செலவு எட்டாயிரம் கோடி ரூபாய். இவ்வளவு செலவு செய்த பிறகும் ஒட்டு மொத்த மாணவர் சமுதாயமும் கண்ட பலன் வேலை யில்லாத் திண்டாட்டம் அல்லது குறைந்த சமபளத்திலான  வேலைதான். இதன் பொருள் சமூகத்தின் சேமிப்பாக இருந்த  கோடிக்கணக்கான ரூபாய் பயனற்ற முறையில் வீணடிக்கப்பட்டது என்பதுதான்.


     இன்னொரு பக்கம் அவர்கள் மீதான கடன் சுமை. கல்விக்காகத் தனியார்களிடமிருந்தும் வங்கிகளிடமிருந்தும் பெற்ற கடன்களைக் கட்ட முடியாமல் இன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் வேதனையில் உள்ளனர். பெரும் முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்க் கடன்களைத் தள்ளுபடி செய்து வரும் வங்கிகள் மாணவர்களின் கல்விக் கடன்களை வசூலிப்பதில் பெரும் கெடுபிடிகள் செய்வதன் மூலம் மாணவர்களைத் தற்கொலைக்குத் தள்ளி வருகின்றன.   
     இதனால் பெரும் பயன் அடைந்தவர்கள் யார்? கல்வி வியாபாரிகள், ஐ.டி.. நிறுவன, பிற தொழில்துறை முதலாளிகள், அதிகாரவர்க்கம், ஆட்சியாளர்கள் ஆகியோர்தான்.

கல்வி வியாபாரிகளும் அவர்களின் கூட்டாளிகளும்

     மாணவர்களுக்கு எதிர் காலக் கனவுகளை ஊட்டி கோடிக்கணக்கான ரூபாய்களைக் கல்வி வியாபாரிகள் கொள்ளை அடித்தனர். அதே சமயத்தில் இலட்சக்கணக்கான பட்டதாரிகளை வேலைச் சந்தையில் குவித்தனர். அதன் மூலம் மலிவான சம்பளத்திற்கு ஐ.டி. நிறுவனங்களுக்கும், பிற தொழில்துறைகளுக்கும் பொறியியல் பட்டதாரிகள் கிடைக்க வழி வகுத்தனர். அந்த நிறுவன முதலாளிகள் அதனால் பெரும் பயன் அடைந்தனர்.
     புற்றீசல்கள் போல நூற்றுக்கணக்கான தரமற்ற கல்லூரிகள் தொடங்க ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அனுமதித்தனர். அதன் மூலம் அவர்கள் தங்களுடைய கல்லாப்பெட்டிகளை நிரப்பிக் கொண்டனர்.
     தமிழ் நாட்டிலும் இந்திய அளவிலும் தொழில்துறையில் ஆண்டுதோறும் பொறியியல் பட்டதாரிகளின் தேவை எவ்வளவு, அவர்களை உருவாக்கத் தேவையான கல்லூரிகள் எத்தனை, அவற்றின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டமிட்டு இந்த ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அனுமதி அளித்து இருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது.
     ஆனால் இங்குள்ள முதலாளிய அமைப்பில் அத்தகைய திட்டமிடல் இருப்பதில்லை. இங்கு தீர்மானிப்பவை இலாப நோக்கமும் இலஞ்சமும் ஊழலும்தான்.
     வேலைச் சந்தையில் பொறியியல் பட்டதாரிகளுக்கு உள்ள தேவையைப் பயன்படுத்திக் கொண்டு கல்வி வியாபாரிகள் தங்கள் தொழிலைத் தொடங்கினர். அதற்காக ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் பணத்தை அள்ளி வீசிக் கல்லூரிகளுக்கு அனுமதி பெற்றனர். ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் கல்லூரிகளின் தரம் பற்றியோ எவ்வளவு பட்டதாரிகள் தேவை என்பது பற்றியோ கவலை இல்லை. அவர்களுக்குத் தேவை பணம். அவ்வளவுதான்.

வேலையில்லாப் பட்டாளமும் முதலாளிகளும்

     தொழில்துறை முதலாளிகளுக்கோ வேலையில்லாப் பட்டாளம் எப்பொழுதும் சந்தையில் வேலை தேடிக் கொண்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் மலிவான கூலிக்கு அவர்களைச் சுரண்ட முடியும். பெரும் இலாபம் அடைய முடியும்.

     இந்த முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை படித்த அனைத்து மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேலை கிடைக்காது. ஒரு வேலையில்லாப் பட்டாளம் எப்பொழுதும் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் முதலாளிகளுக்குக் குறைந்த கூலிக்குத் தொழிலாளர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள்.
     தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் முதலாளிகளிடமே இருப்பதால் அவர்களுக்குக் கிடைக்கும் இலாபத்தை ஒட்டியே வேலை வழங்கப்படும். அவர்களுக்கு இலாபம் இல்லை என்றால் தொழிற்சாலைகளும்  மூடப்படும். இவ்வாறு  தொழிற்சாலைகளும் நிறுவனங்களும்  முதலாளிகள் கைகளில் இருப்பதால் சமூகத்தில் உள்ள உழைப்பின் ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாத நிலைமை இங்கு நிலவுகிறது. சமூகத்தின்  உழைப்பு ஆற்றலை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலை என்பது சமூக வளர்ச்சியைத் தடுப்பது என்பதாகும்.  சமூக வளர்ச்சிக்குத் தடையாக உள்ள இந்த முதலாளிய அமைப்பு நிலவும் வரை அனைவருக்கும் வேலை என்பது இந்த சமூகத்தில் கிடைக்காது.
     தொழிற்சாலைகளும் நிறுவனங்களும் சமூகத்திற்குச் சொந்தமாக இருக்கும்போதுதான், உற்பத்தி என்பது தனி முதலாளிகளின் இலாபத்திற்காக என்ற அடிப்படையில் இல்லாமல், சமூகத்தின் ஒட்டு மொத்தத் தேவைகளை நிறைவேற்றுவது  என்ற அடிப்படையில் அமையும். அதைத்தான் சோசலிச சமூக அமைப்பு என்கிறோம். அத்தகைய சோசலிச சமூக அமைப்பில்தான் அனைவருக்கும் வேலை என்பது சாத்தியம். மாணவர்களும் இளைஞர்களும் இதைப் புரிந்து கொண்டு இந்த முதலாளிய அமைப்புக்கு முடிவு கட்டி சோசலிச சமூகத்தை உருவாக்கத்  தொழிலாளர் வர்க்கத்துடன் அணி சேர வேண்டும். 
- புவிமைந்தன்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...