பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் செயலைக்
காங்கிரசின் தலைமையிலான அரசு தொடங்கி
வைத்தது. மோடியின் அரசு இன்று அதை வேகமாக நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்து
வருகிறது.
சேலம்
உருக்காலை, கர்நாடகத்தில் பத்ராவதியில் உள்ள விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும்
எஃகுத் தொழிற்சாலை, மேற்கு வங்காளத்தில் துர்காபூரில் உள்ள உலோகக் கலப்பு எஃகுத்
தொழிற்சாலை ஆகியவற்றைத் தனியாருக்கு விற்க மோடி அரசு முடிவு செய்துள்ளது.
ஜிண்டால், வேதாந்தா, டாட்டா, அர்செலோர் மிட்டல் ஆகிய முதலாளிய நிறுவனங்கள் அவற்றை வாங்கத் தயாராக உள்ளன.
அகமதாபாத்,
லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர், கவுஹாத்தி, திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின்
பொறுப்பு அதானி நிறுவனத்திற்குத் தரப்பட்டுள்ளது.
ரயில்வேத்
துறையில் மேற்குவங்காளத்தில் சித்தரஞ்சன் லோகோமோடிவ் வொர்க்ஸ், தமிழ்நாட்டில்
பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, மேலும் பனாரசில் உள்ள டீசல்
லோகோமோடிவ் வொர்க்ஸ், கபூர்தலா ரயில் பெட்டித் தொழிற்சாலை, ரேபரேலி நவீன இரும்புப்
பெட்டித் தொழிற்சாலை, பாட்டியாலா டீசல் லோகோமோடிவ் நவீனத் தொழிற்சாலை, பெங்களூரு
ரெயில் சக்கரம் தயாரிக்கும் தொழிற்சாலை ஆகியவற்றையும் தனியார் வசம் ஒப்படைக்க
அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும்
முதற்கட்டமாக டெல்லி-லக்னோ தேஜஸ் விரைவுத்தொடர் வண்டியை இந்திய ரயில்வே உணவு
மற்றும் சுற்றுலாக் கார்ப்பரேசனிடம் (Indian Railway Catering and Tourist
corporation) ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து பல தொடர்வண்டி
விரைவுத் தடங்களை அந்த நிறுவனத்திடம்
ஒப்படைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
மேலும் இந்தியப்
பொதுத்துறையில் உள்ள தகவல் தொடர்பு
நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) ஐ செயல்படவிடாமல் படிப்படியாகச் சீர்குலைத்து அதன் சொத்துகளைத் தனியார் முதலாளிகள்
அபகரிக்க இந்த அரசாங்கம் அனைத்து வேலைகளையும் செய்து வருகிறது.
இவ்வாறு
பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலம் மக்களின்
வரிப்பணத்தில் உருவான, மக்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளையும், அவற்றுக்குச்
சொந்தமான ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்களையும், பிற சொத்துகளையும்
உட்கட்டுமானங்களையும் தனியார் முதலாளிகளுக்குக்
குறைந்த விலையில் தாரை வார்க்க இந்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கரையான் புற்றில் கருநாகம்
1947 ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல்
அதிகாரத்தைப் பெற்ற இந்திய முதலாளிய வர்க்கம் பெரும் மூலதனங்கள் தேவைப்படும்
சுரங்கத் தொழில், இருப்புப் பாதை, சாலைப் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து,
துறைமுகங்கள், கனரகத் தொழில் உட்பட்ட உட்கட்டுமானங்கள் ஆகியவற்றில்
மூலதனமிடுவதற்குத் தயாராக இல்லை. ஏனென்றால், முதலாவதாக, அவற்றுக்குப் பெரும்
மூலதனம் தேவை. இரண்டாவதாக, அந்தத் திட்டங்கள் முடிவடைந்து பலன் கொடுக்க நீண்ட
காலம் காத்திருக்க வேண்டும். மூன்றாவதாக, அவற்றில் கிடைக்கும் இலாப விகிதம்
மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் இத்தகைய அடிப்படைத் தொழில்கள் இல்லாமல்
முதலாளிகளின் பிற தொழில்கள் வளர முடியாது. எனவே அதற்கான பொறுப்பை இந்திய அரசு
ஏற்றுக் கொண்டது.
பொதுத்துறை
மூலம் அரசு இந்த அடிப்படைத் தொழில்களில் முதலீடு செய்தது. அதற்குத் தேவையான நிதி
ஆதாரங்களை மக்களின் வரிப் பணத்திலிருந்தும், பிற மூலாதாரங்களிலிருந்தும் அரசு
திரட்டியது. மாபெரும் கனிம வளச் சுரங்கங்கள், இருப்புப் பாதைகள், சாலை வசதிகள்,
துறைமுகங்கள், கனரகத் தொழிற்சாலைகள்
ஆகியவற்றைப் பெரும் மூலதனமிட்டுப் பொதுத்துறை மூலம் வளர்த்தெடுத்தது.
மேலும் அவற்றில் பணி புரிவதற்குத் தேவையான பணியாளர்களுக்கு அவசியமான கல்வியையும், பயிற்சிகளையும் திறன்களையும்
வழங்க ஏராளமான கல்விக் கூடங்களையும், பயிற்சி நிலையங்களையும் பல்கலைக்கழகங்களையும்
ஆராய்ச்சி நிலையங்களையும் உருவாக்கியது.
கலப்புப்
பொருளாதாரம் என்ற பெயரிலும் ‘நேருவின் சோசலிசம்’ என்ற பெயரிலும் மக்களின் வரிப்
பணத்திலிருந்தும் பொதுத்துறையில் பணி புரிந்த தொழிலாளர்களின் உழைப்பிலிருந்தும்
பொதுத்துறை வளர்த்தெடுக்கப்பட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் முதலாளிய
நிறுவனங்கள் வளர அடிப்படையை அமைத்துத் தந்தன.
இவ்வாறு கடந்த
எழுபது ஆண்டு காலமாக மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டு
வளர்க்கப்பட்டு வந்த பொதுத்துறை நிறுவனங்களை, கரையான் புற்றில் கருநாகம் புகுவது
போல, இன்று தனியார் முதலாளிய நிறுவனங்கள்
கைப்பற்றி அவற்றிலிருந்து முழுமையாக இலாபத்தை அறுவடை செய்ய முயற்சி செய்து வருகின்றன.
இந்த நாட்டு
முதலாளிய நிறுவனங்கள் மட்டுமின்றி அயல் நாட்டு முதலாளிய நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களைக்
கபளீகரம் செய்து வருகின்றன. 1990க்குப்
பிறகு உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற பெயரில் இங்குள்ள
ஆளும் முதலாளிய வர்க்க அரசு அந்நிய நாட்டு
நிறுவனங்களுக்குக் கதவைத் திறந்து விட்டது. அதன் விளைவாக இன்று இந்த நாட்டு
முதலாளிய நிறுவனங்களும் அந்நிய நாட்டு
முதலாளிய நிறுவனங்களும் சேர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை விழுங்கி வருகின்றன.
மக்களின் சொத்துகளை விற்று
முதலாளிகளுக்குச் சலுகை
ஒரு பக்கம் இந்த
அரசாங்கம் பொதுத்துறை நிறுவனங்களை அப்படியே முழுமையாகத் தனியாருக்குத் தாரை
வார்த்துத் தருகிறது. அதே சமயத்தில் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும் என்ற
காரணம் கூறிப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்று வருகிறது.
இந்த ஆண்டு மட்டும் ஒரு இலட்சத்து ஐந்தாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத்துறைப் பங்குகளை விற்க இந்த அரசாங்கம்
திட்டமிட்டுள்ளது. இவ்வாறு படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் ஒழிக்க
இந்த அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது.
நிதிப்
பற்றாக்குறையைக் குறைக்க பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்த
அரசாங்கம்தான், அதே சமயத்தில், ஆண்டுக்கு
400 கோடி வரையிலும் உற்பத்தி
செய்யும் முதலாளிய நிறுவனங்களின் மீதான வரியை 30 விழுக்காட்டிலிருந்து 25
விழுக்காடாகக் குறைத்து முதலாளிகளுக்குச் சேவை செய்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களைத்
திட்டமிட்டு சீர்குலைத்தல்
பொதுத்துறை
நிறுவனங்களிலிருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான ரூபாய்களை இலாபமாகப் பெறும் இந்த அரசாங்கம் அவற்றில் போதிய அளவுக்கு
முதலீடு செய்வதில்லை; அவற்றை நவீனப்படுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க வழி
ஏற்படுத்துவதில்லை. அதன் மூலம் தனியார் முதலாளிய நிறுவனங்களுடன் போட்டியிட முடியாத
நிலையை உருவாக்கி அவற்றை நட்டத்திற்கு உள்ளாக்கி வருகிறது. பிறகு அதனையே காரணமாகக்
காட்டித் தனியாருக்குக் குறைந்த விலைக்கு விற்று வருகிறது.
எடுத்துக்காட்டாக,
தகவல் தொடர்பு நிறுவனமான BSNL ஐப் பார்ப்போம். அந்த நிறுவனத்தின்
வருமானத்திலிருந்து உருவாக்கப்பட்ட தகவல் உயர் கோபுரங்களைத் தனிக் கார்ப்பரேசனாக
அரசாங்கம் மாற்றியது. அவற்றைத் தனியார் நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட்டு இலாபம்
சம்பாதித்து வருகிறது. அதே சமயத்தில் BSNL உம் அதற்கு வாடகை தர வேண்டும் என்ற
நிலைக்கு அதனைத் தள்ளியுள்ளது.
மேலும் தனியார்
நிறுவனங்களுக்கு 4G வசதியைப் பல
ஆண்டுகளுக்கு முன்பே வழங்கிய இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (TRAI)
BSNL க்கு இன்னும் அந்த வசதியை வழங்க
மறுத்து வருகிறது. அதன் மூலம் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலையை
உருவாக்கியுள்ளது.
மேலும் BSNL க்குச்
சொந்தமான ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்புக் கொண்ட நிலத்தை அதற்கு
வழங்காமல் அதைத் தனியார் நிறுவனங்களுக்குக் குறைந்த விலைக்கு விற்கத் திட்டமிட்டு
வருகிறது. இவ்வாறு படிப்படியாக அதைச் சீர்குலைத்து அதன் ஊழியர்களுக்கு ஊதியம்
கூடக் கொடுக்க முடியாத நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளியுள்ளது.
படிப்படியாகப்
பொதுத்துறை நிறுவனங்களைச் சீர்குலைத்துத் தனியாருக்கு விற்பதன் மூலம் பெரும் பயன்
அடைபவர்கள் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் தனியார் முதலாளிகளும்தான். அதே சமயத்தில் அந்த
நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்கள் ஊதியக் குறைப்புக்கும்,
வேலையிழப்புக்கும் ஆளாகின்றனர்.
எடுத்துக்காட்டாக,
ஆறு விமான நிலையங்களின் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ள அதானி குழுமம் அவற்றில் வேலை
செய்யும் பணியாளர்களில் 40 விழுக்காடுப் பணியாளர்களை மட்டுமே வேலைக்கு வைத்துக்
கொள்ளும். மீதிப் பணியாளர்களுக்கு இந்திய விமானநிலைய நிர்வாகம்தான் (Airport
Authority of India) பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர்களை உபரித் தொழிலாளர்கள்
எனக் கூறி இந்திய விமானநிலைய நிர்வாகம் வீட்டிற்கு அனுப்பும். அதே போல ரயில்வேத்
துறையைத் தனியார்மயமாக்குவதற்கு ஏதுவாக
முன்கூட்டியே மூன்று இலட்சம் தொழிலாளர்களை
வேலையிலிருந்து நீக்க ரயில்வேத் துறை முடிவு செய்துள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள் சமூகத்தின்
சொத்து
மக்களின்
உழைப்பிலிருந்து உருவானவை பொதுத்துறை நிறுவனங்கள். அவை மக்களின் சொத்துகள். இன்று
அவற்றைத் தனியார் முதலாளிகள் அடிமாட்டு விலைக்குக் கொள்ளையடித்து வருகின்றனர்.
அதற்கு ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றனர். இந்த
நிலையில் தனியார்மயமாக்குதலை எதிர்த்து அந்த அந்தத் துறையிலுள்ள தொழிலாளர்கள்தான்
போராடி வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு
எதிராகப் போராட்டம் எதுவும் எழவில்லை என்றே கூறலாம். ஏன் இந்த நிலைமை?
இங்கு
பொதுத்துறை நிறுவனங்கள் என்பது
மக்களுக்குச் சொந்தமானது என்ற உணர்வு மக்கள் மத்தியில் எப்பொழுதும்
உருவாக்கப்படவில்லை. அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மத்தியில் கூட அவை
மக்களுக்குச் சொந்தமானவை என்ற எண்ணம் உருவாக்கப்படவில்லை. ஏனென்றால் அவற்றின்
நிர்வாகத்திலோ அவற்றின் திட்டமிடலிலோ தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இல்லை.
மக்களுடைய பிரதிநிகளுக்கும் எந்தப் பங்கும் இல்லை. அவை அதிகாரிகளின் நிர்வாகத்தில்
உள்ள நிறுவனங்கள். முதலாளிகளுக்குப் பதிலாக இங்கு அதிகாரவர்க்கம் அனைத்தையும்
தீர்மானிக்கிறது. தொழிலாளர்கள் ஒரு தனியார் முதலாளிகளிடம் வேலை செய்வதைப்
போலத்தான் இங்கும் வேலை செய்து வருகின்றனர். தாங்கள் வேலை செய்யும் நிறுவனம்
மக்களுக்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற சமூக உணர்வும் தொழிலாளர்கள்
மத்தியில் உருவாக்கப்படவில்லை. அதனால் அந்த நிறுவனங்களும் தொழிலாளர்களும்
மக்களிடமிருந்து அந்நியப்பட்டே இருந்து வருகின்றன.
அதனால்தான்
இன்று ஒரு பொதுத்துறை நிறுவனம் தனியார்மயமாக்கப்படும்போது குறிப்பிட்ட அந்தத்
துறையில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள் மட்டுமே அதை எதிர்த்துப் போராடும் நிலை
ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆதரவாகப் பிற
பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூடப் போராட முன்வருவதில்லை.
பொதுமக்களும் போராட முன்வருவதில்லை.
தொழிலாளர்கள் கட்டுப்பாட்டின் கீழ்
பொதுத்துறை நிறுவனங்கள்
பொதுத்துறை
நிறுவனங்கள் அதிகார வர்க்கத்தின் அல்லது
ஆட்சியாளர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல , அவை சமூகச் சொத்து என்ற உணர்வும்
அவற்றைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்தக் குறிப்பிட்ட நிறுவனத்தில் பணி
புரியும் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல,
அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும்,
தனியார் முதலாளிகளின் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கும், பொது
மக்களுக்கும் என சமூகத்தில் உள்ள
அனைவருக்கும் உண்டு என்ற உணர்வும் அனைத்துத் தொழிலாளர்கள் மத்தியிலும் பொது
மக்கள் மத்தியிலும் உருவாக்கப்பட வேண்டும். இந்த உணர்வை உருவாக்க வேண்டிய முதற்
கடமை தொழிலாளி வர்க்கத்திற்கு உள்ளது.
இந்த உணர்வை
உருவாக்குவதோடு மட்டுமல்லாமல் அதை நடைமுறைக்குக் கொண்டு வர அதிகாரவர்க்கத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துப் பொதுத்துறை நிறுவனங்களையும் தொழிலாளர்களின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். ஏனென்றால் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவது
தொழிலாளர் பிரச்சினைகளையோ மக்களுடைய பிரச்சினைகளையோ தீர்க்காது. அவை மென்மேலும்
முதலாளிகள் தொழிலாளர்களைச் சுரண்டத்தான் வழி வகுக்கும்; நாட்டில் தொடர்ந்து
வேலையில்லாத் திண்டாட்டமும் ஏழ்மையும் ஏற்றத்தாழ்வும் நீடிக்கவே வழி வகுக்கும்.
எனவே தனியார்மயமாக்கலுக்கு
மாற்றாக ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர் குழுக்களை உருவாக்கி அவற்றின்
கட்டுப்பாட்டின் கீழ் அந்தத் தொழிற்சாலையின் நிர்வாகம், உற்பத்தி ஆகியவற்றைக்
கொண்டு வர வேண்டும். இலாப நோக்கத்தின்
அடிப்படையில் அல்லாமல் சமூகத்தின் தேவை என்ற அடிப்படையில் தொழிலாளர் குழுக்கள்
தமது உற்பத்தியைக் கட்டமைக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே தொழிலாளர் வர்க்கம்
தமது எதிர்காலத்தை வென்றெடுக்க முடியும். சமூகத்தின் நல்வாழ்விற்கும் வழிகாட்ட
முடியும்.
- புவிமைந்தன்
Comments
Post a Comment