அயோத்தி பாபர் மசூதி தொடர்பான வழக்கின்
மீது கடந்த 9-ந்தேதி (9.11.2019) உச்சநீதிமன்றம்
தனது தீர்ப்பை வழங்கியுள்ளது. கீழமை நீதிமன்றங்களின் படிக்கட்டுகளைத் தாண்டி
வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்று முடிவுக்கு வர நீண்ட நெடிய எழுபது ஆண்டுகள் பிடித்துள்ளன.
இதுவே இந்த நாட்டில் நிலவி வரும் நீதி
வழங்கும் முறையில் உள்ள கோளாறைச் சுட்டிக் காட்டுகிறது.
‘ நாட்டில் அமைதியையும் மதங்களுக்கிடையில்
நல்லிணக்கத்தையும் நிலை நாட்டுவதற்கான அருமையான தீர்ப்பு’ என்று கூறி அதனை ஒரு சில
கட்சிகளைத் தவிர பெரும்பாலும் அனைத்து பிரதான கட்சித் தலைவர்களும் வரவேற்று
உள்ளனர்: அனைத்து ஊடகங்களும் வரவேற்றுத் தலையங்கங்கள் தீட்டியுள்ளன. வரலாற்றுச்
சிறப்புமிக்க தீர்ப்பு என பிரதமர் மோடி அதை வரவேற்று நாட்டு மக்களிடையே உரையாற்றி
உள்ளார்.
ஐந்து நீதிபதிகளைக் கொண்ட அமர்வு தனது
ஒருமித்த குரலில் அளித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பின் சாராம்சம் என்ன?
‘மசூதியில் 1857 முதல் 1949 வரையிலும் முஸ்லீம்கள் மசூதியின்
உட்பிரகாரத்தில் தொழுகை நடத்தி வந்தனர். 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ந்தேதி இரவு இந்து மதக் கடவுளின் சிலைகள்
மசூதிக்குள் இரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டன. அதன் மூலம் முஸ்லீம்கள்
மசூதிக்குள் தொழுகை நடத்தும் உரிமை பறிக்கப்பட்டது. இது தவறான, திட்டமிடப்பட்ட
செயலாகும். வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றது. வழக்கு நிலுவையில் இருக்கும்போதே 1992 டிசம்பர் மாதம் மசூதி
திட்டமிடப்பட்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்டது. இதன் மூலம் 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மசூதி
முஸ்லீம்களுக்கு தவறான முறையில் இல்லாமல்
ஆக்கப்பட்டது.’ இந்த விவரங்களை எல்லாம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில்
கூறுகிறது.
இவற்றை எல்லாம் ஒப்புக்கொண்ட பிறகு, 1528
லிருந்து 1857 வரையிலும் பாபர்
மசூதியில் முஸ்லீம்கள் தொழுகை நடத்தி
வந்தார்கள் என்பதையும், மசூதியின் மீதான தனிப்பட்ட உரிமையைக் கொண்டிருந்தனர்
என்பதையும் நிரூபிப்பதற்கான ஆவணங்களை முஸ்லீம்கள் வழங்கவில்லை என்றும், எனவே,
நிகழக்கூடியது (சாத்தியமானது) என்பதன் அடிப்படையில் (on a balance of probability), விவாதத்திற்குரிய முழுமையான
உடைமையின் மீதான இந்துக்களின் உரிமைக் கோரிக்கைக்கான ஆதாரம் முஸ்லீம்கள் அளித்த ஆதாரத்தை விட மேலானதாக
இருக்கிறது எனக் கூறி வழக்குக்கு உட்பட்ட இடத்தின் உரிமையை இராமர் கோவில் கட்ட ஒப்படைத்துத் தனது தீர்ப்பை வழங்கியுள்ளது
உச்சநீதிமன்றம். அதாவது இந்துக்களுக்கே
அந்த இடம் உரிமையாக இருந்திருப்பதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாக இருக்கின்றன
என்று கூறி உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பைக் கூறியுள்ளது.
1528 லிருந்து 1857 வரையிலும் மசூதியில்
முஸ்லீம்கள் தொழுகை நடத்தி வந்ததற்கான ஆதாரத்தை வழங்கவில்லை என உச்சநீதிமன்றம்
கூறுகிறது. அப்படியானால் மசூதி தொழுகையைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காக அது வரையிலும்
பயன்படுத்தப்பட்டு வந்தது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை. இந்துக்களுக்குச்
சாதகமாக நிகழக்கூடிய தன்மையைக்
(சாத்தியமான தன்மையைக்) காட்டும் தீர்ப்பு இந்த விசயத்தில் மசூதி
தொழுகைக்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்ற நிகழக்கூடிய தன்மையைக் (சாத்தியமான தன்மையைக்) கணக்கில்
எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1856ஆம்
ஆண்டு மசூதி உள்ள இடத்தில் வழிபாடு செய்யும் உரிமை பற்றி இந்துக்களுக்கும்
முஸ்லீம்களுக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டது. அந்தப் பிரச்சினையில் தீர்ப்பாக
மசூதி உள்ள இடத்தின் வெளிப்பிரகாரத்தை இந்துக்கள் தமது வழிபாட்டுக்குப்
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், முஸ்லீம்கள் உட்பகுதியில் தொழுகை நடத்திக்
கொள்ள வேண்டும் என்றும் தீர்ப்பாகியது. அதன் அடிப்படையில் உட்பிரகாரத்திற்கும்
வெளிப்பிரகாரத்திற்கும் கம்பிகளாலும் செங்கற்களாலும் ஆன தடுப்பு போடப்பட்டது. இந்த விவரம் மசூதியில் அது
வரையிலும் முஸ்லீம்கள் தொழுகை நடத்தி வந்துள்ளனர் என்பதைத் தெளிவாக நிரூபிக்கிறது.
மசூதியின் இடத்தின் மீதான அவர்களுடைய உரிமையை நிரூபிக்கிறது. மேலும் 1857 முதல்
1949 வரையிலும் முஸ்லீமகள் கைவசம் மசூதி இருந்ததையும் அதில் அவர்கள் தொழுகை நடத்தி
வந்தனர் என்பதையும் நீதிமன்றமே ஒப்புக் கொள்கிறது.
இவ்வளவு இருந்தும் 1528 முதல் 1857 வரையிலும் முஸ்லீம்கள் அந்த
மசூதியில் தொழுகை நடத்தி வந்தனர் என்பதையும்,
அது அவர்களுக்கே தனிப்பட்ட உரிமையாக இருந்தது என்பதையும் நிரூபிக்க முஸ்லீம்கள்
ஆதாரங்களை வழங்கவில்லை எனத் தீர்ப்பு கூறுகிறது. அதே சமயத்தில் இந்துத்துவாப்
பரிவாரங்களும் தமக்குத்தான் அந்த இடத்தின் மீது தனிப்பட்ட உரிமை இருந்தது
என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை
என்ற உண்மையையும் நாம் கவனிக்க வேண்டும். இத்தகைய
முரண்பாடுகளின் மீது நின்று கொண்டுதான், நிகழக்கூடியதன்மையின் அடிப்படையில்
இந்துத்துவப் பரிவாரங்களுக்குச்
சாதகமாக ஐந்து நீதிபதிகளைக் கொண்ட
அமர்வு தனது ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேலும் விவாதத்திற்குரிய இடம் யாருக்குச்
சொந்தமானது என்ற உரிமைப் பிரச்சினையில் இந்துத்துவப் பரிவாரங்களுக்குச் சாதகமாகத்
தீர்ப்புக் கூறிய நீதிமன்றம், அதோடு நிற்காமல் அதற்கும் மேலே சென்று முஸ்லீம்கள்
அயோத்தியில் வேறு இடத்தில் மசூதி கட்டிக்கொள்ள ஐந்து ஏக்கர் நிலத்தை அரசாங்கம்
வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது. சட்டப்படி மசூதி இருந்த இடம்
இந்துக்களுக்குச் சொந்தம் என்றால், அதற்குப் பதிலாக அதை ஈடு செய்யும்
விதத்தில் முஸ்லீம்களுக்கு வேறு ஓர்
இடத்தில் நிலம் அளிக்க வேண்டிய தேவை ஏன் நேரிட்டது? உண்மையில் சட்டப்படி இடம் இந்துக்களுக்குச் சொந்தமில்லை; அது
அநீதியாகப் பறிக்கப்பட்டு இந்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது; அதற்குப் பரிகாரமாகவே
முஸ்லீம்களுக்கு ஐந்து ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா?
அடுத்து,
விவாதத்திற்குரிய ஓர் இடத்தின் சட்டப்படியான உரிமையாளர் யார் என்று
நீதிமன்றம் தனது தீர்ப்பைக் கூறியதுடன் அதன் பொறுப்பு முடிந்தது என்றுதான்
எல்லோரும் கருதுவர். ஆனால் நீதிமன்றம் அதற்கும் மேலே சென்று அயோத்தியில் இராமர்
கோவில் கட்ட வேண்டும் என்றும், அதற்கான பணிகளைக் கவனிக்க அறக்கட்டளையை
அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றும்
கூறுகிறது. மதச் சார்பற்ற அரசு எனக்
கூறிக் கொள்ளும் அரசும் அதன்
நிறுவனங்களும் மதம் சார்ந்த பணிகளிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். மாறாக, மதச்
சார்பற்றதன்மையை வலுப்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றமே அரசு மதம் சார்ந்த செயல்களில்
ஈடுபட வழி ஏற்படுத்தித் தருவது ஒரு முரண்நகை.
நன்றி: News Laundry.Com
இந்தத் தீர்ப்பு பற்றி ஒய்வு பெற்ற
முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கங்குலி அவர்களின் கூற்றை நாம் கவனத்தில் கொள்ள
வேண்டும். ‘கடந்தகால வரலாற்றின் தொலைவான
மறைவிடங்களுக்குள் தலையை நுழைப்பது ஒரு நீதிமன்றத்தின் வேலை அல்ல. அங்கு ஊகங்களும்
நிகழக்கூடிய தன்மைகளும் மட்டுமே இருக்கும். முடிவான சான்றுகள் இருக்காது’ என்று
அவர் கூறுகிறார். முடிவான சான்றுகள் இல்லாமல் நிகழக்கூடிய தன்மைகளின்
அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது; அது சரியானது அல்ல என்பதையே
இங்கு அவர் சுட்டிக் காட்டுகிறார்.
நாட்டில் அமைதியும் நல்லிணக்கமும்
நிலவுவதற்கு ஏற்ற நடைமுறை சாத்தியமான தீர்ப்பு இதுதான் என்றும், முஸ்லீம்களுக்குச்
சாதகமாக தீர்ப்பு வந்திருக்குமானால்
இந்துத்துவாப் பரிவாரங்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் கலவரத்தில் ஈடுபட்டு
நாட்டில் அமைதியைக் கெடுத்திருக்கும்
என்றும், மேலும் இந்துத்துவப் பரிவாரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும்
கட்சி இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் நிலையில் நிலைமை மிகவும் மோசமாகப்
போகவும் வாய்ப்புள்ளது என்ற காரணத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கருதலாம்
என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
அரசியல் அமைப்புச் சட்டத்தையும் அதன்
அடிப்படையில் சட்ட ரீதியான உரிமைகளையும் அடிப்படையாகக் கொள்ளாமல் நடைமுறை
சாத்தியமான தீர்ப்புகளை வழங்குவது என்று ஒரு நீதிமன்றம் கருதுமானால் அது நாட்டில்
எப்பொழுதும் சட்டத்தை மதிக்காத வலிமையானவர்களுக்கே, எதேச்சதிகார சக்திகளுக்கே சாதகமாக அமையும். நல்லிணக்கம், அமைதி என்று
அதற்கு எந்தப் பெயரிட்டாலும் அவை சமமான உரிமைகளின் அடிப்படையில் நிலவும் பரஸ்பர அமைதியாக, நல்லிணக்கமாக இருக்காது. மாறாக, வலிமையானவர்களால் பலவீனர்கள் மீது திணிக்கப்பட்ட, அடக்கி ஆள்பவர்களால் அடங்கிப் போகின்றவர்கள் மீது திணிக்கப்பட்ட,
பெரும்பான்மையினரால் சிறுபான்மையினர் மீது
திணிக்கப்பட்ட, அச்சுறுத்தலின் பேரில்
நிலை நாட்டப்பட்ட அமைதியாகவும் நல்லிணக்கமாகவுமே இருக்கும்.
இத்தகைய தீர்ப்புகள், சட்டங்களைச் சிறிதும்
மதிக்காமல் தமது ஆள் பலத்தால் மக்களை அடக்கி ஒடுக்கி அதிகாரம் செலுத்த விரும்பும்
இந்துத்துவாப் பரிவாரங்கள் போன்ற பாசிச சக்திகளின் கரங்களையே வலுப்படுத்தும்.
உச்சநீதிமன்றத்தின் நடைமுறை சாத்தியமான இந்தத் தீர்ப்பு அதற்குத்தான் அடித்தளம்
அமைத்துள்ளது.
Comments
Post a Comment