இந்திய
ஒன்றியம் இன்று மீள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் (2019) செப்டம்பர் மாதம் முடிவுற்ற காலாண்டில் நாட்டின் மொத்த
உற்பத்தி 4.5% என்ற அளவுக்கு வீழ்ச்சி
அடைந்துள்ளது. இது கடந்த இருபத்தாறு காலாண்டுகளில், அதாவது ஆறரை ஆண்டுகளில் இல்லாத
அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.
மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு
ஆதாரமாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப்
பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கியமான
உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.2% ஆகக்
குறைந்துள்ளது. இது ஐம்பத்திரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள பெரும்
பின்னடைவாகும்.
மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்
காய்கறிகள், பழங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பிஸ்கட் போன்ற நுகர்வுப்
பொருள்கள், குளிர் பானங்கள், இறைச்சி போன்ற நுகர்வுப் பொருள்களின் உற்பத்தி
வளர்ச்சி செப்டம்பர் மாதம் 3.9% ஆக
வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப் புறங்களில்
நுகர்வுப் பொருள்களின் விற்பனை குறைந்துள்ளது. மேலும் ஏற்றுமதியிலும் கடும்
வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
பயணிகள் கார், சரக்கு வாகனங்கள்,
பேருந்துகள் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையிலும் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அசோக்
லேலண்ட், மாருதி சுசுகி, டாடா மோட்டார்ஸ்
ஆகிய நிறுவனங்கள் தமது உற்பத்தியைக் குறைத்து, தொழிலாளர்களுக்கு
சம்பளமில்லா விடுப்பு அளித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளன. இவ்வாறு தொழிற்சாலைகளிலும் வாகன விற்பனை
நிலையங்களிலும் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களையும் சேர்த்து நாடு முழுவதும் மூன்றரை இலட்சம் தொழிலாளர்களுக்கு வேலை இல்லாமல்
போகும் நிலைக்குத் தள்ளியுள்ளது.
அது மட்டுமல்லாமல், பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி விருப்ப ஒய்வு என்ற பெயரில் தகவல் தொடர்புத் துறையான பி.எஸ்.என்.எல்-லில் இருந்து 80,000 பேரை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது மத்திய அரசு. மேலும் ரயில்வேத் துறையைத் தனியார் மயமாக்குவதற்கு ஏதுவாக அத்துறையிலிருந்து
3 இலட்சம் பேரை வெளியில் அனுப்பவும் திட்டமிட்டு வருகிறது இந்த அரசு.
தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால்
பொருளாதார நெருக்கடியால் திருப்பூரிலும் கோவையிலும் சிறு, குறு, நடுத்தரத்
தொழில்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான பேரை வேலையிலிருந்து
விரட்டியுள்ளது.
அனைத்துத் துறைகளிலும் நிலவும்
இந்தப் பொருளாதார நெருக்கடி. நாற்பத்தைந்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வேலை
இல்லாதவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத
கடுமையான பொருளாதார நெருக்கடியை மோடியும் அவருடைய பரிவாரங்களும் தங்களுடைய பிரச்சார பலத்தாலும், கஷ்மீர் சிறப்பு அந்தஸ்து
இரத்து, பயங்கரவாதிகளின் கூடாரங்களின்
மீதான துல்லிய தாக்குதல், தேசப் பற்று, இராமருக்குக்
கோயில் கட்டுதல் போன்ற திசை திருப்பும் யுக்திகளாலும் மக்களிடமிருந்து
மூடி மறைக்கப் பார்க்கின்றனர். மோடியின்
ஆட்சியின் கீழ் அனைத்தும் சிறப்பாகவே உள்ளன என்று தமது கோயபல்ஸ்
பிரச்சாரங்களால் மக்களை நம்ப வைக்க
முயற்சி செய்கின்றனர்.
‘திரை அரங்குகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதிக வசூல்
ஆகிறது,’ ‘ரயில் நிலையங்களிலும் விமான நிலையங்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி
வழிகிறது,’ ‘மக்கள் திருமணம் செய்து
கொள்கின்றனர்’ ‘எனவே பொருளாதார நெருக்கடி உள்ளது என்பது பொய்’, எனக் கூறி மோடியின் அமைச்சர்களும் சங்கப்
பரிவாரங்களும் பொருளாதாரம் பற்றிய தங்களுடைய மூடத்தனத்தை அவ்வப்பொழுது
வெளிப்படுத்தி மக்களின் எள்ளி நகையாடலுக்கு ஆளாகி
வருகின்றனர்.
அவர்களின் பொய்களும் புரட்டுகளும்
எதார்த்தத்தில் நிலவும் நெருக்கடியை மூடி மறைக்க இயலவில்லை. முழுப் பூசணியை
சோற்றில் மறைக்க முயலும் அவர்களின் முயற்சிகள்
விரைவில் அம்பலப்பட்டு விடுகின்றன.
மோடியின் பரிவாரங்களின் எஜமானர்களான முதலாளிகளும்
அவர்களுடைய பொருளாதார அறிஞர்களும் அபயக் குரல் எழுப்பத் தொடங்கினர். பங்குச் சந்தை
சூதாட்ட முதலாளிகள் பங்குச் சந்தையிலிருந்து பெரும் அளவு தங்களின் முதலீட்டை
வெளியேற்றினர். பங்குச் சந்தை தொடர்ந்து படு வீழ்ச்சி அடையத் தொடங்கியது.
நாடெங்கும் பொருளாதார வீழ்ச்சியின் அபாயம் பற்றிப் பேசப்பட்டது. ஆட்சியாளர்கள் தங்களுடைய சாயம் வெளுக்கத் தொடங்கிவிட்டது
என்பதை அறிந்து கொண்டனர். மேலும் மறைக்க முடியாது என்ற நிலையில் உடனே சலுகைகளுக்கு
மேல் சலுகைகளாக முதலாளிகளுக்கு வாரி வழங்கத் தொடங்கினர். இதுதான் சரியான தருணம்
என்று கருதிய முதலாளிகள் எரியும் வீட்டில்
பிடுங்கினது எல்லாம் இலாபம் என்ற கதையாகக் கோரிக்கைகளுக்கு மேல் கோரிக்கைகளை
வைத்துத் தங்களுக்குத் தேவையானதை எல்லாம் சாதித்துக் கொண்டு வருகின்றனர். அதன்
மூலம் மக்கள் மீது மேலும் மேலும் நெருக்கடிகளைச் சுமத்தி வருகின்றனர்.
சலுகைகள்
. கார்பரேட் நிறுவனங்களின் மீது முன்பு விதிக்கப்பட்டிருந்த 30% வரி 22% ஆகக் குறைக்கப்பட்டது. இதன் மூலம் மட்டும் கார்பரேட் நிறுவனங்கள் 1,45,000 கோடிரூபாய் இலாபம் அடைந்துள்ளன. மேலும்
இது வரையிலும் கார்பரேட் நிறுவனங்கள் தங்கள் இலாபத்திலிருந்து சமூகப் பொறுப்பு என்ற பெயரில் சமூகத்திற்காக வருடம் தோறும்
குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படும். ஆனால் இனி அவ்வாறு அவர்கள் செய்யத் தவறினால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட மாட்டாது. வருடத்திற்கு ரூ. 2 கோடிக்கும் மேல் வருமானம் பெறும் “பெரும் பணக்காரர்களுக்கு” இந்த ஆண்டு வரவு- செலவுத் திட்டத்தில் வருமான வரிக்கு மேல் வரி விதிக்கப்பட்டிருந்தது. அதுவும் விலக்கிக் கொள்ளப்பட்டது.. நிலக்கரிச் சுரங்கம், டிஜிட்டல் ஊடகங்கள் ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டது. ஒரே முத்திரை கொண்ட (single branded
retail shop) சில்லறைக் கடைகள் தமது கடைகளில் உள்ள மொத்தப் பொருள்களில் 30% பொருள்களை
உள்நாட்டில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று இது நாள் வரையிலும் நிபந்தனை
இருந்தது. அந்த நிபந்தனையும்
நீக்கப்பட்டது.
நன்றி: theprint.com
ஏற்கனவே முதலாளிகளுக்குக் கடன்
கொடுத்துப் போண்டியாகும் நிலையில் இந்த நாட்டு வங்கிகள் உள்ளன. ரூ.14 இலட்சம்
கோடிக்கு மேல் இன்னும் வாராக் கடன் நிலுவையில் உள்ளதாகப் புள்ளி விவரம் கூறுகிறது.
இந்த நிலையில் மேலும் முதலாளிகளுக்குக் கடன் கொடுக்கும் வகையில் வங்கிகளைப்
பலப்படுத்த ரூ.70,000 கோடியை மக்கள் வரிப்
பணத்திலிருந்து இந்திய அரசு வாரி
வழங்குகிறது. மேலும் வீட்டு மனைத் திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலாளிகளுக்கு
உதவுவதற்காக ரூ. 25,000 கோடியை ஒதுக்கியுள்ளது. மேலும் முதலாளிகளுக்குக் குறைந்த
வட்டியில் வங்கிகள் கடன் வழங்குவதற்கு ஏதுவாக மத்திய ரிசர்வ் வங்கி வட்டியையும்
குறைத்துள்ளது.
மக்களின் உழைப்பிலிருந்து உருவான
சொத்துக்களையும் நிதிகளையும் கொள்ளையடித்து முதலாளிகளை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இந்த அரசாங்கம் முயற்சி செய்கிறது. அதற்காக இந்த ஆண்டு மட்டும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று 1,05,000 கோடி
ரூபாயைத் திரட்டத் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து
ரூ.1,70,000 கோடியைத் தனக்கு மாற்றிக் கொண்டது.
இத்தனை சலுகைகளையும்
முதலாளிகளுக்கு அளித்து அவர்களை முதலீடு செய்யத் தூண்டிவிட வேண்டும்; முதலாளிகளிடத்தில்
எப்படியாவது இலாபம் அடைய வேண்டும் என்ற ‘விலங்கு உணர்வைத்” (animal spirit) தட்டி எழுப்ப வேண்டும். அதன் மூலம் தொழில்துறையில் முதலீட்டை அதிகரித்து, உற்பத்தியைப் பெருக்க வைக்க வேண்டும்;
பொருளாதாரத் தேக்கத்திலிருந்து விடுபட வேண்டும் எனத் திட்டமிடுகிறது இந்த
அரசாங்கம்.
தேக்கத்திற்குக் காரணம்
கார்ப்பரெட்
நிறுவனங்களின் மீதான வரிகள் உயர்ந்த அளவில் இருப்பது, முதலாளிகளின் வருமானத்தின் மீதான
வருமான வரிகள் அதிகமாக இருப்பது, வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் கடன்களுக்கு அதிக வட்டி விதிப்பது போன்ற
காரணங்களால் முதலாளிகளின் இலாபம் குறைகிறது, அதன் காரணமாக அவர்கள் முதலீட்டில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை என்று
கருதி, அவர்களுக்குச் சலுகைகள் அளிப்பதன் மூலம் இலாபத்தை அதிகரிக்க வழி வகுக்க
முடியும்; முதலீட்டில் அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்ட முடியும் என இந்த
அரசாங்கம் கருதுகிறது. அதற்காக
சலுகைகளுக்கு மேல் சலுகைகளாக வாரி வழங்கி வருகிறது. .
ஆனால் உண்மையில் முதலீடுகள்
குறைந்ததற்குக் கார்பரேட் நிறுவனங்களின் மீதான வரிகள் அதிகமாக இருப்பதோ வங்கிகளின் வட்டி விகிதம் அதிகமாக இருப்பதோ
முக்கியமான காரணமல்ல. தேக்கத்திற்கு உண்மையான காரணம் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை முதலாளிய
நிறுவனங்களால் சந்தையில் விற்க முடியவில்லை என்பதுதான்.
சந்தையில்
பொருள்கள் குவிந்துள்ளன. ஆனால் அவற்றை
வாங்குவதற்கு மக்கள் கையில் போதிய பணமில்லை என்பதுதான் முக்கியமான காரணம். இங்கு
உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்குத் தேவையான வேண்டல் (demand) இல்லாததால் பொருள்கள் தேங்கிப் போய் உள்ளன. உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தை
விற்றுப் பணமாக்கினால் மட்டுமே மீண்டும் அவற்றை முதலீடாகப் போட முடியும். இலாபமே
குறியாகச் செய்யல்படும் எந்த முதலாளியும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட
பொருள்களையே விற்க முடியாத நிலை இருக்கும்போது
மீண்டும் மீண்டும் அவன் உற்பத்தியில் ஈடுபட்டு நட்டத்தை ஏற்றுக் கொள்ள
மாட்டான்.. அவனிடம் பணம் இருந்தாலும் அதை இலாபம் அளிக்கக் கூடிய நிதி நிறுவனங்கள்,
பங்குச் சந்தை போன்ற ஊகபேர வணிகம் போன்றவற்றிலேயே முதலீடு செய்வான்.
உற்பத்தியிலிருந்து தனது பணத்தை அவற்றிற்கு மடை மாற்றம் செய்வான். அதுதான் இன்று
நடந்து கொண்டிருக்கிறது.
பொருளாதாரத் தேக்கத்திற்கு
அடிப்படையான காரணத்தை அகற்றாமல், அதாவது உற்பத்தி செய்யப்பட்ட பொருளுக்குத் தேவையான
வேண்டலை உருவாக்காமல், அதாவது பொருள்களை வாங்குவதற்கான சக்தியை மக்களிடம்
உருவாக்காமால், மென்மேலும் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகள் உற்பத்தித்துறைக்கு வராது. உண்மையில் அவை நிதி நிறுவனங்களுக்கும்,
வீட்டுமனைத் (Real Estate) தொழிலுக்கும், பங்குச் சந்தை
போன்ற ஊகபேர வணிகத்திற்குமே திசை திருப்பி விடப்படும்.
முதலாளியப் பொருளாதார அறிஞர்களில்
பலரும் இன்றைய பொருளாதாரத் தேக்கத்திற்குக் காரணம் வேண்டல் பக்கம்(demand side) ஏற்பட்டுள்ள சிக்கல்தான் என்று சரியாகக் கூறினாலும், சிலர் முதலீட்டுப்
பக்கத்தில், அதாவது வழங்கல் பக்கம் (supply side) ஏற்பட்டுள்ள சிக்கல்தான் எனக் கூறி இன்னும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை
அளிக்க வேண்டும் என்றும், வருமான வரியைக்
குறைக்க வேண்டும் என்றும் வாதிட்டு
வருகின்றனர்.
வேண்டல் பக்கம் ஏற்பட்டுள்ள
சிக்கலை சரி செய்வதன் மூலம், அதாவது மக்களிடம் வாங்கும் சக்தியை உயர்த்துவதன்
மூலம் தேங்கிப் போன பொருள்களை விற்பனை செய்ய முடியும், அதன் மூலம் சந்தையை
விரிவடையச் செய்யமுடியும்; பொருளாதாரத் தேக்கத்திலிருந்து விடுபட முடியும் என
முதலாளியப் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
இங்கு வேண்டல் பக்கம் ஏன் சிக்கல்
ஏற்பட்டது? மக்களிடம் வாங்கும் சக்தி ஏன் குறைந்தது?
மொத்த உள்நாட்டு
உற்பத்தி வளர்ச்சி என்ற மாயை
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
ஆண்டு தோறும் 8%, 9% என வளர்ந்து வருகிறது என்றும், சீனாவுக்கு அடுத்தபடியாக
இந்தியாவில்தான் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது என்றும் இங்குள்ள
ஆட்சியாளர்கள் பெருமை பேசிக் கொண்டிருந்த நேரத்திலும், உள்நாட்டின் உற்பத்தியில்
ஏற்பட்ட வளர்ச்சி மக்களின் பொருளியல் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு
வந்துவிடவில்லை.
உள்நாட்டு உற்பத்தி என்பது
குறிப்பிட்ட ஆண்டில் விவசாயத் துறையிலும் பொருள் உற்பத்தித் துறைகளிலும், சேவைத்
துறையிலும் உருவாக்கப்பட்ட ஒட்டுமொத்த
பொருள்களின் மதிப்பில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றி மட்டுமே கணக்கில் எடுத்துக்
கொள்கிறது அந்த நாட்டில் உள்ள அனைத்து
மக்களின் வளர்ச்சி, மக்களுக்குக் கிடைக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில்
ஏற்பட்டுள்ள வளர்ச்சி, வேலை வாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள
வளர்ச்சி போன்றவற்றைக் கணக்கில்
எடுத்துக் கொள்வதில்லை. மேலும் அந்த உற்பத்தி நிகழ்வுப்போக்கின்போது நாட்டில்
உண்டாக்கப்பட்ட சுற்றுச்சூழலின் அழிவு பற்றியும் அதனால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள
பாதிப்புகள் பற்றியும் அது கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி
விகிதம் என்பது நாட்டிலுள்ள அனைத்து மக்களின் வளர்ச்சியைக் குறிக்கிறது என்பது ஒரு
மாயைதான். உண்மையில் அது முதலாளிகளின்
வளர்ச்சியையே குறிக்கிறது.
முதலீட்டில் வீழ்ச்சி
1990க்குப் பிறகு முதலாளிய உலகமயமாக்கல் காலகட்டத்தில் இந்தியப்
பொருளாதாரம் சர்வதேசப் பொருளாதாரத்துடன் அதிகமான அளவில் பிணைக்கப்பட்டது. இந்த
நிலையில் 2008ல் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி உலகு தழுவிய அளவில் நெருக்கடியைக் கொண்டு வந்தது. அந்நிய
முதலீட்டையும் அந்நியச் சந்தைகளையும் சார்ந்திருக்கும் இந்தியப் பொருளாதாரத்திலும்
அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. உலகமயமாக்கலுக்குப்
பிறகு இங்கு விவசாயத் துறையிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. கிராமப்புற
பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. இலட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத்
தள்ளப்பட்டனர். மக்களிடம் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்தது. மகாத்மா காந்தி
கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்கள் கூட பெரும் அளவுக்கு
மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தவில்லை.
சந்தை சுருங்கியது.
இவற்றின் விளைவாக நாட்டின் ஒட்டுமொத்த முதலீடு தொடர்ந்து குறையத் தொடங்கியது. 2010-11ல் நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில்
15%, ஆக இருந்த முதலீடு படிப்படியாக வருடம்தோறும் முறையே 10.5%, 10.2%, 9.8%, 9%, 7.5%, எனக் குறைந்து பண மதிப்பு இழப்பு செய்யப்பட்ட 2016-17 ஆம் ஆண்டில் படுமோசமாக
2.7% ஆகச் சரிந்தது.
2010-11 ல்
11,72,550 கோடி ரூபாயாக இருந்த ஒட்டு மொத்த முதலீடு 2016-17ல், அதாவது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்ட வருடத்தில்
4,25,051 கோடி ரூபாயாகக் வீழ்ச்சி அடைந்தது.
அது அதற்கு முந்திய ஆண்டு முதலீட்டோடு ஒப்பிடும்போது 60% வீழ்ச்சியாகும் என ஆகஸ்ட் 19, 2019ல் மத்திய அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட, ஆனால் வெளியிடப்படாத ‘ஒரு புதிய நேரடி வரிச் சட்டத்திற்கான வரைவைத் தயாரிப்பதற்கான குழு’ வின் (Task Force for
Drafting a New Direct Tax Legislation) அறிக்கை கூறுகிறது.
பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு
தொழிற்சாலைகள் மூடப்பட்டன. வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்தது. வங்கிகள்
போண்டியாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும்
நொடிந்து போயின.
சிறு, குறு,
நடுத்தரத் தொழில்கள்
2016 நவம்பரில் மோடியால் அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு சிறு,
குறு, நடுத்தரத் தொழில்களைக் கடுமையாகப்
பாதித்தது. இந்தியப் பொருளாதாரத்தில் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறையின்
பங்களிப்பு கணிசமானது. உற்பத்தித்துறையில்
அது உருவாக்கும் மதிப்பு நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் 40% ஆக உள்ளது.
மொத்த ஏற்றுமதியில் அதன் பங்கு 45% ஆகும். தொழிற்துறையில் வேலை செய்யும் மொத்த
உழைப்பாளர்களில் 90% க்கும் மேலான
தொழிலாளர்கள் இத்தகைய முறைசாராத் (informal) துறையிலேயே பணி புரிந்து வருகின்றனர்.
இந்தியப் பொருளாதாரத்தில் இத்தகைய
முக்கிய பங்காற்றி வரும் சிறு, குறு, நடுத்தரத் தொழிற்துறையின் முதுகெலும்பை பண
மதிப்பிழப்பு முறித்து விட்டது. பெரும் நெருக்கடியின் காரணமாக பல்லாயிரம் சிறு,
குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இலட்சக் கணக்கானோர் வேலையிழந்தனர்.
பண மதிப்பு இழப்பைத் தொடர்ந்து
சரியாகத் திட்டமிடாமல் அவசரகதியில் நடைமுறைப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி
முறை சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை மேலும் மீண்டு எழ முடியாமல் வீழ்த்தியது.
மேலும் இங்குள்ள வங்கிகள் பெரும்
தொழில்துறைகளுக்கே கடன் வழங்குவதில் முன்னுரிமை வழங்குகின்றன. அதனால் சிறு, குறு,
நடுத்தரத் தொழில்கள் தனியார் நிதி நிறுவனங்களைச் சார்ந்தே அதிக வட்டிக்குக் கடன்
வாங்கும் நிலையில் உள்ளன. இந்த நிலை அவற்றை மேலும் நொடிக்க வைக்கிறது.
நன்றி: themirror.com
பெரும்
தொழில்துறைகள்!
இந்த நாட்டு முதலாளிகளின்
மூலதனங்களோடும் பன்னாட்டு முதலாளிகளின்
மூலதனங்களோடும் இயங்கி வரும் தொழிற்சாலைகள் மூலதனச் செறிவு கொண்டதாக (capital intensive) உள்ளன. அதனால் ஒப்பீட்டளவில்
குறைவான வேலை வாய்ப்புகளையே
வழங்குகின்றன. மேலும் தொடர்ந்து பெரும் தானியங்கி இயந்திரங்களைப் புகுத்தி
வருவதால் இருக்கும் வேலை வாய்ப்புகளும் பறி போகின்றன. அதனால் இந்த நாட்டில் உள்ள
ஒட்டுமொத்தத் தொழில்துறை உழைப்பாளர்களில்
10 விழுக்காட்டினருக்கும் குறைவான பேருக்கே அவை வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றன.
மேலும் அவற்றில் ஐந்தில் நான்கு பங்கினர் தற்காலிகமாகவும் ஒப்பந்தப்
பணியாளர்களாகவும் வேலை செய்து
வருகின்றனர். அவர்களுக்கு நிரந்தரமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிப்
பாதுகாப்புகளும், பொருளாதாரப் பயன்களும் வழங்கப்படுவதில்லை. இந்த நிலையில்
அவர்களால் அவர்களின் வாழ்வுக்கு அடிப்படையாகத் தேவைப்படும் பொருள்களைக் கூட வாங்க
முடியாத நிலையில்தான் இருந்து வருகின்றனர்.
விவசாயத் துறை
இந்தியக் கிராமப் புறங்களில்
நிலவுடைமையில் நிகழும் கடுமையான ஏற்றத்தாழ்வு கிராமப்புற மக்களை எப்பொழுதும் ஏழ்மையிலும் வறுமையிலுமே வைத்துள்ளது. இந்தியாவில் உள்ள
மொத்த நில உடைமையாளர்களில் 86.2 விழுக்காட்டினர்
மொத்தச் சாகுபடி நிலத்தில் 47.3
விழுக்காட்டு நிலத்தை மட்டுமே கொண்டுள்ளனர்.
இவர்கள் ஐந்து ஏக்கர் வரையிலும் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளாக
உள்ளனர். 13.2 விழுக்காட்டினரிடம் 43.6 விழுக்காடு நிலம் உள்ளது. இவர்கள் ஐந்து
ஏக்கரிலிருந்து இருபத்தைந்து ஏக்கர்
வரையிலும் நிலம் வைத்திருக்கும் நடுத்தர விவசாயிகள். 0.57 விழுக்காட்டினரிடம் 9.04
விழுக்காடு நிலம் உள்ளது. இவர்கள் இருபத்தைந்து ஏக்கருக்கும் மேல் நிலம்
வைத்திருப்பவர்கள்; இவர்கள் பணக்கார விவசாயிகள், பெரும் பண்ணையார்கள். உண்மையில்
13.77 விழுக்காட்டினராக இருக்கும் நடுத்தர
மற்றும் பணக்கார விவசாயிகளிடம்
மட்டும் மொத்த நிலத்தில் 52.64
விழுக்காடு நிலம் குவிந்துள்ளது.
86.2 விழுக்காடாக உள்ள சிறு, குறு விவசாயிகள் இடுபொருள்களின் விலை
ஏற்றத்தாலும், விலை பொருள்களுக்குப் போதிய விலை கிடைக்காததாலும், கொள்ளை இலாப
வியாபாரிகளின் சுரண்டலாலும், கந்து
வட்டிக்காரர்களாலும் கடுமையான பாதிப்புக்கு எப்பொழுதும் உள்ளாகி வருகின்றனர்.
தொடர்ந்து தங்களுடைய நிலங்களைக் கூடத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நிலையில்
இருக்கின்றனர், நிலங்களை இழந்து கூலி விவசாயிகளாக மாறி வருகின்றனர் அல்லது வேலை தேடி
நகரங்களுக்குச் செல்கின்றனர். இவர்களிடம்
தொழிற்துறையில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்கும் சக்தி எப்பொழுதும்
இருப்பதில்லை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மட்டும் மூன்று இலட்சத்திற்கும்
மேலான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்ற விவரம் இவர்களின் அவல நிலையை
அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
நமது நாட்டில் உள்ள நிலமற்ற கூலி
விவசாயிகளின் எண்ணிக்கை 14.43 கோடி.
அவர்கள் மொத்தக் கிராமப்புற மக்கள் தொகையில் 17.31 விழுக்காடாக உள்ளனர். இவர்களின் நிலைமை சிறு, குறு
விவசாயிகளின் நிலைமையை விட மிகவும் மோசமாக உள்ளது. வருடத்தில் பல நாட்கள் அவர்கள்
வேலை எதுவும் கிடைக்காமல் பட்டினி கிடக்க
நேர்கிறது. கடந்த பத்து ஆண்டுகளாக அவர்களின் உண்மையான கூலியின் மதிப்பு மிகமிகக்
குறைவாகவே உயர்ந்துள்ளது. விலைவாசி ஏற்றமும் பண வீக்கமும் அவர்களின் கூலி உயர்வை
விடப் பன்மடங்கு அதிகரித்து அவர்களின் வாங்கும் சக்தியைக் கடுமையாகப்
பாதித்துள்ளது.
விவசாயக் கூலித் தொழிலாளர்களுடன்
நில உடைமையாளர்களையும் சேர்த்து 26.3 கோடி மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டு
வருகின்றனர். கிராமப்புற மக்கள் தொகையில் இவர்களின் விழுக்காடு 31.55 ஆக உள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவின் மக்கள்
தொகையில் இவர்களின் விழுக்காடு 21.72 ஆக உள்ளது. இவர்களில் பணக்கார, நடுத்தர
விவசாயிகளை எண்ணிக்கை மிக மிகக் குறைவே. இவர்கள் போக மீதம் உள்ள
பெரும்பான்மையோரிடம் வாங்கும் சக்தி என்பது கிடையாது. இந்த நிலையில் உற்பத்தி
செய்யப்பட்ட பொருள்களை விற்க முடியாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படுவது தவிர்க்க
முடியாது.
கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தி வீழ்ச்சி அடைந்ததன் காரணமாக நாட்டில் பொருள்களுக்குத் தேவையான வேண்டல் நாற்பதாண்டுகள்
இல்லாத அளவுக்கு 2017-18ல் வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும், 2017-18ல் கிராமப்புற மக்களின் நுகர்வுக்கான செலவு 8.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அரசாங்கத்தின் அண்மைய
புள்ளி விவரம் ஒன்று குறிப்பிடுகிறது.
சேவைத் துறை
இந்தியப் பொருளாதாரத்தில்
சேவைத்துறை ஒட்டு மொத்த உற்பத்தியில் 53% வழங்குகிறது. ஆனால் இந்தியாவின் ஒட்டு
மொத்த வேலை வாய்ப்பில் அது 29% மட்டுமே வழங்குகிறது. வணிகம், ஓட்டல்,
போக்குவரத்து, நிதிச் சேவை, வீட்டு மனைத் தொழில் எனப் பல துறைகளும் ஒப்பீட்டளவில்
குறைவான வேலை வாய்ப்புகளையும் , குறைவான ஊதியங்களையுமே வழங்குகின்றன. எனவே சேவைத்
துறையைப் பொறுத்த மட்டில் நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு மிகவும் பலவீனமான
சந்தையைத்தான் வழங்குகிறது.
இவ்வாறு தொழில்துறை, விவசாயத் துறை, சேவைத்துறை
ஆகியவற்றில் நிலவி வரும் கடுமையான பாதிப்புகளின் விளைவாக, 2011-12ல்
46.77 கோடியாக இருந்த உழைப்பவர்களின் எண்ணிக்கை 2017-18ல் 46.15 கோடியாகக் குறைந்தது. அதாவது 62 இலட்சம் பேர் வேலை இழந்தனர். 2012ல் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 1.05 கோடியாக இருந்த பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
2018ல் 3 கோடியாக உயர்ந்தது.
நெருக்கடிகளுக்கு முதலாளியப் பொருளாதார அறிஞர்களின்
தீர்வு!
மக்களின் நுகர்வுச் சக்தியை,
வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம் பண்டங்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்ய
வேண்டும். மக்களிடம் வாங்கும் சக்தியை அதிகரிப்பதற்கு அரசு பொருளாதார நடவடிக்கைளை
மேற்கொள்ள வேண்டும். அதாவது பொதுச் செலவில் சாலைகள் போடுவது, கட்டிடங்கள்
கட்டுவது, அணைகள் கட்டுவது, புதிய ஏரி, குளங்களை அமைப்பது, அரசு செலவில் ஏரி,
குளங்களைத் தூர்வாருவது போன்ற செலவினங்களைச் செய்வதன் மூலம் மக்களுக்கு வேலை
வாய்ப்பினைப் பெருக்கி, அவர்களின் கைகளில் பணப் புழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
அதன் மூலம் பொருள்களுக்கான தேவையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
மேலும் குறைந்த வருவாய்ப்
பிரிவினருக்கு ஆதரவாக வருவாய்களை மறு விநியோகம் செய்வதன் மூலம் அவர்களின் வாங்கும்
சக்தியை அதிகரிக்க வேண்டும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத்
திட்டம், விவசாயிகளுக்கு வருடம் ஆறாயிரம்
ரூபாய் வழங்கல் போன்ற திட்டங்களை இதற்கு
எடுத்துக் காட்டாகக் கூறலாம்.
இத்தகைய தீர்வுகளைத்தான் 1929-1932 காலகட்டத்தில் முதலாளிய நாடுகளில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டபோது ஜான் மேனார்டு கெய்ன்ஸ் என்னும் முதலாளியப் பொருளாதார அறிஞர் முன் வைத்தார். அத்தகைய தீர்வுகளைத்தான் இங்குள்ள பொருளாதார அறிஞர்களும் இப்பொழுது
இந்திய முதலாளியத்தைச் சிக்கலிலிருந்து காப்பாற்ற முன்வைக்கின்றனர்.
ஆனால் இத்தகைய தீர்வுகள் முதலாளிய
நெருக்கடிகளுக்குத் தற்காலிகத் தீர்வை
மட்டுமே வழங்க முடியும் என்பதை வரலாற்றில் முதலாளியத்திற்குத் தொடர்ந்து ஏற்பட்டு
வரும் நெருக்கடிகள் மெய்ப்பித்து வருகின்றன. ஏனென்றால் இலாப நோக்கத்தின்
அடிப்படையில் மட்டுமே நடைபெற்று வரும் முதலாளிய உற்பத்திமுறையிலேயே அதன்
சிக்கலுக்கான அடிப்படையும் இருக்கிறது.
முதலாளிய உற்பத்திமுறையில் நெருக்கடிக்கான அடிப்படை!
முதலாளியின் இலாபத்திற்கான
மூலாதாரமே தொழிலாளர்களின் உழைப்புச்
சக்திதான். தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியில் புதியதாகப் படைக்கப்படும்
பொருள்களின் மதிப்பில் ஒரு பகுதியை
மட்டும் அவர்களுக்குக் கூலியாகக் கொடுத்து
விட்டு மீதியை அபகரிப்பதன் மூலம் முதலாளி இலாபம் அடைகிறான். தன்னுடைய மூலதனத்தை
மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்கிறான். ஆனால் தொழிலாளர்களுக்கு அவர்கள்
உயிர் வாழ்வதற்குத் தேவையான அளவுக்குக் குறைந்தபட்சக் கூலியே
வழங்கப்படுகிறது. இதன் விளைவாக சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒட்டு மொத்தப்
பொருள்களின் மதிப்புக்கும் அவற்றை
உற்பத்தி செய்த தொழிலாளர்களுக்குக் கூலியாக வழங்கப்படும் ஒட்டு மொத்த
மதிப்புக்கும் பெரும் ஏற்றத் தாழ்வு நிலவுகிறது. தொழிலாளர்களுக்குக் கூலியாகக்
கொடுக்கப்படும் பணத்தின் அளவே சந்தையின் பரப்பு அமையும். தொழிலாளர்கள் கூலியாகப்
பெற்ற பணத்தை விடச் சந்தையில் அவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு
அதிகமாக இருப்பதால் அவர்களால் உற்பத்தி
செய்யப்பட்ட பொருள்களைக் கூட அவர்களால் வாங்க முடிவதில்லை. அதன் விளைவு சந்தையில்
தேக்கம் ஏற்படுகிறது. அதன் தொடர்ச்சியாக உற்பத்தியில்
நெருக்கடி ஏற்படுகிறது.
பண மதிப்பு இழப்பு
நடவடிக்கையாலும் சரக்கு மற்றும் சேவை
வரிகளை நடைமுறைப்படுத்தியதாலும் மட்டுமே இந்த நாட்டில் பொருளாதார நெருக்கடிகள்
ஏற்படவில்லை. இலாப அடிப்படையிலான முதலாளிய உற்பத்திமுறையில் உள்ள முரண்பாடுகளே
இந்த நெருக்கடிகளுக்குக் காரணமாகும். தொழில்துறை, விவசாயத்துறை, சேவைத்துறை ஆகியவற்றில் ஏற்கனவே நிலவி வந்த நெருக்கடிகளை
அவை விரைவுபடுத்தின என்பதே உண்மை.
இத்தகைய முதலாளிய
உற்பத்திமுறையினால் ஒரு சிலர் கைகளில் தொடர்ந்து செல்வம் குவிவதும்
பெரும்பான்மையான மக்கள் வறிய நிலைக்குத் தள்ளப்படுவதும் தவிர்க்கமுடியாது. இந்த
உண்மையைத்தான் ஒக்ஸ்பாம் (Oxfam) தனது அறிக்கையில்
அம்பலப்படுத்துகிறது. இந்த நாட்டில் உள்ள மேல்தட்டு 1% மக்கள் நாட்டின் 51.53% சொத்தைத் தம் வசம் வைத்துள்ளனர். கீழ்
மட்டத்தில் உள்ள 60% மக்களிடம் நாட்டின் 4.8% சொத்தே உள்ளது. இந்த நாட்டில்
உள்ள 9 பெரும் கோடீஸ்வரர்களிடம் மட்டும்
கீழ் மட்டத்தில் உள்ள 50% மக்களிடம் உள்ள சொத்தின் அளவுக்குச் சமமான சொத்து
உள்ளது இந்த விவரங்கள் நாட்டில் மக்களுக்கிடையில் வேகமாக உருவாகி
வரும் பெரும் ஏற்றத்தாழ்வை மெய்ப்பிக்கின்றன. இதற்கெல்லாம் அடிப்படையாக இருப்பது
முதலாளிய உற்பத்திமுறைதான்.
முதலாளிய உற்பத்திமுறை இந்தியாவில்
மட்டும் கடுமையான ஏற்றத்தாழ்வை உருவாக்கவில்லை. உலகு தழுவிய அளவிலும் ஏற்றத்தாழ்வை
பெரும் அளவில் உருவாக்கியுள்ளது. உலக மக்கள் தொகையில் அடிமட்டத்தில் உள்ள 380 கோடி
மக்களிடம், அதாவது உலகில் உள்ள பாதி மக்களிடம், உள்ள சொத்தின் அளவுக்குச் சமமான
சொத்தை 26 பேர்கள் மட்டும் கொண்டுள்ளனர் என ஒக்ஸ்பாமின் அறிக்கை கூறுகிறது.
முதலாளியத்திற்கு மாற்று சோசலிசமே!
முதலாளிய உற்பத்திமுறை சமூகத்தில்
உள்ள அனைத்து மக்களின் உழைப்பினாலும் உருவாக்கப்படும் உபரி மதிப்புகளை ஒரு சில
முதலாளிகளின் கைகளில் சேர்க்கிறது. அவர்களைப் பெரும் செல்வந்தர்களாக மாற்றுகிறது.
அதே சமயத்தில் பெரும்பான்மையான மக்களை வறுமையிலும் ஏழ்மையிலும் தள்ளுகிறது. அதன் விளைவாக உற்பத்தி
செய்யப்படும் பொருள்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டு பொருளாதார நெருக்கடி
முற்றுகிறது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பல இலட்சம் மக்கள் வேலை இழக்கின்றனர். பல்லாயிரக்கணக்கான
குடும்பங்கள் அழிகின்றன. இந்த நிலையில் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதற்காக
முதலாளியப் பொருளாதார அறிஞர்களால் முன் வைக்கப்படும் தீர்வுகள் அனைத்தும்
தற்காலிகமானவைதான். அவை தற்காலிகமாக முதலாளிகளை நெருக்கடிகளிலிருந்து
காப்பாற்றும். ஆனால் அவை முதலாளிய
உற்பத்திமுறையில் உள்ள சிக்கலுக்கு நிரந்தரமான தீர்வை அளிப்பதில்லை. முதலாளிய
நெருக்கடி மீண்டும் மீண்டும் தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் பல்லாயிரக்கணக்கான
மக்களை வேலையிலிருந்து விரட்டுகிறது; வறுமையிலும் ஏழ்மையிலும் வீழ்த்துகிறது.
இவ்வாறு முதலாளிய உற்பத்திமுறை சமூகத்தின் இருப்புக்கும் தொடர்ச்சிக்குமே எதிராக
இருக்கிறது.
மக்களின்
வாழ்வுக்கு எதிரான இந்த உற்பத்திமுறைக்கு மாற்றாக மக்களின் உழைப்பைச் சுரண்டாத, மக்களுடைய உழைப்பின் முழுப்பயனும்
அவர்களுக்கே கிடைக்க வழி செய்யும், இலாபத்தை நோக்கமாக் கொண்டிராத மக்களின்
நல்வாழ்வை மட்டுமே நோக்கமாகக் கொண்ட சோசலிச உற்பத்திமுறையும் அதற்கான சமூகக்
கட்டமைப்பும் உருவாக்கப்பட வேண்டும்.
அத்தகைய ஒரு சமூகத்தைக் கட்டமைப்பதே
இந்த நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வாக இருக்க முடியும். அந்த
நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இங்குள்ள பெரும் முதலாளிகள், பன்னாட்டு முதலாளிகள்
ஆகியோரின் கார்பொரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமூக உடைமை ஆக்கப்பட வேண்டும்.
வங்கிகள் சமூக உடைமையாக்கப்படவேண்டும். கிராமப்புற மக்களின் வறுமைக்குக் காரணமாக இருக்கும் நில உடைமையில்
நிலவி வரும் கடுமையான ஏற்றத்தாழ்வு
ஒழிக்கப்பட வேண்டும். நிலம் உழைக்கும் விவசாயிகள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட
வேண்டும். நிலம் சமூகத்தின் உடைமையாக்கப்பட வேண்டும். படிப்படியாக அவற்றைக்
கூட்டுப் பண்ணைகளாக மாற்றுவதை நோக்கி நகர வேண்டும். சமூகத்தின் அனைத்து உற்பத்தி
மீதும் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டை
உருவாக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளே இன்றைய நெருக்கடிகளுக்கு நிரந்தரத்
தீர்வாக இருக்க முடியும்.
-புவிமைந்தன்
சான்றாதாரம்:
1. Official Reforms and India’s Real
economy –Sunand Sen. EPW,
September 21, 2019.
2. The Unfolding Economic Slowdow,
EPW, September 21, 2019.
3. Data on Demonetisation’s Link to
Economic Slowdown May Have
been Suppressed- Puja Mehra, The Wire, Aug. 22, 2019.
4. Growth, Employment and Labour
Through a Budget Lens- K.P.Kannan,
Centre for development Studies and The Laurie Baker Centre for
Habitat Sudies.
5. Their Growth, Their slowdown and
the Condition of the People
–www. rupe-india.org
6. Agricultural Census-2011
7. The Economic Times, 1.11.2019
8. The Hindu, 18.10.2019
Comments
Post a Comment