Skip to main content

சபரிமலை தீர்ப்பும் கேரள அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகளும்!


       சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலுமான பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீக்கியது.
       ஆனால் அதற்கு எதிராக இந்துத்துவாப் பரிவாரங்களும் ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களும் பிற்போக்கு சக்திகளும் போராட்டம் நடத்தின. கோவிலுக்குச் சென்ற பெண்களை வலுக்கட்டாயமாகப் போராட்டக்காரர்கள் தடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள கேரள அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்தது. அரசாங்கம் மத நம்பிக்கையில் தலையிடுவதாகக் கூறி போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பினர். பா.ஜ.க. மட்டுமல்லாமல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அடுத்து வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக இந்தப் போராட்டத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டன. அதில் வெற்றியும் பெற்றன. பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வி  அடைய இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.
       இந்த நிலையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு  நவம்பர் மாதம் 14 ஆம் தேதி (14.11.2019) தனது தீர்ப்பை வழங்கியது. இந்த வழக்கை விசாரித்த  ஐந்து நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள் வழக்கை ஏழு பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்றும், அதுவரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லும் என்றும்  தீர்ப்பு கூறியதால் இப்பொழுது வழக்கு ஏழு பேர் கொண்ட அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் அமர்வில் இருந்த  நீதிபதிகள் நாரிமனும் சந்திர சூடும் சீராய்வு கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து, பழைய தீர்ப்பே செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளனர். அதை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும்  எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் ஐந்து நீதிபதிகளும் இறுதித் தீர்ப்பு வரும் வரையிலும் கடந்த காலத் தீர்ப்பே செல்லும் என்றும் அதற்குத் தடையில்லை என்றும் கூறியுள்ளனர்.
       ஆனால், சிபிஎம் தலைமையிலான கேரள அரசாங்கம் இதைப் பொருட்படுத்தாமல் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலைக் கோவிலில் பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை என்றும், இதை மீறி வருபவர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்.
       கேரள சட்ட அமைச்சர் பாலன் மேலும் ஒரு படி மேலே  சென்று சபரிமலையின் புனிதத்தை கெடுக்க பெண்கள் யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன் மூலம் பெண்களைப் புனிதமற்றவர்கள் என்று அவர் கருதுகிறார் போலும். பெண்கள் புனிதமற்றவர்கள் என்றால் அவர்கள் வயிற்றில் தோன்றிய ஆண்கள் மட்டும் எவ்வாறு புனிதமானவர்களாக, பெண்களை விட உயர்ந்தவர்களாக இருக்க முடியும்? இங்கு அவர் ஓர் மார்க்சியவாதி போல  பேசவில்லை. ஒரு கடைந்தெடுத்த பிற்போக்குவாதி போலப் பேசுகிறார்.
சென்ற முறை கோவிலில் பெண்களின் நுழைவுக்கு ஆதரவு தெரிவித்து, போராட்டக்காரர்களின் மீது நடவடிக்கை எடுத்ததுதான் பாராளுமன்றத் தேர்தலில் தனது தோல்விக்குக் காரணம் என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது. அதன் காரணமாகவே இப்பொழுது அது பெண்களின் நுழைவுக்கு அனுமதியை மறுக்கிறது.
       கடந்த முறை அது மேற்கொண்ட அணுகுமுறை, இந்த முறை அது மேற்கொள்ளும் அணுகுமுறை இரண்டுமே தவறான அணுகுமுறைகள் என்பதை அது புரிந்து கொள்ளவில்லை.
சென்ற முறை உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி,  பெண்களின் கோவில் நுழைவை ஒரு நிர்வாக நடவடிக்கையாகவும், அதை எதிர்த்துப்  பிற்போக்கு சக்திகள் போராட்டம் நடத்தியபோது  அதை ஒரு சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகவும் மட்டுமே கேரள அரசாங்கம் பார்த்தது. ஆனால் உண்மையில் பிரச்சினையின் தன்மை வேறுபட்டது.
       இந்தச் சமூகத்தில் ஆணாதிக்கக் கருத்துகளும் பிற்போக்குக் கருத்துக்களுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.. பெரும்பான்மையான ஆண்களிடம் இத்தகைய கருத்துகளே மேலோங்கியுள்ளன.
       பெரும்பான்மையான  பெண்களும் அக்கருத்துகளைச் சரியானவை என்றே ஏற்றுக் கொண்டுள்ளனர். அதாவது ஏற்றுக் கொள்ள வைக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களும் கூட சபரிமலைக்குப்  பெண்கள் சென்றால் புனிதம் கெட்டுவிடும் என்றே கருதுகின்றனர். கோவிலில் பெண்கள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பெரும்பான்மையான பெண்களிடமும் குடி கொண்டுள்ள இத்தகைய ஆணாதிக்க, பிற்போக்கான கருத்துகளை முதலில் முறியடிக்க வேண்டும். அதன் மூலம்  பெண்களைக் கோவில் நுழைவுப் போராட்டத்திற்கு அணி திரட்ட வேண்டும். பல்லாயிரக்கணக்கான பெண்களை அணி திரட்டி கோவில் நுழைவை ஒரு மக்கள் திரளின் நிகழ்வாக மாற்ற வேண்டும். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அதைச் செய்யத் தவறியது.
       கடந்த முறை பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்ட மனிதச் சங்கிலிப் போராட்டத்தை பெண்களின் கோவில் நுழைவுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி கட்டமைத்தது. ஆனால் அதை ஒரு அடையாள போராட்டமாகத்தான் நடத்தியதே ஒழிய, பெண்களின் சிந்தனையில் ஒரு அடிப்படை மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஓர் இயக்கமாக அதை மேலேடுத்துச் செல்லவில்லை.. தனது தலைமையின் கீழ் உள்ள ஜனநாயக மாதர் சங்கம் போன்ற அமைப்புகள் மூலம் அதற்கான இயக்கத்தைக் கட்சி கட்டமைத்திருக்க வேண்டும். ஆனால் கட்சி அதைச் செய்யத் தவறியது.
       கடந்த முறை பெண்களின் கோவில் நுழைவுக்கு ஆதரவு தெரிவித்ததால்தான் தேர்தலில் தோல்வி அடைந்தோம் எனக் கருதி இந்த முறை பெண்களைக்  கோவிலில் அனுமதிக்க மாட்டோம் எனக் கட்சி அறிவிக்கிறது.  அதன் மூலம் சமூகத்தில் நிலவி வரும் ஆணாதிக்கக் கருத்துகளுக்கும் பிற்போக்குக் கருத்துகளுக்கும் அது அடி பணிந்துள்ளது. சமூக மாற்றத்திற்காக நிற்கும் ஒரு கட்சி மக்களிடம் மண்டிக் கிடக்கும் பிற்போக்கான கருத்துகளை எதிர்த்துப் போராடி அவற்றை முறியடிக்க வேண்டும். அதன் மூலமே மக்களை சமூக மாற்றத்தை நோக்கி வழி நடத்திச் செல்ல முடியும். அதற்குப் பதிலாக சமூகத்தில் ஆதிக்கத்தில் இருக்கும் பிற்போக்குக் கருத்துகளுக்கு அடிபணிந்து, அதற்கேற்ற வகையில் தனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளும் ஒரு கட்சி சமூக மாற்றத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய கட்சியாக இருக்க முடியாது. நிலவி வருகின்ற பிற்போக்கான நிலைமையைக் கட்டிக் காப்பாற்றுவதற்குச்  சேவை செய்யும் கட்சியாகத்தான் இருக்க முடியும்.   அத்தகைய கட்சியாகத்தான் மார்க்சிஸ்ட் கட்சி இருக்கிறது.  
- மு. வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்