தெலுங்கானா
மாநிலத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் வீரியமிக்க வேலைநிறுத்தப்
போராட்டம் அரசை ஸ்தம்பிக்க வைத்தது. ஒட்டுமொத்தமாக 48,000 தொழிலாளர்கள் வேலை
நிறுத்தத்தில் பங்கெடுத்தனர். போக்குவரத்துத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்
பத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை (JOINT ACTION COMMITTEE) அமைத்து அதன் தலைமையில் போராட்டத்தை
ஒருங்கிணைத்திருந்தன.
தெலுங்கானா
போக்குவரத்துக் கழகமானது அரசின் அங்கமாக இல்லாமல்
தன்னாட்சி பெற்ற தனியான அமைப்பாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் எந்தவித
நலத்திட்டங்களும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, போக்குவரத்துக் கழகத்தை
அரசுடன் இணைக்க வேண்டும், அதன் மூலம் போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு
ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்டு மொத்தமாக 26 கோரிக்கைகளை
முன்வைத்து தொழிலாளர்கள் போராடி வந்தனர்.
2017 ஆம்
ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும், பெண் ஊழியர்களின் வேலையை
இரவு 9 மணிக்கு மேல் நீட்டிக்ககூடாது, அரசு ஊழியர்களுக்கு இணையான மகப்பேறு
மருத்துவ விடுப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு அளிக்க வேண்டும்,
புதிய தொழிலாளர்கள் நியமனம் செய்யப்படவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்தப்
போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தெலுங்கானா மாநில
உருவாக்கத்தின் பொழுது பதவியேற்ற சந்திரசேகரராவ் தலைமையிலான அரசு, போக்குவரத்துக் கழகத்தை
அரசுடன் இணைப்பதாக உறுதியளித்தது. ஆனால், இன்று அந்தக் கோரிக்கையை
வலியுறுத்திப் போராடும் தொழிலாளர்கள் மீது சர்வாதிகாரப் போக்குடன் அடக்குமுறைகளை
ஏவியது.
வேலைநிறுத்தம்
துவங்கப்பட்ட அக்டோபர் 5 ஆம் தேதியன்று மாலைக்குள் அனைவரும் வேலைக்குத் திரும்ப
வேண்டும் என்றும், அவ்வாறு திரும்பாவிட்டால் அவர்கள் வேலையிலிருந்து
நீக்கப்படுவார்கள் என்றும் தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மிரட்டல்
விடுத்தார். மேலும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் எந்தக் கோரிக்கையையும்
நிறைவேற்ற முடியாது என்றும், அவர்கள் மீது எஸ்மா
சட்டம் பாயும் என்றும் அச்சுறுத்தினார். ஆனால், தொழிலாளர்கள் இந்த மிரட்டலைக்
கண்டு அஞ்சவில்லை, தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி திட்டமிட்டப்படி
போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
போராட்டத்தின்
அடுத்த நாளான, அக்டோபர் 6 ஆம்தேதி போராட்டத்தில் பங்கேற்ற 48,000 தொழிலாளர்கள்
வேலைக்குத் திரும்பாததால், அவர்களின் வேலையை பறிக்கும் விதத்தில், தொழிலாளர்கள்
தாங்களாகவே தங்களை வேலையிலிருந்து விடுவித்துக் கொண்டதாக அரசு அறிவித்தது.
அரசின் இந்தத்
தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டு மனம் வெதும்பி, தங்களின் எதிர்காலம் கேள்விக்
குறியாக உள்ளதை நினைத்து ஐந்து தொழிலாளர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். மேலும்,
இருபது தொழிலாளர்கள் அதிர்ச்சி காரணமாக இறந்துள்ளதாக தொழிற்சங்கங்கள் கூறியுள்ளன.
வேலை நிறுத்தத்தில்
பங்கெடுத்தவர்கள் மன்னிக்க முடியாத பெரும் குற்றத்தை இழைத்தவர்கள் என்றும்,
அவர்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்றும்
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சர்வாதிகாரப் போக்குடன் தொழிலாளர்கள் மீது
அடக்குமுறைகளை ஏவினார்.
தெலுங்கானா
போக்குவரத்துக் கழகம் 1200 கோடி ரூபாய் நட்டத்திலும் 5000 கோடி ரூபாய் கடன்
சுமையிலும் உள்ளது எனவும், ஆண்டுதோறும் போக்குவரத்துக் கழகத்திற்கு 900 கோடி
ரூபாய் மானியம் வழங்கப்படுவதாகவும், இனி மேலும், அரசால் இதனை அளிக்க இயலாது
எனவும், இந்த இழப்பிற்குக் காரணம் தொழிலாளர்களின் இத்தகைய செயல்பாடுகளே எனவும்
சந்திரசேகரராவ் குற்றம் சாட்டினார். ஆனால், உண்மையில், போக்குவரத்து அதிகாரிகள்
மற்றும் அமைச்சர்களின் கொள்ளையும், இலஞ்ச லாவண்யமுமே இதற்குக்
காரணம் என்பதை மறைத்துத் திசை திருப்புகிறார். மேலும், தொழிலாளர்களின் சம்பளத்தில்
இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்புநிதி 835 கோடியைச் செலுத்தாமல்
தொழிலாளர்களின் பணத்தை ஏப்பம் விட்டுள்ளது தெலுங்கானா அரசு.
போக்குவரத்துக்
கழகத்திற்கு ஏற்படும் செலவுகளில் முதன்மையாக இருப்பது டீசல் செலவாகும்.
இந்தியாவில் எரிபொருளுக்கு மத்திய, மாநில அரசுகள் கடும் வரியை விதித்து அதன் மூலம்
வருமானத்தை ஈட்டுகின்றன. குறிப்பாக, எரிபொருளுக்கான மாநில அரசின் வரியில்
இந்தியாவிலேயே அதிகமான வரியை விதிக்கும் மாநிலங்களில் ஒன்றாகத் தெலுங்கானா உள்ளது.
போக்குவரத்துக் கழகத்தின் செலவினைக் குறைக்கும் வகையில் மாநில அரசின் வரி
விகிதத்தைக் குறைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் அரசு
இதற்குச் செவி சாய்க்கவில்லை.
தனியார் பேருந்து
1கி.மீக்கு 75 பைசா இலாபம் சம்பாதிப்பதாகவும், ஆனால் அரசு போக்குவரத்துத் துறையோ 1
கி.மீ.க்கு 13 ரூபாய் நட்டத்தை அடைகிறது என்றும் இதற்குத் தொழிலாளர்களே காரணம்
என்றும் சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டினார். அதிக வருமானம் ஈட்டும் வழித்
தடங்களில் மட்டுமே தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறைவான வருமானம் வரும்
கிராமப்புற பகுதிகளில் அவர்கள் பேருந்துகளை இயக்க முன்வருவதில்லை, அரசும் அவர்களை
நிர்ப்பந்திப்பதில்லை. கிராமப்புறங்கள் உள்ளிட்ட அனைத்து வழித் தடங்களிலும் அரசுப்
பேருந்துகள் இயக்கப்படுவதால் தனியார் பேருந்துகளுக்கு இணையாக வருமானம் ஈட்ட
முடியாது.
சந்திரசேகரராவ்
தலைமையிலான அரசின் நோக்கம் போக்குவரத்துக் கழகத்தில் உள்ள சிக்கல்களைச் சரி செய்து
அதனை மீட்டமைப்பது அல்ல, மாறாக, கடன் சுமை, நட்டம் ஆகியவற்றைக் காரணம் காட்டி
போக்குவரத்துத் துறையை தனியாரிடம் தாரை வார்க்கத் திட்டமிட்டுள்ளது. தனியார்
பேருந்துகளைப் பொது-தனியார் கூட்டு (PUBLIC PRIVATE PARTNERSHIP) அடிப்படையில் இணைக்கவும், ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான
பேருந்துகளைத் தனியார் இயக்கும் வண்ணம் வழித் தடங்களை ஒதுக்கவும் அரசு
திட்டமிட்டுள்ளது.
தொழிலாளர்களின்
போராட்டங்களை ஒடுக்கும் விதத்தில் உடனடியாகப் புதிய ஆட்களை நியமித்தது. மேலும்,
இந்தப் புதிய தொழிலாளர்கள் போக்குவரத்துக் கழகத்தின் எந்த ஒரு சங்கத்திலும் இணைய
மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. தொழிற்சங்கச்
சட்டம் 1926 வழங்கியுள்ள தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை அரசே மறுக்கும் விதமாகத்
தொழிலாளர்களை எந்த சங்கத்திலும் இணையக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கிறது.
போராடும்
தொழிலாளர்களின் கோரிக்கைகள் எதனையும் பரிசீலனை செய்ய மறுத்து, போராட்டத்தை ஒடுக்குவதற்காக உடனடியாக 4114
தனியார் பேருந்துகளை அரசு பேருந்துகளுக்குப் பதிலாக இயக்கவும், 2500 பேருந்துகளை
ஒப்பந்த அடிப்படையில் இயக்கவும்அரசு முடிவு செய்தது. அரசு பேருந்துகளை இயக்க தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள்
பணியிலமர்த்தப்பட்டனர்.
போராட்டத்தில்
ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களிலிருந்து உடனடியாக வெளியேறி
வேலைக்குத் திரும்ப வேண்டும் எனத் தொடர்ந்து அறைகூவல் விடுத்தார் சந்திரசேகரராவ்.
இவர் 2004-2006 ஆண்டு காலத்தில் மன்மோகன்சிங் அமைச்சரவையில் தொழிலாளர் மற்றும்
வேலை வாய்ப்புத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தவர். தொழிலாளர்களின் தொழிற்சங்க உரிமையை
மதியாத, அவர்களின் சட்டப்படியான போராட்டங்களைக் கூட ஒடுக்க நினைக்கும் இவர் தொழிலாளர் நலத்துறையின் அமைச்சராக இருந்தவர் என்பது
வேடிக்கையாக உள்ளது.
அரசு ஊழியர்களின்
போராட்டங்கள் மீது கடும் அடக்குமுறைகள் ஏவப்படுவது இது முதல் முறையல்ல, மத்திய
மற்றும் மாநில அரசு ஊழியர்களின் வீரியமிக்க போராட்டங்கள் அரசால் தொடர்ந்து
ஒடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 2003 ஆம் ஆண்டு, ஊதிய உயர்வு உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டம் நடத்திய 12 இலட்சம் அரசு ஊழியர்கள் மற்றும்
ஆசிரியர்களை இரும்புக்கரம் கொண்டு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா ஒடுக்கினார்.
போராட்டத்தை முன்னின்று நடத்திய 2200 ஊழியர்களைக் கைது செய்து சிறையிலடைத்தார்.
மேலும் தமிழக அரசானது, 1,76,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஒரே நாளில்
எஸ்மா மற்றும் டெஸ்மா சட்டத்தின்கீழ் வேலையிலிருந்து நீக்கியது. அரசின் இந்தச்
சட்ட விரோத வேலை நீக்கத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் அரசு ஊழியர்கள் முறையீடு செய்தனர். சென்னை
உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அரசின் இந்த அராஜகப் போக்கிற்கு ஆதரவாகத்
தீர்ப்பளித்தன. உச்சநீதிமன்றம் ஒருபடி மேலே சென்று அரசு ஊழியர்களுக்கு வேலைநிறுத்த
உரிமை கிடையாது என்று தீர்ப்பளித்தது. இதோடு மட்டுமல்லாமல் வேலை நிறுத்தம்
செய்ததற்கு மன்னிப்புக் கடிதமும், இனிமேல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டேன்
எனக்கூறி உறுதிமொழிக் கடிதமும் கொடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. தமிழ்நாடு
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டம் தோல்வியில் முடிந்தது.
சாலை போக்குவரத்தை தனியார்மயமாக்கும் வகையில் முதல் கட்டமாக 5100 வழித்தடங்களை
தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்து ஐதாராபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்
செய்யப்பட்ட பொதுநல வழக்கில் தனியார்மயமாக்குவதை தடை செய்ய எந்த சட்டமும் இல்லை
எனவும், மோட்டார் வாகனச் சட்டபடி போக்குவரத்துக் கழகத்தின் முழு கட்டுபாடும்
அதிகாரமும் அரசுக்கு உள்ளது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும் தெலுங்கானா உயர் நீதிமன்றமானது அரசின் தனியார்மய போக்கிற்கு வக்காலத்து
வாங்கும் வகையில் இந்த விசாரணையின் போது பின்வருமாறு கூறியது.
"நாம் சோசலிச பின்புலத்திலிருந்து
(நேருவின் சோசலிசத்தைத் தான் உயர் நீதிமன்றம் இவ்வாறு கூறுகிறது) தனியார்மயத்தை
நோக்கி சென்று கொண்டிருக்கிறோம், அதற்கு சட்டங்கள் அனுமதியளிக்கின்றன. நாம் முதலாளித்துவ
மற்றும் உலகமயமாக்கல் காலகட்டத்தில் இருக்கிறோம். 1947 காலகட்டத்திலேயே தொடர்ந்து
நீடித்திருக்க முடியாது. ரயில்வே துறையிலும் தனியார் நிறுவனங்கள்
அனுமதிக்கப்படுகின்றன. மத்திய அரசாங்கம் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும்
முடிவிற்கு திடமான முடிவுகளை எடுத்து வருகிறது. நீதிமன்றமானது பாராளுமன்றத்தால்
நிறைவேற்றப்படும் சட்டங்களுக்கு கட்டுபட்டு நடக்க வேண்டியுள்ளது"
மேலும் தனது தீர்ப்பில், 1980களில் விமான போக்குவரத்தில் ஏர் இந்தியா மட்டுமே
(இந்திய அரசு நிறுவனம்) இருந்ததை மாற்றி தனியார் விமான போக்குவரத்தும் அனுமதிக்கப்பட்டது.
அப்பொழுது சிலர் இதனை ஆட்சேபித்தார்கள், எனினும் போக்குவரத்து துறையை
தனியார்மயமாக்குவது சட்டபடி தவறு என்று எந்த சட்டமும் சொல்லவில்லை என்று
கூறியுள்ளது, இதன் மூலம் தெலுங்கானா போக்குவரத்து கழகத்தை தனியாரிடம் தாரை
வார்க்கும் சந்திரசேகர ராவ் அரசின் முடிவிற்கு மறைமுகமாக வக்காலத்து வாங்குகிறது
நீதிமனறம்.
அக்டோபர் மாதம் 5
ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்திற்கு, மீண்டும் நவம்பர் 5-ஆம்தேதி வரை
வாய்ப்பு வழங்குவதாகவும், அதற்குள் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு
பணிக்குத் திரும்பவேண்டும் எனவும் சந்திரசேகரராவ் அச்சுறுத்தினார். ஆனால், அரசின்
இந்த அச்சுறுத்தலை புறந்தள்ளிய தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை ஏற்றுக்
கொள்ளும் வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.
எனினும், நீண்ட
நாட்களாக நீடித்து வந்த போராட்டத்தை அரசு அலட்சியப்படுத்தி வந்ததாலும்,
சீர்குலைத்து வந்ததாலும் தொழிலாளர்கள் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்க வேண்டிய
நிலை வந்தது.
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் எந்தவித நிபந்தனையுமின்றி 47 நாட்கள்
போராட்டத்தை நவம்பர் 20 ஆம் தேதி முடித்துக் கொள்வதாக அறிவித்தது. அவர்களுடைய
கோரிக்கைகள் அப்படியே நிலுவையில் உள்ளன. போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க
வேண்டும் என்ற கோரிக்கையை கைவிடுவதாகவும், மற்றக் கோரிக்கைகள் குறித்து
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் கோரின. போக்குவரத்துக்
கழகம் தொழிலாளர்களிடம் எழுத்துபூர்வமான கடிதங்கள் எதனையும் கேட்க கூடாது எனவும், வழக்கம் போல
வேலைக்கு திரும்பி பணியில் ஈடுபடுவதற்கான சூழலை உத்திரவாதப்படுத்த வேண்டும் எனவும்
தொழிற்சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்டது.
தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப தயாராக இருப்பதால் அரசு தொழிலாளர்களை
பழிவாங்கக் கூடாது என உத்திரவிட வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு
விசாரணையின் போது தொழிற்சங்கம் சார்பில் வாதிடப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றமோ
அவ்வாறு எந்தவித உத்திரவையும் பிறப்பிக்க முடியாது எனவும், ஆனால், அரசோ அல்லது
போக்குவரத்து கழகமோ எந்த வித பழிவாங்கலிலும் ஈடுபடாது என நம்புவதாகவும் கூறி
ஒதுங்கிக் கொண்டது.
தொழிற்சங்கங்களின்
வேலைக்கு திரும்பும் அறிவிப்பு குறித்து எந்தவித பதிலும் அரசின் தரப்பில் வராததால்
26.11.2019 அன்று தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பினர். ஆனால் அவர்களை வேலைக்கு
அனுமதிக்க மறுத்ததோடு கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
29.11.2019 அன்றுதான் தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப அரசு அனுமதித்தது. அது குறித்தான
அறிவிப்பில் தெலுங்கானா முதலமைச்சர் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை விட்டு வெளி யேற
வேண்டும் என வலியுறுத்தினார்.
"நீங்கள்
தொழிற்சங்கங்களுக்கு பின்னால் சென்றால், அது (தொழிற்சங்கங்கள்) உங்களுக்கு எந்தவித
உதவியும் செய்யாது. சங்கங்களை தவிர்த்து விட்டு என்ன செய்ய வேண்டும் என்பதை
தொழிலாளர்கள் சிந்திக்க வேண்டும். அரசு தொழிலாளர் நல வாரியம் அமைக்கும், நீங்கள்
(தொழிலாளர்கள்) அரசை பின்பற்றினால் போக்குவரத்துக் கழகம் இலாபகரமாக இயங்க
வழியேற்படும்" என்று முதலமைச்சர் தனது அறிவிப்பில் தெரிவித்தார்.
தொழிலாளர்களின் நலனை
பாதுகாக்க வேண்டிய அரசே, தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான தொழிற்சங்கத்தில்
இணைவது என்பதை மறுப்பதோடு, தொழிற்சங்கங்களை முடக்கும் நோக்கத்தோடு தொழிலாளர் நல
வாரியம் அமைப்பதாக கூறுகிறது. மேலும் இரண்டு வருடங்களுக்கு தொழிற்சங்கங்களுக்கு
தேர்தல் வைக்கப்பட மாட்டாது என்றும் சட்டவிரோத அறிவிப்பையும் செய்துள்ளது.
இதனையடுத்து
டிசம்பர் 1 ஆம் தேதி தொழிலாளர்களை நேரடியாக சந்திக்கும் நிகழ்வு ஒன்றை முதலமைச்சர்
சந்திரசேகர ராவ் ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்க்க தொழிற்சங்க நிர்வாகிகளை அழைக்காமல், ஒவ்வொரு பணிமனையிலிருந்தும்
ஐந்து தொழிலாளர்கள் வீதம் தொழிலாளர்களை அழைத்து அவர்கள் முன்னிலையில் அறிவிப்பு
ஒன்றை செய்தார்.
அதன்படி, நிலுவை
ஊதியம், வேலை நிறுத்தக் காலத்திற்கான ஊதியம், ஓய்வு பெறும் வயது 58லிருந்து 60 ஆக
உயர்வு, போக்குவரத்து வழித்தடங்களை தனியாரிடம் கொடுக்கும் முடிவை (தற்காலிகமாக)
கைவிடல், பெண் தொழிலாளர்களின் வேலை நேரம் இரவு 8 மணிக்கு மேல் நீட்டிக்கப்படாது,
அரசு ஊழியர்களுக்கு இணையான மகப்பேறு விடுப்பு மற்றும் குழந்தை பராமரிப்பு விடுப்பு,
தற்காலிக தொழிலாளர்களை நிரந்தரமாக்குதல் உள்ளிட்ட 26 அறிவிப்புகளை செய்தார்.
இந்த அறிவிப்புகள்
எல்லாம், நீண்ட நெடிய போராட்டத்தினால் கிடைத்திருந்தாலும், அது போராட்டத்தின்
காரணமாக வந்ததல்ல என்று எண்ணும் வகையில் அரசானது தொழிற்சங்கங்களை புறக்கணித்தும்,
அதனை முடக்கும் வகையிலும் மேற்கண்ட அறிவிப்புகள் செய்துள்ளது.
மேலும் தொழிற்சங்கம்
மூலமாக தொழிலாளர்கள் எந்தப் போராட்டத்திலும் ஈடுப்படக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு
பணிமனையிலிருந்தும் இரண்டு தொழிலாளர்களை கொண்ட தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்படும்
என அரசு அறிவித்துள்ளது.
இந்திய அரசானது 44
தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதாக கூறி ஏற்கனவே
இருக்கும் கொஞ்சம் நஞ்சம் உரிமைகளையும் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. அதனை
விட மிக மோசமான வகையில் தொழிற்சங்கத்தினை அங்கீகரிக்காமல் அதனை முடக்கும்
விதத்திலும், தொழிலாளர்களை அச்சுறுத்தி தொழிற்சங்கத்தில் சேரவிடாமல் தடுக்கும்
வேலையிலும் மாநில அரசே ஈடுபட்டு வருகிறது.
தொழிலாளர்களின்
நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசு அதிகாரிகளோ, அரசின் அமைச்சர்களோ
அல்லது நீதிமன்றங்களோ தயராக இல்லை. அரசின் இந்த உறுப்புகள் அனைத்தும் தொழிலாளர்
வர்க்கத்திற்கு எதிராகவே செயல்படுகின்றன. மேலும், தாம் இயற்றி வைத்துள்ள சட்டப்படி
தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பொருளாதார நலன்களையும் கூட
வழங்குவதில்லை. ஏனெனில் சட்ட திட்டங்களின் பலன்கள் அனைத்தும் உடைமை
வர்க்கத்திற்கானதாகவும், கட்டுப்பாடுகளும் தண்டனைகளும் உழைக்கும் பெரும்பான்மை
மக்களுக்கானதாகவும் உள்ளது. தங்களின் உரிமைக்காக, வாழ்வாதாரத்திற்காகப் போராடும்
உழைக்கும் மக்களை ஒடுக்க எந்தச் சட்ட விதிகளையும் பற்றி அரசு கவலைப்படுவதில்லை.
சட்டத்திற்குப் புறம்பாக அடக்குமுறைகளை ஏவி உயிர்களைப் பலி வாங்குகின்றன.
தொழிற்சங்க உரிமைகளை
பறிக்கும் தெலுங்கானா அரசின் இந்த போக்கிற்கு தொழிலாளர்கள் அடிபணியாமல், தங்களின்
உரிமைகளை நிலை நாட்ட வேண்டும். மேலும், தொழிலாளர்கள் தனித்தனியாகத் தமது
பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவதால் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.
தொழிலாளர்கள் அனைவரும் ஒரு வர்க்கமாக ஒன்றிணைந்து அரசியல் அதிகாரத்திற்கான
போராட்டமாக அதை முன்னெடுத்துச் செல்லும்போது மட்டுமே நிரந்தரத் தீர்வு காண
முடியும்.
- குமணன்
Comments
Post a Comment