அன்பிற்குரிய
உழைக்கும் மக்களே!
சீனாவில் தொடங்கிய கொரானா
என்னும் பெரும் தொற்று நோய் இன்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இது வரையிலும்
ஒரு இலட்சம் பேருக்கு மேல் பலி கொண்டுள்ளது. இந்தியாவிலும் இது வரையிலும் இருநூறு
பேருக்கு மேல் பலி கொண்டுள்ளது. சீனாவில் இந்த நோய் பரவியிருந்த போதே,
தொடக்கத்திலேயே இந்தப் பெரும் தொற்று நோய்
இந்தியாவில் நுழையாமல் தடுக்க தக்க
நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நாம் இவ்வளவு பாதிப்புக்கு ஆளாகி இருக்க மாட்டோம்.
ஆனால் பொறுப்பற்ற ஆட்சியாளர்கள் அதைச் செய்யத் தவறினார்கள். அந்நோய் இங்கு நுழைந்து வேகமாகப் பரவத் தொடங்கிய பிறகு இப்பொழுது
நாடெங்கும் ஊரடங்கு பிறப்பித்து, 130 கோடி மக்களையும் வீடுகளில்
முடக்கியுள்ளார்கள்.
நான்கு மணி நேர
அவகாசத்தில் ஊரடங்கு ஆணையைப் பிறப்பித்து பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொடும்
துயரத்திற்கு ஆளாக்கியுள்ளனர். பல நூறு கிலோமீட்டர் தூரங்களுக்கு மக்களைக் குழந்தை
குட்டிகளுடன் மூட்டை முடிச்சுகளுடன் இரவும் பகலும் நடக்க வைத்தனர். மக்களைப்
பற்றிய அக்கறையற்ற ஆட்சியாளர்களின்
செயலால் அதில் மட்டும் 117 பேருக்கும்
மேல் இறக்க வேண்டிய கொடுமை நேரிட்டது.
சிறு,
குறு, நடுத்தர, பெரும் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுக் கோடிக்கணக்கான
தொழிலாளர்கள் இன்று வேலையிழந்து உள்ளோம்; நம்மில் 90% தொழிலாளர்கள்
அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள். இவர்களில் சிறு,குறு, நடுத்தரத் தொழில்களில்
பணிபுரிபவர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சித் தொழிலாளர்கள், இடம் விட்டு
இடம் பெயர்ந்து பணி புரியும் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள்,
போக்குவரத்துத் துறை, ஓட்டல்கள், கடைகள், சேவைத் துறைகள் ஆகியவற்றில் பணி
புரிந்து வந்த தொழிலாளர்கள் என அனைவரும் அடங்குவர். இவர்கள் மட்டும் சுமார்
50 கோடி பேர் இருப்போம். இவர்கள் அனைவரும் இன்று வருமானமின்றிப் பட்டினியில்
தள்ளப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் கிராமப் புறங்களில் ஏழை விவசாயிகளும்
விவசாயத் தொழிலாளர்களும் வருமானம் இல்லாமல் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளனர்.
பட்டினியால் சாவதை விடக் கொரானாவால் சாவது பரவாயில்லை என்ற நிலைக்கு நாம்
அனைவரும் தள்ளப்பட்டுள்ளோம்.
உழைக்கும்
மக்களாகிய நாம்தான் இந்த நாட்டில் அனைத்து செல்வத்தையும் உருவாக்கினோம். இந்த
நாட்டில் செலுத்தப்படும் மறைமுக வரிகள், நேர்முக வரிகள், கார்ப்பரேட் வரிகள் என
அனைத்து வரிகளும் நமது உழைப்பினால்
விளைந்த இலாபத்திலிருந்தே
செலுத்தப்படுகின்றன. அவற்றிலிருந்தே இங்குள்ள ஆட்சி அமைப்புகளும்,
நிர்வாக அமைப்புகளும், நீதித் துறையும்,
போலிசும் இராணுவமும் ஊதியத்தைப் பெற்று வருகின்றன. நமது உழைப்பிலிருந்து உயிர்
வாழும் இவர்களை ஊரடங்கு ஆணை பாதிக்கவில்லை. பட்டினியில் தள்ளவில்லை. ஆனால் செல்வம்
அனைத்தையும் படைத்த இன்று நாம் பட்டினியில் தள்ளப்பட்டுள்ளோம். ஒரு வேளைச்
சோற்றுக்குத் தன்மானமிழந்து கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
இந்த
நாட்டு முதலாளிகளுக்கு இலட்சக்கணக்கான கோடி ரூபாய்களைத் தள்ளுபடி செய்தும், பல
இலட்சம் கோடி ரூபாய்களைச் சலுகைகளாக
அறிவித்தும் வரும் இந்த அரசு, நம்மை
முழுப் பட்டினியில் தள்ளி விட்டு, நிவாரணம் என்ற பெயரில் குடுப்பத்திற்கு
ரூ.1000, ரூ. 500 என வழங்கிக் கண் துடைப்பு நாடகம் நடத்துகிறது.
கொரானா பெரும் அளவில் பரவி
விட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளித்துக்
காப்பாற்றும் அளவுக்கு இங்கு அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்களோ,
செவிலியர்களோ, துணை மருத்துவ ஊழியர்களோ, படுக்கைகளோ, மருந்துகளோ, கருவிகளோ இல்லை
என்பதுதான் உண்மை. அதனால்தான் இந்த அரசு அனைத்து மக்களையும் வீடுகளில் முடக்கி
உள்ளது. நம்மையும் பட்டினியில் தள்ளி உள்ளது.
உழைக்கும்
மக்களாகிய நமக்கு நமது கையும் காலும்தான் சொத்து. நாம் உடல் நலத்தோடு
இருந்தால்தான் உழைக்க முடியும். இங்குள்ள முதலாளிகளும் நமது உழைப்பைச் சுரண்டிக்
கொழுக்க முடியும். நாட்டின் செல்வமும் உயரும். இன்று நம்மை முடக்கி விட்டு, இந்த ஊரடங்கால் பல
இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படும் என்று முதலாளிகளும், முதலாளியப்
பொருளாதார நிபுணர்களும் அறிக்கை சமர்ப்பித்து வருகின்றனர்.
நம்மைக்
காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பல இலட்சம் கோடிகளுக்கு இராணுவத் தளவாடங்களை வாங்கிக்
குவித்து வரும் இந்த அரசுக்கு மக்களின் உடல்நலத்தைப் பேணுவதற்காக போதுமான
மருத்துவமனைகளையும் கட்டமைப்புகளையும் உருவாக்க முடியவில்லை. மக்கள் அனைவரையும்
தங்கள் மருத்துவத்திற்காகத் தனியார் மருத்துவமனைகளையே சார்ந்து இருக்க
வைத்துள்ளது. பெரும் பெரும் கார்ப்பரேட்
மருத்துவமனைகள் சிகிச்சை என்ற பெயரில் மக்களைக் கொள்ளையடிக்க வழி
வகுத்துள்ளது. இந்த நிலையில் கொரானா கட்டுக்கடங்காமல் பரவினால் இங்குள்ள மக்கள்
கொத்து கொத்தாகச் சாவதைத் தவிர வழியில்லை. வல்லரசு என்று கூறிக் கொண்டு உலகம்
முழுவதும் இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ள அமெரிக்காவில் இன்று பல்லாயிரக்கணக்கான
மக்கள் போதிய மருத்துவ உதவியின்றி கொரானாவால் மடிந்து வருவது போலத்தான்
இங்கும் நடக்கும்.
முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி
நடக்கும் நாட்டில் இதுதான் நடக்கும். முதலாளிய வர்க்கத்திற்கு நமது உழைப்புதான் குறி. அது நாம் நன்றாக
இருக்கும் வரையிலும் நமது உழைப்பைப் பிழிந்து விட்டுப் பிறகு சக்கையாய் நம்மைத்
தூக்கி எறிந்து விடும். நமக்கு நோய் வந்தாலும் நாம் பட்டினி கிடந்து செத்தாலும் அதற்குக் கவலை இல்லை.
இந்த நிலையில் நாம் வெறுமனே கை
கட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் நமது அவல நிலையும்
பட்டினியும் தீராது. எனவே பின்வரும் நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு இந்த அரசை வலியுறுத்த வேண்டும். அதற்காக
உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்!
¦
வேலையிழந்து, வருமானமின்றி வாடும்
மக்கள் அனைவருக்கும் இயல்பு நிலை திரும்பும் வரை வாழ்வாதரத்திற்குத் தேவையான நிதி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.
அதற்கான நிதி ஆதாரத்தை முதலாளிகளின் சொத்துகளைக் கைப்பற்றுவதன் மூலம் உண்டாக்க
வேண்டும்!
¦
இந்த பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி ஆட்குறைப்பு,
ஊதியவெட்டு செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
¦
வருங்காலத்தில் இது போன்ற
நெருக்கடி நிலை உருவாகாமல் தடுக்க மக்கள் நலனை முதன்மையாகக் கருத்தில் கொண்டு
போதிய எண்ணிக்கையிலான மருத்துவ மனைகளை அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும் மருத்துவ
ஊழியர்களுடனும் நாடெங்கும் கட்டமைக்க வேண்டும்!
¦
கார்ப்பரேட் தனியார்
மருத்துவமனைகளைத் தேச உடைமையாக்க வேண்டும்!
¦
மக்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ
வசதி வழங்க வேண்டும்!
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு
தொடர்புக்கு: 94860 70079
Comments
Post a Comment