Skip to main content

மக்கள் அனைவருக்கும் உண்மையான குடியுரிமையை உறுதிப்படுத்தும் சோசலிச சமுதாயத்தைப் படைப்போம்!


இந்திய ஒன்றியத்தின் பாராளுமன்றத்தில் கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 11 ந் தேதி மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடெங்கும் மாபெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி மாணவர்களும் இளைஞர்களும் இஸ்லாமிய மக்களும் குறிப்பாகப் பெரும் அளவில் இஸ்லாமியப் பெண்களும் இடதுசாரி அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் நாடு முழுவதும்  போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லி, கொல்கத்தா, சென்னை, கயா, கான்பூர், அலகாபாத், பெங்களூரு என நாட்டின் முக்கிய நகரங்களில் எல்லாம் மக்கள் ஏராளமான அளவில் தொடர்ந்து இரவும் பகலும் ஒரே இடத்தில் அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தில்லியில் ஷாகீன்பாக் என்னும் இடத்தில்  டிசம்பர் 15 முதல் மக்கள் இரவும் பகலும் தொடர்ந்து அமர்ந்து இந்தச் சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பை அமைதியான வழியில் தெரிவித்து வருகின்றனர்.

சென்னையிலும் வண்ணாரப்பேட்டை பகுதியில் இந்தச் சட்டத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராடிய மக்கள் மீது போலிஸ் தடியடி நடத்தியதைத் தொடர்ந்து, தில்லி ஷாகீன்பாக் வழியில் போராட்டத்தை அப்பகுதி இஸ்லாமிய மக்கள் பிப்ரவரி 14 முதல் தொடங்கியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், தமிழ் நாட்டில் ஆளும் கட்சியாக உள்ள அ.தி.மு.க. அந்தச் சட்டத்திற்கு எதிராகச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று கோரியும் தமிழகம் எங்கும் இஸ்லாமிய அமைப்புகளும் ஜனநாயக சக்திகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கண்டித்தும், அதனைத் தொடர்ந்து மத்திய அரசு கொண்டு வரப் போவதாக அறிவித்துள்ள தேசிய மக்கள் தொகைப் பதிவேடு (National Population Register), தேசியக் குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens)  ஆகியவற்றை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் கூறி கேரளா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஜார்கண்ட் ஆகிய மாநில அரசுகளும், ஒன்றியப் பகுதியான புதுச்சேரி அரசும் உட்பட பதின்மூன்று மாநிலங்கள் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளன.

மராட்டியத்தில் தேசியவாதக் காங்கிரஸ், சிவ சேனா, ஒரிசாவின் நவீன் பட்நாயக் கட்சி  போன்ற கட்சிகள் இந்தச் சட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தில் வாக்களித்திருந்தாலும் நாடெங்கும் ஏற்பட்டுள்ள மக்களின் கொந்தளிப்பைக் கண்டு அஞ்சி அந்தச் சட்டத்தைத் தங்களுடைய மாநிலங்களில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என அறிவித்துள்ளன.

ஐக்கிய ஜனதாக் கட்சி பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்திற்கு ஆதரவளித்து இருந்தது. ஆனால் பீகார் மாநிலத்தில்  நித்திஷ் குமாரின் தலைமையில் உள்ள அந்தக் கட்சியின் அரசு  தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டை 2010 ஆம் ஆண்டுப் படிவத்தில்தான் நடைமுறைப்படுத்துவோம் என்றும், புதிய படிவத்தை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும், தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் ஏக மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பா.ஜ.க. கட்சி அந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து  அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்தபோதும் அதைத் தடுக்க இயலவில்லை. அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றாவிட்டால் விரைவில் அங்கு வரப்போகும் சட்ட சபைத் தேர்தலில் மக்களால் உறுதியாகத் தூக்கி எறியப்படுவோம் என்பதை ஐக்கிய ஜனதா கட்சியும் பா.ஜ.க வும் நன்கு அறியும். இது மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று கூறலாம்.

ஆனால் மதச் சார்பற்ற கட்சி என்று தன்னை அறிவித்துக் கொள்ளும் அ.தி.மு.க. பாராளுமன்றத்தில் இந்தச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தது. இந்தச் சட்டம் ராஜ்ய சபையில் நிறைவேறுவதற்கு அ.தி.மு.க.வின் வாக்குகள் முக்கியமான பங்காற்றின. இந்தச் சட்டத்தை எதிர்த்து இன்று தமிழ் நாடெங்கும் முஸ்லீம் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர். தமிழ் நாட்டில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பைக் கண்டும் கூட  அந்தச் சட்டத்தை எதிர்த்து வாய் திறக்காமல் மக்களுடைய போராட்டங்களை ஒடுக்குவதிலேயே அ.தி.மு.க. அரசு குறியாக இருந்து வருகிறது. பீகார் மாநிலத்தில் உள்ள பா.ஜ.க. கட்சியை விட இங்குள்ள அ.தி.மு.க. மோடியின் விசுவாசியாக இருக்கிறது; மக்களுக்கு எதிராக இருக்கிறது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான ஆணையம் இந்தச் சட்டம் அடிப்படையிலேயே பாகுபாட்டைக் கொண்டது எனக் கண்டித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களும் உலகு தழுவிய அளவில் உள்ள ஜனநாயகவாதிகளும்  முற்போக்காளர்களும் இந்தச் சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர்.

எதேச்சதிகார ஆட்சி!
மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி –அமித் ஷா அரசு நாடு முழுவதும்  மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம்தான் எங்களது வேதம் என ஒரு பக்கம் கூறிக் கொண்டே இன்னொரு பக்கம் அரசியல் அமைப்புச் சட்டத்தைப் படிப்படியாகக் குழி தோண்டிப் புதைக்கும் வேலையை மோடி அரசு செய்து வருகிறது; பாராளுமன்றத்தில் தனது கட்சிக்குள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி நாடெங்கும் சர்வாதிகார  ஆட்சியைக் கட்டவிழ்த்து விட்டு வருகிறது.

ஒரு ஜனநாயக நாட்டில் ஆட்சியில் உள்ள கட்சியையும்  அதன் செயல்பாடுகளையும் விமர்சிப்பதும்,  அது கொண்டு வரும் சட்டங்கள் பற்றி பகிரங்கமாக விவாதிப்பதும் விமர்சிப்பதும், தம்முடைய நலன்களுக்கு எதிரானவை என மக்கள் கருதும்  சட்டங்களை எதிர்த்துப் போராடுவதும்  மக்களுக்கு  வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளாகும். ஆனால் மோடி அரசோ தன்னுடைய கட்சியையும் நடைமுறையையும் தான் கொண்டு வரும் சட்டங்களையும் விமர்சிக்கும் அனைவரையும், தனது ஆட்சிக்கு எதிராக மாறுபட்ட கருத்துகள் கொண்ட மக்கள் அனைவரையும் தேசத் துரோகிகள் என முத்திரை  குத்துகிறது. தனது கட்சிதான் தேசம், அவற்றின் கருத்துகள்தான் தேசப் பற்றுடையவை என்று கூறி மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் பேச்சுரிமையைப் பறித்து வருகிறது. அவர்கள் அனைவரும் தேசத்துக்கு எதிராகச் சதி செய்பவர்கள் எனக் கூறி அவர்கள் மீது கடுமையான தேசத் துரோக வழக்குகளைத் தொடுத்து சிறைகளில் தள்ளி வருகிறது.

“போராடுபவர்கள் தேசத் துரோகிகள். அவர்களைச் சுட்டுத் தள்ளுங்கள்” அனுராக் தாக்கூர் என்ற  மத்திய அமைச்சர் பகிரங்கமாகப் பேசுகிறார். இத்தகைய பேச்சுகளால் வெறி ஊட்டப்பட்ட இந்துத்துவ வெறி கொண்ட இளைஞன் ஒருவன்  தில்லியில் அமைதியாகப் போராடி வரும் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது ஜனவரி 30 ந்தேதி துப்பாக்கியால் சுட்டான். இதே நாளில்தான் 1948 ஆம் ஆண்டு  கோட்சே என்ற இந்துத்துவா வெறியன் மகாத்மா காந்தியின் உயிரைப் பறித்தான். அவனுடைய வாரிசுகள் ஆட்சியில் அமர்ந்துள்ள இன்றைய நிலையில், எழுபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஆட்சியாளர்களின் ஆதரவுடன் அத்தகைய கொடூரமான செயல்கள் மீண்டும் அரங்கேற்றப்படுகின்றன.   

டிசம்பர் 13 ந்தேதி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் போலிஸ் அத்து மீறி நுழைந்து அங்குள்ள மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதலைத் தொடுத்தது. அதே போல அலிஹார் முஸ்லீம் பல்கலைக்கழகத்திலும் போலீஸ் அத்துமீறி நுழைந்து  மாணவர்களைத் தாக்கியது. ஜனவரி 5 ந்தேதி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை  முகமூடிகள் அணிந்த ஒரு குண்டர் படை தாக்கிப் பல மாணவர்களைப் படுகாயப்படுத்தியது. கர்நாடக மாநிலத்தில் பிடார் நகரில் ஒரு பள்ளியில் நடந்த ஒரு சிறு நாடகத்தில் குடியுரிமைச் சட்ட திருத்தத்தை விமர்சித்து சில வசனங்கள் பேசப்பட்டதாகக்  கூறி ஆறாம் வகுப்பு மாணவி  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணின் தாயாரின் மீதும், அந்தப் பள்ளியின் முதல்வராக உள்ள ஒரு பெண்ணின் மீதும் தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களையும் மக்களின் போராட்டங்களையும்  போலிஸ் அடக்குமுறை மூலமும், ஆட்சியாளர்களின் ஆதரவு பெற்ற குண்டர்களின் படைகள் மூலமும் ஒடுக்க முயலும் ஆட்சியாளர்களின் இந்தச் செயல்களை நாடு முழுவது உள்ள ஜனநாயக சக்திகள் கடுமையாகக் கண்டித்து வருகின்றன. இருப்பினும் ஆட்சியாளர்கள் அவற்றைச் சிறிதும் சட்டை செய்யாது தங்களுடைய எதேச்சதிகார நடவடிக்கைகளைத் தொடர்ந்து அரகேற்றி வருகின்றனர். 

பிப்ரவரி 23, 24, 25, 26 ஆகிய நான்கு நாட்களும் தில்லியின் வட கிழக்குப் பகுதி கலவரத்தால் மூழ்கடிக்கப்பட்டது.  கபில் மிஸ்ரா என்ற பா.ஜ.க. வெறியனால் தூண்டப்பட்டு இந்துத்துவா சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த குண்டர்கள் அந்தப் பகுதியில்  அமைதியாகப் போராடி வந்த முஸ்லீம் மக்கள் மீது ஈவு இரக்கபற்ற தாக்குதல்களில் ஈடுபட்டனர். அவர்களின் கடைகளை அடித்து நொறுக்கினர். வீடுகளையும் வாகனங்களையும் தீயிட்டுக் கொளுத்தினர். அவர்கள் தாக்குதலில் துப்பாக்கிகளையும் பயன்படுத்தினர். இவை நடந்து கொண்டிருந்தபோதுதான், பிப்ரவரி 24 ந்தேதி அகமதாபாத்தில்,  இந்திய முதலாளிகளின் அதிகாரபூர்வமான பிரதிநிதியான மோடியும் அமெரிக்க முதலாளிகளின் அதிகாரபூர்வமான பிரதிநிதியான ட்ரம்ப்பும் ஒருவரையொருவர் கட்டித் தழுவி, உச்சிமோந்து, ஒருவர் புகழை ஒருவர் வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தனர். தமது  அமெரிக்கக் கூட்டாளியுடன்  அகமாபாத் நகரில் சாலை நெடுகிலும் களியாட்டக் கலை நிகழ்ச்சிகளை மோடியும் அமித் ஷா வும் கண்டு களித்திருந்தனர். 
பிப்ரவரி 25 ந் தேதி வடகிழக்கு தில்லியில் இந்துத்துவா வெறியர்களின் கொடும் செயலால் வானில் கரும்புகை சூழ்ந்து இந்தியாவின் பெயர் உலகளவில் இருளடைந்து  கொண்டிருந்த வேளையில், மோடியும் ட்ரம்ப்பும் இந்திய, அமெரிக்க முதலாளிகளின்  வியாபர இலாபத்திற்காகத் தீவிரமான பேரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தில்லிக் கலவரத்தில் மட்டும்  44  பேர் பலியாக்கப்பட்டுள்ளனர் என்றும் இரு நூறுக்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்துள்ளனர் என்றும்  அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு மட்டுமல்லாமல் உத்திரபிரதேசத்தில் பா.ஜ.க.வின் யோகி ஆதித்ய நாத் என்னும் பண்டாரத்தின் ஆட்சியில் இதுவரையிலும் 21 பேர் பலியாக்கப்பட்டுள்ளனர். வட கிழக்கு மாநிலங்கள், கர்நாடக மாநிலம் ஆகியவற்றில் ஏழு பேர் பலியாகி உள்ளனர்.

மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் அமைதியாகப் போராடி வரும் மக்களின் உணர்வுகளை ஒரு சிறிதும் மதிக்காமல், புரிந்து கொள்ளாமல், மக்கள் எவ்வளவு போராட்டங்கள் நடத்தினாலும் சட்டத்தைத் திரும்பப் பெற முடியாது என்று பிடிவாதமாக இருக்கும் மோடியின் அரசு போலிஸ் மூலமும் குண்டர் படைகள் மூலமும்  மக்கள் மீது தாக்குதல்களைத் தொடுத்து அவர்களின் குரல்வளையை நெரித்து வருகிறது.

இந்தியக் குடியுரிமைச் சட்டமும் அதில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களும்
1950 ல் நடைமுறைக்கு வந்த இந்திய ஒன்றியத்தின் அரசியல் அமைப்புச் சட்டம் அந்தச் சமயத்தில் நாட்டில் வசித்து வந்த அனைவருக்கும் குடியுரிமை வழங்கியது; மதச் சார்பற்ற முறையில் இந்த நாட்டில் வசித்து வந்த அனைவருக்கும் அது குடியுரிமையை உறுதிப்படுத்தியது.

குடியுரிமைச் சட்டம் 1955, இந்தியாவில் குடியுரிமை பெற இரண்டு முறைகளை வகுத்தது. ஒன்று,  “பிரிவினைக்கு முந்திய இந்தியாவின்” பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அதாவது பாகிஸ்தானைச் சேர்ந்த மக்களும் கூட, இந்தியாவில்  ஏழு ஆண்டுகள் வசித்திருந்தால் குடியுரிமை பெறலாம். இன்னொன்று, பிற அந்நிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்தியாவில் பன்னிரண்டு ஆண்டுகள் வசித்திருந்தால் இந்தியக் குடியுரிமை பெறலாம். இந்த இரண்டு முறைகளும் மதத்தின் அடிப்படையில் மக்களைப் பாகுபாடு செய்யவில்லை. இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தின்  அடிப்படையில் இந்த வழிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.

1971 வங்காள தேச யுத்தத்தின் போது இலட்சக்கணக்கான இந்துக்களும் முஸ்லீம்களும் வங்காள தேசத்திலிருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் அசாமில் குடியேறினர். வங்காள தேசத்திலிருந்து அகதிகளாக வந்தவர்களால் தங்களுடைய கலாச்சாரமும் உரிமைகளும் பாதிக்கப்படுவதாகவும் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்றும் கூறி இன அடிப்படையில் அசாம் கண சங்க பரிஷத் பெரும் போராட்டங்களை 1980 களில் முன்னெடுத்தது. அதன் விளைவாக ராஜீவ் காந்தி பிரதம மந்திரியாக இருந்த காலத்தில் அசாம் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. அதனை ஒட்டி, 1985 ல் இந்தியக் குடியுரிமைச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டது. அசாம் ஒப்பந்தத்தின்படி  அசாமில் உள்ள அந்நியர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியல்களிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்பொழுதும் கூட மத அடிப்படையில் மக்கள் பாகுபாடு செய்யப்படவில்லை. அதனால் ஏற்பட்ட பின்விளைவு பற்றிப் பிறகு பார்ப்போம்.

பிறகு  பா.ஜ.க.வின் ஆட்சிக் காலத்தில் 2003 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் “சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள்” என்ற ஒரு கருத்தை சட்டத்தில் புதியதாகச் சேர்த்தது. வெளி நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் செல்லத்தக்க பயண ஆவணங்கள் இன்றி நுழைந்தவர்கள் அல்லது அவர்களுடைய பயண ஆவணங்கள் அனுமதித்த காலத்திற்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளவர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என வரையறை  செய்யப்பட்டனர். அவர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்ப அனுப்பப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள். சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் இந்த நாட்டில் குறிப்பிட்ட ஆண்டுகள் வசித்திருந்தாலும் குடியுரிமை பெற முடியாது; அவர்களுடைய குழந்தைகளும் குடியுரிமை பெற முடியாது.

1951 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தம் ((Refugees Convention) அகதிகளுக்கான உரிமைகள் பற்றி வரையறுக்கிறது. ‘அகதிகள் என்பவர்கள் மரபினம், மதம், தேசிய இனம், சமூகக் குழு அல்லது அரசியல் கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் ஒடுக்கப்படுவதிலிருந்து தப்பித்து வெளியேறி வந்தவர்கள். அகதிகளுக்கு சட்ட ரீதியான உரிமைகள் உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது ஒரு நாடு அவர்களை மீண்டும் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பக் கூடாது. அவ்வாறு அனுப்புவது அவர்களுடைய நாட்டில் அவர்களை  ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கும். மேலும் அவர்களுக்கு கல்வி பெறும், உரிமை வேலை செய்யும் உரிமை, உடைமை உரிமை போன்றவைகளும் உண்டு’ என அகதிகள் பற்றிய சர்வதேச ஒப்பந்தம் கூறுகிறது.

ஆனால் இந்தியா அகதிகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்து இடவில்லை. வறுமையின் காரணமாகவும் வேலை தேடியும் வேறு காரணங்களாலும் பிற நாடுகளிலிருந்து கடவுச் சீட்டு, வீசா போன்ற ஆவணங்கள் இல்லாமல் இங்கு குடியேறியவர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். அதே சமயத்தில் போரினாலும் மக்கள் பிற நாடுகளிலிருந்து அகதிகளாக இங்கு வந்துள்ளனர். 1971 வங்காள தேச யுத்தத்தின்போதும், 1980க்குப் பிறகு நடந்த ஈழப் போரின் போதும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்தனர்.   இந்தியாவிற்குள் வரும் அகதிகளையும்  “சட்ட விரோதமாகக் குடியேறியவர்களையும்” இந்திய அரசாங்கம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அகதிகளையும் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்றே இந்தியச் சட்டம் கருதுகிறது. அதனால்தான் ஈழத்திலிருந்து அகதிகளாக வந்தவர்கள் இங்கு முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்காமல் முகாம்களில் அடைத்து வைத்துள்ளது.

மேலும் 2003ல் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம்  தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) ஒன்றை அரசாங்கம் தயாரித்து அதைப் பராமரிக்க வேண்டும் என்றும் கூறியது. அந்தச் சட்டத்தின் வரைவு நகலை காங்கிரஸ் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (இ.க.க.) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவையும் ஆதரித்தன என்பதும், இன்று அந்தக் கட்சிகளே அந்தச் சட்டத்தைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன என்பதும் முரண்நகை.

தான் ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே தனது  இந்துத்துவாக் கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் பா,ஜ.க. குறியாக இருந்து வருகிறது. அதில் ஒரு பகுதிதான் 2003 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம். அதனை அறியாமலேயே இ.க.க., இ.க.க.(மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகளும் அதற்குத் துணை போயுள்ளன.

2003ஆம் ஆண்டுச் சட்டத்தில் உள்ள விதிகளுக்கு உட்பட்டு, உள் நாட்டு அமைச்சகம் ‘கடவுச் சீட்டு (இந்தியாவுக்குள் நுழைவது)1920’ என்ற சட்டத்திலும், ‘அந்நியர்கள் சட்டம் 1948’ என்ற சட்டத்திலும் 2015ல் ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திருத்தம் 31, டிசம்பர் 2014 அன்று  அல்லது அதற்கு முன்பு பாகிஸ்தானிலிருந்தும் வங்காள தேசத்திலிருந்தும் மத ஒடுக்கு முறையின் காரணமாகவோ அது பற்றிய அச்சத்தின் காரணமாகவோ இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதச் சிறுபான்மையினர் செல்லத்தக்க ஆவணங்கள் இன்றி இந்தியாவிற்குள் நுழைந்திருந்தால் அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கருதப்பட மாட்டார்கள். ஆனால் முஸ்லீம்கள் நுழைந்திருந்தால் அவர்கள் சட்டவிரோதமாகக் குடி ஏறியவர்கள் என்றே கருதப்படுவார்கள்.  பிறகு 2016ல்  ஆப்கானிஸ்தான் நாடும் அதன் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அப்பொழுதே  மதப் பாகுபாடு அடிப்படையிலான குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019 க்கான அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது.

அதன்  தொடர்ச்சியாகவே குடியுரிமைச் சட்டத் திருத்தம் 2019 கொண்டு வரப்பட்டது.  அந்தச் சட்டத்தின்படி, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத ஒடுக்குமுறையின் காரணமாக  31, டிசம்பர் 2014 அன்று அல்லது அதற்கு  முன்பு இந்தியாவிற்குள்  நுழைந்துள்ள  இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவம் ஆகிய மதச் சிறுபான்மையினர் இனிமேலும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கருதப்படமாட்டார்கள். அவர்கள் ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருந்தால் அவர்களுக்குக்  குடியுரிமை வழங்கப்படும். இந்தக் குறிப்பிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் குடியேறியுள்ள முஸ்லீம்கள் குடியுரிமை பெறத் தகுதியானவர்கள் அல்ல. அவர்கள் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்படுவார்கள். 

இந்தச் சட்டம் மதச் சார்பற்றதன்மையை வலியுறுத்தும் இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் விரோதமானது. இந்தச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் மோடி அரசு அரசியல் அமைப்புச் சட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்துள்ளது; மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தி, அச்சத்தை உருவாக்கி நாடு முழுவதும் அமைதி இன்மையையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

இஸ்லாமிய எதிர்ப்பு அரசியல்!
இந்தச் சட்ட திருத்தம் மோடி- அமித் ஷா அரசின் அப்பட்டமான மதவாதக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டு இந்தியாவில் நுழைந்துள்ள  மதச் சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்குவதாகக் கூறுகிறது மோடி அரசு.

ஆனால் அதே சமயத்தில் பாகிஸ்தானில் மத ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் சிறுபான்மையினரான அஹ்மதியாக்களுக்கும் (Ahmadiyyas) ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி வரும் சிறுபான்மையினரான ஹசராக்களுக்கும் (Hazaras) அந்த உரிமைகள் வழங்கப்படவில்லை. மியான்மரில் புத்த மத வெறியர்கள் மேற்கொண்ட  இனப் படுகொலைக்கு  அஞ்சி இந்தியாவில் தஞ்சம் புகுந்த ரோஹிங்கியா அகதிகளை சிறிதும் ஈவு இரக்கமின்றி மீண்டும் மியான்மருக்கே திருப்பி அனுப்பியது இந்த அரசு.

மேலும் குடியுரிமை வழங்குவதற்கு தேசிய இன ஒடுக்குமுறை, அரசியல் கருத்து மீதான ஒடுக்குமுறை, சமூக குழுக்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றை மோடியின் பா.ஜ.க. அரசு   கணக்கில் கொள்ளவில்லை. அண்டை நாடான இலங்கையில் ஈழத் தமிழர்களின் மீதான தேசிய இன ஒடுக்குமுறையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளனர். அவர்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு மிகவும் மோசமான சூழ்நிலைமைகளில் முகாம்களில் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் குடியுரிமை பெற  இந்தச் சட்ட திருத்தம் வழி வகுக்கவில்லை.

மோடி அரசின் அளவுகோலின்படி, அவர்களில் பெரும்பான்மையோர்  இந்துக்களாக இருந்தாலும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்க இந்தச் சட்டம் வழி வகுக்கவில்லை. மியான்மாரிலிருந்து வரும் ரோஹிங்கியா முஸ்லீம்களுக்கு  இங்கு இடமில்லை. அண்டையில் உள்ள முஸ்லீம்  நாடுகளான பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்  ஆகியவற்றிலிருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு மட்டுமே இச்சட்டத்தின்படி குடியுரிமை வழங்கப்படும்.  

மத ஒடுக்குமுறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு  ஆதரவாக நிற்பது போலவும், இந்துக்களின் பாதுகாவலன் போலவும் மனித உரிமைகளை உயர்த்திப் பிடிப்பது போலவும் மனித நேயம் கொண்டது போலவும் நாடமாடுகிறது மோடியின் அரசு. ஆனால் நடைமுறையோ  அதன்  கொடூரமான இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலைத்தான் அப்பட்டமாக வெளிக்காட்டுகிறது.

மக்களின் அச்சம் நியாயமானது!
மக்கள் எவ்வளவுதான் போராடினாலும் குடியுரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவோம் என இந்த நாட்டின் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சூளுரைக்கிறார். கிரிராஜ் சிங் என்ற மத்திய அமைச்சர் நாட்டுப் பிரிவினையின்போதே முஸ்லீம்கள் அனைவரையும் பாகிஸ்தானுக்கு அனுப்பி இருக்க வேண்டும். நம்முடைய முன்னோர்கள் அதைக் செய்யாமல் தப்பு செய்து விட்டனர் என்கிறார். அவர் முன்னோர்கள் எனக் குறிப்பிடுவது காங்கிரஸ்காரர்களை. அந்தத் தவறை இப்பொழு சரி செய்ய வேண்டும் என்கிறார்.   அதன் மூலம் ஆர்..எஸ்.எஸ். – பா.ஜ.க. வின் இந்துத்துவாக் கொள்கையை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

ஆனால் அதே சமயத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் எந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் ஆபத்தில்லை என்றும், எதிர்க் கட்சிகளும் தேச விரோத சக்திகளும் மக்களிடம் தவறான செய்திகளைக் கூறிப் போராட்டத்தைத் தூண்டி விடுகின்றனர் என்றும் மோடி பரப்புரை செய்து மக்களிடமிருந்து தமது இந்துத்துவாக் கொள்கையை மூடி மறைத்து வருகிறார்.

தேசியக் குடிமக்கள் பதிவேடு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை. அசாம் ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் முதன் முதலாக அசாமில் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்பட்டது. அதில் இந்த நாட்டு உச்சநீதி மன்றம் தனிக் கவனம் எடுத்துக் கொண்டது. அங்கு தேசியக் குடியுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தபோது அதை இடதுசாரி சக்திகளோ ஜனநாயக சக்திகளோ எதிர்க்கவில்லை என்பதுதான் உண்மை. இறுதியாக அந்த மாநிலத்தில் தகுந்த ஆவணங்கள் இல்லை என்று கூறி 19 இலட்சம் மக்கள் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அதில்  செல்லத்தக்க ஆவணம் இல்லை என்று கூறி  இந்தியப் படையில் கார்கில் போரின் போது  வீர சாகசங்கள் நிகழ்த்தி பதக்கம் பெற்றிருந்த  முகமது சன உல்லாஹ் என்பவரும் கூட  குடியுரிமை பறிக்கப்பட்டு முகாமில் அடைக்கப்பட்டார்.  இதை அறிந்த எவருக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறித்து அச்சம் ஏற்படுவது இயற்கையே.

நாடு முழுவதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டால் அதனால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பாமர ஏழை மக்களாகத்தான் இருப்பார்கள். தேசியக் குடிமக்கள் பதிவேடு குறிப்பிடும் செல்லத்தக்க ஆவணங்களைக் கொண்டிராத கிராமப்புற ஏழை மக்கள், பழங்குடி மக்கள், நாடோடி மக்கள், வேலை தேடி இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்லும் ஏழை மக்கள், வீடற்றவர்கள், அனாதைகள் என அனைவரும் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்படுவர். முகாம்களில் அடைக்கப்படுவர்.

நாடு முழுவதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு தயாரிக்க 76000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. ஏழ்மை  நிறைந்த இந்தியாவில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்குப் பதிலாக அவர்களின் குடியுரிமைகளைப் பறித்து முகாம்களில் அடைக்க மோடி அரசு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஒதுக்கத் தயாராக உள்ளது. 

தேசியக் குடிமக்கள் பதிவேட்டை நடைமுறைப்படுத்தும்போது முஸ்லீம் அல்லாத மக்கள் குடியுரிமை பறிக்கப்படாமல் இருக்க ஒரு பாதுகாப்பை இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்ட திருத்தம் 2019 வழங்குகிறது. முஸ்லீம் மக்களுக்கு அந்தப் பாதுகாப்பை இந்தச் சட்டம் வழங்கவில்லை. அதுதான் முஸ்லீம் மக்களின் பெரும் அச்சத்திற்குக் காரணாமாக அமைந்துள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தின்படி, 31 டிசம்பர்  2014 க்கு முன்பிருந்தே இந்தியாவில் தான் வசித்து வருகிறேன் என்று இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதத்தைச் சார்ந்த ஒருவர்  நிரூபித்தாலே போதும்; அவர் குடியுரிமைக்குத் தகுதியானவர். தேசியக் குடிமக்கள் பதிவேடு குறிப்பிடும் செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர் எனக் கருதப்பட மாட்டார். ஆனால் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவர் தேசியக் குடிமக்கள் பதிவேடு குறிப்பிடும் செல்லத்தக்க ஆவணங்கள் இல்லாவிட்டால், தான் 31, டிசம்பர்  2014 க்கு முன்பிருந்தே இந்தியாவில் தான் வசித்து வருகிறேன் என நிரூபித்தாலும் அவர் சட்டவிரோதமாக் குடியேறியவர் எனக் கருதப்பட்டு குடியுரிமைக்குத் தகுதி அற்றவராகக் கருதப்படுவார். முகாமில் அடைக்கப்படுவார். இந்த அச்சத்தின் காரணமாகவே முஸ்லீம் மக்கள் பெரும் அமைதி இன்மைக்கும் கொந்தளிப்புக்கும் ஆளாகியுள்ளனர்.

அகதிகளாக வரும் முஸ்லீம் மக்களுக்குக் குடியுரிமையை மறுக்கிறது குடியுரிமைத் திருத்தச் சட்டம்.  தகுந்த ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் ஏற்கனவே இந்த நாட்டில் குடிமகன்களாக வாழ்ந்து வரும் முஸ்லீம் மக்களின் குடியுரிமையைத் தேசியக் குடியுரிமைப் பதிவேடு  பறிக்கும்.

அசாம் ஒப்பந்தம்!
இவ்வாறு குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் முஸ்லீம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள அதே சமயத்தில், அசாம் மக்களிடையே வேறு விதமான அச்சத்தை ஏற்படுத்திக் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. அசாமிலிருந்து  அந்நியர்கள் அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்று கோரி அசாம் கண சங்க பரிஷத் போன்ற தேசிய இன அடிப்படையில் அமைந்த அமைப்புகள் 1980 களில் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. அதன் விளைவாக 1985 ல் கையெழுத்திடப்பட்ட அசாம் ஒப்பந்தம் 1971, மார்ச் 25 க்குப் பிறகு அசாமில் குடியேறிய அந்நியர்களை  அடையாளம் கண்டு அவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அவர்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் கூறியது. அந்த ஒப்பந்தம் குடியேறிய மக்களை  மத அடிப்படையில் பாகுபாடு செய்யவில்லை. குறிப்பிடப்பட்ட காலத்திற்குப் பிறகு குடியேறிய அனைவரையும் மதப் பாகுபாடின்றி வெளியேற்ற வேண்டும் எனக் கூறியது.

அதனடிப்படையில் தயாரிக்கப்பட்ட தேசியக் குடிமக்கள் பதிவேட்டின்படி  அசாமில் 19 இலட்சம் மக்கள் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 12 இலட்சம்  பேர்  இந்துக்கள் எனக் கூறப்படுகிறது. பெரும்பான்மையாக உள்ள இந்துக்களை பா.ஜ.க.அரசு வெளியேற்றத் தயாராக இல்லை. இந்துக்களை வெளியேற்றாமல் பாதுகாக்கும் விதமாக புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளது.

புதிய குடியுரிமைத் திருத்தச்சட்டமோ 31 டிசம்பர்  2014 வரையிலும் இந்தியாவில் குடியேறியுள்ள இந்து, சீக்கிய, புத்த, ஜைன, பார்சி, கிருத்துவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்க வழிவகை செய்துள்ளது. அதன்படி மேலே குறிப்பிடப்பட்ட மதங்களைச் சேர்ந்த பெரும்பன்மையான மக்கள் அசாமிலிருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள். சிறு பகுதியான  முஸ்லீம் மக்கள் மட்டுமே வெளியேற்றப்படுவார்கள். இது அசாம் ஒப்பந்தத்தின் அடிப்படை நோக்கத்தையே அழித்து விட்டது என அசாம் மக்கள் கருதுகின்றனர். அதன் விளைவாகவே அவர்கள் புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்துப் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வரலாற்றில் குடியுரிமைச் சட்டங்கள்
மத அடிப்படையில் குடியுரிமை வழங்க பா.ஜ.க.அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது வரலாற்றில் புதிய ஒன்றல்ல. மரபின (Race) அடிப்படையிலும் நிற அடிப்படையிலும் கூட குடியுரிமை வழங்கப்பட்டதை வரலாற்றில் நாம் காணுகிறோம்.

ஐக்கிய அமெரிக்காவில் முதன் முதலாக 1790ல் குடியுரிமைச் சட்டம் உருவாக்கப்பட்டது. அது அனைவருக்கும் குடியுரிமை வழங்கவில்லை;  ஐரோப்பிய வழி வந்தவர்களுக்கு மட்டுமே  குடியுரிமை வழங்கியது. ஐக்கிய அமெரிக்காவில் குறைந்தது இரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருந்த சுதந்திரமான வெள்ளையர்களுக்கு  மட்டும்  அது குடியுரிமை வழங்கியது. அந்த நாட்டில் இருந்த கறுப்பின அடிமைகளுக்கு குடியுரிமை வழங்கப்படவில்லை. ஐரோப்பியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர்கள் தாம் அழித்து ஒழித்தது போக எஞ்சியிருந்த  அந்த நாட்டின் சுதேசி மக்களான  செவ்விந்தியர்களுக்கும்  குடியுரிமை வழங்கவில்லை. அவர்கள் குடியுரிமை அற்ற மக்களாகவே வாழ்ந்து வந்தனர்.

அமெரிக்காவின் உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அடிமை முறை ஒழிக்கப்பட்ட பிறகுதான், ஜூலை 1868ல், அமெரிக்க அரசியல் சட்ட திருத்தம் 14 ன்படி அமெரிக்காவில் பிறந்த அனைவருக்கும் குறிப்பிட்ட காலம் வாழ்ந்து வருபவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்பட்டது.  அப்பொழுதும் கூட சுதேசி மக்களுக்கு முழுமையான  குடியுரிமை வழங்கப்படவில்லை. இந்தியன் குடியுரிமைச் சட்டம் 1924 தான் அவர்களுக்கு முழுமையான குடியுரிமையை வழங்கியது.

ஹிட்லரின் பாசிச ஆட்சியின்போது ஜெர்மனியில் குடியுரிமை மரபின அடிப்படையில் வழங்கப்பட்டது. 1935 ல் கொண்டு வரப்பட்ட ரெய்ச் குடியுரிமைச் சட்டத்தின்படி, “ஜெர்மானிய” மரபின் வழிவந்தவர்களுக்கு  மட்டும் குடியுரிமை வழங்கப்பட்டது. யூதர்களுக்கும் மற்றவர்களுக்கும் குடியுரிமை இல்லாமல் ஆக்கப்பட்டது.  ஹிட்லரின் நாசிசம் அந்த நாட்டு மக்களை (1)குடிமக்கள்  (2) ஆளப்படுபவர்கள் (Subjects)  (3) அந்நியர்கள் என மூன்று வகையாகப் பிரித்தது. குடிமக்களுக்கு முழுமையான குடிமை உரிமைகளும் பொறுப்புகளும் வழங்கப்பட்டன. ஜெர்மானியர்களின் (அதாவது “ஆரியர்கள்” என அழைக்கப்பட்டவர்கள்)  வழி வந்தவர்களுக்கு மட்டும்  குடியுரிமை வழங்கப்பட்டது. அவர்கள் இராணுவ சேவையை முடித்திருக்க வேண்டும். ஒருவரின் குடியுரிமையை  அரசு எந்த நேரத்திலும் பறிக்கலாம்.

ஆளப்படுபவர்கள் அந்த நாட்டில் பிறந்த மக்கள். ஆனால் ஜெர்மானிய மரபினத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. அதனால் அவர்களுக்குக் குடியுரிமை இல்லை; வாக்களிக்கும் உரிமை இல்லை; அரசில் எந்தப் பதவியையும் அவர்கள் வகிக்க முடியாது. எல்லாப் பெண்களும் ஆளப்படுபவர்கள்தான். அவார்களுக்குக் குடியுரிமை இல்லை. பெண்கள் சுதந்திரமாகத் தொழில் புரிந்தால் அல்லது ஜெர்மானியக் குடிமகனை மணம் புரிந்திருந்தால் மட்டும் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும். அந்நியர்கள் எனப்படுபவர்கள் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஹிட்லரின் பாசிச ஆட்சி மரபின அடிப்படையில் மக்களைப் பிரித்து ஜெர்மானிய “ஆரியர்களுக்கு”க் குடியுரிமை வழங்கியது. பல இலட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவித்தது.

சோவியத்தின் அரசியல் அமைப்புச் சட்டம்!
பிற்போக்கு, முதலாளியப்  பாசிச அரசுகள் எவ்வாறு மக்களை நிற அடிப்படையிலும் மரபின அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிளவுபடுத்திக் குடியுரிமைகளை வழங்கியதைப் பார்த்தோம். இவற்றிற்கு  முற்றிலும் முரணான வகையில், உலகிற்கே மிகச் சிறந்த முன்னுதாரணமாக இருக்கும் வகையில் சோசலிசப் புரட்சிக்குப் பிறகு சோவியத் ரசியா ஒரு அரசியல் அமைப்புச் சட்டத்தை இயற்றியது. 1918ல் தோழர் லெனினின் தலைமையின் கீழ் இருந்த சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியால்  கொண்டு வரப்பட்ட அந்த அரசியல் அமைப்புச் சட்டம்  ரசியாவில் வேலை செய்து வந்த, தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த அந்நியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்கியது. மரபினம் அல்லது தேசிய இனம் என்ற எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கியது. எந்தச் சிறுபான்மையான குழுவையோ மரபினத்தையோ ஒடுக்குவது குடியரசின் அடிப்படைச் சட்டங்களுக்கு விரோதமானது என அறிவித்தது. 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் மதம், தேசிய இனம், பிரதேசம் என எந்தவிதமான பாகுபாடும் இன்றி அனைத்து அமைப்புகளுக்கும் வாக்களிக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும்  உரிமை உண்டு என அறிவித்தது. பொருளாதார ஏற்றத்தாழ்வற்ற ஒரு சமத்துவ சமூகத்தில்தான் மக்கள் அனைவருக்கும் உண்மையான குடியுரிமை என்பது உறுதிப்படுத்தப்படும் என்பதை அது நிரூபித்தது.

முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான ஏஜன்ட் மோடி!
ஹிட்லரைத்  தமது முன்னோடியாகக் கொண்டுள்ள இந்துத்துவா சங்கப் பரிவாரங்களின் தலைமையின் கீழ் உள்ள மோடியின் அரசோ இன்று   மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்து மக்களின் ஒரு பகுதியினரின் குடியுரிமைகளைப் பறிக்கத் திட்டமிட்டுக் காய்களை நகர்த்தி வருகிறது.

இன்று முதலாளியம் உலகமயமாக்கப்பட்ட சூழலில் மூலதனம் உலகெங்கும் தடையின்றிச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. அனைத்து நாடுகளிலும் உள்ள உழைக்கும் மக்களைத் தங்கு தடையின்றி மூலதனம் சுரண்ட வழி வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் உழைக்கும் மக்கள் உலகெங்கும் தங்கு தடையின்றிச் செல்லவும் விரும்பிய நாடுகளில் அனைத்துக் குடியுரிமைகளுடன் வாழவும் குடியுரிமைச் சட்டம் , கடவுச் சீட்டுமுறை, வீசா போன்றவற்றின் மூலம் முதலாளிய வர்க்க ஆட்சியினர்  கட்டுப்படுத்தி  வருகின்றனர். தங்களுக்குத் தேவையான அளவுக்கு மட்டும் பின் தங்கிய நாடுகளிலிருந்து மலிவான கூலி உழைப்பைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றனர். அதன் மூலம் வளர்ச்சியுறாத சார்பு முதலாளிய நாடுகளில் உள்ள உழைக்கும் மக்கள் வளர்ச்சியுற்ற முதலாளிய நாடுகளுக்குக் குடி பெயர முடிவதில்லை. அத்தகைய வளர்ச்சியுறாத சார்பு முதலாளிய நாடுகளில் உள்ள  மக்களுடைய உழைப்பை மலிவு விலையில் சுரண்டி உலகம் முழுவதும் உள்ள ஏகபோக நிதி மூலதன முதலாளிகள் கொழுத்த இலாபம் அடைந்து வருகின்றனர். தங்களுடைய  இலாபம் குறையாமல் இருக்கவே உழைக்கும் மக்கள் தங்கு தடையின்றி வளர்ச்சி பெற்ற முதலாளிய நாடுகளில் சென்று குடியேறத் தடையாகச் சட்டங்களை வைத்துள்ளனர்.

இந்திய முதலாளி வர்க்க ஆட்சியாளர்களும்  அந்நிய நாடுகளின் மூலதனங்களை  இரத்தினக் கம்பளம் போட்டு வரவேற்கின்றனர்.  அதன் மூலம் நமது வளங்களைக் கொள்ளையடிக்கவும் நமது  மக்களின் உழைப்பை மலிவு விலையில் அந்நிய முதலாளிகள் சுரண்டிச் செல்லவும் வழி வகுக்கின்றனர். அவர்களுடன் கூட்டுச் சேர்ந்து தாமும் கொள்ளை இலாபம் அடித்து வருகின்றனர்.

முஸ்லீம் விரோத அரசியலை வைத்து ஆட்சிக் கட்டில் ஏறியுள்ள மோடி இந்திய முதலாளிய வர்க்கத்தின் நம்பகமான ஏஜண்டாக இன்று செயல்பட்டு வருகிறார். பொதுத்துறைகளைத் தனியார் மயமாக்குவதன் மூலமும், அந்நிய மூலதனங்கள் இங்கு நுழைவதற்குத் தடையாக இருந்த சட்டங்களை நீக்குவதன் மூலமும் அந்நிய முதலாளிகளுக்கும் அவர் நம்பகமானவராக இருக்கிறார்.

அரபு நாடுகளுக்கும் பயணம் செய்து அங்குள்ள முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் என்று வேண்டுகிறார். இந்தியாவில் மலிவான விலையில் மனித வளம் அதாவது மனித உழைப்பு கிடைக்கிறது என்றும், விரிந்த சந்தை உள்ளது என்றும், சிறந்த உட்கட்டுமானம் உள்ளது என்றும், கவர்ச்சிகரமான வரிச் சலுகைகளும் உண்டு என்றும், அதனால் இந்த  அருமையான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும் முஸ்லீம் முதலாளிகளுக்கு  அழைப்பு விடுக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இங்குள்ள முஸ்லீம்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என்றும், அவர்கள் தேசத் துரோகிகள் என்றும் கூறி   இந்து மக்கள் அனைவருக்கும்  விரோதிகளாகக் காட்டி அவருடைய இந்துத்துவ சங்கப் பரிவாரங்கள் அரசியல் நடத்தி வருகின்றன. முஸ்லீம்களின் உரிமைகளைப் பறிப்பதன் மூலம் தான்தான் இந்துக்களின் உண்மையான நண்பன் என்ற தோற்றத்தினை  உருவாக்கி பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார் மோடி. அதன் மூலம் தான் ஆட்சியில் தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள நினைக்கிறார். 

நாட்டின் பொருளாதாராம் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது. தொடர்ந்து அனைத்துத் துறைகளின் உற்பத்தியும் பெரும் அளவில் வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஏற்றுமதி குறைந்து வருகிறது. விலைவாசி உயர்ந்து வருகிறது. நாற்பத்தைந்து ஆண்டுகள் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது. மக்கள் கடுமையான சூழ்நிலைமைகளில் வாழ்ந்து வருகின்றனர்.

அதே சமயத்தில் மோடி அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டம் மக்கள் மத்தியில் அமைதி இன்மையையும் கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது. மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துகிறது. இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்குக்  காரணமான முதலாளிய வர்க்கத்தினை எதிர்த்து மக்கள் அனைவரும் சாதி, மத பேதமின்றி ஒன்று சேர்ந்து அணி திரள முடியாமல் தடுக்கிறது. அந்த வகையில் ஆளும் முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்றும் நம்பகமான ஏஜண்டாக மோடி செயல்பட்டு வருகிறார்.

மக்கள் அனைவருக்கும் எதிரான பிற்போக்குச் சட்டம்!
இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் குடியுரிமைச் சட்டம் வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டும் குடியுரிமை அளித்தது. தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் பாசிச ஆட்சி மரபின (race) அடிப்படையிலும் மத அடிப்படையிலும் மக்களுக்குக்  குடியுரிமை வழங்கியது. ஆனால் அவை எல்லாம் கடந்த காலத்துக்கு உரியனவாய் மறைந்து  போய்விட்டன. மக்களின் போராட்டங்கள் அவற்றை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்து விட்டன. ஆனால் இன்றைய நவீன காலத்தில் மோடியின் இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சி மத அடிப்படையில் மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கிறது. அதன் மூலம் நாட்டை ஒரு நூற்றாண்டு காலம் பின்னோக்கிக் கொண்டு செல்ல முயலுகிறது.

சில பிற்போக்கு சக்திகள் வரலாற்றைப் பின்னோக்கிக் கொண்டு செல்ல நினைத்தாலும் மக்கள் பின்னோக்கிச் செல்லத் தயாராக இல்லை. பிற்போக்கான சட்டத்தை எதிர்த்து மக்கள் அமைதியான முறையில் நாடு முழுவதும் தொடர்ந்து போராடி வருகின்றனர். மக்களின்  நீண்ட காலப் போராட்டத்தினால்தான்  அடாவடித்தனமும் வீம்பும் பிடிவாதமும் கொண்ட அரசைப் பணிய வைக்க முடியும்.

இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் முஸ்லீம் மக்களை மட்டும் பாதிக்கப் போவதில்லை. அனைத்து மதங்களிலும் உள்ள அடித்தட்டு மக்கள், பஞ்சை பராரிகள், பழங்குடிகள் என அனைவரையும் பாதிக்கும். எனவே இது முஸ்லீம் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல. அனைத்து மக்களின் பிரச்சினை என உணர்ந்து மக்கள் அனைவரும் உறுதியான போராட்டத்தில் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். இல்லாவிட்டால், இது முஸ்லீம் மக்களின் பிரச்சினை எனக் கருதி, அந்த மக்கள் மட்டும் போராட்டத்தில் தொடர்ந்து இருந்தால், இந்துத்துவா வெறியர்கள் அவர்களின் போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி, அவர்களைத் தனிமைப்படுத்தி மதக் கலவரங்கள் மூலம் அதை ஒடுக்கப் பார்ப்பார்கள். அதுதான் அண்மையில் தில்லியில் நடந்தது. எனவே அனைத்து மக்களும் ஒன்று திரண்டு ஓரணியில் நிற்பதன் மூலமே இந்தப் பிற்போக்கான கருப்புச் சட்டத்திற்கு முடிவு கட்ட முடியும். 

உண்மையான குடியுரிமை!
தனது ஆட்சிக் காலம் முழுவதும் மோடியின் ஆட்சி இந்தக் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை இரத்து செய்யாமல் பிடிவாதமாகக் கூட இருக்கலாம். எனினும் இந்தப் பிற்போக்கு எதேச்சதிகார முதலாளிய ஆட்சிக்குப் பதிலாக நாளை  தாராளவாத முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி வந்து, இந்தக் குடியுரிமைத் திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு  மதப் பாகுபாடின்றி  அனைத்து மக்களுக்கும் குடியுரிமை வழங்கப்படலாம். அது சாத்தியமான ஒன்றுதான். இருப்பினும் அனைத்து மதங்களையும் சேர்ந்த உழைக்கும் மக்களைப் பொறுத்த வரையிலும் அது பெயரளவிலான குடியுரிமைதான்.

அரசியல்ரீதியாக அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டாலும் பொருளாதாரரீதியாக  ஏற்றத்தாழ்வு நீடிக்கும் வரை பெரும்பான்மையான மக்களுக்கு அவை பெயரளவினதாகவே இருக்கும். தொழிற்சாலைகள், பெரும் பண்ணைகள் ஆகிய உற்பத்தி சாதனங்களைக் கொண்டுள்ள முதலாளிகளே முழுமையான குடி உரிமையை அனுபவிப்பார்கள். அவர்களே நாட்டை ஆள்பவர்கள். பெரும்பான்மையாக உள்ள உழைக்கும் தங்கள் உழைப்பை முதலாளிகளுக்கு விற்றுப் பிழைக்கும் கூலி அடிமைகள்தான்; ஆளப்படுபவர்கள்தான் (subjects).  உடைமையற்ற உழைக்கும் மக்களுக்கு உண்மையில் சொந்த நாடு இல்லை. இந்த நிலையில் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்குக் குடியுரிமை என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காய்தான். பொருளாதாரரீதியாக ஏற்றத்தாழ்வு நீடிக்கும் வரை,  முதலாளி- தொழிலாளி என்ற வர்க்க வேறுபாடுகள் நீடிக்கும் வரை, சுரண்டல் நீடிக்கும் வரை இந்த நிலை மாறாது. இந்த  நிலை மாற வேண்டுமானால் முதலாளிய வர்க்கத்தின் ஆட்சி அகற்றப்பட வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் பொருளாதாரரீதியாக ஏற்றத்தாழ்வற்ற, சுரண்டலற்ற  ஒரு சோசலிச சமூதாயம் உருவாக வேண்டும். அத்தகைய ஒரு சமுதாயத்தில்தான் உழைக்கும் மக்களுக்கு நாடு சொந்தமாகும். அத்தகைய சமூதாயத்தில்தான் சாதி, மத, இன, பிரதேச வேறுபாடின்றி  மக்கள் அனைவருக்கும்  சாராம்சத்தில் உண்மையில்  சமமான குடியுரிமைகள் உறுதிப்படுத்தப்படும். அத்தகைய உயர்ந்த சோசலிச சமூதாயத்தைப் படைப்பதை  நோக்கி முன்னேறுவோம்!                          

*.உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணி திரள்வோம்!

* எதேச்சதிகார முதலாளிய வர்க்கத்தின் ஆட்சியை அகற்றுவோம்!

* சோசலிச சமுதாயம் படைப்போம்!

*புதிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்ற மக்கள் விரோதச் சட்டங்களை இரத்து செய்வோம்!

* மக்கள் அனைவருக்கும் உண்மையில் சமத்துவமான குடியுரிமையை உறுதிப்படுத்துவோம்!

                                                                                                                                    
 
-    சோசலிசத் தொழிலாளர் இயக்கம் 
தமிழ் நாடு.

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்