தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் கடை நடத்தி வந்த வியாபாரிகள் (தந்தை, மகன்) இருவர் காவல்துறையினரின் காட்டுமிரண்டித்தனமான தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.
குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் கடை திறந்து வைத்திருந்தார் என்ற காரணத்திற்காக ஜெயராஜ் என்பவரை கடந்த 19 ந் தேதி
(19.6.2020) இரவு காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் கடுமையாகத் தாக்கியுள்ளனர். தந்தையைத் தேடிச் சென்ற பென்னிக்ஸ் மீதும் மிருகத்தனமாக தாக்குதல் நடத்தி இருவர் மீதும் பொய் வழக்குகள் போட்டுள்ளனர்.. அடுத்த நாள் காலையில் இருவரின் உடல் முழுவதும் காயமடைந்து இரத்தக்கறையுடன் காணப்பட்ட நிலையிலும் இதனைப் பற்றி எதனையும் விசாரணை செய்யாமலேயே குற்றவியல் நடுவர் சிறையிலடைக்க உத்தரவிட்டுள்ளார். இவர்களைப் பரிசோதித்த அரசு மருத்துவரும் அவர்களுடைய காயங்களை மறைத்து மருத்துவ அறிக்கையை அளித்துள்ளார்.
சிறை நிர்வாகமும் அவர்களைக் காயங்களோடு சிறையில் தள்ளியது. அதன் பிறகு அவர்களின் உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர். இருவரின் உயிரிழப்புகள் குறித்து எந்தவித முறையான விசாரணையையும் செய்யாமல், தந்தை ஜெயராஜ் நெஞ்சு வலியாலும், மகன் பென்னிக்ஸ் காய்ச்சலாலும் உயிரிழந்ததாக தயாரிக்கப்பட்ட போலியான அறிக்கைகளையே அதிகார மட்டத்திலும் ஆட்சியாளர்கள் மட்டத்திலும் திரும்பத் திரும்ப வெளியிடப்படுகின்றன.
மக்கள் அநீதியான முறையில் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பல பல தடைகளும் சமநிலைகளும் (check
and balance) முதலாளியச் சட்டமுறையில் வைக்கப்பட்டுள்ளன எனக் கூறப்படுகிறது. போலிஸ் கூறுவதை அப்படியே ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே மாஜிஸ்திரேட் முன் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கொண்டு வந்து, மாஜிஸ்திரேட் அவர்கள் போலிசால் துன்புறுத்தப்பட்டார்களா இல்லையா என்பதை விசாரிக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களின் பதிலையும் பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் அவர்களைச் சிறைக்கு அனுப்புவதா கூடாதா என்பதை முடிவு செய்ய வேண்டும். அதே போல, குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சோதித்து அவர்களின் உடலில் காயங்கள் உள்ளனவா அவர்கள் உடல்நலத்துடன் இருக்கிறார்களா என்பது குறித்த சான்றினை மருத்துவர் தர வேண்டும். அதன் பிறகே அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டும். மாஜிஸ்திரேட் தன் கடமையை நேர்மையுடன் செய்திருந்தால் இங்கு குற்றவாளிகள் போலிசால் கடுமையாகத் தாக்கப்பட்டது அம்பலப்பட்டிருக்கும். அல்லது மருத்துவர் மனச் சாட்சியுடன் செயல்பட்டிருந்தாலும் போலிசின் குற்றம் வெளிப்பட்டிருக்கும்.
ஆனால் இங்கு நடந்தது என்ன?
மாஜிஸ்திரேட்டும் மருத்துவரும் தங்களுடைய கடமைகளை நேர்மையாக, மனச் சாட்சியுடன் செய்யவில்லை. அவர்கள் போலிஸ் விரும்பியபடி செயல்பட்டுள்ளனர். அவர்கள் மட்டும் போலிஸ் கூறியது படி செயல்படவில்லை. தமிழ்நாட்டின் முதலமைச்சரும் போலிஸ் கூறிய படியே செயல்பட்டுள்ளார். போலிஸ் எதை அறிக்கையாக அவருக்கு அளித்தார்களோ அதையேதான் அவரும் வாசிக்கிறார். இறுதியில் இங்கு ஆதிக்கத்தில் இருப்பது போலிசின் கூற்றுதான். இங்கு ஜனநாயக ஆட்சி நடக்கிறது என்பது பெயரளவுக்குத்தான். உண்மையில் நடப்பது போலிஸ் ஆட்சிதான்.
இந்தப் போலிஸ் ஆட்சியின் மீது மக்களின் கோபம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களைத் தண்டிப்பது போல நாடகமாடுகிறது. இந்த அரசு. ஒரு ஆய்வாளரையும் இரண்டு உதவி ஆய்வாளர்களையும் இரண்டு தலைமை போலிஸ்காரர்களையும் இடைநீக்கம் செய்துள்ளதாகவும், மற்ற போலீஸ்காரர்கள் அனைவரையும் இட மாற்றம் செய்துள்ளதாகவும் அரசு அறிவிக்கிறது. மேலும் சி.பி.ஐ. க்கு வழக்கை மாற்றக் கோரி அரசு பரிந்துரை செய்வதாகவும் முதல்வர் கூறுகிறார். அது மட்டுமல்லாமல் அரசு சார்பில் இறந்தவர்களுக்கு இருபது இலட்சம் ரூபாயும், அவருடைய கட்சி சார்பில் இருபத்தைந்து இலட்சம் ரூபாயும் வழங்குவதாகவும், இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிப்பதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.
இவை எல்லாம் போலிஸ் மீதும் இந்த ஆட்சி மீதும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோபத்தைத் தணிக்கவும் திசை திருப்பவும் செய்யப்படுபவை. உண்மையில் தந்தையையும் மகனையும் கொலை செய்த போலீஸ்காரர்கள் தண்டிக்கப்படப்போவதில்லை. ஏனென்றால் இங்கு சட்டத்திற்கு விரோதமான ஆட்சியாளர்களாலும் அதிகாரிகளாலும்தான் இங்குள்ள ஆட்சி நீடித்து நிலை பெற்று வருகிறது.
சட்டத்தின் ஆட்சிதான் இங்கு நடக்கிறது என்பதைக் காட்டிக் கொள்ள முதலாளிய வர்க்கம் சட்டமுறைகளையும் நீதி முறைகளையும் அதற்கான நிறுவனங்களையும் கொண்டிருந்தாலும் கூட, இங்கு சட்டத்தின் ஆட்சி நடப்பதில்லை. சட்டங்களை மீறுவதன் மூலமே ஆளும் வர்க்கத்தின் ஆதிக்கம் இங்கு நீடித்து நிலவி வருகிறது. ஊழல், இலஞ்சம் இங்கு சட்டத்திற்கு விரோதமானவை. ஆனால் அவற்றின் மூலம்தான் இங்கு ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் முதலாளிகள் விலைக்கு வாங்கித் தங்களின் காரியங்களைச் சாதித்து வருகின்றனர். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சட்டத்திற்கு நியாயமாக நடப்பவர்களாக நாடகமாடி வருகின்றனர். இங்கு அநீதி செய்தவர்களைத் தண்டிப்பதற்கு எந்த நீதிமான்கள் இருக்கின்றனர்? எல்லோரும் கூட்டாக இருந்து கொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்கின்றனர்.
இந்த நிலையில் இரண்டு கொலைகளையும் செய்த இந்தப் போலீஸ்காரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்க முடியுமா? உண்மையில் அவ்வாறே தண்டிக்கப்பட்டாலும், அது இந்த அமைப்பு மக்கள் முன் அம்பலப்பட்டுப் போகாமல் இருப்பதற்காக சிலரைத் தியாகம் செய்ததாகத்தான் இருக்கும்.
இது ஏதோ இந்தத் துறைகளில் இருக்கும் சிலர் செய்யும் தவறுகளால் நிகழ்வதல்ல, மாறாக, ஒடுக்கும், ஒடுக்கப்படும் வர்க்கங்கள் நிலவக்கூடிய சமூகத்தில் ஒடுக்கும் வர்க்கங்களின் நலனை பாதுகாப்பதற்கான நிர்வாக உறுப்புகளின் செயல்பாடுகள் இத்தகையதாகவே இருக்கும்.
கொரானா பேரிடர் காலத்தில் அரசின் அறிவிப்புகளை மீறியதால் அவர்கள் மீது பாய்ந்த காவல்துறை, இதே போன்று அரசின் வழிகாட்டுதல்களை மீறி தொழிலாளர்களை வேலை வாங்கும் முதலாளிகளின் மீது பாயவில்லை.
தொழிலாளர்களின் வாழ்வைச் சூறையாடும், உயிரோடு விளையாடும் முதலாளிகளின் மீது அதிகார வர்க்கத்தினர் சிறுதுரும்பையும் போடவில்லை.
கொரானா ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்க வேண்டும் அரசு ஒரு பக்கம் அறிவிக்கிறது. ஆனால் அதை உண்மையில் முதலாளிகள் பின்பற்றினார்களா இல்லையா என்பதை உறுதிப்படுத்த ஆட்சியாளர்களோ அல்லது அதிகாரிகளோ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தன்னுடைய இலாபவெறிக்காக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி தொழிலாளர்களைப் பகல், இரவு என அனைத்துக் நேரங்களிலும் வேலை செய்ய நிர்பந்தித்து வருவதால், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும், அவர்கள் குடும்பத்தினரும் கொரானா நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பல தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.
ஆனால், இந்த முதலாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அதிகாரிகள், நீதிமன்றங்கள், காவல்துறை உள்ளிட்ட அரசு நிர்வாக இயந்திரங்கள் சாதாரண அடித்தட்டு மக்களை ஓட ஓட விரட்டுகிறது. அத்தியாவசிய தேவைகளுக்குக் கூட வெளியில் வர முடியாமல் முடக்குகிறது; நோய்த்தொற்றை பரவாமல் தடுக்க சரியான எந்தத் திட்டமிடலையும் செய்யாமல் மக்கள் மீதே குற்றம் சுமத்துகிறது.
முதலாளிகளுக்கும், பணபலம் படைத்தவர்களுக்கும், ஆதிக்க சக்திகளுக்கும் பாதுகாப்பு அரணாக செயல்படுவதற்கும் எளிய, சாதாரண மக்களான தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் ஆகியோரின் மீது வன்முறையை ஏவுவதற்குமான முதலாளிய வர்க்க அரசின் உறுப்புகளே இந்த காவல்துறை, நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளிட்டவை என்பதை ஒவ்வொரு நிகழ்வும் மெய்ப்பித்து வருகிறது.
இந்த உண்மையை உணர்ந்து ஒடுக்குமுறையிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்ள மக்கள் விழித்து எழும் வரை அரசின் படுகொலைகள் தொடரவே செய்யும்.
- சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு.
Comments
Post a Comment