Skip to main content

முதலாளிய வர்க்க ஆட்சியின் அடியாளான போலிசும் அதைக் காப்பாற்றும் முதலாளியக் கட்சிகளும்!


சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை ஒட்டிக் காவல் சித்ரவதைக்கு எதிரான ஒரு கூட்டியக்கம் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தி,மு.க., ம.தி.மு.க. சிபிஐ, சிபிஎம் உட்பட 24 அரசியல் கட்சிகளும், வெள்ளையனின் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை உட்பட  16  அமைப்புகளும், தியாகுவின் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் உட்பட 30 இயக்கங்களும் இணைந்துள்ளதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளர் தியாகு என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

தி.மு.க. ம.தி.மு.க. போன்ற முதலாளிய ஆளும் கட்சிகள்  காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் இணைந்திருப்பது அல்லது ஒருங்கிணைப்பாளர்  தியாகு அவற்றை இணைத்திருப்பது வினோதமான நிகழ்வாகும்.

தி.மு.க. காவல்துறையின் சித்ரவதைக்கு எதிரான கட்சியல்ல. அதன் வரலாறு அதை மெய்ப்பிக்கிறது. அது ஆட்சியில் இருந்த போதெல்லாம் காவல்துறையின் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. மக்களின் நினைவுகளுக்கு அவற்றைக் கொண்டு வருவது அவசியம்.

கருணாநிதி ஆட்சியில் 1970ல் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது.  பெருமாநல்லூரில் மூன்று விவசாயிகளைக் கொன்றது. 1972ல் மின்சாரக் கட்டண உயர்வை எதிர்த்துப் போராடிய பெத்தநாயக்கன்பாளைய விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒன்பது விவசாயிகளையும் தமிழகத்தின் மற்ற பகுதிகளில் ஆறு விவசாயிகளையும் கொன்றது. போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் எனக் கருணாநிதி கூறினார்.  

1971ல் கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுப்பதை எதிர்த்து மாணவர்கள் போராடினர். அதை ஒடுக்கப் போலிசின் அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. உதயகுமார் என்ற மாணவர் கொல்லப்பட்டார். போலிஸ் உதயகுமாரின் தந்தையை மிரட்டி அவர் என்னுடைய மகனல்ல என்று சொல்ல வைத்தது.

1999 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்று மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகத்  திருநெல்வேலியில்  பேரணி நடத்திய மக்கள் மீது போலிஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தது. அதிலிருந்து தப்பிச் செல்லுவதற்கு வழியின்றி மக்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்தனர். அதில் இரண்டு குழந்தைகள், இரண்டு பெண்கள் உட்பட பதினேழு பேர் உயிர் இழந்தனர். இது பிரிட்டிஷ் ஆட்சியில் நடந்த கொடூரமான ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை நினைவூட்டுகிறது எனப் பத்திரிகைகள்  எழுதின. முதலமைச்சர் கருணாநிதி தற்காப்பிற்காகவே போலிஸ் மக்களைத் தாக்கினர்  என மனச் சாட்சியின்றி கூறினார். போலிசின் செயலை நியாயப்படுத்தினார்.

இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாத்தான்குளம் இரட்டைப் படுகொலையை மறைத்து, தந்தை ஜெயராஜும் மகன் பென்னிக்சும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் இறந்தனர் என மனம் கூசாமல் போலிஸ் எழுதிக் கொடுத்த அறிக்கையை வாசிக்கிறார். அதையே தான் கருணாநிதியும் அன்று செய்தார்.

இவற்றிற்கெல்லாம் உச்சகட்டமாக கருணாநிதி ஆட்சியில் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மீது போலிஸ் கடுமையான தாக்குதலை நடத்தியது. அதில் பல வழக்குரைஞர்கள் படுகாயம் அடைந்தனர். ஒரு நீதிபதியின் மண்டை உடைக்கப்பட்டது.  அரசின் இன்னொரு அதிகாரமிக்க அங்கமான நீதிமன்றத்தின் மீதே தாக்குதல் தொடுக்கும் அளவுக்கு இங்கு போலிஸ் சட்டத்திற்குக் கட்டுப்படாத அதிகாரத்தைக் கையில் கொண்டுள்ளது. ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளையாக இருந்து வருகிறது.

கருணாநிதியோ அல்லது அவரது கட்சியோ தாம் ஆட்சியில் இருந்தபோது நடந்த போலிசின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கு வருத்தம் தெரிவித்ததில்லை. ஆட்சியில் இல்லாதபோது அவை பற்றி சுய விமர்சனம் செய்து கொண்டதுமில்லை. ஆட்சியில் இருக்கும்போது போலிசைக் கொண்டு மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதும், போலிசின் அனைத்து அத்துமீறல்களுக்கும் துணை போவதும், அதனைக் காப்பாற்றுவதுமாகவே இருந்து வந்துள்ளது தி.மு.க.. தான் ஆட்சியில் இல்லாதபோது, அ.தி.மு.க. ஆட்சியின்போது நடக்கும் போலிசின் தாக்குதல்களுக்கும், சட்டவிரோதச் செயல்களுக்கும்   போலீசைக் கண்டிப்பதை விட, அதற்கெல்லாம் காரணம் ஆளும் கட்சிதான் என ஆளும் கட்சியின் மீது குற்றம் சுமத்திப் போலீசைக் காப்பாற்றி வருகிறது. அனைத்து முதலாளியக் கட்சிகளின் தந்திரமும் இதுதான். தி.மு.க. இதற்கு விதிவிலக்கல்ல.

தி.மு.க. ஆட்சியில் மட்டும் போலிசின் தாக்குதல்களும் சட்டவிரோத நடவடிக்கைகளும் நடக்கவில்லை. தமிழ் நாட்டில் 1967 வரையிலும் நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் இதுதான் நிலைமை.

1950ஆம் ஆண்டு பிப்ரவரி 11  ஆம் நாள் சேலம் சிறையில் அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய கம்யூனிஸ்டுகள் மீது போலீசார் கொடூரமான தாக்குதலைத் தொடுத்தனர். துப்பாக்கி சூடு நடத்தினர். அதில் 22  உயிர்களைப்  பலியாக்கினார். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தைக் காப்பாற்ற அப்போதைய போலீசார் மக்கள் போராட்டங்களைக் கடுமையாக அடக்கி வந்தனர். மக்களின் இன்னுயிர்களைப் பறித்து வந்தனர். சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தப் போலிஸ் மக்களுக்கானதல்ல; புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள முதலாளிய வர்க்கத்தின் அடியாள் என்பதை இந்த நிகழ்ச்சி வெட்ட வெளிச்சமாக்கியது.

1965 ஜனவரியில் தமிழ் நாட்டில் நடந்த மாபெரும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மாணவர்களும் இளைஞர்களும் முன்னின்று நடத்தினர். அப்போது காங்கிரஸ் கட்சி போலிஸ் அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டது. 500 பேருக்கும் மேலான உயிர்களைப் பறித்தது. அப்பொழுது முதலமைச்சராக இருந்த பக்தவத்சலத்தைத் திறமையாகப் போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய ஒன்றியத்தின் மத்திய அரசாங்கம் பாராட்டியது. இந்தக் காங்கிரஸ் கட்சிதான் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சிகளின் ஆட்சியில் நடந்த போலிஸ் தாக்குதல்களைப் போலித்தனாமாக விமர்சித்து வருகிறது.

இதே கதைதான் அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது. 1978ல் நாராயணசாமி தலைமையில் இருந்த விவசாயிகள் சங்கம் தமிழ்நாடெங்கும் தனது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தியது. அப்போது எம்.ஜி.ஆர்.ஆட்சியில் நடந்த போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் எட்டு விவசாயிகள் உயிர் இழந்தனர். வெள்ளித் திரையில் புரட்சியாளர் வேடம் போட்டு புரட்சி நடிகர் என்று பட்டம் பெற்ற எம்.ஜி.ஆர். 1980களின் தொடக்கத்தில் உண்மையான நக்சல்பாரிப் புரட்சியாளர்களை விசாரணையின்றிப் போலி மோதல்களில் தேவாரம் தலைமையில் போலிசைக் கொண்டு கொன்று குவித்தார். 1987ல் இட ஒதுக்கீட்டுக்காகப் போராடிய பா.ம.க. கட்சியினர் இருபது பேர் போலிசால் கொல்லப்பட்டனர்.

ஜெயலலிதா ஆட்சியின்போது 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இமானுவேல் சேகரனின் 54வது குரு பூஜையின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு தலித்துகள் பலியானார்கள். அப்போது ஜெயலலிதா போலிஸ் தற்காப்புக்காகவும் பொதுச் சொத்துகளைக் கப்பாற்றுவதற்காகவும் சுட்டதாகக் கூறினார். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி அணு உலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் போது மணப்பாடு அருகே நடந்த போலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரைப் பறித்தது போலிஸ்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகமெங்கும் பரவியது. மெரினாவில் அப்போராட்டத்தை வன்முறை மூலம் ஆட்சியாளர்கள் முடிவுக்குக் கொண்டு வந்தனர். தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் போராட்டம் நடத்தியவர்களைக் கடுமையாகத் தாக்கியது போலிஸ்.  அப்போது முதலமைச்சராக இருந்தவர் ஒ.பி. பன்னீர்செல்வம்.

இவற்றிற்கெல்லாம் உச்ச கட்டமாக 2018 மே மாதம் 22  ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுப்பதற்காக அமைதியாகச் சென்ற மக்கள் மீது போலிஸ் கொடூரமான  தாக்குதலை நடத்தியது. துப்பாக்கிச் சூடு நடத்தியது. 13 பேரின் உயிரைக் குடித்தது. 

எந்தக் கட்சியாக இருந்தாலும் அது தனது ஆட்சியில் நடக்கும் மக்கள் மீதான போலிசின் அடக்குமுறைகளை, சட்டவிரோதச் செயல்களைக் கண்டிக்கப்போவதில்லை. ஏனென்றால் ஆளும் வர்க்கத்தின்  நலன்களுக்குச் சேவை செய்யும் அடியாளாகப் போலிஸ் இருக்கிறது. ஆட்சியில் இருக்கும் கட்சியின் நோக்கமும் ஆளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்வதுதான். இரண்டின் நோக்கமும் ஒன்றுதான்.

போலிஸ் இன்று பல்வேறு வகைகளிலும் அரசியல்வாதிகள், முதலாளிகள், கறுப்புப் பண முதலைகள், கள்ளச் சந்தைப் பேர்வழிகள், கடத்தல்காரர்கள், போதைப் பொருள் வியாபாரிகள், நிழல் உலகத் தாதாக்கள், ரவுடிகள், கிரிமினல்கள் ஆகியோருடன்  நெருக்கமான உறவுகளைக் கொண்டுள்ளது. இவர்களின் நலன்களும் போலிசின் நலன்களும் பின்னிப் பிணைந்துள்ளன. இவர்களின் ஆதரவுடன் இன்று போலிஸ் பூதாகரமாக வளர்ந்துள்ளது. சட்டத்தை அது மதிப்பதில்லை. அதனால்தான் அரசின் இன்னொரு உறுப்பான நீதித்துறையின் மீதும் அது தாக்குதல் தொடுக்கும் அளவுக்குத் துணிவைக் கொண்டுள்ளது. சாத்தான்குளத்தின் ஒரு சாதாரண போலிஸ் ஒரு மாஜிஸ்ட்ரேட்டைப் பார்த்து “ உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது”  என்று கேட்க முடிகிறது. இன்று நடப்பது போலிஸ் ஆட்சி என்று கூறும் அளவுக்கு அதன் அதிகாரம் மேலோங்கியுள்ளது.

இந்த நிலையில் காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கத்தில் தி.மு.க.வைச் சேர்ப்பது ஒரு சந்தர்ப்பவாதமாகும். மக்களுக்கு உண்மையைச் சொல்லாமல் மறைப்பதாகும். அ.தி.மு.க. ஆட்சிதான் காவல் சித்ரவதைக்குக் காரணம்; தி.மு.க.போன்ற கட்சி ஆட்சிக்கு வந்து விட்டால் காவல் சித்ரவதை இருக்காது என்ற மாயை உருவாக்குவதாகும். போலீஸ் இங்குள்ள முதலாளிய வர்க்கத்தின் அடியாள் என்பதை விளக்காமல், கட்சி மாறினால் காட்சி மாறி விடும், மக்களுக்கு நல்ல காலம் வந்து விடும் என்று ஏமாற்றுவதாகும். இந்தக் கூட்டியக்கத்தில் உள்ள பலமான அமைப்பு தி.மு.க.தான். இந்தச் சந்தர்ப்பவாதக் கூட்டை அக்கட்சி நன்கு பயன்படுத்திக் கொள்ளும். அடுத்து வரும் தேர்தலில் அது நல்ல அறுவடையைப் பார்க்கலாம்.

ஆனால் உண்மையில் மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாந்து கொண்டிருக்கக் கூடாது. இங்குள்ள முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலை ஒழிக்காமல், அதற்கான ஆட்சி அமைப்பை மாற்றாமல், அதன் அடியாளான போலிசின் அடக்குமுறையிலிருந்து தாம் மீள முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். 


சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு.       

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட