பால் டிஅமேட்டோ
தமிழில்: நிழல்வண்ணன்
தற்போதைய அரசாங்கத்தின் கட்டமைப்புக்கள் முதலாளித்துவத்தின் கீழ் வளர்ந்துள்ளவை; அவை முதலாளித்துவ ஆட்சியைப் பாதுகாப்பதற்காக வடிவமைக்கபட்டவையாகும்.
“நவீன அரசின் நிர்வாகத் தலைமை என்பது ஒட்டுமொத்த முதலாளித்துவ வர்க்கத்தின் பொதுவான விவகாரங்களை நிர்வகிப்பதற்கான ஒரு குழுவாகும்” என்று கம்யூனிஸ்டு அறிக்கையில் கார்ல் மார்க்சும் பிரடெரிக் எங்கல்சும் எழுதுகின்றனர்.
நவீன அரசு என்பது மேலாதிக்க வர்க்கத்தின் – பெருமுதலாளித்துவ வர்க்கத்தின் – அரசாகும். உண்மையில் அரசு என்பது அதன் தோற்றத்திலிருந்தே மேலாதிக்க வர்க்கத்தின் அரசாகவே இருந்து வந்துள்ளது, மேலும் அதன் முதன்மையான நோக்கம் அந்தக் குறிப்பிட்ட வர்க்கத்தின் ஆட்சியைக் காப்பாற்றுவதே ஆகும் என்று எங்கல்ஸ் வாதிடுகிறார்.
அரசு என்பது வர்க்கப் பகைமைகளைத் தடுத்துநிறுத்தி வைக்கும் தேவையிலிருந்து தோன்றியது மட்டுமின்றி, வர்க்கங்களிடையே நடந்த மோதலிலேயே தோன்றியதால், அது இயல்பாகவே பொருளாதார ரீதியாக மிகவும் சக்திவாய்ந்த ஆளும் வர்க்கத்தின் அரசாகவே இருக்கிறது, அது அதன் சாதனங்கள் மூலம் அரசியல்ரீதியாகவும் ஆளும் வர்க்கமாக ஆகிறது, அதனால் அது ஒடுக்கப்படும் வர்க்கத்தை சுரண்டுவதற்கும் காலடியில் போட்டு நசுக்கி வைத்திருப்பதற்கும் பதிய சாதனங்களைப் பெறுகிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக, பழங்கால அரசு, அடிமைகளைப் பிடித்து வைத்திருந்த அடிமை உரிமையாளர்களின் அரசாக இருந்தது, அதேபோல நிலப்பிரபுத்துவ அரசு விவசாயப் பண்ணையடிமைகளையும் கொத்தடிமைகளையும் பிடித்துவைத்திருந்த பிரபுத்துவ அமைப்பாக இருந்தது, மூலதனத்தைக் கொண்டு கூலி உழைப்பை சுரண்டுவதற்கான கருவியாக நவீன பிரதிநிதித்துவ அரசு இருக்கிறது.
இது உறுதியாகப் பள்ளிகளில் கற்பிக்கப்படுகிற கண்ணோட்டம் அல்ல. அங்கு நாம் தேர்தல்கள், “சுயநலக் குழுக்கள்”, அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கத்தின் பல்வேறு கிளைகளுடன் கூடிய அரசியல்சாசன அரசாங்கத்தைப் பற்றிக் கற்றுக்கொள்கிறோம். அவை அனைத்தும் போட்டிக் குழுக்களின் கருத்துக்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் வகையில் இருக்கின்றன.
சமூகவியல், அரசியல் அறிவியல் துறைகளில் விற்கப்படும் அரசு குறித்த இந்தக் கண்ணோட்டங்கள் சமுதாயம் என்பது போட்டியிடும் “சுயநலக் குழுக்களின்” குழப்ப நிலையைவிட வேறொன்றுமில்லை, அதாவது ஒட்டுமொத்தமாக அவை “மக்களை” உள்ளடக்கியவை ஆகும்.
இந்த அணுகுமுறை தாராளவாத “சமூக அறிவியல்கள்” என்று அழைக்கப்பபடுபவற்றின் வகை மாதிரி ஆகும். அதில் பகுப்பாய்வாளர்கள் சமுதாயத்தில் மேல்மட்டத் தோற்றத்திற்கு அப்பால் செல்வதில்லை, மனித நடத்தையை ஆளும் மிகவும் அடிப்படையான உறவுகளைக் கண்டறிவதில்லை.
மனித நடத்தை என்பது நமது உயிரியல் இயற்கையில் வேர்கொண்டுள்ளது என்று வாதிடுவோரும் இருக்கிறார்கள் அவர்கள் அந்த அடிப்படையில் ஒரே மாதிரியான முடிவுக்கும் வருகிறார்கள்; மனிதர்கள் இயற்கையிலேயே அருவருப்பான, வன்முறையான, ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறவர்களாக இருப்பதால் (இது நிலவும் சமுதாயத்தின் மேற்பரப்பை மட்டும் பார்த்து யூகிப்பது) அரசு என்பது அந்தப் போக்குகளை ஒழுங்குபடுத்தவும், அதன்மூலம் சமுதாயம் ஒவ்வொருவராலும் அனைவருக்கும் எதிராகவும் போராக மோதிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ளவும் இருந்துவருகிறது.
_____________________________________
மார்க்சிய வாதிகளைப் பொறுத்தவரை, அரசின் வேர்கள் மனித சமுதாயத்தின் பொருளியல் மற்றும் வரலாற்று வளர்ச்சியில் இருக்கின்றன. சமுதாயம் ஒரு மிகையை உற்பத்தி செய்யத் தொடங்கியதிலிருந்து – வழக்கமாக பயிரிடுவதில் ஏற்றுக்கொள்ளப்படுவதை அடிப்படையாகக் கொண்டது – ஆனால் அந்த மிகை அன்றாடம் கடுமையான உழைப்பிலிருந்து சமுதாயத்தின் ஒரு சின்னஞ்சிறிய சிறுபான்மையை விடுவிப்பதைவிட கூடுதலாகச் செய்வதற்குப் போதுமானதாக இல்லை. வேறு சொற்களில் கூறுவதானால், வர்க்கப் பிரிவினைகளுடன் சேர்ந்தே அவை தோன்றியதன் விளைவாகவே அரசு தோன்றியது.
அரசு என்பது உற்பத்தியாளர்களிடமிருந்து, அவர்கள் விவசாயிகளாக, அடிமைகளாக, அல்லது கூலித் தொழிலாளர்களாக இருந்தாலும், மிகையைச் சுரண்டி எடுப்பதற்கு மிகவும் பொருத்தமான நிலைமைகளை நீடிப்பதற்கும் வளர்ப்பதற்கும் உதவுவதற்காகத் தோன்றியது. அதன் பொருள் (சாலைகள் அமைப்பது போன்ற) ஒரு பொருளாதாரப் பாத்திரத்தையும், (மன்னர்களின் தெய்வீக ஆட்சியை நியாயப்படுத்தும்) ஒரு சித்தாந்தப் பாத்திரத்தையும், மற்றும் (சமுதாயத்திற்கு மேலே அல்லது வெளியே தேவைப்படுகிறபோது “ஒழுங்கை” நிலைநாட்டுவதற்கு அழைக்கப்படுகிற ஓர் ஆயுதப்படையை வைத்திருக்கும்) ஒரு வன்முறைப் பாத்திரத்தையும் வகிப்பதாகும்.
ஆகவே, வர்க்க சமுதயாங்களின் தோற்றத்திற்கு முன்னதாக, - மனிதர்கள் சிறிய குழுக்களாக இருப்பதற்கும் உணவைத் தேடி அலைவதற்கும் – ஓர் அரசு தேவைப்பட்டிருக்கவில்லை.
“ஆகவே, அரசு என்பது என்றென்றும் நிரந்தரமாக இருந்ததில்லை. அரசு இல்லாமேலே நிர்வகித்துக்கொண்ட சமுதாயங்கள் இருந்தன, அவற்றிற்கு அரசு பற்றியோ அரசு அதிகாரம் பற்றியோ எந்த கருத்தும் இருக்கவில்லை. பொருளாதார வளர்ச்சியின் ஒரு திட்டவட்டமான கட்டத்தில், சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபடுவதற்கு இட்டுச் சென்ற போது, இந்தப் பிளவுகள் காரணமாக அரசு என்பது ஒரு தேவையாக ஆனது” என்று எங்கல்ஸ் எழுதுகிறார்.
அரசு என்பது பொருளாதாரரீதியாக மேலாதிக்கத்தில் உள்ள ஒரு வர்க்கத்தின் அரசாக இருக்கிறது என்பது வாக்களிப்பது என்ற ஒரு சடங்கு மூலம் மாறிவிடுவதில்லை. பணக்காரர்கள் தான் இதற்கெல்லாம் முன்முயற்சி எடுக்கிறார்கள் ஆகவே அவர்கள் சொல்வதுதான் சரி என்ற ஒரு தெளிவற்ற கருத்தினை பெரும்பாலான மக்கள் வைத்திருக்கிறார்கள்.
“அரசியலில் இரண்டு பெரிய சூதாட்டக் கும்பல்கள் அரசு அதிகாரத்தை மாற்றி மாற்றிக் கைப்பற்றி அதை மிகவும் மோசமான ஊழல்களுக்கு மிகவும் மோசமான வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வெளித்தோற்றத்திற்கு தேசத்தின் சேவகர்களாக இருக்கும் அவர்கள் உண்மை நிலையில் அதைச் சுரண்டவும் கொள்ளையடிக்கவும் செய்கிறார்கள். அரசியல்வாதிகளின் இந்த இரண்டு பெரும் கூட்டத்திற்கு முன்னால் தேசம் என்பது எந்தச் சக்தியும் அற்றதாக இருக்கிறது” என்று அமெரிக்க அரசியல் அமைப்பு குறித்து எங்கல்ஸ் ஒருமுறை விவரித்தார்.
இந்தப் பத்தியை எங்கல்ஸ் நேற்றுத்தான் எழுதியதைப் போல் இருக்கிறது.. இருப்பினும், அந்த இரண்டு பெரும் சூதாட்டக் கும்பல்களும் அனைத்து வழிகளிலும் முதலீட்டாளர்கள், வங்கியாளர்கள், தொழிலதிபர்கள் என்று அறியப்படும் சூதாட்டக் கும்பல்களுடன் பிணைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள்தாம் அரசாங்கத்தின் கருவூலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், அவர்களுக்குத் தான் அரசாங்கம் பொறுப்பாக இருக்கிறது.
அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரத்திற்கான நிதி மற்றும் பிற நிதி ஆதரவு வடிவங்களின் பெரும்பகுதியை வசதி படைத்த முதலாளிகளிடமிருந்துதான் பெறுகிறார்கள் மிகவும் சக்திவாய்ந்த செல்வாக்குச் செலுத்துபவர்கள் பெருங்குழுமங்களுக்கு வாதாடுபவர்களாக இருக்கிறார்கள்., உயர்ந்த பதவியை வகிப்பதற்கு பலகோடி ரூபாய்கள் தேவைப்படுகிறது, சமுதாயத்தின் இந்தப் பொருளாதாரக் கட்டமைப்பு முழுமையுமே அரசு செயல்படும் முறையைத் தீர்மானிக்கிறது..
எடுத்துக்காட்டாக, அரசாங்கக் கடனை எடுத்துக்கொள்வோம். “பொதுக் கடன் என்பது அரசு மூலதனத்தின் கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் ஒரு சக்திவாய்ந்த வழியாகும். அரசாங்கத்தின் கடன்கள் அதிகரிக்க அதிகரிக்க, அது அதன் வங்கியாளர்களை அதிகரித்த அளவில் மகிழ்விக்க வேண்டும். வங்கியாளர்கள் வருத்தமடைவது அதிகாரிக்குமானால், அவர்கள் பழைய கடன்களை நீட்டிக்க மறுப்பார்கள், அல்லது மிகவும் தண்டிக்கக் கூடிய நிபந்தனைகளுடன் (மட்டுமே) புதிய நிதியளிப்பை அதிகரிப்பார்கள்” என்று தூக் ஹென்வுட் குறிப்பிடுகிறார்.
உண்மை என்னவென்றால், அரசின் பத்திரங்களாக என்னிடம் 1000 ரூபாய் இருந்தால், அரசாங்கக் கொள்கையை வகுப்பதில் எனது “குரலை” விட கோடிக்கணக்கான ரூபாயை வைத்திருக்கும் வங்கியாளரின் குரலே ஓங்கி ஒலிக்கும்.
_________________________________________
இதற்கெல்லாம் மேலாக, ஜனநாயகத்தின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் ஜனநாயக அம்சத்தை குறைந்தபட்சமாகக் குறைக்கும் வகையில் வடிவமைக்கபட்டுள்ளது.
அமெரிக்காவில் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை நேரடியானது அல்ல. நமது வாக்குக்கும் இறுதி முடிவுக்கும் இடையில் ஓர் தேர்தல் குழு இருக்கிறது, அது அடிமைமுறைக் காலத்திலிருந்து அதைத் தனது பிடியில் வைத்திருக்கிறது. பெரும்பாலான அரசாங்க நிறுவனங்கள், பல்வேறு அரசு முகமைகள் மற்றும் இராணுவம் போன்றவை, எந்த தேர்தல் கட்டுப்பாட்டுக்குள்ளும் இல்லை. பெரும் அதிகாரவர்க்க அமைப்புகளின் உயர்மட்டப் பதவியில் இருப்போர் பணக்கார மேட்டுக்குடியினருடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைத்திருக்கிறார்கள், அவர்களே அவற்றை நிர்வகிக்கிறார்கள்.
அரசு முதலாளித்துவத்திற்குச் சேவை செய்கிறது, குறிப்பாக செல்வம் படைத்த முதலாளிகளுக்கே சேவை செய்கிறது என்பது, நீதித்துறை பணக்காரக் குற்றவாளிகளை எப்படித் தண்டிக்கிறது, ஏழை மக்களின் குற்றங்களை எப்படித் தண்டிக்கிறது; பணக்காரத் தனிநபர்கள் மற்றும் பெருங்குழும நிறுவனங்களுக்கு எவ்வாறு குறைந்த வரிச் சுமையே இருக்கிறது, ஏழைகளுக்கும் உழைக்கும் வர்க்கத்தினருக்கும் மட்டும் எவ்வாறு மிகுதியான வரிச் சுமை இருக்கிறது; பெருங்குழும நிறுவன நலன்களுக்கும் இராணுவத்திற்கும் செலவழிப்பதைவிட சமூகநலத் திட்டங்களுக்கான செலவு எப்படி குறைவாகவே இருக்கிறது என்பது போன்ற பல வழிகளில் வெளிப்படுகிறது;
இறுதியாக, அரசு முதலாளித்துவ அமைப்பின் பாதுகாவலராக உறுதிப்படுத்திக்கொள்கிறது, அதை எதிர்க்கும் எந்த முயற்சியையும் தடுப்பதற்கு, அதன் ஆயுதப் படைகளை, துணை இராணுவம், இருப்புப் படைகள், காவல்துறை உட்பட பல்வேறு படைகளைப் பயன்படுத்துகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தலையீடு செய்வதானாலும் சரி, அமைதியான ஆர்ப்பாட்டக்கார்களை அடித்துத் துன்புறுத்துவதிலும் சரி, அல்லது எதிர்ப்பாளர்களையும் இடதுசாரி அமைப்பாளர்களையும் சிறையிலடைப்பதானாலும் அல்லது கொலை செய்வதானாலும் சரி அந்த ஆயுதப் படைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பிற விடயங்கள் சமமாக இருக்க, சோசலிசவாதிகள் ஒரு முடியாட்சிக்குப் பதிலாக, அல்லது ஒரு இராணுவ சர்வாதிகாரத்துக்குப் பதிலாக, ஒரு ஜனநாயகக் குடியரசைத் தெரிவு செய்கிறார்கள், ஏனென்றால் ஒரு ஜனநாயகக் குடியரசு முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்த்து அமைப்பாவதற்கும் போராடுவதற்கும் சிறந்த நிலைமைகளை (ஊடக சுதந்திரம் பேச்சுரிமை, அமைப்பாகும் உரிமை, ஆகியவை குறிப்பிட்ட வரம்புக்குள் அனுமதிக்கப்படுகின்றன) அளிக்கிறது.
இருப்பினும், மிகவும் ஜனநாயகமான குடியரசு கூட - அதன் வீங்கிப் பெருத்த அதிகார வர்க்கம், காவல்துறை மற்றும் இராணுவம் ஆகியவற்றுடன் – இன்னும் ஒரு சிலரால் பலர் சுரண்டப்படுவதை நிலைநிறுத்திக்கொள்வதற்கான ஒரு கருவியாகவே இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.
அதனால் தான் முதலாளித்துவ ஜனநாயகத்தின் சாராம்சம் குறித்து லெனின் பின்வருமாறு எழுதினார்:
“ஒவ்வொரு சில ஆண்டுகளுக்குப் பிறகும் ஆளும் வர்க்கத்தின் எந்த உறுப்பினர் பாராளுமன்றத்தின் மூலம் மக்களை அடக்கி ஒடுக்குவது என்பதைத் தீர்மானிப்பது தான் முதலாளித்துவப் பாராளுமன்றவாதத்தின் உண்மையான சாராம்சம் ஆகும்”
நன்றி: SocialistWorker.org
உண்மை தான் தோழர் . ஆனால் அரசு மக்களை பாதுக்காகவும் இப்போது உள்ளது . நேரடியாக முதலாளிகளுக்கு சேவை செய்ய வில்லை . சட்டம் என்று ஒன்று உள்ளது . நீதி மன்றம் என்றும் ஒன்று உள்ளது. ஜனநாயகம் போலியாக இருந்தாலும் நாம் அரசிடம் கேள்வி கேட்க முடியும் .welfare state என்பது போல நாம் அரசிடம் நிச்யம் நியாம் கேட்க வேண்டும் . முடியும் .யாரால் ?
ReplyDeleteபணம் இருந்தால் ...
ஆம் . கெட்டிக்கார பணநாயகம் ...!!!
ஆம். நாம் கேள்வி கேட்க முடியும். ஆனால் அத்தகைய போராட்டம் , சட்டம் , நீதிமன்றங்கள் எல்லாமே இந்த அரசின் கைப்பாவைகளாகவே பெரும்பாலும் இருப்பதை ஒன்றும் செய்துவிட முடியாது. ஜனநாயக ரீதியான போராட்டம் , மக்கள் வெகுண்டு எழுந்து போராடும் நாளை தள்ளிப் போட்டு, சில உரிமைகளை ,சலுகைகளை மக்களுக்கு பெற்றுத் தரமுடியும். அதுதான் சனநாயகப் போராட்டங்களின் எல்லை. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இத்தகைய ஜனநாயக போராட்டங்கள் கொடூரமாக நசுக்கப்படும். நீதிமன்றங்கள் ராமாயணத்தையும் மனுநீதி யையும் மேற்கோள் காட்டி தீர்ப்புக்கள் வழங்கும்.
ReplyDeleteஆம். நாம் கேள்வி கேட்க முடியும். ஆனால் அத்தகைய போராட்டம் , சட்டம் , நீதிமன்றங்கள் எல்லாமே இந்த அரசின் கைப்பாவைகளாகவே பெரும்பாலும் இருப்பதை ஒன்றும் செய்துவிட முடியாது. ஜனநாயக ரீதியான போராட்டம் , மக்கள் வெகுண்டு எழுந்து போராடும் நாளை தள்ளிப் போட்டு, சில உரிமைகளை ,சலுகைகளை மக்களுக்கு பெற்றுத் தரமுடியும். அதுதான் சனநாயகப் போராட்டங்களின் எல்லை. ஆனால் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் இத்தகைய ஜனநாயக போராட்டங்கள் கொடூரமாக நசுக்கப்படும். நீதிமன்றங்கள் ராமாயணத்தையும் மனுநீதி யையும் மேற்கோள் காட்டி தீர்ப்புக்கள் வழங்கும்.
ReplyDelete