இந்திய- சீன எல்லைப் பிரச்சனையைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என ஆளும் கட்சியினர் அறைகூவல் விடுத்து வருகின்றனர். ஒவ்வொரு குடிமகனும் தேசபக்தியை வெளிபடுத்த வேண்டிய தருணம் இது எனவும், அப்படி செய்யாதவர்கள் தேசவிரோதிகள் எனவும் அச்சுறுத்துகின்றனர்.
இதற்கிடையில் காங்கிரஸ்
கட்சியினரும் ‘நாங்கள் தேசப்பற்றில் பா.ஜ.க-வினருக்குச் சளைத்தவர்கள்
இல்லை’ என்பதை நிரூபிக்க அவர்கள்
பங்கிற்கு சீனாவிற்கு எதிரான வெறியை
மூட்டி வருகின்றனர்.
ஆட்சியிலிருப்பவர்கள் தமது
ஆட்சியை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ஆட்சியை இழந்து வெளியில்
இருப்பவர்கள் மீண்டு எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காகவும்
தேசப் பற்று வேடத்தைத் தீவிரமாகப் போட்டு வருகின்றனர்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரின் ஒரு பகுதியாக சீனாவில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் அமெரிக்க மற்றும் இதர பன்னாட்டு மூலதனங்கள் சீனாவிலிருந்து வெளியேறும் என அமெரிக்கா எச்சரித்து வருகிறது.
சீனாவிலிருந்து வெளியேறும் பன்னாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக இந்திய அரசு பல்வேறு சலுகைகளை அளிப்பதாகக் கூறி அறைகூவல் விடுத்து வருகிறது. அதே வேளையில் இந்தியாவின்
தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்திச் சீன மூலதனம் இந்திய நிறுவனங்களைக் கைப்பற்றும் முயற்சிக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டத்தையும் இந்திய அரசு இயற்றியுள்ளது.
கொரானா பெருந்தொற்று காரணமாகப் பெரும் நெருக்கடிக்குள் சிக்கி இருக்கும் இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க தற்சார்பு பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என ஒருபக்கம் அறிவிக்கும் மோடி அரசு, மற்றொரு பக்கம் 100 கோடி டாலருக்கு மேல் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் நிறுவனங்களுக்குச் சலுகைகள் அளிப்பதாக அறிவிக்கிறது. பொருளாதார
நெருக்கடியிலிருந்து இந்தியாவை மீட்க 60
இலட்சம் கோடி ரூபாய் அந்நிய முதலீடு தேவைப்படுகிறது
என்று பாஜக அரசின் அமைச்சர்
நிதின் கட்காரி கூறுகிறார். ”இறக்குமதியைக் குறைத்து சுயசார்பு நிலையை எட்டுவதே இலக்கு” என்று அவர்
கூறுவதன் மூலம் தற்சார்பு பொருளாதாரத்திற்குப் புதிய விளக்கம் தருகிறார். அந்நிய மூலதனம், அந்நியச் சந்தை ஆகியவற்றைச் சார்ந்து இருக்கும் நாடு
இவருக்குத் தற்சார்பு நாடாம்! இந்தியாவில் தொழிலாளர்களின் உழைப்புச்சக்தியைச் சுரண்டி அதன் மூலம் பெருமளவிலான இலாபத்தைப் பன்னாட்டு முதலாளிகள் எடுத்துச் செல்வதற்கு அதிகளவிலான வாய்ப்புகளை உருவாக்கி வரும் பிஜேபி அரசு தற்சார்பு பொருளாதாரத்தைக் கட்டமைப்போம் என்று வாய்ச்சவடால் விடுகிறது.
அன்னிய மூலதனங்களை அதிகளவில் ஈர்க்கத் தொழிலாளர் சட்டங்களில் இருந்து விலக்களிப்பதாக பல்வேறு மாநில அரசுகள் அறிவித்தன, தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாகத் தற்போதைக்கு பின்வாங்கிக் கொண்டாலும், இந்த ஆபத்து முழுமையாக நீங்கிவிடவில்லை.
அன்றாட வாழ்க்கை முடக்கப்பட்டு, எந்தவித வருவாயும் இன்றி பெரும் துன்பத்திற்குள் சிக்கி இருக்கும் மக்களின் கோப உணர்வைத் திசை திருப்புவதற்காகவே தற்சார்புப் பொருளாதார வார்த்தை ஜாலங்களும், இந்திய எல்லைப் பிரச்சனைகளும் முன்வைக்கப்படுகின்றன.
தற்போது எழுந்துள்ள எல்லைப் பிரச்சினையை முன்வைத்து சீனப் பொருட்கள் புறக்கணிப்பு பிரச்சாரம் ஆளும் கட்சியால் முடுக்கி விடப்பட்டுள்ளது. எனினும் இந்திய சீன நாடுகளுக்கிடையே முற்றிலும் பொருளாதாரப் பரிவர்த்தனைகளைத் தடுக்கவோ அல்லது முடக்கவோ முடியாது. அந்த அளவுக்கு இதில் இரு நாட்டு முதலாளிகளின் நலன்களும் பிண்ணிப் பிணைந்துள்ளன.
இந்திய செல்போன் சந்தையில் 76 சதவீதத்தையும், தொலைக்காட்சி சந்தையில் 49 சதவீதத்தையும் சீன உற்பத்திப் பொருட்களே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பல தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை சீனாவிடமிருந்தே இந்தியா இறக்குமதி செய்கிறது. மருந்துகள் உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்களில் 60 - 70 சதவீதம் சீனாவிலிருந்தே பெறப்படுகிறது. பிற நாடுகளைக் காட்டிலும் சீனாவில் 20 - 30 சதவீதம் குறைவான விலையில் மூலப்பொருட்கள் கிடைக்கின்றன. ஒரு வேளை இறக்குமதி தடை செய்யப்படுமானால், மருந்துகளின் விலை கணிசமாக உயர்வதோடு, மூலப்பொருட்கள் பற்றாக்குறையின் காரணமாக மருந்து உற்பத்தியும் பாதிக்கப்படும்.
ஆட்டோமொபைல் துறைக்குத் தேவையான உதிரிபாகங்கள் இறக்குமதியில் 27 சதவீதம் சீனாவிலிருந்து பெறப்படுகிறது. இதனை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்குத் தேவையான திறனோ, தொழில்நுட்ப வசதிகளோ இல்லை.
சீனாவின் 59 மொபைல் மென்பொருட்களுக்கு தடை விதிப்பதாக கூறும் இந்திய அரசு, இந்தியாவின் இணைய சேவைக்கான உபரணங்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களை நம்பித்தான் உள்ளது என்பதையும் குறிப்பாக சீனாவையும் நம்பி உள்ளது என்பதையும் மறைக்கிறது. ஹூவாய்(HUAWEI), இஸட் டி இ
(ZTE) ஆகிய சீன நிறுவனங்களிடமிருந்து இந்த உபகரணங்கள் பெறப்படுகின்றன. மொத்தமுள்ள 23 சர்க்கிள்களில் ஏர்டெல்லின் மூன்று சர்க்கிள்களும், வோடாபோன் (இந்தியா) நிறுவனத்தின் 7 சர்க்கிள்களும் ஹூவாய் நிறுவனத்தின் உபகரணங்களையே பயன்படுத்தி வருகின்றன. இந்த உபகரணங்களின் பயன்பாட்டைத் தடுத்தால் ஒட்டு மொத்த இந்தியாவின் இணைய சேவையே ஆட்டம் கண்டு விடும்.
சீன மொபைல் மென்பொருட்களுக்கு தடை விதித்துள்ள இந்திய அரசு,
சீனாவின் செல்போன் தயாரிப்புகளில் உள்ளீடாக (In-Built) உள்ள மென்பொருட்களை தடுக்க முடியாது, அவ்வாறு அவற்றையும்
தடுக்க வேண்டுமானால், ஒட்டு மொத்தமாக சீன செல்போன்களையே தடை செய்ய வேண்டியிருக்கும். சீன மொபைல் மென்பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் தனி நபர்களின் தகவல்கள் திருடப்படும் அபாயம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அபாயமானது சீன மொபைல் மென்பொருட்களில் மட்டுமல்ல, முகநூல், வாட்ஸ் ஆப், டுவிட்டர், இன்ஸ்டாகிரம் போன்ற அனைத்து
மொபைல் மென்பொருட்களிலும் இந்த அபாயம் உள்ளது.
சீனப் பொருட்கள் புறக்கணிப்பும், இந்திய நாட்டுப்பற்று உபதேசமும் சாதாரண அடித்தட்டு மக்களுக்குத்தான். கொரானா நோய்த்தொற்று நெருக்கடியால் வேலையிழந்து, வருமானம் இழந்து அன்றாட வாழ்விற்கே தொழிலாளர்களும், விவசாயிகளும், சிறு வணிகர்களும் துன்பப்பட்டு வரும் நிலையில், அதனைக் களைவதற்குச் சீரிய நடவடிக்கைகளை எடுக்காமல், தேசபக்தி குறித்து உபதேசிக்கப்படுகிறது. ஆனால், இந்த தேச பக்தியெல்லாம், முதலாளிகளுக்குப் பொருந்துவதில்லை. ஏனெனில் அவர்களின் நலன் சீன முதலாளி வர்க்கத்தோடு பிண்ணிப் பிணைந்துள்ளது. எனவே சீன முதலாளிகளின் மூலதனத்தை இந்தியாவிலிருந்து வெளியேற்ற இந்த அரசு நடவடிக்கை எடுக்கும் அல்லது சீனாவில் உள்ள முதலீடுகளை இந்திய முதலாளிகள் திரும்பப் பெறுவார்கள் என நம்புவதை விட முட்டாள்தனம்
எதுவும் இருக்க முடியாது.
ஆனால் இங்குள்ள பா.ஜ.க. வினரும் சங்கப் பரிவாரங்களும்
பிரிட்டிஷ் கால இந்தியாவில் நடந்த சுதேசி இயக்கத்தைப் போல, இப்பொழுது சீனப்
பொருள்களைப் புறக்கணிக்கிறோம் என நாடெங்கும் நாடகம் நடத்தித் தங்களுடைய போலித்
தேசப்பற்றை வெளிக் காட்டி வருகின்றனர். இவர்களுடைய தற்சார்புக் கொள்கையும் நாட்டுப்
பற்றும் உண்மையானால் சீனப் பொருள்களை மட்டுமல்ல, அமெரிக்க, ஐரோப்பிய, ஜப்பானியப்
பொருள்களையும் புறக்கணிக்க வேண்டும். மேலும் இன்று ஆட்சியில் உள்ளவர்கள்
இவர்கள்தான். தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்நியப் பொருள்களுக்கும்
மூலதனங்களுக்கும் தடை விதிக்க முடியும். ஆனால் இவர்கள் அதைச் செய்யப் போவதில்லை.
இவர்கள் சீனப் பொருள்களை எதிர்த்துப் போராட்டம் நடத்திக்
கொண்டிருக்கும்போதுதான் இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
பாப்டே நாக்பூரில் பா.ஜ.க. பிரமுகரின் ஐம்பது இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹார்லி
டேவிட்சன் என்ற அமெரிக்க சொகுசுப் பைக்கில் அமர்ந்து “போஸ்” கொடுத்துக்
கொண்டுள்ளார். இதை விட வேறு எதுவும் இவர்களுடைய தற்சார்புக் கொள்கையின்
போலித்தனத்தை அம்பலப்படுத்த முடியாது.
ஒரு பக்கம் அந்நிய நாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கு இந்த
நாட்டில் உள்ள அனைத்துத் தொழில்துறைகளையும் கட்டுப்பாடின்றி திறந்து விடுவது;
இன்னொரு பக்கம் தற்சார்பு எனப் பேசிப் போலியான நாட்டுப்பற்றைத் தம்பட்டம்
அடித்துக் கொள்வது இதுதான் இங்குள்ள
ஆட்சியாளர்களின் உண்மை முகம்- இரட்டை முகம்.
கீரியும் பாம்பும் சண்டை போடப் போகிறது என்று மக்களைக்
கூட்டி சந்தைகளில் தனது நாட்டு மருந்துகளை விற்பனை செய்து வரும் வியாபாரியை நாம்
பார்த்திருக்கிறோம். பாம்பும் கீரியும் சண்டை போடுவதை ஆவலோடு எதிர்பார்த்து மக்கள்
கூட்டம் கலையாமல் இருக்கும். ஆனால் இறுதி வரை சண்டை நடக்காது. ஆனால் வியாபாரி
வெற்றிகரமாகத் தனது தொழிலை நடத்திக் கொண்டிருப்பார். இங்கும் சீனப் பொருள்கள் புறக்கணிப்பு, தற்சார்பு என்ற அரசியல்
வியாபாரத்தை வியாபாரிகள் அமோகமாக நடத்திக்
கொண்டிருக்கின்றனர்.
- சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ்நாடு
கட்டுரை சிறப்பாக இருந்தது தோழர், ஆனால் உண்மையான தற்சார்பு என்றால் என்ன ?தீர்வு என்ன ?என்பது குறித்து விளக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.நன்றி தோழர்
ReplyDeleteஅரசியல் பொருளாதார ஆய்வுச் செறிவுள்ள பதிவு.
ReplyDelete