Skip to main content

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கவா மக்கள் வாக்களித்தார்கள்?


கொரோனா ஊரடங்கு நிலையைப் பயன்படுத்திக் கொண்டு இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் முதலாளிய வர்க்கத்தினரின் நலன்களுக்குத் தேவையான அனைத்துச் சட்டங்களையும் வேகவேகமாக நிறைவேற்றி வருகின்றனர். அவற்றிற்கு மக்கள் தங்களுடைய எதிர்ப்புகளைக் காட்ட முடியாமல் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு முடிந்து மக்கள் வேலைகளுக்குத் திரும்பும்போது இந்தியாவில் உள்ள பொதுத்துறைகள் அனைத்தும் இந்த நாட்டு முதலாளிகளின் கைகளிலும்  அந்நிய நாட்டு முதலாளிகளின் கைகளிலும் சென்றிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனெனில் அந்த அளவுக்கு வேகமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டு வருகின்றன.

இந்திய ரயில்வேத் துறை உலகிலேயே நான்காவது பெரிய  ரயில்வேத் துறை. இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் உருவாக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது.

இந்தத் துறையில் 109 வழித்தடங்களையும் 151 தொடர்வண்டிகளையும் தனியாருக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதை அண்மையில்  அறிவித்துள்ளது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் உள்ள ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகள், ரயில் எஞ்சின் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவற்றை விற்க ஏற்கனவே முடிவு செய்துள்ளது.  இவற்றுக்கு   அனைத்துத் தொழிற்சங்கங்களும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.

அதே போல நாட்டில் உள்ள  41 நிலக்கரிச் சுரங்கங்களைத் தனியாருக்கு விற்க இந்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்நிய முதலாளிகள் இவற்றில் 100 விழுக்காடு முதலீடு செய்யலாம். இவற்றில் எடுக்கப்படும் நிலக்கரியை யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம். அவற்றிற்கு விலை நிர்ணயம் செய்யப்பட மாட்டாது. சுரங்கத் தொழிலில் அனுபவம் இல்லாத நிறுவனங்கள் கூட முதலீடு செய்யலாம்.

இந்த முடிவை எதிர்த்து இந்தியாவில் உள்ள நிலகரிச் சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஜூலை 2 முதல் 4 முடிய மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. 40 இலட்சம் டன் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

ஏற்கனவே நாட்டில் உள்ள ஆறு விமான தளங்கள் அதானிக்கு விற்றுள்ளது இந்த அரசு. ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விலை பேசி வருகிறது. அது மட்டுமல்லாமல் துறைமுகங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பாதுகாப்பு, வானியல் ஆய்வு, அணு சக்தி என அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு அனுமதிப்பது என இந்த ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளி நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்திய முதலாளிகளின், அரசியல்வாதிகளின், அதிகாரிகளின் கறுப்புப் பணத்தைக் கைப்பற்றி, இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரின் கணக்கிலும் ரூபாய் பதினைந்து இலட்சம் போடுவோம் என்று வாக்குறுதி கொடுத்து வந்தவர்கள் இப்பொழுது ஆட்சியில் இருப்பவர்கள்.  வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவோம், ஊழலை ஒழிப்போம் என்று மக்களிடம் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள். அதை நம்பியே மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சியில் அமர்த்தினர்.

தாம் ஆட்சிக்கு வந்தால் பொதுத் துறைகளைத்  தனியார்மயமாக்குவோம்; முதலாளிகளுக்குச் சாதகமான சட்டங்களைக் கொண்டு வருவோம்  என்று கூறி மக்களிடம் அவர்கள் எப்பொழுதும் வாக்குக் கேட்டதில்லை. அதற்கு ஒப்புதல் பெறவும் இல்லை. 

ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு மக்கள் அவர்களை எதற்கு ஒப்புதல் அளித்து ஆட்சியில் அமர வைத்தார்களோ அதற்கு மாறாகச் செயல்படுகின்றனர். முதலாளிகளுக்கு ஆதரவாகவும் மக்களுக்கு எதிராகவும் சட்டங்களைக் கொண்டு வருகின்றனர். இது நம்பிக்கைத் துரோகமாகும்; மக்கள் விரோதச் செயலாகும்; ஜனநாயக விரோதச் செயலாகும்.

இவர்கள் தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் இந்தநாட்டின் வளங்கள் அனைத்தும் இன்னும் சிறிது காலத்தில் இந்த நாட்டு முதலாளிகளிடமும் அந்நிய நாட்டு முதலாளிகளிடமும்தான் இருக்கும் என்பதில் ஒரு சிறிதும் ஐயமில்லை.

இன்றைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காகவே பொதுத்துறைகளைத் தனியாருக்கு விற்பதாகச் சப்பைக் கட்டு கட்டுகிறார்கள் ஆட்சியாளர்கள். உண்மையில் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்குக் காரணம் முதலாளிய வர்க்கம்தான். இலாபத்தையே தமது குறிக்கோளாகக் கொண்டுள்ள முதலாளிய வர்க்கம் மக்களை ஒட்டச் சுரண்டி ஓட்டாண்டியாக்கியுள்ளது; மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாமல் ஆக்கியுள்ளது. ஒரு சிலரின் கைகளில் பெரும் செல்வங்களைக் குவித்துப் பெரும்பான்மை மக்களை வறிய நிலைக்குத் தள்ளியுள்ளது. அதனால் முதலாளிகள் அவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை விற்க முடியாத நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பொருளாதார மந்தத்தில் நாட்டைத் தள்ளியுள்ளனர்.

பொருளாதார மந்தத்தைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள கொரானாப் பெரும் தொற்று கொஞ்சநஞ்சம் இருந்த தொழில்துறை உற்பத்தியையும் முடக்கி விட்டது. இதுவரையிலும் பதினான்கு கோடி மக்கள் வேலை இழந்துள்ளனர். இந்த நிலை தொடர்ந்தால் இன்னும் பத்து கோடி மக்கள் வேலை இழப்பர் எனக் கருதப்படுகிறது. இந்த நிலை எதிர்பாராத அளவுக்கு மிகப் பெரும்பான்மையான மக்களை வறுமையிலும் ஏழ்மையிலும் வீழ்த்தி உள்ளது. சமூகத்தில் மேலும் பெரும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தில் நிலவும் இந்தப் பெரும் ஏற்றத்தாழ்வை நீக்காமல் பொருளாதாரச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியாது.

பொதுத் துறைகளைத் தனியார்மயமாக்குதல் மூலம்  இதற்குத் தீர்வு காண முடியாது. இன்றைய பொதுத் துறைகள் அனைத்தும் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இயங்கி வருகின்றன. அவற்றில் முதலாளிகளுக்குப் பதிலாக அதிகாரிகள் முதலாளிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். அவற்றின் நிர்வாகங்களில் தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பங்கும் இல்லை.

மேலும் பொதுத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்களைச் சலுகை பெற்ற தொழிலாளர்களாகப் பொதுத்துறைகள்  மாற்றியுள்ளன. பொதுத் துறைகள் மக்களுக்குச் சொந்தமானவை என்ற எண்ணம் அவற்றில் வேலை செய்யும் அதிகாரிகளுக்குமில்லை, தொழிலாளர்களுக்குமில்லை. மக்களும் பொதுத் துறைகளைத் தம் சொத்தாகக் கருதுவதில்லை. அதனால்தான் பொதுத் துறைகளைத் தனியார்மயமாக்கும்போது அவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மட்டும் தங்களுடைய நலன்கள் பாதிக்கப்படும் என்ற நிலையில் தனித்தனியாகப் போராடி வருகின்றனர். இது மக்களுடைய சொத்து, அதைக் காப்பாற்ற மக்கள் அனைவரையும் திரட்டிப் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதில்லை. 

இவ்வாறு தனித்தனியாகப் போராடுவதன் மூலம் தொழிலாளர்களால் பொதுத் துறைகளைக் காப்பாற்ற முடியாது. தொழிலாளர்கள் மக்களுடன் இணைந்து போராட வேண்டும். அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தத் துறைகளை மக்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப் போராட வேண்டும். தங்களுடைய நலன்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் அவர்கள் நாட்டில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள், அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், சிறு உடைமையாளர்கள், வறிய ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் அணி திரட்டிப் போராட வேண்டும்.

பொதுத்துறைகளை மட்டுமல்லாமல் தனியார் முதலாளிகளின்  பெரும் கார்பொரேட் நிறுவனங்களையும் பெரும் பண்ணையார்களின் நிலங்களையும்   சமூக உடைமையாக்க வேண்டும். தனி முதலாளிகளின் இலாப நோக்கத்திற்காக அல்லாமல் மக்களின் தேவைகளுக்காகத் திட்டமிட்டு உற்பத்தி செய்யும்  உற்பத்திமுறையைக் கொண்டு வர வேண்டும். ஒட்டு மொத்த சமூக உற்பத்தியின் பயன்களை ஒட்டு மொத்த சமூகமும் பகிர்ந்து கொள்ளும் ஒரு சமூக அமைப்பு –சோசலிச சமூக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.  அதன் மூலமே இங்கு நிலவும் ஏற்றத் தாழ்வைப் போக்க முடியும். தொழிலாளி வர்க்கம் இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற மக்களை அணி திரட்ட வேண்டும்.  

                                     சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

                                                 தமிழ்நாடு. 

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...