மக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா? கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று.
அண்மைக் காலங்களில் அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயல்வீரர்கள், திரைப்படத் தயாரிப்பாளர், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள், மற்றும் இதழியலாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதும், சிறைப்படுத்தப்படுவதும், பிணை மறுக்கப்படுவதும், மருத்துவ உதவிகள் நிராகரிக்கப்படுவதும், சிறையில் அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படாமல் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றன.
இந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன?
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் (இ.த.ச.) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:
‘இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பெற்ற அரசினை எழுத்து, சொல், சைகை, அல்லது பார்க்கக்கூடிய சாதனங்கள் மூலமாக, அல்லது வேறுவகையில், வெறுப்புக்கு அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்குகிற, அல்லது அரசுக்கு எதிராக அதிருப்தியைக் கிளறுகிற ஒருவர் ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுவார் அல்லது மூன்று ஆண்டுகள் வரையில் நீடிக்கக்கூடிய சிறைத் தண்டனையுடன் அபராதம் சேர்த்துத் தண்டிக்கப்படுவார் அல்லது அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுவார்’
இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றம் தொடர்பான சட்டத்தின் வரலாற்றுப் பின்னணி
இந்தச் சட்டம் 1837 இல் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரும் அரசியல்வாதியுமான தாமஸ் மெகாலேயால் வரைவு செய்யப்பட்டது. ஆனால் 1860 இல் இந்தியத் தண்டனைச் சட்டம் இயற்றப்பட்ட போது காரணமின்றிக் கைவிடப்பட்டது.
1870 இல், அந்த நேரத்தில் எதிர்ப்பை நசுக்குவதற்கு ஒரு திருத்தத்தின் மூலம் இந்தியத் தண்டனைச் சட்டத்தில் மீண்டும் சர் ஜேம்ஸ் ஸ்டீபன் என்பவரால் மீண்டும் சேர்க்கப்பட்டது.
பின்னர் 1898 ல் மாற்றியமைக்கப்பட்டது. பிரிட்டனின் சதிக் குற்றச் சட்டம் 1848, நிரந்தர வடிவங்களில் அவதூறுக்கு எதிரான பொதுச் சட்டம், அரசெதிர்ப்புச் சொற்களுக்கான ஆங்கிலேயச் சட்டம் ஆகியவை இதன் ஊற்றுக் கண்கள் ஆகும். தற்போது இந்தச் சட்டம் பிரிட்டனில் ஒழிக்கப்பட்டுவிட்டது. 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதற்குக் கொண்டுவரப்பட்ட சட்டம் இது. ஆனால் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்தியாவில் இன்னும் தொடர்கிறது.
இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பற்றி அறிந்தவர்கள் யாரும் அரசெதிர்ப்பு தொடர்பான சட்டத்தை பிரிட்டிஷார் எவ்வளவு மோசமாகப் பயன்படுத்தினார்கள் எனபதை நன்கு அறிந்துகொண்டிருப்பார்கள். பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்திய விடுதலைப் போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு நசுக்குவதற்கு முயற்சி செய்தார்கள்; இந்திய விடுதலைப் போராட்டத்தின் செயல்வீரம் கொண்ட இலட்சியவாதிகளின் எதிர்ப்புக்குப் பதிலடியாக அவர்கள் மீது அரசெதிர்ப்புக் குற்றத்தை சுமத்தினார்கள்.
பேச்சுரிமையும், கருத்து வெளியிடும் உரிமையும், அரசெதிர்ப்பும்
இந்தியாவின் குடிமக்கள் அனைவர்க்கும் பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் இருக்கிறது என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது. நிலவும் அரசாங்கக் கட்டமைப்புக்களையும் கொள்கைகளையும், நிர்வாகத் திட்டங்களையும் கறாராகக் கண்டிப்பதற்கான பாதுகாப்பும் வேறு அமைப்பு முறையைப் பின்பற்ற ஆலோசனை தெரிவிப்பதற்கும் பரிந்துரைப்பதற்குமான பாதுகாப்பும் சேர்ந்ததே பேச்சுரிமையும் கருத்து வெளியிடும் உரிமையும் ஆகும். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் அச்சு ஊடகம் மூலமாகவோ மின்னணு ஊடகம் மூலமாகவோ தன்னுடைய கருத்தை வெளியிடுவதற்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய உரிமை இருக்கிறது, என்று இந்திய அரசியல் சட்டப் பிரிவு 19 (1) அ கூறுகிறது.
இந்தியாவில் அரசெதிர்ப்புக் குற்றசாட்டு தொடர்பான முக்கிய வழக்குகள்
அரசெதிர்ப்புக் குற்ற வழக்குகளில் தேசிய செய்தித்தாள்களின் ஆசிரியர்கள் மீது சுமத்தபட்ட வழக்கு முதலாவதாகும், அது 1891 ல் விசாரணைக்கு வந்த ஜோகிந்தர் சந்திர போஸ் வழக்காகும். அதைத் தொடர்ந்து பாலகங்காதர திலகர் இக்குற்றச் சாட்டின் பேரில் வழக்கு விசாரணைக்கு உள்ளானார். அடுத்து மிக முக்கியமான வழக்கு மகாத்மா காந்தி, சங்கரலால் ஹேங்கர், ஆகியோர் மீது 1922 ல் யங் இந்தியா இதழில் அரசுக்கு எதிராக எழுதியதற்கும் வெளியிட்டமைக்கும் இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கேதார்நாத் எதிர் பிகார் அரசு (AIR 1962 SC 955; 1962 SUPP.(2) SCR 769); இந்த மேல்முறையீட்டு வழக்கில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 ஆகியவை இந்திய அரசியல் சட்ட பிரிவு 19 (1) (a) க்கு முரணானவையா என்பது இவ்வழக்கின் முக்கியக் கேள்வியாக இருந்தது.
குற்றச்சாட்டுக்குரிய பேச்சில் இடம்பெற்ற வாசகங்கள் “இன்று, குற்றப் புலனாய்வுத் துறை (CID) நாய்கள் பரூனியைச் சுற்றித் திரிந்துகொண்டிருக்கின்றன. பல அதிகாரி நாய்கள் இந்தக் கூட்டத்தில் கூட உட்கார்ந்திருக்கின்றன. இந்திய மக்கள பிரிட்டிஷ்காரர்களை இந்த நாட்டில் இருந்து விரட்டியடித்து விட்டு இந்தக் காங்கிரஸ் குண்டர்களுக்கு வாக்களித்துத் தேர்ந்தெடுத்து வண்டியில் உட்கார வைத்துள்ளார்கள். இன்று இந்தக் காங்கிரஸ் குண்டர்கள் மக்களின் தவறுகளால் வண்டியில் உட்கார்ந்திருக்கிறார்கள். நாம் பிரிட்டிஷாரை விரட்டியடித்த போதே, இந்தக் காங்கிரஸ் குண்டர்களையும் விரட்டியடித்திருக்க வேண்டும்..” என்பதாகும்.
ஏராளமான வாய்மொழி சாட்சியங்களைப் பதிவு செய்த பிறகு, விசாரணை குற்றவியல் நடுவர் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 124A மற்றும் 505 இரண்டின் கீழும் குற்றவாளிகளுக்கு ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தார். குற்றவாளிகள் பாட்னா உயர்நீதி மன்றத்தில் செய்த மேல் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டு கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இறுதியாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124A அரசியல்சட்ட ரீதியாகச் செல்லத்தக்கது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரிவு பேச்சுரிமை கருத்துரிமை ஆகிய அடிப்படை உரிமைகளைக் கட்டுபபடுத்தினாலும் கூட, அந்தக் கட்டுப்பாடுகள் பொது ஒழுங்கின் நலனுக்கானவை, அவை அடிப்படை உரிமைகளின் மீது சட்டரீதியாக அனுமதிக்கக் கூடிய தலையீட்டின் வரம்புக்குள் உள்ளவை என்று அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. அந்த அடிப்படையில் இந்த கொடிய சட்டம் இன்னும் தொடர்கிறது.
காசுமீர் இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளப்பட்ட பிறகும் கூட காசுமீரின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை என்று கூறியதற்காக அருந்ததி ராயும் மாவோயிஸ்டு பிரசுரங்களை வைத்திருந்ததாக பினாயக் சென்னும் இக்குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது போன்று அண்மையில் விவசாயிகள் போராட்டத்தைத் தொடர்ந்து ஆறு வழக்குகளும், ஹதராஸ் கூட்டு வன்புணர்வைக் கண்டித்ததற்காக 22 வழக்குகளும் புல்வாமா தாக்குதலையொட்டி அரசை விமர்சித்தவர்களுக்கு எதிராக 27 வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. 30 விழுக்காடு வழக்குகளில் கொடிய சட்டங்களான தடா மற்றும் பொடா சட்டங்களின் மறுவடிவமான, சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் (UAPA) மற்றும் தேசியப் பெருமைக்குக் களங்கம் கற்பித்தல் குற்றச்சாட்டும் சேர்த்துக்கொள்ளப்படுள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் அரசியல் தலைவர்களையும் அரசாங்கங்களையும் விமர்சனம் செய்ததற்காக 10938 பேருக்கு எதிராக அரசெதிர்ப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 65 விழுக்காடு மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பதிவு செய்யப்பட்டவையாகும்.
அண்மையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான திசா ரவி என்ற இளம்பெண் விவசாயிகள் போராட்டத்தின் மீது சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்கான ஆவணங்கள் (டூல் கிட்) வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டி, மிகவும் மோசமான வகையில் எந்தவிதமான சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல், டெல்லி காவல்துறையினர் பெங்களூரு வந்து கைதுசெய்து, டெல்லிக்குக் கொண்டு சென்று, இந்தச் சட்டத்தின் கீழ் சிறையிலடைத்தனர்.
இந்த வழக்கில் பிணைகோரிய மனுவில் டெல்லி அமர்வு நீதிபதி தர்மேந்திர ரானே தனது தீர்ப்புரையில்,
‘ஜனநாயக நாட்டில் குடிமக்கள் அரசின் மனச்சாட்சியைக் காப்பவர்களாக உள்ளனர், அரசின் கருத்துக்களோடு மாறுபடுவதினாலேயே அவர்களைச் சிறையில் தள்ளமுடியாது. அரசை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல. அரசியல் சாசனத்தை உருவாக்கிய நமது அரசியல் சாசன நிறுவனர்கள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு உறுதியளித்துள்ளனர்’
இந்த வழக்கில் திசா ரவி வாதாடிய முறை, 1922 ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மகாத்மா காந்தியின் மீது இக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது அவர் தெரிவித்த பின்வரும் கூற்றினை நினைவுபடுத்துகிறது:
“நிலவும் அரசாங்க அமைப்பு முறை மீது வெறுப்புக் கொள்ளுமாறு மக்களிடம் போதிப்பது ஏறத்தாழ எனக்கு மிகப்பெரிய விருப்பத்துக்குரிய ஒன்றாக ஆகிவிட்டது என்ற உண்மையை எந்த வகையிலும் இந்த நீதிமன்றத்திடமிருந்து மறைக்க நான் விரும்பவில்லை. (அரசாங்கத்தின் மீது) பாசத்தை உண்டாக்கவோ அல்லது சட்டத்தின் மூலம் ஒழுங்குபடுத்தவோ முடியாது... குடிமக்களின் சுதந்திரத்தை நசுக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் அரசியல் பிரிவுகளில் இது (124 A) தலையாய கொடூரமான சட்டமாக இருக்கிறது...”
மேலும், “மக்களால் மிகவும் நேசிக்கப்பட்ட நாட்டுப்பற்றாளர்களில் சிலர் இந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்” என்பதால் இந்தச் சட்டத்தின் கீழ் தாம் குற்றம் சாட்டப்பட்டதைப் பெருமிதமாகக் கருதுவதாகவும் காந்தி கூறினார்.
இந்த, 124 அ, சட்டம் “பெருமளவுக்கு ஆட்சேபகரமானது, மிகவும் வெறுக்கத்தக்கது அதை எவ்வளவு விரைவில் கைவிடுகிறோமோ அந்த அளவுக்கு நல்லது” என்று முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியுள்ளார்.
அப்படியானால் நமது சட்டப் புத்தகத்தில் இந்தச் சட்டப்பிரிவு இன்னும் ஏன் இருந்துவருகிறது? நமது சிந்தனையாளர்களும் சமூகச் செயல்பாட்டாளர்களும் அவர்கள் அனுதாபம் கொண்டுள்ள ஒரு சித்தாந்தம் அல்லது கருத்தினை வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்காக அவர்களை அச்சுறுத்தவும் வழக்கு விசாரணையில் துன்புறுத்தவும் இந்தச் சட்டம் ஏன் பயன்படுத்தப்படுகிறது?
இந்திய அரசியல் அமைப்பின் குறைபாடுகளையும் அரசின் கொளகைகளையும் திட்டங்களையும் விமர்சிப்போரும் மாற்று அரசியல் அமைப்பிற்கான கருத்துக்களை முன்வைப்போரும் தொடர்ந்து இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுச் சிறைவைக்கப்படுவது இன்றளவும் தொடர்கிறது.
பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கம் தன்னுடைய அடிமைகளை அடக்கி ஒடுக்கி வைப்பதற்காகக் கொண்டு வந்த கொடூரமான சட்டம் இது. சிறுபான்மையினராக இருந்த அந்நிய நாட்டைச் சேர்ந்த ஆதிக்கவாதிகள் பெரும்பான்மையாக இருந்த அடிமைகளை அடக்கி ஒடுக்கவும், அச்சுறுத்திப் பணிய வைக்கவும் கொண்டு வரப்பட்ட மக்கள் விரோதச் சட்டம் இது. ஆனால் சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டில் ஆண்டைகளும் அடிமைகளும் இல்லாத ஒரு நாட்டில், அனைவரும் சுதந்திரமான, சம உரிமை கொண்ட குடிமக்களைக் கொண்ட ஒரு நாட்டில், அனைவரும் இந்த நாட்டு மக்களின் நலன்களிலும் வாழ்விலும் அக்கறை கொண்ட ஒரு நாட்டில், ஆண்டைகளைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லாத ஒரு நாட்டில் இந்த மக்கள் விரோதச் சட்டம் தொடர்ந்து இருக்க வேண்டிய அவசியம் என்ன?
சுதந்திரத்திற்குப் பிறகு இங்கு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த சிறுபான்மையான ஆளும் முதலாளிய வர்க்கம் பெரும்பான்மையாக உள்ள மக்கள் அனைவரையும் அடிமைகளாகப் பார்க்கிறது; இந்த நாடும் அதில் உள்ள வளங்களும் தனக்கு மட்டுமே சொந்தம் எனக் கருதுகிறது. ஆனால் தமது நலனே நாட்டின் நலன் எனக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறது. உண்மையில் மக்களின் நலனுக்கான கருத்துகளை தமது ஆட்சிக்கு எதிரான, தனது சுரண்டலுக்கு, எதிரான கருத்துகளாகப் பார்க்கிறது. பயப்படுகிறது. மக்கள் நலன்களுக்கான கருத்துகள் மக்களிடம் பரவக் கூடாது என்பதற்காக, அத்தகைய கருத்துகளைப் பரப்பும் மக்களுக்கு எதிராக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பயன்படுத்திய அதே கொடூரமான, மக்கள் விரோதச் சட்டத்தை இன்றும் பயன்படுத்தி வருகிறது.
இந்திய விடுதலைப் போராட்டத்தை நசுக்குவதற்கு காலனிய பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்திய ஒரு சட்டத்தை, இப்போது இந்தியாவின் சொந்த மக்களின் குரல்வளைகளை நெரிப்பதற்கு சுதந்திரமாகக் கருத்து வெளியிடுவதைத் தடுப்பதற்கு, அரசமைப்புக்கு மாற்றான ஒரு அமைப்பை முன்மொழிவதை, அதற்கு ஆதரவாகக் கருத்து வெளியிடுவதைத் தடுப்பதற்கு, இந்திய அரசு தக்கவைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது. இந்த நாடு ஆளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சொந்தமில்லை, தமக்குச் சொந்தமானது என்பதை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும்.அதன் மூலம் இத்தகைய மக்கள் விரோதச் சட்டங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
அரசின் மக்கள் விரோத கொள்கைகளையும் நடைமுறைகளையும் விமர்சிக்கும் சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் ஜனநாயகத்திலும் நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் இந்த மக்கள்விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை உடனடியாக அகற்றக் குரல் கொடுக்கவேண்டும்.
மக்கள்விரோத, தேசவிரோத இ.த.ச. 124 அ பிரிவை அகற்றிட அணிதிரள்வோம்!
· கருத்துரிமையைப் பாதுகாக்க ஒன்றுபடுவோம்!
- நிழல்வண்ணன்
தகவல் ஆதாரம்: countercurrents.org, India Today, scroll.in. People’s dispatch, EPW, researchgate
நன்று . உரிமை போராடி தான் பெற்றாக வேண்டும்...!!!
ReplyDelete