கொரோனா என்னும் பெரும் தொற்றுப் பூதம் மரண பயத்தை எங்கும் விதைத்துள்ளது. தந்தையை, தாயை, கணவனை, மனைவியை, சகோதரனை, சகோதரனை, குழந்தைகளை, நண்பர்களை என இலட்சக் கணக்கில் கொரொனோ பூதம் பலி கொண்டு வருகிறது. நாடெங்கும் மக்கள் மரண பயத்தில் மூழ்கியுள்ளனர்.
உலக நாடுகளின் உதவிகளும் இங்குள்ள முதலாளிகளின் பகற்கொள்ளைகளும்!
இந்திய ஒன்றியத்தில் கோர தாண்டவமாடும் கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும், மக்கள் அமைப்புகளும், தனி நபர்களும் மருந்துகளையும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஆக்சிஜன் உருளைகளையும், நிதியையும் அனுப்பி வருகின்றன.
ஆனால் இந்த நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முதலாளிகளும் மருந்துகளையும் மருத்துவ உதவிக் கருவிகளையும் தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை விநியோகிக்கும் வணிக நிறுவனங்களும் நிலவும் மரண பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த நாட்டு மக்களையே ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடித்து வருகின்றன.
தனியார் மருத்துவமனைகளும் கார்பொரேட் மருத்துவமனைகளும் கொரொனோ சிகிச்சைக்கு என்று ரூபாய் மூன்று இலட்சத்திலிருந்து இருபத்தைந்து இலட்சம் வரை நோயாளிகளிடமிருந்து பகற்கொள்ளை அடித்து வருகின்றன. சிறு நகரத்திலிருக்கும் தனியார் மருத்துவமனைகள் கூட பல இலட்சங்களைக் கட்டணமாக வசூலித்து வருகின்றன.
பல இலட்ச ரூபாயைக் கட்டணமாகக் கட்டக் கூடிய நிலையில் உள்ள நோயாளிகளை மட்டுமே தனியார் மருத்துவ மனைகள் சிகிச்சைக்காக ஏற்றுக் கொள்கின்றன. நடுத்தர வர்க்கங்கள் தங்களது சேமிப்புகளை இழந்தும் சொத்துக்களை விற்றும் சிகிச்சை பெற வேண்டிய அவல நிலையில் உள்ளனர். நோயிலிருந்து மீண்டாலும் எல்லாவற்றையும் இழந்த நிலையில் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகவே உள்ளது. சொந்த சேமிப்பும் சொத்துக்களும் இல்லாத மக்கள் என்ன செய்வார்கள்? கொரோனாவிற்குப் பலியாவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களை நம்பியுள்ள குடும்பங்களின் எதிர்காலம் என்னாவது?
அது மட்டுமல்லாமல், மருந்துகளின் விலையையும் மருத்துவ உதவிக் கருவிகளின் விலையையும் பன்மடங்காக உயர்த்தி வணிகர்கள் கொள்ளையடித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் மார்ச் மாதம் ரூ. 700 க்கு விற்கப்பட்ட ஆக்சிமீட்டரின் விலை இன்று ரூ..3000க்கும், ரூ.500க்கு விற்கப்பட்ட உடல் வெப்பத்தை அளவிடும் கருவி இன்று ரூ. 2000 வரையிலும் விற்கப்படுகிறது.
ஐந்து லிட்டர் உள்ள ஆக்சிஜன் செறிவூட்டி ஒரு மாதத்திற்கு முன்பு ரூ.40000 முதல் ரூ.60000 வரையிலும் விற்கப்பட்டது, இன்று அது ரூ. 95000 முதல் ரூ. 1.2 இலட்சம் வரையிலும் விற்கப்படுகிறது.
சாதாரண நாட்களில் ரூ.4000 முதல் 5000 வரையிலும் விற்கப்பட்ட ஆக்சிஜன் உருளை இன்று ரூ.35000 முதல் 40000 வரைக்கும் விற்கப்படுகிறது.
பல ஸ்டீராய்ட் மருந்துகள் மூன்று மடங்கு விலையேற்றப்பட்டுள்ளன. முன்பு ரூ.7௦௦ முதல் 1500வரையிலும் விற்கப்பட்டு வந்த ரெம்டெசிவேர் மருந்து இன்று கள்ளச் சந்தையில் ரூ.30000 வரையிலும் விற்கப்படுகிறது. இத்தனைக்கும் அந்த மருந்து கொரோனாவிலிருந்து காப்பாற்றும் மருந்து அல்ல என்று அரசு மருத்துவர்களும் அரசும் அறிவித்தாலும் தொடர்ந்து அந்த மருந்தை தனியார் மருத்துவமனைகள் பரிந்துரைத்து வருகின்றன. மக்களும் தேவையில்லாத அந்த மருந்துக்காக பல்லாயிரம் ரூபாய்களை இழந்து வருகின்றனர். பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் அந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைப்பதைத் தடை செய்ய வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தனியார்கள் கொள்ளையடிப்பதற்கு அரசு துணை போகிறது.
உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவின் நிலை கண்டு இரங்கி பல்வேறு உதவிகளையும் செய்து வரும் நிலையில், சொந்த நாட்டு மக்கள் கொத்துகொத்தாகச் சாவக் கண்டும் அவர்களுக்கு நியாயமான, குறைந்த செலவில் மருத்துவம் செய்ய முன்வராமல், அவர்களிடமிருந்து முடிந்த வரை எவ்வளவு கொள்ளையடிக்க முடியுமோ அந்த அளவுக்குக் கொள்ளையடித்து வருகின்றன தனியார் மருத்துவமனைகளும், மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும் மருத்துவ உதவிக் கருவிகளின் வணிக நிறுவனங்களும்.
நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல காட்டாட்சி!
ஒரு நாட்டில் ஒவ்வொரு சேவைக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் நியாயமான ஒரு விலை வைப்பது இயல்பே. அந்த விலை நியாயமானதா இல்லையா என்று கண்காணிப்பது அரசின் கடமை. அந்தக் குறிப்பிட்ட விலைக்கும் மேலாக விற்காமல் கண்காணிப்பதும், கொள்ளை இலாபத்தைத் தடுப்பதும் ஒரு அரசின் இன்றியமையாத பணியாகும். சட்டத்தின் ஆட்சி நடக்கும் நாட்டில் இதுதான் நடக்கும். ஆனால் உயிர் பயத்தில் இருக்கும் மக்களின் நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மருத்துவமனை முதலாளிகளும் மருத்துவ வணிக நிறுவனங்களும் தங்கள் விருப்பம் போலப் பகற்கொள்ளை அடித்து வருகின்றன. அவர்களின் பேராசைக்கும் கொள்ளைக்குக்கும் எல்லை என்பதே இல்லை. ஒரு மருத்துவமனை கொரோனாவிற்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ள போதும், அந்தக் கட்டணத்தைத்தான் மருத்துவமனைகள் வசூலிக்கின்றனவா எனக் கண்காணிப்பதில்லை. மருத்துவ உதவிக் கருவிகள் குறிப்பிட்ட விலைக்குத்தான் விற்கப்படுகின்றனவா எனக் கண்காணிப்பதில்லை. இங்கு வலுத்தவர்களும் வாய்ப்புக் கிடைத்தவர்களும் எவ்வளவு வேண்டுமானாலும் வலுவற்ற, எளிய மக்களைக் கொள்ளையடித்துக் கொள்ளலாம். இங்கு அரசு என்ற ஒன்று இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை.. இங்கு நடப்பது காட்டாட்சி.
பல்வேறு அதிகார அமைப்புகளையும் கண்காணிப்பு அமைப்புகளையும் கொண்டுள்ள ஒரு அரசாங்கத்திற்கு இந்தப் பகற்கொள்ளைகளைத் தடுப்பது ஒரு பெரிய விசயமே இல்லை. மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள ஒரு அரசு அதைத்தான் செய்யும். ஆனால் இந்தப் பகற்கொள்ளையர்களின் பிரதிநிதிகளாகவும் கூட்டுக் களவாணிகளாகவும் இங்குள்ள ஆட்சியாளர்கள் இருக்கும்போது எவ்வாறு அந்தக் கொள்ளையைத் தடுப்பார்கள்?
மோடியும் அவருடைய துதிபாடிகளும் “கொரோனாவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள யோகாசனம் செய்யுங்கள்,” “மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்,” “கோமியம் குடியுங்கள்,” துளசிதாஸின் இராமாயணம் படியுங்கள்” என்று உபதேசம் செய்து வருகின்றார்களே தவிர, தனியார் மருத்துவமனைகளிடம் கட்டணத்தைக் குறையுங்கள் என்று கூறுவதில்லை. தங்களிடம் உள்ள அதிகாரத்தைக் கொண்டு அந்தக் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை.
ஆனால் மக்கள் இந்த அநியாயத்தை எதிர்த்துப் போராடும்போது மட்டும் அதுவரையிலும் கண்ணுக்குத் தென்படாத அரசு மக்களின் போராட்டத்தை ஒடுக்க முன் வந்து நிற்கும்.
கார்பொரேட் சாமியார்களின் ஆன்மீகப் போலித்தனம்!
“இந்தியா ஆன்மீகத்தில் சிறந்த நாடு. உலகிற்கே அது ஆன்மீக வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.” என்று வாய்ச் சவடால் அடிக்கும் கார்பொரேட் சாமியார்கள் இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள் என்று தெரியவில்லை. பண வெறி பிடித்து அலையும் தனியார் மருத்துவ முதலாளிகளுக்கும் மருத்துவ வணிக நிறுவன முதலாளிகளுக்கு அந்தச் சாமியார்கள் “நீங்கள் பரலோகத்தை அடைய வேண்டுமானால் இக லோகத்தில் பண வெறி பிடித்து அலையாதீர்கள். ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் இலவசமாக மருத்துவம் செய்து பரலோகத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று ஆன்மீக போதனை செய்து அவர்களை நல்வழிப்படுத்த இதை விட நல்ல நேரம் அவர்களுக்கு வேறு கிடைக்குமா? ஆனால் அவர்கள் அதை செய்யமாட்டார்கள். ஏனென்றால் இந்தச் சாமியார்களின் சுகபோக வாழ்வே அந்த முதலாளிகளை நம்பித்தானே இருக்கிறது.
தம்முடைய எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்!
கடந்த எழுபதாண்டுகளாக அதிகாரத்தில் உள்ள முதலாளிய வர்க்கம் மக்களுடைய உழைப்பிலிருந்து உருவான செல்வம் அனைத்தையும் கொள்ளையடித்துத் தம்முடைய இலாபங்களையும் வசதிகளையும் பெருக்கிக் கொண்டதே தவிர மக்களுக்குத் தேவையான அடிப்படை மருத்துவ உள்கட்டமைப்புகளை அரசின் சார்பில் போதிய அளவு உருவாக்கவில்லை. அதனால் பெரும்பான்மையான மக்கள் தனியார் மருத்துவமனைகளை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. அவற்றின் பகற்கொள்ளைக்குத் தொடர்ந்து பலியாக வேண்டியிருக்கிறது. அதன் விளைவாக, கொரோனாப் பெரும் தொற்றை எதிர் கொள்ள முடியாமல் மக்கள் இன்று கையறு நிலையில் உள்ளனர்.
துயரமும் சவால்களும் நிறைந்துள்ள இந்த நிலையில் மக்கள் தங்கள் நிகழ்கால வாழ்வையும் உயிரையும் எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் இப்பொழுது உள்ள நிலைமையை மாற்றி அமைக்க வேண்டும். அதற்கு,
*கொள்ளையடிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு இங்கு முடிவு கட்டப்பட வேண்டும்.
*அனைத்து மருத்துவ மனைகளும், மருந்துகளையும் மருத்துவ உதவிக் கருவிகளையும் தயாரிக்கும் அனைத்து நிறுவனங்களும் தேச உடைமையாக்கப்பட வேண்டும்.
*அனைத்து மக்களுக்கும் கட்டணமில்லா மருத்துவ வசதி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
இவற்றை நிறைவேற்றுவதன் மூலமே மக்கள் தங்களுடைய துயரமான நிலையிலிருந்து விடுபட முடியும். மக்கள் தங்களுடைய போராட்ட வலிமையின் மூலம் இவற்றைச் சாதிக்க வேண்டும் அதற்காக அணி திரள வேண்டும். தம்முடைய எதிர்காலத்தை மக்களே தீர்மானிக்க வேண்டும்!
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்,
தமிழ் நாடு.
Comments
Post a Comment