Skip to main content

பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் சீனா!

சீனாவின் இரண்டாவது மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான எவர்கிரேண்ட் 300 பில்லியன் டாலர் கடனை (வங்கி, கடன் பத்திரங்கள், தொழிலாளர்கள், ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு) திரும்ப செலுத்த இயலாமல் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடன்களை முதலீடுகளாகவும், முதலீடுகளைக் கடன்களாகவும் மீண்டும் மீண்டும் சுழற்சி செய்வதன் மூலமும், சொத்தின் மதிப்பை மிகைப்படுத்துவதன் மூலமும் இத்தகைய நெருக்கடிகள் தோன்றுகின்றன. 2008 இல் அமெரிக்காவில் ஏற்பட்ட பெரும் பொருளாதார நெருக்கடியின் பொழுது லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி சந்தித்த சிக்கல்களைப் போன்றும், 1990களில் ஜப்பானில் ஏற்பட்ட கட்டுமானத்துறை நெருக்கடி போன்றும் இந்த நெருக்கடி உள்ளதாக முதலாளித்துவப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நெருக்கடி கட்டுமானத் துறையில் ஏராளமான வேலை இழப்புகளை ஏற்படுத்துவதோடு, கட்டுமானத் துறையானது சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 சதவீதத்தைக் கொண்டிருப்பதால் உள்நாட்டு உற்பத்தியில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்டோஸ் நகரத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடிகள், கடைகள், பெரிய மால்கள், பெரிய அரங்கங்கள் ஆகியவை யாவும் பயன்படுத்தப்படாமல் வெறுமையாக உள்ளன. ஆள் அரவமற்று மயானம் போன்று இருப்பதால் இந்த நகரத்தை மக்கள் 'பேய் நகரம்' என அழைக்கின்றனர். இதே போன்று எண்ணற்ற நகரங்களில் கட்டிடங்கள் காலியாக உள்ளன. வீடுகள் வாங்குவது என்பது மிகவும் செலவினம் மிக்கதாக இருப்பதால் மக்களால் வாங்க முடியவில்லை, எனவே, ஐந்தில் ஒரு கட்டிடம் காலியாக உள்ளது. சீனாவின் 40 சதவீத மக்களின் வருவாய் மாதம் ஒன்றிற்கு 1000 யுவான்களுக்கும் (இந்திய மதிப்பில் ரூ.11700) குறைவாகவே உள்ளதால் அவர்களால் பெரும் தொகைகளைச் செலவழித்து வீடுகளை வாங்க முடிவதில்லை. கூலியுழைப்பு அடிமை முறையினால் சுரண்டப்பட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு வசதியின்றி அவதியுற்று வரும் நிலையில், அவர்களால் கட்டியமைக்கப்பட்ட குடியிருப்புகள் அவர்களுக்கே பயன்படுத்த முடியாத வகையில் அதன் உடைமைகள் மூலதன உடைமையாளர்களான ஒரு சிலரிடம் குவிந்துள்ளன.

இந்தப் பொருளாதார நெருக்கடியின் உண்மைக் காரணமானது கொரானா பெருந்தொற்று பேரிடரால் ஏற்பட்டதல்ல, மாறாக உற்பத்தி முறையின் தன்மையே இந்த நெருக்கடிகளுக்கு ஆணி வேராக உள்ளது. ஆனால் கொரானா பெருந்தொற்று நெருக்கடி அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்தியை மேலும் குறைத்துள்ளதால் கட்டுமானத் துறையில் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது

2010 ஆம் ஆண்டில் சீனாவின் வீட்டுக் கடன்களின் மதிப்பு 2 டிரில்லியன் டாலர்களாக இருந்தது. 2020 இல் அது 10 டிரில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. மேலும், மக்களின் செலவிடத்தக்க வருமானத்தில் கடனின் விகிதம் 130 சதவீதம் அதிகரித்துள்ளது. 60 சதவீத தொழிலாளர்கள் கிக் பொருளாதாரத்தையே சார்ந்துள்ளதால் தொழிலாளர்களின் வருமானம் குறைந்தும் நிலைத்தன்மை இல்லாததாயும் இருக்கும் அதே சமயம் குடியிருப்புகளின் விலை அதிகரித்து வருகின்றது. 2017 இல் கட்டுமான நிறுவனங்கள் கடன் பெறுவதற்கான வரையறைகள் மீது கட்டுப்பாடுகள் அதிகரித்ததால், மேலும் கடன் பெற்று தங்கள் வாழ்வை நீட்டித்துக் கொள்ள முடியாமல் நூற்றுக்கணக்கான சிறு கட்டுமான நிறுவனங்கள் திவாலாகின.

பான் டிசியா ஹோல்டிங் குழுமம், கடன் பத்திரங்களின் தொகையை திரும்பச் செலுத்த முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றது பார்ச்சூன் நில மேம்பாட்டு குழுமம் 813 மில்லியன் டாலர்கள் வட்டி மற்றும் கடன்களை திரும்பச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாக கடந்த மார்ச் மாதம் அறிவித்துள்ளது.

1949 அக்டோபர் புரட்சிக்குப் பின்பு 1950களில் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் சமூக நலத்திட்டம் என்ற அடிப்படையில் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் அல்லது அரசுகளால் ஒதுக்கீடு செய்கின்ற முறை அமல்படுத்தப்பட்டது. இதன்படி குடியிருப்புகளானது அரசுக்கு சொந்தமாக இருக்கும். தொழிலாளர்களின் வேலை, குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, பதவி ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. எனினும், இதிலும் ஏற்றத்தாழ்வுகளை உடனடியாகக் களைய முடியவில்லை, சில குறைபாடுகள் நீடித்தன. பதவிப் படிநிலை, பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டதாலும், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரிய தொழிற்சாலைகள் அளவிற்கு குடியிருப்பு வசதியை ஏற்படுத்தித் தர முடியாததாலும் குடியிருப்பு பிரச்சனையில் ஏற்றத்தாழ்வு நிலவியது

1970 களில் சீனா குடியிருப்புக்களை சமூக நலத் திட்டம் என்பதிலிருந்து மாற்றி சந்தைக்கான சரக்காக மாற்றியது. குடியிருப்பு சீர்த்திருத்தம் என்ற பெயரில் நிலங்களையும், வீடுகளையும் விற்பனைப் பொருளாக்கின. அப்பொழுது, பழைய குடியிருப்புகள்பழைய சமூக நலத்திட்டம்என்ற முறையிலும், புதிதாக கட்டப்படும் சந்தை விலையின் அடிப்படையிலான விற்பனை குடியிருப்புகள்குடியிருப்பு சீர்த்திருத்தத் திட்டம்என்ற பெயரிலும் இரண்டுவிதமான நடைமுறைகள் நிலவின.

கடன்களுக்கான வழிவகையை ஏற்படுத்தி தொழிலாளர்கள் தங்கள் குடியிருப்புக்களைத் தாங்களே கவனித்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. குடியிருப்புகளை கட்டுவதற்கான வேலையில் சீன முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் களம் இறங்கினர். இதன் மூலம் தொழிலாளர்கள் தங்களுக்கான வீடுகளைச் சந்தை விலையில் முதலாளிகளிடம் பெற்றுக் கொள்ளத் தள்ளபட்டனர். அரசு மற்றும் தொழிற்சாலைகளின் கட்டுபாட்டில் இருந்து வீடுகள் அதில் குடியிருந்த தொழிலாளர்களுக்கே அரசு சலுகை விலையில் வழங்கப்பட்டு அவர்களின் தனிச்சொத்துக்களாகின. இதன் மூலம் குடியிருப்பு பிரச்சனை என்பது சமூக பிரச்சனை என்பதிலிருந்து அது தனி நபர் பிரச்சனையாக மாற்றப்பட்டது. பணம் உள்ளவர்கள் சந்தை விலையில் தங்களுக்குப் பிடித்தமான வீடுகளை வாங்கிக் கொள்ளலாம். பணம் இல்லாதவர்கள் வீடற்று வாடகை குடியிருப்பிலோ அல்லது மோசமான குடியிருப்புகளிலோ தங்கி கொள்ளும் அவல நிலை ஏற்பட்டது.

இந்தக் குடியிருப்பு சீர்த்திருத்தங்கள் மெதுவாக நடைபெற்று வந்த நிலையில் 1998 இலிருந்து வேகமாக முடுக்கி விடப்பட்டது. அரசுசமூக நலத்திட்டம்என்ற அடிப்படையிலிருந்து முற்றிலும் துண்டித்துக் கொண்டது. இனிமேல், வீடு தேவைப்படுபவர்கள் சந்தையிலிருந்து மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைமை முழுமையாகக் கொண்டு வரப்பட்டது.

சீனா சோசலிசக் கட்டுமானத்திலிருந்து பின்வாங்கி முதலாளித்துவ தனியுடைமைக்குத் திரும்பியதால், குடியிருப்பு பிரச்சனை என்பது சமூகப் பிரச்சனை என்பதிலிருந்து தனிநபர் பிரச்சனையாக மாற்றப்பட்டது. பணபலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்கள் குடியிருப்புகளை கட்டிக் கொள்ளும் சுதந்திரம் வழங்கப்பட்டது. இதனால், சுரண்டப்படும் வர்க்கங்களான தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் மிக குறைந்த வருவாயைக் கொண்டு வீடற்ற நிலையில் அல்லது போதுமான வசதிகளற்ற வீடுகளில் இருக்க வேண்டியுள்ளது. கட்டுமான நிறுவனங்களால் கட்டப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வீடுகள் வாங்குவதற்கு மக்களிடம் வாங்கும் சக்தியின்றி அவை காலியாக உள்ளன. வீடுகளைக் கட்டுவதற்கு உழைப்பு சக்தியை செலுத்திய தொழிலாளர்கள் வீடுகளின்றி உள்ள அதே வேளையில், கட்டுமானத் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் முதலாளிகள் காலியாக கிடக்கும் வீடுகளின் உரிமையாளர்களாக உள்ளனர். முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கம் முதலாளிகளை மட்டும் நெருக்கடிக்குள் தள்ளவில்லை, அனைத்து மக்களையும் நெருக்கடிக்குள் தள்ளுகின்றது. இனிமேலும், இந்தக் கொடுமைகளைச் சகித்துக் கொண்டு வாழ முடியாது என்ற நிலையை நோக்கித் தள்ளுவதற்கான படிகளாக இந்த நெருக்கடிகள் அமைந்துள்ளன.

அடுத்த ஆண்டு (2022) பிப்ரவரியில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பெய்ஜிங்கில் நடைபெற உள்ளதால் காற்று மாசுபடுவதைக் குறைக்கும் வகையில் புகைகளை அதிகளவில் வெளியிடும் ஆலைகளின் உற்பத்திக்குக் கட்டுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. சீனாவின் வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள 62 நகரங்களில் காற்று மாசுப்பாட்டின் அளவைக் குறைக்கப் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 2.5 மைக்ரோமீட்டர் அளவிலான மிக நுண்ணிய நச்சுத் துகள்கள் ஒரு கனமீட்டருக்கு 75 மைக்ரோ கிராம் அளவிற்கு மேல் இருக்க கூடாது. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி முடியும் வரையில் இந்த அளவிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என சீன அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனால் இந்தப் பகுதிகளில் முக்கிய உற்பத்தியாக விளங்கக் கூடிய இரும்பு, அலுமினியம், எண்ணெய் சுத்திகரிப்பு, சிமெண்ட் மற்றும் நிலக்கரி உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. காற்றில் இருக்கக் கூடிய நுண்ணிய துகள்களாலான மாசுவின் அளவைக் குறைப்பதன் மூலம் பெரும் புகை மூட்டத்தைக் குறைக்க சீன அரசு இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. புகையை அதிகளவில் வெளியிடும் போக்குவரத்து சாதனங்கள் குறைக்கப்பட்டு அதற்குப் பதிலாக இரயில்கள் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் பசுமை ஆற்றல் ( Green Energy ) நிறுவனங்கள் திட்டமிட்டதை விட அதிகளவில் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. சூரிய ஒளி ஆற்றல் மின் சாதனங்கள், காற்றாலை மின் சாதனங்கள் முறையே 50%, 80% உற்பத்தியை அதிகரித்துள்ளன.

சீனாவின் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் மொத்த சந்தை மதிப்பு 123 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், சுற்றுலா தளங்கள், போக்குவரத்து ஆகியவற்றின் மூலம் முதலாளிகளுக்குப் பெருமளவில் வருவாய் கிட்டும். 654 பனி சறுக்கு வளையங்கள், 803 பனி சறுக்கு விடுதிகள் ஆகியவை புதியதாகக் கட்டப்பட்டுள்ளன. நகரங்களில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் வேலைகள் மூலமும் நிறுவனங்கள் பயனடைகின்றன.

ஒலிம்பிக் விளையாட்டிற்கு இண்டெல், பிராக்டர் அண்ட் கேம்பிள், கோகோ கோலா, டொயோட்டா, சாம்சங், ஃபானாசானிக் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் நிதியளிக்கின்றன. நிதியுதவி செய்யும் 10 முக்கிய வெளி நாட்டு நிறுவனங்களின் சீன சந்தை மதிப்பு 100 பில்லியன் டாலர் அளவிற்கு உள்ளது. கோகோ கோலா, பிராக்டர் அண்ட் கேம்பிள். இண்டெல், ஏர்பிஎன்பி, விசா ஆகிய அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனாவில் (திபெத், சிங்சியாங், ஹாங்காங்க்) மனித உரிமை மீறல்கள் நடப்பதால் ஒலிம்பிக் விளையாட்டிற்கு நிதியுதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் என அமெரிக்க அரசு மறைமுகமாக நெருக்கடி கொடுத்தாலும், இந்த நிறுவனங்கள் மனித உரிமைகளை விட இலாபமே முக்கியம் எனக் கருதி அமெரிக்க அரசின் கோரிக்கையை நிராகரித்து விட்டன.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நடக்கக் கூடிய இடங்களில் காற்றில் கலந்துள்ள மாசுபாட்டின் அளவை குறைக்க சீன அரசு எடுத்து வரும் முயற்சியின் விளைவால் மின்வெட்டும், அதனால் உற்பத்தி நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. நிலக்கரியை கொண்டு மின் உற்பத்தி செய்யும் மற்றும் நிலக்கரி கொதிகலன்களைப் பயன்படுத்தும் ஆலைகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன; அதனால் மின் உற்பத்தி குறைந்து வீடுகளுக்கு, பொதுப் பயன்பாட்டிற்கு மற்றும் ஆலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரத்தில் வெட்டு ஏற்பட்டுள்ளது. அன்றாடத் தேவைகளுக்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட மின்சாரம் இல்லாமல் சில நகரங்கள் தவித்து வருகின்றன. தெரு விளக்குகள் எரிவதில்லை. எண்ணெய் உற்பத்தி, உணவுப் பொருட்கள் தயாரித்தல், இரும்பு, அலுமினியம் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகள் உற்பத்தியில் சரிவை சந்தித்துள்ளன. அனைத்துத் தொழிற்சாலைகளும் மின் தட்டுபாட்டை எதிர்க்கொள்ள உற்பத்தியின் அளவை குறைக்குமாறு அரசு அறிவிக்கின்றது. சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் இதில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

காற்று மாசுபடுதலின் அளவைக் குறைப்பதற்காக தடாலடியான முடிவுகளை சீன அரசு செய்து வருகின்றது. இவ்வளவு ஆண்டுகளாக சீன முதலாளிகள் இலாப வேட்கைக்காக நிலம், நீர், காற்று ஆகிய வளங்களை நஞ்சாக்கி இயற்கை வளங்களைச் சீரழித்து வந்தனர். இந்த நஞ்சின் அளவு உச்சமட்டத்திற்கு சென்றுள்ளதால் அதிரடியாக காற்று மாசுபடுதலுக்கு காரணமான முக்கிய ஆலைகளின் உற்பத்திக்குச் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2021 - 25 ஆம் ஆண்டுவரையிலான ஐந்து ஆண்டுகளில் கார்பன் வெளியேற்றத்தை 18 சதவீதம் குறைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. இதனால் ஆற்றல் நுகர்வை உற்பத்தியாளர்களும் தனி நபர்களும் குறைக்க வேண்டும் என அரசு வலியுறுத்துகின்றது.

அதிகளவில் ஆற்றலைப் பயன்படுத்தும் ஆலைகள் மற்றும் அதிகளவில் கார்பனை வெளியேற்றும் ஆலைகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க 31 மாகாணங்களுக்கு சீன அரசு உத்திரவிட்டிருந்தது. ஆனால், ஆனால்,கடந்த ஆறு மாதங்களில் அது நிர்ணயித்த இலக்குகளை எந்த மாகாணமும் அடையவில்லை. எனவே, இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மாகாணங்களும் மேற்கொள்ள சீன அரசு உத்திரவிட்டுள்ளது. சீன அரசின் நிர்ப்பந்தம் காரணமாக, மீதமுள்ள ஆறு மாதங்களில் அது நிர்ணயித்துள்ள இலக்கை அடைய மாகாணங்கள் மின் நுகர்வின் மீது கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடக்கி உள்ளன.

இதனைக் காரணமாகக் கொண்டு முதலாளிகள் உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்தியுள்ளனர். பெருமளவில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால் மக்கள் சிரமப்படுவதோடு, ஆலைகளின் உற்பத்திக் குறைப்பால் தொழிலாளர்கள் வேலையிழந்து வருமானம் இழந்து வருகின்றனர். எரிபொருளுக்கான மாற்று எதனையும் உருவாக்காமல் மின் உற்பத்தியை முடக்குவது என்பது அவசர கதியிலான செயலாகும் எனவும், இது சீனப் பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கும் என வங்கியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

மற்றோர்புறம் நிலக்கரியின் விலை மிக உச்சத்தை தொட்டுள்ளதால் மின் உற்பத்தி பெருமளவில் பாதித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை அரசு உயர்த்தாத நிலையில் முக்கியமான மூலப்பொருளான நிலக்கரியின் விலை உயர்வால் மின் உற்பத்தி ஆலைகள் இலாபம் குறைந்து வருவதால் தொடர்ந்து உற்பத்தி செய்ய மறுத்து வருகின்றன. தங்கள் இலாபத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் மின்சாரத்தின் விலையைத் தீர்மானிக்க முடியாததால் அவை உற்பத்தியைக் குறைக்கின்றன. இதனால் சீனாவில் அனைத்துப் பகுதிகளிலும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. சீன அரசு மின் உற்பத்தி ஆலைகளுக்கு மானியங்களை அளித்தாலும் அவை மின் விநியோகத்தையும், கட்டணங்கள் நிர்ணயிப்பதையும் சந்தையின் கட்டுப்பாட்டில் சுதந்திரமாக விட வேண்டும் எனக் கோருகின்றன.

68.5 சதவீத மின் உற்பத்தி நிலக்கரியையே ஆதாரமாக கொண்டுள்ளது. ஆண்டுதோறும் மின் பயன்பாட்டின் அளவு அதிகரித்து வரும் நிலையில் நிலக்கரியின் விலை உயர்வைக் காரணம் காட்டி மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்வதைக் கணிசமாக குறைத்து வருகின்றன. இதனால், மின் வெட்டானது அனைத்துப் பகுதிகளிலும் சுழற்சி முறையில் நடைமுறைபடுத்தப்பட்டு வருகின்றது. குளிர் காலத்தில் வடக்கு மாகாணங்களில் வரவிருக்கும் கடுங்குளிரைச் சமாளிக்க மின்சாரம் மிகவும் அவசியமானதாக உள்ள நிலையில், மின் தட்டுபாடு அங்கு வசிக்கும் 10 கோடி மக்களின் வாழ்வைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

மின் உற்பத்தி தனியார் கையிலும் அதன் விநியோகம் அரசிடமும் இருந்து வருவதால் உற்பத்திக்கும் விநியோகத்திற்குமான முரண் அதிகரித்து வருகிறது. உற்பத்தியாளர்கள் மின்சாரத்திற்கான சந்தையைத் தன்னுடைய முழுக் கட்டுபாட்டில் எடுத்துக் கொள்ள காற்று மாசுபாட்டைக் குறைத்தல், நிலக்கரி விலை உயர்வு ஆகிய சூழல்களைத் தமக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர்.

நிலக்கரியை உள்நாட்டில் அதிகளவில் உற்பத்தி செய்தாலும், இறக்குமதியை அதிகரித்தாலும் கூட மின்வெட்டு அடுத்த ஆண்டு வசந்த காலம் வரை நீடிக்கும். மின் விநியோகம் அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் முதலாளிகள் இலாபத்தைப் பெருக்க முடிவதில்லை. இந்தக் கட்டுப்பாட்டை ஒழித்து சுதந்திரமான சந்தை முறையைக் கொண்டு வர முதலாளிகள் அரசிடம் தொடர்ந்து கோரி வந்தனர். இதனையடுத்து மின் விநியோகம் மற்றும் மின் பயன்பாட்டிற்கான கட்டணத்தின் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சிறிது சிறிதாக சுதந்திரமான சந்தையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

சோசலிச உற்பத்தியை விட முதலாளித்துவ உற்பத்தி முறையே நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது என்று முதலாளித்துவவாதிகளால் கட்டமைக்கப்பட்டு வந்த போலி பிம்பங்கள் தகர்ந்து வரும் நிலையில் கொரானா நெருக்கடி அந்தப் பிம்பங்களை மேலும் தவிடு பொடியாக்கி உள்ளது. சோசலிசக் கட்டுமான காலத்தில் அரசின் பொறுப்பில் இருந்தவையெல்லாம் சிறிது சிறிதாக மூலதனத்தின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உற்பத்தியின் சமூக மயமாக்கலுக்கும், உடைமையின் தனியார்மயத்திற்குமான முரண்பாடு கூர்மையடைந்துள்ளதால் சீனாவில் வர்க்க முரண்கள் அதிகரித்து வருகின்றன. கொரானா பெருந்தொற்று நெருக்கடியானது தொழிலாளர்களுக்கு வேலை இழப்பையும் வருமான இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதால் இந்த நெருக்கடி இன்னும் தீவிரமாகி வருகின்றது.

- குமணன்

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்



Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட