கொரானாப் பெருந்தொற்று பெரும்பாலான நாடுகளைக் கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி வரும் சூழலில், ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் நாடுகளில் இதன் பாதிப்புகள் மிக அதிகளவில் உள்ளன. தொழிலாளர்களும், ஏழை விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் ஏற்கனவே உள்நாட்டுப் போரினால் பேரளவில் மனித உயிர்களையும், பொருளாதார இழப்புகளையும் சந்தித்திருந்த இலங்கை அரசு இன்று பெரும் கடனாளி நாடாகியுள்ளது. அதன் வருவாய்க்கு முக்கிய பங்காற்றுவது சுற்றுலாத்துறை; அதிலிருந்து கிடைக்கும் வருவாய் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்து வரும் நிலையில், இந்த வருவாய் ஆதாரமும் கொரானாப் பெருந்தொற்றின் காரணமாக தற்பொழுது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே நடந்த உள்நாட்டுப் போரில் ஆயுதங்கள் மற்றும் இராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காகப் பெரும் அளவில் அந்நிய நாடுகளிடமிருந்து இலங்கை அரசு கடன் பெற்றது. இந்தக் கடனிற்கு வட்டி செலுத்தவும், கடனைத் திரும்பச் செலுத்தவும் வேண்டியிருந்ததால் கடந்த காலங்களில் இலங்கையின் வருவாய் ஆதாரங்களில் பெரும் அளவு இதற்கே பயன்படுத்தப்பட்டன.
கொரானாப் பெருந்தொற்று, சுற்றலாத்துறையில் வருவாய் இழப்பு, உரங்கள் மீதான திடீர் தடையால் உணவு உற்பத்தியில் ஏற்பட்ட இழப்பு, எரிபொருட்கள் பற்றாக்குறை, அதிகளவிலான அரசின் செலவினங்கள், சீனா மற்றும் இதர நாடுகளுக்குச் செலுத்த வேண்டிய கடன்கள் அதிகரிப்பு, அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்ட சரிவு மற்றும் கடன்களை அடைப்பதற்காக அதிகளவில் பணத்தை அச்சிட்டு வெளியிட்டதால் ஏற்பட்டுள்ள பணவீக்கம் ஆகியவற்றால் இலங்கை அரசு மீள முடியாத நெருக்கடியில் இன்று சிக்கியுள்ளது. கடந்த நவம்பரில் பணவீக்கத்தின் அளவு 11.1 % என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது.
போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையிலிருந்து மட்டும் இரண்டு இலட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்தனர். கொரானா நோய்ப் பரவலுக்குப் பின்பான காலத்தில் மட்டும் ஐந்து இலட்சம் மக்கள் புதியதாக வறுமைக் கோட்டின் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. மூன்று வேளை உணவுக்குப் பதிலாக இரண்டு வேளை உணவையே மக்கள் பெற முடிகிறது. ஒரு கிலோ, அரை கிலோ என வழக்கமாக வாங்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால்பவுடர் உள்ளிட்டவற்றை 100 கிராம் அளவிலேயே மக்களால் வாங்க முடிகிறது.
உணவுப் பொருட்களின் கட்டுகடங்காத விலையேற்றம், இலங்கை ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி ஆகிய காரணங்களால் சிங்கள அரசு ஆகஸ்டு 30 ஆம்தேதி முதல் பொருளாதார அவசரநிலையை (economic emergency) பிரகடனம் செய்துள்ளது. பதுக்கலைத் தடுக்கவும், விலைகளை முறைப்படுத்தவும் முன்னாள் இராணுவ அதிகாரியிடம் பொறுப்புக் கொடுக்கப்பட்டு, இதனைக் கையாளுவதற்கு இராணுவத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. போதுமான உணவுப் பொருட்கள் இன்மை, பதுக்கல் ஆகியவற்றின் காரணமாக இலங்கை அரசின் இந்தப் பிரகடனத்தின் மூலம் அடித்தட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உத்திரவாதம் செய்ய முடியவில்லை. இது வெறும் கண் துடைப்பாகவும், மக்களை அச்சுறுத்தும் அறிவிப்பாகவுமே இருக்கிறது.
உள்நாட்டில் வாழ முடியாததால் மக்கள் பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் கூட்டம்கூட்டமாக குவிந்து வருகின்றனர். நான்கில் ஒரு பங்கு இளைஞர்கள் இலங்கையை விட்டு வெளியேற விரும்புவதாகக் கூறுகின்றனர்.
அடிப்படைத் தேவைகளுக்கு கூட இறக்குமதியையே பெரும் அளவில் சார்ந்துள்ள இலங்கை அரசு அந்நியச் செலாவணி இருப்பு வீழ்ச்சியினால் பொருட்களை இறக்குமதி செய்வதில் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பு நவம்பர் 2019 இல் 7.5 பில்லியன் டாலர் என்ற அளவில் இருந்து ஜூலை 2021க்குள் 2.8 பில்லியன் டாலர் என்ற அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. இதே காலகட்டத்தில் இலங்கை நாணயத்தின் மதிப்பு 20 சதவீதம் என்ற அளவிற்கு விழ்ச்சியடைந்துள்ளது.
2019 ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பில் வெளிநாட்டு கடனின் அளவு 42.6 சதவீதமாக உள்ளது. மொத்த வெளிநாட்டுக் கடனின் அளவானது 33 பில்லியன் டாலர். அதாவது இலங்கை ரூபாய் நாணய மதிப்பில் 6,60,000 கோடி ரூபாயாக இருந்தது.
இந்த ஆண்டில்(2022) மட்டும் திரும்பச் செலுத்த வேண்டிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனின் அளவு 7.3 பில்லியன் டாலர்கள் (1,47,460 கோடி இலங்கை ரூபாய்). ஆனால், நவம்பர் மாத நிலவரப்படி அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்போ 1.6 பில்லியன் டாலர் (32,320 கோடி இலங்கை ரூபாய்) மட்டுமே உள்ளது.
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க கடந்த சில மாதங்களில் மட்டும் பங்களாதேசிடம் 250 மில்லியன் டாலர்களும், இந்தியாவிடம் 400 மில்லியன் டாலர்களும், ஐஎம்எப் இடம் 800 மில்லியன் டாலர்களும், தென்கொரியாவிடம் 500 மில்லியன் டாலர்களும், சீனாவிடம் நாணயப் பரிமாற்றத்தின் மூலம் 1.5 பில்லியன் டாலர்களும் கடனாக இலங்கை அரசு பெற்றுள்ளது.
சீனாவிற்குக் கொடுக்க வேண்டிய கடன் மட்டும் 5 பில்லியன் டாலர்கள் (ஒரு இலட்சம் கோடி இலங்கை ரூபாய்) உள்ளது. கடந்த ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 1 பில்லியன் டாலர் அளவிற்கு சீனாவிடம் இலங்கை கடன் பெற்றுள்ளது. சீன அரசுக்குக் கொடுக்கவேண்டிய கடன் சுமையின் அளவு மூச்சை முட்டும் அளவிற்கு அதிகரித்ததால், அதனைச் திரும்பச் செலுத்த இயலாத நிலையில் 2017 ஆம் ஆண்டு அம்பந்தோட்டா துறைமுகத்தை 1.4 பில்லியன் டாலர் கடனுக்கு ஈடாக 99 ஆண்டுகள் குத்தகைக்கு இலங்கை கொடுத்துள்ளது.
இலங்கையில் முதலீடு செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு முதலீடுகளில் சீனாவின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், சாலைகள் கட்டமைப்பதற்காக சீனா இலங்கை அரசுக்கு கடன் வழங்குகிறது. ஆனால், எந்தத் திட்டத்திற்காக கடன் வழங்கப்படுகின்றதோ அந்ததிட்டத்தின் ஒப்பந்தங்களை சீன முதலாளிகளுக்கு வழங்கவேண்டுமென நிபந்தனை விதிக்கப்படுகிறது, ஆசிய வங்கி, உலக வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன்களுக்கு 2.5 - 3 % வரை வட்டி உள்ள நிலையில் சீனாவிடமிருந்து பெறப்படும் கடன்களுக்கு 6.5 சதவீதம் வரை வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு செலுத்தவேண்டிய கடன் தவணையைத்திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டித்துத் தருமாறு சீனாவிடம் இலங்கை அரசு கோரியுள்ளது
பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க, இலங்கை அரசு இந்தியாவிடமிருந்து, 1.9 பில்லியன் டாலர் கடன்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தை டிசம்பரில் போட்டுள்ளது. ஆனால், இந்திய அரசு கொடுக்கும் கடனைக் கொண்டு இலங்கைக்குத் தேவையான உணவுப்பொருட்கள், மருந்துப்பொருட்கள், எரிபொருட்கள் உள்ளிட்டவற்றை இந்தியாவிடம் மட்டுமே வாங்கவேண்டும் எனவும், பல்வேறுதுறைகளில் இந்திய மூலதனம் தடையில்லாமல் நுழைய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளது.
ஈஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் (EAST CONTAINER TERMINAL) நிறுவனத்தின் 49 சதவீதப் பங்குகளை இந்திய முதலாளி அதானிக்கு விற்பதற்கான ஒப்பந்தத்தை தொழிலாளர்களின் எதிர்ப்பின் (தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டம்) காரணமாக 2021 பிப்ரவரியில் இலங்கை அரசு கைவிட்டது. பின்னர் சில மாதங்கள் கழித்து சீனாவிற்கு அது விற்கப்பட்டது. இலங்கை அரசின் இந்தச் செயல்பாட்டால் இந்திய அரசு அதிருப்தியுற்றது, இதனை ஈடு செய்யும் வகையில் வெஸ்ட் கண்டெய்னர் டெர்மினல் (WEST CONTAINER TERMINAL) நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளை அதானிக்கு விற்று சமரசம் செய்துக்கொண்டதோடு, புதிய முதலீடுகளையும் உள்நுழைய தற்போதைய ஒப்பந்தத்தில் அனுமதியளித்துள்ளது இலங்கை அரசு.
இலங்கை பெட்ரோலிய நிறுவனம் கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களுக்குக் கடன் நிலுவை வைத்திருப்பதால், மேலும் கச்சா எண்ணெயைக் கடனாகப் பெறமுடியவில்லை. நவம்பர் 15 ஆம்தேதி முதல் இலங்கையின் ஒரே ஒரு பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையமான இலங்கை பெட்ரோலிய நிறுவனம் 50 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு போதுமான அந்நியச் செலாவணி இல்லாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, அதன் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
'இயற்கை விவசாயம்' என்ற திட்டத்தின் பெயரில், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் மீது இலங்கை அரசு திடீரென தடை விதித்தது. ஆனால், உண்மையில் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் இறக்குமதி செய்வதற்கு ஆண்டிற்கு 400 மில்லியன் டாலர்கள் தேவையாக உள்ள சூழ்நிலையில், அந்நியச் செலாவணியைக் குறைப்பதற்காக, இயற்கை விவசாய நாடாக இலங்கையை மாற்றுவோம் எனக் கூறி கடந்த ஆண்டு மே மாதம் இலங்கை அரசு உரங்கள் இறக்குமதிக்குத் தடைவிதித்தது.
உரங்கள் இல்லாமையாலும், பூச்சிகள், களைகள் ஆகியவற்றிலிருந்து பயிர்களைப் பாதுகாத்து மகசூலைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையின்மையாலும் விவசாயிகள் விவசாயம் செய்வதைக் கைவிட்டனர். அதனால் அரிசி உற்பத்தியில் 25 - 40 சதவீதம் இழப்பு ஏற்படும் என்றும், தேயிலை உற்பத்தியில் 40 - 60 சதவீதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் வேளாண் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
இயற்கை உரங்கள் உற்பத்திக்கான 'திட்டக்குழுவில்' நியமிக்கப்பட்டுள்ள 14 பேர்களில் பெரும்பான்மையானவர்கள் தனியார் நிறுவன அதிகாரிகளே, விவசாயப் பிரதிநிதிகளோ, விவசாயத்துறை வல்லுநர்களோ ஒருவரும் இல்லை. இயற்கை உரங்கள் தயாரிப்பதற்கான திறன் மிகக் குறைவான அளவிலேயே இருக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் இயற்கை உரங்கள் என்ற பெயரில் எதை உற்பத்தி செய்கின்றதோ அதனைப் பயன்படுத்த விவசாயிகள் நிர்பந்திக்கப்படுகின்றனர்.
சந்தைக்கு வரும் உணவுப்பொருட்களின் வரத்து குறைவு, இதனால் ஏற்பட்ட கடுமையான விலைவாசி உயர்வு மற்றும் அரசின் இந்தத் திடீர் முடிவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் சில தளர்வுகளை அரசு அறிவித்தது; ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, ரப்பர், தேங்காய் ஆகியவற்றிற்குத் தேவையான உரங்களுக்கு முதலில் விலக்களித்த அரசு பின்னர் மற்றவற்றிற்கும் விலக்கு அளித்தது. தனியார் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் இறக்குமதி செய்து கொள்ளலாம் என அறிவித்தது. எனினும், உரங்கள் இறக்குமதிக்கான தளர்வுகள் தற்காலிகமானதே என்று அதிபர் ராஜபக்சே தெரிவித்துள்ளார். தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், விவசாயிகள் உரங்களின் அதிகப்படியான விலையால் அதனை வாங்கி விவசாயம் செய்ய முடியவில்லை.
“போதுமான அளவில் விவசாயிகளுக்கு அரசின் விவசாயக் கொள்கையை எடுத்துரைக்காததே, அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும், விவசாயம் செய்யாமல் இருப்பதற்கும் முக்கிய காரணம் எனவும், இதனை அதிகாரிகள் உடனடியாக எடுத்துரைக்க வேண்டும் எனவும், அரசின் கொள்கை மீது அதிகாரிகளுக்கு உடன்பாடில்லை என்றால் அவர்கள் உடனடியாகப் பணியிலிருந்து வெளியேறலாம்” எனவும் அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார்.
தற்போதைய நெருக்கடியான சூழலில், உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், மக்கள் தியாகங்கள் மூலம் உணவுப் பற்றாக்குறையை எதிர்க்கொள்ள வேண்டுமெனவும், உணவு அல்லாத பொருட்கள், பானங்கள், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பொருட்களை இறக்குமதி செய்வதைக் குறைத்துக்கொண்டு, குழந்தைகளுக்கான பால்பவுடர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் தரவேண்டும் என இலங்கை அரசின் வேளாண்துறைச் செயலாளர் உதித்ஜெயசிங்கே எச்சரித்தார். இதனையடுத்து இலங்கை அரசு அவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கி உத்தரவிட்டது.
ஒரு பக்கம் விலைவாசி அதி உச்சத்தை அடைந்திருக்கும் நிலையில் மறுபக்கம் அரசு ஊழியர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வழக்கமாகக் கிடைக்க வேண்டிய ஊதிய உயர்வுகள் கூட கிடைக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு துறைகளைச் சார்ந்த தொழிலாளர்கள் ஊதிய உயர்வு மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்தல் ஆகிய கோரிக்கைகளுக்காக வேலை நிறுத்தப் போராட்டங்களை அதிகளவில் முன்னெடுத்து வருகின்றனர். தற்போதைய பொருளாதார நெருக்கடி அவர்களின் அன்றாட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கி முடமாக்கியுள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள், மருத்துவ ஊழியர்கள், தபால் ஊழியர்கள், மின்வாரிய தொழிலாளர்கள் எனப் பல்வேறு துறைகளில் கடந்த மாதத்தில் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும், தொழிலாளர்கள் பெரும்பாலும் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ கட்சிகளின் தொழிற்சங்கங்களில் அணி திரட்டப்பட்டிருப்பதால், அவர்களின் போராட்டங்கள் சொற்பமான கூலியுயர்வுக்காக சமரசங்கள் செய்யப்பட்டு கைவிடப்படுகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான வலுவான தொழிலாளர் இயக்கங்கள் இல்லாத காரணத்தினால், முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ கட்சிகளின் பால் நம்பிக்கையற்ற தொழிலாளர்கள் சில இடங்களில் தன்னெழுச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் மக்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டும், இயற்கை வளங்களைச் சூறையாடும் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் தான். ஒவ்வொரு நெருக்கடியையும் முதலாளிய வர்க்கம் தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் அதை மறைப்பதற்காக மக்களிடையே தேசிய இன முரண்பாடுகளை உருவாக்கி பிரச்சனையைத் திசை திருப்பும் உத்தியை இலங்கை ஆளும் வர்க்கம் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம், வர்க்கப் போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முன்னுக்குக் கொண்டு வரப்படுகின்றன. மக்களை இன அடிப்படையில் மோத விட்டு, அதன் மூலம் தம்முடைய சுரண்டலையும் ஆட்சியையும் முதலாளிய வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் முதலாளி வர்க்கங்கள் மட்டும் எந்தவிதமான இன முரண்பாடுகளும் இன்றி உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கூட்டுகளை உருவாக்கி மக்களைக் கொள்ளை அடித்து வருகின்றன.
முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ கட்சிகளின் பின்னால் அணி திரண்டுள்ள சிங்கள, தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய உண்மையான எதிரிகளான முதலாளிய வர்க்கத்தை அடையாளம் காண வேண்டும். ஒரு சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சியின் கீழ் தேசிய இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து விவசாயிகளையும், இதர உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் சுரண்டல் வர்க்கத்தைத் தூக்கி எறிந்து சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க வேண்டும். அது ஒன்றே இலங்கை மக்களின் வறுமைக்கும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் துயரங்களுக்கும் தீர்வாக இருக்க முடியும்.
- குமணன்
மிகவும் தெளிவான விரிவான கட்டுரை. குறிப்பாக இறுதியில் கூறப்பட்டுள்ள தொகுப்புரை மிகவும் சரியானதாக உள்ளது.
ReplyDelete"தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களின் இன்றைய அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் மக்களின் உழைப்புச் சக்தியைச் சுரண்டும், இயற்கை வளங்களைச் சூறையாடும் உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் தான். ஒவ்வொரு நெருக்கடியையும் முதலாளிய வர்க்கம் தன்னுடைய செல்வத்தைப் பெருக்கிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால் அதை மறைப்பதற்காக மக்களிடையே தேசிய இன முரண்பாடுகளை உருவாக்கி பிரச்சனையைத் திசை திருப்பும் உத்தியை இலங்கை ஆளும் வர்க்கம் நீண்ட காலமாகப் பயன்படுத்தி வருகின்றது. இதன் மூலம், வர்க்கப் போராட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு தேசிய இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முன்னுக்குக் கொண்டு வரப்படுகின்றன. மக்களை இன அடிப்படையில் மோத விட்டு, அதன் மூலம் தம்முடைய சுரண்டலையும் ஆட்சியையும் முதலாளிய வர்க்கம் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் முதலாளி வர்க்கங்கள் மட்டும் எந்தவிதமான இன முரண்பாடுகளும் இன்றி உள்நாட்டில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் கூட்டுகளை உருவாக்கி மக்களைக் கொள்ளை அடித்து வருகின்றன.
சிங்கள, தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய உண்மையான எதிரிகளான முதலாளிய வர்க்கத்தை அடையாளம் காண வேண்டும். ஒரு சுயேச்சையான பாட்டாளி வர்க்கக் கட்சியின் கீழ் தேசிய இன வேறுபாடின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அனைத்துத் தொழிலாளர்களும் ஒன்றிணைந்து விவசாயிகளையும், இதர உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆளும் சுரண்டல் வர்க்கத்தைத் தூக்கி எறிந்து சுரண்டலற்ற சமூகத்தை அமைக்க வேண்டும். அது ஒன்றே இலங்கை மக்களின் வறுமைக்கும் ஏழ்மைக்கும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும் துயரங்களுக்கும் தீர்வாக இருக்க முடியும்."
என்பது மிகவும் சரியான கருத்து. அது இந்தியாவிற்கும் பொருந்தக் கூடிய கருத்தாகும்.
நன்றி.