Skip to main content

மதமும் கல்வி உரிமையும் போலி முற்போக்குவாதிகளும்


மத அடையாளங்களை அணிவது குறித்தான பிரச்சனையில், இந்தச் சிக்கலின் பரிணாமத்தைச் சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல், என்ன ஆடை அணிவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது என்று பொதுவான முழக்கத்தை முன்வைப்பதன் மூலம் பிரச்சனை திசை திருப்பப்படுகின்றது. தற்பொழுது எழுந்துள்ள பிரச்சனை கல்விக்கூடங்களில் மாணவர்கள் மத்தியில் மத அடையாளங்கள் பற்றியானது மட்டும்தான். கூடுதலாக நாம் குறிப்பிடுவது, கல்விக்கூடங்கள் மட்டுமல்லாமல் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுசார் நிகழ்வுகளில் மதம் குறித்தான பார்வை எப்படிஇருக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கியது.

மற்ற இடங்களில் அனைத்து மதத்தினரும் அவர்களுடைய மதநம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், மதஅடையாளங்களைப் பின்பற்றுவதற்கும் உரிமை உண்டு. தங்களுடைய மதத்தை வழிபடுவதற்கோ, பழக்கவழக்கங்களைப் பின்பற்றுவதற்கோ சிறுபான்மையினருக்கு நெருக்கடிகள் கொடுப்பது அல்லது தடை விதிப்பது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மதம் என்பது தனிப்பட்ட நபர்களின் விவகாரம் ஆகும். ஆனால், கல்விக் கூடம் போன்ற இடங்களில், அதுவும் ஏற்கனவே நடைமுறையில் வழக்கற்றுப் போன இடங்களில் மத அடிப்படைவாதிகளின் தூண்டுதலால் மீண்டும் மத பிற்போக்குத்தனங்களை, மத அடையாளங்களைக் கொண்டு வருவது என்பது சமூகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்வதாகும்.


பள்ளிகளில் மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வும், தாழ்வு மனப்பான்மையும் வரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் சீருடை. பொதுவாக உடைகள் சம்பந்த மட்டில் மட்டுமே கொண்டு வரப்பட்டாலும், வேற்றுமைகளை அதிகரிக்கக் கூடிய சாதிய, மத அடையாளங்களைப் பெரும்பாலான பள்ளிகள் அனுமதிப்பதில்லை. இதன் மூலம் மாணவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ பிற்போக்கு சாதி, மத அடையாளங்களிலிருந்து விலக்கி வைக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்குப் படிப்பதற்கு அல்லது பணி புரிவதற்குச் செல்பவர்களுக்கு மட்டுமே மத அடையாளங்கள் குறித்தான கட்டுப்பாடுகள் தேவை, மாணவர்களைச் சந்திக்கச் செல்லும் பெற்றோர்களுக்கோ அல்லது இதர நபர்களுக்கோ இல்லை. எந்த மாணவரும், தான்  புரிந்து கொண்டு அல்லது விருப்பங்கொண்டு மத நம்பிக்கைகளையோ அடையாளங்களை அணிவதையோ செய்வதில்லை; மாறாக, அவர்களின் குடும்பமும், சமூகமுமே அதனை வழி நடத்துகின்றது; மத நம்பிக்கைகளை ஊட்டுகிறது.  

 

பள்ளிகளில் உடைகள் குறித்தான கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து ஒன்றிய அரசோ மாநில அரசோ பொதுவான விதிமுறைகளைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, இது குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம் என்று அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் பள்ளி நிர்வாகங்களே சில விதிமுறைகளை வகுத்துச் செயல்படுத்துகின்றன. பெரும்பாலான பள்ளிகளில் மத அடையாளங்கள் மறுக்கப்படுகின்றன; சில பள்ளிகளில் மட்டும் அவற்றை அனுமதிக்கப்படும் நடைமுறையும் உள்ளது. தற்பொழுது இந்தப் பிரச்சனை, ஒரு பள்ளியின் பிரச்சனையாக அல்லாமல், பொதுப் பிரச்சனையாக மாறியுள்ளது.

கர்நாடகாவில் எழுந்த ஹிஜாப் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்து கொண்டால் தான், இதன் மீது நாம் தெளிவான தீர்வை முன் வைக்க முடியும். முதலில் பிரச்சனைக்குள்ளான உடுப்பியில் அங்கு ஹிஜாப் நடைமுறையில் இல்லை. ஹிஜாப்பை அனுமதிக்க வேண்டுமென மொத்தம் 76 முஸ்லீம் மாணவிகளில் 8 பேர் மட்டுமே கோருகின்றனர். பள்ளி நிர்வாகம் மறுக்கிறது. முஸ்லீம் மாணவிகள் பள்ளி நிர்வாகத்தின் மறுப்பையும் மீறி ஹிஜாப் அணிந்து வந்ததால் அவர்கள் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுதான் பிரச்சனையின் தொடக்கமாகிறது.

பள்ளிகளில் தான் என்ன அணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை ஒவ்வொரு மாணவருக்கும் அளிக்கப்படுமானால், பழைய, வழக்கொழிந்து கொண்டு வருகின்ற சாதி, மத அடையாளங்களை சாதிய, மதவாத ஆதிக்க சக்திகளால் மாணவர்களிடம் திணிக்க வழிவகுக்கும். நாம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், அரசுசார் நிகழ்வுகளில் மத அடையாளங்களை அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியதை, போலி முற்போக்குகள் ஹிஜாப் அணிவதைத் தடுப்பதாகவும், சிறுபான்மை மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நிற்பதாகவும் திரித்து விடுகின்றனர். எந்த மத நம்பிக்கைகளையும், மத அடையாளங்களையும் நிர்ப்பந்தத்தின் பெயரால் கைவிடச் செய்ய முடியாது.

சில பள்ளிகளில் ஏற்கனவே ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட்டு அங்கு மாணவர்கள் அதனைக் கடைப்பிடித்து வரும் நிலையில், அங்கு தடாலடியாக அதனை நிறுத்த முற்படுவதால் மாணவர்களின் கல்வி பயிலும் வாய்ப்பு பாதிக்கக்கூடும். இத்தகைய பள்ளிகளில் சில இடங்களில் மாணவர்கள் பள்ளிக்கு வெளியில் நிறுத்தப்படுவதும், பெற்றோர்களே மாணவர்களைப் பள்ளிக்கு அனுப்ப மறுப்பதும் நடக்கின்றது. மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அழைத்து அவர்களுக்குப் பள்ளியில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து விளக்கி அவர்களின் ஒப்புதலுடன் செய்ய முற்பட வேண்டும். அதுவரை, தற்காலிகமாக அந்தப் பள்ளிகளில் எந்த மாதிரியான வழக்கங்கள் நடைமுறையில் உள்ளதோ அதனையே பின்பற்ற வேண்டும். இதன்மூலம், எந்த ஒரு மாணவனின்  கல்விக்கான உரிமையும் பறிக்கப்படாமல் கல்விக்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.

இந்துத்துவவாதிகளின் போலித்தனம்

மத மோதல்களை வைத்து அரசியல் செய்ய வாய்ப்புக்காகக் காத்திருக்கும் இந்துத்துவச் சக்திகள் இந்தப் பிரச்சனையைப் பயன்படுத்தி அரசியல் இலாபம் பெறத் துடிக்கின்றனர். ஏற்கனவே, சில பள்ளிகளில் அனுமதிக்கப்பட்டு வந்த இடங்களிலும் ஹிஜாப்பைத் தடை செய்ய வேண்டும் என்று இந்துத்துவ மத அடிப்படைவாதிகள் இந்து மத மாணவர்களுக்குக் காவித்துண்டு அணியச் செய்து இளம் மனதுகளில் விசமக் கருத்துக்களை விதைக்க முனைகின்றனர்.

இந்துத்துவச் சக்திகள் மற்றும் அதன் பின்னணியைக் கொண்ட பாஜக அரசு சிறுபான்மை மதத்தவரிடையே காணும் பிற்போக்குத் தனங்களைக் கண்டு நீலிக்கண்ணீர் வடிக்கிறார்கள்; முஸ்லீம் மதத்தில் உள்ள பெண்களின் ஜனநாயக உரிமைக்காகவே முத்தலாக் மணவிலக்கு முறையை இரத்து செய்து சட்டம் கொண்டு வந்ததாகப் பீற்றிக் கொள்ளும் இந்துத்துவ வெறியர்கள்தான்  சபரிமலையில் ஐயப்பனை வழிபட வந்த இந்து மதப் பெண்களை அநாகரிமாக அடித்து விரட்டினர். இந்துத்துவக் கோட்பாடே மக்களைச் சாதிய அடிப்படையில் ஏற்றத்தாழ்வான படி நிலையில் வைத்து, மக்களிடையே பாகுபாடுகளை ஏற்படுத்துவதும், மக்களைப் பிளவுபடுத்தி அவர்களைச்  சுரண்டுவதும்தான் என்பதை மூடி மறைக்கின்றனர். இந்து மதம் சாதிய ரீதியாகவும், பாலின ரீதியாகவும் மனிதத்தன்மையற்ற வகையில் மக்கள் மீது ஒடுக்குமுறைகளை நிகழ்த்துகின்றது, உயிர்களைப் பலி வாங்குகின்றதுஇந்த ஒடுக்குமுறைகளைக் களையவோ, ஜனநாயக உரிமைகளை நிலைநாட்டவோ எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சிறுபான்மை மதத்தினரின் பிற்போக்குத்தனங்களைக் காரணம் காட்டி அவர்கள் மீது பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் நடத்துவதன் மூலம் இந்து மதத்திலுள்ள  மக்களை மத அடிப்படையில் தன் பக்கம் அணித் திரட்டிக் கொள்ள முயற்சி செய்து வருகிறது. ஆளும் வர்க்கமான முதலாளிகளின் சுரண்டலால் மக்கள்  எவ்வாறு மேலும், மேலும் கடுமையான  நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர்  என்பதை மறைத்து, மக்களை மத அடிப்படையில் மோத விட்டுத் திசைதிருப்புவதற்கு இந்த உத்தியைப் பின்பற்றி வருகிறது.

இந்து மக்களில் இரண்டு பிரிவினர் உள்ளனர். இந்துக் கடவுள்களை வழிபடும் சாதாரண அடித்தட்டு ஏழை எளிய மக்கள், இந்துக்களில் பெரும்பான்மை பிரிவினர். இவர்கள் தங்களின் பிரச்சனைகளும், துன்ப துயரங்களும் கடவுளின் கருணையால் களையப்பட்டு நல்வாழ்க்கை கிடைக்கும் என்ற நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். மற்றொரு பிரிவினர், ’பெரும்பான்மையாக இருக்கும் உழைக்கும் மக்களைச் சுரண்டி அடக்கி ஒடுக்குவதற்காகஇந்து மதத்தையும் மதத் தலைமைப் பீடங்களையும் மடங்களையும் ஆதீனங்களையும் பயன்படுத்தக் கூடிய சுரண்டல் வர்க்கத்தினர். இவர்கள் இந்துக்களில் மிகச் சிறுபான்மையினர்தான்.

முதலாவது பிரிவினர், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தாலும், அவர்கள் ஆளும் வர்க்கத்தின் மத நச்சுக்  கருத்துக்கள், மதத் தலைமைப் பீடங்களின் செல்வாக்குகள் ஆகியவற்றிலிருந்து வெளியே நிற்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் சேவகர்களாக இருக்கும் மதத் தலைவர்களின் பகட்டான வாழ்வையும், பாலியல் குற்றங்களையும், ஊழல்களையும் கண்டுணர்ந்துள்ளார்கள். சாதாரண மக்கள் இவர்களை நம்புவதில்லை, கண்களுக்குப் புலப்படாத தெய்வங்களையே அவர்கள் நம்புகிறார்கள். வாழ்வியல் பிரச்சனைகளுக்காகக் கடவுளிடம் மன்றாடும் அதே நேரத்தில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகவும் தங்கள் எதிப்பை வெளிப்படுத்துகிறார்கள், சில சமயங்களில் இந்த எதிர்ப்புகள்  மிகத் தீவிரமாகவும், எழுச்சிகரமானதாகவும் கூட அமைகின்றன.

மத நம்பிக்கையுள்ள, பெரும்பான்மையான இந்த ஏழை எளிய மக்களை நாம் ஜனநாயக உரிமைகளுக்காக, சோசலிச இலட்சியங்களுக்காக அணி திரட்ட தொடர்ந்து பரப்புரை செய்ய வேண்டும். உழைக்கும் மக்களின் ஒற்றுமைக்கும் விடுதலைக்கும் தடையாக உள்ள மதப் பிற்போக்குக் கருத்துகளைப் பற்றி அவர்களிடம் தெளிவூட்டி அவற்றிலிருந்து அவர்கள் விடுபட நாம் உதவ வேண்டும். மத ரீதியாக, சாதி ரீதியாக, இன ரீதியாக ஒடுக்கப்படும் மக்களுக்குத் துணை நிற்பதற்கு அவர்களுக்குத் தொடர்ந்து கற்பிக்க வேண்டும். சுரண்டும் ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டங்களில் சாதி, மதம், இனம் கடந்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடும்போது சாதி, மதம், இனம் சார்ந்த குறுகிய, பிற்போக்கான கருத்துகளிலிருந்து அவர்கள் விடுபடுவார்கள். எளிய மக்கள் அனைத்து விதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகக் களத்தில் நிற்பவர்கள்; ஏனெனில் இந்தச் சுரண்டல் அமைப்பில் அவர்கள் வர்க்க ரீதியாகச் சுரண்டப்படுவதோடு மட்டுமல்லாமல், ஜனநாயக உரிமைகளும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள்.

போலி முற்போக்குவாதிகளின் சந்தர்ப்பவாதம்

பல்வேறு மதங்கள் கொண்ட நாட்டில் பெரும்பான்மை மதத்தினரின் ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர்களுக்குத் துணை நிற்கும் பொழுது இரண்டு விதமான தவறான போக்குகளைச் சில போலி முற்போக்குகள் கையாளுகின்றன.

முதலாவது,  பெரும்பான்மையினர் மதத்தைச் சார்ந்த ஆதிக்க சக்திகளின் மக்கள் விரோத  நடவடிக்கைகளையும் பிற்போக்குக் கருத்துகளையும்   அம்பலப்படுத்தி அவர்களுக்கு எதிராக அனைத்து உழைக்கும் மக்களையும் அணி திரட்டாமல், அந்த மதத்தையே எதிராக நிறுத்துவது, கேலி செய்வது போன்ற செயல்கள் மூலம் மதத்தின் மீது நம்பிக்கையுள்ள உழைக்கும் மக்களை இடது சாரிகள் மற்றும் ஜனநாயக சக்திகளிடமிருந்து அந்நியப்படுத்தி மத அடிப்படைவாத சக்திகளிடம் புகலிடம் தேட வழி வகுக்கின்றனர்.

இரண்டாவது, சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மக்களை பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த பிற்போக்குவாதிகளின் ஒடுக்குமுறையிலிருந்து காப்பது எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவிற்கு அவர்கள் தமது சொந்த மதப் பிற்போக்குத்தனத்திலிருந்தும் விடுபட விழிப்புணர்வைக் கொண்டு வருவதும் அவசியமாகும். சிறுபான்மையினரின் மீதான ஒடுக்கு முறைக்கு எதிராகக் குரல் கொடுப்பது என்பது சிறுபான்மையினரின் மதத்திலுள்ள அனைத்துப் பிற்போக்குத் தனங்களையும் அல்லது அந்த மதத்திலுள்ள ஆதிக்கச்சக்திகள் ஆளும் வர்க்கத்துடன் வெளிப்படையாகவும், இரகசியமாகவும் கொண்டுள்ள உறவுகளையும் அங்கீகரிப்பதாகாது. ஆனால், இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளாமல், பொதுப்படையாகச் சிறுபான்மை மதத்தை, அதன் பிற்போக்குக் கருத்துகளையும் உள்ளடக்கி,  ஆதரிக்கும் போக்கைக் கையாளுகின்றனர்.


சிறுபான்மை மத மக்கள் நம்பிக்கை வைக்கும் அளவில் வலிமை வாய்ந்த புரட்சிகர இயக்கங்களோ ஜனநாயக இயக்கங்களோ இல்லாத காரணத்தினால் பெரும்பான்மை மத ஆதிக்கத்திலிருந்தும், ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையிலிருந்தும் தங்களைத் தற்காத்துக் கொள்ள அவர்கள் சிறுபான்மை மத அடிப்படைவாத சக்திகளிடம் சிக்கிக் கொள்கின்றனர். சிறுபான்மை மத அடிப்படைவாத சக்திகள் அவர்களுடைய மத அடையாளங்களை, பிற்போக்குத் தனங்களைத் தொடர்ந்து மக்கள் மீது திணித்து, மதம் மட்டுமே அவர்களைப் பாதுகாக்கும் என்ற எண்ணத்தை மக்கள் மனதுகளில் விதைத்துச்   சிறுபான்மை மக்களை ஏமாற்றி வருகின்றனர்; அதன் மூலம் அந்த மதத்திலுள்ள சுரண்டும் வர்க்கத்துடன் உழைக்கும் மக்களைச் சமரசப்படுத்துகின்றனர். இன்னொரு புறம், மத அடிப்படையில் தங்கள் பின் திரண்டுள்ள மக்களைக் காண்பித்து ஆளும் வர்க்கத்துடன் இரகசிய உறவு வைத்துக் கொண்டு இலாபம் அடைகின்றனர். அந்த மதத்திலுள்ள உழைக்கும் மக்களின் விடுதலைக்குத் தடையாக இருக்கின்றனர்.  சிறுபான்மை மதத்திலுள்ள அடிப்படைவாதிகளின் இத்தகைய போலித் தனத்திற்குப் போலி முற்போக்கு அமைப்புகள் துணை புரிகின்றன.

நாம் எதிர்த்து நிற்க வேண்டியது பெரும்பான்மையினர் மத நிறுவனங்களையும், அதைத் தாங்கிப் பிடிக்கும் கட்சிகளையும், அதற்குப் பின் இருக்கும் ஆளும் வர்க்க நலனையும்தான்; பெரும்பான்மை மதத்தைச் சார்ந்த மக்களின் சாதாரண மத நம்பிக்கைகளை அல்ல. அதே போல, நாம் பெரும்பான்மை மத அடிப்படைவாதச் சக்திகள் மற்றும் சொந்த மத அடிப்படைவாதச் சக்திகளின் ஒடுக்குமுறையிலிருந்து சிறுபான்மை மக்களைக் காப்பாற்ற வேண்டுமே தவிர சிறுபான்மை மதத்தின் பிற்போக்குத்தனங்களை அல்ல.

சிறுபான்மை மதத்தைச் சார்ந்த உழைக்கும் மக்கள் மீது மத அடிப்படையில் இரண்டு விதமான ஒடுக்குமுறைகள் நிகழ்கின்றன. ஒன்று, பெரும்பான்மை பிரிவினரின் மத ஒடுக்குமுறை, மற்றொன்று சொந்த மத பீடங்களின் ஒடுக்குமுறை. இரண்டையுமே எதிர்த்து நிற்க வேண்டியது அவசியமானதாகும்.

மக்கள், தங்கள் வாழ்வில் ஏற்படும் பொருளாதாரச் சிக்கல்கள், வேலை இன்மை, வாழ்க்கைக்கு உத்தரவாதமின்மை, இருண்ட எதிர்காலம் போன்ற சமூகப் பிரச்சினைகளின்  அழுத்தத்தின் காரணமாக, தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு வடிகாலாக மத வழிபாடுகளைக் கடைப்பிடித்து வருகின்றனர். அவர்கள் எந்தக் காரணங்களுக்காக மத நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனரோ, அந்தப் பிரச்சனைகளின் உண்மைத்தன்மையை, அறிவியல் பூர்வமாகவும், ஆதாரபூர்வமாகவும் புரிந்து கொள்வதன் மூலமும், அந்தப் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் விடுதலை அடைவதன்  மூலமும்தான்  இத்தகைய வழிபாடுகள், சடங்குகள், அடையாளங்கள் ஆகியவற்றிலிருந்தும் அவர்கள் விடுதலை அடைவார்கள்.  எனவே, நாம் எப்பொழுதும் அடித்தட்டு மக்களின் சாதாரண மத உணர்வுகளைச் சட்ட ஆணைகளின் மூலம் ஒழிக்க முடியும், ஒழிக்க வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. அதே சமயத்தில், சில மத நம்பிக்கைகள், மனித சமூகத்திற்குப் பெரும் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால்,  மக்களிடையே சாதி, மத அடிப்படையில் பாகுபாடுகளை உண்டாக்கி ஒரு பிரிவினரின் ஜனநாயக உரிமைகளை மறுப்பதாக இருந்தால் அவற்றிற்குச் சட்டபடியான தடைகள் கொண்டு வருவதும் அவசியமானதே. எடுத்துக்காட்டாக, சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்கம், குழந்தைத் திருமணம், சாதி அடிப்படையில் தீண்டாமை போன்ற ஒடுக்குமுறைகள், மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் நரபலி கொடுத்தல் போன்றவற்றைக் குறிப்பிடலாம். 



கர்நாடகத்து மாணவிகளில் சிலர், மத அடையாளங்கள் வழக்கற்றுப் போன பள்ளிகளில் ஹிஜாப் அணியும் உரிமை வேண்டிய பொழுது அவர்களுக்கு ஆதரவாகக் களம் இறங்கி ஆர்ப்பரித்த போலி முற்போக்குகள், காஸ்மீரில் அருஷா பர்வேஸ் என்னும் மாணவி ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் என்னுடைய உரிமை என்று இஸ்லாமிய பழமைவாதத்திற்கு எதிராகப் பேசியதால், முஸ்லீம் மத அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்ததைக் கண்டிக்கவில்லை. அதனை ஒரு பொருட்டாகவே அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை இவர்களுடைய இந்தச் சந்தர்ப்பவாதத்திற்குக் காரணம் தாங்கள் முஸ்லீம் மக்கள் அனைவருக்கும் ஆதரவானவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் அவர்களுடைய நல்ல எண்ணம்தான். ஆனால் விமர்சனப் போக்கற்ற இந்த நல்ல எண்ணம் அந்த மதத்திலுள்ள உழைக்கும் மக்களை விடுவிக்காது. அந்த மதத்திலுள்ள அடிப்படைவாதிகளின் கைகளையே வலுப்படுத்தும். மத அடிப்படைவாதிகளுக்கும், மத நம்பிக்கையுள்ள சாதாரண உழைக்கும் மக்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சிறுபான்மை மத மக்களுக்கு ஆதரவு என்ற பெயரில், சிறுபான்மை மத மக்களை ஒடுக்குகின்ற இன்னொரு பிரிவான அந்த மதத்திலுள்ள அடிப்படைவாதிகளுக்கு வால் பிடிக்கின்றனர். போலி முற்போக்குவாதிகளிடம் வெளிப்படுவது சிறுபான்மை மதத்தினரின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்  கொண்டு தம்மை முன்னிறுத்திக் கொள்ளும் குட்டி முதலாளியக் கதாநாயகத்தனம்தானே தவிர   வேறு எதுவுமில்லை.  

உண்மையான மதச் சார்பற்றதன்மைக்குக் குரல் கொடுப்போம்!

கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் சிறுபான்மை மக்களின் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களத்தில் நிற்பவர்கள். ஆனால் சிறுபான்மை பிரிவைச் சார்ந்த உழைக்கும் மக்களுக்குத்தான் நாம் அரணாக நிற்க வேண்டுமே ஒழிய, சிறுபான்மை பிரிவைச் சார்ந்த பழமைவாதிகளுக்கோ, பிற்போக்குவாதிகளுக்கோ அல்ல. மதம் குறித்த விசயத்தில், சிறுபான்மை மதத்தைச் சார்ந்த மக்கள் மீது மதத்தின் பெயரால் ஒடுக்குமுறை நிகழும்பொழுது, பெரும்பான்மை மதத்தில் உள்ள ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும், சிறுபான்மை மதத்திலுள்ள பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு ஆதரவாகவும் இருக்க வேண்டும்


இதனை, மிகவும் கவனமாகக் கையாண்டால் மட்டுமே, மாணவச் சமுதாயத்தை நாம் முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்ல முடியும், இல்லையெனில் மாணவர்கள் மத அடிப்படைவாதிகளின் நச்சு வலையில் வீழ்வதோடு, சாதியாதிக்க சக்திகளும், இன ஆதிக்க சக்திகளும் இதே போன்று அடையாள அரசியலில் மாணவர்களை பின்னோக்கி இழுத்துச் செல்லும். இது ஒட்டு மொத்த சமூகத்தையே பின்னோக்கிச் செல்வதற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்கும்.

பொதுவான இடங்களில் இத்தகைய மத அடையாளங்களை அணியாமல்  இருக்க அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நாம் தொடர்ந்து அழைப்பு விடுப்போம். கல்வி நிலையங்களுக்கும் மதங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இருக்கக் கூடாது எனக் கோருவோம். மதம் சார்ந்த விடுப்புகளை அரசு அலுவலகங்களுக்கும், பொதுத்துறைகளுக்கும், கல்விநிலையங்களுக்கும் இரத்து செய்ய வேண்டும் எனக் கோருவோம். அரசு மற்றும் பொது நிறுவனங்களில் மத சம்பந்தமான சடங்குகளைப் பின்பற்றக் கூடாது எனக் கோருவோம். குடியரசுத் தலைவர், அமைச்சர்கள், அதிகாரிகள்  ஆகியோர்  தங்களுடைய மதம் சம்பந்தமான நிகழ்வுகளில் தனிப்பட்டமுறையில் கலந்து கொள்ளலாமே தவிர பதவி அடையாளங்களுடன் கலந்து கொள்ளக் கூடாது எனக் கோருவோம். உண்மையான மதச் சார்பற்ற அரசு நிர்வாகத்தைக் கோருவோம்.

                                                                                             - குமணன்
                                             - சோசலிசத் தொழிலாளர் இயககம்



 




 



Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...