கையும் களவுமாகப் பிடிபட்ட திருடன் நொண்டிச்
சாக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொள்ள முயற்சி செய்யும் பரிதாபகரமான நிலையில்
மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. இப்பொழுது
உள்ளது. தனது கட்சியின் கொள்கை முடிவுகளையும் தீர்மானங்களையும் ஊடகங்களுக்கு
அளிக்கும் முக்கியமான செய்தித் தொடர்பாளர்களையே தனது கட்சிக்கும் ஆட்சிக்கும் தொடர்பில்லாத
ஏதோ விளிம்பு நிலையில் உள்ளவர்கள் எனக் கூறித் தனது பொறுப்பிலிருந்து அந்தக் கட்சி
தப்பித்துக் கொள்ள முயற்சி செய்கிறது.
அந்தக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர்
சர்மா மே 26ந் தேதி ‘டைம்ஸ் நவ்’
தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் பற்றியும் இஸ்லாம் மதம் பற்றியும் அவதூறான
கருத்துகளைக் கூறினார். அதற்குக் கண்டனம் தெரிவித்தும், மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் கான்பூரில்
கடந்த 3ந் தேதி முஸ்லீம் மக்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். அதில் கலவரம்
வெடித்துப் பலர் காயமுற்றனர். நூற்றுக்கணக்கானோரை கைது செய்தது போலிஸ். முஸ்லீம்
மக்களின் இருப்பிடங்களை புல்டோசர் கொண்டு இடித்துத் தள்ளுவோம் என அச்சுறுத்தி
வருகிறது பா.ஜ.க. அரசு.
அதே சமயத்தில் தில்லியில் பா.ஜ.க.வின் ஊடகப்
பிரிவின் தலைவராக இருந்த நவீன் குமார் ஜிண்டால் தனது டுவிட்டர் பக்கத்தில் நபிகள்
நாயகம் பற்றி மரியாதைக் குறைவான கருத்துகளை வெளியிட்டார்.
பா.ஜ.க.வினரும், அதனுடைய சங் பரிவாரத்தினரும் இங்குள்ள சிறுபான்மை மதங்களான இஸ்லாம் மீதும்,
கிருத்துவம் மீதும் தொடர்ந்து விசமக் கருத்துகளைப் பரப்பியும், அவர்கள் மீது
தாக்குதல்களைத் தொடுத்தும் வருகின்றனர். இத்தகைய விசமக் கருத்துகளைக் கண்டித்தும்,
அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரியும் ஜனநாயக அமைப்புகளும், தனி
நபர்களும் தொடர்ந்து அரசுக்குக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் பா.ஜ.க.வின் ஒன்றிய அரசும் அக்கட்சி ஆட்சியில் உள்ள மாநில
அரசுகளும் மக்களின் குரல்களுக்கு ஒரு சிறிதும் மதிப்பளிக்கவில்லை. அத்தனை
குரல்களும் இங்கு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.
ஆனால் நுபுர் சர்மா, நவீன் குமார் ஆகியோரின்
நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாம் மதத்திற்கும் எதிரான மரியாதைக் குறைவான கருத்துகள்
வளைகுடா நாடுகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் நாட்டு அரசும்,
குவைத் நாட்டு அரசும் அந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதர்களை அழைத்துத் தங்கள்
கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இந்தியா மன்னிப்புக் கோர வேண்டும் எனக் கோருகின்றன. மேலும்
இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கத்தார் பயணத்தின்போது அந்த நாட்டின் துணை
எமிர் அளிக்க இருந்த விருந்தை இரத்து செய்ததன் மூலம் அந்த நாடு தனது கண்டனத்தைத்
தெரியப்படுத்தியுள்ளது. குவைத் நாட்டில் இந்தியப் பொருட்களைப் புறக்கணிப்போம் எனக்
கூறி கடைகளிலிருந்து இந்தியப் பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன..
அதனைத் தொடர்ந்து 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமியக்
கூட்டுறவு அமைப்பும், 7 நாடுகளைக் கொண்ட வளைகுடா நாடுகளின் அமைப்பும் தங்கள்
எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. அது மட்டுமல்லாமல் பஹ்ரைன், ஈரான், ஜோர்டான்,
இந்தோனேசியா, மலேசியா, மாலத் தீவு, ஆப்கானிஸ்தான், துருக்கி, எகிப்து எனப் பல
நாடுகளும் இந்தியாவிற்குத் தங்கள் கடுமையான
கண்டனத்தைத் தெரிவித்துள்ளன.
இத்தகைய கடுமையான கண்டனங்களைக் கண்டு பின்
வாங்கிய இந்திய அரசு அவர்களைச் சமாதானப்படுத்தும் வழிமுறைகளில் இறங்கியுள்ளது. நுபுர்
சர்மாவை கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்தும், நவீன் குமாரை அடிப்படை உறுப்பினர்
பொறுப்பிலிருந்து நீக்கியும் உள்ளது. பா.ஜ.க.வின் முதன்மையான ஊதுகுழல்களாக இருந்த
நுபுர் சர்மா, நவீன் குமார் ஆகியோரின் கருத்துகளை அரசின், கட்சியின் விளிம்பு
நிலையில் உள்ளவர்களின் கருத்துகள் எனக் கூறி முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க
முயலுகிறது. மேலும் ஒரு படி மேலே சென்று
‘எங்கள் கட்சியும். அரசாங்கமும் அனைத்து மதங்களையும் மதிக்கிறது’ என்றும்,
‘எந்த மதத்தின் தலைவர்களையும் எப்பொழுதும் நாங்கள் மதிப்புக் குறைவாகப்
பேசுவதில்லை’ என்றும் சப்பைக் கட்டு கட்டுகிறது. மேலும் ‘பல்வேறு மதங்களும் சம
உரிமையுடன் பூத்துக் குலுங்கும் கலாச்சாரப் பாரம்பரியம் கொண்ட நாடு எங்களுடையது’.
என்றும் கொஞ்சமும் கூச்சப்படாமல் உண்மைகளை மறைத்து பா.ஜ.க.வின் ஆட்சியினர் அறிக்கை
விட்டு வருகின்றனர்.
இவர்களுடைய பொய்களையும் பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்த கடந்த இரண்டு மாதங்களில் நடைபெற்ற
இரு நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டினாலே போதுமானது:
ஏப்ரல் 10ந் தேதி மத்தியப் பிரதேசத்தில் உள்ள
கர்கோன் நகரில் ராம நவமியை ஒட்டி இந்துத்துவப் பரிவாரங்கள் தொழுகை நடந்து
கொண்டிருந்த மசூதி வழியே ஊர்வலத்தை நடத்திக் கலவரத்தைத் தூண்டினர். கலவரத்தை
தடுத்த பிறகு, கலவரத்தில் ஈடுபட்டவர்களைத்
தண்டிக்கிறோம் எனக் கூறி, அப்பகுதியில் இருந்த முஸ்லீம் மக்களின்
வீடுகளையும், கடைகளையும் புல்டோசர்களைக் கொண்டு இடித்தது மத்தியப் பிரதேசத்தில்
உள்ள பா.ஜ.க. அரசு.
அதே போன்ற ஒரு நாடகத்தை ஏப்ரல் 16 ந் தேதி
இந்துத்துவப் பரிவாரங்கள் தில்லியில் ஜகாங்கிர்புரியில் அரங்கேற்றம் செய்தன. அன்று
இரமலான் மாதத் தொழுகை நடைபெற்று வந்த மசூதி வழியே ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தைப்
போலிஸ் அனுமதி இல்லாமலேயே இந்துத்துவப் பரிவாரங்கள் நடத்திக் கலவரத்தைத் தூண்டி
விட்டன. அதற்குத் தண்டனையாக தில்லி மாநகராட்சியில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்
பா.ஜ.க.வின் ஆணைப்படி, அப்பகுதியில் வசித்து வந்த முஸ்லீம் மக்களின் வீடுகளையும்
கடைகளையும் புல்டோசர்களைக் கொண்டு எதேச்சதிகாரமாக இடித்துத் தள்ளினர்.
பா.ஜ.க.வின் ஆட்சியில் எவ்வாறு அனைத்து
மதத்தினரும் “சமமாக” மதிக்கப்படுகின்றனர் என்பதற்கு இவைகளே சிறந்த எடுத்துக்
காட்டுகள்!
இவை போன்றே குடியுரிமைத் திருத்தச் சட்டம்,
கஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பறிப்பு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இவர்கள்
எவ்வாறு அனைத்து மதங்களையும் “சமமாக” நடத்துகின்றனர் என்பதைப் புரிந்து கொள்ளலாம்!
இந்தியாவில் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட சிறுபான்மையினரான
முஸ்லீம் மக்களின் உரிமைகளைப் பறித்தும் அவர்கள்
மீது தொடர்ந்து தாக்குதல்களைத் தொடுத்தும் வரும் பா.ஜ.க.வும் அதன் சங்கப்
பரிவாரங்களும் இங்குள்ள மக்களின்
கண்டனங்களையும் ஜனநாயக அமைப்புகளின் எதிர்ப்புகளையும் ஒரு சிறிதும் சட்டை
செய்ததில்லை. அனைத்தையும் கால் தூசியாகக் கருதி வந்தன. ஆனால் இன்று வளைகுடா நாடுகளின் கண்டனங்களுக்குப்
பயந்து பதறியடித்துச் சமாதானம் கூறிக் கொண்டிருக்கிறது. அதற்கான காரணங்கள் என்ன?
வளைகுடா நாடுகளுடனான வர்த்தக உறவுகளும்
இந்தியாவில் அந்த நாடுகளின் முதலீடுகளும்
இந்தியப் பொருளாதாரத்தின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் அளவில்
உள்ளன. 2021-2022 ஆண்டில் மட்டும் வளைகுடாவில் உள்ள ஏழு நாடுகளுடனான இந்தியாவின்
வர்த்தகத்தின் மதிப்பு 18900 கோடி
டாலர்களாகும். அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 14,55,300 கோடியாகும்.
இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதியில் வளைகுடா நாடுகளின் பங்கு 18.3% ஆக உள்ளது. அரபு நாடுகளில் மட்டும் இந்திய
ஒன்றியத்தைச் சார்ந்தவர்கள் 80 இலட்சம்
பேர் வேலை செய்கின்றனர். இந்தியாவிலிருந்து வெளி நாடுகளில் சென்று வேலை செய்பவர்கள்
இந்தியாவிற்கு அனுப்பும் மொத்தத் தொகையில் 55%
பங்கை ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன் ஆகிய
நாடுகளில் வேலை செய்பவர்கள் அனுப்புகின்றனர். இந்தியா தனது எரிபொருள் தேவைக்காக
40% கச்சா எண்ணையை அரபு
நாடுகளிலிருந்தும், ஈரானிலிருந்தும் இறக்குமதி செய்கிறது.
இவை மட்டுமல்லாமல், அரபு நாடுகள் இந்தியாவில்
நேரடியாகப் பெரும் அளவு முதலீடுகளையும் செய்துள்ளன. ஏப்ரல் 2000லிருந்து இது
வரையிலும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவில் 1222.5 கோடி டாலர்களை முதலீடு
செய்துள்ளது. இந்தியாவில் முதலீடு செய்துள்ள அந்நிய நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகம்
முதல் பத்து இடங்களில் ஒன்றாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அந்த நாடு
550 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. சவூதி அரேபியா 314.6 கோடி டாலர்களை
முதலீடு செய்துள்ளது. இவற்றால் பெரும் இலாபம் அடைந்து வருபவர்கள் இந்திய
முதலாளிகளும் அதிகாரவர்க்கமும் ஆட்சியாளர்களும் தான் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
இந்த நிலையில் வளைகுடா நாடுகளுடன் பகைமை என்பது
இந்திய முதலாளிய ஆளும் வர்க்கத்தினால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று; பகைத்துக்
கொள்வது என்பது யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போன்றதுதான்.
காங்கிரஸ் மக்கள் செல்வாக்கை இழந்த பிறகு இந்திய ஆளும் முதலாளிய வர்க்கம் தனக்குச் சேவை செய்யும் நம்பகமான சேவகனாக பா.ஜ.க.வை ஆட்சிக் கட்டிலேற்றியது. தொடர்ந்து மத வெறியை மூட்டி மக்களைப் பிளவுபடுத்தி ஒரு பிரிவை இன்னொரு பிரிவுடன் மோத விடும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் ஆளும் சுரண்டும் வர்க்கத்திற்குச் சாதமாக இருந்து வருகின்றன. அதன் மூலம் மக்கள் தம்முடைய வறுமைக்கும், வேலையில்லாத் திண்டாட்டத்திற்கும், விலைவாசிகளின் ஏற்றங்களுக்கும் காரணம் முதலாளிய வர்க்கத்தின் சுரண்டல்களும் ஆட்சியும்தான் என்பதை அறிய விடாமல் தடுத்து வருகிறது; அனைத்து மதங்களையும் சார்ந்த தொழிலாளர்களையும் விவசாயிகளையும் பிற உழைக்கும் மக்களையும் முதலாளிய வர்க்கத்திற்கு எதிராக ஓரணியில் திரள விடாமல் தடுத்து வருகிறது.
தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆட்சியில்
இருந்து வரும் பா.ஜ.க.வும் அதன் இந்துத்துவச் சங்கப் பரிவாரங்களும் இந்து
ராஜ்யத்தை அமைக்கும் கனவுகளில் மூழ்கி விட்டன. இங்குள்ள அனைத்துச் சிறுபான்மை மதத்தினரையும்
இரண்டாந்தரக் குடிமகன்களாக்கி
உரிமையற்றவர்களாக மாற்றும் செயலில் இறங்கி விட்டன. அதிகார வெறி கொண்ட
சாமியார்களும், ஆட்சியில் உள்ளவர்களும் கை கோர்த்துக் கொண்டு சிறுபான்மை
மதத்திற்கு எதிரான விசமக் கருத்துகளைப் பரப்பி வருகின்றனர்; அவர்கள் மீது அரசியல்,
சமூக, பொருளாதார, கலாச்சாரத் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான்
பா.ஜ.க.வின் ஊதுகுழல்களான நுபுர் சர்மா, நவீன் குமார் ஆகியோரின் தாக்குதல்கள்.
ஆனால்
இந்தப் பிற்போக்குவாதிகளுக்கும் மக்கள் விரோதிகளுக்கும் இன்றைய முதலாளியப் பொருளாதாரம்
உலகு தழுவிய அளவில் எப்படிப் பின்னிப்பிணைந்து இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது
தெரியாது. அதனால் இந்திய முதலாளிகள் எவ்வாறு பயன் அடைந்து வருகின்றனர் என்பதும்
தெரியாது. இந்தியாவில் எதை வேண்டுமானாலும் தங்களால் செய்ய முடியும். யாராலும்
அதைத் தடுக்க முடியாது என்று ‘முட்டாள்களின் சொர்க்கத்தில்’ அவர்கள் வாழ்ந்து
கொண்டிருக்கின்றனர்.
முதலாளிகளின் வாழ்வும் வளர்ச்சியும் உயிர்
நாடியும் இலாபத்தை அதிகரிப்பதிலும் மூலதனத்தைத் திரட்டுவதிலும்தான் உள்ளது. ஆனால்
பா.ஜ.க. வின் செயல்பாடுகள் இன்று இந்திய முதலாளிய வர்க்கத்தின் உயிர் நாடிக்கே,
வாழ்வுக்கே பேராபத்தைக் கொண்டு வந்துள்ளன. அரபு நாடுகளுடனான வர்த்தகத்திற்கும்
அவர்களிடமிருந்து பெரும் முதலீடுகளுக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ளன. அரபு நாடுகளில்
வசிக்கும் 80 இலட்சம் இந்திய மக்களின்
எதிர்காலம் கேள்விக்குள்ளாகியுள்ளது. அவர்களிடமிருந்து கிடைத்து வரும் வருவாய்க்கு ஆபத்தை விளைவித்துள்ளது. தனது ஆட்சியின் தேரில் பிணைக்கப்பட்டுள்ள
பா.ஜ.க. என்னும் குதிரையைத் தன் போக்கில் விட்டால் தனது முதலுக்கும்
இலாபத்திற்கும் பெரும் ஆபத்து வந்து விடும் என்பதை அறிந்து கொண்ட முதலாளிய
வர்க்கம் இன்று கடிவாளத்தை இறுக்கிப் பிடித்துக் குதிரையைத் தன் கட்டுப்பாட்டுக்குள்
கொண்டு வர முயற்சிக்கிறது. அதன் விளைவுதான் பா.ஜ.க. நொண்டிக் காரணங்களைக் கூறி
அரபு நாடுகளைச் சமாதானப்படுத்தும் நடவடிக்கைகள். குதிரை தன் எல்லையை அறிந்து
கொண்டு, எஜமானின் நலன் அறிந்து ஓடினால் அது
ஆட்சித் தேரில் தொடர்ந்து பிணைக்கப்பட்டிருக்கும்; தொடர்ந்து வெறி கொண்டு கட்டுக்கு
அடங்காமல் ஓடினால் முதலாளிய வர்க்கம் அதை விரட்டி விட்டு வேறொரு குதிரையை ஆட்சித்
தேரில் பிணைக்கும்.
பா.ஜ.க. தன் எஜமானனின் கட்டளைக்குக்
கட்டுப்பட்டதாகத் தற்காலிகமாக நடிக்கலாம்; அடக்கி வாசிக்கலாம். தனது கட்சியில்
உள்ள சிலர் மீது நடவடிக்கை எடுப்பதாகக் காட்டிக் கொள்ளலாம். ஆயினும் அது
இதுவரையிலும் தனது கட்சியிலும் சங்
பரிவாரங்கள் மத்தியிலும் வளர்த்துவிட்டுள்ள இந்து ராஜ்யக் கனவை அவ்வளவு எளிதாகக்
கலைத்துவிட முடியாது. அந்தக் கட்சியின்
ஆதாரத் தூண்களாக உள்ள இந்துத்துவ வெறியர்களின்
பிற்போக்கான மக்கள் விரோத, ஜனநாயக
விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியாது.
பா.ஜ.க.வையும் இந்துத்துவ வெறியர்களையும் வீழ்த்த
வேண்டுமானால் அவர்களின் எஜமானனாக இருக்கும் முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தையும் சுரண்டலையும்
வீழ்த்த வேண்டும். அதற்கான திறவுகோல் பாட்டாளி வர்க்கத்திடம் தான் உள்ளது.
அனைத்துப் பொருள்களின் உற்பத்தியிலும், அவற்றின்
விநியோகத்திலும் இதயத்
துடிப்பாகவும் இரத்த ஓட்டமாகவும் உள்ள
பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின் கீழ் அனைத்து உழைக்கும் மக்களும் ஓரணி திரள்வதன்
மூலமே முதலாளிய வர்க்கத்தின் சுரண்டலுக்கும் அதிகாரத்துக்கும் முடிவு கட்ட
முடியும். முதலாளிய வர்க்கத்தின் சேவகனாக உள்ள பா.ஜ.க. வின் மக்கள் விரோத
நடவடிக்கைகளுக்கும் முடிவு கட்ட முடியும்.
- சோசலிசத்
தொழிலாளர் இயக்கம்
Comments
Post a Comment