Skip to main content

ஆளும் வர்க்கமும், ஆளும் கட்சிகளின் ஏமாற்றுச் சித்து வேலைகளும்!

பாஜகவும், அதன் சங்பரிவாரங்களும் தொடர்ந்து மத நச்சுக் கருத்துகளைப் பரப்புவதும், சிறுபான்மை மதத்தினரின் மீது தாக்குதல் நடத்தி அவர்களை அச்சத்தில் வைத்திருப்பதும், பெரும்பான்மை இந்து மதத்தை ஆதிக்க அடையாளமாகப் பயன்படுத்துவதுமாகவும் செய்து வருகின்றன. மேலும், வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராகப் போலி அறிவியலைப் பரப்புவதும், இதன் மூலம் தன்னுடைய மதரீதியிலான ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றன.

இந்திய முதலாளிய ஆளும் வர்க்கத்தின் அகோரப் பசிக்காக அனைத்து வளங்களையும், செல்வங்களையும் தாரை வார்க்கவும், வரைமுறையின்றி, கேள்விக்கிடமின்றித் தொழிலாளர்களைச் சுரண்டவும் பல்வேறு வழிவகைகளைச் செய்துக் கொடுத்து வருகிறது பிஜேபி அரசு, இதனால் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்பட்டு வரும் கடுமையான நெருக்கடிகளைப் பற்றி மக்கள் சிந்திக்காமல் தடுப்பதற்காக  அவர்களை மத ரீதியாகவும், சாதி ரீதியாகவும் பிரித்து வைக்கவும், ஒருவருக்கொருவரை எதிரியாக்கி மோதவிட்டு அதன் மூலம் அவர்களிடையே வர்க்க ஒற்றுமை ஏற்பட்டு விடாமலும் பார்த்துக் கொள்கிறது.

அந்த வகையில் தற்பொழுது பிஜேபி கர்நாடகாவில் எடுத்துள்ள ஆயுதம் தான் விநாயகர் சதுர்த்தி. இன்னும் ஒன்பது மாதங்களில் கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் இந்த மத அடையாள ஆயுதத்தைக் கையிலெடுத்துள்ளது.

கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், முழுச் சுதந்திரத்துடன் வழக்கம் போலக் கொண்டாடலாம் என்றும் கர்நாடகக் கல்வித்துறை அமைச்சர் பி சி நாகேஷ் அறிவித்துள்ளார்.

இந்திய அரசு மதச் சார்பற்ற அரசு என்று கூறிக் கொண்டாலும் கூட இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் அரசு விழாக்களிலும், அலுவலகங்களிலும் இந்து மதச் சடங்குகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக முற்போக்குச் சக்திகள் சட்டப்படியாக தொடர்ந்து போராடி வந்தாலும், பெரும்பாலான இடங்களில் அவை நீடித்து வருகின்றன.

ஆளும் கட்சிகள் மக்களிடையே மத உணர்வுகளை ஊட்டி அதன் மூலம் தங்களுடைய முதலாளிய வர்க்கச் சார்பையும், உழைக்கும் மக்கள் விரோதச் செயல்பாடுகளையும் மூடிமறைக்கப் பல்வேறு வழிகளைத் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தான் கர்நாடகாவில் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடத் தடையில்லை எனக் கூறி அதனைக் கொண்டாடுவதற்கு மறைமுக அழைப்பு விடுத்ததாகும். விநாயகர் சதுர்த்தி என்பது இந்திய விடுதலைப் போராட்டத்தின் முக்கிய ஆயுதமாக விளங்கியது எனக் கூறி அதற்கு ஒரு தேச பக்தக் கதையை உள்நுழைக்கிறார். அதே சமயத்தில் பிற மத பண்டிகைகளுக்குக் கல்விக் கூடங்களில் இடமில்லை எனக் கூறுகிறார்.

கடந்த ஆண்டு இறுதியிலும், இந்த ஆண்டுத் தொடக்கத்திலும் எழுந்த ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சனையில் இதேக் கல்வித்துறை அமைச்சர் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்று கூறினார். கர்நாடக அரசும், கல்விக் கூடங்களில் எந்த மத அடையாளங்களையும் அனுமதிக்க முடியாது எனப் பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அம்பேத்கரின் கூற்றை   நீண்ட மேற்கோளாகக் காட்டிக் கல்விக் கூடங்களில் மத அடையாளங்கள் அனுமதிக்க முடியாது என மார்ச் 15 ஆம் தேதி தீர்ப்பளித்தது. கர்நாடக அரசின் இந்தச் செயல்பாடுகள் எல்லாம், மதச் சார்பின்மைக்கான முன்னெடுப்புகள் என்று கருதினால் அது முட்டாள்தனமாகும்.

அவர்களின் நோக்கம் சிறுபான்மை மதத்தினர், அதுவும் குறிப்பாக முஸ்லீம் மக்கள் அரசு சார்ந்த இடங்களில் மத அடையாளங்களைப் பின்பற்றுவதைத் தடுப்பது என்பது தான். மற்றபடி, பெரும்பான்மை இந்து மக்களுக்கு மத அடிப்படையிலான சலுகைகளை வழங்குவது, மத அடையாளங்களை அரசு சார்ந்த இடங்களில் பின்பற்ற அனுமதிப்பது மற்றும் அதனைத் தானே திட்டமிட்டு ஊக்குவிப்பது என்பது தான் பிஜேபி-யின் உண்மையான நோக்கம்.

இந்து மத அடிப்படைவாதிகளின் இந்துத்துவ அடையாளச்  செயல்பாடுகளை ஒரு வாய்ப்பாகக் கொண்டு முஸ்லீம் மத அடிப்படைவாதிகளும் தங்கள் மதக் கருத்தியல்களைக் கல்விக் கூடங்களில் பரப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். கர்நாடகா வக்பு வாரியத் தலைவர் ஷபி ஷாதி, முஸ்லீம் மாணவர்கள் தினந்தோறும் வழிபாடு செய்வதற்குக் கல்விக் கூடங்களில் தனியான இடம் ஒதுக்க வேண்டும், முஸ்லீம் பண்டிகைகளைக் கொண்டாட அனுமதிக்க வேண்டும், இஸ்லாமிய மதக் கருத்துக்களைப் போதனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பெரும்பான்மை இந்து மக்களின் வாக்கு வங்கியைத் தக்க வைத்துக் கொள்வதற்கான பாஜகவின் சூழ்ச்சி தான் விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டத்திற்கான அறிவிப்பாகும். சிறுபான்மை முஸ்லீம் மக்கள் மீது மத வெறுப்புகளைக் கட்டவிழ்த்து விட்டு அதன் மூலம், இந்து மக்களைத் தன் பக்கம் இழுத்து பெரும்பான்மையாக உள்ள அவர்களின் வாக்குகளைப் பெற  பாஜக செய்யும் மலிவான தந்திரம் தான் இது. அதன் ஒரு பகுதியாகவே, காசி யாத்திரைக்குச் செல்லும் இந்துக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயை மானியமாக வழங்குவதைக் கடந்த ஜூன் மாதம் முதல் அமல்படுத்தி வருகின்றது கர்நாடக பாஜக அரசு.

ஹஜ் பயணத்தின் மூலம் ஏர் இந்தியா நிறுவனம் அதிக இலாபத்தை ஈட்டி வந்ததால், தனியார் விமான நிறுவனங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனால், தனியார் விமான நிறுவனங்களின் இலாபத்தைப் பெருக்கவும், இந்து மத அடிப்படைவாதிகளின் நன்மதிப்பை அதிகரித்துக் கொள்ளவும் முஸ்லீம்களுக்கு ஹஜ் பயணத்திற்கு வழங்கப்பட்டு வரும் மானியத்தை 2018 இல் மோடி அரசு ஒழித்துக் கட்டியது. ஆனால், கும்பமேளா, மானோசரோவர் யாத்திரை ஆகியவற்றிற்கு இந்திய அரசு தொடர்ந்து மானியங்களை வழங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும், கடந்த மார்ச் மாதத்தில் கர்நாடகாவின் ஷிவ்மோகா மற்றும் காவ் பகுதியில் நடைபெற்ற இந்து மதப் பண்டிகைகளில் முஸ்லீம் வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கக் கூடாது எனக் கூறி இந்துத்துவ அமைப்புகள் கோவில் நிர்வாகக் கமிட்டிகளை அச்சுறுத்தி, அவர்களே (முஸ்லீம் அல்லாதவர்களுக்கு) கடைகளை ஒதுக்கும் முடிவை எடுத்துச் செயல்படுத்தினர்.

மத்தியில் மோடி அரசுநான் இதற்குக் கொஞ்சமும் சளைத்தவனல்ல எனக் கூறி 75வது  சுதந்திர தின நிகழ்ச்சியில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் அடிபணிந்து மன்னிப்புக் கேட்ட ஆர்எஸ்எஸ் இன் நிறுவனர் சாவர்க்கரை சுதந்திரத் தியாகியாகச் சித்தரித்து வரலாற்றைத் திரித்து வருகின்றது. தொடர்ந்து வரலாற்றைத் திரிப்பதும், அறிவியலுக்கு எதிராக மூடநம்பிக்கை கருத்துகளை பரப்புவதும், போலி அறிவியல் கருத்துகளைப் பரப்புவதும் எனச் சமூகத்தைப் பின்னோக்கிக் கொண்டு செல்லப் பார்க்கிறது.

கடுமையான சுரண்டலும் பெரும் ஏற்றத்தாழ்வும் நிலவி வரும் சமூகத்தில், பெரும் துன்பங்களிலும் துயரங்களிலும் உழன்று வரும் மக்களை பொய்யான வாக்குறுதிகளை அளித்தும் சில்லறைச் சீர்த்திருத்தங்களைச் செய்தும் ஆளும் வர்க்கத்தின் ஏஜண்டுகளான முதலாளியக் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன; அடிப்படையான பிரச்சனைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்குச் சாதி மத அடையாளங்களைப் பயன்படுத்துதல் என்று பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆளும் வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக முதலாளியக் கட்சிகள் செய்து வரும் பல்வேறு ஏமாற்றுச் சித்து வேலைகளையும், மக்கள் மீது தொடுத்து வரும் ஜனநாயக விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்துவதும், அதன் மூலம் மக்களிடத்தில் அரசியல் பற்றிய விழிப்புணர்வூட்டி அவர்களை ஆளும் வர்க்கத்திற்கு எதிராக அணி திரட்ட வேண்டியதுமான மாபெரும் கடமை வர்க்க உணர்வு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு இன்று இருக்கிறது.

குமணன்

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்


Comments

  1. பல்வேறு வகைகளில் ஆளும் கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதற்கு எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல என்பதைத் தொடர்ந்து அனுபவப்பூர்வமாக மக்கள் உணர்ந்து வருகின்றனர்.
    Is it really so.i doubt people have realised.

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு மாற்று வழி தெரியாதால் வேறு வழியின்றி கட்சிகளை மாற்றி மாற்றித் தேர்ந்தெடுக்கின்றனர். சரியான அரசியல் மாற்று இருக்குமானால் அதன் பின் அணி திரள்வார்கள்.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...