ஓ.என்.ஜி.சியைக்(எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கழகம்) காப்போம்! ஓ.என்.ஜி.சி ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பாதுகாப்போம் என்ற பெயரில் ஏஐடியூசி மற்றும் சிஐடியூ தலைமையில் விவசாயிகள் - தொழிலாளர்கள் ஒற்றுமைப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி திருவாரூரில் நடத்தப்பட்டு இறுதியில் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது
இந்தப் போராட்டத்தில்
இவர்கள் முன்வைக்கும் பிரதான கோரிக்கைகள் என்ன? பொதுத் துறையில் இயங்கும் ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகள் தடைபடாமல்
இருக்க வேண்டும். அதன் மூலம் தொழிலாளர்கள் - விவசாயிகள் வர்க்கம் செழிப்போடு இருக்க
முடியும் என்பது தான். இதற்காக அவர்கள் ஓ.என்.ஜி.சியின் ஊதுகுழல்களாக மாறிவிட்டனர்.
ஓ.என்.ஜி.சியே சொல்வதற்கு வெட்கப்படும் விசயங்களைக் கூட இவர்கள் சொல்லி அவர்களுக்கு
வள்ளல் பட்டம் வழங்கி பூஜிக்கின்றனர்.
இது குறித்துப்
பின்னர் பார்ப்போம். ஓ.என்.ஜி.சியால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் எத்தகைய பயனை
அடைந்து வருகின்றார்கள் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
தொழில் பூங்காக்கள்
அமைப்பதற்கு, இயற்கை வளங்களை எடுப்பதற்கு, சாலை,
இரயில்வே, விமானப் போக்குவரத்து எனக் கட்டமைப்பு
வசதிகளை விரிவுபடுத்துவதற்கு எனப் பல்வேறு தேவைகளுக்காக விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக
நிலம் பறிக்கப்பட்டு, அவர்கள் வாழ்வாதாரத்தைச் சூறையாடி அதன்
மீது தான் இத்தகைய தொழில் துறை வளர்ச்சி நடந்து வருகின்றது.
விவசாயம் செய்ய
முடியாத நிலம் அல்லது வளம் குறைந்த நிலம் ஆகியவற்றில் இத்தகைய தொழிற்பூங்காக்களை
நிறுவாமல், தண்ணீர் வசதி, கட்டமைப்பு வசதி, கழிவு நீரை அப்புறப்படுத்தும் வசதி ஆகியவற்றிற்கு ஏதுவாக வளமிக்க விவசாய நிலத்தையே
முதலாளிகள் குறி வைக்கின்றனர். இதற்கு ஏதுவாக அரசும் தொழில்
வளர்ச்சி என்ற பெயரில் வளமிக்க விவசாய மண்டலங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகின்றது.
மேலும், வரைமுறையின்றி இயற்கை வளங்களைச் சூறையாடுவது
குறித்தோ, அல்லது தொழில் நிறுவனங்களால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும்
பாதிப்புகள் குறித்தோ, மக்களின் உணவு, குடிநீர்
உள்ளிட்டவை மாசடைவது குறித்தோ அரசு சிறிதும் கவலைப்படுவதில்லை.
மேற்சொல்லப்பட்ட
அத்தனை விதமான பாதிப்புகளையும் ஓ.என்.ஜி.சி. கடந்த 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஏற்படுத்தி
வருகின்றது. இந்தப் பாதிப்புகளை உணர்ந்த விவசாயிகள் சமீபகாலமாக,
ஓ.என்.ஜி.சி, ஜெம்நிறுவனம், வேதாந்தா நிறுவனம்
ஆகியவற்றிற்கு எதிராக நீண்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2017 ல் தொடங்கி ஓராண்டிற்கும் மேலாக நீடித்த கதிராமங்கலம் போராட்டம்,
194 நாட்கள் நீடித்த நெடுவாசல் போராட்டம் ஆகியவை இதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
விவாசாயிகளின் தொடர்
காத்திருப்பு போராட்டங்கள் மற்றும் சட்ட ரீதியான வழக்குகள் ஆகியவற்றின் காரணமாக இந்த
நிறுவனங்களின் வேலைகள் தடைப்பட்டன. இந்த நிறுவனங்கள் உடனடியாக வேலையைத் தொடங்கிடுவதற்கு
ஏதுவாக சுற்றுச் சூழல் அனுமதி, மக்கள் கருத்துக் கேட்பு உள்ளிட்ட
அனைத்து நிபந்தனைகளையும் தளர்த்தி மாநில அரசின் அனுமதி இருந்தால் போதுமானது என்று அறிவித்தது
இந்திய அரசு. இதனால் விவசாயிகள் போராட்டங்கள் அதிகரிக்கவே தமிழ்நாடு
அரசு பிப்ரவரி 2020 இல் காவிரி டெல்டா பகுதியைப் ‘பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக’ அறிவித்தது.
விவசாயிகளின் போராட்டங்களின்
காரணமாக காவிரி டெல்டா பகுதியில்
புதியதாக இயற்கை எரிபொருட்கள் எடுக்கும் பணிகள் எதற்கும் அனுமதி கிடையாது
என்ற நிலை ஏற்பட்டது. ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் எரிபொருள்
கிணறுகளையும் மூட வேண்டும் என்று விவசாயிகள் கோரி வருகின்றனர். ஆனால், ஓ.என்.ஜி.சியோ பழைய கிணறுகளைப் பராமரிப்பது என்ற பெயரில் புதிய
கிணறுகளை அமைப்பதற்கான வேலைகளில் ஆங்காங்கே ஈடுபட்டு வருவதால் விவசாயிகளுக்கும் ஓ.என்.ஜி.சி.க்கும் மோதல்கள் ஏற்பட்டு
வருகின்றன.
விவசாயிகளின்
இந்தக் குற்றச்சாட்டுகளை ஆதாரமற்ற குற்றசாட்டுகள் எனவும், அவதூறு பரப்புகிறார்கள் எனவும், அன்னியக் கைக்கூலிகள்
என்றும் அந்த விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஏஐடியூசியும் சிஐடியூம்
கோருகின்றன. ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் கிளர்ந்தெழுந்து
போராடும் பொழுதெல்லாம் அவை அன்னிய சக்திகளின் சதி என அரசும் அதிகார வர்க்கங்களும் கொச்சைப்படுத்துவதுப்
போன்று இந்தப் போலி இடதுசாரிகளும் விவசாயிகளின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்றன.
திருவாரூர் மாவட்டம்
கமலாபுரம் கிராமத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு விவசாய நிலம் பாதிக்கப்பட்டது. அடியக்கமங்கலம், பெரியகுடி பகுதிகளில் பழைய எண்ணெய்க் கிணறுகளை மராமத்து செய்வதாகக் கூறி அரசின்
அனுமதியின்றி புதியக் கிணறுகளை அமைக்கும் பணிகளை ஓ.என்.ஜி.சி. மேற்கொண்டது. விவசாயிகள்
ஓ.என்.ஜி.சிக்கு எதிராகப்
போராட்டக் களத்தில் குதித்தனர். விவசாயிகளின் போராட்டத்தின் காரணமாக
இவை தடுக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட ஓ.என்.ஜி.சி.யின் குமுறலைத்தான் இந்தப் போலி இடதுகள் வெளிக்
காட்டியுள்ளன.
அதற்கு அவர்கள் பயன்படுத்திய இன்னொரு ஆயுதம் தான் தொழிலாளர்களின் நலன் என்பது. உண்மையில் இதில் தொழிலாளர்களின் நலன் எத்தகையதாக உள்ளது என்பதையும் பார்ப்போம்.
ஓ.என்.ஜி.சி.யில் பணிபுரியும் தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளதாகவே
(அதுவும் 40 ஆண்டுகாலமாக!) அவர்களுடைய அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் இத்தனை
ஆண்டு காலமாக ஒப்பந்தத் தொழிலாளர்களாக உள்ளனர் என்பது குறித்து ஓ.என்.ஜி.சி.யிடம் இந்தப் போலி இடதுகள்
ஏன் தொடர் போராட்டங்களை நடத்தவில்லை (அவ்வப்பொழுது பெயரளவிற்கு
அடையாளப் போராட்டங்கள் நடந்திருக்கலாம்). அரசு நிறுவனங்களே,
தொழிலாளர் சட்டங்களைப் புறந்தள்ளி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக
அவர்களைத் ஒப்பந்தத் தொழிலாளர்களாகத் தொடர்ந்து வைத்திருகின்றன. ஆனால் இதைக்
கண்டித்துக் கடுமையான போராட்டங்களைக் கட்டமைத்து அவர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக
ஆக்குவதற்கு இந்தத் தொழிற்சங்கங்கள் எந்த விதமான முயற்சியும் எடுப்பதில்லை. அதிகார
வர்க்கம் தொழிலாளர்களை மலிவாகச் சுரண்டுவதற்கு இவர்களும் துணைப் போகின்றனர்.
ஓ.என்.ஜி.சி. மட்டுமல்ல, மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகள் அனைத்துத் துறைகளிலும் ஒப்பந்தத் தொழிலாளர்
முறையை புகுத்தி தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வருகின்றன. அரசு அதிகார வர்க்கங்களே அவை இயற்றியுள்ள சட்டங்களை மதிப்பதில்லை. இதன் ஒரு பகுதி தான் சமீபத்தில் இராணுவத்தில் கொண்டு வரப்பட்ட அக்னிபாத் திட்டமாகும்.
அரசே தொழிலாளர் சட்டங்களை மதிக்காமல் மீறி நடக்கும் பொழுது தனியார் நிறுவனங்களைப்
பற்றிச் சொல்லத் தேவையில்லை.
ஏற்கனவே குறிப்பிட்டது
போன்று தொழில்துறைகளுக்காக விவசாய நிலத்தை இழந்த விவசாயிகள் நிரந்தர வேலையோ அல்லது
வாழ்விற்கான உத்திரவாதத்தையோ பெற முடியாமல் உள்ளனர். ஆனால், இந்தப் போலி இடதுகள் உண்மையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனைகளுக்காகவும்,
அதற்கான நிரந்தர தீர்வுகளுக்காகவும் போராடாமல், இவர்களை ஏமாற்றி வரும், சுரண்டி வரும் ஓ.என்.ஜி.சி. போன்ற அரசு நிறுவனங்களைப்
போற்றித் துதி பாடி வருகின்றன.
ஓ.என்.ஜி.சி. எரிபொருள் தேவையை நிறைவு
செய்கின்றது, அன்னியச் செலாவணியை ஈடு கட்டுகின்றது, கோடிக்கணக்கான ரூபாய்களை சமூக நலப் பணிகளுக்காகச் செலவிடுகின்றது என அதனைப்
போற்றி பாராட்டுகின்றன இந்தப் போலி இடதுகள்.
நாட்டின் எரிபொருள்
தேவையை நிறைவு செய்ய வளமான விவசாயத்தை அழித்து தான் செய்ய வேண்டுமா? முதலாளியம் உலகு தழுவிய அளவில் தனது இலாப வெறிக்காக இயற்கை வளங்களைக்
கடுமையாக அழித்து வருகிறது. அதற்கு மக்கள் வாழ்வும் அதற்காக இயற்கையை பாதுகாக்க
வேண்டும் என்ற தொலை நோக்குப் பார்வையும் கிடையாது. அதன் நோக்கம் எல்லாம் குறுகிய
காலத்தில் அதிக இலாபத்தைப் பெறுவது எப்படி என்பதுதான். அதன் விளைவாக பூமி
வெப்பமடைதலும் அதனை ஒட்டி பேரழிவை உண்டாக்கக் கூடிய இயற்கை பேரிடர்களும்
உலகமெங்கும் தொடர்ந்து ஏற்பட்டு வருவதை பார்க்கின்றோம்.
உயிரினங்கள்
வாழ்வதற்குத் தகுதியற்றதாக இந்தப் புவிக் கோளத்தை முதலாளியம் வேகமாக அழித்து வருகிறது.
அதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நிலத்தடி எரிபொருளை அனைத்துக்கும்
பயன்படுத்துவதுதான். இந்த நிலையில்தான் புவிக் கோளத்தை சுற்றுச் சூழல்
அழிவிலிருந்து காப்பாற்ற உலகெங்கும் மக்கள் போராடி வருகின்றனர். உலகம் முழுவதும் உள்ள
நாடுகள் சுற்றுசூழலைப் பாதுகாக்கும் பொருட்டு மரபுசாரா ஆற்றல் உற்பத்தியை நோக்கிச்
சென்று கொண்டிருக்கின்றன. காற்று, சூரியஒளி போன்றவற்றைப் பயன்படுத்தி மின்
உற்பத்தி செய்வது, நைட்ரஜன் வாயு மூலம் மின் உற்பத்தி செய்வது, தாவரங்களிலிருந்து எத்தனால்
போன்ற எரிபொருள்களைத் தயாரிப்பது என்று பல்வேறு மாற்று வழிகளில் மின் உற்பத்தி
தயாரிப்புக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓ.என்.ஜி.சி. அத்தகைய மாற்று
வழிகளில் ஈடுபடாமல் இயற்கையை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி
ரூபாய்களைப் பன்னாட்டு முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளாக இந்திய அரசு கொடுப்பதை நிறுத்தினாலே
அன்னியச் செலாவணியை ஈடுகட்ட முடியும். ஆனால் அதனை வலியுறுத்தாமல்,
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டும் ஓ.என்.ஜி.சியை பாராட்டி மகிழ்கின்றன.
தஞ்சை வேளாண்
மண்டலம் பல்லாயிரம் ஆண்டுகள் மக்களுக்கு உணவு அளித்து வருகிறது. வருங்காலத்திலும்
தொடர்ந்து உணவு அளித்து வரும் வளமான பூமி. ஆனால் முதலாளியம் தனது இலாபத்திற்காக
அந்த வளமான பூமியையை பலியிட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிகபட்சம் அங்குள்ள நிலத்தடி
எரிபொருள் ஐம்பது ஆண்டுகள் கிடைக்கலாம். நிலத்தடி எரிபொருளை எடுக்கும் இந்த
நிகழ்வுப்போக்கில் தஞ்சை மண்டலம் பயிர் செய்ய முடியாத, முற்றிலும் தகுதியற்ற
நிலமாக மாற்றப்படும். நிரந்தரமாக அதன் வளம் அழிக்கப்படும். முதலாளியத்தின் குறுகிய
கால இலாபத்திற்காக தஞ்சை வேளாண் மண்டலம் நிரந்தரமாக அழிக்கப்படும்.
கம்யூனிஸ்ட்டுகளின்
தொழிற்சங்கங்கள் எனக் கூறிக் கொள்ளும் சி.ஐ.டி.யூ.வும், ஏ.ஐ.டி.யூ.சி. யும்
நீண்ட காலக் கண்ணோட்டத்தில் மனித குலத்தின் வாழ்வுக்கு ஏற்றது எது என்பதைத் திட்டமிட்டுச்
செயலாற்ற வேண்டும். முதலாளிய வர்க்கத்தைப் போல குறுகிய காலக் கண்ணோட்டத்தில்
செயல்படக் கூடாது.
ஓ.என்.ஜி.சி யின் செயல்பாடு தடைப்பட்டால்
அதனால் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும் என இவை கவலைப்படுகின்றன. பாதிக்கப்பட்ட
தொழிலாளர்களுக்கு மாற்று வேலையை வழங்க வேண்டியது ஓ.என்.ஜி.சி மற்றும் அரசின் கடமை. எனவே,
ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று நிரந்தர வேலையை வழங்க வேண்டும் எனப்
போராடாமல், அவர்களை ஓ.என்.ஜி.சி நிறுவனத்திலேயே ஒப்பந்தத் தொழிலாளர்களாய்,
அடிமைகளாய் சொற்ப கூலிக்கு நீடித்திடப் போராடக் கூடாது.
மேலும்
தொழிலாளர்கள் தொடர்ந்து கூலி அடிமைகாளாக இல்லாமல் முதலாளிய வர்க்கத்தின்
சுரண்டலிலிருந்து நிரந்தரமாக அதிலிருந்து விடுபட்டு சோசலிச சமூகத்தை அமைப்பதற்காக
இந்தத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை அணி திரட்ட வேண்டும்.
அதற்குப்
பதிலாக, ஓ.என்.ஜி.சியின் சமூக
நலத்திட்டங்களால் போலி இடதுகள் மனங்குளிர்ந்து நிற்கின்றன. சுரண்டும்
வர்க்கங்கள் தம்முடைய சுரண்டலை மறைக்கவும், இயற்கைச் சூறையாடலை
மறைக்கவும் அந்தப் பகுதி மக்களுக்குச் சில சலுகைகளை செய்து தருகின்றன. இதன் மூலம் தம்மை வள்ளல் போன்று காட்டிக் கொள்கின்றன. இந்த வகையான ஏமாற்றுப் போக்கை வர்க்கங்கள் தோன்றியதிலிருந்தே சுரண்டும் வர்க்கங்கள்
வெவ்வேறு வடிவங்களில் செய்து வருகின்றன. கோவில்களுக்கு நிதியளித்தல்,
குளம், ஏரிகள் அமைக்க, சாலைகள்
அமைக்க, பாட சாலைகள் அமைக்க எனப் பல்வேறு வடிவங்களில் நிதியைத்
தந்து மக்களை ஏமாற்றுகின்றன. இவ்வாறு கொடுக்கப்படும் பணமானது
தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி உபரியாக பதுக்கப்பட்டதன் ஒரு பகுதியே. ஆனால், இதனை மூடி மறைத்து, தங்களது
கருணையுள்ளத்தால் உழைக்கும் மக்களுக்கு நலத்திட்டங்கள் அளிக்கப்படுவதாகச் சுரண்டும்
வர்க்கங்கள் ஏமாற்றுகின்றன. இன்று பெரும் முதலாளிகள் டிரஸ்டுகளை
கொண்டு இது போன்ற ஏமாற்று வேலைகளைச் செய்து வருகின்றனர். இந்த
ஏமாற்று வேலைகளைத் தான் இந்தப் போலி இடதுகளும் உயர்த்திப் பிடிக்கின்றன.
மேலும், இந்த
முதலாளிய சமூகத்தில் விவசாயிகளால் தங்களுடைய நிலத்தைத் தக்க வைத்துக் கொள்ள
முடியாது. ஏனென்றால் தனியார் நிலவுடைமை என்பதே முதலாளிய வளர்ச்சிக்குத் தடையாக
உள்ளது. தனியார் நிலவுடைமையாளரிடம் அதிக விலை கொடுத்து நிலத்தை வாங்கித் தொழில்
நடத்துவது முதலாளி அதிக இலாபம் பெறுவதற்குத் தடையாக உள்ளது. நிலத்தில்
கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்வதை அவன் விரும்புவதில்லை. அது உற்பத்திக்குப்
பயன்படாத, முடக்கப்பட்ட முதலீடாக உள்ளது. எனவேதான் முதலாளி அரசின் உதவியுடன்
விவசாயிகளிடமிருந்து முடிந்த வரையிலும் இலவசமாக அல்லது மிகக் குறைந்த விலையில் நிலத்தைப்
பறிமுதல் செய்ய நினைக்கிறான். அதனால் அரசு அதிகாரத்தையும் முதலாளிய வர்க்கத்தையும்
விவசாயிகளால் எதிர்த்து நிற்க முடிவதில்லை. தங்கள் நிலத்திற்கு ஈடாகப் பாதுகாப்பான
வாழ்வாதாரத்தையும் அவர்களால் பெற முடிவதில்லை. குறிப்பாகச் சிறு, குறு
விவசாயிகளால் அதிகாரத்தை எதிர்த்து நிற்க முடியாது. மேலும் இன்னொரு பக்கம்
அவர்கள் சந்தை விலைகளின் ஏற்ற இறக்கத்தினாலும் கடனாளிகளாக ஆக்கப்பட்டு இறுதியில்
நிலத்தை இழந்து தொழிலாளர் வர்க்கத்திற்குள் தள்ளப்படுகின்றனர்.
விவசாயிகள்
உண்மையில் தங்களுடைய வாழ்வு வளம் பெற வேண்டுமானால் முதலாளிய வர்க்கத்தின்
நலன்களுக்காகச் செயல்பட்டு வரும் இந்த அரசின் அதிகாரத்திலிருந்து விடுபட வேண்டும்.
அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் வழி வகுக்கும் சோசலிச
சமூகத்தை அமைக்கும் பாதையில் அவர்கள் பாட்டாளி வர்க்கத்துடன் கை கோர்க்க
வேண்டும். சோசலிச சமூகத்தில் கூட்டுப் பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் அனைத்து
விவசாயிகளுக்கும் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும். அங்கு தொழில் வளர்ச்சி என்பது
தனிப்பட்ட முதலாளிகளின் நலனுக்கானதல்ல; ஒட்டு மொத்த சமூகத்தின் நலன்களுக்கானது. அங்கு
தொழில் வளர்ச்சிக்காக தனி ஒரு விவசாயி நிலத்தை இழக்கும் நிலையோ வாழ்வாதாரத்தை
இழக்கும் நிலையோ இல்லை. ஏனெனில் நிலம் என்பது சமூகத்தின் கூட்டுச் சொத்து ஆக
இருக்கும். ஒவ்வொருவரின் நலனுக்கும் சமூகம் கூட்டுப் பொறுப்பேற்றுக் கொள்ளும்.
எனவே மக்களைத் திரட்டி சோசலிச சமூகம் அமைப்பது என்ற இலட்சியத்துடன் முன்னேறுவதே
இன்று நமக்கு முன் உள்ள ஒரே வழியாக உள்ளது.
எனவே ஏஐடியூசி மற்றும் சிஐடியூ போலி இடதுகளின் தலைமையில் இன்னும் சில தொழிற்சங்க அமைப்புகளும் இணைந்து நடத்திய போராட்டம் எள்ளளவும் தொழிலாளர்களின் நலனுக்கானதோ அல்லது விவசாயிகளின் நலனுக்கானதோ அல்ல. மாறாக, அதிகார வர்க்க ஓ.என்.ஜி.சியின் நலனுக்கானவை. இதன் மூலம் ஓ.என்.ஜி.சியை அடியொற்றிப் பின்னால் வரவிருக்கும் வேதாந்தா ஜெம் நிறுவனம், ஈஸ்டர்ன் எனர்ஜி நிறுவனம் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கானவை. எனவே தொழிலாளர்களும், விவசாயிகளும் இத்தகையப் போலி இடதுகளை அடையாளம் கண்டு அவர்களை புறந்தள்ளி பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் சோசலிச சமூகத்திற்காக அணி திரள வேண்டும். அதன் மூலமே விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
குமணன்
சோசலிசத் தொழிலாளர்
இயக்கம்
Comments
Post a Comment