தமிழ் நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதற்கு அயல் மாநிலத்
தொழிலாளர்களின் வருகையே காரணம் எனத் தமிழ் இனவாத அமைப்புகள் அவ்வப்பொழுது முழங்கியும்,
தமிழக இளைஞர்களிடையே இனவாத நச்சுக் கருத்துக்களைப் பரப்பியும்
அரசியல் இலாபம் அடையும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
இந்தப் போக்கு, தமிழ் நாட்டில் உள்ள இனவாத அமைப்புகளிடம் மட்டுமல்ல,
உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாடுகளிலும் உள்ள இனவாத சக்திகளிடமும்
உள்ளது,
அவர்கள், இந்தப் பிரச்சனைகளை அவ்வப்பொழுது முன்வைத்து அரசியல் இலாபமடைகின்றனர்.
இந்த முழக்கங்களுக்குப் பின்னால் கணிசமான அளவில் அப்பாவி மக்களை
அணி திரட்டி ஏமாற்றுகின்றனர். தேர்தல் கட்சிகளும் ஆட்சிக் கட்டிலைப் பிடிப்பதற்காக இதே முழக்கங்களைக்
கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றன.
மக்களின் இடப் பெயர்வு என்பது மனிதகுலம் தோற்றம் பெற்ற காலத்திலிருந்தே
புவிக் கோளம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நாகரிக சமுதாயத்திற்கு முந்தைய நாடோடிகளாக இருந்த காலகட்டத்தில்
இடப் பெயர்வு என்பதே விதியாக இருந்தது. நாகரிக சமுதாயம் அமைந்த பின்னரும் கூட மக்களின் இடப் பெயர்வு
தொடர்ந்து நீடித்து வருகிறது. அது அளவிலும், பண்பிலும் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு
மாதிரியாக இருந்து வருகிறது. ஆனால் வர்க்க சமுதாயம் தோற்றம் பெற்றதிலிருந்து இந்த இடப் பெயர்வானது
ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காகவும், சுரண்டலுக்காகவுமே நடைபெற்று வருகின்றது.
முதலாளியத்தின் தோற்றத்திற்கு பிறகு மூலதனத்தின் இடப் பெயர்வும்,
தொழிலாளர்களின் இடப் பெயர்வும் தவிர்க்க முடியாத விதியாகி விட்டது.
மூலதனம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு நுழைவதற்கு கட்டுபாடுகள்
மிகவும் குறைவு அல்லது ஆளும் வர்க்கங்கள் தங்களுக்குள் உடன்படிக்கை செய்து கொண்டு மூலதன
நுழைவை அனுமதிக்கின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கல் கட்டத்தில் மூலதனத்தின் இடப்பெயர்வுக்கு இருந்த
கட்டுப்பாடுகள் பெரும் அளவு நீக்கப்பட்டு விட்டன என்றே கூறலாம். அந்நிய மூலதன பரவல்
என்பது அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரி நிகழ்வதில்லை,
ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு வழிகளில்,
வேகமாகவோ அல்லது மெதுவாகவோ நடைபெறுகிறது.
உள்நாட்டு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது முறியடிக்கப்பட்டு
மூலதன நுழைவு வெற்றிகரமாக்கப்பட்டு வருகிறது.
ஆனால் தொழிலாளர்கள் இடப் பெயர்வை முதலாளித்துவ நலன்களுக்குத்
தேவையான அளவில் மட்டும் அனுமதிப்பது அல்லது கட்டுபாடுகள் விதிப்பது என அந்த உரிமையை
முதலாளிகள் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையிழப்பது,
வெளியேற்றப்படுவது அல்லது இன முரண்கள் தூண்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாவது
என எப்பொழுதும் ஒருவித அச்சத்தில்தான் வாழ வேண்டியுள்ளது.
முதலாளித்துவத்தின் வளர்ச்சி தொழிலாளர்கள்,
விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், சிறு முதலாளிகள், சிறு வணிகர்கள் எனப் பல்வேறு பிரிவினர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கான
அடித்தளத்தை இழக்கச் செய்கிறது. உழைப்புச் சக்தியை விற்று மட்டுமே பிழைப்பை நடத்தவும்,
முதலாளித்துவத்தைச் சார்ந்து நிற்கவும் செய்கிறது.
முதலாளி வர்க்கமோ சமுகத்தின் தேவையின் அடிப்படையில் உற்பத்தியை
இயக்குவதில்லை. தமக்கு
எது இலாபத்தை ஈட்டித் தருமோ அந்த துறையில் மட்டுமே மூலதனத்தை இயக்குகிறது.
இதனால் சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மூலதனத்தால்
வேலை அளிக்க முடிவதில்லை, சமூகத்தின் தேவைகளும் நிறைவு பெறுவதில்லை.
அதே சமயத்தில் இலாபத்தின் விகிதத்தை மேலும் பெருக்குவதற்கு கூலியைக்
குறைக்க முதலாளித்துவம் முனைகிறது. அதற்காக, உள்நாட்டில் வேலையில்லாத சேமப் பட்டாளத்தை பயன்படுத்தியும்,
வெளி நாடுகளில், குறிப்பாக பின்தங்கிய நாடுகளில் உள்ள தொழிலாளர்களைக் குறைந்த
கூலிக்கு இறக்குமதி செய்தும் உழைப்புச் சந்தையில் போட்டியை உருவாக்கி கூலியைக் குறைக்கிறது.
கூலி உயர்விற்காகவும், பணி நிலைமைகளுக்காகவும் தொழிலாளர்கள் போராடும்பொழுது அவர்களின்
போராட்டத்தை ஒடுக்குவதற்கு வெளியிலிருந்து தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தி தொழிலாளர்களிடையே
மோதல் போக்கை உருவாக்குகிறது. பின்தங்கிய நாடுகளில் வாழ வழியற்ற நிலையில் சொந்த நாட்டை விட்டு
வெளி இடங்களுக்கு பிழைப்புத் தேடி செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது.
இத்தகைய சூழலில் தொழிலாளர்கள் தங்களுக்கிடையேயான ஐக்கியத்தை
பரந்துப்பட்ட அளவில், முன்னெடுக்க வேண்டும். அதாவது சர்வதேச அளவில் முன்னெடுக்க வேண்டும் என்கிறார் மார்க்ஸ்,
“ஆங்கிலேயத் தொழிலாளி வர்க்கத்தால் முன்னெடுக்கபட்ட போராட்டத்தைப்
பற்றிய ஆய்வு, முதலாளிகள் தொழிலாளர்களை எதிர்க்கும் வகையில், வெளி நாடுகளிலிருந்து
தொழிலாளர்களைக் கொண்டு வருகின்றனர் அல்லது உற்பத்தியை மலிவான உழைப்புச் சக்தி கிடைக்கும்
நாடுகளுக்கு இடம் மாற்றுகின்றனர். இத்தகைய சூழலில், தொழிலாளர் வர்க்கம் வெற்றிக்கான சிறிதளவு வாய்ப்புடன்
தன்னுடையப் போராட்டங்களைத் தொடர விரும்புமானால் தேசிய அளவிலான அமைப்புகள் சர்வதேச அளவிலானதாக
மாற வேண்டும்.” (Marx, On the
Lausanne Congress, www.marxist.org)
ஆனால், இனவாதிகளோ தொழிலாளர்களிடையே ஐக்கியத்தை உருவாக்குவதற்குப்
பதிலாக பகைமையை உருவாக்கி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் எதிராக நடந்து கொள்கின்றனர்.
இதன் மூலம் ஆளும் வர்க்கத்தின் நலனை உயர்த்திப் பிடிக்கின்றனர்.
இவ்வாறு வெளி நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களைக்
குறைந்த கூலி கொடுத்து, அதிகளவில் கசக்கிப் பிழியும் முதலாளி வர்க்கம் அவர்களுக்கான
அடிப்படை வசதியைக் கூட செய்து கொடுப்பதில்லை. உள் நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்க வேண்டியுள்ளது
என்பதை மறைத்து விட்டு அவர்கள் சோம்பேறிகள், மிகையான கூலியை எதிர்பார்க்கிறார்கள் எனப் பொய் பிரச்சாரம் செய்கிறது.
மற்றொரு புறம் உள் நாட்டுத் தொழிலாளர்களின் வேலையில்லாத நிலைமைக்கு
காரணம் வெளி நாட்டுத் தொழிலாளர்களின் வருகையே காரணம் என இன முரணைக் கட்டவிழ்த்து விடுகிறது. உண்மையில் மூலதனம் தனியார் வசம் இருப்பதும்,
மூலதன உடைமையாளர்கள் சமூகத்தின் தேவையின் அடிப்படையிலான உற்பத்தியைச்
செய்யாமல் இலாபத்தின் அடிப்படையில் மட்டுமே உற்பத்தியை செய்வதும்தான் வேலை இல்லாத நிலைமைகளுக்கு
காரணமாகும். ஆனால்
குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள் நுழைந்திருக்கும் அயலகத் தொழிலாளர்கள்தான் இதற்குக்
காரணம் எனக் கூறி இந்த உண்மையை மூடி மறைக்கப் பார்க்கிறது.
முதலாளித்துவத்தின் தொடக்கக் கட்டத்தில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டபொழுது,
ஆண்களின் வேலையின்மைக்குக் காரணம் பெண்கள் வேலைக்கு வருவதுதான்
என்ற கருத்து ஆண் தொழிலாளர்களிடையே பரப்பப்பட்டது. பெண்களின் உழைப்புச் சக்தியைக் குறை மதிப்புக்குட்படுத்தி அவர்களின்
கூலியைக் குறைப்பதற்கு முதலாளிகளுக்கு இது வழி வகுத்துக் கொடுத்தது.
தொடக்கத்தில் பெண்கள் வேலையிடங்களில் நெருக்கடிகளுக்கு எதிராகப்
போராடும் பொழுது ஆண் தொழிலாளர்களின் ஆதரவு கிடைக்கவில்லை,
தனித்தே போராட வேண்டியிருந்தது; பாட்டாளி வர்க்கம் வர்க்க உணர்வு பெற்று முதலாளித்துவ சுரண்டலைப்
புரிந்து கொண்ட பிறகுதான் அனைவரும் ஒன்றிணைந்து முதலாளியச் சுரண்டலுக்கு எதிராகப் போராட்டங்களை
முன்னெடுத்தனர்.
முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியினால் வேலையிழப்புகள் ஏற்படும்
பொழுதெல்லாம் இனவாதிகள் அயலார் பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வருகின்றனர்.
இந்த நிலைமையைப் பயன்படுத்திக் கொண்டு பாட்டாளி வர்க்கத்தின்
கணிசமான பகுதிகளைத் தங்களுக்குப் பின்னால் அணி திரட்டிக் கொள்கின்றனர்.
இந்தப் பிரச்சாரத்தில் உள்ளிழுக்கப்பட்ட உழைக்கும் வர்க்க மக்கள்
அயலார் உள்நுழைவைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோருகின்றனர்.
தமிழ் நாட்டில் தமிழ் தேசியப் பேரியக்கம்,
பச்சைத் தமிழகம், தமிழ்த் தேச இறையாண்மை உள்ளிட்ட குழுக்கள் இனவாத கண்ணோட்டத்தில்
இந்தச் சிக்கலை அணுகி தொழிலாளர்களிடையே பிளவுகளையும்,
அச்சத்தையும் விதைத்து அதன் மூலம் அரசியல் பிழைப்பு நடத்துகின்றன.
தமிழ் நாட்டிற்கு வருகை தரும் அயலாரை வெளியேற்ற வேண்டும் என
முழங்கும் பெ.மணியரசன்
அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் சென்று அங்குள்ள தமிழர்களிடையே நிதி திரட்டுகிறார்.
அது மட்டுமல்லாமல் அவர்கள் அங்குள்ள முதலாளிகளுக்கு விசுவாசமாக
நடந்து கொள்ள வேண்டுமெனவும் போதனை செய்கிறார்.
2016
அக்டோபர் 08 இல் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளிவிழா வர்சீனியாவில் உள்ள ஆல்டி
நகரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அமெரிக்காவில் பணி புரியும் தமிழ் தொழிலாளர்களிடையே மணியரசன்
பேசியதாவது:
"அமெரிக்க நாடு கருணையினால் கதவு திறந்து உங்களை அழைத்துக் கொள்ளவில்லை.
உங்களின் அறிவாற்றல்,
செயல்திறன்,
உழைப்பு அனைத்தும் தேவை
என்று கருதி, உங்கள் தகுதியறிந்து, ஆயிரம் சோதனைகளுக்குப் பிறகு உங்களை அழைத்திருக்கிறது.
உங்கள் அலுவலகக் கடமைகளைச்
சிறப்பாகச் செய்யுங்கள்; அதே வேளை நீங்கள் பிறந்த இனத்தின் உரிமை மீட்பிற்கான விழிப்புணர்வுப்
பணிகளையும் விழிப்புணர்வோடு செய்யுங்கள்!" என்று உரையாற்றினார்.
(http://www.kannottam.com/2016/10/blog-post_11.html)
“களப் போராட்டங்களில் கலந்து கொள்வோர் வருக!
கருத்துக்களைப் பரப்ப உதவுவோர்
வருக! நிதி
வழங்க முடிந்தோர், நிதி தாருங்கள்! யார் யார் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றையெல்லாம் செய்யுங்கள்!
செயல்பட்டுக் கொண்டே இருங்கள்!
நாம் வெற்றிபெறுவோம்!”
(http://www.kannottam.com/2016/10/blog-post_11.html)
எந்தக் களம்? அமெரிக்காவில் அயலாராக வந்திருக்கும் தமிழர்கள் வெளியேறி
மீண்டும் தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதற்கான களமா?
எந்தக் கருத்து? அயலார் நாட்டில் புகுந்து அவர்களின் வேலை வாய்ப்பை பறிக்காதீர்கள்
என்ற கருத்தா?
இது இரண்டும் இல்லை. அவருக்கு தேவையானது மூன்றாவதுதான்.
அது அவர்களின் நிதி மட்டுமே.
எந்த முழக்கத்தை முன்வைத்துத் தமிழ் நாட்டில் அவர் அரசியல் பிழைப்பு
நடத்துகிறாரோ அதனைத் தமிழ்நாட்டிற்கு வெளியே உள்ள தமிழர்களிடையே சொல்லும் துணிச்சல்
அவருக்கு இல்லை.
தமிழ் நாட்டில் அயலகத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பைப்
பறிக்கின்றனர். அவர்களை வெளியேற்ற வேண்டும். ஆனால் அயல் நாடுகளில் தமிழர்கள்
இருக்கலாம். இனவாதமும் சந்தர்ப்பவாதமும் இங்கு மணியரசனிடம் எவ்வாறு கைகோர்த்துக்
கொண்டு நிற்கின்றன பாருங்கள்.
அமெரிக்காவில் இத்தகைய இனவாதப் போக்கு இல்லையா?
இவரைப் போன்று இனவாதத்தை கையாள்பவர்கள் அமெரிக்காவிலும் இருக்கிறார்கள்.
அதிபராக இருந்த டிரம்ப் அமெரிக்கர்களின் வேலையின்மைக்குக் காரணம்
அயலார் வருகைதான் என அறிவித்தார். அயலார் வருகையைத் தடுப்பதற்காக அமெரிக்காவிற்கும் மெக்சிக்கோவிற்கும்
இடையே தடுப்புச் சுவர் கட்டப் போவதாக அறிவித்தார், தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திலும் அதனை முன்வைத்தார்.
வெளிநாடுகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு விசா வழங்குவதில்
கட்டுபாடுகளை விதித்தார்.
அமெரிக்காவில் தமிழர்கள் வேலைக்கு நுழைவதை ஆதரித்து அதன் மூலம்
பெ.மணியரசன் ஆதாயம் அடைகிறார். ஆனால், தமிழ் நாட்டில் தன்னுடைய இனவாதத் தூண்டுதல்களுக்கு ஆதரவாக முதலாளித்துவ
கட்சிகளின் வெற்றுச் சொற்களை ஆதாரமாகக் கொள்கிறார். அவர்களின் பொய் வாக்குறுதிகளை நிறைவேற்றபட்ட வாக்குறுதியாக நம்பி
அவற்றின் உண்மைத் தன்மையை அறியாமல் தவறான கருத்துக்களைப் பரப்புரை செய்கிறார்.
உதாரணமாக, 1968 லிருந்து மகாராஷ்டிரத்திலும்,
1986லிருந்து கர்நாடகத்திலும் ’மண்ணின் மக்களுக்கே வேலை’ என்ற நடைமுறை உள்ளது
என்று மணியரசன் கூறுகிறார். உண்மையில் இதுவரை அத்தகைய நடைமுறை அந்த மாநிலங்களில் இல்லை.
அவ்வப்பொழுது அரசியல் சுயநலத்துக்காக ஆட்சியில் இருக்கும் ஓட்டுக்
கட்சிகள் வெறும் அறிவிப்பை மட்டுமே செய்கின்றன. இவ்வாறு அறிவிப்பது சமீப காலம் வரை தொடர்கிறது.
ஆனால், நடைமுறையில் அது சாத்தியமில்லை என்பது அவர்களுக்கு தெரிந்தே
அவர்கள் இத்தகைய வெற்று வாக்குறுதிகளைத் தருகின்றனர்.
இதனை ஆதாரமாகக் கொண்டு தமிழக மக்களிடையே இனவாத வெறுப்புகளை மணியரசன்
வளர்க்க முயல்கிறார்.
உண்மையில் இவர்களின் நோக்கம் தமிழகத்தை சார்ந்த உழைக்கும் மக்களின்
நலனைக் காக்க வேண்டும் என்பதல்ல, மாறாக முதலாளித்துவ உற்பத்தி முறையின் சுரண்டல் தன்மையையும்,
இதனால் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் திசை
திருப்பி தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக நிறுத்தி இதன் மூலம் ஆளும் வர்க்கத்திற்குச்
சேவைசெய்வதாகும்.
தமிழ்தேச இறையாண்மை என்னும் குழுவைச் சேர்ந்த பாரி பாட்டாளி
வர்க்க நோக்கில் ஆய்வை முன்வைப்பதாகக் கூறி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் கட்டுரையை எழுதியுள்ளார்.
உண்மையில் அவரின் பார்வை அப்பட்டமான இனவாதப் பார்வையாக உள்ளதே
தவிர வர்க்க கண்ணோட்டம் சிறிதும் இல்லை.
"தமிழ் நாட்டில் மார்க்சிய-லெனினிய-மாவோவிய குழுக்களின் இந்திய தேசியப் பார்வை வெளியாரை வெளியேற்றுவோம்
என்பதே இனவாதம் எனக் கண்ணை மூடிக் கொள்கின்றன"
என்கிறார் பாரி.
இந்தியாவைப் பெரும்பாலான மார்க்சிய லெனினிய அமைப்புகள் பல்தேசிய
நாடு என்றே வரையறுத்துள்ளன என்பதையும், அவை தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்றன என்பதையும்
அவர் அறியாதவரல்ல. இருப்பினும் அவர்கள் இந்தியத் தேசியப் பார்வையைக் கொண்டுள்ளதாகப்
பொத்தாம் பொதுவாகக் கூறிவிட்டுப் போகிறார். அதை விடப் பெரிய வெட்ககேடு என்னவென்றால்,
வெளியாரை வெளியேற்றுவோம் என்பது இனவாதம் எனக் கூறக் கூடாதாம்!
அடுத்து அவருடைய இன்னொரு வாதம்,
"ஒரு தேசிய இனத்தில் மிகு
எண்ணிக்கையில் வேறு ஒரு தேசிய இனத்தினை அனுமதிப்பது தன்தீர்வு உரிமை கோட்பாட்டுக்கு
எதிரானதாகும்" என்பதாகும்.
தேசிய இனக் கலப்பு கூடாது என்கிறார் பாரி. ஆனால் தேசிய இனக்
கலப்பு பற்றி லெனின் கூறுவதைப் பார்ப்போம்:
“முதலாளித்துவத்தின்
உலக வரலாற்று வழிப்பட்டபோக்கு – தேசிய இனப் பிரிவினைச் சுவர்களைத் தகர்த்திடலும் தேசிய இன வேறுபாடுகளை
மறையச் செய்தலும் தேசிய இனங்களை ஒன்று கலக்க வைப்பதுமான அந்தப் போக்கு.
கழிந்து செல்லும் ஒவ்வொரு
பத்தாண்டையும் தொடர்ந்து இந்தப் போக்கு மேலும் மேலும் வலிமையடைந்து வருகிறது.
முதலாளித்துவத்தைச் சோசலிசமாக
உருமாறச் செய்யும் மாபெரும் உந்துசக்திகளில் ஒன்றாகும் இது”. (தேசிய இனப் பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்
– பக்-33) 1913 டிசம்பர் 15
“தேசியவாதத் தப்பெண்ணங்களால் மூழ்கடிக்கப்படாதவர்
எவரும், முதலாளித்துவமானது
தேசிய இனங்களை ஒன்று கலக்கச் செய்திடும் இந்த நிகழ்ச்சிப்போக்கு வரலாற்று வழிப்பட்ட
மாபெரும் முன்னேற்றத்தைக் குறிப்பதாகும், பல்வேறு இருட்டு முடுக்குகளில்,
முக்கியமாய் ருசியாவைப்
போன்ற பிற்பட்ட நாடுகளில் தேசிய இன முரட்டுப் பிடிவாதம் தகர்க்கப்படுவதைச் சுட்டுவதாகும்
என்பதைக் காணத் தவற முடியாது”.
(தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக்
குறிப்புகள் – தே.இ.பா.வ.ச
– பக்-36) 1913 டிசம்பர் 15.
தேசிய இனக் கலப்பு என்பது வரலாற்றுப் போக்காகும் என்றும்,
அது சோசலிசத்திற்கான உந்து சத்திகளில் ஒன்று என்றும் தோழர் லெனின் கூறுகிறார். ஆனால்
தேசிய இனத் தூய்மையைக் காப்பாற்றுவோம் எனக் கூறி முரட்டுப் பிடிவாதமாக வரலாற்றுப் போக்கைத்
தடுக்கப் பார்க்கின்றார் பாரி. இதுதான் இவருடைய பாட்டாளி வர்க்க ஆய்வு. அந்தோ
பரிதாபம்!
அடுத்து அவருக்கே குழப்பமான ஒன்று,
வெளியேற்றப்படக் கூடிய வெளியார்கள் யார் என்பதாகும். எந்த
ஆண்டிற்குப் பிறகு தமிழ் நாட்டில் குடியேறியவர்களை வெளியேற்றுவது என்பது பற்றி அவரால்
தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை, ஏனெனில் பாட்டாளி வர்க்கக் கோட்பாடு என்று சொல்லி எதைச் சொல்வது
என்பது அவருக்குத் தெரியவில்லை. அதே போல மாநிலங்களில் உள்ள முதலாளித்துவக் கட்சிகள் வைத்துள்ள
வரையறையும் அவருக்கு தெரியவில்லை. அதற்கு அவரிடம் உள்ள ஒரே வாய்ப்பு “மார்க்சிய அறிஞர்”
பெ. மணியரசனின் வரையறை. அதையும் அவரால் உறுதியாகப் பற்றி நிற்க முடியவில்லை,
எனவே, 1956 நவம்பர் 1 அல்லது வேறு ஏதாவது காலக்கெடு என்று குழப்பமடைகிறார்.
வெளியாருக்கு வரம்பு கட்டும்பொழுது முதலாளிகளையும் தொழிலாளர்களையும்
சமநிலையில் வைத்துப் பார்க்ககூடாது என்று கூறி விட்டு ஆனாலும்,
வரம்பு கட்ட வேண்டும் என்கிறார் பாரி. மேலும், ”தமிழ் நாட்டு மக்கள் தங்களது தாயகம் காக்க போராட வேண்டும்.
இல்லை என்றால் தமிழ் நாடு வந்தேறிகளின் வேட்டைக்காடாக மாறித்
தமிழர்கள் அகதிகளாக மாறும் நிலை ஏற்படும்” என்கிறார். உலகு தழுவிய பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை குறித்து நீட்டி
முழங்குவார், ஆனால்
பாட்டாளி வர்க்கத்தை ஒன்று சேர விடமாட்டார். குட்டி முதலாளிய தேசியவாதத்தைத் தூக்கிப்பிடித்து,
பாட்டாளி வர்க்கத்தின் ஆதரவாளன் என்று போக்குக் காட்டி முதலாளிய
வர்க்கத்திற்கு வால் பிடித்துச் செல்கிறார்.
பிழைப்புக்காகத் தமிழகத்தில் இருந்து உழைக்கும் மக்கள் வெளி
மாநிலங்களுக்குச் செல்வதும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்குள் வருவதும் முதலாளித்துவப்
போக்கு என்பதை அறியாமல் அவர்களை அனுமதிக்கக் கூடாது, வரம்பு கட்ட வேண்டும் என்கிறார்.
தமிழகத்திலிருந்து வெளியேறும் தமிழர்களை அவர் தடுத்து நிறுத்துவாரா?
ஏற்கனவே வெளியேறியிருக்கும் தமிழர்களை மீட்டுக் கொண்டு வருவாரா?
அதைப் பற்றியெல்லாம் இவர்கள் கவனத்தில் கொள்வதில்லை.
இனவாத முழக்கத்தை முன்னெடுத்தால்,
குட்டி முதலாளிய வர்க்கத்தின் கணிசமான ஆதரவைப் பெறமுடியும் என்று
எண்ணி அதனை முன்னெடுத்து வருகின்றார். இத்தகையவர்களின் போக்கு தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமல்ல,
இதர உழைக்கும் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்.
தமிழகத்திற்குள் நுழையும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வரம்பு
கட்டி தடை விதிக்கக் கோருவதன் மூலம் எவ்வாறு தொழிலாளர் வர்க்க ஒற்றுமையைக் கட்ட முடியும்,
அனைத்து தேசிய இனத் தொழிலாளர்களுக்கும் பொது எதிரியான இந்திய
முதலாளிய வர்க்கத்தினை எப்படி வீழ்த்தமுடியும்? ஏனென்றால், இவர்களுக்கு அத்தகைய திட்டம் இல்லை.
அதனால் அவர்களுக்கு அதைப் பற்றி அக்கறையில்லை.
பாரியும் இன்னபிற இனவாதிகளும் மணியரசனை உயர்த்திப் பிடித்து
இனவாதத்திற்கு வால் பிடிக்கட்டும். பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக பணிபுரிவோர் லெனினுடைய தலைமையிலான
மூன்றாம் அகிலத்தின் நான்காவது மாநாட்டின் தீர்மானத்தை உயர்த்திப் பிடித்து உண்மையான
பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டை முன்னெடுப்போம்.
1922ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாம் அகிலத்தின் நான்காவது காங்கிரசில்
”கீழ்த்திசை நாடுகள் பற்றிய ஆய்வுரைகள்” என்னும் தலைப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து:
அச்சுறுத்தும் ஆபத்தைக் கருத்தில் கொண்டு, ஏகாதிபத்திய நாடுகளின்
கம்யூனிஸ்ட் கட்சிகள்– அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் கனடா –
போருக்கு எதிரான பிரச்சாரத்தோடு
மட்டும் தங்கள் கடமையைக் கட்டுப்படுத்திக் கொள்ளாமல்,
இந்த நாடுகளில் உள்ள தொழிலாளர்கள்
இயக்கத்தினை சீர்குலைக்கும் காரணிகள் மற்றும் தேசிய,
இன முரண்பாடுகளை முதலாளிகள்
பயன்படுத்துவதை அகற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
குடியேற்றம் பற்றிய வாதங்கள்
மற்றும் மலிவான வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்கள் ஆகியவையே இந்தக் காராணிகளாகும்.
இன்று, தெற்கு பசிபிக் பிராந்தியத்தில் சர்க்கரைத் தோட்டங்களில் வெள்ளை
நிறமல்லாத தொழிலாளர்களை ஆளெடுக்கும் முறையில் முதன்மையான வழி ஒப்பந்த முறையாகும்.
இது இந்தியா மற்றும் சீனாவிலிருந்து
தொழிலாளர்களைக் கொண்டு வருகிறது. இந்த நிகழ்வு, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு ஏகாதிபத்திய நாடுகளிலுமுள்ள
தொழிலாளர்களை, குடியேற்றத்திற்கு எதிராகவும் வெள்ளை நிறமல்லாத இன மக்களுக்கு
எதிராகவும் சட்டங்களை இயற்ற வேண்டும் எனக் கோருவதற்கு இட்டுச் சென்றுள்ளது.
இந்தச் சட்டங்கள் வெள்ளை
இனத் தொழிலாளர்களுக்கும் வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களுக்கும் இடையேயேயான முரண்பாடுகளைக்
கூர்மைப்படுத்துகின்றன. தொழிலாளர்கள் இயக்கத்தின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தவும் சிதறடிக்கவும்
செய்கின்றன.
அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகள் குடியேற்றத்தைத்
தடை செய்யும் சட்டங்களுக்கு எதிராகத் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும்.
இந்தச் சட்டங்களால் தூண்டப்பட்ட
இன வெறுப்பின் காரணமாக இந்த நாடுகளின் பாட்டாளி மக்கள் திரளும் பாதிக்கப்படுவார்கள்
என்பதை அவர்களுக்கு விளக்க வேண்டும்.
முதலாளிகளும் இத்தகைய குடியேற்றத் தடைச் சட்டங்களை
எதிர்க்கின்றனர். ஏனெனில் மலிவான, வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களைத் தடையில்லாமல் இறக்குமதி செய்வதால்
வெள்ளை இனத் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்து ஆதாயத்தைப் பெற முடியும்.
முதலாளிகளின் உள்நோக்கத்தை
வெற்றிகரமாக எதிர்கொண்டு பதிலடி கொடுப்பதற்கு இங்கு ஒரேயொரு வழி மட்டுமே உள்ளது.
அது குடியேற்றத் தொழிலாளர்கள்
ஏற்கனவே உள்ள வெள்ளையினத் தொழிலாளர்களின் சங்கத்தில் இணைக்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில்,
வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களின்
ஊதியத்தை வெள்ளை இனத் தொழிலாளர்களின் ஊதியத்திற்குச் சமமாக உயர்த்தப்பட
வேண்டும் எனக் கோர வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சிகளின் இத்தகைய முயற்சி முதலாளித்துவ உள்நோக்கங்களை
அம்பலப்படுத்தும். கூடவே சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் எந்த விதமான இன வேறுபாட்டிற்கும்
இடமளிக்காது என்பதை வெள்ளை நிறமல்லாத தொழிலாளர்களுக்கு உணர்த்தும்.
இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு,
சரியான கொள்கைகளை வகுக்கவும்,
பசிபிக் பிராந்தியத்தில்
உள்ள அனைத்து இனப் பாட்டாளி வர்க்கத்தையும் செயலூக்கத்துடன் ஒருங்கிணப்பதற்குப் பொருத்தமான
அமைப்பு நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் பசிபிக் நாடுகளில் உள்ள புரட்சிகரப் பாட்டாளி
வர்க்கத்தின் பிரதிநிதிகள் ஒரு பசிபிக் மாநாட்டைக் கூட்ட வேண்டும். (Theses on the
Eastern Question, www.marxist.org)
தமிழ் நாட்டிற்குள் வெளி மாநிலத்தவர் வருகைதான் இங்குள்ளவர்களின்
வேலைகளை பறிக்கிறது எனக் கூறி மற்ற மாநிலத் தொழிலாளர்களைப் பகைவர்களாகக் காட்ட முயற்சிக்கும்
இத்தகைய அமைப்புகள் முதலாளி வர்க்கத்தின் கையாட்களே. கூலியுழைப்புச் சுரண்டலின் கொடூரத்திற்கும்,
வேலையில்லாத தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் குவிதலுக்கும்
காரணம் தனிச் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்திமுறையே என்ற உண்மையை
இவை மறைக்கின்றன; முதலாளித்துவ உற்பத்திமுறை நீடிக்கும் வரையிலும் வேலையில்லாத்
திண்டாட்டத்ததை ஒழிக்க முடியாது. ஏனென்றால் வேலையில்லாப் பட்டாளம் ஒன்று இருக்கும்
வரையிலும்தான் முதலாளிகளுக்கு மலிவான கூலியில் உழைப்பாளிகள் கிடைப்பார்கள்;
அப்பொழுதுதான் கொள்ளை இலாபம் பெற முடியும். ஆனால் இந்த அமைப்புகளோ அயல் மாநிலத்
தொழிலாளர்களைத் தடுப்பதன் மூலம் தமிழ் நாட்டில் உள்ள அனைவருக்கும் நிலவும் இந்த
முதலாளிய அமைப்புக்குள்ளேயே வேலை கிடைத்து விடும் என்ற மாயையை உருவாக்கி
வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு வேலையில்லாத காரணம் அயல் மாநிலத்தவர்கள் இங்கு
வருவதுதான் என்ற பொய்யான காரணத்தைக் கூறி தேசிய இனப் பகைமைகளை மூட்டி வருகின்றன.
அதன் மூலம் தொழிலாளர் ஒற்றுமையைச் சீர்குலைத்து முதலாளி வர்க்கம் தொடர்ந்து தமது
சுரண்டலை நடத்துவதற்குத் துணை புரிகின்றன.
முதலாளித்துவ அமைப்பைக் கட்டிக் காப்பாற்றி வரும் முதலாளித்துவப் பாராளுமன்ற முறையைப் பற்றி வாய்திறக்காமல், அதனை இருட்டடிப்பு செய்து விட்டு தொழிலாளர்களைத் தேசிய இனம் மற்றும் வட்டாரம் சார்ந்து பாகுபடுத்தி அவர்களிடையே மோதலை உருவாக்கி வரும் இத்தகைய இனவாதிகளைத் தொழிலாளர்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும்.
- குமணன்
Comments
Post a Comment