14.02.2023 அன்று ‘வடவர் வருகையும் தமிழ்நாடும்’ என்னும்
தலைப்பில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தோழர் தியாகு உரையாற்றியிருந்தார். உரையின் தொடக்கத்தில்
தொழிலாளர்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு அந்நிய மண்ணிற்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம்
ஏன் ஏற்படுகிறது என்பதைப் பற்றி விவரித்த தியாகு பின்னர் அதற்கான தீர்வாக அவர்களுடைய
வருகையைத் தடுக்க வேண்டும் என்பதை முன்வைக்கிறார்.
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைவதற்குக் கடவுச்சீட்டு
முறையைக் கொண்டு வர வேண்டும் என்கிறார். இதன் மூலம் அவர்கள் தமிழ் நாட்டுக்குள் நுழைவதைத்
தடுக்க முடியும் என்கிறார். அப்படியானால், நாடுகளுக்கிடையே கடவுச் சீட்டு முறை இருப்பதால்
தொழிலாளர்கள் புலம் பெயராமல் இருக்கின்றார்களா? அல்லது தடுக்கப்படுகின்றனரா?
ஒவ்வொரு நாடும், அந்த நாட்டின் முதலாளி வர்க்கத்தினருக்குத்
தேவையான உழைப்புச் சக்தி மிகக் குறைந்த கூலியில் எவ்வளவு தேவைப்படுகிறதோ அந்தளவிற்கு
அவை தொழிலாளர்களைத் தங்கள் நாட்டிற்குள் அனுமதிக்கின்றன. உள்நாட்டு முதலாளிகள் தங்கள்
நாட்டுத் தொழிலாளர்களுக்கு முதலில் வேலை வாய்ப்பை வழங்கி விட்டுப் பின்னர் எஞ்சியவற்றை
அயல் நாட்டுத் தொழிலாளர்களுக்கு வழங்குவதில்லை. மிகக் குறைந்த கூலியைப் பெற்றுக் கொண்டு
தன்னுடைய உழைப்புச் சக்தியை விற்கத் தயாராக இருக்கும் தொழிலாளர்கள் யாராக இருந்தாலும்
இன, மொழி, மத வேறுபாடின்றி அவர்களையே பணிக்கு அமர்த்துகின்றனர்.
முதலாளிகளின் இந்த நோக்கத்தை மறைத்துவிட்டு ஏதோ கடவுச் சீட்டு
இல்லாதது தான் தொழிலாளர்கள் இங்கு வருகை புரிவதற்குக் காரணம் என்பது போல தோழர் தியாகு
சித்தரிக்கிறார்.
அடுத்ததாக, வேறு பகுதிகளிலிருந்து மட்டும் தமிழ் நாட்டிற்குள்
மக்கள் வருவதில்லை. தமிழ் நாட்டிலிருந்தும் கல்விக்காகவும், வேலைக்காகவும் இடம் பெயர்ந்து
செல்பவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். இந்தக் கடவுச்சீட்டு முறையின் மூலம் அவர்கள் வெளி
மாநிலங்களுக்குச் செல்வதைத் தியாகு தடுக்கப் போகிறாரா? அல்லது எண்ணிக்கை நிர்ணயம் செய்யப்
போகிறாரா? இது குறித்துத் தமிழக மக்களுக்கு அவர் வைக்கும் கோரிக்கைகள் என்ன? என்பது
குறித்து அவர் வாய் திறக்கவில்லை.
இரண்டாண்டுகளுக்கு முன்பு தில்லியில் உள்ள பல்கலைகழகங்களில்
தமிழக மாணவர்கள் அதிகளவில் இடங்களைக் கைப்பற்றி விடுகின்றனர், இதனால் தில்லி மாணவர்களின்
கல்வி பாதிக்கப்படுகிறது, தமிழக மாணவர்கள் நுழைவதைத் தடுக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர்
அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். அவரின் கூற்றுக்குக் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்துப்
பின்னர் பின்வாங்கிக் கொண்டார். இப்படி தில்லிக்குச் சென்று படிக்கும் தமிழக மாணவர்களைத்
தியாகு தடுத்து நிறுத்துவாரா?
மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் தமிழக மாணவர்கள்
படிக்கச் செல்கின்றனர். இதனால் அங்குள்ள மாணவர்களுக்கான கல்வி வாய்ப்பு பறிபோகும்,
எனவே, நீங்கள் அங்கு செல்ல வேண்டாம் என்று கூறிக் கடவுச் சீட்டை அவர்களுக்கு அளிக்க
கூடாது என்று போராடுவாரா?
அடுத்ததாக, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி, எனவே, நமக்குப்
பாதுகாப்பான சட்டங்கள் வேண்டும் என்கிறார் தியாகு. எந்த வர்க்கத்திற்கான சட்டத்தின்
ஆட்சி என்பதை மூடி மறைத்து விட்டு, மேம்போக்காக, பாதுகாப்பான சட்டங்களைக் கொண்டு வந்து
விட முடியும் எனப் பொய்யான நம்பிக்கையை விதைக்க முயல்கிறார். தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும்
ஏற்கனவே இருந்த வந்த குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகள் கூட இன்று இல்லாமல் செய்யும் போக்கு
அதிகரித்து வரும் நிலையில், இன்றைய சட்டத்தின் ஆட்சியில் பாதுகாப்பான சட்டங்களைக் கொண்டு
வர முடியும் என்ற மாயையைக் கட்டமைக்கிறார்.
தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும், உலகம்
முழுவதும் இந்தக் கோரிக்கைகள் எழுப்பப்படுகின்றன என்கிறார் தியாகு. அனைவருக்கும் கல்வியும்,
வேலையும் வேண்டும் என்ற கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, இருப்பதில் எனக்கு
மட்டும் முன்னுரிமை என்ற சலுகையின் அடிப்படையில் கோரிக்கையை முன்வைக்கிறார். முதலாளித்துவ
உற்பத்தி முறை நீடிக்கும் வரை, இலாபத்திற்கான உற்பத்தியே நடக்கும். தேவையின் அடிப்படையிலான
உற்பத்தி இல்லாததால் வேலைகள் சுருங்கும், வேலையில்லாத நிலைமைகள் உருவாகும். முதலாளிய
சமூகத்தில் வேலையில்லாப் பட்டாளம் ஒன்று எப்பொழுதும் நிலவும். அதன் மூலம் உழைப்புச்
சந்தையில் போட்டிகள் உருவாக்கப்படும், இதன் மூலம் உழைப்புச் சக்தியின் விலை குறைந்து,
மிகக் குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை விற்பதற்குத் தொழிலாளர்களை நிர்ப்பந்தப்படுத்தும்.
முதலாளிய அமைப்பு நீடிக்கும் வரை வேலையின்மை என்ற பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
முதலாளித்துவச் சமூகத்தின் மாற்ற முடியாத இந்தப் பண்பை அம்பலப்படுத்தாமல், அதை மூடி
மறைத்துவிட்டுச் சில சீர்திருத்தங்கள் மூலம் வேலையின்மை என்ற பிரச்சினையைத் தீர்க்க
முயல்கிறார். கிடைக்கும் வேலைகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வேண்டும் என்கிறார். ஒரு
வேளை அனைத்து வேலைகளிலும் தமிழர்களையே வேலைக்கு அமர்த்தினால் தமிழ் நாட்டில் வேலையின்மை
என்னும் பிரச்சனை தீர்ந்து விடுமா? அவர் கற்ற மார்க்சியம் அப்படித்தான் கூறுகிறதா?
அவர் மொழி பெயர்த்த மார்க்சின் ‘மூலதனம்’ அதைத்தான் கூறுகின்றதா?
தொழில் துறையின் தொடக்கக் கட்டத்தில் பெண்கள் வேலைக்கு வந்த
பொழுது, ஆண்களுக்கு வேலை இல்லாத நிலைமைக்கு காரணம் பெண்கள் வேலைக்குச் செல்வதே எனக்
கூறி அவர்கள் பொருளுற்பத்தியில் ஈடுபடுவதற்கு எதிரான போராட்டங்கள் பிற்போக்குவாதிகளால்
முன்னெடுக்கப்பட்டன. பெண்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்தியதற்குக் காரணமே ஆண்களை விட
மலிவான கூலிக்கு பெண்களின் உழைப்பைச் சக்தியைச் சுரண்டுவதுதான். ஆனால் அதை மறைத்து
விட்டு வேலையின்மைக்குக் காரணம் பெண்கள்தான் எனக் கூறி முதலாளிய வர்க்கம் தப்பித்துக்
கொண்டது. அதே போன்றுதான், தமிழ் நாட்டில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காமல் போவதற்குக்
காரணம் பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் என்று கூறுவதன் மூலம், இங்குள்ள முதலாளிகள்
பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் உழைப்புச் சக்தியை மலிவாகச் சுரண்டுவதை அவர்
மறைக்கிறார்; வேலையின்மை என்ற பிரச்சினைக்குக் காரணம் நிலவும் முதலாளிய அமைப்புதான்
என்பதை மறைத்து விட்டு, பிற இனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள்தான் எனக் கூறி, பகையை மூட்டி,
தொழிலாளர்களின் ஐக்கியத்தைக் குலைக்கிறார்; முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்ற முனைகிறார்.
அரபு நாடுகளில் வேலைக்கு செல்லும் இந்தியர்களில் மற்ற மாநிலங்களுடன்
ஒப்பிடுகையில் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள் மூன்றாம் இடத்தில் உள்ளனர். அதே போன்று
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கல்வி மற்றும் வேலைக்காக ஆண்டு தோறும் இலட்சக்கணகான
தமிழர்கள் வெளியேறுகின்றனர். தியாகு அவர்களை எல்லாம் இங்கேயே தடுத்து நிறுத்தப் போகிறாரா?
2011 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில்
மட்டும் 16.63 இலட்சம் பேர் இந்தியக் குடியுரிமையைத் துறந்து 135 நாடுகளில் குடியேறியுள்ளனர்.
பெரும்பாலானவர்கள் அரபு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் குடியுரிமையைப்
பெற்றுள்ளனர். இந்த நாடுகளிலும் உள் நாட்டு வேலைகள் உள் நாட்டுத் தொழிலாளர்களுக்கே
வேண்டும் என்ற பிரச்சனைகள் எழுப்பபடுகின்றன. ஆனால், இந்தப் பிரச்சனையை அவர்கள் எழுப்புவதற்குக்
காரணம் தொழிலாளர்களின் மீதான அக்கறை அல்ல, இதனை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவதே
ஆகும்.
உண்மையில் தொழிலாளர்களின் இத்தகைய நிலைமைகளுக்குக் காரணமான
முதலாளித்துவ உற்பத்தி முறையை வீழ்த்துவதற்கு இவர்கள் தயராக இல்லை. சில சில்லறைச் சீருத்திருத்தங்கள்
மூலம் தங்களுடைய அரசியல் பிழைப்பை நிலை நிறுத்தி ஆளும் முதலாளி வர்க்கம் தொடர்ந்து
நீடிப்பதற்கு வழி வகுக்கின்றனர். தியாகு போன்றவர்களின் முழக்கங்களும் இத்தகைய தன்மையதே.
அடுத்து, அதிகார வர்க்கத்தில் இருக்கும் வட இந்தியர்களைப்
பற்றிக் குறிப்பிடுகிறார். அதிகார வர்க்கத்தில் இருப்பவர் எந்த இனம், மதம், சாதியை
சார்ந்தவராக இருப்பினும் அவர் ஆளும் வர்க்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றுபவரே. இதில்
தமிழரா அல்லது தமிழரல்லாதவரா என்பது பிரச்சனையல்ல. எப்படி தமிழ் நாட்டில் தமிழரல்லாதவர்கள்
அதிகார வர்க்கத்தில் உள்ள்னரோ அதே போன்று இதர மாநிலங்களில் தமிழர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.
ஒப்பீட்டளவில் இதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும், ஆனால் இந்தப் போக்கு என்பது அனைத்துத்
தேசிய இனங்களுக்கும் பொதுவானதே.
அதிகார வர்க்கம் தமிழர்களாக இருந்தாலும் உழைக்கும் மக்கள்
மீது ஒடுக்குமுறை தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன என்பதற்குச் சான்றாக ஒரு சிலவற்றை
மட்டும் பார்ப்போம், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி இராதாகிருஷ்ணன்
அவர்கள் சுகாதராத் துறைச் செயலாளராக இருந்த பொழுது தான் செவிலியர்கள் பணி நிரந்தரம்,
நியாயமான ஊதியம், பாதுகாப்பான பணி நிலைமைகள் ஆகியவற்றுக்காக நீண்ட நெடிய போராட்டங்கள்
நடத்தினர். ஆனால், தொழிலாளர்களின் கோரிக்கைள் புறந்தள்ளப்பட்டு, போராட்டங்கள் ஒடுக்கபட்டன.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில்
மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பதின்மூன்று இன்னுயிர்களைப் பலி கொண்ட அதிகார
வர்க்கத்தினர் தமிழ் இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லையா? சாத்தான்குளத்தில் காவல் நிலையத்தில்
தந்தையையும் மகனையும் சித்திரவதை செய்து படுகொலை செய்த அதிகார வர்க்கம் தமிழ் இனத்தைச்
சேர்ந்தவர்கள் இல்லையா? இந்த அதிகார வர்க்கத்தினர் தமிழ் நாட்டரசினால் தேர்வு செய்யப்பட்டவர்கள்
இல்லையா?
ஆனால், தியாகு அவர்களோ தமிழ் நாட்டிற்குத் தனியாக அதிகார
வர்க்கங்கள் இருக்க வேண்டும் அதற்கு தனியான தேர்வு வாரியங்கள் வைத்து தமிழர்களை அந்த
அதிகார வர்க்கத்திற்கு தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார். அப்பொழுது நிலைமை மாறிவிடும்
என்கிறார். அதிகார வர்க்கம் மக்களின் நலன்களுக்காச் சேவை புரியும் என்ற கருத்தைப் பரப்ப
முயல்கிறார். ஆனால், யதார்த்த நிலைமைகள் வேறு வகையில் உள்ளன என்பதை, அதாவது அதிகார
வர்க்கம் ஆளும் முதலாளி வர்க்கத்தின் கருவி என்பதைக் காண அவர் மறுக்கிறார்.
ஒட்டு மொத்தத்தில் ஆளும் முதலாளித்துவ வர்க்கத்திற்குச் சேவகம்
செய்வதற்கான அதிகார வர்க்கத்தை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று தியாகு ஆலோசனை வழங்குகிறார்.
தியாகு போன்றவர்களின் இத்தகைய உரைகள் தொழிலாளர்களிடையே பகையுணர்வுகளைத் தூண்டி ஆளும்
வர்க்கத்தைக் காப்பாற்றவே பயன்படும்.
எனவே, தமிழகத்திற்குள் வருகை தரும் அனைத்து தேசிய இனத் தொழிலாளர்களையும்
இங்குள்ள தொழிலாளி வர்க்கம் சகோதர பாட்டாளி வர்க்கமாய் அங்கீகரித்து வர்க்கப் போராட்டத்திற்கு
அவர்களையும் தயார்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத நிலைமைக்கு காரணம்
இங்கு நிலவும் முதலாளித்துவ உற்பத்தி முறையும் அதனைக் கட்டி காப்பாற்றி வரும் ஆட்சியாளர்களும்
அதிகார வர்க்கத்தினரும் தான் என்பதைத் தமிழகத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தில்
வாழும் அனைத்துத் தேசிய இனப் பாட்டாளிகளுக்கும் விளக்க வேண்டும். இந்தியா முழுவதும்
உள்ள அனைத்துத் தேசிய இனப் பாட்டாளிகளின் ஒற்றுமையைப் பலப்படுத்த வேண்டும். ஆளும் வர்க்கத்தின்
கையிலிருக்கும் ஆட்சியதிகாரத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் கைகளுக்கு மாற்றுவதற்கான தயாரிப்புகளைச்
செய்ய வேண்டும். இதுவே, தற்போதைய நிலைமையில் பாட்டாளி வர்க்கத்தின் வேலைத் திட்டமாக
இருக்க வேண்டும்.
-
- குமணன்
Comments
Post a Comment