“இதுவரை செத்துப் போயிருக்கிற பழைய தலைமுறையின் மரபு இன்று உயிரோடிருப்பவர்களின் மூளையில் அமுக்குப் பேயைப் போல உட்கார்ந்திருக்கிறது. ... அவர்கள் கவலையோடு கடந்த காலத்திய ஆவிகளைத் தங்களுடைய உதவிக்குக் கூப்பிடுகிறார்கள். அந்த ஆவிகளிடமிருந்து பெயர்களையும் போர் முழக்கங்களையும் உடைகளையும் கடன் வாங்குகிறார்கள்.”
- கார்ல் மார்க்ஸ், ‘லூயி போனபார்ட்டின் பதினெட்டாம் புருமேர்’ நூலில்.
பிரிட்டிஷ் காலனிய அதிகாரத்திற்கு எதிரான வீரமும் அர்ப்பணிப்பும் நிறைந்த நமது மக்களின் போராட்டத் தலைமையை முதலாளிய வர்க்கம் கைப்பற்றியது. அதற்கு வடிவம் கொடுத்த கதைநாயகராக காந்தி இருந்தார். 1947 ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய முதலாளிய வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கை மாற்றிக் கொண்டது.
சுதந்திரம் கிடைத்த சில மாதங்களிலேயே, இராம ராஜ்யத்தை அமைக்கக் கனவு கொண்டிருந்த காந்தி, ‘ஹரே ராம்’ என எப்பொழுதும் இராம நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த காந்தி, நாதுராம் கோட்சே என்னும் இந்துத்துவ வெறியனால் கொலை செய்யப்பட்டது பெரும் சோகக் கதையாக அமைந்தது.
அந்த இந்துத்துவ வெறியனுடைய சித்தாந்தத்தின் வாரிசாக வந்துள்ள மோடி, காந்தி உச்சரித்த அதே இராமனின் பெயரை உச்சரித்துக் கொண்டு இன்று தனது இராஜ்யத்தை நிறுவும் ஆசையில் அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டு வருவது வரலாற்று முரண்நகையாக உள்ளது.
மோடி 2014 ஆம் ஆண்டு தனது பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததை இரண்டாம் சுதந்திரம் எனக் கூறிக் கொள்கிறார். காங்கிரஸ் காலத்தில் நேருவின் குடும்ப ஆட்சிதான் நடந்து கொண்டிருந்ததாகவும், தனது கட்சி குடும்ப ஆட்சியிலிருந்து விடுதலை வாங்கித் தந்ததாகவும் கூறிக் கொள்கிறார். இரண்டாவது சுதந்திரத்தைப் பெற்றுத் தந்த தனது ஆட்சியின் மகிமையை வரலாற்றில் மறைக்க முடியாத அளவிற்கு நிறுவ முயல்கிறார். அதன் விளைவுதான் 1250 கோடி ரூபாயில் எழுப்பப்பட்டுள்ள புதிய நாடாளுமன்றக் கட்டிடம். அந்தக் கட்டிடத்திற்கு மே 28 ந்தேதி மத்திய கால அரசனைப் போல மடாதிபதிகள் புடை சூழ, பார்ப்பனர்கள் வேதம் ஓத ஒரு திறப்பு விழாவை நடத்தியுள்ளார். ஜனநாயகத்தின் கோயில் என அவர்கள் கூறும் நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சுதந்திரத்திற்காகப் போராடிய மக்களின் வீரம் செறிந்த போராட்டங்களைச் சித்தரிக்கும் ஓவியங்களோ சிற்பங்களோ இடம் பெறவில்லை. அதற்குப் பதிலாக சங் பரிவாரங்களின் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் புராணங்களில் கூறப்பட்டுள்ள கட்டுக் கதைகளை விளக்கும் காட்சிச் சித்திரங்கள்தான் இடம் பெற்றுள்ளன. இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு என்பதையே மறந்து விட்டு, இந்து மதத்தின் மடம் போலத் தோற்றமளிக்கும் நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்து வைத்து விட்டு, அதை ஜனநாயகத்தின் கோயில் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் மோடி.
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலை விரித்து ஆடுவது பற்றியோ, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வாழ்க்கைக்கு அவசியமான பொருட்களின் விலைகள் விண்ணைத் தொட்டுக் கொண்டிருப்பது பற்றியோ, அன்றாட வாழ்க்கையை நடத்தவே பெரும்பான்மையான மக்கள் அல்லற்பட்டுக் கொண்டிருப்பது பற்றியோ இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியான மோடிக்குச் சிறிதும் அக்கறை இல்லை. இந்த நிலையில் ஆயிரங் கோடிக்கு மேல் செலவு செய்து பிரம்மாண்டமான நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவது அவசியம்தானா என்ற சிந்தனை அவருக்கு எள்ளளவும் இல்லை. அவருடைய அக்கறை எல்லாம் வரலாற்றில் தன பெயர் அழியாத இடம் பெற வேண்டும் என்பதுதான்.
இது ஒரு ஜனநாயக நாடு; முடி மன்னர்களுக்கு இங்கு இடமில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி செய்யப்படும் அரசியல் அமைப்பு இது என்பவற்றையெல்லாம் அறிந்திருந்தும் மோடி இதைச் செய்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன? உண்மையில் ஜனநாயகத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை. தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் என அவர் கருதுகிறார். இங்குள்ள அரசியல் அமைப்புச் சட்டம், நீதி, நிர்வாக அமைப்புகள் அனைத்தும் தனக்குக் கீழானவை, தனது ஆணைக்குக் கட்டுப்பட்டவை என அவர் கருதுகிறார். அதனால்தான் இந்த நாட்டின் குடியரசுத் தலைவருக்குக் கூட புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்த பெருமை கிடைத்து விடக் கூடாது எனக் கருதி, அந்தப் பெருமையைத் தானே அடைய விரும்புகிறார். பெரும்பான்மையான எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத் திறப்பு விழாவைப் புறக்கணித்த போதும் விடாப் பிடியாகத் தானே திறந்து வைக்கிறார்.
அவருடைய கட்சியிலுள்ள சுயநலக் கும்பல்களின் துதிபாடல்களும், சங் பரிவாரங்களின் பொய்ப் பிரச்சாரப் பீரங்கிகளும், முதலாளியப் பத்திரிகைகளின் ஒத்தூதல்களும் அவரைப் பற்றிய பிரம்மாண்டமான பிம்பத்தைக் கட்டமைத்துள்ளன. அந்தப் பிம்பத்தைக் கண்டு மதி மயங்கியுள்ள மோடி தனக்கு அமானுஷ்ய ஆற்றல் இருப்பதாகக் கருதிக் கொள்கிறார். தன்னை ஒரு மாமனிதராகக் கற்பனை செய்து கொள்கிறார். தன்னைப் பற்றிய அவருடைய கற்பனைகள் அவரை இந்த நாட்டின் முடி சூடா மன்னனாகத் தன்னைக் கருதிக் கொள்ள வழிவகுக்கிறது. அதற்கான வழிமுறைகளைத் தேடுகிறது.
பண்டைய காலத்தில் அரசர்கள் தங்களுடைய அதிகாரத்தை மக்கள் ஒப்புக் கொள்வதற்காகத் தங்களை இறைவனின் அருள் பெற்றவனாக, இறைவனின் பிரதிநிதியாகக் காட்டிக் கொண்டார்கள். அதற்காகக் கடவுளர்களுக்கு நெருக்கமானவர்கள் எனக் கூறிக் கொள்ளும் பார்ப்பனர்களின் அங்கீகாரத்துடன், அவர்கள் வேதம் ஓத, சடங்காச்சாரங்களுடன் அரசர்கள் அரியணை ஏறினார்கள். மக்கள் மனதில் ஆழமாக ஊன்றப்பட்டிருந்த பிற்போக்குச் கலாச்சாரங்களும், மூட நம்பிக்கைகளும் அத்தகைய நபர்களைத் தங்களுடைய அரசர்களாக ஒப்புக் கொள்ள வைக்கும் மனப்பான்மையை உருவாக்கும் வேலையைச் செய்தன.
மன்னர்கள் தங்களுடைய அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதற்காகக் கடவுள்களையும், கோயில்களையும், சடங்குகளையும் பயன்படுத்தினர். பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் அதற்குத் துணையாக இருந்தனர். அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் மடாதிபதிகளுக்கும் மன்னர்கள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வழங்கினார்கள்.
நவீன கால முதலாளிய ஜனநாயக அமைப்பில் இருந்தபோதும் மோடி பழமைவாதப் பிடிப்பிலிருந்து விடுபடவில்லை. மக்கள் மத்தியில் குடி கொண்டிருக்கும் பழமைவாதச் சிந்தனைகளைப் பயன்படுத்திக் கொண்டு, தன்னை அவர்களின் முடி சூடா மன்னனாக ஏற்றுக் கொள்வதற்கு மடாதிபதிகளையும் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேதச் சடங்காச்சாரங்களையும் அவர் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.
இத்தகைய சடங்குகளில் ஒன்றுதான் செங்கோலைப் பற்றிய புனைவும். “சோழ அரசின்” வழி வந்த செங்கோலை, தமிழ் நாட்டிலிருந்து திருவாவடுதுறை ஆதீனம் 1947 ஆகஸ்ட் 14 ந் தேதி விமானம் மூலம் தில்லி சென்று கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டனிடம் கொடுத்ததாகவும், அதை அவர் அதிகார மாற்றத்தின் அடையாளமாக நேருவிடம் கொடுத்ததாகவும் ஒரு கட்டுக் கதை சங் பரிவாரங்களால் புனையப்பட்டது. அந்தச் செங்கோலுக்கு உள்ள புனிதத்தையும் பெருமையையும் அறியாமல் நேரு வீட்டின் கைத் தடியாக அது பயன்படுத்தப்பட்டதாகவும் ஒரு அவதூறுப் பிரச்சாரமும் சங் பரிவாரங்களால் முடுக்கி விடப்பட்டது.
ஆனால் உண்மையோ முற்றிலும் அதற்கு எதிராக உள்ளது. அந்தச் செங்கோல் சோழ அரசின் வழி வந்ததல்ல. அது வெள்ளியால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்ட செங்கோல். அது தனது தலைப் பகுதியில் நந்தி உருவத்தைக் கொண்டுள்ளது. அது சுதந்திர தின விழாவை ஒட்டி நேருவுக்குப் பரிசளிப்பதற்காக திருவாவடுதுறை ஆதீனத்தால் செய்யப்பட்டது. அதைத் திருவாவடுதுறை ஆதீனம் தொடர் வண்டியில் கொண்டு சென்று 1947 ஆகஸ்ட் 14 ந் தேதி நேருவின் அலகாபாத் வீட்டில் அவருக்குப் பரிசாக அளித்துள்ளார். பிரதமருக்கு வந்த பரிசுப் பொருள் என்ற வகையில் அது, பிறகு அருங்காட்சியமாக மாற்றப்பட்ட நேருவின் வீட்டில் வைக்கப்பட்டது. முடியாட்சியின் சின்னமாக இருந்த அது இருக்க வேண்டிய இடமும் அருங்காட்சியகம்தான். அது பொருத்தமான இடத்தில்தான் வைக்கப்பட்டது. ஆனால் கால வழக்கொழிந்துபோன முடியாட்சியின் சின்னமான செங்கோலைபச் சுற்றி ஒரு கட்டுக் கதையைப் புனைந்து, அதைப் புனிதப்படுத்தி, நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளார் மோடி. எதேச்சாதிகார முடியாட்சியின் அடையாளமான செங்கோலை நாடாளுமன்றத்தின் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் நிறுவியதன் மூலம் அவர் ஜனநாயகத்தையே கேலிக்கூத்துக்கு உள்ளாக்கியுள்ளார். தனது சங் பரிவாரங்களின் இந்து இராஜ்யக் கனவைத் தனது தலைமையில் நனவாக்க நினைக்கிறார் போலும். வரலாற்றுச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழல வைக்க அவர் பரிதாபமாக முயற்சி செய்கிறார்.
நாடாளுமன்றக் கட்டிடத்தை ஜனநாயகத்தின் கோயில் என்கிறார் மோடி. ஆனால் “இழந்து போன சொர்க்கத்தை,” மன்னராட்சி முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனக் கனவு கொண்டிருக்கும் மடாதிபதிகளுக்கும், வேதம் ஓதும் பார்ப்பனர்களுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன சம்பந்தம்? ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தைச் சொந்தமாகக் கொண்டு, விவசாயிகளின் இரத்தத்தை நில வாடகை மூலம் உறிஞ்சிக் கொண்டிருக்கும் மடாதிபதிகளுக்கும் ஜனநாயகத்திற்கும் என்ன உறவு? ஜனநாயகத்தின் கோயிலைப் பிற்போக்குப் பூசாரிகளைக் கொண்டு புனிதப்படுத்துவதை விடக் கேலிக்கூத்து என்ன இருக்க முடியும்?
‘இந்தியா ஜனநாயகத்தின் தாயகம். உலகத்திற்கே இந்தியா ஜனநாயகத்தின் வழி காட்டியாக இருக்கின்றது’ என மோடி தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவர் உண்மையில் ஜனநாயக முகமூடி தரித்த ஓர் எதேச்சாதிகாரி; ஓராண்டுக்கும் மேல் நீடித்த விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க விவசாயிகள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுத்தவர்; குஜராத் கலவரத்தில் இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவான அவருடைய பாத்திரத்தைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தியவர்களைச் சிறைலடைத்தவர்; தன்னுடைய சங் பரிவாரங்களை விமர்சித்தவர்களையும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடி வருபவர்களையும், ஜனநாயகவாதிகளையும் விசாரணையின்றிச் சிறையிலடைத்தவர்.
‘புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைக் கண்டு நாட்டிலுள்ள 140 கோடி மக்களும் பெருமிதம் கொள்கின்றனர்’ என மோடி அந்தக் கட்டிடத்தை திறந்து வைத்துத் தனது ஜனநாயக ஆட்சியின் பெருமையைப் பற்றி உரையாற்றிக் கொண்டிருந்தபோதுதான், கைக்கெட்டும் தொலைவில் தில்லியின் ஜந்தர் மாந்தரில் நீதி கேட்டுப் போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீராங்கனைகள் மீது தில்லிப் போலிஸ் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது.
ஒரு புறம், ‘உலகமே ஒரு குடும்பம் என்பதுதான் எங்கள் கொள்கை’ எனக் கூறிக் கொண்டு இன்னொரு புறம், இந்த நாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் மக்களின் ஒரு பிரிவினரின் மீது வெறுப்பைக் கக்கித் தாக்குதல்களைத் தொடுத்து வரும் சங் பரிவாரங்களின் தலைவர் அவர்.
அவரை எதிர்ப்பவர்கள் எவரும் இந்த நாட்டில் இருக்கக் கூடாது. அதற்காகவே தன் அதிகாரத்தின் கீழ் உள்ள வருமான வரித்துறை, அமுலாக்கத் துறை, உளவுத் துறை, போலிஸ் என அனைத்தையும் கொண்டு எதிர்க்கட்சியினரையும், தான் எதிரியாகக் கருதுபவர்களையும் வேட்டையாடி வருபவர்.
அவருடைய ஆசை எல்லாம் இந்த நாட்டின் முடி சூடா மன்னனாக வேண்டும். அதன் மூலம் இந்த நாட்டைஆளும் முதலாளிய வர்க்கத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த எதிர்ப்புமின்றி எளிதில் செயல்படுத்தித் தர வேண்டும் என்பதுதான். அதற்கு இப்பொழுது நடைமுறையிலுள்ள அரசியல் அமைப்புக்கு உட்பட்ட நிறுவனங்களும், முதலாளிய ஜனநாயக முறையும் பெரும் தடையாக உள்ளது. அவற்றை உடைத்தெறிந்து தனது கட்டுப்பாடற்ற எதேச்சாதிகார ஆட்சியை நிறுவ வேண்டும். அதற்கு அடையாளமாகத்தான் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ளார்.
சோழ அரசன் முதலாம் ராஜராஜன் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி, அதில் நிறுவப்பட்ட லிங்கத்திற்கு ராஜ ராஜேஸ்வர் எனத் தன்னுடைய பெயரை வைத்தான். அதன் மூலம் தன்னைக் கடவுளாக்கிக் கொண்டான். கடவுளாகிய தனக்கு மக்கள் அனைவரும் கட்டுப்பட்டவர்கள், பூமியில் உள்ள அனைத்தும் தனக்குக் கட்டுப்பட்டது என்ற மனப்பான்மையைப் பார்ப்பனர்களைக் கொண்டு சடங்குகள் மூலம் மக்களிடம் பரப்பினான். அதன் மூலம் தனது ஆட்சியை நிலைநிறுத்த விரும்பினான். இன்று “சோழ அரசின்” செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவியுள்ள மோடி நாளை அயோத்தியில் கட்டப்படும் இராமர் கோயிலில் வைக்கப்படும் சிலைக்கு மோடி இராமன் எனப் பெயர் சூட்டினாலும் சூட்டலாம். அதன் மூலம் தன்னைக் கடவுளாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்யலாம். அப்புறம் என்ன? மக்களின் கடமை அந்தக் கடவுளைத் துதிப்பதும் அதற்கு அடி பணிந்து சேவை செய்வதும்தான். வேறு என்னவாக இருக்க முடியும்?
- மு.வசந்தகுமார்
இந்திய சனநாயகத்தின் உண்மையான முகத்தையும், அதனுடைய புதிய பாராளுமன்றக் கூடம் திறப்பு குறித்தும் மிக முக்கியமான விவரங்களையும், கருத்தையும், பின்னணியையும் தோழரின் இக்கட்டுரை மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருக்கிறது.
ReplyDeleteமன்னராட்சியில் தொடங்கி, இன்றைய பெரும் முதலாளிகளுடைய சனநாயகம் வரை மக்களை ஆளும் வர்க்கம் எப்படியெல்லாம் ஏய்த்து, ஒடுக்கி ஆண்டுவருகிரார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
பண்டைக் காலத்தைப் போலவே, இன்றும் ஆளும் ஏகபோக முதலாளி வர்க்கம் மதம் போன்ற பிற்போக்கான அடிப்படைகளில் மக்களை மூழ்கடித்து, அவர்களைப் பிளவுபடுத்தி தன்னுடைய கொடிய சுரண்டல் ஆட்சியை நடத்தி வருகிறார்கள்.
முதலாளி வர்க்கத்தின் கொடூரமானத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக பாஜக, காங்கிரசு போன்ற முதலாளி வர்க்கக் கட்சிகள் செயல் செயல்பட்டு வருகின்றன.
பாஜக உட்பட முதலாளி வர்க்கக் கட்சிகள் தங்களைப் பற்றி எப்படி எண்ணிக் கொண்டாலும், அல்லது எத்தகைய நோக்கங்களைக் கொண்டிருந்தாலும், அவர்களுடைய செயல்பாடுகள் பெரும் முதலாளி வர்க்கத்தின் திட்டங்களைத் தீவிரமாகச் செயல்படுத்துவதாக இருக்கும் வரை எந்த ஒரு கட்சியும் அதிகாரத்தில் நீடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அந்தக் கட்சி, முதலாளி வர்க்கத்தின் திட்டங்களைச் செயல்படுத்த முடியாவிட்டாலோ, அந்தக் கட்சியின் முகத்திரை மக்களிடையே கிழிந்து விட்டாலோ, அவர்கள் மீது மக்கள் அதிருப்தியும் கோபமும் தீவிரமடைந்தாலோ, முதலாளி வர்க்கம் அந்த ஒரு கட்சியை மாற்றி அவர்களுடைய நம்பிக்கைக்குரிய வேறு ஒரு கட்சியை புதிய பித்தலாட்டமான முழக்கங்களோடு அரியணையில் அமர்த்துகிறார்கள். இந்தப் புதிய கட்சி, முந்தைய கட்சி விட்டுச் சென்ற இடத்தில் தொடங்கி மக்கள் மீது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி, முதலாளி வர்க்கத்தின் திட்டங்களைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.
சனநாயகம் என்ற திரைக்குப் பின்னால், நடைபெறும் இந்த நடைமுறையை - செங்கோல் வெளிப்படுத்தும் இந்த அரசியலை இக்கட்டுரை சுருக்கமாகவும், தெளிவாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது. இந்த அமைப்பு பற்றிய தெளிவைக் கொடுக்கவும், மக்களுடைய விழிப்புணர்வை உயர்த்தவும் இக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- தொழிலாளர் ஒற்றுமை இயக்கம்.