மெய்தி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில்
இணைப்பதற்கு மாநில அரசிற்கு உத்திரவிடக் கோரி மெய்தி பழங்குடியினச் சங்கம் என்னும்
அமைப்பின் சார்பில் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல்
செய்யப்பட்டது. மெய்தி சமூகத்தைப் பாதுகாக்கவும், மூதாதையர்களின் நிலம், கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கவும் இதனைச்
செயல்படுத்த வேண்டும் என கோரி வழக்கைத் தொடுத்தனர். மெய்தி இனமக்கள் தங்கள்
முன்னோர்களின் நிலங்களிலிருந்து ஒதுக்கப்படுவதாக நினைக்கின்றனர்.
மெய்தி இனக்குழுவை பழங்குடியினர்
பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்குமாறும், நான்கு வார காலத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மீதான
அரசின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மார்ச் 7 ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது.
இந்த உத்திரவுதான் மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடப்பதற்குக் காரணமாக
அமைந்தது.
இந்த
மோதல்களின் காரணமாக 150 க்கும்
மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர், 300 பேர்
படுகாயமடைந்துள்ளனர், 350 முகாம்களில்
60000க்கும் மேற்பட்டவர்கள் தங்க
வைக்கப்பட்டுள்ளனர். அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீராங்கனை
மேரி கோம் அவர்கள் சமூக வலைதளங்களில் மணிப்பூர் பிரச்சனையில் அரசின் பாராமுகத்தை
பற்றிக் கதறியழுத பின்னர்தான் இந்தப் பிரச்சனை வெளியுலகிற்கு பரவலாகத் தெரிய
வந்தது. இதனையடுத்து, தொலைத்தொடர்புகள்
அனைத்தும் துண்டிக்கப்பட்டதால் உண்மை நிலவரங்கள் தெரியவரவில்லை.
பத்திரிக்கைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இணைய வசதி முடக்கப்பட்டுள்ளது.
இதனால் உண்மையான பாதிப்புகள் இதனைவிட அதிகமாக இருக்கக் கூடும் எனத் தெரிய
வருகிறது.
மணிப்பூரில் பெண்களின் போராட்டம்
தீவிரமடைந்துள்ள நிலையில் அரசு அதனை எதிர்கொள்ள முடியாமல் உள்ளது. ஆறு முக்கிய
பிரதான சாலைகள் முடக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட குக்கி இனக்குழுக்களுக்கு அரசின்
வழியாக எந்த நிவாரணமும் கிடைக்கக் கூடாது என்பதற்காக அரசின் துருப்புகள் மற்றும்
உதவிப் பொருட்கள் கொண்டு செல்வதற்கான பாதையில் தடையை ஏற்படுத்தும் வண்ணம்
பெண்களின் தலைமையில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட
இடங்களுக்கு நடந்தே செல்ல வேண்டியுள்ளது.
அதே போன்று மெய்தி இனமக்கள் வசிக்கும்
சமவெளிப் பகுதிகளுக்கு வழக்கமாகக் குக்கி இனக்குழுக்கள் வசிக்கும் பாதைகளில்
கொண்டு செல்லப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தற்பொழுது தடுக்கப்படுகின்றன. இதனால்
மாற்று வழிகளில் அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இரண்டு இனக்குழு மக்களுக்குமிடையே மோதல்
ஏற்படுதற்கு முன்பாகவே குக்கி மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருக்கும் பா.ஜ.க.வைச்
சார்ந்த 7
எம்.எல்.ஏக்கள் மணிப்பூர்
முதலமைச்சர் 'பீரேன் சிங்'கை மாற்றக் கோரி டெல்லிக்குச் சென்றனர். இரண்டு
இனக்குழுக்களையும் பிரிக்கும் வேலையை நீண்ட காலமாகவே இந்தப் பகுதியில் அரசு
திட்டமிட்டு செய்து வருவதாகக் குற்றம் சாட்டி அவரை மாற்ற வேண்டும் என டெல்லி
கட்சித் தலைமையிடம் கோரிக்கை வைத்தனர்.
குக்கி இனக்குழுவைச் சார்ந்த மனித உரிமைச்
செயற்பாட்டாளர்களை மியான்மியர்கள் என முதலமைச்சர் அவதூறு செய்து வருகிறார்.
ஏற்கனவே மியான்மியரிலிருந்து வெளியேறும் அகதிகளால் மெய்தி இனக்குழுக்களுக்கு
அச்சுறுத்தல் நிலவுவதாகக் கூறப்படுவதை இவருடைய இந்தக் கருத்து மேலும்
வலுப்படுத்துவதாக அமையும் எனச் சமூகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். மணிப்பூர்
மாநிலத்தில் 53
சதவீதமாக இருக்கும்
மெய்தி இனக்குழுக்கள் பங்களாதேஷ் மற்றும் மியான்மியர் அகதிகளின் வருகையால்
சிறுபான்மையாக்கப்பட்டு அவர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என மெய்தி இன மக்களிடையே
கருத்து பரப்பப்படுகின்றது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த
மக்கள்தொகை 28.5
இலட்சமாகும். மெய்தி
இனக்குழுவினர் 53
சதவீதத்தினரும் நாகா
இனக்குழுவினர் 24
சதவீதமும் குக்கி
இனக்குழுவினர் 16
சதவீதமும் உள்ளனர்.
மொத்தம் அங்கீகரிக்கப்பட்ட 34
பழங்குடிப் பிரிவினர்
உள்ளனர். அதே சமயம் மதம் குறித்த கணக்கெடுப்பில் இந்துக்கள் 1961 இல் 61 சதவீதமாக இருந்தவர்கள் தற்பொழுது 41 சதவீதமாகவும் அதே போன்று கிறித்துவர்கள் 19 சதவீதத்திலிருந்து 41 சதவீதமாகவும் உள்ளனர்.
மாநிலத்தின் மையத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்குப்
பகுதிகளின் பரப்பு மாநிலத்தின் மொத்தப் பரப்பில் 10 சதவீதமாக உள்ளது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்
தொகையில் 57.2
சதவீத மக்கள்
வசிக்கின்றனர். சுற்றியுள்ள மலைப் பகுதிகளான 90 சதவீத நிலப்பரப்புகளில் 42.8 சதவீதப் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.
தாழ்த்தப்பட்ட மக்கள் (மாநில மக்கள் தொகையில் 3.41 சதவீதம் உள்ளனர்) பள்ளதாக்கு பகுதிகளில் 98 சதவீதமும், மலை
பகுதிகளில் 2
சதவீதமும் உள்ளனர்.
மலைப் பகுதிகளில் வசிக்கும் பழங்குடிகள்
அதிகளவில் கிறித்துவ மதத்தினவராக இருப்பதால், இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி பாஜக பள்ளத்தாக்குப்
பகுதிகளில் வசிக்கும் இந்துக்களின் வாக்கு வங்கியைக் கைப்பற்ற மதவாத அரசியலை
முன்னெடுத்தது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் மெய்தி இனக்குழுவினர் நலன்
மீது அக்கறை கொள்வது போன்று காட்டி அவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் பெற்றுத்
தருவதாகவும்,
அதற்காக அவர்களைப்
பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதாகவும் தேர்தல் சமயத்தில் வாக்குறுதிகளை அள்ளி
வீசியது.
2017 மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம்
உள்ள 60 இடங்களில் 21 இடங்களை மட்டுமே பெற்ற பா.ஜ.க., லோக் ஜனசக்தி, தேசிய
மக்கள் கட்சி,
நாகா மக்கள் முன்னணி
ஆகிய கட்சிகளின் கூட்டுடன் ஆட்சியைப் பிடித்தது. 2022 இல் 37 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை
அமைத்தது. 2007
இலும் 2012 இலும் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு
இடத்தைக் கூடப் பெற்றிராத பா.ஜ.க. தற்பொழுது தனிப்பெரும் கட்சியாக அசுர
வளர்ச்சிடைந்துள்ளதற்குக் காரணம் ஏற்கனவே ஆட்சியில் இருந்து வந்த முதலாளித்துவக்
கட்சிகளின் மக்கள் விரோதப் போக்குகள்தான். இவர்களின் மீது மக்கள் நம்பிக்கை இழந்த
சூழலைப் பயன்படுத்தி அக்கட்சி இந்துத்துவ மத அரசியலை முன்னெடுத்து மாநில ஆட்சியைக்
கைப்பற்றியது.
இனக் குழுக்களைப் பிளவுபடுத்தும் அரசின்
செயல்பாட்டின் மற்றொரு பகுதியாக சூரசந்த்பூர் மாவட்டத்தில் உள்ள மக்களை
வெளியேற்றும் செயலில் மணிப்பூர் மாநில பாஜக அரசு ஈடுபட்டது. சூரசந்த்பூர்
பகுதியில் வசிப்பவர்கள் மியான்மரிலிருந்து குடியேறியிருக்கும் வெளியார் எனவும், அயலார் எனவும் அரசு மறைமுகமாகக் குறிப்பிடுவதாகவும், ஆனால்,
அவர்கள் உண்மையில்
குக்கி - சோமி பழங்குடிகள்தான் எனவும் குக்கிப் பகுதியை சார்ந்த ஹாவோகிப் எம். எல்
.ஏ. கூறுகிறார்.
கடந்த ஏப்ரல் இறுதியில் மணிப்பூர்
முதலமைச்சர் சூரசந்த்பூர் பகுதியில் திறந்து வைத்த உடற்பயிற்சிக் கூடத்தின் மீது
தாக்குதல் நடத்தப்பட்டது. சூரசந்த்பூர் - கொப்பம் காட்டு பகுதி பாதுகாக்கப்பட்ட
பகுதி (தடை செய்யப்பட்ட பகுதி) எனவும், இந்தப்
பகுதியில் உள்ள 38 கிராமங்களில்
குடியிருக்கும் மக்களை சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள்
எனவும் கூறி அவர்களை வெளியேற்ற கடந்த ஆகஸ்ட் 2022 ஆம் ஆண்டிலிருந்து அரசு நெருக்கடி கொடுத்து
வருகின்றது. இந்த அதிருப்தியின் காரணமாகவே அரசுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசிற்கு
எதிரான குக்கி மக்களின் இந்தப் போராட்டத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்தான்
மெய்தி இனவாதிகளை கொண்டு குக்கி இன மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டுள்ளது பா.ஜ.க.
அரசு.
இந்தியக் காடுகள் சட்டம் 1927 மணிப்பூர் மாநிலத்திற்குப் பொருந்தாது
என்றும்,
முதலில் பாதுகாக்கப்பட்ட
பகுதி என்ற அறிவிப்பு சட்டசபையினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் ஹாவோகிப்
எம் எல் ஏ கூறுகிறார். 1970
களில் சூரசந்த்பூர்
பகுதியில் உள்ள 38 கிராமங்களுக்கு
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதி என்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டது. ஆனால் எந்தவிதமான
சட்ட நடைமுறைகளையும் பின்பற்றாமல் முதலமைச்சர் மணிப்பூருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை
அரசாணை மூலம் கடந்த நவம்பர் மாதம் இரத்து செய்துள்ளார் என ஹாவோகிப் எம். எல். ஏ.
குற்றம் சாட்டுகிறார்.
பாதுகாக்கப்பட்ட காடுகள் என அறிவிக்கப்பட்ட
பகுதிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் போதைப் பயிர்கள் விளைவிக்கின்றார்கள் என்றும், போதைப் பொருள் வியாபாரம் செய்கின்றார்கள் என்றும் கூறி
அரசு மக்களுக்கு நெருக்கடி கொடுக்கிறது. காட்டுப் பகுதிகளில் நீண்ட நாட்களாக
வசித்து வரும் மக்களை சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் எனக் கூறி அவர்களை அப்புறபடுத்த
அரசு முயற்சி செய்கின்றது. ஆனால் அவர்கள் நீண்ட நாட்களாக அந்தப் பகுதியில் வசித்து
வருபவர்கள் ஆவர்.
மணிப்பூர் முதலமைச்சர் குக்கி இன மக்களைத்
தீவிரவாதிகள் என முத்திரை குத்திப் பேசுவதன் மூலம் அவர்கள் தாங்கள் தனிமைப்படுத்தப்படுவதாக
உணர்கின்றனர்,
அரசின் இந்தச் செயலால்
அரசின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தும்
குக்கி இனப் பெண்கள் தாங்கள் வெளியார்கள் இல்லையென்றும், இந்த மண்ணில் வசிக்கும் பூர்வகுடிகள் என்றும், தங்களை வெளியேற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும்
என்றும் வலியுறுத்தினர்.
மெய்தி பேரினவாதக் குழுக்களான அரம்பை
தெங்கோல்,
மெய்தி லீபன் ஆகியவை
குக்கி இனத்திற்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சுக்களையும், மேலாதிக்கவாதக் கருத்துகளையும் வெளியிடுகின்றன. குக்கி
இனக்குழுவினரை சட்டவிரோத வெளியார்கள் எனவும், போதைப் பொருட்கள் கடத்தும் பயங்கரவாதிகள் எனவும்
இவர்கள் குறிப்பிடுகின்றனர். பாஜக மதவாதம், மெய்தி பேரினவாதக் குழுக்களுடன் இணைந்து சிறுபான்மைப்
பழங்குடி மக்கள் மீது வெறுப்பு அரசியலை முன்னெடுத்து வருகின்றது. இந்தக்
கலவரத்தில் இவர்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
ஆனால், பெரும்பான்மையான உழைக்கும் மெய்தி இன மக்களும்
மக்களிடையே மோதலைத் தூண்டி விட்டு அரசியல் இலாபம் பெறத் துடிக்கும் பா.ஜ.க.வின்
இந்தப் போக்கைக் கண்டு அரசு மீது நம்பிக்கை இழந்து வருகின்றனர். தங்களைப்
பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதாக ஏமாற்றி மோதலைத் தூண்டி விட்டு உயிரிழப்புகளை
ஏற்படுத்தியதைக் கண்டுணர்ந்துள்ளனர்.
மணிப்பூர் மக்களின் பொருளாதாரம் விவசாயம், காடுகள், குடிசைத்
தொழில், வணிகம், சிறு தொழில்கள் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. பெரிய
அளவில் தொழில்துறை இங்கு வளர்ச்சியடையவில்லை. எனினும், சிறிய அளவிலான மின்சாதனப் பொருட்கள் தயாரிப்பு, இரும்பு உற்பத்தி, பிளாஸ்டிக் பொருட்கள், சிமெண்ட் உற்பத்தி, துணி ஆலைகள், சுரங்கம், மருந்துக் கம்பெனிகள் ஆகியனவும் சுற்றுலாத் துறையும்
மக்களுக்கு வேலைகளை வழங்கி வருகின்றன. மணிப்பூர் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு
மிகப்பெரிய பங்களிப்பைச் செய்வது விவசாயம் ஆகும். 52 சதவீத வேலை வாய்ப்புகளை விவசாயமும் அது சார்ந்த துறைகளும்
வழங்குகின்றன. இதற்கடுத்தபடியாக கைத்தறிகள், கைவினைப் பொருட்கள் ஆகியன இருக்கின்றன. இவற்றில்
பெண்களின் பங்கேற்பு அதிகமாக உள்ளது. இது பொருளாதாரத்திற்கு வேலை வாய்ப்பிற்கும்
கணிசமான பங்களிப்பைச் செய்கிறது. 35,000 சிறு, குறு தொழில்கள் உள்ளதாக அரசின் பதிவுகள்
தெரிவிக்கின்றன. இதனோடு,
பள்ளத்தாக்குப்
பகுதிகளில் வசிக்கும் மெய்தி இன மக்கள் அரசு சார்ந்த வேலைகளையும் அதிகம் நம்பி
உள்ளனர்.
பின் தங்கிய பொருளாதார அமைப்பையும், வருவாயையும் மணிப்பூர் கொண்டிருக்கின்றது. எனினும், இந்தப் பொருளாதார வாய்ப்புகளில் கூட பெரும்பாலும்
பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிக்கும் மெய்தி இனமக்களுக்கு கிடைக்கிறது. காடுகளில்
வசிக்கும் பழங்குடிகள் விவசாயம் மற்றும் காடுகள் சார்ந்த வேலைகளை மட்டுமே நம்பியிருக்கின்றனர்.
மலைப் பகுதிகளில் பருவ நிலைகள் அவர்களுக்குப் பெரும்பாலும் கைகொடுப்பதில்லை
என்பதால் அவர்களுக்கு நிலையான வருவாய் என்பது எப்பொழுதும் இல்லை. அங்குள்ள மக்கள்
பெரும்பாலும் சிறு விவசாயம் மற்றும் காட்டுப் பகுதிகளில் கிடைக்கும்
உணவுப்பொருட்கள் ஆகியவற்றை நம்பியே உள்ளனர். மேலும், வாழ்வாதாரத்திற்காக நகரங்களுக்கும், பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கும் அவர்கள் வருகின்றனர்.
பழங்குடிகளின் வருகையின் காரணமாக மெய்தி
இனமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் காரணம் காட்டி அவர்களிடையே இனப் பகைமை
உணர்வு இனவாதிகளால் ஊட்டப்படுகின்றது. பழங்குடிகள் வசிக்கும் மலைப் பகுதிகளில்
தாங்கள் நிலம் வாங்குவதற்கு சட்டங்கள் வாய்ப்பளிக்கவில்லை எனக் கூறுகின்றனர். சட்டவாய்ப்புகள்
வழங்கப்பட்டாலும் பெரும்பான்மையான மெய்தி இன உழைக்கும் மக்களால் நிலம் வாங்க
முடியாது. வசதி படைத்தவர்களின் கோரிக்கையாகவே இது எழுந்துள்ளது. மெய்தி இனக்குழுக்களுக்குப் பழங்குடியின
அந்தஸ்த்தை வழங்கினால் தங்கள் நிலம் பறிப்போகும் எனக் குக்கி இனக்குழு மக்கள்
அஞ்சுகின்றனர். பாஜக அதனை இந்து - கிறித்துவ மத வெறுப்பு அரசியலாகக்
கட்டமைத்துள்ளது.
நகரங்களில் 7.45 இலட்சம் பேரும் (38.8%), கிராமங்களில் 2.78 இலட்சம் பேரும் (32.6%) வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளதாக 2011 -12 ஆம் ஆண்டிற்கான தேசிய மாதிரிக்
கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. உண்மையில் இங்கு மக்களின் வாழ்வாதாரத்தை
உத்திரவாதப்படுத்த வேண்டிய அரசோ அந்தப் பொறுப்பு தமக்கில்லை என்பது போல நடந்து
கொள்கின்றது. மெய்தி இனக்குழுக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு குக்கி
பழங்குடிகளின் குடியேற்றம் மற்றும் அவர்களுக்கு இருக்கும் பழங்குடிச் சலுகைகளே
எனக் காரணம் கற்பிக்கிறது. மக்களின் போராட்டத்தைத் திசை திருப்பி மக்களை மோத
விடுகின்றது. வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்து
வரும் பழங்குடிகளுக்கு எந்தவிதமான பொருளாதாரத் திட்டத்தையும் அரசு
கொண்டிருக்கவில்லை. ஆனால்,
அவர்களுக்கே சொந்தமாக
இல்லாத காடுகளால் அவர்கள் நிம்மதியாக வாழ்வது போன்று எண்ணத்தை அரசு கட்டமைத்து
வருகின்றது; காடுகளிலிருந்து மக்களை விரட்டிவிட்டு அவற்றைக் கார்ப்பரேட்டுகளுக்கு
வழங்குவதற்காகவே காடுகளைப் பாதுகாத்து வருகிறது.
குக்கி இனத்தவர்களில் பெரும்பான்மையினர்
கிறித்துவ மதத்தினராக இருப்பதால் மெய்தி மக்களிடையே இந்துத்துவ உணர்வை பா.ஜ.க.
கட்டமைத்து வருகிறது. இந்துக்களுக்கான சமூகம் எனக் கற்பிக்கப்படுகின்றது.
திட்டமிட்டு சிறுபான்மைக் கிறித்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 4500
குக்கி
இனத்தவர் வீடுகள், 250 தேவாலயங்கள்
மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன, சில தேவாலயங்கள்
தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. அரசின் ஆதரவுடன் இது நடைபெறுகின்றது. இஸ்லாமியர்கள்
மீதும் தாக்குதல் நடத்தப் பெற்றுள்ளது. மெய்தி வாக்கு வங்கிகளை இந்துத்துவ
அரசியலைப் பயன்படுத்தித் தனக்குச் சாதகமாக மாற்றியமைக்கும் வேலைகளில் தொடர்ந்து
ஈடுபட்டு வருகின்றது பா.ஜ.க.
இரண்டு மாத காலமாக நீடித்து வரும் இந்த
மோதல் குறித்து பிரதமர் மோடி வாய் திறக்கவில்லை. மணிப்பூர் கலவரத்தில் பிரதமர்
மோடியின் மவுனத்தைக் கண்டித்து இம்பாலில் இருக்கும் மெய்தி இனக்குழுவினர் மோடியின்
மனதின் குரல் நிகழ்ச்சியை புறக்கணித்ததோடு வானொலியை உடைக்கும் போராட்டத்தையும்
முன்னெடுத்தனர். ரோம் நகரம் பற்றி எரிந்தபொழுது நீரோ மன்னன் பீடில் வாசித்தானா
என்பது தெரியவில்லை. ஆனால்,
மணிப்பூர் பற்றியெழுந்த
பொழுது மோடி மன்னர் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக உலகைச் சுற்றி வலம் வருகிறார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷாவோ மணிப்பூருக்கு
விஜயம் செய்த பின் 15
நாட்கள் அவகாசம்
கேட்கிறார். நாள்தோறும் எண்ணற்ற உயிர்கள் பலியாகி வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர்
அகதிகளாகி வருகின்றனர். மக்களின் உடைமைகள் சூறையாடபட்டு வருகின்றன. அத்தியாவசியப்
பொருட்கள் கூட எதுவுமின்றி மக்கள் பட்டினியில் கிடக்கின்றனர். மணிப்பூரில்
மக்கள் மத்தியில் கலவரச் சூழல் நிலவி வந்த வேளையில் பாஜகவும்,
காங்கிரசும்
மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை
வேட்டையாடி பதவிச் சுகத்தைப் பெறுவதற்கான போட்டியில் கவனமாக ஈடுபட்டிருந்தனர்..
இதுவரை எந்த முதலாளித்துவக் கட்சியும் மணிப்பூர் மாநில மக்களின் மீதான் வன்முறையை
முடிவு கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் செய்யவில்லை.
மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
அடிப்படையிலேயே தவறானது என்றும்,
மக்களிடையே பெரிய அளவில்
மோதலுக்கு இது காரணமாக அமைந்துள்ளது எனவும், இந்த உத்திரவை உயர்நீதி மன்றம் தானே திரும்பப் பெற
வேண்டும் எனவும் மே 17
அன்று உச்ச நீதிமன்றம்
உத்திரவிட்டுள்ளது.
மக்களிடையே வெறுப்பு அரசியல்
விதைக்கப்பட்டு அவர்களை ஒருவருக்கொருவர் மோதவிட்ட நிலையில் இன்று மக்கள் தாங்கள்
எதிர்கொள்ளும் பிரச்சனைகளை இந்த அரசு தீர்க்கும் என நம்பத் தயாராக இல்லை. ஏற்கனவே
குக்கி இனக்குழுவினர் நம்பிக்கை இழந்த நிலையில், மெய்தி இனக்குழுவினரும் அரசின்
பாராமுகத்தைக் கண்டு அவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர்.
இந்தப் பிரச்சனைகளுக்கான சரியான தீர்வை
முன்வைத்து இனக்குழுக்களிடையே அமைதியை ஏற்படுத்த சிறிதும் அக்கறையற்று உள்ளனர்
மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக ஆட்சியாளர்கள்.
அனைத்து மக்களுக்கும் இலவசமான, தரமான கல்வியை அளிக்க வேண்டியதும், அனைவருக்கும் வேலை மற்றும் நியாயமான கூலியை
உத்திரவாதப்படுத்துவதும் அரசின் கடமை என்பதை மறைத்து விட்டு இருக்கும் சொற்ப வாய்ப்புகளில்
போட்டியை உருவாக்கி அதற்கான ஒதுக்கீடுகளுக்காக மக்களை தங்களுக்குள் மோத விடுகிறது
அரசு.
அனைத்து உழைக்கும் மக்களுக்குமான வாழ்வாதார
உத்திரவாதம் இல்லாமல் போவதற்குக் காரணமான சக்திகளை மக்கள் அடையாளம் காணச் செய்ய
வேண்டும். போராட்டங்கள் இனக்குழுக்களுக்கு இடையிலானதாக உள்ளதை மாற்றி, ஒட்டு மொத்த மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக உள்ளவர்களை
எதிர்த்த போராட்டமாக மாற்றியமைக்கப்பட வேண்டும். தங்களுடைய விரோதிகளை வீழ்த்துவதன்
மூலமே மக்கள் தங்கள் எதிர்காலத்தை உறுதிப்படுத்த முடியும்.
Well documented article with statistics. But the immediate solution is to bring peace in the state. We have to bear in mind that Marxists of all hues have a bad history of resolving ethnic struggles through out the world.
ReplyDeleteகட்டுரை மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறை குறித்து ஆய்வு செய்து பல விவரங்களை விளக்கியிருக்கிறது. முக்கியமாக இது அரசால் திட்டமிடப்பட்ட முறையில் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் அரசு இயந்திரத்தின் உதவியோடு அரங்கேற்றப்பட்டிருக்கிறது என்பது நன்கு புரிகிறது. இப்படிப்பட்ட வகுப்புவாத வன்முறைகள் மூலம் ஆளும் வர்க்கம் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை பலப்படுத்திக் கொள்ள முயல்கிறது. இந்த கொடிய வன்முறையைத் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விட்டு, மக்களைப் பிளவுபடுத்தி அதன் மூலம் தங்களுடைய ஆட்சி அதிகாரத்தை நிலைப்படுத்திக் கொள்ளவும் நீடித்துக் கொள்ளவும் பெரும் முதலாளி வர்க்கம் முயற்சிக்கிறது.
ReplyDeleteஇதை முறியடித்து அனைத்து பிரிவு மக்களும் ஒன்றுபட்டு பிற்போக்கான அரசுக்கு எதிராக போராடி தங்களுடைய உரிமைகளை நிலைநாட்ட வேண்டுமென கட்டுரை வலியுறுத்தியிருப்பது மிகவும் சரியான நிலைப்பாடாகும்.