Skip to main content

கீதா அச்சகத்திற்குக் கொடுக்கப்படும் காந்தி அமைதி விருது - கோட்சேவுக்குக் கொடுக்கப்படும் விருது

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதை வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் உள்ள நடுவர் குழு ஜூன் 18 அன்று முடிவு செய்துள்ளது. காந்தி அமைதி விருதுக்கான பட்டயத்துடன் ஒரு கோடி ரூபாய் பண அன்பளிப்பும் கொண்டது.

“சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அமைதி வழியிலும் பிற காந்திய வழிகள் மூலமும் கீதா அச்சகம் ஆற்றியுள்ள மிகச் சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என நடுவர் குழு அறிவித்துள்ளது. ‘அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் காந்திய வழியில் கீதா அச்சகம் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக’ பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் கீதா அச்சகம் காந்தி அமைதி விருதைப் பெற்றுக் கொள்வதாகவும், ஆனால் பண அன்பளிப்பான ஒரு கோடி ரூபாயை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அறிவித்துள்ளது.

கீதா அச்சகத்திற்கு காந்தி அமைதி விருதை வழங்கியதற்குக் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளது. காந்தி அமைதி விருதைக் கீதா அச்சகத்திற்கு அறிவித்துள்ளதைப் பலரும் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

கீதா அச்சகம் காந்தி அமைதி விருதைப் பெறுவதற்குத் தகுதி உள்ளதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள அதன் வரலாற்றையும் நோக்கத்தையும் அறிந்து கொள்வது அவசியம்.

இந்த அச்சகம் 1923 ஆம் ஆண்டு ஜெய தயாள் கோயங்கா, கன்சியாம் தாஸ் ஜலன் என்ற இரண்டு மார்வாரி வணிகர்களால் கோரக்பூரில் 10 ரூபாய் வாடகைக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. இன்று அது பல நூறு கோடி சொத்துகளைக் கொண்டதாக மாறியுள்ளது. ‘மக்களிடம் சனாதன தர்மத்தையும் இந்து மதத்தையும் பரப்புவதையும் மேலேடுத்துச் செல்வதையும் நோக்கமாகக் கொண்டு இந்து மத நூல்களை வெளியிடும் பெரும் வெளியீட்டு நிறுவனம்’ என கீதா அச்சகம் இன்று தன்னைப் பற்றிப் பெருமையாக அறிவித்துக் கொள்கிறது.

கீதா அச்சகம் பகவத் கீதை, புராணங்கள், உபநிசத்துகள், துளசிதாசரின் ராம சரிதை, இந்து மதச் சாமியார்களின் மதம் பற்றிய நூல்கள் என இதுவரையிலும் 91 கோடி படிகளைக் கொண்டு வந்துள்ளது. இந்தி, வங்காளம், ஒரியா, நேபாளி, தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் எனப் பதினைந்து மொழிகளில் இதுவரையிலும் 1800 தலைப்பில் மலிவு விலைகளில் நூல்களைக் கொண்டு வந்துள்ளது. பகவத் கீதையை மட்டுமே 16.21 கோடி படிகள் இதுவரை அச்சடித்து மக்களிடையே பரப்பியுள்ளது. புராண நூல்களையும் உபநிசத்துகளையும் 2.68 கோடி படிகள் அச்சடித்து விநியோகம் செய்துள்ளது. 2022 - 2023 மட்டும் ரூ.111 கோடி மதிப்புள்ள புராண நூல்களையும், கீதையும், உபநிசத்துகளையும் 2.4 கோடி படிகள் அச்சடித்து வெளியிட்டுள்ளது. 

வட இந்தியாவில், குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கீதா அச்சகம் பற்றியும் அதன் நூல்களைப் பற்றியும் அறியாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். அந்த அளவுக்கு மக்களின் சிந்தனைகள் மீதும், பண்பாட்டின் மீதும் இந்து மதப் புராணங்களின் மேலாதிக்கத்தை நிறுவுவதற்கு கீதா அச்சகம் விரிவான அளவில் செயல்பட்டு வருகிறது. 2014 ல் பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அதன் செயல்பாடுகள் மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக அந்த அச்சகம் தெரிவிக்கிறது. 

கீதா அச்சகத்தின் இந்த நூறாண்டு காலச் சித்தாந்தப் பணியின் பின்னணியில்தான் வட இந்தியாவில் இந்துத்துவ சங் பரிவாரங்களின் வளர்ச்சியையும், பா,ஜ,க.வின் வெற்றியையும் நாம் புரிந்து கொள்ள முடியும். இந்தக் கோரக்பூரில்தான் கோரக்நாத் மடம் உள்ளது. அதனுடைய மடாதிபதிதான் இன்று உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சராக உள்ள யோகி ஆதித்யநாத். கீதா அச்சகத்தின் இந்துத்துவப் பணியையும், பொதுக் கருத்தை உருவாக்குவதில் அது எவ்வாறு வெற்றி பெற்றுள்ளது என்பதையும் இவற்றிலிருந்து நாம் நன்கு அறியலாம்.

தோற்ற காலத்திலிருந்தே கீதா அச்சகத்தின் பதிப்பாசிரியராக இருந்தவர் அனுமன் பிரசாத் போத்தர். அவர் இந்துத்துவ அமைப்புகளான ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா ஆகியவற்றுடனும் அவற்றின் தலைவர்களாகிய சாவர்க்கர், கோல்வாக்கர் ஆகியோருடனும் மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர்களுடனும் நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தவர்.

கீதா அச்சகம் 1926 லிருந்து ‘கல்யாண்’ என்ற மாத இதழையும் நடத்தி வருகிறது. காந்தி கல்யாண் இதழுக்குக் கட்டுரைகள் அளித்துள்ளார். பகவத் கீதை வெளியீடு போன்ற போத்தரின் பணிகளைக் காந்தி மிகவும் பாராட்டியுள்ளார். ஆனால் காந்திக்கும் போத்தருக்கும் பிற்காலத்தில் முரண்பாடுகள் ஏற்பட்டன. காந்தியின் கோவில் நுழைவுப் போராட்டம், சம பந்தி போஜனம், தாழ்த்தப்பட்ட மக்களுடன் திருமண உறவு போன்ற தீண்டாமை ஒழிப்புக்கான நடவடிக்கைகளை போத்தர் ஏற்றுக் கொள்ளவில்லை. அவற்றைக் கடுமையாக விமர்சித்தார்.

காந்தி பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்கு எதிராக மக்களைத் திரட்ட கலாச்சார அடிப்படையிலான ஒரு தேசியத்தைக் கட்டமைக்க முயன்றார். அந்தத் தேசியம் அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய தேசியமாக இருந்தது. அனைத்து மதக் கருத்துகளுடனும் நல்லிணக்கத்தைக் கொண்டதாக இருந்தது. காங்கிரசை கலாச்சார தேசிய அடிப்படையில் ஒரு மக்கள் திரள் இயக்கமாக மாற்றிய காந்தியின் வழிமுறை பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தின் தலைமையை இந்திய முதலாளிய வர்க்கம் கைப்பற்ற வழிவகுத்தது.

ஆனால் போத்தாருக்கும், அதாவது கீதா அச்சகத்தைச் சார்ந்தவர்களுக்கும், ஆர்எஸ்எஸ், இந்து மகா சபா போன்ற அமைப்புகளுக்கும் காந்தியின் தேசியம் ஏற்புடையதாக இல்லை. அவர்கள் இந்து மத அடிப்படையிலான இந்துத்துவத் தேசியத்தைக் கட்டமைக்க விரும்பினர். இந்து மதக் கலாச்சாரத்தைத் தேசியக் கலாச்சாரமாக அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். அதன் அடிப்படையில் ஒரு இந்து நாட்டை, இந்து ராஜ்யத்தை உருவாக்க வேண்டும் எனக் கருதினர். ஆனால் காந்திக்கு இந்தத் தேசியம் ஏற்புடையதாக இல்லை.

இந்தியா என்ற பகுதியை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டு நாடுகளாகப் பிரிப்பது என்ற உடன்படிக்கையின் கீழ் 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இங்குள்ள முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைப் பெற்றது. அந்தப் பிரிவினை நாடெங்கும் பெரும் கலவரங்களுக்கு வித்திட்டது; இலட்சக்கணக்கான மக்களின் இடப் பெயர்வுக்கும், பல்லாயிரக்கணக்கான உயிர்ப் பலிகளுக்கும், கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள உடைமைச் சேதங்களுக்கும் காரணமாக அமைந்தது.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரங்களில் முஸ்லீம் மக்களுக்கு காந்தி அனுதாபமாக நடந்து கொண்டார் என்றும், காந்திதான் பிரிவினைக்குக் காரணம் என்றும் இந்துத்துவ அமைப்புகள் கருதின. அதன் விளைவாக இந்துத்துவ வெறியன் கோட்சேவால் காந்தி 1948 ஜனவரி 30 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, கீதா அச்சகத்தின் பதிப்பாசிரியராக இருந்த போத்தாரும், அதன் நிறுவனரும் காந்தி கொலையின் சதியில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். அப்பொழுது அவர்கள் வழக்கிலிருந்து தங்களைக் காப்பாற்றுமாறு செல்வாக்கு மிக்க முதலாளியாக இருந்த கன்ஷ்யாம் தாஸ் பிர்லாவைக் கேட்டனர் என்றும், ஆனால் அவர், போத்தாரும் கீதா அச்சகத்தின் நிறுவனரும் சனாதன தர்மத்தைப் பரப்பவில்லை, சாத்தானின் தர்மத்தையே பரப்பி வந்தனர் என்றும் கூறி அவர்களுக்கு உதவ மறுத்து விட்டார் என்று ‘கீதா அச்சகமும் இந்து இந்தியாவின் உருவாக்கமும்’ (Gita Press and the Making of Hindu India) என்ற புகழ் பெற்ற நூலின் ஆசிரியரான அக்சய் முகுல் கூறுகிறார்.

பிறகு போத்தார் விடுதலை செய்யப்பட்டார். காந்தி கொலை செய்யப்பட்ட சதி வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எசின் தலைவர் கோல்வாக்கரும் 1949ல் விடுதலை செய்யப்பட்டார். அப்பொழுது அவருக்கு பனாரசில் உள்ள டவுன் ஹாலில் வரவேற்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்திற்கு, ஏற்கனவே அந்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்த போத்தார் தலைமை தாங்கினார்.

இத்தகைய வரலாறும் பின்னணியும் கொண்ட கீதா அச்சகத்திற்குத்தான் காந்திய வழியில் அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மிகச் சிறந்த பணியாற்றியதாகக் கூறி காந்தி அமைதி விருது அளிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பற்றி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ரமேஷ் ஜெய்ராம் கூறியதை இங்கு நினைவுகூர்வது மிகப் பொருத்தமாயிருக்கும்: “கீதா அச்சகத்திற்குக் கொடுத்த காந்தி அமைதி விருது சாவர்க்கருக்கும் கோட்சேவுக்கும் கொடுத்தது போன்றது”

                                                                                                - புவிமைந்தன்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...