Skip to main content

முதலாளியச் சமூகமும் ஊழலும்!


(பணம்)“.........

சட்ட மாமன்ற உறுப்பினர்கள் கீழே அமர்ந்திருக்க

திருடர்களுக்குப்

பட்டங்களை வழங்கும், மண்டியிடும், அரசு

புகழுரைகளை வழங்கும்”. ---ஷேக்ஸ்பியர், (Timon of Athens) 


சட்ட விரோதப் பண மாற்றத்திற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம் ஊழலைப் பற்றிய விவாதத்தைப் பரவலாக உருவாக்கியுள்ளது. 24 காரட் “தூய்மையான” பா.ஜ.க. வின் ஏஜண்டான “வானளாவிய” அதிகாரம் கொண்ட ஆளுநர் ரவி உடனே செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையிலிருந்து முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமேலேயே நீக்கித் தனது அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ள முயன்றார். அதிகாரப் பித்தினால் ஏற்பட்ட தனது அதிகப்பிரசங்கித்தனத்திற்கு அவருடைய எஜமானர்களிடமிருந்தே ஆதரவு கிடைக்காததால், ஆணை பிறப்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே அதை நிறுத்தி வைத்து விட்டார். ஊழலை ஒழிப்பதில்தான் பா.ஜ.க.வின் ஏஜண்டுக்கு எவ்வளவு ஆர்வம், அவசரம்!

செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்ததும், அவரைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் வைத்திருந்தால், அது இலாகா இல்லாத அமைச்சர் பதவியாக இருந்தாலும், “அரசியலமைப்பு இயந்திரம் செய்யாமல் தடுத்து விடுவார்” என்று கூறி அவரைப் பதவி நீக்கம் செய்து அவசர அவசரமாக ஆணை பிறப்பித்தார் ஆளுநர் ரவி. அதே காலகட்டத்தில்தான், ஜூலை 2ந் தேதி மராட்டியத்தில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியிலிருந்து அஜித் பவார் தலைமையில் முப்பத்தாறு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று ஏற்கனவே ஆட்சியில் உள்ள ஏக்நாத் சிண்டேவின் தலைமையில் உள்ள சிவசேனாவுடனும் பா.ஜ.க.வுடனும் கூட்டுச் சேர்ந்துள்ளனர். அவர்களில் எட்டு பேர் அமைச்சர்களாகவும் பதவியும் ஏற்றுள்ளனர். அஜித் பவார் துணை முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார்.

அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள மூன்று பேர் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, மத்தியப் புலாய்வுத் துறை (CBI) ஆகியவற்றின் சோதனைக்கும் விசாரணைக்கும் ஆளானவர்கள். அஜித் பவார் மீது மராட்டிய மாநில கூட்டுறவுச்சங்க ஊழல் தொடர்பான குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது, ஹசன் முஸ்ரிப் மீது சட்ட விரோதப் பணப் பறிமாற்றத்திற்காக அமலாக்கத் துறையின் வழக்கு உள்ளது. அவருடைய மற்றும் அவரது மூன்று மகன்களின் முன் ஜாமீன் மீதான விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சகன் புஜ்பால் என்பவர் சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் தண்டனை பெற்று இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தவர். இப்போது ஜாமினில் உள்ளார். அவருக்கு எதிரான மும்பைப் பல்கலைக்கழக ஊழல் வழக்கு விசாரணையில் நிலுவையில் உள்ளது.

எதிர்க் கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் அமைச்சர் ஒருவர் அமலாக்கத் துறையினால் கைது செய்யப்பட்டு விட்டாலே பதவியிலிருந்து அவர் நீக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அரசியலமைப்பு இயந்திரம் செயல்படாது எனக் கூறுகிறார் ஆளுநர் ரவி, பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலத்தில் அமலாக்கத் துறையினால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளவர்களும், ஊழலில் தண்டனை அனுபவித்து விட்டு ஜாமீனில் இருப்பவர்களும், முன் ஜாமீன் கேட்டுள்ளவர்களும் அமைச்சராக்கப்பட்டுள்ளனர். அப்படியானால் அங்கு அரசியலமைப்பு இயந்திரத்தைப் “பலப்படுத்தச்” செய்கின்றார்களா?

அவர் மட்டுமல்ல, ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சரான ராஜ்நாத் சிங் ஊழலை ஒழிப்பதில் ரவியை விட ஆர்வமாக உள்ளார். “தமிழ் நாட்டில் ஆட்சி அமைக்க ஒரே ஒரு முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள், தமிழ் நாட்டில் ஊழலே இல்லாமல் ஒழித்துக் காட்டுகிறோம்” என அவர் தமிழ் மக்களுக்கு உறுதி அளிக்கிறார். அண்டையில் உள்ள கர்நாடக மாநிலத்தில் அவருடைய கட்சியினர் 40% கமிசன் வாங்கிக் கொண்டு ஊழலை ஒழித்த விதத்தைத் தமிழ் மக்கள் நன்கே அறிந்து வைத்துள்ளனர். இப்பொழுது மட்டுமல்லாமல், எடியூரப்பா ஆட்சிக் காலத்தில் அவரும் , ஜனார்த்தன ரெட்டியும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கர்நாடகத்தின் இரும்புத் தாது சுரங்க வளத்தைக் கொள்ளையிட்டு பல்லாயிரம் கோடி ரூபாய்கள் சம்பாதித்ததை மக்கள் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியுமா?

மத்தியப் பிரதேசத்தில் இவர்களுடைய ஆட்சியில் நடந்த ‘வியாபம்’ (Madhyapradesh Professional Examination Board) ஊழலைப் பற்றி, அதாவது அரசுப் பணிகளுக்கான தேர்வுகள், மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றில் நடந்த பெரும் அளவிலான ஊழலைப் பற்றியும், அதில் தொடர்புடைய பலர் மர்மமாக இறந்தது பற்றியும் நாடே அறியும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்களின் ஊழலினால் எல்லைப் பாதுகாப்புப் படையினர் எவ்வாறு தரக்குறைவான உணவு சாப்பிடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர் என்பதை அதில் பணியாற்றும் ஒரு வீரரே அம்பலப்படுத்தியதையும் நாம் அறிவோம்.

இவை எல்லாம் இவர்களுடைய “தூய்மையான” ஆட்சியில் நடந்த ஊழல்களில் ஒரு சில மட்டுமே. எல்லாவற்றையும் தொகுத்துக் கூற வேண்டுமானால் அவை எண்ணிலடங்காப் பக்கங்களைக் கொண்டதாக இருக்கும்.

ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க. வின் நோக்கம் ஊழலை ஒழிப்பதல்ல. ஊழலைக் காட்டி எதிர்க் கட்சியில் உள்ளவர்கள் மீது தனது கீழ் உள்ள அதிகார அமைப்புகளை ஏவி, பயமுறுத்தித் தனக்குக் கீழ்ப்படிய வைப்பதுதான் அதன் நோக்கம். எதிர்க் கட்சியிலிருக்கும் ஊழல் பேர் வழிகள் அவற்றுக்குப் பணிந்து பா.ஜ.க.வில் சேர்ந்து விட்டாலோ, அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டாலோ அவர்கள் மீது நடவடிக்கை தொடராது. வழக்குகளும் கிடப்பில் போடப்படும். காசிக்குச் சென்று கங்கையில் குளிப்பவர்களின் “பாவங்கள் கழுவப்படுவது” போல பா.ஜ.க.வில் இணையும் ஊழல் பேர் வழிகள் ஊழல்கள் களையப்பட்டுத் “தூய்மை” அடைந்து விடுவார்கள்.

பா.ஜ.க.விலிருந்து மற்ற கட்சிகள் விதிவிலக்கானவையல்ல. அனைத்துக் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அ.தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது அக்கட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஊழல் பேர் வழி எனக் குற்றம் சாட்டி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய கட்சிதான் தி.மு.க.; இன்று அவர் தி.மு.க.வில் இருப்பதால் தி.மு.க.வைப் பொருத்தவரையிலும் அவர் தூய்மையானவராக மாறி விட்டார்.

ஒன்றியத்தில் ஆட்சியில் உள்ள கட்சி மாநிலத்தில் ஆட்சியில் உள்ள கட்சிகளின் மீதும், மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மாநிலத்தில் உள்ள எதிர்க் கட்சியினர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நடவடிக்கை எடுப்பது இங்கு தொடர்ந்து நடந்து வருவதுதான். ஆட்சியில் இருக்கும்போது ஊழல் புரிவதையும், ஆட்சியை இழந்ததும் புதியதாக ஆட்சிக்கு வரும் கட்சியால் ஆட்சி இழந்தவர்கள் மீது ஊழல் வழக்குகள் போடப்படுவதையும், மீண்டும் எதிர்க் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் மீதுள்ள குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி அவர்களை ஊழல் குற்றச் சாட்டுகளிலிருந்து நீதிமன்றங்கள் விடுவிக்கும் அதிசயத்தையும் நாம் தொடர்ந்து கடந்த எழுபது ஆண்டுகளாகப் பார்த்து வருகிறோம்.

ஊழல் என்பது இங்குள்ள முதலாளிய சமூகத்தில் புதியதல்ல. 1950 களிலேயே நேருவின் ஆட்சியிலேயே ஹரிதாஸ் முந்திரா என்னும் பங்குத்தரகர் தொடர்பான ஊழலில் அன்றைய நிதி அமைச்சகராக இருந்த டி,டி. கிருஷ்ணமாச்சாரி பதவியிலிருந்து விலகினார். காங்கிரசின் போபர்ஸ் பீரங்கி ஊழல் புகழ் பெற்றது. 1976 ஜனவரியில், நெருக்கடிக் காலத்தில் தமிழ் நாட்டில் கருணாநிதி தலைமையில் இருந்த ஆட்சியை ஊழல் குற்றம் சுமத்தி இந்திரா காந்தி கலைத்து, அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க சர்க்காரியா கமிசனை அமைத்தார். ஜெயலலிதா வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார். பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் தீவன ஊழலில் தண்டிக்கப்பட்டார். இங்குள்ள ஆட்சியாளர்கள் கடல் அளவு ஊழல் செய்தாலும் விரல் விட்டு எண்ணக் கூடிய மிகச் சிலரே தண்டிக்கப்படுகின்றனர். ஊழல்வாதிகள் தப்பிக்கும் வகையிலேயே இங்குள்ள அமைப்பும் சட்டமும் உள்ளன.

இங்குள்ள பாராளுமன்றங்களும் சட்டமன்றங்களும் நீதி, நிர்வாக அமைப்புகளும் முதலாளிய வர்க்கத்திற்குச் சேவை செய்யவே இருக்கின்றன. முதலாளிய வர்க்கம் இந்த நிர்வாக இயந்திரங்கள் மீது பல்வேறு கண்ணிகள் மூலம் தங்கள் கட்டுப்பாட்டைச் செலுத்தித் தங்களுக்குப் பணி புரியுமாறு செய்து வருகிறது. பணம் என்பது அதில் முக்கியமான ஒரு கண்ணி. முதலாளிய வர்க்கம் அனைவரையும் பணத்தால் விலைக்கு வாங்குகிறது. பணம் பாதாளம் வரைக்கும் பாயும். ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கத்தினரும் ஊழல் மூலம் முதலாளிகளாக மாறவும் சொகுசு வாழ்வு நடத்தவும் விரும்புகின்றனர். முதலாளியச் சமூகத்தின் இருப்புக்கு மிக முக்கியமான அடிப்படைகளில் ஒன்றாக இருப்பது ஊழல்தான். முதலாளிய வர்க்கமும் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். முதலாளியச் சமூகத்தை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலாளியச் சமூகத்தை ஒழிக்க வேண்டும்.

                                                                                                  - புவிமைந்தன்

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட