அல்லூரி என்று அவரது குடும்பப் பெயரால் வெகுமக்களால் அழைக்கப்பட்டவர் சீதாராம ராஜு. அவருடைய தந்தையார் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர், அவர் புகைப்பட நிலையம் வைத்திருந்தார். ஊர் ஊராக மாறிச் சென்று கடைசியாக, அன்றைய ஆந்திராவின் கல்வி, கலாச்சார மற்றும் அரசியல் மையமாக இருந்த இராஜமுந்திரி நகரில் குடியேறினார்.
அல்லூரி காக்கிநாடாவில்
படித்துக் கொண்டிருந்தபோது, மபெரும் சுதந்திரப் போராட்ட வீரரான சிரீ மாத்துரி அன்னபூர்ணய்யா மற்றும் மாபெரும் அறிஞரான ரால்லப்பள்ளி அச்சுத ராமய்யா ஆகியோரின் அரசியல் தொடர்பு அவருக்குக் கிடைத்தது. அவருடைய பதினைந்தாவது வயதில் கல்விக்காக விசாகப்பட்டினத்துக்குச் சென்றார்.. இருந்தாலும் அவருக்குப் பள்ளிப்படிப்பில் கவனம் செல்லவில்லை. அவர் இந்திய அரசியல் சூழலில் தீவிர ஆர்வம் காட்டி அது தொடர்பான அறிவினைப் பெறத் தொடங்கினார். 1857 ஆம் ஆண்டில் முதல் சுதந்திரப்போரில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் தங்கள் இன்னுயிரை ஈந்திருந்த கோண்டு வனப் பகுதிக்கு சிரீ அல்லூரி சீதாராம ராஜு சென்றார்.
அங்கு வனப் பாதுகாப்பு என்ற பெயரில் பிரிட்டிஷ் வன அதிகாரிகளால் பழங்குடி மக்கள் சுரண்டப்பட்டு வந்தனர். பழங்குடி மக்கள் அப்போது காடுகளிலும் மலைகளிலும் பொடு (ஜூம்) முறையில் இடம் மாற்றி பயிரிட்டு வந்தனர். காடுகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் அவர்கள் பயிரிட்ட இடங்களிலிருந்து விரட்டப்பட்டனர். வன உற்பத்திப் பொருட்கள் மீதான அவர்களுடைய உரிமை பறிக்கப்பட்டது.
வனப் பகுதிகளில் சாலை அமைத்தல் போன்ற பொதுப் பணிகளுக்கு வட்டார ஒப்பந்ததாரர்களும் பிரிட்டிஷ் அதிகாரிகளும் அவர்களிடமிருந்து கட்டாய/ ஊதியமில்லா உழைப்பைச் சுரண்டினர், அவர்களுடைய வீடுகளிலிருந்த ஆடு, கோழி, தேன், சிறிய வன உற்பத்திப் பொருட்கள் போன்றவற்றைத் தூக்கிச் சென்றனர், பெண்களிடம் பாலியல் சுரண்டலில் ஈடுபட்டனர்.
மெட்ராஸ் வனச் சட்டம் 1882 நிறைவேற்றப்பட்ட பிறகு, மரங்கள் நிறைந்த வனப் பகுதிகளில் பொருளாதார மதிப்பைச் சுரண்டும் முயற்சியாக காடுகளில் பழங்குடி மக்களின் சுதந்திரமான நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடுகள் அவர்களுடைய பழங்குடி முறையிலான இடப்பெயர்வு பயிரிடலைத் தடுத்தன. அதனால் இது அவர்களுடைய வாழ்வாதாரத்தைப் பறித்தது; அவர்களைப் பட்டினியில் தள்ளியது, அவர்களுடைய தன்மதிப்பை இழக்கச் செய்தது, கடும் சோதனையாக அமைந்தது, அவர்களுடைய
உழைப்புச் சுரண்டப்பட்டு, கூலி அடிமைகளாக ஆக்கப்பட்டனர். வன ஒப்பந்ததாரர்கள் சாலைக் கட்டுமானம் போன்ற வேலைகளுக்கு அவர்களுடைய ஊதியமில்லா உழைப்பைச் சுரண்டிக் கொழுத்தார்கள். மக்களின் இந்த அவல
நிலையைப் போக்க அல்லூரி பழங்குடிகளை ஒன்றிணைத்து சக்திவாய்ந்த எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார், அது இரண்டாம் ராம்பா கிளர்ச்சிக்கு வழிவகுத்தது.
காலனிய கால 1917 வனச் சட்டம் காலனிய காலத்துக்குப் பின்னர் வந்த 1957 மற்றும் 1971 வனச் சட்டங்களுக்கு முன்னுதாரணமாக அமைந்தது. அந்தச் சட்டங்கள் அனைத்தும் ராம்பா கிளர்ச்சிகள், தெலிங்கானா போராட்டம் (1946-51), நக்சல்பாரி மற்றும் சிரீகாகுளம் போராட்டங்கள் பழங்குடி மற்றும் நிலமற்ற ஏழை மக்களின் கிளர்ச்சிகளைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்டவையே. எந்தச் சட்டங்கள் வந்தபோதும் பழங்குடிகளும் நிலமற்ற ஏழை மக்களும் நிலங்களையும் பிற வாழ்வாதாரங்களையும் இழக்கவே செய்யப்பட்டனர் என்பதை நாம் இங்கு ஒன்றை நினைவுகூர
வேண்டும்.
1922ல் செளரிசெளராவில் விவசாயிகள்
தங்கள் போராட்டத்தின்போது ஒரு போலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். காந்தி அதைத் தனது
அகிம்சைப் போராட்டத்திற்கு ஏற்பட்ட தோல்வி எனக் கூறி, அப்பொழுது தான் நடத்திக்
கொண்டிருந்த ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார். அதே காலகட்டத்தில்தான் அல்லூரி ஆற்றல்மிக்க
பிரிட்டிஷ் போர் இயந்திரத்துக்கு எதிராக ஆந்திரப் பிரதேசத்தின் பழங்குடி மக்களைத் திரட்டிப் பாரம்பரிய போர்க் கருவிகளைக் கொண்டு போரிடத் தொடங்கினார். பழங்குடி மக்களுக்கு எழுச்சியூட்டி பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் அவர்களை ஒருங்கிணைத்தார். அவரது செயல் திட்டங்கள் விரைவாகவும் ஆற்றல்மிக்க வகையிலும் களம் கணடன. ராஜுவின் படை 1922 ஆகஸ்டு 22 அன்று சிண்டப்பள்ளி காவல் நிலையத்தின் மீதும், 23 அன்று கிருஷ்னாதேவி பேட்டை காவல் நிலையத்தின் மீதும், 24 அன்று ராஜ வொம்மாங்கி காவல் நிலையத்தின் மீதும் தாக்குதல் தொடுத்தது, ஏராளமான துப்பாக்கிகள், துப்பாக்கி முனை ஈட்டிகளையும் தோட்டாக்களையும் வாள்களையும் கைப்பற்றியது.
அவர் புரட்சியாளர் வீரய்யா தோராவை சிறையிலிருந்து விடுவித்தார். பிரிட்டிஷ் படை எச்சரிக்கையடைந்து, சீதாராம ராஜுவைச் சிறைபிடிக்க காவல்துறை மற்றும் படையை ஏவிவிட்டது. பெட்டவலஸ்ஸாவில் ராஜு பிரிட்டிஷ் படைமீது தாக்குதல் தொடுத்தார். இந்தப் போரில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள், பெரும் உயிரிழப்புக்களைச் சந்தித்துப் பின்வாங்கினார்கள்.
அந்த நாளிலிருந்து ராஜுவுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையில் அடுத்தடுத்து தொடர்ந்து போர் நிகழ்ந்து வந்தது. அனைத்திலும் ராஜுவே வெற்றிபெற்று வந்தார். உண்மையில் 1922 இலிருந்து 1924 வரை சீதாராம ராஜு பரந்த முகாமை (ஏஜென்சி) பகுதிகளில் ஆட்சி செலுத்தி வந்தார், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்தார்.
பின்னர் பிரிட்டிஷார் அசாம் துப்பாக்கிப் படையையும் பிறவற்றையும் அனுப்பிவைத்தனர். சீற்றத்துடன் சண்டை நிகழ்ந்தது, ராஜு ஆந்தப் போரில் தனது இன்னுயிரை ஈந்து தியாகியானார்.
கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிச் செல்வதற்கு ராஜு முயற்சி செய்தபோது சுட்டுக்கொல்லப் பட்டதாக பிரிட்டிஷ் அரசாங்கம் தெரிவித்திருந்தது. அல்லூரி சீதாராம ராஜுவின் இறப்பு குறித்த விசாரணை அறிக்கை விவரங்களை பலமுறை கேட்டும் பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை அளிக்க முன்வரவில்லை.
டாக்டர் போகராஜு பட்டாபி சீதாரமய்யா இரண்டு தொகுதிகளில் தொகுத்த இந்திய தேசியக் காங்கிரசின் வரலாறு முதல் தொகுதி 1935 இல் வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
1916 இல்
தனது 19 வது வயதில் கயாவிலும் 1923 ஆம் ஆண்டு தனது 23 வது வயதில் காக்கிநாடவிலும் நடந்த அனைத்து இந்திய காங்கிரஸ் அமர்வுகளில் அவர் கலந்துகொண்டார். ராஜு பிரிட்டிஷாரால் சிண்டப்பள்ளி காடுகளில் பொறிவைத்துச் சிறை பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொய்யூரு கிராமத்தில் ஒரு மரத்தில் கட்டிவைக்கப்பட்டு அருகாமையில் வைத்துச் சுட்டுகொல்லப்பட்டார்.. காயமடைந்து இரத்தம் சொட்டிக்கொண்டிருந்த அவரது உடல் கிருஷ்ணாதேவிப் பேட்டை கிராமத்துக்கு கொண்டுவரப்பட்டு அங்கு காவல்துறை முன்னிலையில் அவரது இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. பின்னாளில் அங்கு அவருக்காக ஒரு கல்லறை கட்டப்பட்டது.
ராஜு தெலுங்கு பேசும் பகுதிகளான ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் புகழ்பெற்று விளங்கினார், ‘மான்யம் வீருடு’ (வன வீரன்) என்ற பெயரில் அவரது வாழ்க்கை வரலாறு, நாடகம், ஓரங்க நாடகம், பாடல்கள், பல புத்தகங்கள், தாலாட்டுப் பாடல்கள், முனைவர் பட்ட ஆய்வுகள், திரைப்படம், கிராமியக் கலைவடிவமான கதையும் பாடலும் நகைச்சுவையும் சேர்ந்த புர்ர கதா என ஏராளமான படைப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன. மிகவும் அண்மையில், ஊடகவியலாளரும் வரலாற்று அறிஞருமான முனைவர் கோபராஜு நாரயண ராவ் (2017 இல்) எழுதிய புனைவு வாழ்க்கை வரலாறு வெளிவந்தது. அவர் அல்லூரி இயங்கிய பகுதிகள் அனைத்திற்கும் பயணம் செய்து அந்த படைப்பைக் கொண்டுவந்துள்ளார். அதன் தலைப்பு ஆகு பச்சா சூரியோதயம் (பசுமை விடியல்) ஆகும் அது அல்லூரி பற்றி முன்பு அறியப்படாத அதிகாரபூர்வ தகவல்களை உள்ளடக்கியதாகும்.
அவரது உருவப்படங்களும் சிலைகளும் பல இடங்களில் காணப்படுகின்றன. சித்தாந்தம் கடந்து கோடிக்கணக்கான தெலுங்கர்கள் அவருடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்
1986 டிசம்பர்
26 அன்று ஆந்திரப் பிரதேசம் மேற்கு கோதாவரி மாவட்டம் மொகாலு கிராமத்தில் அவரது நினைவாக அஞ்சல் தலை (வரிசை எண் 1192) ஒன்று வெளியிடப்பட்டது. 10 இலட்சம் அஞ்சல் தலைகள் அச்சிடப்பட்டு அனைத்தும் விற்றுப்போயின.
அல்லூரியுடன் இணைந்து போரிட்ட காமு காந்தம் தோரா 1924 ஜூன் 6 அன்று நடந்த போரில் கொல்லப்பட்டார். அவருடைய சகோதரர் காமு மல்லு தோரா சிறைபிடிக்கப்பட்டு வாழ்நாள் சிறைத் தண்டனை அளிக்கப்பட்டார். விடுதலைக்குப் பின்னர் நடந்த முதலாவது மக்களவையின் உறுப்பினராக பழங்குடி மக்கள் அவரைத் தேர்ந்தெடுத்தனர். இது அல்லூரியால் வழி நடத்தப்பட்ட பழங்குடி மக்களின்
இயக்கத்திற்கு அடிப்படையாக இருந்த மக்கள்திரளின் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
இப்படிப் பெரிதும் அறியப்படாத ஆயிரக்கணக்கான தன்னலமற்ற வீரஞ்செறிந்த போராளிகளின் அர்ப்பணிப்பு மிக்க போராட்டங்களினால் விரட்டியடிக்கப்பட்ட காலனி ஆட்சியை விடவும், கொடிய ஆட்சியை இன்று இந்திய ஆட்சியாளர்கள் நடத்தி வருகிறார்கள். இந்திய மக்கள் மீது சொல்லொணா ஒடுக்குறைகளைச் செலுத்தி வருகிறார்கள். அல்லூரி சீதாராம ராஜு போன்ற மக்கள் போராளிகளின் நினைவுகளை நெஞ்சிலேந்தி இந்திய மக்கள் தங்களுக்கு எதிரான ஆளும் வர்க்கங்களை அதிகாரத்திலிருந்து விரட்டியடித்து,, சுரண்டலற்ற, சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட சமுதாயத்தைப் படைத்திட முன்வர வேண்டும். - நிழல்வண்னன்
தகவல் ஆதாரம்” ஜனதா வீக்லி.
It is sad that there are many unsung hero's and revolutionaries. That said, to be frank it is news to me.
ReplyDeleteஇந்திய மக்கள் சுரண்டலிலிருந்தும், ஒடுக்கு முறையிலிருந்தும் விடுதலைப் பெற வேண்டுமென்பதற்காக எண்ணற்ற மக்களும், போராளிகளும் நாடெங்கிலும் போராடி வந்திருக்கின்றனர். அப்படி தன்னலமற்று போராடிய வீர மறவர்களுடைய அணியில் இருந்த அல்லூரி குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
ReplyDeleteஇப்படிப்பட்ட போராளிகள் துவங்கிய போரை வெற்றிகரமான முடிவுக்குக் கொண்டுவர வேண்டியது தொழிலாளிகள் - விவசாயிகள் - பழங்குடியின மக்களுடைய கடமையாகும்.