Skip to main content

செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்தை நோக்கிய நகர்வும்

 

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பொருள் உற்பத்தியிலும் ஒட்டுமொத்த சமூக வாழ்க்கையிலும் உலகம் முழுவதும் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றது. வேளாண்மை, தொழிற்துறை, போக்குவரத்து, கல்வி, மருத்துவம், நிர்வாகம், விற்பனை, சந்தைப்படுத்தல் என அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவால் இயங்கும் கணினிகள், இயந்திரங்கள், ரோபோட்கள் ஆகியவற்றின் பயன்பாடுகள் அதிகரித்துவருகின்றன.

விவசாயத்தில் நிலத்தை உழுதல், சமன்படுத்தல், விதைத்தல், அறுவடை செய்தல், பருத்தி எடுத்தல், திரவ வடிவிலான உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை ட்ரோன்கள் (drone) மூலம் தெளித்தல் போன்ற பல்வேறு வேலைகளும் இன்று செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ரோபோட்கள் மூலமும், இயந்திரங்கள மூலமும் செய்யப்படுகின்றன.

அதே போல தொழிற்சாலைகளிலும், சுரங்கங்களிலும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் உதிரிப் பாகங்களை இணைத்தல், பற்ற வைத்தல், வண்ணம் பூசுதல் போன்ற பல்வேறு பணிகளுக்கும் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன. கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மட்டும் இப்பொழுது பத்து இலட்சம் ரோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இன்று தொலைக் காட்சிகளில் ரோபோட்கள் செய்திகள் வாசிக்கின்றன. ஓட்டுனர் இல்லாமலேயே சாலைகளில் கார்கள் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் வீட்டு வேலைகளையும் ரோபோட்கள் செய்வது அதிகரித்து வருகிறது.

Open AI என்னும் நிறுவனம் உருவாக்கியுள்ள chat GPT (Generative pre-trained Transformer) என்னும் பெரும் மொழி மாதிரி (Large Language Model) நுண்ணறிவு அறிவுத்துறையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. இத்தகைய பெரும் மொழி மாதிரிகளை கூகுள் (Google), மெட்டா (Meta), அமேசான் (Amazon) ஆகிய நிறுவனங்களும் கட்டமைத்துள்ளன. இது இணைய தளத்தில் உள்ள அனைத்துத் தரவுகளையும் தேடி, தூண்டித்துருவி நாம் தேடும் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும். கட்டுரைக்கான தலைப்பையும் உள்ளடக்கத்தையும் கொடுத்து விட்டால் அது கட்டுரையைத் தயாரித்து உங்கள் முன் வைத்து விடும். கதை எழுதும், கவிதை எழுதும். வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கின் விவரங்களைத் தந்து விட்டால் போதும், அதே போன்ற வழக்குகளில் அதற்கு முன்பு வழங்கப்பட்ட வழக்குகள் சம்பந்தமான தீர்ப்புகளைத் தொகுத்து உடனடியாக வழங்கி விடும். நீதிபதிகள் ஒரு வழக்கின் விவரங்களைத் தந்தால் அது அந்த வழக்கைப் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து தீர்ப்பையும் எழுதி விடும்.

இத்தகைய செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் பயன்பாடுகள் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் என்றும், உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியை 14 விழுக்காடு உயர்த்தும் என்றும் மசாசூசெட்ஸ் தொழில் நுட்பக் கழகம் (Massachusetts Institute of Technology) கூறுகிறது. ப்ரைஸ்வாட்டர்ஸ்ஹவுஸ் கூப்பெர்ஸ் (Pricewatershouse Coopers) நிறுவனமும் இதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அந்த நிறுவனம் 2030 ஆண்டுக்குள் உலகின் ஒட்டுமொத்த உற்பத்தியை 5.7 இலட்சம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு அதிகரிக்கும் எனக் கூறுகிறது.

மிகக் கடுமையான வேலைகளையும் மிக எளிதாகவும், அதே சமயத்தில் வேகமாகவும், துல்லியமாகவும் செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் இயந்திரங்களும் ரோபோட்களும் செய்து முடிக்கும். அதே சமயத்தில் அவை பல்வேறு உற்பத்தித் துறைகளிலும், சேவைத் துறைகளிலும் தேவைப்படும் உழைப்பின் தேவையைக் குறைக்கின்றன. உடல் உழைப்புக்கான தேவை மட்டுமல்லாமல் மூளை உழைப்புக்கான தேவைகளும் குறைக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இணையதளத்தில் வலைதளப் பக்கம் வடிவமைத்தல், வலைப்பூ உருவாக்கம், டிஜிட்டல் ஒலிக் கோப்புகள் (podcasts), காணொளி ஆகியவற்றுக்கான உள்ளடக்கத்தை எழுதுபவர்களின் (content writers) அவசியத்தை chatGPT போன்ற பெரும் மொழி மாதிரிகள் (LLM) தேவையில்லாமல் ஆக்குகின்றன. இன்று உலகம் முழுவதும் உள்ளடக்க எழுத்தாளர்களாக மட்டும் பல இலட்சம் பேர் பணி புரிந்து வருகின்றனர். இவர்களுடைய எதிர்காலம் இப்பொழுது கேள்விக்குறியாகியுள்ளது. இவ்வாறு மூளை உழைப்பில் ஈடுபட்டுள்ள படித்த நடுத்தர வர்க்கங்களின் உழைப்புத் தேவையும் பெரும் அளவு குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதே போல ஓட்டுனர்கள், காசாளர்கள், சில்லறை விற்பனை உதவியாளர்கள், தொழிற்சாலைகளிலும், விவசாயத்திலும்,, சேவைத் துறைகளிலும் பணி புரிவோர் என எனப் பல்வேறு பகுதியினரும் வேலையிழப்பிற்கு ஆளாகி வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் நுழைவால் உலகம் முழுவதும் 30 கோடிப் பேர்கள் வேலை இழப்பார்கள் என கோல்ட்மன் சாக்ஸ் (Goldman Sachs) கூறுகிறது. அலுவலக நிர்வாகம், சட்டத் துறை, கட்டிடத்துறை, பொறியியல் துறை, வணிகம் மற்றும் நிதிசார் நடவடிக்கைகள், விற்பனை, மருத்துவம், கலை மற்றும் வடிவமைப்பு என அனைத்துத் துறைகளிலும் அதன் தாக்கம் பெருமளவு இருக்கும் என அந்த நிறுவனம் கூறுகிறது.

ஒட்டுமொத்தமாக சமூகத்தில் உடல் உழைப்பு, மூளை உழைப்பு ஆகியவற்றுக்கான தேவை குறைவதால் சமூகத்தில் வேலையில்லாதவர்களின் தொகை பெருமளவு அதிகரிக்க இவை காரணமாகின்றன. அதனால் கூலியிலும் கடும் வீழ்ச்சி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

முதலாளிய உற்பத்திமுறை இலாபம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது. இலாபம், இலாபம், மென்மேலும் இலாபம். இதுதான் அதனுடைய உயிர் மூச்சு. முதலாளிகள் சந்தையில் தங்களுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காகத் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் போட்டியில் வெல்வதற்காகத் தாம் உற்பத்தி செய்யும் உற்பத்திப் பொருட்களின் உற்பத்திச் செலவைக் குறைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக நவீனக் கருவிகளையும் இயந்திரங்களையும் தொடர்ந்து தமது உற்பத்தியில் புகுத்தி வருகின்றனர். அதனால் நேரடி உடல் உழைப்பின் பங்கு உற்பத்தியில் குறைந்து வருகிறது. கணினி மயமாக்கலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடும் உடல் உழைப்பின் தேவையை மட்டுமல்லாமல் மூளை உழைப்பின் தேவையையும் பெரும் அளவு குறைத்து வருகிறது. இதன் காரணமாக இன்று பொருளாதார வளர்ச்சி என்பது வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையை அதிகரிக்காத வளர்ச்சியாக உள்ளது. அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இருக்கும் வேலைகளையும் பறிக்கும் வளர்ச்சியாக உள்ளது.

1980 களிலிருந்து அமெரிக்காவில் தொழிலாளர்களின் வேலை இழப்புக்கும், கூலியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்கும் தானியங்கிமயமாக்கும் தொழில் நுட்பத்தை உற்பத்தியில் புகுத்தியதுதான் முக்கிய காரணாமாக உள்ளது என்றும், அது வருமானத்தில் பெரும் ஏற்றத் தாழ்வை உருவாக்கியுள்ளது என்றும் அமெரிக்காவில் உள்ள தேசியப் பொருளாதார ஆராய்ச்சி நிறுவனம் (National Bureau of Economic Research) கூறுகிறது.

2022ல் உலகின் மொத்த சொத்தில் 44..5 விழுக்காடு 1 விழுக்காட்டினருக்குச் சொந்தமாக உள்ளது என்றும், 52.5 விழுக்காடு மக்கள் 1.2 விழுக்காடு சொத்தை மட்டும் கொண்டுள்ளனர் என்றும் கிரெடிட் சூசே (Credit Suisse) என்னும் சுவிஸ் வங்கியின் அறிக்கை கூறுகிறது. இது உலக அளவில் நிலவி வரும் பெரும் ஏற்றத் தாழ்வைப் படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தியாவிலோ கீழ் மட்டத்தில் உள்ள 42 விழுக்காடு மக்களின் ஆண்டு வருமானத்திற்குச் சமமான வருமானத்தை மேல் மட்டத்தில் உள்ள 1 விழுக்காட்டினர் பெறுகின்றனர். இந்தப் புள்ளி விவரங்கள் உலக அளவில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வைச் சுட்டிக் காட்டுகின்றன. இந்த ஏற்றத் தாழ்வு ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றதே தவிர குறைந்தபாடில்லை.

இந்த நிலையில்தான், செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டினால் வருங்காலத்தில் 30 கோடிப் பேர் வேலையிழப்பார்கள் என்ற அபாய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முதலாளிய வர்க்கம் தன்னுடைய இலாபத்திற்காகத் தொடர்ந்து அறிவியல் வளர்ச்சியையும் தொழில் நுட்ப வளர்ச்சியையும் பயன்படுத்தித் தனது உற்பத்தியை நவீனப்படுத்தி வருகிறது. நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கவும் வளர்த்தெடுக்கவும் பெரும் அளவு மூலதனம் தேவைப்படுகிறது. பெருமளவு மூலதனம் கொண்டவர்கள் அதி நவீனத் தொழில்நுட்பத்தை உருவாக்கிப் பிற முதலாளிகளைப் போட்டியில் வீழ்த்தி வருகின்றனர். இவ்வாறு மூலதனம் ஒரு சிலர் கைகளில் மையப்படுதலும் ஒன்று திரளுதலும் நடக்கிறது. இது பெரும் ஏகபோகங்கள் உருவாக வழிவகுக்கின்றன. இன்னொரு பக்கம் முதலாளியம் தானியங்கிமயமாதல் தொழில் நுட்பங்கள் மூலம் கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்புகளைப் பறித்து வருகிறது. தொடக்கத்தில் முதலாளிகளுக்கு இது உடனடி இலாபம் அளிப்பதாக இருந்தாலும், அதன் பின்விளைவு முதலாளிய உற்பத்திமுறையே தொடர்ந்து நீடிக்க முடியாத அளவிற்குப் பெரும் நெருக்கடியைக் கொண்டு வருகிறது.

இலாப வெறிக்காக முடுக்கிவிடப்படும் உற்பத்தி சக்திகள் பிரமாண்டமாக வளர்ச்சியடைந்து உழைப்பின் தேவையைக் குறைக்கின்றன. இது இலாபத்திற்காகச் சரக்கை உற்பத்தி செய்யும் முதலாளிய உற்பத்திமுறையில் உள்ள தீர்க்க முடியாத சிக்கலை, முரண்பாட்டை மேலும் தீவிரமடையச் செய்கின்றது. சரக்கு உற்பத்தி என்பதுதான் முதலாளிய உற்பத்திமுறையின் உயிர்நாடி. இலாபத்திற்காகச் சரக்கை உற்பத்தி செய்யும் முதலாளி அதைச் சந்தையில் விற்பதன் மூலமே இலாபத்தை அடைய முடியும். உற்பத்தி செய்த சரக்கை சந்தையில் விற்க முடியாவிட்டால் அவனால் இலாபத்தை அடைய முடியாது. சரக்கு சந்தையில் விற்கப்படவேண்டுமானால் அதை வாங்குபவர்கள் சந்தையில் இருக்க வேண்டும். அவர்கள் கையில் சரக்குகளை வாங்குமளவுக்குப் பணம் இருக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே சரக்குகளைப் பணத்திற்காகப் பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும் அதன் மூலம் மட்டுமே அவனால் இலாபத்தை அடைய முடியும்.

ஆனால் முதலாளிகளோ தங்களுடைய இலாபத்தைப் பெருக்குவதற்காக, அறிவியல், செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி சமூகத்தில் பெரும்பாலான மக்களைத் தொடர்ந்து வேலை இல்லாமல் ஆக்கி வருகின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் வேலையின்றி, வருமானம் இன்றி, வறுமையில் உழன்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களால் தங்களுடைய உயிர் வாழ்விற்குத் தேவையான பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் முதலாளிக்குத் தான் உற்பத்தி செய்யும் சரக்குகளைச் சந்தையில் விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் சரக்குகள் விற்பனை செய்யப்படும்போது மட்டுமே முதலாளி தனது மூலதனத்தையும் உபரி மதிப்பு என்ற இலாபத்தையும் பெற முடியும். மூலதனத்தை மீண்டும் உற்பத்திக்குக் கொண்டு வர முடியும். சரக்குகளை மீண்டும் உற்பத்தி செய்து சந்தைக்குக் கொண்டு சென்று பணத்திற்காகப் பரிவர்த்தனை செய்து மேலும் இலாபத்தை அடைய முடியும். உற்பத்தி – விற்பனை என்ற சங்கிலித் தொடர் அறுபடாமல் தொடர்ந்து நடக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே முதலாளியால் இலாபத்தை அடைய முடியும். உற்பத்தி மட்டும் இருந்து விற்பனை இல்லாவிட்டால் முதலாளிய உற்பத்தி தொடர முடியாது. அப்பொழுது முதலாளிய உற்பத்தியே நெருக்கடிக்குள் சிக்கிக் கொள்கிறது. இன்று உலக அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணமாகின்றது. செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில் நுட்பங்கள் புகுத்தப்படும்போது இந்த நெருக்கடி மென்மேலும் ஆழமாகி முதலாளிய உற்பத்திமுறைக்கே முடிவைக் கொண்டு வருகிறது. அதே சமயத்தில் ஒரு புதிய சமூகத்திற்கான, சோசலிச சமூகத்திற்கான, அடிப்படையை உருவாக்குகின்றது.

சமூகத்தில் பெரும்பான்மையான மக்களை வேலையில்லாத் திண்டாட்டத்திலும் வறுமையிலும் பட்டினியிலும் ஆழ்த்தி விட்டுச் சிறுபான்மையாக உள்ள முதலாளிய வர்க்கம் மட்டும் நிம்மதியாகவும் அமைதியாகவும் இருந்து விட முடியாது. பொருளாதார நெருக்கடி பெரும் அரசியல் நெருக்கடியையும், பண்பாட்டு நெருக்கடியையும் உருவாக்கும். நிலவி வரும் முதலாளிய சமூகத்தை மாற்றியமைக்காமல் தங்களுக்கு வாழ்க்கையில்லை என்ற உண்மையை எதார்த்தம் மக்களுக்குத் தெளிவுபடுத்தும். சமூக மாற்றத்திற்கான அவசியத்தைப் பற்றி அவர்களைச் சிந்திக்க வைக்கும்; தங்களுடைய வாழ்க்கைக்காகப் போராட வைக்கும்; தொழிற்சாலைகளையும், நிலத்தையும், அறிவியல் தொழில்நுட்பங்களையும் கையகப்படுத்துவார்கள்; அனைவருக்கும் வாழ்வு கொடுக்கும் புதிய, சுரண்டலற்ற, சோசலிச சமூகத்தைப் படைப்பார்கள்.

தொழிற்சாலைகளும் நிலமும் தனியுடைமையாக உள்ள முதலாளிய சமூகத்தில், இலாபத்தின் அடிப்படையில் அமைந்த உற்பத்திமுறையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் இயந்திரங்களும் உழைப்பின் தேவையைக் குறைக்கின்றன; அவை உழைப்பாளிகளின் வேலைகளைப் பறித்து முதலாளிய வர்க்கத்தின் இலாபங்களைப் பெருக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் சோசலிச சமூகத்தில் தொழிற்சாலைகளும் நிலமும் சமூக உடைமையாக்கப்பட்ட நிலையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் இயந்திரங்களும் உழைப்பாளிகளின் உழைப்பு நேரத்தைக் குறைத்து ஒய்வு நேரத்தை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும். உற்பத்தி சாதனங்களின் மீதான தனியுடைமை உழைக்கும் மக்களின் வேலையைப் பறிக்கும்; உற்பத்தி சாதனங்களின் மீதான சமூக உடைமை உழைப்பாளிகளுக்கு ஒய்வு நேரத்தை அதிகரிக்கும்.

எடுத்துக்காட்டாக, ஒரு முதலாளிக்கு உரிய தொழிற்சாலையில் ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றார்கள் என்றும், ஒவ்வொருவரும் எட்டு மணி நேரம் வேலை செய்கின்றார்கள் என்றும் வைத்துக் கொள்வோம். நவீன இயந்திரங்களைப் புகுத்துவதன் மூலம் ஆயிரம் தொழிலாளர்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட அதே அளவு உற்பத்தியை ஐந்நூறு தொழிலாளர்களைக் கொண்டு செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுவதாகக் கொள்வோம். அதன் காரணமாக ஐந்நூறு தொழிலாளர்களின் வேலை பறிக்கப்படும். ஏனென்றால் முதலாளியின் நோக்கம் செலவைக் குறைத்து இலாபத்தைப் பெருக்க வேண்டும் என்பதுதான். ஆனால் உற்பத்தி சாதனங்களைச் சமூக உடைமையாகக் கொண்ட சோசலிச சமூகத்தில் நிலைமை முற்றிலும் வேறாக இருக்கும். அங்கு உற்பத்தி தனி நபரான முதலாளியின் இலாபத்திற்காக நடைபெறுவதில்லை. மாறாக சமூகத்தின் தேவைக்காக உற்பத்தி நடைபெறும். எனவே அங்கு ஐந்நூறு பேர் வேலை இழப்பதற்குப் பதிலாக, வேலை நேரம் எட்டு மணியிலிருந்து நான்கு மணியாகக் குறைக்கப்படும். அதன் மூலம் ஆயிரம் தொழிலாளர்களும் அங்கு வேலை செய்வார்கள். ஆனால் ஒவ்வொருவரும் எட்டு மணி நேரத்திற்குப் பதிலாக நான்கு மணி நேரம் மட்டுமே வேலை செய்வார்கள். இவ்வாறு சோசலிச சமூகத்தில் உழைப்பாளிகளின் ஒய்வு நேரம் அதிகரிக்கப்படும்.

அறிவியல், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் உருவாக்கப்படும் கருவிகளும் இயந்திரங்களும் ‘உழைப்பின் அவசியத்தை மென்மேலும் குறைக்கும், ஒரு கட்டத்தில் நேரடி உழைப்பு முடிவுற்று, உழைப்பு மேற்பார்வை செய்யும், ஒழுங்குபடுத்தும் ஒரு நடவடிக்கையாக மாற்றமடையும்’ என்று மார்க்ஸ் (பொருளாதாரக் கையெழுத்துப்படிகள் 1857-1858) முன்னுரைத்தது இன்று மெய்யாகி வருவதைப் பார்க்கின்றோம். அறிவியலின் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் உண்மையில் சமூகம் முழுவதற்கும் பயன்பட வேண்டுமானால் உற்பத்தி சாதனங்களான தொழிற்சாலைகளும் நிலமும் கருவிகளும் இயந்திரங்களும் சமூக உடைமையாக்கப்பட வேண்டும்.

சோசலிச சமூகத்தில் சுதந்திரமான உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பில், மக்களின் தேவையின் அடிப்படையில் திட்டமிட்டு உற்பத்தி நடைபெறும். உழைப்பின் பலன்கள் அனைவருக்கும் உண்மையான உழைப்பு நேர அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும். இலாப அடிப்படையிலான முதலாளியச் சரக்கு உற்பத்திமுறைக்கு முடிவு கட்டப்படும். மக்கள் அனைவருக்கும் ஒய்வு நேரம் அதிகரிக்கும். ஒய்வு நேரம் கலை இலக்கியம், இசை, ஓவியம் போன்ற அனைத்தும் தழுவிய தனிமனித ஆளுமை வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும். அத்தகைய ஒரு சமூகத்தை நோக்கிய நகர்தலைத்தான் செயற்கை அறிவியல் போன்ற தொழில் நுட்பங்கள் விரைவுபடுத்துகின்றன.

மு.வசந்தகுமார்

Comments

  1. நன்று. உற்பத்தி சக்திகள் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை மாற்றி இருக்க வேண்டாம்..?
    மார்க்சியம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மார்க்சியம் தத்தளிக்கவில்லை. மாற்றங்கள் மார்க்சியத் தத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

      Delete
  2. "செயற்கை நுண்ணறிவும் சோசலிசத்தை நோக்கிய நகர்வும்" என்ற இந்தக் கட்டுரை மிகவும் ஆய்வு செய்து, செயற்கை நுண்ணறிவின் தற்போதைய வளர்ச்சி குறித்தும், தொழிலாளர்கள் மீதும், சமூக உற்பத்தி மீதும், மொத்த சமுதாயத்தின் மீதும் அதன் தாக்கம் குறித்து விரிவாக எழுதப்பட்டுள்ளது.

    குறிப்பாக -
    • செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பம் குறித்தும், அது முதலாளித்துவ அமைப்பில் மூலதனத்தை மேலும் குவிப்பதற்கும்/மையப்படுத்துவதற்கும், தொழிலாளிகளை மேலும் கடுமையாகச் சுரண்டுவதற்கும், மக்களுடைய வாழ்க்கையை சீரழிப்பதற்கும் எவ்வாறு பங்களிக்கிறது என்பதை பல்வேறு கோணங்கங்களிலிருந்து, விளக்கப்படங்களோடு தோழர் தெளிவாக விளக்கியிருக்கிறார்.
    • அது, முதலாளித்துவ உபரி உற்பத்திக்கும், அதன் காரணமாக பெரும் நெருக்கடிக்கும் வழி வகுக்கிறது.
    • அறிவியலின் வளர்ச்சியும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் உண்மையில் சமூகம் முழுவதற்கும் பயன்பட வேண்டுமானால் உற்பத்தி சாதனங்களான தொழிற்சாலைகளும் நிலமும் கருவிகளும் இயந்திரங்களும் சமூக உடைமையாக்கப்பட வேண்டும்.
    • சோசலிச சமூகத்தில் சுதந்திரமான உற்பத்தியாளர்களின் கூட்டமைப்பில், மக்களின் தேவையின் அடிப்படையில் திட்டமிட்டு உற்பத்தி நடைபெறும். உழைப்பின் பலன்கள் அனைவருக்கும் உண்மையான உழைப்பு நேர அடிப்படையில் பகிர்ந்து கொள்ளப்படும்.
    • அத்தகைய ஒரு சமூகத்தை நோக்கிய நகர்தலைத்தான் செயற்கை அறிவியல் போன்ற தொழில் நுட்பங்கள் விரைவுபடுத்துகின்றன.

    மா-லெ அறிவியல் அடிப்படையில் தோழர் எழுதியுள்ள இந்தக் கட்டுரை, தீவிரமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உட்பட நவீன தொழில்நுட்பத்தின் பாதிப்புகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றை ஒட்டு மொத்த சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்த உற்பத்தி சாதனங்களையும், அரசியல் அதிகாரத்தையும் தொழிலாளி வர்க்கம் கைப்பற்ற வேண்டிய அவசியத்தையும் அருமையாக விளக்கியிருக்கிறது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட