Skip to main content

ஒய்யாரக் கொண்டையாம்! உள்ளே ஈறும் பேணுமாம்!

 

செப்டம்பர் மாதம் (2023) 9, 10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 நாடுகளின் 18-வது உச்சி மாநாடு வெகு கோலாகலமாக நடந்து முடிந்தது. இந்த ஆண்டு ஜி 20 மாநாடு நடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வந்தது. இந்தப் பொறுப்பு சுழற்சிமுறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வருவதாகும். சென்ற ஆண்டு இதனுடைய தலைமைப் பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தது. அடுத்து அதன் தலைமை பிரேசிலுக்கு செல்கின்றது. ஆனால் இந்தியாவின் பிரதம மந்திரியும் பா.ஜ.க. பரிவாரங்களும் இந்த பொறுப்பு மோடியின் தகுதியினாலும் திறமையினாலும்தான் இந்தியாவுக்குக் கிடைத்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

 

இந்த உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் வெளிக்காட்டிக் கொண்டார்கள். மாநாட்டை ஒட்டி டெல்லியை அழகுபடுத்துவதற்கு மட்டும் ஆட்சியாளர்கள் 4100 கோடி ரூபாய்களை அள்ளித் தெளித்துள்ளார்கள். இந்த மாநாடு நடந்த பாரத் மண்டபத்தைக் கட்டமைக்கவும் அழகுபடுத்தவும் மட்டும் ரூ.2700 கோடி செலவழித்துள்ளார்கள். ஜி 20 மாநாடு 2017இல் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில் நடந்தபோது அந்த நாடு அதற்காக 7 கோடியே 22 லட்சம் யூரோக்களை மட்டுமே செலவு செய்திருந்தது. அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 635.5 கோடி மட்டுமே செலவு செய்திருந்தது. ஆனால் ஏழைகள் நிறைந்த இந்திய நாட்டின் ஆட்சியாளர்களோ அதற்காகப் பன்மடங்கு அதிகமாக ஊதாரித்தனமாகச் செலவிட்டு உள்ளனர். உலகளவில் மோடியின் பெருமையைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதற்கும், அடுத்து 2024ல் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இதைக் காட்டி வாக்குகளை அறுவடை செய்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குமே ஊதாரித்தனமாக இந்த ஆடம்பரச் செலவுகளை பா.ஜ.க.வின் அரசாங்கம் பொறுப்பற்ற முறையில் செய்துள்ளது. 

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்பதுதான் ஜி 20 மாநாட்டின் முழக்கமாக இருந்தது இது எவ்வளவு போலியான, பொருளற்ற முழக்கம் என்பதை மாநாடு நடந்த அந்த இரண்டு நாட்களிலும் டில்லி வாழ் மக்கள் நேரில் கண்டு உணர்ந்தார்கள். மாநாடு நடந்த இரண்டு நாட்களிலும் 144 தடையுத்தரவு அறிவிக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடக்கி வைக்கப்பட்டனர். டில்லியில் குடிசைப் பகுதிகளில் வறிய நிலையில் வாழும் ஏழை மக்கள் வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களின் கண்களில் பட்டுவிட்டால் இந்தியாவில் மானம் போய்விடும் என்று கருதிய இந்திய ஆட்சியாளர்கள், குடிசைப் பகுதிகள் வெளிநாட்டில் இருந்து வரும் தலைவர்களின் கண்களில் படாமல் இருப்பதற்காகப் பச்சை வண்ணத் திரைகளைக் கொண்டு மறைத்தார்கள். டில்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் ஏழை மக்களின் குடிசைகளை இடித்தார்கள். இதுதான் இந்திய ஆட்சியாளர்கள் வறுமையை, ஏழ்மையை ஒழிப்பதற்குக் கண்டுபிடித்த அருமையான வழி. இதேபோல்தான் 2020இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ட்ரம்ப் குஜராத்துக்கு வந்த பொழுது அங்குள்ள குடிசைப் பகுதிகளையும் சுவர்களை எழுப்பி மறைத்தார்கள் வறுமையை ஒழிப்பதற்கு ஒரு எளிய வழியைக் கண்டுபிடித்த மோடியின் தலைமையில் உள்ள பாஜகவிற்கு நோபல் பரிசே கொடுக்கலாம்!

 

அது மட்டுமல்ல “வசு தெய்வ குடும்பகம்” என்பதுதான் தங்களுடைய கொள்கை என பாஜக கூறிக் கொள்கிறது அதாவது அனைத்து உயிரினங்களுடன் அமைதியாக, இணக்கமாக வாழ்வதுதான் எங்களுடைய கொள்கை என்று பறைசாற்றிக் கொள்கிறது ஆனால் மாநாட்டின் போது டில்லியில் நடந்தது என்னவென்றால் அங்குள்ள நாய்களையும் குரங்குகளையும் பறவைகளையும் கூட அவர்கள் விட்டு வைக்கவில்லை எல்லாவற்றையும் கண்களில் பட்டுவிடக் கூடாது என்று கருதி அப்புறப்படுத்தினார்கள். இதுதான் இவர்களுடைய கொள்கையின் உண்மைத்தன்மை. 

“ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஆட்சியாளர்கள்தான் இங்கு உள்ள சிறுபான்மையினரான முஸ்லிம் மக்கள் மீதும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் இஸ்லாமிய மக்களின் வீடுகளை புல்டோசர்கள் கொண்டு இடித்து வருகின்றனர். அவர்களுக்கு இந்தப் பூமி சொந்தமில்லை; அவர்கள் எல்லாம் பாஜக கூறும் குடும்பத்திற்குள் அடங்கவில்லை. அவர்கள் அந்நியர்கள், விரோதிகள். இதுதான் பாஜகவின் இரட்டை வேடம். 

ஜி 20 நாடுகளுக்குத் தலைமை ஏற்று இந்த உச்சி மாநாட்டை நடத்தியதன் மூலம் மோடியின் தலைமையில் உள்ள இந்தியாவின் மதிப்பு உலக அளவில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு உயர்ந்து உள்ளது என்று பாஜகவினர் பெருமை பாராட்டிக் கொள்கின்றனர். மக்கள் மத்தியில் சிறிதும் கூசாமல் பொய்களைப் பரப்புவதன் மூலமே தங்களுடைய ஆட்சியை வளமான ஆட்சி என நிறுவி மக்களை ஏமாற்றி விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கின்றனர் பாஜகவினர். இந்தியாவின் உண்மையான நிலைமை என்ன என்று சிறிது பார்த்தாலே போதும் இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பது அம்பலப்பட்டுப் போய்விடும். 

மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியாவின் பொருளாதாரம் உலக அளவில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளதாகப் பெருமை பாராட்டிக் கொள்கிறது பா.ஜ.க.. உலக அளவில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ள இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு பெருமளவு இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஆனால் இங்குள்ள மக்களின் வாழ் நிலையோடு அதை ஒப்பிட்டால் தான் இந்திய வளர்ச்சியின் உண்மையான பொருளைப் புரிந்து கொள்ள முடியும். 

மனித வளர்ச்சி அட்டவணை (Human Developement Index) என்பது மனிதனின் ஆயுள் காலம், கல்வி கிடைக்கக்கூடிய வாய்ப்பு, வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைக் குறிக்கும் அட்டவணையாகும். இந்த அட்டவணையில் ஜி 20 நாடுகளில் இந்தியாவின் இடம் கடைசியாகத்தான் உள்ளது. குழந்தைகள் இறப்பு விகிதத்தில் இந்தியாவின் இடம் 19இல் உள்ளது. இந்தியாவில் வாழும் மக்களில் 74 விழுக்காட்டினர் ஆரோக்கியமான உணவு கிடைக்காத நிலையில் இருக்கின்றனர். இந்தியாவில் வாழும் பெண்களில் 50 விழுக்காட்டினர் போதிய சத்துணவு கிடைக்காததால் ரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவிலான பசி அட்டவணையில் 121 நாடுகளில் இந்தியாவின் இடம் 107 ஆக உள்ளது. ஆசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் 2021-22ல் 25வயதுக்கு கீழ் உள்ள பட்டதாரிகளில் 42% வேலையில்லாமல் இருக்கின்றனர். இந்தியப் பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையத்தின் (Centre for Monitering Indian Economy) ஓர் அறிக்கையின்படி 2016-17க்கும் மார்ச் 2023க்கும் இடையில் உற்பத்தித் தொழில் துறையில் 31% வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையில் விலைவாசி ஏற்றங்கள் மக்களை வறுமையிலும் பற்றாக்குறைகளிலும் தள்ளி வருகிறது. நாட்டில் ஏற்றத்தாழ்வு பெருமளவு அதிகரித்துள்ளது. பச்சை வண்ணத் திரைகளைக் கட்டி வெளிநாட்டினரின் கண்களில் இந்தியாவில் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை மக்களின் வறுமையைக் கண்களில் படாமல் தடுத்தது போல பாஜகவினர் பொய்பந்தல்கள் மூலம், வார்த்தை ஜாலங்கள் மூலம் இந்திய மக்களின் இத்தகைய அவல நிலைகளை மறைக்க முயற்சி செய்கின்றனர். 

இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உலக அளவில் உள்ள பிரச்சினைகளத் தீர்ப்பதாகக் கூறிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் எவ்வளவு போலியானவர்கள் என்பதை இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஏராளமான தீர்மானங்களில் சில தீர்மானங்களைப் பார்த்தாலே புரிந்து கொள்ளலாம்.

 
“நீடித்த, அனைவரையும் உள்ளடக்கிய, நியாயமான உலக மாற்றத்திற்கு அவசியமான வளர்ச்சி மாதிரிகளை நாம் பின்பற்றுவோம்” என ஒரு தீர்மானம் கூறுகிறது ஆனால் உண்மை என்பது அதற்கு நேர்மாறாக உள்ளது உலகத்தின் வளம் அனைத்தும் சில நூறு பேர் கைகளில் குவிந்துள்ளது கோடிக்கணக்கான மக்கள் பசியிலும் பட்டினியிலும் உலகம் முழுவதும் கிடந்து உழல்கின்றனர். இவர்களுடைய முதலாளிய வளர்ச்சி மாதிரிகள் நீடித்த உலக வளத்தைக் காப்பாற்றக்கூடிய மாதிரிகளாக இல்லை, அவை இயற்கை வளங்களைச் சூறையாடக் கூடியவைகளாக இருக்கின்றன. முதலாளிகளின் இலாபத்திற்காக இப்புவிக்கோளம் முழுவதும் வேகமாக அழிக்கப்பட்டு வருகிறது. மனித குலம் உயிர் வாழ்வதற்குத் தகுதியற்ற ஒரு இடமாக இந்தப் பூமியை இவர்களுடைய முதலாளிய வளர்ச்சி மாடல் மாற்றி வருகிறது. உண்மை நிலைமை அவர்களுடைய தீர்மானத்தின் போலித்தனத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.
 

இன்னொரு தீர்மானம் இவ்வாறு கூறுகிறது “உலகம் முழுவதும் யுத்தங்களாலும் மோதல்களாலும் ஏற்பட்டுள்ள தீவிரமான துயரங்களையும் மோசமான பாதிப்புகளையும் பற்றி நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொள்கிறோம்” இந்தத் தீர்மானம் எவ்வளவு போலியானது என்பதை நாம் அறிவோம் ரசிய - உக்கிரைன் போர் ஓராண்டுக்கு மேலாக நடந்து வருகின்றது இந்தப் போரில் ஜி 20 மாநாடுகளில் உள்ள ரசியா ஒரு பக்கமும் இன்னொரு பக்கம் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும்தான் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து, வீடுகளை இழக்க வைத்து, வாழ்வைப் பறித்து பல இலட்சக்கணக்கான மக்களை அகதிகளாக மாற்றி வருகின்றனர். இவர்களுடைய இலாபத்திற்காகவும் ஆயுத வியாபாரத்திற்காகவும் மனித குலத்தையே அழித்து வருகின்றனர். இந்தப் போருக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்து வரும் பிற இராணுவ மோதல்களுக்கும், போர்களுக்கும் இவர்கள்தான் காரணமாக இருந்து வருகின்றனர். ஆனால் இவர்கள்தான் யுத்தங்களைப் பற்றியும் அதனால் மக்கள் படும் துயரங்களைப் பற்றியும் நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். 

இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இன்னொரு தீர்மானம், “ஊழலுக்கு முடிவு கட்டுவதில் நாங்கள் உறுதியுடன் இருக்கின்றோம்.” என்பதாகும். இதை விட நகைப்புக்குரிய தீர்மானம் எதுவும் இருக்க முடியாது. 2018 லிருந்து 2022 வரையிலும் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற தொகை ரூ. 9200 கோடி. அதில் பா.ஜ.க. மட்டும் ரூ. 5270 கோடி பெற்றுள்ளது. அதாவது மொத்தத்தில் 57% தொகையை அது அறுவடை செய்துள்ளது. அது ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பதைத் தவிர வேறு என்ன காரணம் அதற்கு இருக்க முடியும்? அதானியும் அம்பானியும் பிற பெரும் முதலாளிகளும் வழங்கிய பணம்தான் இவை. முதலாளிகள் இலாபமில்லாமல் வெறுமனே பணத்தை வாரி வழங்கி விடமாட்டார்கள் என்பது முட்டாளுக்குக் கூடத் தெரியும். அதற்குக் கை மாறாகத்தான் கார்ப்போரேட்கள் நாட்டைக் கொள்ளையடிக்க பா..ஜ.க. ஆட்சி கதவைத் திறந்து விட்டுள்ளது என்பதை நாடே அறியும். இது இந்தியாவில் மட்டுமல்ல. அனைத்து முதலாளிய நாடுகளிலும் நடக்கும் நடைமுறைதான். இவர்கள்தான் ஊழலுக்கு முடிவு கட்டப் போகின்றார்களாம்! சாத்தான்கள் ஒன்று சேர்ந்து வேதம் ஓதுகின்றன! 

உண்மையில் ஜி 20 மாநாடு என்பது ஆண்டுக்கு ஒரு முறை உலகில் உள்ள ஆட்சியாளர்கள் ஒன்று கூடி, குலாவி, களியாட்டம் ஆடிக் கலைந்து போகும் ஒரு மாநாடுதான். அதற்காக மக்களின் வரிப் பணத்திலிருந்து ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஊதாரித்தனமாகச் செலவழித்து வருகின்றனர். அவர்களுடைய தீர்மானங்கள் அனைத்தும் போலியானவை, உள்ளீடு அற்றவை, உலக மக்களை ஏமாற்றுபவை.

 

மு.வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...