Skip to main content

ஜனநாயகம்?

 

ஜனநாயகம் பற்றிய கூச்சல் சமீபமாக அதிகப்பட்டிருக்கிற நிலையில் உள்ளீடற்ற அந்த வெற்றுச் சொல்லாடலை கொஞ்சம் உரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ”இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாயகம். அது எங்களது ரத்த நாளங்களில் அனாதி காலந்தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. நாங்கள் மரபுரீதியாகவே ஜனநாயகத்தின் காவலர்கள். இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் சமீபத்திய ஜனநாயகப் பிரகடனம்”. உண்மையில் ஜனநாயகம் இந்த உலகிற்கு அறிமுகமாகி மூன்று நூற்றாண்டுகள்தான் ஆகிறது. அதுவும்  கூட முதலாளிகளுக்கான ஜனநாயகம்தான்.  அதிலும் முதலாளித்தும் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கட்டத்தில், போட்டிகள் நிறைந்த, ஏகபோகமற்ற சந்தை  நிலவியவரை தான் அந்த ஜனநாயகம் உயிர்த்திருந்தது. ஏகபோக முதலாளித்துவம் தோன்றியதும் ஜனநாயகம் கசப்பான ஒன்றாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு மாறிவிட்டது. தற்போது உலகம் முழுமையும் ஏகாதிபத்தியத்தின் அசுரப் பிடியில் இருக்கும் சூழலில் எங்குமே ஜனநாயகமில்லை. இப்பொழுது நிலவி வருவது சிலரைக் கொண்ட குழு ஆட்சிதான் (Oligarchy). இதுதான் யதார்த்தம்.

பண்டைக் காலத்திலிருந்தே ஜனநாயகம் இந்த நாட்டின் காடு, கரை, மூலை, முடுக்கு, கடல், மலை, காற்று, நீர்நிலை என எங்கும் பரவியிருப்பதாகச் சொல்லும் இவர்கள் மக்களிடம் அது நிலவவில்லை என்பதை  அறிய மாட்டார்களா என்ன? இவர்கள் சொல்கிற ஜனநாயக யுகத்தில்தான் கீழ்வெண்மணியில் கூலி உயர்வு கோரிப் போராடிய விவசாயத் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்கள், குழந்தைகள் என 44 பேர் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்கள். கோவில் நுழைவுக்கு நந்தனார் காலம் முதல் மல்லுக்கட்டுத் தொடர்கிறது. வைக்கத்தின் மாடவீதிகளில், தெருவில் சூத்திரர்கள் நடக்க விதித்திருந்தத் தடையை எதிர்த்துப் பெரும் போராட்டம் நிகழ்ந்தது.

நாட்டின் முதல் குடிமகனே ஆனாலும் தலித் என்பதால் கோவிலுக்குள் போய்வந்ததால் புனிதம் கெட்டுவிட்டது என்று தீட்சிதர்களும், சாஸ்திரிகளும் தீட்டுக் கழிப்பது இந்த மண்ணில் தானே? விவசாயத்தில் ஆயிரக்கணக்கில் நில உடைமையாளர் எனில் கோடிக்கணக்கான விவசாயத் தொழிலாளர்கள் கூலி அடிமைகளாக இருப்பது என்னவிதமான ஜனநாயகம்? கப்பல், விசைப்படகு, வியாபாரம் என ஒரு சிலரின் கைகளில் நெய்தல் நிலமே கட்டுண்டிருக்க, உயிரைப் பணயம்  வைத்து கடற்தொழில் செய்யும் கோடிக்கணக்கான மீன்பிடித் தொழிலாளரை வெறும் சில்லறைக் கூலிக்காரர்களாக்கி அவர்களுடைய வாழ்வைச் சுரண்டுவது என்ன வகையான ஜனநாயகம்? சமவெளியிலும், கடலிலும் சமகால வாழ்க்கை இதுவெனில் மலையிலும், காடுகளிலும் என்ன நிலைமை? முதலாளிகளின் சுரண்டல் நலன்களுக்காகக் காடுகளிலிருந்தும், மலைகளிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்ட கோண்டுக்களும், முண்டாக்களும், நாகர்களும் நாடோடிகளாய் ஸ்திரமற்ற வாழ்க்கைக்குள் வறுமை துரத்த ஓடிக்கொண்டேயிருக்கிறார்கள். இன்னமும் கொத்தடிமைகளாக பஞ்சாபின் வயல்களிலும், கல்கத்தாவின் செங்கல் சூளைகளிலும் தங்கள் வாழ்வை அரைப்பட்டினி, அரை நிர்வாணத்தோடு கழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இவர்கள் கூறும் ஜனநாயகமா?

இந்த நிலத்தையும், இயற்கை வளங்களையும் கைப்பற்றி ஆக்கிரமித்திருப்பவர்கள் ஜனநாயக விரோதிகள். இவர்கள்தான் அன்னியர்களோடு கைகோர்த்து மண்ணின் மைந்தர்களான உழைக்கும் குடிகளை அடிமைகளாக்கி அவர்களின் வாழ்க்கையைப் பறித்துக்கொண்டவர்கள். ஜனநாயகத்தைப் பற்றி அவர்களே பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த வாய்ச் சவடால் பேர்வழிகளிடமிருந்து ஜனநாயகத்தை மீட்கும் போரை தொடர்ந்து நடத்தவேண்டும். சமூக உழைப்பு, அதன் உற்பத்தியால் திரண்டிருக்கும் சமூகச் சொத்தைத் தனி உடைமையாய்க் குவித்து வைத்துக்கொண்டு இவர்கள் போடும் ஜனநாயக கபட வேடத்தை நிறுத்தி எல்லோருக்கும், எல்லாமும் என்பதை எட்ட வேண்டும். தனியுடமையில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் சமூக சொத்துக்கள் சமூகம் முழுமைக்கும் உரிமையாக்கப்பட வேண்டும். ஏனெனில் அவை சமூக உழைப்பின் விளைச்சல்.

இவர்களின் சர்வாதிகாரத்தில் இழந்தது ஏராளம். அவைதாம் வெண்மணியிலும், மிர்சாபூரிலும், பீகாரின் லக்ஷ்மன்பூர், பதானிதோலா, கயர்லாஞ்சி, ஆந்திராவின் சுண்டூர் என வெளிப்பட்ட மரணங்கள். இவர்கள் சொல்கிற எந்த ஜனநாயகமும் எளிய மக்களின் வாழ்க்கையில் எட்டிப்பார்த்ததில்லை - இந்த மரணங்களைத் தவிர. துக்கம், வறுமை, பட்டினி, சோகம், சாவு இவைதான் இங்கே எளியரின் வாழ்க்கையாயிருக்கிறது. ஒருபக்கம் வாழ்க்கைத் தேவையைவிடப் பல தலைமுறை தாங்கும் சொத்து, வசதியான வாழ்க்கை, மற்றொருபுறம் நோய், பசி, பட்டினி, வறுமை. இதைச் சமன் செய்கிறபோது தானே இங்கு சகஜ வாழ்க்கையும், ஜனநாயகமும், சமத்தன்மையும் இருக்கும். அதைவிடுத்து இரத்தத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது, மரபில் கலந்திருக்கிறது என்பதெல்லாம் கபடத்தனம் இல்லையா? இவை யாரை ஏமாற்றுகிற நரித்தந்திரங்கள்? எளியரின் இரத்தத்தை நக்கிச் சுவைத்தபடி முழங்குவது, கொலை, கொள்ளை, களவு செய்துகொண்டு சாதுவேடத்தில் கூப்பாடு போடுவது இவர்களுக்குக் கைவந்த கலை. உங்களது இரத்தத்தில் ஜனநாயகம் ஓடிக் கொண்டிருக்கிறதென்று சொன்னால் சாதிய ஆதிக்கத்திற்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும் போராடிய பல்லாயிரக்கணக்கான மக்களின் இரத்தத்தை ஏன் வீதிகளில் ஓடவிட்டீர்கள்?

(படம் : Keetru.com)

ஓராண்டு முழுதாக நடந்த போராட்டத்தில், விவசாயிகளை முற்றிலும் புறக்கணித்து அவர்களைப் பகை நாட்டினராகப் பாவித்த பிரதமரும், அரசும் ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.பாலியல் துன்புறுத்தலை எதிர்த்துப் போராடிய மல்யுத்த வீராங்கனைகள் எதிர்கொண்ட இந்தியாவின் ஜனநாயகத்தை உலகமே பார்த்து உமிழ்ந்ததே! அவர்களையும், அவர்களது போராட்டத்தையும் இவர்கள் கொச்சைப் படுத்தியது கொஞ்சமா? நஞ்சமா? தற்போது மணிப்பூர் கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டும், பலநூறு தேவாலயங்கள் தீயிட்டு அழிக்கப்பட்டும் மக்கள் அகதிகளாக்கப்பட்டு முகாம்களிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கிறார்களே, இப்போது இந்த ஜனநாயகத்தின் காவலர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இவ்வளவு சாதனைப் பட்டியல்களை(!) வைத்துக்கொண்டு வேதம் ஓதுகின்றன இந்த “ஜனநாயக சாத்தான்கள்.

காஷ்மீருக்கு ஏன் தனி அந்தஸ்து என்று அதை மூன்றாக உடைத்து, அங்கு இதுவரை எளிதில் நுழைய முடியாதிருந்த இந்திய முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்களுக்கும் மொத்தமாக திறந்துவிட்டது தான் ஜனநாயகமா? அல்லது பிரிவு 370 நீக்கப்பட்டதன் மூலம், காஷ்மீரப் பெண்களுடன் திருமணம் செய்வதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது என மிகவும் எதிர்மறையாக நடத்தப்பட்ட பரப்புரையை அரசு இயந்திரம் கண்டுங் காணாதிருந்ததே, அதற்குப் பெயர் ஜனநாயகமா?. சீக்கிய குருத்வாராக்களும், முற்போக்கு சக்திகளும், காஷ்மீரிப் பெண்களின் நலன்களைப் பாதுகாக்க மக்களுக்கு விடுத்த அழைப்பின் பிறகே இந்த இழிவான பிரச்சாரம் ஓய்ந்தது.

ஜனநாயகம் என்பது மக்கள் பங்கேற்பை உள்ளடக்கியது. பிரதிநிதிகள் மூலம் ஆட்சி, அதிகாரம் என்பது மறைமுக ஜனநாயகம் எனப்படுகிறது. நாம் பின்பற்றுகிற இங்கிலாந்தின் இந்த மறைமுக ஜனநாயக முறையில் கூட பத்தாயிரம் மக்கள் கையெழுத்துப் போட்டு பிரதமருக்கு மனு அளித்தால் அடுத்த 48 மணிநேரத்தில் பதில் அளிக்கவேண்டுமென்ற நடைமுறை பிரிட்டனில்  இருக்கிறது. ஒரு லட்சம் பேர் கையெழுத்திட்டு மனு அளித்தால் அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தில் இரண்டு மணிநேரம் விவாதம் நடத்தப்படவேண்டும் என்பது அங்குள்ள விதி. இப்படி மறைமுக ஜனநாயகத்தில் கூட அங்கே ஒரு சிறு அளவுக்காவது மக்கள் பங்கேற்புக்கு வழி இருக்கிறது. இந்தியாவில் அப்படி எதுவுமில்லை. முதலாளித்துவத்தில் ஜனநாயகம் மக்களுக்கானதல்ல என்பது உண்மையானாலும் மேற்குறித்த விஷயங்கள் நடைமுறை குறித்த ஒப்பீடு மட்டுமே. அதனால்தான் பிரஞ்ச் அறிஞர் ரூசோ 18ம் நூற்றாண்டிலேயே தன்சமுதாய ஒப்பந்தம்என்ற பிரசித்திப் பெற்ற நூலில் மறைமுக மக்களாட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மதிக்கப்படுவார்கள்; அதனால் நேரடி மக்களாட்சியே சிறந்ததென்று வலியுறுத்தினார்.

ஏழைகள், பிச்சைக்காரர்கள் இல்லாத இந்தியா, பசி ,பட்டினியற்ற இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இந்தியா இதுவே இன்றைய தேவை. அதை அடைவதற்கு வர்க்க விடுதலையே ஒரே வழி. அதுவே எதிர்காலத்தில் வர்க்கமற்ற சமுதாயத்தை உருவாக்கி மண்ணில் பிறந்த எல்லோரையும் எவ்வித வேற்றுமையும் இல்லாமல் மனிதனை மகத்தானவனாக வாழவைக்கும்.

பாவெல்சூரியன்

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...