அக்டோபர் ஏழாம் தேதி காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது
திடீர் தாக்குதலைத் தொடுத்தனர்.
இந்தத் தாக்குதலை இஸ்ரேல் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அதனுடைய
புகழ்பெற்ற உளவு ஸ்தாபனமான மொசாத்தும் கூட அதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை. தொடர்ந்து
நடந்த ஆயிரக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கடுமையான கண்டனத்தை
வெளியிட்டன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உடனடியாக இஸ்ரேலுக்கு வந்து அமெரிக்காவின்
முழுமையான ஆதரவு இஸ்ரேல் மக்களுக்கு உண்டு என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்
அமெரிக்காவின் போர்க் கப்பல்களை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளார். இங்கிலாந்தின்
பிரதமர் ரிஷி சுனக்கும் தனது ஆதரவைத் தெரிவிக்க இஸ்ரேலுக்கு நேரடியாகச் சென்றுள்ளார்
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த அமைப்பினரைப் பூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு சபதம் ஏற்று காசா பகுதி மீது கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துள்ளார். கடந்த 14 நாட்களாக நடந்து வரும் யுத்தத்தில் காசா பகுதியில் இஸ்ரேலின் இராணுவம் குண்டுகளை வீசி குழந்தைகள், பெண்கள் என்ற பாகுபாடு இல்லாமல் அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது; மக்கள் குடியிருந்து வரும் வீடுகள், அடுக்கு மாடிக் குடியிருப்புகள், அலுவலகக் கட்டிடங்கள் என அனைத்தையும் தகர்த்து வருகிறது; தண்ணீர், மின்சாரம் எரிபொருள் எதுவும் கிடைக்காமல் அனைத்தையும் இஸ்ரேல் அரசு துண்டித்துள்ளது; உணவு இல்லாமலும், குடிப்பதற்குக் கூட நீர் இல்லாமலும் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். போரில் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் சேரும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது அவர்களுக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்கப் போதுமான மருந்துகளோ உபகரணங்களோ கைவசம் இல்லாமல் மருத்துவர்கள் தத்தளித்து வருகின்றனர். சாவுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது; காசா பகுதி முழுவதையும் மயானமாக மாற்றும் கொடூரமான செயலில் இஸ்ரேல் அரசு இறங்கியுள்ளது.
காசாவின் வடபகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை பூண்டோடு ஒழிக்கப் போகிறோம். அங்குள்ள உள்ள மக்கள் அனைவரும் காசாவின் தென் பகுதிக்குக் குடியேற வேண்டும் என்று கூறி கெடு விதித்தது இஸ்ரேல் அரசு.
41 கிலோ மீட்டர் நீளமும்
பத்து கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஒரு குறுகிய நிலப்பகுதி காசா. இந்தக் குறுகிய பகுதியில்
மட்டும் 20 லட்சத்திற்கு மேலான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே
மிகவும் நெருக்கமாக மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பகுதியில்தான்
வடக்கில் வாழும் 10 லட்சத்துக்கு மேலான மக்களை தென் பகுதிக்கு 24 மணி
நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்று ஆணை இட்டது இஸ்ரேல் அரசு
அதன் காரணமாக காசாவின் வட பகுதியில் வாழ்ந்து வரும் 10 லட்சத்திற்கும் மேலான பாலஸ்தீன மக்கள் குடும்பம் குடும்பமாகத் தங்கள் குழந்தைகளுடன் தென் பகுதிக்கு இடம் பெயர்ந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவ்வாறு செல்ல முடியாமல் அகதி முகாம்களிலும் பள்ளிகளிலும் தஞ்சம் புகுந்தனர். இஸ்ரேல் கொடுங்கோன்மை அரசோ பள்ளிகளின் மீதும் மருத்துவமனைகளின் மீதும் குண்டுகளைப் பொழிந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வருகிறது. தென் பகுதிக்கு மக்களைப் போகச் சொல்லி விட்டு இப்பொழுது காசாவின் தென்பகுதியின் மீதும் குண்டுகளை வீசி வருகிறது இஸ்ரேல் இராணுவம்; அப்பகுதியில் இருந்த அல்-அஹி என்ற மருத்துவமனையின் மீது குண்டுகளைப் பொழிந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த 500க்கும் மேற்பட்ட மக்களைச் சிறிதும் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்துள்ளது. மருத்துவமனையின் மீது இஸ்ரேல் இராணுவம் குண்டுகளைப் போடவில்லை, ஹமாஸ் அமைப்பினர்தான் தவறுதலாக அவர்கள் மீது குண்டுகளை வீசி உள்ளனர் என்று கூறி இஸ்ரேல் தனது பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றது. அதற்கு அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஜோன் பைடன் ஒத்தூதுகிறார்.
நூறு ஆண்டு கால வரலாறு
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையிலான யுத்தம் நூறு ஆண்டுகால வரலாற்றுப் பின்னணியை கொண்டுள்ளது. உலகெங்கும் மக்களின் வாழ்வை ஏகாதிபத்தியங்கள் எவ்வாறு சீரழித்தும் சிதைத்தும் வருகின்றன என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது பாலஸ்தீனப் பிரச்சனை.
பாலஸ்தீன மக்களின் தீராத நெடுந்துயரத்துக்கு 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் வித்திடப்பட்டது. அக்கட்டத்தில் கிழக்கு ஐரோப்பாவிலும் மத்திய ஐரோப்பாவிலும் வாழ்ந்து வந்த யூதர்கள் ஜியோனிசம் என்ற அமைப்பைத் தொடங்கினார்கள்; ஜெருசலேம் நகரில் உள்ள ஒரு மலையின் பெயரால் இந்த அமைப்பைத் தொடங்கினார்கள். ஜியோனிஸ்டுகளின் முதல் மாநாடு 1897 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள பேசலில் நடந்தது. அந்த மாநாட்டில், 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நாடு இல்லாமல் உலகெங்கும் சிதறிக் கிடக்கும் யூத மக்களுக்குச் சொந்தமாக ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டது. அந்த நாட்டை தங்களின் முன்னோர்களின் நாடு என்று அவர்கள் கருதிய ஜெருசலேம் பகுதியில் அமைக்க வேண்டும் என அவர்கள் திட்டமிட்டனர்.
உலகெங்கும் சிதறிக் கிடந்த யூதர்கள் ஜெருசலேம் நகர் இருந்த பகுதிக்குக் குடியேறினார்கள் அப்பொழுது பாலஸ்தீனப் பகுதி ஒட்டமான் பேரரசு என்று அழைக்கப்பட்ட துருக்கிப் பேரரசின் கீழிருந்தது. முதலாம் உலக யுத்தத்தில் துருக்கிப் பேரரசு வீழ்ச்சி அடைந்ததால் பாலஸ்தீனப் பகுதி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அப்போது பாலஸ்தீன மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் பாலஸ்தீனப் பகுதியில், அதற்கு அருகிலேயே யூத மக்களுக்கு ஒரு தாய் நாடு அமைக்கப்படும் என்று கூறிய பல்போர் (Balfour Declaration) பிரகடனம் பிரிட்டிஷ் அரசால் 1917இல்வெளியிடப்பட்டது இந்தப் பிரகடனத்தை இன்றைய ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னோடியாக அன்றைக்கு இருந்த நாடுகளின் கூட்டிணைப்புக் கழகம் (League of Nations) 1922ல் ஆதரித்தது.
1920 லிருந்து 1948 வரை பிரிட்டனின் கட்டுப்பாட்டின் பாலஸ்தீனப் பகுதி இருந்து வந்தது. இந்தக் காலகட்டத்தில் பாலஸ்தீனர்களுக்கும் யூத மக்களுக்கும் அடிக்கடி மோதல்கள் எழுந்து வந்தன. பாலஸ்தீன மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியையும் எதிர்த்துப் போராடி வந்தனர். அவர்களின் போராட்டங்களை யூதர்களின் துணை கொண்டு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அடக்கி வந்தது
1947 ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் ஐநா சபை பாலஸ்தீனர்களுக்கான ஒரு திட்டத்தை அறிவித்தது. அந்தத் திட்டம் யூதர்களுக்கு
ஒரு நாடு, பாலஸ்தீன மக்களுக்கு ஒரு நாடு என இரு நாடுகள் உருவாக்கப்படும் என்றும், ஜெருசலேம்
நகரம் இருவருக்கும் பொதுவாக ஐநா சபையின் பொறுப்பின் கீழ் இருக்கும் என்றும்
கூறியது. ஏனென்றால் ஜெருசலேம் நகரை பாலஸ்தீனியர்கள், யூதர்கள் இரு பகுதியினரும்
தங்களுடைய புனித நகரமாகக் கருதினார்கள். 1948 ஆம்
ஆண்டு மே மாதம் மே மாதம்
15 ஆம் தேதி பாலஸ்தீனத்தின் மீதான
பிரிட்டிஷ் ஆட்சியின் கட்டுப்பாடு முடிவுக்கு வந்தது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாக
இஸ்ரேல் தனது சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தியது. யூதர்கள் ஐநா சபையின் திட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக வந்த எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுக்கும்
இடையில் யுத்தம் வெடித்தது. எகிப்து தனது வடகிழக்கு எல்லைக்கு அருகில் இருந்த காசா
பகுதியைக் கைப்பற்றியது. ஜோர்டான் தனது நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜோர்தான் நதியின்
மேற்குக் கரையில் இருந்த மேற்குக் கரை பகுதியைக் கைப்பற்றியது. 1949 யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த யுத்தத்தின் போது ஏழரை இலட்சம் பாலஸ்தீன மக்கள்
தங்கள் சொந்த நாட்டை விட்டு அகதிகளாக இடம் பெயர வேண்டிய துயரம் ஏற்பட்டது. காசாப்
பகுதியிலும் மேற்குக் கரை பகுதியிலும் பாலஸ்தீன மக்கள் குடியேறினார்கள்.
மீண்டும் இஸ்ரேலுக்கும் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கு இடையில்
1967இல் யுத்தம் மூண்டது. இந்த யுத்தத்தில்
எகிப்திடமிருந்து காசாப் பகுதியையும், ஜோர்டானிடமிருந்து மேற்குக் கரைப்
பகுதியையும் இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது.
இஸ்ரேல் அரசு 1967 க்குப் பிறகு கிழக்கு ஜெருசத்திலும் மேற்குக் கரையிலும் 7 லட்சத்திற்கும் மேலான யூதர்களை குடியமர்த்தியது. காசா பகுதியிலும் யூதர்களைக் குடியமர்த்தியது இந்தச் செயல் சர்வதேசச் சட்டத்திற்கு எதிரானது என ஐநா சபை அறிவித்தது. ஆனால் இஸ்ரேல் அதை நிராகரித்தது
1964 ஆம் ஆண்டு யாசர் அராபத் தலைமையில் பாலஸ்தீன மக்களின் விடுதலை அமைப்பு தோன்றியது. அந்த அமைப்பு தொடர்ந்து பாலஸ்தீன மக்களுக்கான நாட்டை அமைப்பதற்காக இஸ்ரேல் அரசை எதிர்த்துப் போராடி வந்தது. 1993 ஆண்டு ஆண்டு இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் இடையில் ஆஸ்லோ அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. பாலஸ்தீனர்களின் தேச அதிகாரத்தை (Palestenian National Authority) இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. அதன்படி மேற்குக் கரை பொறுப்பையும் காசாவின் பொறுப்பையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஏற்றுக் கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை அப்போது இஸ்ரேலில் பெஞ்சமின் நேத்தன்யாகு போன்ற எதிர்க் கட்சித் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது இஸ்ரேலின் அழிவுக்கு வழி வகுக்கும் என நேத்தன்யாகு கூறினார்.
2000ல் மீண்டும் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் நீடித்தது. 2005 இல் அது முடிவுக்கு வந்தது. 2005 இல் இஸ்ரேலின் பிரதமராக இருந்த செரோன் காசா பகுதியில் இருந்து யூத குடியிருப்பாளர்களும் யூத வீரர்களும் வெளியேற வேண்டும் என ஆணையிட்டார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஐநா சபையும் உலகமெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் இஸ்ரேலை காசா பகுதியை ஆக்கிரமித்து வைத்துள்ள ஒரு நாடு என்றே இன்றும் கூறி வருகின்றன. ஏனென்றால் தொடர்ந்து அது காசா பகுதியில் வான் வெளியைக் கட்டுப்படுத்தி வருகிறது. அப்பகுதிக்கு குடி நீர், மின்சாரம் ஆகியவற்றை வழங்குவதைக் கட்டுப்படுத்தி வருகிறது. காசா பகுதிலிருந்து மக்களோ அல்லது பொருட்களோ தரை வழியாகவோ கடல் வழியாகவோ வான் வழியாகவோ வெளியே செல்ல முடியாமலும், உள்ளே வர முடியாமலும் இஸ்ரேல் அரசு கட்டுப்படுத்தி வருகிறது. காசாப் பகுதி தனது மேற்கு எல்லையாக மத்தியதரைக் கடலையும், தென் மேற்கில் எகிப்தையும் கொண்டுள்ள நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் இஸ்ரேல் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டுள்ளது. உண்மையில் காசாப் பகுதி ஒரு திறந்த வெளிச் சிறைச்சாலையாகத்தான் உள்ளது.
2006 இல் பாலஸ்தீனம் அதிகாரத்திற்கான பாராளுமன்றத் தேர்தலில், ஹமாஸ் அமைப்பு ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த ஃபத்தா கட்சியினை (Fatah Party) தோற்கடித்து விட்டு அதிகாரத்திற்கு வந்தது. அக்கட்சி இப்பொழுது மேற்குக் கரையைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது. ஃபத்தா கட்சி பாலஸ்தீனர்களுக்கு என ஒரு, நாடு இஸ்ரேலுக்கு என ஒரு நாடு என இரண்டு நாடுகளை ஏற்றுக் கொள்ளும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால் ஹமாஸ் அமைப்போ யூதர்களுக்கான நாட்டை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை அது காசா பகுதியில் இருந்து இப்பொழுது உள்ள இஸ்ரேல் உட்பட மேற்குக் கரை வரையிலும் உள்ளடங்கிய ஒரு பாலஸ்தீன நாட்டை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டுள்ளது. அதனால் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை ஒழித்து விட வேண்டும் எனக் கருதுகிறது.
தொடர்ந்து இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் அவ்வப்பொழுது
மோதல்கள் வெடித்து வருகின்றன. இஸ்ரேல் அரசு 2008 இல் காசா பகுதியின் மீது தாக்குதல் தொடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக்
கொன்றது; அதே போல 2014 யுத்தத்திலும் 2000க்கும்
மேற்பட்ட பாலஸ்தீன மக்களைக் கொன்றது. 2021 ல் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளிலிருந்து
பாலஸ்தீன மக்கள் வெளியேற்றப்பட்டனர்; அப்பொழுது நடந்த எழு நாட்கள் சண்டையில்
மட்டும் 72000 மக்கள் இடம் பெயர நேரிட்டது.
2023லும் தொடக்கத்திலிருந்தே தொடர்ந்து பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் அரசு தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களையும் சிறுவர்களையும் அவ்வப்பொழுது கொன்று வருகிறது; ஜூன் 2023 ல் சர்வதேச சட்டத்திற்குப் புறம்பாக மேற்குக் கடற்கரைப் பகுதியில் 5000 யூதக் குடும்பங்களைக் குடியமர்த்தியது. மேற்குக் கடற்கரைப் பகுதியிலும் காசாவிலும் இஸ்ரேல் படையினரின் ஊடுருவல் என்பது அன்றாட நிகழ்வாகியது. பாலஸ்தீன மக்களின் இந்த நெடுந் துயரத்தின் எதிர் விளைவாகவே ஹமாஸ் அமைப்பினர் இப்பொழுது இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்துள்ளனர்; இஸ்ரேல் என்ற வெறி பிடித்த இராட்சச அரசை தன்னால் முறியடிக்க முடியாது என்று அறிந்திருந்தும் தங்களுடைய எதிர்ப்பையும் கோபத்தையும் வெளிப்படுத்துவதற்காகவே இந்தத் தாக்குதலைத் தொடுத்துள்ளனர்; இதன் மூலமாவது உலகின் கவனத்தைத் தங்கள் மீது திருப்ப முடியாதா? தங்களுடைய துயரங்களுக்கு விடிவு கிட்டாதா? என்ற எண்ணத்தில்தான் இந்த வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் அந்த அமைப்பினர் இறங்கியுள்ளனர் எனக் கருதலாம்.
ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் பிற ஐரோப்பிய நாடுகளும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவே நிற்கின்றன. பிற நாடுகள் வெறும் பார்வையாளர்களாகவே இருக்கின்றன. தன்னுடைய சொந்த நாட்டில் மணிப்பூர் மாநிலம் இனக் கலவரத்தால் பற்றி எரிந்து கொண்டிருந்த பொழுது பல மாதங்களாக வாயே திறக்காத பிரதமர் மோடி அவர்கள் இஸ்ரேலின் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடுத்த உடனே இஸ்ரேலின் மீதான பயங்கரவாதிகளின் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறி அறிக்கை விடுத்துள்ளார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு பாலஸ்தீன மக்களின் இறையாண்மை கொண்ட நாட்டுக்கு இந்தியா எப்பொழுதும் தனது ஆதரவைத் தெரிவித்து வருகிறது என வெளி விவகாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிடுகிறது. அரபு நாடுகளைப் பகைத்துக் கொண்டு அவற்றால் இந்திய முதலாளிகள் அடைந்து வரும் பயன்களை இழந்து விடக் கூடாது என்ற அச்சமே அதற்குக் காரணம்.
அப்பாவி பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் 14 நாட்கள் தாக்குதலில் மட்டும் இது வரையிலும் 4000க்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதில் 1500 பேர் குழந்தைகள். 13000 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உலகெங்கும் மக்கள் இஸ்ரேலின் இந்தக் காட்டுமிராண்டித்தனமான யுத்தத்தை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர்.
இஸ்ரேலில் இப்பொழுது மிகப் பிற்போக்கான வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி
ஆட்சி நடந்து வருகிறது. அந்தக் கூட்டணியில் உள்ள லிக்விட் கட்சியின் (Likud) தலைவரான
பெஞ்சமின் நேத்தன்யாகுதான் இஸ்ரேலின் இப்போதைய பிரதமர். இவருடைய தலைமையின் கீழ்
உள்ள பிற்போக்கு அரசு அந்த நாட்டின் நீதித் துறையின் அதிகாரத்தைக் குறைக்கும்
சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதை எதிர்த்து அந்த நாட்டில் உள்ள மக்கள் கடுமையாகப்
போராடி வருகின்றனர். இந்த நிலையில் காசாப் பகுதியின் மீதான் யுத்தம் அந்த மக்களின்
எதிர்ப்பை மழுங்கடிக்கவும் திசை திருப்பவும் கிடைத்த அரிய வாய்ப்பாக அந்த
அரசுக்குக் கிடைத்துள்ளது.
இன்று நவீன உற்பத்திகள் அனைத்தும் எண்ணையைச் (Oil) சார்ந்தே உள்ளது. மொத்த எண்ணெய் வளத்தில் 60% இருப்பு ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், ஈராக், குவைத் ஆகிய மேற்கு ஆசிய நாடுகளின் பகுதியில் உள்ளது. அமெரிக்காவிடம் எண்ணெய் இருப்பு இருந்தாலும் கூட அந்த நாடு தனது தேவையில் 50% க்கும் மேல் இறக்குமதி மூலமே நிறைவு செய்து கொள்கிறது. மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள எண்ணெய் வளத்தைக் கட்டுப்படுத்திச் சுரண்ட வேண்டும் என்பதுதான் அமெரிக்க, பிரிட்டன் எண்ணெய் நிறுவனங்களின் நோக்கம். 2003ஆம் ஆண்டு ஈராக் “மக்கள் திரளை அழிக்கும் கொடூரமான ஆயுதங்களை உற்பத்தி செய்து வருகிறது” எனக் கூறி அதன் மீது அமெரிக்கா ஒரு அழிவு தரும் யுத்தம் தொடுத்ததற்கு உண்மையான கரணம் ஈராக்கின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான். மேற்கு ஆசியப் பகுதியில் தமது கட்டுப்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவே அமெரிக்காவும் பிரிட்டனும் இஸ்ரேலை அடியாளாக அந்தப் பகுதியில் வைத்துள்ளன. அதனால்தான் இஸ்ரேலுக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவிக்க உடனே ஜோன் பைடனும் ரிஷி சுனக்கும் ஓடோடி வருகின்றனர். இஸ்ரேலுக்கு கடந்த எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக நிதி உதவியாகவும் ஆயுத உதவியாகவும் மட்டும் அமெரிக்கா 26000 கோடி டாலர்களை, அதாவது இன்றைய இந்திய ரூபாய் மதிப்பில் 21,58,000 கோடியை, வழங்கியுள்ளது. இதிலிருந்து அமெரிக்கா இஸ்ரேலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.
இரத்த வெறி கொண்ட பாசிச இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை முறியடித்ததோடு நின்றுவிடாமல், அந்த அமைப்பினரை முழுவதும் வேரோடு ஒழிப்போம் என்று சபதம் கொண்டு பாலஸ்தீன மக்கள் அனைவரையும் கொன்று குவிக்கும் இனப்படுகொலைப் போரில் இன்று இறங்கியுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் வெறி நாயான இஸ்ரேலும் பாலஸ்தீன மக்களின் மீது தொடுத்துள்ள காட்டுமிராண்டித்தனமான இந்தத் தாக்குதல்களை நீதியின் மீதும், ஜனநாயகத்தின் மீதும் பற்றுக் கொண்டுள்ள உலகெங்கும் உள்ள மக்கள் அனைவரும் வன்மையாகக் கண்டிக்க வேண்டும். அப்பாவிப் பாலஸ்தீன மக்களின் மீது தொடுத்துள்ள இந்த ஆக்கிரமிப்புப் போரை உடனடியாக நிறுத்து என்று அனைத்து மக்களும் குரல் எழுப்ப வேண்டும்! பாலஸ்தீன மக்களுக்கு இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை அந்தப் பகுதியில் உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என அனைத்து நாடுகளுக்கும் உலக மக்கள் குரல் கொடுக்க வேண்டும்!
மிக நன்று. போர் உடனே நிறுத்த பட வேண்டும்..
ReplyDeleteஐ. நா வை நம்பி பிரயோஜனம் இல்லை. அமெரிக்கா வீட்டோ உரிமை
பயன்படுத்தி.. இஸ்ரேலை
தூக்கி பிடிக்கும்.
Say NO to WAR..!!!
பாலஸ்தீன மக்களுடைய பிரச்சனையின் வரலாற்றுப் பின்னணியையும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் வெறி கொண்ட தலையீட்டையும் தோழர் வசந்தகுமாரின் இக்கட்டுரை மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது.
ReplyDelete"பாசிச இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும்!, பாலஸ்தீன மக்களுக்கு இறையாண்மை கொண்ட ஒரு நாட்டை அந்தப் பகுதியில் உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் அமைதியை நிலை நாட்ட வேண்டும்!" என்று தெள்ளத் தெளிவாக பாலஸ்தீன மக்களுடைய நீண்ட நெடிய போராட்டத்திற்கு நியாயமான தீர்வை இந்தக் கட்டுரை வலியுறுத்தியிருப்பது மிகவும் சரியான கருத்தாகும்.
,உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி தோழர்.
Delete