ஆறு மாதங்களில் 852 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய செல்வத்தைக் குவித்த உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள்!
அண்மையில் வெளியிடப்பட்ட - ப்ளூம்பெர்க் நிறுவனத்தால்
தொகுக்கப்பட்ட ஆய்வு தரவுகளின்படி, உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் 2023 ஆம்
ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் 852 பில்லியன்(1 பில்லியன் = 100 கோடி) டாலர்கள் மதிப்பிற்கு சொத்துக்களைப் பெருக்கியுள்ளனர். உலகின் 47% சதவிகித
மக்கள் ஒரு நாளுக்கு
வெறும் 6.25 டாலர்களில் வாழப் போராடிக் கொண்டிருக்கும்போது, ப்ளூம்பெர்க் கோடிசுவரர்கள் பட்டியலில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு நாளில் சராசரியாக 14 மில்லியன் (1மில்லியன் = பத்து இலட்சம்) அமெரிக்க டாலர்கள் என்னும் அளவில் 6 மாதங்களில் அடைந்துள்ளனர்.
உலகின் 2640 பில்லியனர்களின் [மிகப் பெரிய கோடீஸ்வரர்கள்] சொத்துகள் 2020-ஆம் ஆண்டின் இறுதிப்
பாதி காலகட்டத்திலிருந்து கணிக்கப்படும்போது 2023-இன் முதல் பாதியில்
மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளன. இதற்கு முந்தைய அதிகரிப்பு, உலக மக்கள் அனைவரையும் மிகக் கொடுமையாக பாதித்த
கோவிட் பெருந்தொற்றின் போது, இந்தப்
பெரும்பணக்காரர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க டிரில்லியன் (1
டிரில்லியன் =ஒரு இலட்சம் கோடி) கணக்கான அமெரிக்க டாலர்களை அமெரிக்க அரசாங்கமும்
உலகின் மற்ற அரசாங்கங்களும் நிதிச் சந்தைக்கு மடை
மாற்றியபோது காணப்பட்டது. 2020-மார்ச்
மாதம் முதல் 2023 மார்ச் வரையிலான 3 வருடங்களில், நியூயார்க் பங்குச் சந்தைகளின் மூன்று பெரிய குறியீடுகளும்
அளவீடுகளும் (Indexes) 70% உயர்ந்தன. அவை கடந்த
காலாண்டிலும் கூட, நிதி
சார்ந்த நிலையற்ற தன்மைக்கான அறிகுறிகளும், பொருளாதார மந்த நிலைமை பற்றிய
எச்சரிக்கைகளும் இருந்த நிலையிலும் தொடர்ந்து முன்னேறி வருகின்றன.
மத்திய வங்கியின் வட்டி உயர்வு, நடந்து கொண்டிருக்கும் உக்ரைன் போர், உள்நாட்டு வங்கிகளின் நெருக்கடி
- இத்தகைய மிக மோசமான நிலைமையின் போதே, இவற்றைப் புறந்தள்ளிவிட்டு பங்குச்
சந்தை முதலீடுகளால்
"இந்த சொத்துக்கள்
அதிகரிப்பு" நடந்துள்ளது. முதலீட்டாளர்களின் செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பப் பங்குகள் மீது கொண்ட
பித்தால் S&P 500 குறியீடு 16% , Nasdaq 100 குறியீடு 39% என்று எப்போதும் இல்லாத அதிக அளவில்
அதிகரித்துள்ளது.
உலகின் கோடிக்கணக்கான மக்கள், விலைவாசி உயர்வாலும் ஊதிய வீழ்ச்சியாலும் அதிகரித்து வரும் வறுமையிலும் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் போது, உலகின் பெரும் பணக்காரர்களில் முதலாவதாக இருக்கும் இலான் மஸ்கின் சொத்து
மதிப்பு 2023 -இன் முதல் 6 மாதங்களில் மட்டும் 96 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்ததாக முக
நூலின் [Facebook ] தாய் நிறுவனமான மெட்டா பிளாட் பார்ம்சின் (Meta) தலைமை நிர்வாக இயக்குனர் மார்க் ஸுக்கெர்பேர்க்கின் - ப்ளூம்பெர்க்கின் பட்டியலில் உலகின் 500 பெரும் பணக்காரர்களின் வரிசையில் 10வது இடத்தில் இருப்பவர் – சொத்து மதிப்பு 2023ன் முதல் 6 மாதங்களில், 58.9 பில்லியன்
டாலர் அதிகரித்து 99.2
பில்லியன் டாலர்களாகியுள்ளது..
கலிபோர்னியாவில் இருக்கும் இலான் மஸ்கின் டெஸ்லா தொழிற்சாலையில் இப்போது பணிபுரியும் 15 தொழிலாளர்களும், முந்தைய தொழிலாளர்களும் " த கார்டியன் " பத்திரிக்கைக்கு
அளித்த பேட்டியில், "மிகவும் அழுத்தமான நீண்ட நேர பணி - சில சமயங்களில் வலி மற்றும்
காயங்கள் இருந்தபோதும்" தலைமை நிர்வாக இயக்குனருடைய உற்பத்தி குறித்த இலக்குகளை அடையப் பணி புரியும் கலாச்சாரமே நிலவுகிறது" என்கின்றனர். மனிதர்கள் உள்ளே நுழைவார்கள், கீழே வீழ்ந்து அப்பத்தைப் போல முகம்
உடைந்து தரையில் விழுந்து கிடப்பார்கள்; என்றாலும் அவர் தரையில் விழுந்து கிடக்கும் போதே, அவரைச் சுற்றி வேலை செய்ய எங்களை
அனுப்புவார்கள்" என்று உற்பத்தி நுட்ப வல்லுனரான ஜோனாத்தன் கலெஸ்கு 'தா கார்டியன்' பத்திரிக்கைக்கு விவரிக்கிறார்.
கடந்த வருடத்தில், இலான் மஸ்க் டெஸ்லாவிலிருந்து 10,000 தொழிலாளர்களையும் டிவிட்டரிலிருந்து 3,700 தொழிலாளர்களையும் பணி நீக்கம் செய்தார். தனது பங்குக்கு, ஸுகேர்பேர்க் மெட்டா நிறுவனத்தில் இருந்து மே மாதத்தில் மூன்றாம் சுற்றில் செலவினக் குறைப்பு என்னும் திட்டத்தின் அடிப்படையில் பணி நீக்கம் செய்தார்; இவ்வாறு இரண்டு வருடங்களில் 21,000 தொழிலாளர்களின் வேலையைப் பறித்துள்ளார்.
ஐரோப்பாவின் ஆடம்பர பொருட்களை உற்பத்தி செய்யும்
LVMH மோயெட் ஹென்னஸி லூயிஸ் வுய்ட்டோன் நிறுவனத்தின் 50%-ஐ தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெர்னார்ட் அர்னால்ட் (Bernard Arnault) ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்
பட்டியலில் இலான் மஸ்க்கிற்கு அடுத்ததாக உள்ளார்.
அர்னால்ட், அமெரிக்காவின் கடினமான பொருளாதார மந்த நிலைமையால் ஆடம்பரப் பொருட்களுக்கான வியாபாரம் குறைந்ததால் ஒரே நாளில் 11.2 பில்லியன் டாலர் சொத்து
மதிப்பை இழந்து அந்தப் பட்டியலின்
முதல் இடத்தை இழந்தார். வியாபாரம் குறைந்தபோதும் இந்தப் பிரெஞ்சு கோடீஸ்வரர் 191.6 பில்லியன் டாலர்
மதிப்புடைய சொத்துக்களை
வைத்திருக்கிறார்; மேலும் 29.5 பில்லியன் டாலர்களை
இந்த வருடத்தில் இது வரையிலும் ஈட்டியுள்ளார்.
2012-ஆம் ஆண்டு அர்னால்ட் வரிகளைத் தவிர்ப்பதற்காக
பெல்ஜியத்தின் குடியுரிமை பெற முயற்சித்தார். ஏப்ரல் மாதத்தில், பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மாக்ரோன் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தைக் குறைக்க
முயற்சி செய்தபோது பிரெஞ்சுத் தொழிலாளர்கள் LVMH ன்
தலைமையிடத்தை முற்றுகையிட்டு, தொழிலாளர்களின் ஓய்வூதியத்துக்காக அரசாங்கத்துக்கு நிதி தேவையானால் அதை
அர்னால்ட்டிடம் இருந்து
எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற முழக்கத்துடன் பெரும் போராட்டத்தை நடத்தினர்.
அமேசான் நிறுவனர் ஜெப் பெஸோஸ் (Jeff Bezos) 154 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்; இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் மட்டும் அவருடைய சொத்து மதிப்பு 47.4 மில்லியன் டாலர் அதிகரித்துள்ளது. தற்போது தொடர்ந்த விதி மீறல்களுக்காக , பணியிடப் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான நிர்வாகம் என்ற அமைப்பு, அமேசான் நிறுவனத்தின் மீது தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளது. 2021-இல் பணி புரியும் பணியாளர்களில் 100
பேருக்கு 6.8 என்ற அளவில் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்; இது, மற்ற அனைத்துக்
கிடங்குகளில் ஏற்படும் விபத்துக்களை - 100 தொழிலாளர்களுக்கு
3.3 என்ற அளவுடன் ஒப்பிட்டால் 2 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
பெசோஸை தொடந்து நான்காம் இடத்தில் இருப்பவர் மைக்ரோ
சாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ; இவரது சொத்து
மதிப்பு 134 பில்லியன் டாலர்கள்; 24.4 பில்லியன்
டாலர் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் கேட்ஸ் கனடாவின் தேசிய ரயில்வே நிறுவனத்தில் வைத்திருந்த 940 மில்லியன்
மதிப்புடைய தனது பங்குகளை விற்றார்; ஆனால், இன்னும் 9% பங்குகளை அந்நிறுவனத்தில் வைத்திருக்கிறார். இந்த நிறுவனம் வட
அமெரிக்காவின் முதன்மையான 7 ரயில் போக்குவரத்துகளில்
ஒன்றாகும் - இந்த நிறுவனம் கடுமையாகத் தொழிலாளர்களின்
சம்பளத்தைக் குறைத்தது; அது உள் கட்டுமானங்களுக்கான செலவுகளைக் குறைத்ததால் கிழக்குப்
பாலஸ்தீனத்திலும்,
ஓஹியோவிலும் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நடந்த ரயில் விபத்துக்களுக்கு காரணமானது.
பட்டியலில் 7வது இடத்தில் வாரன் பபெட் இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 113 பில்லியன் டாலர்; 5.6 பில்லியன் டாலர் அளவுக்கு அவருடைய சொத்து மதிப்பு
அதிகரித்துள்ளது. அவர் BNSF ரயில்பாதை
நிறுவனத்துடன், கேய்கொ , க்லேட்டோன் ஹோம்ஸ் மற்றும் டைரி
க்வீன் ஆகியவற்றை உடைமையாகக் கொண்டுள்ள பெர்க்ஷைர் ஹாத்தவே என்னும் முதலீட்டு நிறுவனம், மேலும் கோகோ- கோலா நிறுவனம், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை ஆகியவற்றிலும் பங்குதாரராக உள்ளார்.
ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்களின் பட்டியல், கோவிட் பெருந்தொற்றில் இரண்டு கோடியே இருபது இலட்சம் மக்கள் உயிரிழந்த நிலையில், கோடிக்கணக்கான மக்கள் அதனுடைய நீண்ட காலப் பாதிப்புகளால் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது பெரும் கோடீஸ்வரர்களின் சொத்துக்கள் பன்மடங்கு பெருகியுள்ள சமூக விரோதப் பண்பைக் காட்டுகிறது.
இந்த வருடத் துவக்கத்தில் உலகப் பொருளாதார
அமைப்பின் கூட்டத்திற்கு முன்பாக ஆக்ஸ்பாம் (Oxfam) நிறுவனம் வெளியிட்ட அறிக்கை :
1 சதவிகிதப்
பெரும் பணக்காரர்கள்
2020-ஆம் ஆண்டிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட 42 டிரில்லியன் டாலர்கள் சொத்தில் 2/3 பங்கை கபளீகரம் செய்துள்ளார்கள். இது, அதே காலகட்டத்தில் உலகின் 99% மக்களுக்குக் கிடைத்த மொத்த வருமானத்தைப் போல ஏறத்தாழ 2 மடங்காகும். கடந்த பத்தாண்டுகளில் பில்லியனர்களின் எண்ணிக்கையும் சொத்தும் இரண்டு மடங்காகி உள்ளது; உலகின் மிகப்பெரும் பணக்காரர்களான 1 சதவிகிதத்தினர் உலகின் புதிய சொத்தில் கிட்டத்தட்ட பாதியை கைப்பற்றிக் உள்ளார்கள்.
சமூகத்தின் அடித்தளத்திலுள்ள 90% மக்களில்
ஒருவர் ஒரு டாலர் சம்பாதிக்கும்
அதே சமயத்தில், ஒரு ‘சராசரி’ மில்லியனர் உத்தேசமாக 1.7
மில்லியன் டாலர்கள் என்ற அளவில் கைப்பற்றியுள்ளார். ஒட்டுமொத்தமாக, உலகின் மிகப் பெரும் பணக்காரர்களின் வருமானம்
ஒரு நாளில் 2.7 பில்லியன் டாலர்கள் அதிகரித்து வருகிறது.
உலக நாடுகளில் நான்கில் மூன்று பங்கு அரசாங்கங்கள், அடுத்த 5 வருடங்களில் மக்களுக்கான பொதுசேவைகளுக்கான செலவுகளை 7.8 இலட்சம் கோடி டாலர்கள் குறைக்கத் திட்டமிட்டுள்ளன.
82 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போது பசியில் வாடுகிறார்கள்; இவர்களில் பெரும்பாலானவர்கள் கடைசியாக மிஞ்சியதை உண்ணும் பெண்கள். மேலும், 33.9 கோடி மக்கள் மனிதாபிமான உதவிகளை - பேரிடர் காலங்களில் வழங்கப்படுவதை போல உணவு, குடி நீர் மற்றும் குடியிருப்பு என்ற மிக அடிப்படையான தேவைகளை
எதிர்பார்த்துக்
காத்திருக்கின்றனர்.
ஐக்கிய அமெரிக்காவிலும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள மக்களின்
வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் உலகின்
இந்தப் பெரும் பணக்காரர்களின் செல்வப்
பெருக்கத்திற்காகக் கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும், அதனுடைய
ஒட்டுண்ணித்தனமும் சீரழிவும் பற்றியும் Succession என்னும் TV தொடரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய அமெரிக்காவில், உச்ச நீதிமன்றம், நடுத்தர மக்களுடைய மற்றும்
தொழிலாளர்களுடைய பிள்ளைகளின் கல்லூரிக் கல்விக் கடன்களுக்கு சிறிய அளவு வட்டியைக்
குறைப்பது கூட அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உறுதியுடன் அறிவித்துள்ளது. அதே வேளையில் வங்கிகளைப் பொருளாதார வீழ்ச்சிகளில் இருந்து
காப்பாற்றவும், பங்குச்சந்தை வீழ்ச்சியை மீட்டெடுக்கவும், உலகின் வளமனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக சீனா மற்றும் ரஷியாவின் மீது போர் தொடுக்கவும், அந்த வளங்களை உள்நாட்டில் தொழிலாளர்கள் மீது கடுமையான
சுரண்டலை மேற்கொண்டிருக்கும் கார்பொரேட் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கவும் பைடனின் நிர்வாகமும் உறுப்பினர் அவையும் ஏராளமான நிதியை வாரி வழங்கிக்
கொண்டிருக்கின்றன.
ஆளும் மேட்டுக்கு குடியினருக்கும் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கும்
இடையிலான இந்தச் சமரசம் செய்ய முடியாத முரண்பாடு உலகம் முழுவதும் வலிமையான வர்க்கப்
போராட்ட எழுச்சியைத் தூண்டுகின்றது. பிரான்சில் அரசாங்கத்தின் ஓய்வூதியக்
குறைப்புக்கும் போலீஸ் வன்முறைக்கும் எதிரான மக்களின் எழுச்சி மிக்க போராட்டங்கள், பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் நடந்த ரயில்வே, தபால் துறை, விமானப்போக்குவரத்துத் துறை ஆகியவற்றின்
ஊழியர்கள் மற்றும் பிற
துறை சார்ந்த
தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள், லத்தின் அமெரிக்காவின் ஆசிரியர் வேலை நிறுத்தங்கள், மேலும் இலங்கை அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயத்துக்கு
எதிரான பெரும்பான்மை மக்களின் போராட்டங்கள் இதற்குச் சில உதாரணங்கள் ஆகும்.
வட அமெரிக்காவில், 7400 கப்பல்துறை தொழிலாளர்களும், ஒண்டாரியோ மாகாணத்தின் ஹாமில்ட்டன் நகரின் 1500 தேசிய எஃகு கார் தொழிலாளர்களும் வேலை நிறுத்தப்
போராட்டங்களை முன்னெடுத்தார்கள். ஐய்க்கிய அமெரிக்காவில், லாஸ் ஏஞ்ஜெல்ஸ் பகுதியில்
15,000 ஹோட்டல் தொழிலாளர்கள் வேலை
நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். 1,60,000- க்கு அதிகமான நடிகர்கள் சினிமா துறையின் எழுத்தாளர்களுடன் இணைந்து வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டு உள்ளார்கள்;
1,600 வாப்ட்டெக் லோகோமோட்டிவ் தொழிலாளர்கள்
பென்சில்வேனியா மாகாணத்தின் ஈரீ நகரத்தில் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளார்கள்; வெஸ்ட் கோஸ்ட் கப்பல் தொழிலாளர்களும் நியூயார்க் நகரத்தின் போக்குவரத்துத் துறை
தொழிலாளர்களும் தொழிலாளர் சங்கத்தின் ஆதரவு பெற்ற விற்பனை ஒப்பந்தங்களை வன்மையாக எதிர்க்கிறார்கள்; மேலும் 5 லட்சத்துக்கும் அதிகமான UPS மற்றும்
வாகனத்துறை தொழிலாளர்கள் இந்தக் கோடையில் உறுதி மிக்க வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் திட்டமிட்டுள்ளார்கள்.
உழைக்கும் வர்க்கத்திடம் எப்பொழுதும் இல்லாத
அளவிற்குக் காணப்படும் போர்க்குணம், அரசியல் தீவிரம் ஆகியவற்றின் பின் விளைவுகளைக்
கண்டு ஆளும் வர்க்கம் பெரும் அச்சம் அடைந்து வருகிறது. லண்டனில் சொத்து மேலாண்மை
குறித்த பத்திரிகையான ஸ்பியர் ஒரு முதலீட்டுக் கருத்தரங்கை நடத்தியது. அந்தக்
கருத்தரங்கில், "உலகம் முழுவதும் மேட்டுக்குடியினருக்கும் அவர்களுடைய
நிதிக் குழுக்களுக்கும்
அவர்களுடைய சிறந்த ஆலோசனை
வல்லுநர்கள், "எரிபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் அதீதமான விலை
உயர்வு, பொருளாதார ரீதியாக ஏற்கனவே திணறிக்
கொண்டிருக்கும் குடும்பங்களை மிகுந்த துன்பத்துக்குள்ளாக்குகின்றது; இப்படி பணக்காரர்களுக்கும்
ஏழைகளுக்கும் இடையிலுள்ள பொருளாதார வேறுபாடு தொடர்ந்து அதிகரித்தால் "ஆபத்தைக் கொண்டு வரும் உண்மையான எழுச்சிகளையும்"
மற்றும் “சமூக அமைதிச் சீர்குலைவையும்" உறுதியாக ஏற்படுத்தும் என்று அறிவுறுத்தினார்கள்" என்று “த கார்டியன்” (The Guardian) இதழ்
அண்மையில் கூறியுள்ளது.
பெர்னி சாண்டர்ஸ், ஜெரேமி கோர்பைன், ஜீன் லுயுக் மேலென்கோன்
போன்றவர்களும், முதலாளியத்தைக் காப்பாற்ற முயலும் போலி இடது சாரிகளும்
முன்மொழியும் ‘அதிகமாக வரி கட்டுமாறு’ ஆளும் வர்க்கத்திற்கு வேண்டுகோள் விடுப்பது அல்லது
பிற சீர்திருத்த வழிகளால் சமூகத்தின் சொத்தைப் புரட்சிகரமான முறையில் மறுபங்கீடு
செய்வதைச் சாதிக்க முடியாது.
வரலாற்று ரீதியாக, இன்றைய ஆளும் வர்க்கமும் அதன் அமைப்பும் காலாவதியாகி
விட்டன. இந்தச் சமூகம் வாழ்வதற்கு, நிதி ஆதிக்கக்
குழுக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். மனிதர்களின் தேவைகளை நிறைவேற்ற அந்தப்
பெரும் சொத்துக்கள் மறுபங்கீடு செய்யப்பட வேண்டும். ஆளும் வர்க்கத்தின் தனி
உடைமையாக உள்ள உழைப்புச் சாதனங்கள் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட
வேண்டும்.
தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும்
போராட்டங்கள் தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான திட்டத்திற்காக
உணர்வுபூர்வமான அரசியல் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
------------------------------------
ஜெர்ரி வைட்
தமிழில்: கவிதா
(Monthly Review Online ல் ஜூலை 7, 2023ல் வெளி வந்த கட்டுரை)
ஏகாதிபத்தியத்தின் கொடூரமான சுரண்டலும் அடக்குமுறையும், அரசியல் அமைப்பும் எவ்வாறு உலகெங்கிலும் மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்களைக் கடுமையாகச் சுரண்டி, மிகச் சில முதலாளிகளுடைய கைகளில் பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களை குவிக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு இக்கட்டுரை விளக்கியிருக்கிறது.
ReplyDeleteஇந்த மனிதாபிமானமற்ற சுரண்டலை எதிர்த்து அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் தொழிலாளி வர்க்கம் தீவிரமான போராட்டங்களில் ஈடுபட்டு வருவதை சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
கட்டுரையின் இறுதியில், "வரலாற்று ரீதியாக, இன்றைய ஆளும் வர்க்கமும் அதன் அமைப்பும் காலாவதியாகி விட்டன. இந்தச் சமூகம் வாழ்வதற்கு, நிதி ஆதிக்கக் குழுக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்..... ஆளும் வர்க்கத்தின் தனி உடைமையாக உள்ள உழைப்புச் சாதனங்கள் சர்வதேச உழைக்கும் வர்க்கத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ந்து வரும் போராட்டங்கள் தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான திட்டத்திற்காக உணர்வுபூர்வமான அரசியல் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்."
என்று தொகுத்துக் கூறியிருப்பது முற்றிலும் உண்மை.