இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள
நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின்
சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன.
நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி
வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச்
செய்து கொடுத்தும், பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப்
பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு
மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும், பின்னர் இந்திய
முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும், முதலீடு செய்யவும்
உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது.
அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும், விவசாயிகளின்
நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள், ஜனநாயக அமைப்புகள் மீது
கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்
விடுதலைப் போராட்டம், நக்சல்பாரி உழவர்களின் எழுச்சிப் போராட்டம், காசுமீர் மக்களின்
உரிமைகளைப் படிப்படியாகப் பறித்தது முதல் 2009இல் இலங்கையில் இன
அழிப்புப் போருக்குத் துணை நின்றது வரையிலும் ஜனநாயக விரோதச் செயல்களில் தொடர்ந்து
காங்கிரசு ஈடுபட்டு வந்தது. 1975 ல் நெருக்கடி நிலையை அறிவித்து மக்கள் மீது
பாசிசக் கொடுங்கோன்மையைக் கட்டவிழ்த்து விட்டது. மேலும் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைத் தனது ஆட்சிக் காலத்தில் மட்டும் 90 முறை கலைத்துத் (இதுவரை
மொத்தம் 115 முறை கலைக்கப்பட்டுள்ளது) தனது எதேச்சதிகாரத் தன்மையை நிலைநாட்டி
வந்துள்ளது.
காங்கிரசின் தொடர்ந்த மக்கள் விரோதப் போக்கால் மாநில
சட்டமன்றங்களில் இருந்து முதலில் அப்புறப்படுத்தப்பட்டு, பின்னர் இந்திய
நாடாளுமன்ற ஆட்சிக் கட்டிலிலும் பலவீனப்படுத்தப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின்
தயவோடு ஆட்சியதிகாரத்தைச் சிறிது காலம் தொடர்ந்தாலும், இந்திய முதலாளி
வர்க்கத்தின் தேவைகளை பலவீனமடைந்த காங்கிரசின் தலைமையில் அமைந்திருந்த கூட்டணி
ஆட்சியால் தொடர்ந்து நிறைவேற்ற முடியாத நிலையில், இந்திய முதலாளி வர்க்கம்
காங்கிரசுக்கு மாற்றாக பாஜகவை 2014 தேர்தலில் முன்னிலைக்குக் கொண்டு வந்தது.
2002 ஆம் ஆண்டு முஸ்லீம் மக்கள் மீது கடும் வன்முறைகளைக் கட்டவிழ்த்து
விட்ட, மோடி தலைமையிலான குஜராத் அரசின் வகுப்புவாத வன்முறைச் செயல்களை
நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பிரச்சாரம் செய்து அவர்களைத் துடைத்தெறியும் வேலையை
அன்றைய காங்கிரசும் மற்ற தேர்தல் கட்சிகளும் செய்யவில்லை. மாறாக, காங்கிரசின் மக்கள்
விரோதப் போக்கினால் அக்கட்சிக்கு ஏற்பட்ட பலவீனமும், அம்பலப்பட்டு போன அதன்
ஊழல்களும் பாஜகவுக்கான வாய்ப்பை அமைத்துக் கொடுத்தன.
ஆட்சியைக் கைப்பற்றிய பிஜேபி கட்சி தொடர்ந்து ஆட்சிக் கட்டிலைத்
தக்க வைத்துக் கொள்ள இந்து மதவாதத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றது.
இந்தியாவில் இருக்கும் பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வுகளைத் தூண்டி அதன்
மூலம் வாக்கு வங்கிகளைத் தக்கவைத்துக் கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது.
பெரும்பான்மை மத ஆதிக்கத்திலிருந்து சிறுபான்மை மதத்தினரைக்
காப்பாற்ற முறையான செயல்பாடுகளை முன்னெடுக்காத காங்கிரசும் பிற முதலாளித்துவக்
கட்சிகளும், சிறுபான்மை மதத்தினரைப் பாதுகாப்பது என்ற பெயரில் சிறுபான்மை
மதத்தினரின் பிற்போக்குச் செயல்பாடுகளை ஆதரிப்பதும், மதச்சார்பின்மை எனக்
கூறிக் கொண்டு சிறுபான்மையினர் மதவிழாக்களில் கலந்து கொள்வதுமான இவர்களின்
செயல்பாட்டை பாஜக தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றது. இந்து மக்களிடையே
மத அரசியலை முன்னெடுத்து இந்து மக்களுக்குத் தான் மட்டுமே உண்மையான காவலன் எனக்
கூறி அவர்களின் வாக்கு வங்கியை தனதாக்கிக் கொள்ள முயலுகின்றது. ஆனால், இந்து மதத்திலுள்ள
(அனைத்து மதங்களிலுமுள்ள) உழைக்கும் மக்களின் நலனை பிஜேபி ஆளும் வர்க்கத்தின்
நலனுக்காகப் பலியிடுகின்றது என்பதை இத்தகைய கட்சிகள் அம்பலப்படுத்துவதில்லை
60 ஆண்டுகாலம் காங்கிரசு ஆட்சி ஏற்படுத்திய அதிருப்தியை 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சி மக்கள்
மத்தில் ஏற்படுத்தியிருந்தாலும் அதனைத் தனக்கான ஆதரவாக மாற்றும் திறன்
காங்கிரசுக்கோ வேறு முதலாளித்துவக் கட்சிக்கோ இல்லை. எனவே, இந்திய ஆளும் வர்க்கம்
மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ள பாஜகவிற்கு மாற்றாக வேறொரு முகவரை இந்தத்
தேர்தலில் முன்னிறுத்தும் வேலையில் இதுவரை இறங்கவில்லை. இன்றைய நிலையில் பாஜகவே
அது சவாரி செய்வதற்கு ஏற்ற குதிரையாக உள்ளது.
அதே சமயம், காங்கிரசும், பாஜகவும் தொழிலாளர்கள், வறிய விவசாயிகள், சிறு. குறு, நடுத்தர விவசாயிகள், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களின் நலனுக்கும் எப்பொழுது
எதிராகவே இருந்து வருகின்றன என்பதை பெரும்பான்மை மக்கள் உணர்ந்து வருகின்றனர். அதனால்
இந்தப் பாராளுமன்ற ஆட்சி அமைப்பில் ஆளும் கட்சிகளை மாற்றி அமைப்பதன் மூலம் மக்கள்
தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயல்கின்றனர். ஆனால் ஆளும் கட்சிகள்தான்
மாறுகின்றனவே தவிர ஆளும் வர்க்கம் மாறுவதில்லை. முதலாளிய வர்க்கம்தான் திரை
மறைவில் இருந்து கொண்டு இந்த ஆளும் கட்சிகளை இயக்கி வருகின்றது என்பதை மக்கள்
புரிந்து கொள்ளவில்லை. ஆளும் கட்சிகளை மாற்றுவதினால் தமது பிரச்சினைகளுக்குத்
தீர்வு கிடைக்காது, இங்குள்ள சுரண்டலுக்குக் காரணமான முதலாளிய வர்க்கத்தின்
அதிகாரத்தை அகற்றி, அதற்குப் பதிலாக ஒரு சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலமே
மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்பதை தொழிலாளி வர்க்கத்திடமும்
பிற உழைக்கும் மக்களிடமும் கொண்டு போய்ச் சேர்க்கும் வலுவான இடதுசாரி அமைப்புகள்
இங்கு இல்லை. பெரும்பான்மையான தொழிலாளர்கள் முதலாளித்துவ கட்சிகளுக்குப்
பின்னாலும், சீர்த்திருத்தவாத இடதுசாரி கட்சிகளுக்குப் பின்னாலும் அமைப்பாக
அணிதிரட்டப்பட்டுள்ளனர். அதே போன்று விவசாயத் தொழிலாளர்களும், சிறு-குறு விவசாயிகளும்
கூட இத்தகைய கட்சிகளின் பின்னால் தான் அமைப்பாக அணிதிரட்டப்பட்டுள்ளனர்.
மக்கள் திரளிடையே மிகவும் பலவீனமாக இடது சாரி அமைப்புகள் இருக்கும் இந்த நிலைமையில், கடந்த 77 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சியில் இருக்கும் இந்திய அளவிலான கட்சிகளையும், அவர்களின் கட்டளையை நேரடியாகவும், கொல்லைப்புற வழியாகவும் நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்திய முதலாளி வர்க்கத்திற்கு சேவகம் செய்து வரும் மாநில அளவிலான கட்சிகளையும் அம்பலப்படுத்தி முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசமே என்று தொழிலாளர்களை அணிதிரட்டாமல், புரட்சிகரக் கண்ணோட்டத்தை இழந்து, இரண்டு தீமைகளில் குறைந்த தீமையை முன்னிறுத்துவோம் என்ற முழக்கத்தை (ஏற்கனவே சீர்த்திருத்தவாதத்திலும், நாடாளுமன்றப் பாதையிலும் மூழ்கிப் போன சிபிஐ, சிபிஎம் அல்லாத) சில இடதுசாரி அமைப்புகள் முன்னெடுத்து சீர்த்திருத்தப் பாதைக்குத் திரும்பியுள்ளனர்.
பிஜேபியின் பாசிசத் தன்மைக்கு காரணமாக இருப்பது முதலாளித்துவ
உற்பத்தி முறையின் நெருக்கடிதான் என்பதை உணர்ந்து கொள்ளாத இந்தத் தடம் புரண்ட
இடதுசாரிகள் அதன் வெளிப்பாடான மதவாதத்தை மட்டுமே முக்கிய பிரச்சனையாக முன்னிறுத்தி, பாசிசத்தை வீழ்த்தக்
காங்கிரசின் தலைமையிலான ‘இந்தியா கூட்டணியை' ஆட்சியிலமர்த்தும்
வேலைகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். முதலாளிய வர்க்கத்திற்கும் அதன் நலன்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் முதலாளியக் கட்சிகளுக்கும் இடையிலான உறவை இவர்கள் புரிந்து
கொள்ளவில்லை; பொருளாதாரத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான உறவைப் புரிந்து
கொள்ளவில்லை; மதம் எவ்வாறு அரசியலோடும் ஆளும் வர்க்கத்தின் பொருளாதார நலன்களோடும்
பின்னிப் பிணைந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. மத வடிவிலான பாசிசமானாலும்
இன அடிப்படையிலான பாசிசமானாலும் அது முதலாளிய வர்க்கத்தின் பொருளாதார, அரசியல்
நலன்களை ஆணி வேராகக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. இவர்கள் ஆதரிக்கும்
‘இந்தியா’ கூட்டணி நாளைக்கு ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிய வர்க்கத்தின் நலன்களைக்
காப்பாற்ற அது பாசிச நடவடிக்கைகளைத்தான் எடுக்கும் என்பதை அறியவில்லை; அல்லது
அறிந்திருந்தாலும், அவ்வாறு நடக்காது என்று நம்பி, மாயையில் மூழ்கி தம்மைத் தாமே
ஏமாற்றிக் கொள்கின்றனர்; மக்களையும் ஏமாற்றுகின்றனர். இது மக்களுக்குச் செய்யும்
மாபெரும் துரோகம் ஆகும்.
இதற்கு ஐக்கிய முன்னணி தந்திரம் என்ற யுக்தியை தாம் சரியாகக்
கையாள்வதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. ஆனால், உண்மையில் ஐக்கிய
முன்னணியை அமைக்கும் அளவிற்கு இடதுசாரி அமைப்புகள் பலமான நிலையில் இல்லை என்பது
அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த உண்மை.
பாசிசத்திற்கு மாற்றாக முதலாளித்துவ ஜனநாயகத்தை மீட்டெடுக்க
பாஜகவிற்கு மாற்றான காங்கிரசு தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு முழு மூச்சாகப்
பாடுபடுவதே இன்றைய கம்யூனிஸ்டுகளின் முக்கிய கடமை என்றும், இதனை உணராமல் இரண்டு
கட்சிகளையும் சமமாகப் பார்ப்பவர்கள் பிஜேபிக்கு ஆதரவானவர்கள் என்றும் முத்திரைக்
குத்தித் தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பித்துக் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் முதலாளித்துவ
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம் என்றோ, முதலாளித்துவ ஜனநாயகத்தில் அனைத்து மக்களுக்குமான உரிமைகள்
உத்திரவாதப்படுத்தப்படும் என்றோ காங்கிரசு தலைமையிலான இந்தியா கூட்டணி' கட்சியினர் இதுவரை எந்த
உறுதிமொழியும் அளித்ததாகத் தெரியவில்லை.
தாம் ஆட்சிக்கு வந்தால், சட்ட விரோதச் செயல்பாடுகள் தடைச் சட்டம்
(UAPA) போன்ற ஆள் தூக்கிச் சட்டங்கள், தொழிலாளர்ளைக் கடுமையாகச் சுரண்ட வழி
வகுக்கும் புதிய தொழிலாளர் விரோதச் சட்டங்கள், முஸ்லீம் மக்களை இரண்டாம்தரக்
குடிமகன்களாக மாற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவை ரத்து செய்யப்படும்
என்றோ, காஸ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றோ, காலனிய கால பிரிட்டிஷ்
அரசை விட அதிக அளவு போலிசுக்கு அதிகாரங்களை வழங்கி இந்தியாவை ஒரு ‘போலிஸ் அரசாக’ மாற்றியுள்ள
புதிய இந்தியத் தண்டனைச் சட்டம், இந்தியச் சாட்சிச் சட்டம், இந்தியக் குற்றவியல்
தண்டனைச் சட்டம் ஆகியவற்றை இரத்து செய்வோம் என்றோ, உண்மையான கூட்டாட்சி முறையை
(federal setup) இந்தியாவில் கொண்டு வருவோம் என்றோ ‘இந்தியா கூட்டணி’ இதுவரை எந்த
வாக்குறுதியும் வழங்கவில்லை.
ஆனால், சீர்த்திருத்தவாதத்திற்குத் தடம் புரண்டு போன இடதுசாரிகளோ, பாஜகவை வீழ்த்துவோம், ஜனநாயகத்தைக் காப்போம்
என்ற அடிப்படையில் காங்கிரசுக்கும் தமிழகத்தில் திமுகவிற்கும் எந்தவிதமான
நிபந்தனையுமின்றி வலியவந்து முட்டுக் கொடுத்து நிற்கின்றனர். ஐக்கிய முன்னணித்
தந்திர அடிப்படையில் ஜனநாயக இயக்கங்களோடு கூட்டுச் சேர்வது என்பது எந்தவித
நிபந்தனையும் இல்லாமல் தானே வலிய சென்று ஆதரவு தருவதல்ல, மாறாக, குறைந்தபட்ச
முதலாளித்துவ ஜனநாயக உரிமைகளை உத்திரவாதப்படுத்த வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களின்
பாதுகாப்பினை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்னும் நிபந்தனைகள் விதிப்பதோடு, தாம் ஆதரவளிக்கும்
முதலாளித்துவக் கட்சிகள் தாம் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர் விரோத, உழைக்கும்
மக்கள் விரோத, ஜனநாயக விரோதச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற நிபந்தனைகளையும்
விதிக்க வேண்டும். ஆனால், சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரிகள் இத்தகைய எந்த
நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஏனெனில், நிபந்தனைகள் விதிக்கும் அளவுக்கு இவர்கள் பலம் வாய்ந்தவர்களாக
இல்லை.
அதோடு மட்டுமல்ல. இவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய் அவர்களை
விமர்சனம் செய்யும் உரிமையை தாமே வலியத் தூக்கியெறிந்து விட்டு, அவர்களுக்கு
வக்காலத்து வாங்கும் அளவிற்குச் சென்றுவிட்டனர். காங்கிரசு உள்ளிட்ட முதலாளித்துவக்
கட்சிகள் பாஜகவின் மதவாதச் செயல்களைக் கண்டிக்காமல் வேடிக்கை பார்ப்பதையோ, அல்லது அதன் மதவாத
நிகழ்ச்சி நிரலுக்கு துணையாக இருப்பதையோ, மாநிலத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் ஜனநாயக உரிமை மீறல்களில்
ஈடுபடும்பொழுதோ, உழைக்கும் மக்களின் மீது போலிசைக் கொண்டு தாக்குதல்
தொடுக்கும்போதோ, பாஜகவின் தொழிலாளர் விரோதப் போக்கை அச்சுப் பிசகாமல் போட்டி
போட்டுக் கொண்டு மாநிலத்தில் நிறைவேற்ற முன்வரும்பொழுதோ எந்த விமர்சனத்தையும்
சீர்த்திருத்தவாத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரிகள் செய்வதில்லை அல்லது பெயரளவிற்கு
மேம்போக்காகவே செய்கின்றனர். இன்னும் சிலர் இந்தக் கட்சிகளைச் சார்ந்தவர்கள் ஊழல்
வழக்கில் தண்டனை பெற்றால் கூட இது பாஜகவின் பழிவாங்கல் எனக் கூறி அவர்களைப்
புனிதப்படுத்த முனைகின்றனர். இவர்களின் இத்தகைய போக்கை கண்டு மக்கள் எள்ளி
நகையாடுகின்றனர்
பாசிசத்தை வீழ்த்துவது என்ற பெயரில் பாஜகவின் மதவாதத்தை மட்டும்
இவர்கள் கணக்கில் எடுத்துக் கொண்டதால், கடந்த காலங்களில் இந்துத்துவாவிற்கு எதிராகச் சீர்த்திருத்தவாதப்
போராட்டங்களை முன்னெடுத்த பெரியாரின் போதனைகளை எடுத்துக் கொள்வதோடு, திமுகவை அவரின் வாரிசாகக்
கருதி திமுகவின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கொடுப்பவர்களாகவும், அதன் நலன்விரும்பிகளாகவும்
மாறி விட்டனர்.
பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளை அப்படியே அச்சுப் பிசகாமல் பிஜேபி
ஆளும் மாநிலங்களைக் காட்டிலும் அதிவேகத்தில் செயல்படுத்த முனைகின்றது தமிழ்
நாட்டின் “திராவிட மாடல்” அரசு. மின் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஏதுவாக
இந்தியாவிலேயே எந்த மாநிலங்களிலும் இல்லாமல் தமிழக அரசானது மின் இணைப்பை ஆதார்
எண்ணுடன் இணைக்கவும், ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்தவும் துரிதமாகச் செயல்பட்டு
வருகின்றது.
பாஜக நிறைவேற்றிய தொழிலாளர் விரோதச் சட்டத் திருத்தத்தை உடனடியாக
நடைமுறைப்படுத்த திமுக தொடர்ந்து முனைந்து நிற்கின்றது. புதிய தொழிலாளர் சட்டங்கள்
நடைமுறைப்படுத்த காலதாமதம் ஏற்படுவதால், 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்த
வேண்டி பழைய தொழிற்சாலைகள் சட்டத்தில் அவசரச் சட்டத்திருத்தம் செய்து ஒரு நாளின்
வேலைநேரத்தை 12 மணி நேரம் என நிரணயித்தது. தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பால் இந்த
அவசரச் சட்டத் திருத்தத்தைத் திரும்ப பெற்றது. ஆனால், புதிய தொழிலாளர்
சட்டத்தில் 'ஊதிய சட்டத்' தொகுப்பிலும், பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத் தொகுப்பிலும் 8 மணி நேர வேலையை 12 மணி நேரம் என திமுக
அரசு வரையறை செய்து வைத்துள்ளது புதிய தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வரும்
பொழுது இந்த 12 மணிநேர வேலைநாள் என்பது திமுகவால் நிச்சயம் கொண்டுவரப்படும் என்பது
உறுதி.
லாக் அப் மரணங்களும், என்கவுண்டர் கொலைகளும் திமுக ஆட்சியிலும் தொடர்கின்றன.
தொழிற்சங்கங்கள் அமைத்ததற்காக தொழிலாளர்கள் வேலையிலிருந்து தூக்கியெறியப்பட்டு பழி
வாங்கப்பட்டு வருகின்றனர். பணிப்பாதுகாப்பு மற்றும் கூலி உயர்விற்காகப் போராடும்
தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் மீது கடும் ஒடுக்குமுறைகள் நிகழத்தப்படுகின்றன.
ஒப்பந்த அடிப்படையில் அரசு ஊழியர்களையும் தூய்மைப் பணியாளர்களையும் நியமித்து அரசே
அதிதீவிரச் சுரண்டலுக்கு முன்மாதிரியாக நடந்து வருகின்றது. போராடும் விவசாயிகளைக்
குண்டர் சட்டத்தில் கைது செய்து தன்னுடைய முதலாளித்துவ விசுவாசத்தை அப்பட்டமாக
வெளிக்காட்டி வருகின்றது. ஆதிக்க சாதியவாதிகளின் சாதிய வன்முறைக்கு அதிகார வர்க்கம்
எப்பொழுதும் துணை நிற்கின்றது.
பிஜேபியின் தொழிலாளர் விரோதச் சட்டங்கள், பொதுத்துறையை
தனியார்மயமாக்கும் திட்டங்கள், புதியக் கல்வி கொள்கை என அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தும்
தமிழகத்தின் முகவராக திமுக அரசு உள்ளது பொருளாதாரக் கொள்கையிலோ, மக்களின் மீதான
அடக்குமுறைகளிலோ பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் திமுக எந்தவிதத்திலும் சளைத்ததல்ல என்பது சாதாரண
பாமரனுக்கும் கூட தெரியும், ஆனால் சீர்த்திருத்தவாத இடதுசாரிகளுக்கோ இவற்றில் எதுவும்
கண்களில்படாது; உழைக்கும் மக்களுக்கான புரட்சிகரத் தத்துவத்தின் வழிகாட்டுதலைக்
கைவிட்டுப் பார்வை அற்றவர்களாக மாறிவிட்டனர்
பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒரு கட்சியை மட்டும் வீழ்த்துவதொடு தொடர்பு
கொண்டதல்ல. பாசிசம் என்பது முதலாளித்துவ நெருக்கடியின் விளைவு ஆகும். முதலாளித்துவம்
தன்னை நெருக்கடியில் இருந்து காத்துக் கொள்ள மேலும், மேலும் தொழிலாளர்
வர்க்கத்தைச் சுரண்ட வேண்டியதும், சிறுவீத உற்பத்தியை அழித்தொழித்து அந்த இடத்தைத்
தனக்குரியதாக்கிக் கொள்ள வேண்டியதும், போராடும் தொழிலாளர்களை, வறிய விவசாயிகளை, கம்யூனிஸ்டுகளை, ஜனநாயகவாதிகளைக் கடுமையாக ஒடுக்க வேண்டியதும் அதற்கு அவசியமாகியுள்ளது.
எனவே, உழைக்கும் மக்களைப் பிளவுபடுத்தி பாசிசத்தை அரங்கேற்ற முதலாளித்துவம்
பல்வேறு வகையான ஒடுக்குமுறைகளைக் கைக்கொள்கின்றது, இங்கு மதவாதத்தை
முன்னிறுத்தி மத அடிப்படையிலான ஒடுக்குமுறைகளைக் கொண்டு பாசிசம் அரங்கேறி
வருகின்றது அதற்கான பிரதிநிதியாகத்தான் பாஜக செயல்பட்டு வருகின்றது. பாஜக என்ற
பிரதிநிதி இல்லையென்றால் வேறொரு பிரதிநிதியைவேறு ஒரு வடிவத்தில் முன்னெடுக்கும்.
எனவே, பாசிசத்தின் தோற்றுவாய்க்குக் காரணமான முதலாளித்துவம் இருக்கும்
வரையில் அதனை வீழ்த்த முடியாது, நாடாளுமன்றத் தேர்தல் முறையின் மூலம் பாசிசத்தை வீழ்த்துவோம்
என்பது சாத்தியம் கிடையாது. தற்காலிகமாக வேண்டுமானால், அதனைச் சிறிது காலம் பின்னுக்குத்
தள்ளி வைக்கலாம். எனினும் விரைவில் வேறொரு வடிவில் பாசிசம் முன்னுக்கு வரும்.
அதே வேளை நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் கூட பாசிசத்தைப் பின்னுக்குத்
தள்ளும் திட்டம் பிற முதலாளித்துவ கட்சிகளுக்குக் கிடையாது, அத்தகைய பலம் இடதுசாரி
இயக்கங்களுக்கும் இல்லை. எனவே முதலாளித்துவத்தின் கோர வடிவம்தான் பாசிசம் என்பதையும்,
பாசிசத்திற்கான தோற்றுவாய் முதலாளித்துவ நெருக்கடி என்பதையும், அதற்கு மாற்று
சோசலிசமே என்பதையும் வலுவாகத் தொழிலாளர்களிடையேயும் பிற உழைக்கும் மக்களிடையேயும்
முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும், புரட்சிகரப் போராட்டத்திற்கான தலைமைப் பாத்திரமாக அவர்களை மாற்றுவதும்
இன்று இடதுசாரி இயக்கங்கள் முன் உள்ள உடனடிக் கடமையாக உள்ளது.
- குமணன்
இக்கட்டுரை தேர்தல்கள் நெருங்கி வரும் இந்த நேரத்தில், கம்யூனிஸ்டுகள் எந்த திசையில் போக வேண்டும் என்பதை ஆணித்தரமாகத் தெளிவுபடுத்தியிருக்கிறது. இக்கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் பல்வேறு கருத்துக்கள் நம்முடைய கடந்த 70 ஆண்டு கால அனுபவமாகும்.
ReplyDelete".....ஆளும் கட்சிகள்தான் மாறுகின்றனவே தவிர ஆளும் வர்க்கம் மாறுவதில்லை. முதலாளிய வர்க்கம்தான் திரை மறைவில் இருந்து கொண்டு இந்த ஆளும் கட்சிகளை இயக்கி வருகின்றது...... ஆளும் கட்சிகளை மாற்றுவதினால் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காது, இங்குள்ள சுரண்டலுக்குக் காரணமான முதலாளிய வர்க்கத்தின் அதிகாரத்தை அகற்றி, அதற்குப் பதிலாக ஒரு சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதன் மூலமே மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்......
‘இந்தியா’ கூட்டணி நாளைக்கு ஆட்சிக்கு வந்தாலும் முதலாளிய வர்க்கத்தின் நலன்களைக் காப்பாற்ற அது பாசிச நடவடிக்கைகளைத்தான் எடுக்கும் .......பாசிசத்தை வீழ்த்துவது என்பது ஒரு கட்சியை மட்டும் வீழ்த்துவதொடு தொடர்பு கொண்டதல்ல.....
பாசிசத்திற்கான தோற்றுவாய் முதலாளித்துவ நெருக்கடி என்பதையும், அதற்கு மாற்று சோசலிசமே என்பதையும் வலுவாகத் தொழிலாளர்களிடையேயும் பிற உழைக்கும் மக்களிடையேயும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதும், புரட்சிகரப் போராட்டத்திற்கான தலைமைப் பாத்திரமாக அவர்களை மாற்றுவதும் இன்று இடதுசாரி இயக்கங்கள் முன் உள்ள உடனடிக் கடமையாக உள்ளது.
இக்கட்டுரையில் தோழர் முன்வைத்துள்ள கருத்துக்களை, பரந்த சிந்தனையோடும், தொழிலாளி வர்க்கத்தின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டும் எல்லா கம்யூனிஸ்டுகளும், முற்போக்கு இயக்கங்களும் விவாதிக்க முன்வர வேண்டும்.