உக்ரைன், மற்றும் இஸ்ரேல்-பாலஸ்தீன போர்கள் மேற்கு ஏகாதிபத்தியத்தின் மறைவுக்கும் வீழ்ச்சிக்குமான முன்னறிவிப்பு
வரலாற்று ரீதியாக
பாலஸ்தீனர்களுக்குச் சொந்தமான பிரதேசத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் இடையில் அதிகரித்துவரும் போர் நடவடிக்கைகள், உக்ரைனின்
ஆட்சியாளர்களிடம் மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனின் போர்
நடவடிக்கைகள், பாதிப்புகள் ஏறக்குறைய 2 ஆண்டுகளாக மேற்கு நாடுகளின்
ஊடகங்களில் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டன; ஆனால் இப்போது அந்த
ஊடகங்கள் மேற்குலக மேலாதிக்கங்களின் துணைக்கோளாக இருக்கும் இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கு
எதிராக மேற்கொண்டுள்ள
நடவடிக்கைகள் பற்றி அதிகம் பேசுகின்றன. இவ்விரண்டு நாடுகளுக்கும் இடையில் உள்ள
விரோதம் அவற்றின் அருகில் உள்ள அரபு நாடுகளிலும் பரவக்கூடும் என்னும் அச்சத்தையும்
உருவாக்கி உள்ளது. இதனால் ரசியாவுக்கு எதிரான போரில் மேற்கு நாடுகள் தனக்கு
அளிக்கும் ஆதரவு குறைந்து விடுமோ என்று உக்ரைன் ஆட்சியாளர்கள்
அஞ்சுகின்றனர்.
ஆக்கிரமிப்புக்கு
எதிரான பாலஸ்தீனப் படையினர் காஸாவின் திறந்த வெளிச் சிறையிலிருந்து 7,அக்டோபர், 2023 அன்று தங்களது
தாக்குதலைத் தொடங்கியவுடன்
உக்ரைனின் ஜனாதிபதி ஸிலென்ஸ்கி, இஸ்ரேல்
ஆக்கிரமித்துள்ள பிரதேசத்திற்கு மேற்குலகின் அனைத்துத் தலைவர்களும் சென்று
தங்களின் 'ஆதரவைக்' காட்டவேண்டும் என்று அறிவித்தார். அந்த ஒற்றுமையைக் காண்பிக்க தானே
அங்கு வருவதாகவும் அறிவித்தார்; அவருடைய வருகை அரசியல்ரீதியாக திசைதிருப்பிவிடும் என்று அஞ்சியும்,
நேட்டோ நாடுகளின் ஆதரவில் ரசியாவுக்கு எதிரான போரில் உக்ரைனின் தோல்வியினால் ஏற்பட்டுள்ள
இராணுவரீதியான துயரம் பற்றிய கருத்தையும் உக்ரைன் கொண்டு வரும் என்று அஞ்சியும் இஸ்ரேல் அவருக்கு அனுமதி
மறுத்தது. மேலும், மேற்கு நாடுகளின் கண்ணோட்டத்தில், ரசிய ராணுவத்திடம் மிக மோசமாக உக்ரைனின்
ராணுவம் அடையும் தோல்வியினால் ஸிழேன்ஸ்கிக்கும்
அவருடைய ஆட்சிக்கும் ஒரு ‘பிம்பச் சிக்கல்’ உள்ளது. .
உக்ரைனின் முன்னாள்
பாராளுமன்ற மக்கள் பிரதிநிதியும் தீவிர தேசியவாதியுமான இகோர் மோசிய்சுக்
சமீபத்தில், "குறிப்பிட்ட சில காரணங்களால் உக்ரைன் அரசாங்கம்,
நமக்கு ---அதாவது உக்ரைனுக்கும் உக்ரைனியர்களுக்கும் -உலகம் முழுவதும் ராணுவ
உதவியும், நிதி உதவியும் செய்யக் கடமைப்பட்டுள்ளதாக நம்புகிறது" என்று
கூறினார். அவர், தொடர்ந்து ஆனால், " உலகம் அவ்வாறு
நினைக்கவில்லை" என்பதையும் கூறுகிறார்.
உக்ரைன் அரசாங்கம், ஊடகங்கள் மற்றும் அதன்
தீவிர தேசியவாதிகள் மிகத் தெளிவாக உறுதியுடன் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்குமான
முரண்பாட்டில், இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளனர்---- ஆனால் இவர்கள் நீண்டகாலமாக
யூதர்களுக்கு எதிரான தீவிர வலதுசாரிக் கொள்கை
கொண்டிருந்தபோதும் -இப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளனர். இது கொள்கை அடிப்படையில்
உண்டானதல்ல, மாறாக, அமெரிக்காவை இவ்விருவரும் சார்ந்திருப்பதே இந்த ஒற்றுமையின் பொதுவான
காரணமாகும். மேலும், 'மேற்கத்திய நாகரிகத்தை’ ‘காட்டுமிராண்டிகளிடமிருந்து' காப்பது ---- அதாவது
உக்ரைனுக்கு ‘ரசியக் கூட்டத்தை’
எதிர்த்துப் போரிடுவது, இஸ்ரேலுக்கு பாலஸ்தீனத்தில், பாலஸ்தின மக்களையும் அரேபிய மக்களையும் எதிர்த்துப் போரிடுவது -என்ற
இனவெறிப் பண்பும் அந்த ஆதரவுக்குக் காரணமாக உள்ளது.
புலம் பெயர்ந்தவர்கள்
மீதும், அகதிகள் மீதும் பாகுபாடு மிக்க
அணுகுமுறை உக்ரைனுக்கு உள்ளும் வெளியிலும் கடந்த ஆண்டிலிருந்து வெளிப்படையாகத் தெரிகிறது. நேட்டோ
நாடுகளில் அடைக்கலம் கொண்ட உக்ரைன் அகதிகளுக்கு, அகதிகள் என்னும்
அங்கீகாரம், பாதுகாப்பு, மருத்துவக் காப்பீடு, தங்கும் இடம், மற்றும் பொருளாதார உதவிகள் உடனடியாக வழங்கப்படுகின்றன. ஆனால், ஆப்பிரிக்கா, ஆசியா, இலத்தின் அமெரிக்க
நாடுகளில் இருந்து வரும் ஏராளமான புலம் பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளின் விசயத்தில்
இந்த நாடுகளின் நிலைப்பாடு முரண்பாடு கொண்டதாக உள்ளது. தொடர்ந்து இவர்களுக்கு அகதிகளுக்கான அங்கீகாரம்
மறுக்கப்பட்டு, பல வருடங்களுக்கு இவர்களின் குடியுரிமை விண்ணப்பங்கள் காக்க வைக்கப்படுகின்றன; அல்லது மேற்கு
ஏகாதிபத்தியங்களின் கார்போரேட்டுகளால் பொருளாதாரம் சிதைக்கப்பட்ட மூன்றாம் உலக
நாடுகளுக்கு வலுக்கட்டாயமாக இம்மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
மத்திய கிழக்கில்
இஸ்ரேல் ஆட்சி உள்ளது போல, மேற்கு ஏகாதிபத்திய உலகின் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள காவல்
எல்லையாக உக்ரைன் உள்ளது. 2014-ஆம் ஆண்டிலிருந்து
மேற்கு ஏகாதிபத்தியங்களின் தலையீடு மற்றும் ஆதிக்கத்திற்கு எதிராகச்
செயல்படுபவர்களைத் தண்டிக்க, உக்ரைன்
பயன்படுத்தப்படுகிறது. 2014-ஆம் ஆண்டில் நடந்த உக்ரைன் ஆட்சிக் கவிழ்ப்பைத் தொடர்ந்து டோன்பஸ் மற்றும் கிரிமியா மக்களுக்கு நடந்த அநீதி இதற்கு உதாரணமாகும்.
மத்திய கிழக்குப்
பிரதேசத்தில் இந்தப் புதிய “காவல் மாடத்தை” உருவாக்குவதற்கு முதன்மையான தடையாக ஹமாஸ் அமைந்துள்ளது
என்பது அவரது கருத்தாகும். "அமெரிக்க அணு ஆயுதங்கள், இஸ்ரேலின் தொழில் நுட்பம், நிதி, எண்ணெய் மற்றும் இயற்கை
வாயு வளம், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகளின் மனித வளம் --- இவையே 2024-- இல் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலுக்கு
முன்பாக உருவாக்கி முடிக்க வாஷிங்டன் தீவிரமாக முயற்சிக்கும் “காவல் மாடத்தின்” அடித்தளங்கள்
ஆகும். பெரும் நிதியை கொண்டுள்ள உலக நாடுகள், குறுக்கீடுகளை
பொறுத்துக் கொள்வதில்லை ---- காஸாவில் எண்ணிலடங்காத உயிரிழப்புக்கள் ஏற்பட்டபோதிலும் ஹமாஸ் வடிவத்தில்
ஏற்பட்டுள்ள குறுக்கீட்டை முறியடிக்க வேண்டும்” என்று அவை கருதுகின்றன என ப்சௌல் குறிப்பிடுகிறார்.
அமெரிக்கா தெற்கு உலக
நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிறுவ, தனது மற்ற நடவடிக்கைகளோடு உக்ரைனை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. எனினும், உக்ரைன், இஸ்ரேல் ஆகிய இரு
நாடுகளையும் ஒரே நேரத்தில் ஆதரிப்பது என்பது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டாளியான நேட்டோ நாடுகளுக்கும்
மிகக் கடினமான செயலாக உள்ளது.
சந்தேகமில்லாமல், பெரும்பாலான ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் இலத்தின்
அமெரிக்க மக்கள், கடந்த காலத்தில் தாங்கள் கொண்டிருந்த உரிமை வேட்கை போன்றதே பாலஸ்தீன மக்களுடைய
உரிமைப் போரும் என்ற புரிதலுடன் அவர்களை முழுமையாக
ஆதரிக்கின்றனர்.
G7 கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர், " தெற்கு உலகில் நடக்கும்
போரில் நாங்கள் நிச்சயமாக தோற்றுவிட்டோம்" என்று கூறுகிறார். " தெற்கு உலகில்
[உக்ரைன் தொடர்பாக] நாங்கள் மேற்கொண்ட
அனைத்துச் செயல்களும் தோல்வி அடைந்து விட்டன
--- சட்டங்கள், உலக ஒழுங்கமைவு என்னும் எதுவும் இனிமேல் நாங்கள் சொல்வதைக் கேட்கப் போவதில்லை."
வளரும் உலக நாடுகள் நீண்ட காலமாகப் பாலஸ்தீனத்தை ஆதரித்து வருகின்றன---
அம்மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவு, இஸ்ரேலின் மிக முக்கியமான ஆதரவாளராக
இருக்கும் அமெரிக்காவின் உலக ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு என்பதன் அடிப்படையிலும் அவை
பாலஸ்தீன மக்களுக்கு தங்களின் ஆதரவை வழங்குகின்றன.
"அமெரிக்க வெளியுறவுத்
துறையின் அதிகாரிகள் சிலர்,
பிடெனின் நிர்வாகம், இஸ்ரேலுக்கு வழங்கும்
தனது பெருத்த ஆதரவால், உலகின் தெற்கு நாடுகளிடமிருந்து அந்நியப்பட்டுள்ளது என்பதை அங்கீகரிக்கத்
தவறிவிட்டது என்று தனிப்பட்டவகையில் கருதுகின்றனர்" என்று "பைனான்சியல்
டைம்ஸ் ' --இன் ஆய்வு ஒன்று 17, அக்டோபர் '2023 ல் - குறிப்பிடுகிறது.
மேலும், இயந்திரத் தொழில்
துறையை உக்ரைனிலும், மேற்கு நாடுகளிலும் குறைக்கும் நிகழ்வுப்போக்கு
, மேற்கு ஏகாதிபத்தியம் தனது
பல்வேறு துணைக்கோள் நாடுகளுக்கும் எவ்வாறு ஒரே சமயத்தில் ஆயுதங்களை வழங்க முடியும்
என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உக்ரைனின் அரசியல் அறிவியலாளர் ருஸ்லான் போர்ட்னிக், இந்த காரணத்தால், மேற்கு ஏகாதிபத்தியம் வேறு
விஷயங்களில் தனது கவனத்தைச் செலுத்துவது உக்ரைனுக்கு ஆபத்தானது என்று கூறுகிறார்.
" உலகின் பிற நிகழ்வுகள் உக்ரைன் மீது மேற்கு நாடுகளுக்கு உள்ள கவனத்தைக்
குறைக்கும், அதன் போர் நடவடிக்கைக்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் நிதி
வழங்குவதையும் குறைக்கும். இத்துடன், தடையின்றி இஸ்ரேல் ஆயுதங்கள் கிடைப்பதில்,
ஊகத்தின் அடிப்படையில் கூட, சிக்கல் வரும்; மேலும், அவற்றின் செயல் திறன்
போர்க்களத்தில் மட்டுமல்லாது, அரை-கெரில்லா அமைப்புகள்
போர் புரியும் போது கூட, இன்றைய நிலையில் சந்தேகத்துக்குரியதே"
என்று அவர் எச்சரிக்கிறார்.
சென்ற வருடம்
ஸிழேன்ஸ்கி, இஸ்ரேலிடம்,எல்லாப் பருவ காலங்களிலும் வான் வழி செலுத்தப்படும் எதிரிகளின்
ஏவுகணைகளையும் பீரங்கிக் குண்டுகளையும் அழிக்கக் கூடிய இஸ்ரேலால் தயாரிக்கப்பட்ட 'Iron Dome' என்னும் ஏவுகணைக்காகக் கெஞ்சினார்; ஆனால் அவரது வேண்டுகோள்
புறக்கணிக்கப்பட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் ஸிழேன்ஸ்கி, இஸ்ரேல் பிரதமரிடம்
இந்த ஆயுதங்கள் கிடைத்தால் ஹசிடிக் பிரிவைச் சார்ந்த யூத
யாத்ரீகர்களை மேன்மையான முறையில் பாதுகாக்க
முடியும் என்று குறிப்பிட்டார்.
உக்ரைனின் மற்றொரு அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநரான ஒலெக்ஸாண்ட்ர் ரையாபோக்கோன் , உக்ரைனின் மீது ராணுவரீதியான கவனத்தில் ஏற்படும் மாற்றத்தைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளின் நிதி உதவியிலும் மாற்றம் ஏற்படும் என்று எச்சரிக்கிறார். ‘நீண்ட காலமாக இஸ்ரேல்-- அரபு நாடுகளுக்கு இடையில் நடக்கும் மோதல் சில நாட்களிலேயே உக்ரைனை உலக ஊடகத்தின் முதல் பக்கங்களின் கவனிப்பிலிருந்து முழுமையாக நீக்கியது. ஊடகங்களின் மறதியைத் தொடர்ந்து நிதி மற்றும் ராணுவ உறவுகளின் மறதி ஏற்படும்’ என்கிறார். ஐரோப்பாவின் ராஜ தந்திரத்தில் வல்லவரான, ஜோசெப் போர்ரெல், உக்ரைனுக்கு அமெரிக்க நிதி உதவி கிடைக்குமா என்பது சந்தேகத்தில் இருக்கும்போது, ஐரோப்பா மட்டும் அதைத் தானே செய்ய முடியாது” என்று குறிப்பிடுகிறார்.
இப்போது, மேற்கு நாடுகள், உக்ரைனை அதற்கான ஆயுத உற்பத்தியை
அதிகரிக்க வற்புறுத்துகின்றன. ஆனால், ஏறக்குறைய 30 ஆண்டுகளாக --- சோவியத் ரஷ்யா
சிதறுண்டு, உக்ரைன் தனிநாடாக ஆனதிலிருந்து, சர்வதேச நாணய நிதியம்
மற்றும் மேற்கு நாடுகளின் நிதி அமைப்புகளின் கட்டளைப்படி சிக்கன
நடவடிக்கை என்ற பெயரில் தொழிற்சாலைகளைக்
குறைத்திருக்கும் உக்ரைனுக்கு இது மிகக் கடினமான ஒன்றாகும்; தற்போது நடக்கும்
உக்ரைன்-ரசியப் போருக்காக, திறமை மிக்க ஏராளமான தொழிலாளர்களும் பொறியியல்
வல்லுனர்களும் ராணுவத்தில் கட்டாயமாகச்
சேர்க்கப்பட்ட நிலையில், தொழிற்சாலைகளில் பணி புரியும் திறன்மிக்க தொழிலாளர்களுக்கும்
பொறியாளர்களுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இலட்சக்கணக்கான
உக்ரைனியப் பெண்கள் பிற
நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டார்கள்; திறமை மிக்க ஏராளமான ஆண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் முக்கியமான உள்கட்டுமான அமைப்பைப் பராமரிக்கக் கூடப் போதுமான மனித வளம் உக்ரைனில்
இல்லை என்பதே உண்மையான நிலைமையாகும்.
2014--ஆம் ஆண்டுக்கு முன்
உக்ரைனின் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்த ஒரேயொரு பிரதேசமான லூகன்ஸ்க் இப்போது ரசியாவின் ஒரு
பகுதியாக மாறி விட்டது. 2014--ஆம் ஆண்டில், கீவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து லூகன்ஸ்க்கின் மக்கள் கிளர்ச்சி
செய்தனர். ஆட்சிக் கவிழ்ப்பிற்கு எதிராக இருந்த லூகன்ஸ்க் நிர்வாகம் வெடிமருந்துத்
தொழிற்சாலையைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து, அதனைத் தேச
உடைமையக்கியது. அப்போதிருந்து, உக்ரைன் பல வருடங்களாக டோன்பாஸ் மீது இடைவிடாது போர் தொடர்ந்து கொண்டிருந்த
போதும், தனக்கென சொந்தமான வெடிமருந்து உற்பத்தியை ஏற்படுத்தவில்லை. [டோன்பாஸ்பிரதேசம் என்பது உக்ரைனின் முந்தைய பகுதிகளான லூகன்ஸ்க் மற்றும் டோனெட்ஸ்க் ஆகியவற்றை
உள்ளடக்கியது.]
உக்ரைனிய வல்லுனரான
விட்டாலி ஷைட்சேவ், ‘உக்ரைன் ஆயுத உற்பத்திக்கான தொழிலாளர்களை மட்டுமல்லாது ஆயுத
உற்பத்திக்கான சிறந்த திறன் வாய்ந்த தொழிலாளர்களையும்
குறைவாகவே கொண்டுள்ளது’ என்கிறார்.
‘உண்மையில் நாம் நமது தொழிற்பள்ளிகளை இழந்துவிட்டோம். மேலும், இரும்பு உருக்கு
ஆலைகளையும், ராணுவத்துக்கு தேவையான சுருட்டப்படக்கூடிய எஃகு
இரும்பு உற்பத்தியையும் நாம் மீண்டும் உருவாக்க வேண்டும்’ என்கிறார்.
உக்ரைனின் ஆயுத
ஏற்றுமதி அமைப்பான 'உக்ர்ஸ்பேட்சேக்ஸ்போர்ட்
'டின் முன்னாள் தலைவரான செர்ஹி
போண்டார்சுக்கும் உக்ரைனில் ஆயுதத் தயாரிப்புக்கான
வாய்ப்புகளைப் பற்றிச் சந்தேகப்படுகிறார். "தளவாட உற்பத்திக்கான உட்கூறுகளை நாம்
எவ்வாறு ஒழுங்கமைக்கப் போகிறோம்? கவசம், வெடி மருந்து, முக்கியமான ரசாயனப் பொருட்கள், மற்ற மூலப் பொருட்கள்
ஆகிய எதுவுமே உக்ரைனில்
தயாரிக்கப்படுவதில்லை; அதனால் நாம் அவற்றை இறக்குமதி செய்தாக வேண்டும் ---- நமது எல்லைகள், மற்றும் அவற்றை கொண்டு வருவதற்கான
வழிகளில் ரசிய ராணுவத்தின்
தாக்குதல்கள் ஆகியவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார். மேலும், “இந்த ஏற்பாடுகளில் உண்டாகும் வேறு
பிரச்சனைகளோடு தடையின்றி மின்சாரம்
கிடைக்குமா என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று அவர் எச்சரிக்கிறார்.
வேறு வார்த்தைகளில்
சொல்வதென்றால், மேற்கு ஏகாதிபத்தியம் தனது துணைக்கோள் நாடான உக்ரைனை அதற்குத்
தேவையான ஆயுதங்களை உற்பத்தி செய்து கொள்வதில்
தன்னிறைவு அடையச் செய்யவோ, அதற்குத் தேவையான அளவு ஆயுதங்களை வழங்கவோ இல்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், தன்னுடைய பல
வாடிக்கையாளர்களுக்கும் அதனால் ஒரே நேரத்தில் தடையில்லாமல் ஆயுதங்களைத்
தர முடியவில்லை.
உக்ரைனின் அரசியல்
விஞ்ஞானியான கோஸ்ட் போண்டரென்கோ
சமீபத்தில் ஒரு பேட்டியில் இதைப் பற்றிக் குறிப்பிடும்போது, மேற்கு நாடுகளைப்
பெருமளவில் சார்ந்திருக்கும் கீவ் அரசு புறநிலைக்
காரணங்களுக்காகத் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார். பனிப் போரில்
வெற்றி பெற்றதாகக் கருதப்பட்ட அமெரிக்காவின் 'சர்வ வல்லமை' காலம் முடிவு பெற்று
வருவதாக அவர் நம்புகிறார்.
"இந்தச் சகாப்தம் முடிந்து
விட்டது. புதியதாக தோன்றியுள்ள இந்த உலகக் குழப்பங்களுக்கு மத்தியில் புதிய உலகைக்
கட்டமைப்பதற்கான அடிப்படைகளைப் பற்றிச் சிந்திப்பது இப்பொழுது அவசியமாக உள்ளது. இனிமேல்
அமெரிக்கா இந்த மொத்த உலகுக்கான அதிகாரம் கொண்டதல்ல.
உண்மையில், இன்று, உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள்
அமெரிக்காவுக்கு எதிராக
நிற்கின்றன" என்கிறார். மேலும், போண்டரென்கோ, உக்ரைன் இப்போது "அமெரிக்காவுக்குக் கீழ்ப்படிந்துள்ள “சிறுபான்மை”
நாடுகளில் ஒன்றாக உள்ளது" என்று
கூறுகிறார்.
போண்டரென்கோவின்
கருத்துப்படி, தற்போதைய போர் முடிந்த உடன் உக்ரைன் மக்களின் முதல் கடமை, உக்ரைனின் " தற்போதுள்ள அரசு
அமைப்பை மாற்றுவதாகும்”; அது, புதிய -- நேர்மையான
அரசியல் அமைப்பை உருவாக்குவது; தற்போது உண்மையில்
நிலவக்கூடிய எல்லைகளைக் கொண்டு புதிய அரசை அமைப்பது; பொருளாதார ஆதிக்க
சக்திகளிடம் இருந்து அதிகாரத்தைப் பறிப்பது; அனைத்துக்கும் மேலாக, ஒரு புதிய---
இப்போதுள்ள ஆட்சியைப்போல மக்களிடமிருந்து தொலைவில் இல்லாத - உண்மையில் நேர்மையான அரசியலமைப்பை உருவாக்குவது
ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
மேற்கு நாடுகளின் மற்ற துணைக்கோள்
நாடுகள், அவற்றின் எதிர்கால வளர்ச்சிக்காக, இதைப் போலவே சிந்தித்துக்
கொண்டிருக்கின்றன. வாஷிங்டனில் உள்ள பிடெனின் நிர்வாக அமைப்பு இதைத் தெளிவாகப் புரிந்து
கொண்டிருக்கிறது; அதனால் அத்தகைய நிகழ்வுகள்
நடக்காமல் தடுப்பதற்காக ரத்தவெறி கொண்ட ராணுவக்
குறுக்கீடுகளையும் போர்களையும் நிச்சயமாக மீண்டும் துவங்கும்.
டிமிட்ரி கொவேல்விச்
- தமிழில்
கவிதா
(Monthly
Review ல் 30.10.2023 ல் வந்த கட்டுரை)
Comments
Post a Comment