கடந்த
ஜூலை 9 ஆம் தேதி காங்கிரசு
தலைமையிலான கர்நாடக அரசு கிக் தொழிலாளர்களுக்கான
மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூலை 2023 இல் அப்போது ஆட்சியிலிருந்த
காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்ட இயங்கு தளம் (Platform) அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் சட்டம்
(பதிவு மற்றும் நலன்) 2023 ஐ (The Rajasthan Platform
Based Gig Workers (Registration and Welfare) Act, 2023) போன்றே இதுவும்
அமைந்துள்ளது.
ஆன்லைன்
செயலியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்களான சொமோட்டோ, ஸ்விக்கி, பிக் பேஸ்கட் அமேசான்,
பிளிப்கார்ட், ஒலா, உபேர், ஸெப்டோ,
ப்ளின்கிட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான
சட்டமாகும் இது.
பாரம்பரிய
முறையில் முதலாளி தொழிலாளி உறவு என்ற அடிப்படையில்
இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களை
கிக் தொழிலாளர்கள் அல்லது பிளாட்பார்ம் தொழிலாளர்கள் என இது கூறுகின்றது.
கிக் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்கும் ஆன்லைன்
செயலி முதலாளிகள், தாம் உற்பத்தியாளர் அல்லது
சேவையை வழங்க கூடியவர் அல்ல என்று கூறித்
தம்மை வேலையளிப்பவர் என்ற நிலையிலிருந்து விலக்கிக்
கொள்கின்றது. ஆனால், சரக்கு உற்பத்தி அல்லது சேவை நிறுவன முதலாளிகள்
எந்த ஒரு கிக் தொழிலாளிக்கும்
தொடர்ந்து வேலை அளிப்பதில்லை. ஒரே
நாளில் கூட கிக் தொழிலாளர்கள்
இதுபோன்ற வெவ்வேறு முதலாளிகளிடமிருந்து பொருட்களைக் கொண்டு சென்று விநியோகம் செய்கின்றனர்.
வேலையின்மை
அதிகரித்து வரும் சூழலில் கிக் பொருளாதாரம் மட்டுமே
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வாழ்வாதாரத்தைத் தரக்கூடிய இடமாக தற்பொழுது உள்ளது. இந்திய அரசின் நிதி ஆயோக்கின் மதிப்பீடு
2030 ஆம் ஆண்டில் இந்தத் துறையில் மட்டும் 2 கோடியே 30 இலட்சம் தொழிலாளர்கள் பணிபுரிவர் எனக் கூறுகின்றது.
இந்த
நிலையில், புதியதாக கொண்டு வரப்பட்டிருக்கும் கிக் தொழிலாளர் சட்டங்களில்
வேலை நேரம், குறைந்தபட்ச ஊதியம், பணி நிலைமைகள் குறித்து
எந்த விதமான சட்ட வரையறைகளும் இல்லை.
தொழிலாளர்
சட்டம் என்பது இயல்பாக வேலையளிக்கும் முதலாளிக்கும் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கும்
இடையேயான உறவுகளைக் குறித்ததாகும் ஆனால் கிக் தொழிலாளர்கள் சட்டத்தில்
வேலையளிக்கும் முதலாளிக்கும் தொழிலாளர்களுக்குமான உறவுகள் குறித்து எதுவும் இல்லை. பிளாட்பாரம் (இயங்கு தளம்) முதலாளிகளை 'முதலாளிகள் என்று குறிப்பிடாமல் ஒருங்கிணைப்பாளர்கள்
(Aggregators) என சட்ட வரைவில் வரையறுக்கப்பட்டுள்ளது.
இங்கு
பிளாட்பார்ம் முதலாளிக்கும் கிக் தொழிலாளர்களுக்கும் இடையேயான உறவு
ஒப்பந்த உறவாக, சுதந்திரத் தொழிலாளர் உறவாகக் குறிக்கப்படுகின்றது. தங்களிடம் உள்ள தொழில் நுட்பத்தின்
மூலம் சுதந்திரமான தொழிலாளர்களை நுகர்வோருடன் இணைப்பதாகவும், இந்த சுதந்திர தொழிலாளர்கள்
அவர்களின் வேலைக்கு அவர்களே எஜமானர்கள் எனவும் ஒருங்கிணைப்பாளர்கள் எனத் தங்களை அறிவித்துக்
கொள்ளும் செயலி நிறுவன முதலாளிகள் கூறுகின்றனர்.
ஆனால்,
உண்மையில் இவர்கள் தான் கிக் தொழிலாளர்களுக்கான
வேலையளிக்கும் முதலாளிகள், இவர்கள் தான் ஊதியம், பணி
நேரம், பணி நிலைமைகள் ஆகியவற்றைத்
தீர்மானிக்கின்றார்கள்.
இந்திய
அரசு கிக் தொழிலாளர்களை சுய
தொழில் செய்யும் அமைப்புசாராத் தொழிலாளர்களைப் போன்று வகைப்படுத்தி புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்பில் ஒன்றான சமூகப் பாதுகாப்புச் சட்டத்தில் (Social Security
Act) மட்டும் சில விதிகளை வகுத்துள்ளது.
மற்ற தொழிலாளர் சட்டங்களான தொழில் உறவு சட்டம், ஊதியச்
சட்டம், பணிப் பாதுகாப்பு சட்டம் போன்றவற்றில் இவர்களைப் பற்றி எதுவும் இல்லை. ராஜஸ்தான் அரசும், கர்நாடக அரசும் இந்த அடிப்படையில் தான்
பணி வழங்கும் செயலி நிறுவனங்களை வேலையளிப்பவர் என்று வரையறுக்காமல் ஒருங்கிணைப்பாளர் என்று வரையறுக்கின்றன.
தொழில்
உறவு மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு குறித்து சட்ட வரையறைகள் இல்லாமல்
வாழ்வாதாரத்திற்கான ஊதியம், வேலை நேரம், பணிப்
பாதுகாப்பு, கூட்டு பேர உரிமை ஆகியவற்றைப்
பெற முடியாது. இதுவரை கிக் தொழிலாளர்களுக்கு வேலை
நேரம் குறித்த வரையறையோ, குறைந்தபட்ச ஊதியம் குறித்த வரையறையோ கிடையாது. மோசமான இந்தியச் சாலைகளில் வாகனங்களை ஓட்டுவதன் மூலமே தன்னுடைய பணியைச் செய்ய முடியும் என்ற நிலையில் சாலையில்
ஏற்படும் விபத்துகளுக்கான மருத்துவ செலவுகள், இழப்பீடுகள் குறித்து எந்தத் திட்டமும் சட்டங்களில் இல்லை.
கர்நாடகா,
இராஜஸ்தான் மாநில அரசுகளின் சட்டங்களில் மேலோட்டமாக நலத்திட்டநிதி இருந்தாலும், முக்கிய திட்டங்களான பணிக் கொடை, வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம், மருத்துவ விடுப்புகள் போன்றவை இவர்களுக்குக் கிடையாது. கர்நாடக அரசின் சட்ட முன்வரைவில் பிரிவு
16, ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டியது பற்றியும், வாராந்திர அடிப்படையில் ஊதியம் வழங்குவது பற்றியும் பேசுகின்றதே தவிர, வாழ்வாதாரத்திற்கான ஊதியம் வழங்க வேண்டியது குறித்து எதுவும் கூறவில்லை.
அமைப்பு
சாராத் தொழிலாளர்களுக்கு எவ்விதச் சட்டப் பாதுகாப்பும், பலன்களும் இல்லாத சூழலில் கிக் தொழிலாளர்களையும் அமைப்பு
சாராத் தொழிலாளர்கள் போன்ற வகைப் படுத்தலானது தொழிலாளர்களுக்கு எவ்வித நன்மைகளையும் அளிக்கப் போவதில்லை. எடுத்துக்காட்டாக அமைப்புசாராத் துறைகளில் ஒன்றான கட்டுமானத் துறையில் மொத்தமுள்ள 7 கோடி தொழிலாளர்களில் பதிவு
செய்யப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவே உள்ளது என மத்திய மாநில
அரசுகளே கூறுகின்றன. கட்டுமானத் தொழிலாளர்களுக்கான செஸ் நிதி. ஒட்டுமொத்தமாக,
கடந்த 25 ஆண்டுகளில் 78,521 கோடி ரூபாய் திரட்டப்பட்டிருக்கிறது.
மிகவும் குறைவான அளவிலேயே நிதி திரட்டப்பட்டிருந்தாலும், இதில் 45 சதம் மட்டுமே தொழிலாளர்களுக்காகச்
செலவிடப்பட்டுள்ளது.
43,121 கோடி ரூபாய் பயன்படுத்தப் படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதிகார வர்க்கம் இந்த நிதியை அனைத்துக்
கட்டுமானத் தொழிலாளர்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பயன்படுத்த முன்முயற்சிகளை எடுப்பதில்லை. இத்தகைய அலட்சியப் போக்கே கிக் துறையிலும் வெளிப்
படும் என்பது கண்கூடு.
சொமோட்டோ
நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளி சரவணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், ஒரு கிலோ மீட்டருக்கு
6 ரூபாய் எனக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது,
இந்தக் கட்டணம் பெட்ரோல், வாகனப் பாரமரிப்பு செலவுகள் போன்றவற்றையும் ஈடுகட்டி எங்களுக்கான ஊதியத்தை அளிக்கும் வகையில் இல்லை எனவும், இதனை உயர்த்த வேண்டும்
எனவும் கூறுகின்றார். மேலும், சாலைகளில் ஏற்படும் விபத்துகளுக்கு இன்சூரன்ஸ் கொடுக்கப்பட்டாலும், அவற்றைப் பெறுவதில் நடைமுறைச் சிக்கல்கள் ஏராளமாக உள்ளதாகவும், தனக்கு வேலையளிக்க கூடிய சொமோட்டோ நிறுவனத்தைச் சார்ந்த பொறுப்பான அதிகாரிகள் அல்லது அலுவலகம் எதுவும் இங்கு இல்லை எனவும் கூறுகின்றார்.
ஸ்விக்கி
நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளியான சுரேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகையில், வாடிக்கையாளர்கள் உரிய பணம் கொடுக்கவில்லை
என்றாலோ அல்லது ஆர்டர் செய்தவற்றை வாங்க மறுத்தாலோ அதற்கான தொகையைத் தொழிலாளர்களிடமிருந்து கழித்துக் கொள்வதாகவும், மழை, வெயில் எனப்
பாராமல் வண்டி ஓட்டினாலும் கூட, விபத்துக்களுக்கான சிகிச்சைகள் முழுமையாகக்
கிடைப்பதில்லை எனவும், முதலில் தொழிலாளர்கள் பணம் செலவழித்துச் சிகிச்சை
பார்த்துக் கொண்டு பின்னர் அதனைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறுகிறார், அப்படியே மருத்துவம் பார்த்துக் கொண்டாலும் கூட, செலவு செய்த
தொகை முழுமையாகக் கிடைப்பதில்லை எனவும், அதுவும் இழுத்தடித்து கொடுக்கிறார்கள் எனவும் கூறுகிறார்.
மேலும்,
கிக் தொழிலாளர்களை எந்த நேரத்திலும் பணி
நீக்கம் செய்வதற்கு முதலாளிகளுக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களை செயலிக்குள் உள்ளே நுழையாதவாறு தடுத்து வேலையிலிருந்து அப்புறப் படுத்த அனைத்து அதிகாரங்களும் முதலாளிக்கு வழங்கபட்டுள்ளது. இத்தகைய நியாயமற்ற நடவடிக்கைகளில் இருந்து தொழிலாளர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் எதுவும் இந்தச் சட்டத்தில் இல்லை. அதே போன்று, கிக்
தொழிலாளர்கள் கூட்டு பேர உரிமை அடிப்படையில்
விலைவாசி உயர்வின் காரணமாகக் குறைந்து வரும் உண்மை ஊதியத்தை மீண்டும் பழைய நிலைமைக்கே கொண்டு
வருவதற்கான எந்த வாய்ப்புகளும் இல்லாமல் உள்ளது.
புதிய
தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைக்கு வருவதற்கு தாமதம் ஆகி வருவதால் கிக்
துறை முதலாளிகளுக்கு தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கான சட்ட வடிவங்களை உடனடியாக
ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த சட்டங்கள் கொண்டு
வரப்பட்டுள்ளதாகவும், புதிய தொழிலாளர் சட்டங்கள் முழுவதுமாக நடைமுறைக்கு வந்தவுடன் இவை காலவாதியாகி விடும்
எனவும் கூறப்படுகின்றது.
பாஜக
அரசு புதிய தொழிலாளர் சட்டங்களை எந்தவித விவாதமும் இல்லாமல் ஜனநாயக மரபுகளை மீறி நாடாளுமன்றத்தில் 2020 இல் நிறைவேற்றியது.
பாஜக அரசின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கைக் கடுமையாக எதிர்க்காமல் மற்ற முதலாளித்துவக் கட்சிகள்
மவுனம் காத்து தம்முடைய வர்க்கச் சார்பை அப்பட்டமாக காட்டிக் கொண்டன. ஆனால், தொழிலாளர்களின் நலனுக்காக இயங்குவதாக சொல்லிக் கொள்ளும் சீர்த்திருத்தவாத இடதுசாரி கட்சிகளான சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் வெறும் முனகல்களோடு தம்முடைய கடமையை நிறைவு செய்து கொண்டு, முதலாளித்துவ வர்க்கத்தின் மற்றொரு பிரிவான காங்கிரசு மற்றும் இதர பிராந்திய கட்சிகளுடன்
தேர்தல் உடன்பாடு செய்து கொண்டு தேர்தலை மையப்படுத்தியே தம்முடைய வேலைத் திட்டத்தை வகுத்துக் கொண்டுள்ளன.
பாஜகவினால் கொண்டு வரப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான விதிமுறைகளை வகுக்கும் வேலைகள் மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்டு, பெரும்பான்மையான மாநில அரசுகள் அதற்கான வேலைகளை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளன. இந்த வேலைகளைக் கனகச்சிதமாக முன்னெடுப்பதில் பாஜக, காங்கிரசு, சிபிஎம், திமுக என அனைத்துக் கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதை தெளிவாகக் காட்டிக் கொள்கின்றன.
தமிழகத்தில்
திமுக அரசு புதிய தொழிலாளர்
சட்டங்களுக்கான விதிமுறைகளில் ஒரு நாளின் வேலை
நேரத்தை 12 மணி நேரம் வரை
இருக்கலாம் என வரையறை செய்துள்ளது.
இடைக் கட்டமாக, இந்த 12 மணி நேர வேலை
சட்டத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வந்து ஆளும் முதலாளி வர்க்கத்திற்குத் தம்முடைய விசுவாசத்தை வெளிப்படுத்த பழைய தொழிலாளர் சட்டங்களில்
திருத்தங்கள் செய்யும் முயற்சியை திமுக அரசு முன்னெடுத்தது. தொழிலாளர்களின்
கடும் எதிர்ப்பையடுத்து அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டது. ஆனால், புதிய தொழிலாளர் சட்டங்களில் இந்த விதிமுறைகள் அப்படியே
நீடிக்கின்றன.
அதே
போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரசு கட்சி கடந்த ஆண்டு ஆட்சியிலிருந்த பொழுது கிக் துறை சார்ந்த
முதலாளிகளின் நலனைக் காக்கும் வகையில் கிக் தொழிலாளர்களுக்கு எதிரான
சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. அதனைப் பின்பற்றி கர்நாடக மாநிலத்தில் தற்போதைய காங்கிரசு தலைமையிலான அரசு அதற்கான மசோதாவை
அறிமுகப்படுத்தியுள்ளது.
அனைவருக்கும்
வேலையையும், வாழ்வாதாரத்திற்கான ஊதியத்தையும் உத்திரவாதப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இந்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இல்லை. சிறு வருவாயை மட்டுமே
தொழிலாளர்களுக்குத் தரும் கிக் துறையிலும் கூட
தொழிலாளர்களின் நலன் மீதும் அவர்களின்
பாதுகாப்பு மீதும் எவ்வித அக்கறையுமற்று கிக் துறை முதலாளிகளை
அனைத்து பொறுப்புகளிலிருந்து விலக்கி அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த அரசுகள் சட்டங்களை
வடிவமைத்து வருகின்றன.
இதில்
எந்த கட்சிக்கும் வேறுபாடு இல்லை என்பதைத் தொழிலாளர்களும், இளைஞர்களும் உணர்ந்து வருகின்றனர். பாசிசத்தை பாஜகவோடு மட்டும் சுருக்கிக் கொண்ட சீர்த்திருத்தவாத ஜனநாயக சக்திகளும், இடதுசாரிகளும், முதலாளித்துவத்தின் கொள்ளை இலாபவெறிக்காக தொழிலாளர்கள் மீது கடும் தாக்குதலைத்
தொடுத்து வரும் காங்கிரசு கட்சியின் தலைமையிலான மாநில அரசுகளின் செயல்பாட்டைக் கண்டிக்கத் துணியவில்லை. ஏனெனில் இவர்கள், பாசிசம் முதலாளித்துவ பொருளுற்பத்தியில் ஏற்பட்ட நெருக்கடியால் தோன்றுவது என்னும் பொருள்முதல்வாதப் பார்வையைக் கைவிட்டுவிட்டு, பாசிசத்தை வெறும் பார்ப்பனியப் பாசிசமாக கருத்துமுதல்வாதப் பார்வையில் அணுகி வருகின்றனர்.
பிஜேபி
மாநில அரசுகள் கூட செய்யாத முன்னெடுப்புகளை
காங்கிரசு கட்சி ஆளும் மாநில அரசுகள் விரைந்து முன்னெடுக்கின்றன. பாசிச எதிர்ப்பு என்ற போர்வையில் ஆளும்
வர்க்கத்தின் மற்றொரு பிரிவான காங்கிரசு மற்றும் இதர பிராந்திய கட்சிகளுக்கு
வால் பிடித்துக் கொண்டிருக்கும் சீர்த்திருத்தவாத இடதுசாரிகளின் மீது தொழிலாளர்கள் நம்பிக்கையிழந்து
தன்னெழுச்சிப் போராட்டங்களை முன்னெடுக்கின்றனர்.
இத்தகைய
சூழலில், பாசிசத்தையும், அதற்கு அடிப்படையாக உள்ள முதலாளித்துவச் சுரண்டலையும்
வீழ்த்துவதற்கான வலுவான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டமைப்பதும், அந்த கட்சியின் தலைமையில்
தொழிலாளி வர்க்க அணிதிரட்டலுமே உண்மையான இடதுசாரிகளின் முன்னால் நிற்கும் கடமையாக உள்ளது.
குமணன்
Comments
Post a Comment