Skip to main content

காசாவின் மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து ஜெர்மனியில் மாணவர்களின் போராட்டங்கள்!

 

காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் கொலம்பியா, ஹார்வார்ட், ஸ்தான்போர்ட், கலிபோர்னியா, நியூயார்க், ஆகிய பல்கலைக்கழக மாணவர்களும், இங்கிலாந்தில் மான்செஸ்டர், இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும், பிரான்சில் பாரிஸ்-சோர்போனே பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். அதே போல ஜெர்மனியிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஜெர்மனியில் நடந்த மாணவர்களின் போராட்டம் பற்றி இங்கு பார்ப்போம்.

“35 ஆயிரம் மாணவர்களை கொண்ட----- இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறைகள் என 150 துறைகள், உலகின் தரம் நிறைந்த பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் பெர்லினின் ஃபிரீ யுனிவர்சிட்டி (Freie Universität Berlin) இன்று புதுவிதமான காட்சியை கொண்டுள்ளது---- "கல்வி நிலையங்களில் மாணவர்களின் சுதந்திரம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது; இந்த அச்சுறுத்தல் காசாவின் மீதான இஸ்ரேலின் போர் ஆரம்பித்ததில் இருந்து இங்கு உருவாகியுள்ளது" என்று ஜெர்மனியின் பெர்லின் ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவியான செசிலியா கூறுகிறார். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாசின் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் தொடுத்த போர் நடவடிக்கைகளுக்கு ஒரு தலைப் பட்சமான ஆதரவாக அந்தப் பல்கலைக் கழகம் கருத்து வெளியிட்டது; பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த மாணவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிப்பதை அனுபவமாக கண்டனர். ஆகையால், அவரும் மற்றும் பல மாணவர்களும் பாலஸ்தீனத்திற்கு தங்களது ஒருமித்த ஆதரவை தெரிவிக்கவும் காசாவின் மீதான இஸ்ரேலின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் ஒரு கமிட்டி அமைத்தனர்.

ஜெர்மனியில் இருந்த பல பல்கலைக்கழகங்களிலும், செசிலியா போன்ற ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஏராளமான ஆர்ப்பாட்டங்களையும் விளக்கக் கூட்டங்களையும் மற்றும் பல்கலைக்கழகத்துக்கு உள்ளேயும் பல்கலைக்கழக வளாகத்திலும் உள்ளிருப்பு போராட்டங்களையும் நடத்தினார்கள். மேலும், அவர்கள் இஸ்ரேலிய அதிகாரிகள் பல்கலைக் கழக மாணவர்களுக்கு விளக்க உரைகள் நடத்துவதையும் எதிர்த்தனர்; குறிப்பாக 2024 -ஆம் ஆண்டு ஜனவரியில் கோலோன் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த ஜெர்மனிக்கான இஸ்ரேலிய தூதர் ரோன் ப்ரோசோர், அதே ஆண்டு பிப்ரவரியில் ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் பேசிய இஸ்ரேலிய நீதிபதி டாஃப்னே பாரக்-- இரெஸ் ஆகியோருக்கு மாணவர்கள் தங்களுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

ஆனால் மாணவர்களும் பல்கலைக்கழக பணியாளர்களும், தங்களது கருத்துகளைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமையை, மக்களுக்கு விரோதமான ஊடகங்களின் செய்திகள், சட்ட ரீதியிலான அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு பல்கலைக்கழகங்களும் அரசியல்வாதிகளும் அடக்குவதாகவும், அமைதியான முறையில் போராடுபவர்கள் மீது காவல்துறையின் வன்முறையை ஏவி அடக்க முயல்வதாகவும் தெரிவிக்கின்றனர். 

பணியாளர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் காசாவிலும் பாலஸ்தீனத்திலும் இஸ்ரேலால் நடத்தப்படும் படுகொலைகளையும் அப்பாவி மக்களும் பெண்களும் குழந்தைகளும் குண்டுகளால் சிதைத்தெறியப்படும் கொடுமைகளையும் தங்கள் மக்களுக்கு உணர்த்தி பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் எழுப்புவது தீவிரமாக அடக்கப்படுகிறது என்கிறார் செசிலியா.

ஆக்கிரமித்தலும் முகாமிடுதலும்:

காசாவின் மீதான இஸ்ரேலின் போருக்கு எதிராக அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்களும், ஆசிரியர்களும் பணியாளர்களும் போராட்டங்களைத் தொடங்கினர். அவர்களைப் பின்பற்றி ஜெர்மனியின் மாணவர்களும் ஆசிரியர்களும் பணியாளர்களும், பெர்லின், ம்யூனிச், கலோன் மற்றும் பிற நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் மைதானங்களில் கூடாரம் இட்டு போராட்ட முகாம்களை அமைத்தனர். இந்தப் போராட்டங்களின் அமைப்பாளர்கள் ஜெர்மனிய பல்கலைக்கழகங்களை காசாவில் போர் நிறுத்தத்திற்கு ஆதரவு தரவும், கல்வி மற்றும் கலாச்சார ரீதியில் இஸ்ரேலை ஒதுக்கவும், மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டவும், இவற்றோடு ஜெர்மனிய காலனிய வரலாற்றை உணர்த்தவும் அழைப்பு விடுத்தனர். 

சில போராட்டங்கள் அமைதியாக தொடர்ந்த போதும் வேறு சில போராட்டங்கள் காவல்துறையால் சிதறடிக்கப்பட்டன; இவை பொதுமக்கள் மத்தியில், ஜெர்மனியில் மாணவர்கள் தங்களது பேச்சுரிமை மற்றும் போராட்டங்களுக்காக அரசாங்கம் வரையறுத்த உரிமைகளின் எல்லையை மீறிவிட்டார்களா அல்லது போருக்கு எதிரான செயல்பாடுகளை அடக்க அவர்களின் உரிமைகளை அதிகாரிகள் அடக்கி ஒழிக்கிறார்களா என்னும் விவாதங்களை உருவாக்கியது.

22.5.2024-இல் மாணவர்கள் ஜெர்மனியின் ம்போல்ட் பல்கலைக் கழகத்தின் சமூக விஞ்ஞானத் துறையை ஆக்கிரமித்தனர். அவர்கள் 'ஜபாலியா இன்ஸ்டியூட்' என்னும் காசாவின் அகதிகள் முகாமின் படம் வரையப்பட்ட பதாகையைத் தொங்க விட்டனர். மேலும் அந்தத் துறையின் நூலகத்திற்கு டிசம்பர் 2023-இல் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் மரணமடைந்த பாலஸ்தீன கவிஞர் ரிஃபாத் அலாரிர் அவர்களின் பெயரைச் சூட்டினார்கள். மேலும் முக்கிய வாயிலை தடைகள் கொண்டு அடைத்தனர்; அதோடு "பொதுமக்களை கொல்வது என்பது தற்காப்பு அல்ல" என்றும் "எதிர்ப்பது சட்டபூர்வமானது" என்றும் முழக்கங்களை சுவர்களில் எழுதினார்கள். 

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் மறுநாள் மாலை வரைக்கும் முகாம் அமைத்து போராடுவதை அனுமதித்து, அங்கு இருந்த அமைப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் 23.5.2024-இல், விஞ்ஞான துறையின் சோசியல் டெமாக்ரடிக் (SPD) செனட்டர் இனா சைபோரா மற்றும் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் (CDU) மேயரான கை வெக்னர் ஆகியவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டு காவல்துறையைக் கொண்டு அவர்களை வெளியேற்ற கட்டளை இட வலியுறுத்தினார்கள் என பல்கலைக்கழக தலைவர் ஜூலியா வோன் ப்ளூமெண்தால் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

150-க்கும் அதிகமானவர்களை மைதானத்தில் இருந்து வெளியேற்றினர்; மேலும் 25 பேரை சட்டத்துக்கு விரோதமான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு மாணவர் அல் ஜஷீரா- வுக்கு அளித்த பேட்டியில் போலீஸ் அவரது தலையில் மீண்டும் மீண்டும் குத்தியதாகவும் உதைத்ததாகவும் ஏராளமான உள் காயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் கூறினார்; இந்தப் போராட்டத்தை வீடியோ கேமராவில் பதிவு செய்து கொண்டிருந்த 'பெர்லினர் ஷைத்துங்' என்னும் பத்திரிக்கையின் வீடியோ இயக்குனரான இக்னசியோ ரோசாஷ்லாண்டா என்பவர், பத்திரிக்கையாளர் என அறிந்த பின்பும் கூட போலீஸ் அதிகாரி ஒருவரால் தாக்கப்பட்டதோடு, பல மணி நேரங்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைக்காதபடி மறுக்கப்பட்டு இருந்தார்.

"நமது பல்கலைக்கழகங்கள் அறிவு விரிவாக்கத்திற்கும் நுணுக்கமான விவாதங்களுக்குமான இடங்களாகும். அவை யூத எதிர்ப்புக்கும் பயங்கரவாதிகளை ஆதரிப்பது போன்ற செயலுக்குமான இடங்கள் அல்ல." என்று போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னால் வெக்னர் ட்விட்டரில் பதிவிட்டு ள்ளார்.

'7.5.2024 பெர்லினின் ஃப்ரீ பல்கலைக்கழக வளாகத்தில் எந்த விதமான பேச்சு வார்த்தையும் நடத்தாமல், முகாமிடப்பட்ட சில மணி நேரத்திலேயே போலீசாரால் முகாம்கள் கலைக்கப்பட்டன' என்று போராட்டக்காரர்கள் கூறுகிறார்கள். கலகம் செய்யாமல் அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்தவர்களை அதிகாரிகள் முஷ்டியால் குத்தியும் கழுத்தை நெரித்து மூச்சுத்திணற வைத்தும் உதைத்தும் தாக்கினார்கள்’ என அல் ஜஷீரா பத்திரிகை கூறுகிறது. மேலும் 79 பேரை போலீசார் கைது செய்தார்கள். 

ஃப்ரீ பல்கலைக் கழகத்தில், சட்டப்பூர்வமான முறையில் அமைதியாகப் பேச்சு வார்த்தை நடத்துவதைப் புறக்கணித்து, மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதற்கு எதிராக 300 க்கும் அதிகமான பேராசிரியர்கள் கையெழுத்து இயக்கத்தின் மூலம் வெளிப்படையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

'பெர்லின் பொருளாதாரம் மற்றும் சட்டக் கல்லூரியின்' பேராசிரியரான கிளிமெண்ஸ் ஆர்ஸ்ட், மாணவர்களின் அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமையை வன்முறையுடன் சிதைத்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறார். மேலும் அவர் ஃப்ரீ பல்கலைக்கழக வளாகத்தில் முகாம்களை அகற்ற சட்ட ரீதியாக எந்தவிதமான நியாயமும் இல்லை என்றும் எச்சரிக்கிறார்.

போருக்கு எதிரான போராட்டத்தில் யூத மாணவர்கள்

ஜெர்மனியின் யூத மாணவர் அமைப்பு' போன்ற மாணவர் அமைப்புகளும் 'இஸ்ரேலின் வெள்ளிக்கிழமைகள்' என்ற போராட்ட அமைப்பும், ஜெர்மனிய பல்கலைக்கழக முகாம்களில் போருக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டனர். 

காசாவில் இஸ்ரேல் நடத்தும் போருக்கு எதிரான யூத மாணவர்கள் ஜெர்மனியின் மாணவர் போராட்ட இயக்கங்களில் முன்னிலை வகிக்கிறார்கள் மேலும் அவர்கள் தாங்கள் நாட்டின் ஊடகங்களாலும் மற்றும் அவர்களுடைய பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தாலும் புறக்கணிக்கப்படுவதோடு யூத எதிர்ப்பாளர்களாகவும் தந்திரமான முறையில் உருவகப் படுத்தப்படுகிறார்கள்.

நவம்பர் 2023- இல் பெர்லினின் கலைகளுக்கான பல்கலைக்கழக (University of the Arts-UDK) மாணவியான லில்லி பல்கலைக்கழக மண்டபத்தில் மாணவர்களின் போருக்கு எதிரான சொற்பொழிவுகளையும் காசாவில் கொல்லப்பட்ட பாலஸ்தீனியர்களின் பெயர்களையும் அறிவிக்கும் கூட்டத்தில் ஏராளமான மாணவர்களுடன் கலந்து கொண்டார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விசயம் அவர் ஒரு யூதர் என்பதாகும். எதிர்ப்பின் அடையாளமான கருப்பு உடை அணிந்து, கொடூரத்தின் அடையாளமான சிவப்புச் சாயத்தை மாணவர்கள் கைகளில் பூசிக் கொண்டிருந்தார்கள்.

'அல் ஜஷீரா' பத்திரிகையாளரிடம் லில்லி "பல்கலைக்கழகத்திற்கு, ஏராளமான யூத மாணவர்களும் இந்தப் போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்பது தெரியும்" என்று கூறுகிறார். ஆனால் அதைப் பல்கலைக்கழக நிர்வாகம் அங்கீகரிக்க மறுக்கிறது. அப்போதிருந்து லில்லி, நேர்மையற்று தவறான முறையில் 'யூதர்களுக்கு எதிரானவர்கள்' என்று ஊடகங்களால் சித்தரிக்கப்படும் பாலஸ்தீனிய மற்றும் அரேபிய மாணவர்களுடன் போருக்கு எதிரான ஏராளமான போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்

 நாட்டை இருளுக்குள் செலுத்தும் புதிய சட்டம்

மாணவர்கள்மேல் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்படுவது என்பது ஜெர்மனியில் மிக அரிதான ஒன்று. ஆனால் சென்ற ஆண்டிலிருந்து போருக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் துவங்கியதிலிருந்து மூத்த அரசியல்வாதிகள் மாணவர்களுக்கு எதிராக 'யூத எதிர்ப்பு' எனக் குறிப்பிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வலியுறுத்துகிறார்கள்.

பிப்ரவரி 2024- இல் இஸ்ரேலுக்கு ஆதரவான அமைப்புகளில் தீவிரமாக செயல்பட்ட ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் யூத இஸ்ரேலிய மாணவரான லஹாவ் ஷபிரா, பெர்லினில் மது கடை ஒன்றில் சக மாணவர் ஒருவரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இத்தகைய வேண்டுகோள்களும் நடவடிக்கைகளும் அதிகரிக்க ஆரம்பித்தன.

மார்ச் 2024 --இல் பெர்லின் மாகாணத்தில் ஆட்சியில் இருந்த கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன் (CDU), சோசியல் டெமாக்ரடிக் கட்சி (SPD) கூட்டணி, ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பல்கலைக்கழகங்களில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவதையும் வெளியேற்றப்படுவதையும் மீண்டும் கொண்டுவர ஒரு புதிய சட்ட வரைவை முன் வைத்தன. 1960--களின் பிற்பகுதியில் சமூக அரசியல் மாற்றங்களுக்காக தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த இடதுசாரிகளை அடக்குவதற்காகவும் குறிப்பாக அன்றைய மாணவர்கள் வியட்நாம் போருக்கு எதிராகவும், நாஜி அதிகாரிகளின் வாழ்க்கையை புனரமைப்பதற்காக மேற்கு ஜெர்மனி அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிராகவும் போராடிய போது அந்தப் போராட்டங்களை ஒடுக்க இத்தகைய சட்டம் முதன் முதலாக செயல்படுத்தப்பட்டது. பின்னர், 2021- இல் பெர்லினை ஆட்சி செய்த கூட்டணி அரசால் நீக்கப்பட்டது. பல்கலைக்கழக மைதானங்களுக்குள் நுழைவதை தற்காலிகமாக தடை செய்துள்ளதே தற்போதுள்ள மிகக் கடுமையான ஒழுங்கு நடவடிக்கையாக உள்ளது.

விஞ்ஞான துறையின் செனட்டர் க்ஸைபோரா, சில வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் புதிய சட்டம் அவசியமானது; மாணவர்கள் அதிகமான வன்முறை செயல்களில் ஈடுபட்டால், அவர்களைப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேற்றுவது என்பது அவர்கள் மேல் எடுக்கப்படும் கடைசி நடவடிக்கை யாக இருக்கும் என்கிறார். எனினும் இந்தச் சட்டம் பல யூனியன்களாலும் மாணவர்கள் அமைப்புகளாலும் பெர்லின் டெக்னிக்கல் பல்கலைக் கழகத்தின் தலைவராலும் எதிர்க்கப்படுகின்றது.

அரசியல் விமர்சகர்கள் இந்தப் புதிய சட்டம் 'வன்முறை'என்பதை தெளிவற்ற முறையில் குறிப்பிடுவதாகவும், இந்தச் சட்டம் பாரம்பரியமாக இருந்து வரும் அரசியல் செயல்பாடுகளை அதாவது, வகுப்பறைகளைக் கைப்பற்றுவது, ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிரசுரங்கள் விநியோகிப்பது போன்ற வழக்கமான செயல்பாடுகளையும் அடக்கப் பயன்படுத்தப்படலாம் என அஞ்சுகிறார்கள். 

"இந்தச் சட்டங்களால் மாணவர்களின் செயல்பாடுகள் ஆபத்துக்கு உள்ளாக்கப்படும்"- என ----- பெர்லினின் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 'பயன்பாட்டு விஞ்ஞானத் துறை' ( Berlin's International University for Applied Sciences) மாணவரும் 'ஹேண்ட்ஸ் ஆஃப்' மாணவர் உரிமை பிரச்சார அமைப்பின்-- ( Hands Off Students Rights Campaign)அமைப்பாளரும் ஈராக்கிய மாணவருமான அகமத் அல் ஜஷீரா பத்திரிக்கைக்குக் கூறியுள்ளார்.

"இப்போதுள்ள நிலைமையில் இந்தச் சட்டங்கள் பாலஸ்தீனத்திற்கான ஒன்றுபட்ட மாணவர் அமைப்புகளின் செயல்பாட்டுகளை வன்மையுடன் அடக்கப் பயன்படுத்தப்படும். ஆனால் இவை வரம்பு மீறி செலுத்தப்படும் என்பதே எங்களது அச்சம்."

நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தீர்மானிக்கப்படும் முன்பே இந்தச் சட்டத்தின் அடிப்படையில் பல்கலைக் கழகத்தில் உள்ள கமிட்டிகள் குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாணவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ அல்லது வெளியேற்றவோ முடியும்.

"பல்கலைக்கழகங்கள் குற்றச்சட்டத்தை அனுமதிப்பதற்கான இடங்கள் அல்ல; அவற்றை அங்கு அனுமதிக்கக் கூடாது" என்கிறார் பெர்லினில் 'கல்வி மற்றும் விஞ்ஞானம் சார்ந்த பணியாளர்களின் சங்க (Berlin branch of the Education and Science Workers' union----GEW) கிளையின் தலைவரான மார்ட்டினா ரெகுலின் இன். இந்த அமைப்பு பெர்லினில் முப்பதாயிரம் உழைப்பாளர்களை பிரதிநிதிப்படுத்துவதாகும். அவர் ‘மாணவர் போராட்டங்கள் ஜெர்மனியில் ஒரு ஆரோக்கியமான பாரம்பரியமாக உள்ளது;; அந்தப் பாரம்பரிய வழக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்கிறார். மேலும் அவர், "பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், இதற்காகவே அரசாங்க விதிகள் உள்ளன; மாணவர்களை கல்வி நிலையங்களில் இருந்து வெளியேற்றுவது என்பது தேவையற்றது" என்று வலியுறுத்துகிறார். 

இந்தப் புதிய சட்டம் சர்வதேச மாணவர்களுக்கு ஒரு குறிப்பான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பல்கலைக்கழகத்தில் சேரும் வெளி நாட்டு மாணவர்கள் தங்களது கடவு சீட்டுகள் (Visa), தங்குமிடம், வேலை ஆகியவற்றை இழக்க நேரிடும்.

அகமது 'பெர்லின் இந்த புதிய சட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தினால் மற்ற மாகாணங்களும் இதையே தொடரும்; மேலும் இத்தகைய சட்டங்கள் மாணவர்களுடைய போராட்டங்களை அடக்க நாடு முழுவதும் பயன்படுத்தப்படும்' என்று தான் அஞ்சுவதாக கூறுகிறார்.

                                                                      தமிழில்: கவிதா

 

(Monthly Review Online  இதழில் May 28,, 2024 அன்று வெளியிடப்பட்ட ருயாரி கேசி (Ruairi Casey) என்பவரின் கட்டுரையை ஆதாரமாகக் கொண்டது.)

Comments

Popular posts from this blog

தொழிலாளர் ஊதியங்கள் ஏன் எப்போதும் மிகவும் குறைவாகவே இருக்கின்றன?

  உங்கள் உழைப்புக்கு ஏற்ற மதிப்புக் கிடைப்பதில்லை , உங்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விடப் பலமடங்கு உழைத்திருப்பதாக எப்போதாவது நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா ? கார்ல் மார்க்ஸ் உங்களைப் புரிந்துகொள்கிறார் . ஒட்டுமொத்தத் தொழிலாளர் வர்க்கமும் முதலாளித்துவ வர்க்கத்தால் சுரண்டப்படுகிறது என்று அவர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் வாதிட்டார் . இது வெறும் மிகைப்படுத்தல் கூற்று அல்ல , மாறாக ஒரு பொருளாதார உண்மையாகும் . தொழிலாளர்கள் உருவாக்கும் மதிப்பின் ஒரு பகுதியைத் திட்டமிட்ட முறையில் திருடுவதன் மூலம் மிகுதியான செல்வத்தைக் குவிப்பதே   முதலாளித்துவத் தொழில்நிறுவனத்தின் முழுமையான நோக்கமாகும் . இந்தச் செயல்முறையே சுரண்டல் என்று குறிப்பிடப்படுகிறது . தொழிலாளர்களுக்கு அவர்களுடைய தகுதிக்குரிய ஊதியம் அளிக்கப்படுகிறது என்று முதன்மைப்போக்கு பொருளியலாளர்கள் கூறிக்கொள்கின்றனர் . தொழிலாளர்களின் ஊதியங்கள் அவர்களால் உற்பத்திப் பொருளுக்கு “ கூட்டப்படும் மதிப்பை ” குறிக்கின்றன தூரத்து நாடுகளில் பழிபாவத்திற்கு அஞ்சாத முதலாளிகள்

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட