வங்காளதேசத்தின் பிரதமர் நாட்டை விட்டுத் தப்பியோடும் வரையில், மேற்கத்திய ஊடகங்களும், சர்வதேச நிதி நிறுவனங்களும் அந்த
நாடு பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறி
வருவதாகப் பிரச்சாரம் செய்து வந்தன.
அப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால்
மக்கள் ஏன் வீதிக்கு வந்து இத்துணைப் பெரிய போரட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும்?
அதுவும் அரசு பணிகளில் இடஓதுக்கீடு
சம்பந்தமான பிரச்சனை அதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும்? என்ற கேள்விகள் எல்லோருக்கும் எழுகின்றது.
வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி
வெகுவிரைவில் டென்மார்க்கையும், சிங்கப்பூரையும்
விஞ்சிவிடும் என்றும், தனிநபர்
உள்நாட்டு உற்பத்தியின் அளவானது இந்தியாவைவிட அதிகமாக உள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம்
ஆருடம் உரைத்தது.
வங்காளதேச அரசின் அறிக்கையின்படி கடந்த
பத்தாண்டுகளில் அதன் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.6% என்ற அளவில் உள்ளது. குறைந்த கூலிக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பால் அபரிமிதமான
இலாபம் ஈட்டிவரும் ஆயத்த ஆடை உற்பத்தியானது உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக்
கொண்டு இந்த வளர்ச்சி காட்டபடுகின்றது.
வங்காளதேசத்தின் பொருளாதாரமானது
80 சதவீதம் ஏற்றுமதியைச் சார்ந்த
பொருளாதாரமாக, அதுவும் ஆயத்த
ஆடை உற்பத்தியை மையமாக கொண்ட பொருளாதாரமாக உள்ளது. 2025 ஆம் ஆண்டில் இது உலகளாவிய சந்தையில்
10 சதவீதத்தைக் கைப்பற்றும் என
வங்கதேச அரசு எதிர்பார்த்தது.
சர்வதேசநிதி அமைப்புகளின் கணிப்புகளுக்கு
மாறாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில்
வங்காளதேசமானது பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியது. இயற்கை
வளங்களை கொள்ளையடித்தல், ஊழல்,
கடனுக்கான வட்டிவிகிதம் அதிகரிப்பு
மற்றும் பணவீக்கம் ஆகியவை பொருளாதார மந்தநிலைக்கு அழைத்துச் சென்றன. 2008 உலகளாவிய பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு
வங்காளதேசத்தின் பொருளாதாரம் சற்று மீட்சியடைந்தது போன்று இருந்தாலும்,
2013இலிருந்து பொருளாதாரம் வீழ்ச்சியை
நோக்கிச் சென்றது. 2020 பெருந்தொற்றுக்
காலகட்டத்தில் இது பெரும் சரிவைச் சந்தித்தது.
ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் ஏற்பட்ட
வீழ்ச்சியின் காரணமாக, கம்பெனிகளால்
வாங்கபட்டிருந்த 20 பில்லியன்
டாலர் கடனை செலுத்த முடியாமல் திவாலாகின. நாடு
முழுவதும் மின்சாரம் வழங்குவதற்கான பணியை தனியாரிடம் ஒப்படைத்த அரசு, அதற்காகப் பல பில்லியன்கணக்கான டாலர்
பணத்தை அவர்களுக்கு மானியமாக வழங்கியது.
மக்களின் வரிப்பணத்தைச் சலுகைகளாக பெற்று,
தொழிலாளர்களை குறைந்தகூலியில் கடுமையாகச்
சுரண்டிய முதலாளி வர்க்கத்தின் ஒரு பிரிவினர் தாங்கள் ஈட்டிய இலாபத்தை வங்காளதேசத்தில்
மறுமுதலீடு செய்வதற்கு பதிலாக அதனை
வெளிநாட்டிற்குக் கொண்டு சென்றனர்.
17 கோடி மக்கள்தொகை கொண்ட வங்காளதேசத்தில்,
ஆயத்த ஆடை உற்பத்தியில் ஈடுபட்டுவரும்
தொழிலாளர்களில் 50 - 80 சதவீதம்
வரை பெண் தொழிலாளர்கள். இவர்கள்
8000 டாக்கா (இந்திய மதிப்பில் ரூ 5600) எனும் மிகக்குறைந்த கூலிக்கு வேலை செய்கின்றனர்.
ஓரவிற்கு ஊதியம் கிடைக்கும் மேற்பார்வையாளர்களாக
ஆண்கள் மட்டுமே உள்ளனர்.
விலைவாசிகள் உயர்ந்துவரும் நிலையில் இந்த
குறைந்த கூலியைக் கொண்டு அன்றாட தேவைகளைக் கூட அவர்களால் ஈடுகட்ட முடியவில்லை.
2023 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட
ஒரு கணக்கெடுப்பின்படி 3.8 கோடி
மக்களின் உணவுப் பாதுகாப்பு மிகவும் அஞ்சத்தக்க வகையில் உள்ளது என கூறப்படுகின்றது.
நான்கில் ஒரு குடும்பமானது தங்களது
அன்றாடத் தேவைகளை நிறைவு செய்வதற்குக் கூட கடனையே
நம்பியிருக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு
குடும்பத்தின் சராசரி கடன் அளவானது 2016லிருந்து
2022க்குள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
டாக்காவின் டாலருக்கு எதிரான மதிப்பு 20 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால், வெளிநாட்டுக் கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான
சுமை அதிகரித்தது. மேலும்
அந்நியச்செலாவணி கையிருப்பு 2021 இல்
46 பில்லியன் டாலர் என்ற அளவில்
இருந்து 19 பில்லியன் டாலராக
குறைந்துள்ளது. அந்நியநாட்டுச்
செலாவணி குறைவை ஈடுகட்ட வங்காளதேச அரசானது, சர்வதேச
நாணய நிதியத்திடமிருந்து 4.7 பில்லியன்
டாலர் கடனைக் கோரியுள்ளது, ஜூன்
வரையில் 1.1 பில்லியன் டாலர்
கடன் வழங்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள தேக்கம்,
அதிகரித்து வரும் கடனுக்கான வட்டிச்
செலவுகள், ஐ.எம்.எப் மற்றும் நிதிநிறுவனங்களிடம் நிதி உதவியைப் பெறுவதற்காக
சிக்கன நடவடிக்கைகள் என்ற
பெயரில் சமூகநலத் திட்டங்களுக்கான நிதியை குறைத்தல் போன்றவையும் மக்களை வெகுவாகப் பாதித்தன.
இடைநிலைக் கல்வியிலிருந்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு
நாள் அதிகரித்து வந்தது. கல்வி
- பயிற்சி – வேலை என்று எதிலும் இல்லாமல் உள்ள இளைஞர்களின்
எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகின்றது. 5 லிருந்து
24 வயது வரையுள்ள மாணவர்கள்,
இளைஞர்களில் கல்வி நிலையங்களுக்கு
செல்ல முடியாமல் இருந்தவர்களின் எண்ணிக்கை 2020 ஆம் ஆண்டில் 28 சதவீதமாக
இருந்து, அது
2023 இல் 41 சதவீதமாக உயர்ந்தது. மொத்தத்தில் 40 % பேர் கல்வி மற்றும் வேலை இவையிரண்டில்
எதுவும் இல்லாமல் உள்ளதாக கூறப்படுகின்றது.
2008 பொருளாதார மந்த காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பேற்ற
ஷேக்ஹசீனா அரசாங்கம் அந்த
நெருக்கடியிலிருந்து முதலாளி வர்க்கத்தை மீட்பதற்குச் சலுகைகளை வழங்கியதோடு,
நெருக்கடியினால் பாதிக்கபட்ட தொழிலாளர்கள்
போராட்டத்தினை ஒடுக்கும் வகையில் எதேச்சதிகாரத்தைக் கடைபிடித்து வந்தது. முதலாளித்துவ பாராளுமன்றம் வழங்கியுள்ள
குறைந்தபட்ச உரிமைகள் கூட மறுக்கப்பட்டன. எதிர்கட்சிகளின்
குரல் ஒடுக்கப்பட்டது. பாராளுமன்றத்
தேர்தல் முறையைக் கேலிகூத்தாக்கி மீண்டும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
இத்தகைய நெருக்கடியான சூழலில்தான் வங்காளதேச
விடுதலைப்போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களின்
சந்ததியினருக்கான 30 சதவீத
இடஒதுக்கீடு பிரச்சனை மீண்டும் வெடித்தது. வங்காளதேசத்தின்
விடுதலைப்போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்
என 2018 ஆம் ஆண்டு மார்ச்
21 அன்று ஷேக்ஹசீனா அறிவித்தார்.
ஆனால், மாணவர்களின் கடும் போராட்டங்களைத் தொடர்ந்து,
அரசிற்கு எதிரான எதிர்ப்புக்குரல்கள்
வலுக்கவே ஏப்ரல் மாதத்தில் இந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இந்த ஆண்டு ஜூன் மாதம் உச்சநீதிமன்றம்
இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து போராட்டங்கள் வெடித்தன.
விடுதலைப்போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களின்
குடும்பத்தின் ஒரு பிரிவினர் ஏற்கனவே இடஒதுக்கீட்டின் மூலம் அரசுவேலையில் இருப்பவர்களாவர்.
இந்த அரசு ஊழியர்களின் குடும்பங்களே
மீண்டும் இடஒதுக்கீட்டின் பலனை அடையக் கூடிய வகையில் புதிய சட்டம் இயற்றப்பட்டதால்,
வேலையின்மை, வறுமை, விலைவாசி உயர்வு, கடன் சுமை, குறைந்த கூலியில் உழைப்பு சுரண்டல் எனக்
கடுமையாகப் பாதிக்கபட்டிருந்த இளைஞர்களும், மாணவர்களும்
மக்களும் போராட்டக் களத்தில் குதித்தனர்.
நாட்டில் நீடித்து வந்த பொருளாதார நெருக்கடியின்
காரணமாக மக்கள் துன்பத்திலும் துயரத்திலும் உழன்று
வந்த நிலையில், பொருளாதார
நெருக்கடியினால் ஏற்படும் மக்கள் எதிர்ப்பை அடக்குவதற்காக எத்தேச்சதிகார அடக்குமுறையைக்
கட்டவிழ்த்து விட்டு, ஜனநாயக உரிமைகள் அனைத்தும் மறுக்கபட்டு வந்த நிலையில் அரசின்
இந்த முடிவு பெரும் போராட்டக்
களங்களுக்கு ஒரு தூண்டுகோலாக அமைந்தது.
இந்தியாவில் பாஜக அரசின் மக்கள் விரோதச்
செயல்பாடுகளுக்கு எதிராகப் போராடுபவர்களைத் தேசதுரோகிகள் என முத்திரைக் குத்தி அச்சுறுத்தும்
போக்கை ஆட்சியாளர்கள் கையாண்டு வருவதைப் போலவே,
வங்காளதேசத்திலும் அரசிற்கு எதிராகப் போராடுபவர்களை
'ரஜாக்கர்கள்' (வங்காளதேச விடுதலைப்போர் காலகட்டத்தில்
பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களை குறிக்கும் சொல் ஆகும்) என முத்திரை குத்தி அவர்களை அச்சுறுத்த
நினைத்தார் ஷேக் அசீனா. ஆனால் அது போராட்டக்களத்தை
இன்னும் தீவிரப்படுத்தவே உதவியது. அரசிற்கு
எதிராகப் போராடியவர்களின் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டவர்கள்
உயிரிழந்ததையடுத்து போராட்டம் தீவிரமடைந்தது. இதனால் ஹசினா நாட்டை விட்டே ஓட வேண்டிய நிர்ப்பந்தம்
ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார
அறிஞர் முகம்மது யூனூஸ் தலைமையில் இடைகால அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த மாற்றத்தால் வங்காளதேச தொழிலாளர்களின்,
உழைக்கும் மக்களின் பிரச்சனைகள்
தீரப் போவதில்லை. ஏனெனில்
முகம்மது யூனூஸ் அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் கைக்கூலி. அவர் மீண்டும் சர்வதேச நிதி நிறுவனங்களின் அதரவை நாடுவார்,
பதிலுக்கு அவை, சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் மக்களின்
நலன் சார்ந்த திட்டங்கள் அனைத்திற்கும் முட்டுக் கட்டைகள் போடும், அதற்கான செலவினங்களைக் கடுமையாக குறைக்க
நிர்ப்பந்திக்கும். கடன்
சுமைகள் அடித்தட்டு மக்களின் மீது சுமத்தப்படும்.
வேலையின்றி, வாழ்வாதாரத்திற்கான ஊதியம் இன்றி,
வறுமையில் உழலும் மக்களுக்கு ஒரு
நபரை மாற்றி வேறொருவரை பணியிலமர்த்துவதன் மூலம் எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை. சமீபத்தில், இலங்கையில் நடந்த மக்களின் தன்னெழுச்சி
போராட்டங்கள் அந்த நாட்டின் அதிபரை நாட்டை விட்டு
துரத்தியது, எனினும்,
அதனால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
மாறாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் கடும் நெருக்கடியில் தான்
வாழ்ந்து வருகின்றனர். பாட்டாளி
வர்க்கம் பலம் வாய்ந்த ஒரு அமைப்பாக இல்லாத நிலையில், மக்களுடைய போராட்டங்களுக்குத் தலைமை கொடுக்க இயலாத நிலையில் தன்னெழுச்சிப் போராட்டங்கள், முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதியாக
ஒரு கட்சிக்கு பதிலாக வேறொரு கட்சியை ஆட்சியில்
அமர்த்தவே வழி வகுக்கின்றன.
ஷேக் ஹசினாவின் ஆட்சி
அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இந்தியா மற்றும் சீன நாடுகளிடம் அதிக
நெருக்கத்தைக் காட்டி வந்ததால், அமெரிக்க
ஏகாதிபத்தியம் வங்கதேசத்தைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் முழுமையாகக் கொண்டு வர இந்த
நெருக்கடியை ஒரு வாய்ப்பாகப்
பயன்படுத்திக் கொண்டது இந்த நெருக்கடியைப்
பயன்படுத்தித் தனக்கு ஆதரவான பொம்மை ஆட்சியை நிறுவுவதற்காகத் தனது ஆதரவு சக்திகளை உள்நாட்டு கிளர்ச்சியில்
ஈடுபடுத்தியது. கடல்வழிப்
போக்குவரத்தில் சீனா மற்றும் வங்காளதேச துறைமுகங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை உருவாக்கும் ’முத்துச்சரம்’
என்னும் திட்டத்தைத் தடுக்கவும், இந்திய எல்லையில்
ஒருவித பதட்டநிலையை உருவாக்குவதன் மூலம் இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுத்து ரசியாவுடனான அதன் பொருளாதார உறவை மட்டுப்படுத்தவும்
அமெரிக்கா முயற்சி செய்கிறது.
பாராளுமன்ற தேர்தல்கள் முறையாக நடத்தப்படவில்லை
என்று கூறி ஷேக் ஹசீனாவிற்கு அமெரிக்காவில் நுழைவதற்கான விசா மறுக்கப்படும்
என அச்சுறுத்தியது. தீவிர
வலதுசாரி அமைப்பான ஜமாத்-ஈ-இஸ்லாமி அமைப்பிற்கு அமெரிக்கா நிதியுதவியை
அளித்து அரசிற்கு எதிரான போராட்டத்தில் தன்னுடைய மறைமுக ஆதரவை வழங்கியது. எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சிக்கும்
ஆதரவு தந்து அமெரிக்கசார்பு ஆட்சியை நிறுவ முயற்சி செய்கின்றது.
டாக்கா பல்கலைக்கழக மாணவர்களின் ஒரு பகுதியினர்
அமெரிக்க ஆதரவுடன் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த மாணவர் தலைவர்கள் தான் நோபல் பரிசு
பெற்ற யூனுஸை இடைக்கால அரசாங்கத்தின் தலைவராக
நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். முகம்மது
யூனூஸ் அமெரிக்காவில் படித்த, அமெரிக்க
அரசால் பல்வேறு விருதுகள் கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்ட, அமெரிக்க அரசு சார்பாளர் ஆவார்.
அமெரிக்க அரசின் தயவில் தான் அமைதிக்கான
நோபல் பரிசு அவருக்கு கொடுக்கபட்டது.
மீண்டும் ஜனநாயகமுறைபடி(?) பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பெற்று யார்
ஆட்சிக்கு வந்தாலும் அவை அமெரிக்க ஏகாதிபத்தியன் கையாளகவோ, அல்லது ஏகாதிபத்தியங்களின் நலனுக்காகவும்,
வங்கதேச முதலாளிகளின் நலனுக்காகவும்
சேவைபுரியும் அரசாகவோதான் இருக்கும்.
வங்கதேசப் பாட்டாளி வர்க்கம் தமக்கான முன்னணிப்படையான
கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதையும், தெளிவான
அரசியல் பாதையை வகுப்பதும்தான் முதன்மைக் கடமையாக உள்ளது.
மக்கள் முதலாளிய வர்க்கச் சுரண்டலிலிருந்தும் அதிகாரவர்க்கத்தின் ஆட்சி முறையிலிருந்தும் விடுபடுவதற்கு புரட்சிகர அரசியல் திட்டமும், அதனடிப்படையில் கட்டப்பட்ட பாட்டாளி வர்க்க முன்னணிப் படையான கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தலைமையின் கீழ்
திரட்டப்பட்ட பெரும் மக்கள் திரளும் இல்லாத நிலையில் முதலாளித்துவ உற்பத்திமுறை நெருக்கடிக்குள்ளாகி,
அதனால் வாழ்விழந்த, தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் வீரியமிக்க போராட்டங்கள்
நடத்தினாலும், அது மீண்டும்
முதலாளி வர்க்கத்திற்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கும் தான் சாதகமாக முடியும் என்பதற்கு அண்மைக்கால இலங்கை மக்களின் போராட்டங்களும் இன்றைய வங்காளதேச மக்களின் போராட்டங்களும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.
குமணன்
நன்று.
ReplyDelete