Skip to main content

கம்யூனிசப் புரட்சியாளர்கள் அனைவரும் புரட்சிகர சோசலிசத் திட்டத்தின் கீழ் அணி திரள்வோம்!

 

செப்டம்பர் 12 – அப்பு, பாலன் நினைவுதினத்தையொட்டி தருமபுரியில் நடைபெற்ற இந்திய இடதுசாரிகள் ஒருங்கிணைப்பு குறித்தான கருத்தரங்கிற்கு சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் சார்பில் முன்வைக்கப்பட்ட திட்ட அறிக்கை.

* * * * *

புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.

--- லெனின், ஏப்ரல் ஆய்வுரை

புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவில் சாதிக்கப்பட்டதற்கான காரணம் உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்துக் கொள்ளத் தவறியதுதான்.

--மாவோ, சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு

 

பிரிட்டனின் காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில், 1920களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது; தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், நடுத்தர வர்க்கங்கள், அறிவுஜீவிகள் என அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்று செல்வாக்குடன் வளர்ந்து வந்தது. ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் முதலாளியச் சுரண்டலுக்கு எதிராகவும் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களை வழி நடத்தியது; 1940களின் பிற்பகுதியில் ஐதராபாத் நிஜாமுக்கு எதிராகவும், நிலப்பிரபுக்களுக்கு எதிராகவும் ஆயுதம் தாங்கிய தெலிங்கானா விவசாயிகளின் புரட்சியைத் தலைமை தாங்கி நடத்தியது; 1946ல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கப்பற்படை எழுச்சியில் கட்சி முக்கியமான பாத்திரத்தை வகித்தது; மக்கள் மத்தியில் பெற்றிருந்த செல்வாக்கினால், பிரிட்டனின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பிறகு 1952ல் நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் அன்றிருந்த சென்னை மாகாணத்தில் காங்கிரசுக்கு அடுத்தபடியாக பாராளுமன்றத்தில் அதிகமான இடங்களையும் வென்றது.

மக்கள் மத்தியில் இத்தகைய செல்வாக்குடன் இருந்த கட்சி புரட்சிகரப் பாதையைக் கை விட்டுப் பாராளுமன்றத்தில் வீழ்ந்தது. 1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோன்றியது. திரிபுவாதத்தை எதிர்த்த நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உருவாகிய கட்சி என்று அது தன்னை அறிவித்துக் கொண்டது.

ஆனால் இ.பொ.க. போலவே இ.பொ.க.(மா)வும் திரிபுவாதத்தில் வீழ்ந்தது. இரண்டு கட்சிகளும் பாராளுமன்றத்தின் மூலம் அரசியலதிகாரத்தைப் பெற்று மக்கள் ஜனநாயகப் புரட்சியை நிறைவு செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவோம் எனக் கூறி வருகின்றன. இக்கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளன தொழிலாளர்கள் தலைமையில் அனைத்து உழைக்கும் மக்களையும் ஒன்று திரட்டி அவர்களுக்கு வர்க்க உணர்வு ஊட்டி அரசியல் அதிகாரத்தை நோக்கி வழி நடத்திச் செல்வதற்குப் பதிலாக, போராட்டங்களை வெறும் அடையாளப் போராட்டங்களாகச் சுருக்கி விட்டன. தொழிலாளர்களைப் பெரும் அளவு தம் பின் திரட்டி வைத்திருந்தாலும் இந்தக் கட்சிகள் திரிபுவாதத்தில் வீழ்ந்துள்ளதால் தொழிலாளர்கள் தங்களுடைய புரட்சிகர வரலாற்றுப் பாத்திரத்தை ஆற்ற முடியாமல் தடுக்கப்பட்டு வருகின்றனர்.

பாசிச அபாயம் மேலோங்கியுள்ள இந்தக் காலகட்டத்திலும் பாட்டாளிகள் வர்க்கம் தன்னுடைய புரட்சிகரமான முற்போக்குப் பாத்திரத்தை ஆற்ற முடியாமல் இந்தக் கட்சிகளால் முடமாக்கி வைக்கப்பட்டுள்ளனர். பாராளுமன்றத்திலும் சட்டசபைகளிலும் ஓரிரண்டு இடங்களுக்காக இந்தக் கட்சிகள் முதலாளியக் கட்சிகளுக்கு மாறி மாறிக் காவடி தூக்கி வருவதால் மக்கள் செல்வாக்கை இழந்து நிற்கின்றன.

1952 பாராளுமன்றத் தேர்தலின் போது, கட்சி தடை செய்யப்பட்டு இருந்த நிலையிலும் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக இடங்களை ஐக்கியப்பட்டிருந்த இ.பொ.க. பெற்றிருந்த நிலை மாறி, இன்று இரண்டு கட்சிகளும் சேர்ந்து விரல் விட்டு எண்ணக் கூடிய இடங்களைக் கூடப் பெற முடியாமல் தடுமாறி கொண்டிருக்கின்றன. அதற்குக் காரணம் அன்று தெலிங்கானா விவசாயிகளின் ஆயுதப் போராட்டத்திற்குக் கட்சி தலைமை தாங்கி நடத்தியது; மேலும் வங்கத்தில் நடந்த தேபகா விவசாயிகள் போராட்டம், புன்னபுரா – வயலார் விவசாயிகள் போராட்டம், 1946ல் நடந்த கப்பல் படை எழுச்சி ஆகியவற்றில் கட்சி முக்கிய பங்காற்றியது. அதன் விளைவாகவே கட்சி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தது; பாராளுமன்றத் தேர்தலிலும் கணிசமான இடங்களை வென்றது. ஆனால் இன்று மக்கள் போராட்டங்களைக் கைவிட்ட நிலையில், மக்கள் செல்வாக்கிழந்து முதலாளியக் கட்சிகளைச் சில இடங்களுக்காகவும் நிதிக்காகவும் சார்ந்து நிற்க வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

நக்சல்பாரி எழுச்சியின் காரணமாக இ.பொ.க.(மா) கட்சி பிளவுண்டு 1969 இல் இ.பொ.க.(மா –லெ) கட்சி தோன்றியது. இ.பொ.க.(மா)வின் நவீன திருத்தல்வாதத்தை முறியடித்து புரட்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்த கட்சி ஆயுதப் போராட்டத்தின் மூலமே பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் எனக் கூறியது. கட்சி இந்தியாவின் பருண்மையான நிலையை ஆய்வு செய்யாமல் 1920களில் சீனா இருந்த நிலைமையில் இந்தியா இருப்பதாகக் கருதி இந்தியாவை ஒரு அரைக் காலனி – அரை நிலபிரபுத்துவ நாடு என வரையறுத்தது. அதனால் சீனாவில் பின்பற்றிய நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே இந்தியாவின் பாதை எனக் கூறியது. கிராமங்களை விடுவித்துப் பிறகு நகரங்களைச் சுற்றி வளைத்துப் பிறகு இறுதியாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்ற மூல உத்தியை முன் வைத்தது. ஆனால் கட்சி விரைவில் இடது தீவிரவாதத்தில் வீழ்ந்தது. தொழிலாளர் அமைப்புகளும் மாணவர்கள் அமைப்புகளும் இளைஞர் அமைப்புகளும், பொதுவாக மக்கள்திரள் அமைப்புகள் அனைத்தும் திருத்தல்வாதத்திற்கு இட்டுச் செல்லும் எனக் கூறி அவை கைவிடப்பட்டன. வர்க்க எதிரிகளை அழித்தொழிப்பதன் மூலம் கிராமப்புறங்களில் கூலி, ஏழை விவசாயிகள் மத்தியில் எழுச்சியை உண்டாக்க முடியும். அது கெரில்லாப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி எனக் கூறப்பட்டது. எதிரியின் இரத்தத்தில் கை நனைப்பவனே கம்யூனிஸ்ட் என்று கம்யூனிசத்துக்குப் புறம்பான கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

இடது தீவிரவாதத்தில் வீழ்ந்த கட்சி விரைவில் பல குழுக்களாகப் பிளவுண்டது. இந்திய அரசின் கடுமையான அடக்குமுறை பல்லாயிரம் உயிர்களைப் பலி கொண்டது. பிளவுண்ட குழுக்களில் மக்கள் யுத்தம் போன்ற சில இ.பொ.க.(மா –லெ) கட்சியின் 1970 ஆம் ஆண்டுத் திட்டத்தை இன்னும் சரி எனக் கூறி வருகின்றன. அதை நடைமுறைப்படுத்தியும் வருகின்றன. பெரும் இழப்புகளைச் சந்தித்தாலும், முன்னேற்றம் எதுவும் இல்லாவிட்டாலும் அதில் தொடர்ந்து இருந்து வருகின்றன. ஆனால் பெரும்பாலான குழுக்கள் அத்திட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறினாலும் அதை நடைமுறைப்படுத்தவில்லை; கிராமப்புறங்களுக்குச் சென்று கிராமங்களை விடுவித்துச் செந்தளம் கட்டும் நடைமுறையில் இல்லை. ஏனென்றால் அத்திட்டம் இந்தியாவின் பருண்மையான நிலைக்கு ஏற்றதாக இல்லை. ஆனால் அந்தக் குழுக்கள் இந்த உண்மையை ஏற்றுக் கொண்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்வதாக இல்லை. அதற்குப் பதிலாக அந்தக் குழுக்கள் கோட்பாடு ஒன்றாகவும் நடைமுறை வேறு ஒன்றாகவும் சந்தர்ப்பவாதமாகச் செயல்பட்டு வருகின்றன. பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை என்று ஒவ்வொரு குழுவும் தன்னை அறிவித்துக் கொண்டாலும் அவற்றின் பின் தொழிலாளர்கள் அமைப்பு எதுவும் இல்லை. பல குழுக்கள் குட்டி முதலாளிய அறிவுஜீவிகளின் குழுக்களாகவே உள்ளன. சில குழுக்கள் தேசிய இன வாதத்தில் வீழ்ந்துள்ளன. சில முதலாளியக் கட்சிகளுக்கு ஆதரவுக் குழுக்களாக மாறியுள்ளன. அரசியலுக்குப் பதிலாக தனிநபர்களை முன்னிறுத்தும் குழுக்களாகவே பல உள்ளன. இந்தக் குழுக்கள் தொழிலாளர்களைத் திரட்டவில்லை.

இந்தக் குழுக்கள் கட்சியின் 70ஆம் திட்டத்தை மறுப்பதில்லை. அதே சமயத்தில் அதை நடைமுறைப்படுத்துவதில்லை. சந்தர்ப்பவாத நடைமுறைகளையே பின்பற்றி வருகின்றன. அதாவது உண்மையில் அந்தத் திட்டம் நடைமுறை சாத்தியம் இல்லை எனக் கருதி அதைப் புறக்கணித்து விட்டன. கட்சி அய்க்கியம் பற்றி அக்குழுக்கள் பல கூட்டங்களை நடத்தினாலும் அதில் வெற்றி பெற முடியவில்லை. ஒரு புரட்சிகரத் திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் இணைவதற்கான முயற்சி இருந்தால் மட்டுமே அய்க்கியம் சாத்தியம். ஆனால் குறுங்குழுவாதம், அகநிலைவாதம், அதிகாரவர்க்கப் போக்கு. ஆகியவற்றில் மூழ்கிப் போய் உள்ள இந்த குழுக்களால் ஒரு புரட்சிகரத் திட்டத்தை முன்வைத்து அதன் அடிப்படையில் அய்க்கியப்பட இயலவில்லை.

இவ்வாறு ஒரு பக்கம் பெரும் அளவு தொழிலாளர்களைத் தம் பின்னால் திரட்டி வைத்துள்ள, பாராளுமன்றவாதத்தில் வீழ்ந்துள்ள இ.பொ.க., இ.பொ.க.(மா) கட்சிகள். இன்னொரு பக்கம் இடது தீவிரவாதத்தில் வீழ்ந்து, பிறகு பல குழுக்களாகச் சிதறுண்ட நிலையில், மக்கள் திரள் பின்னணி இல்லாத மா-லெ குழுக்கள். இந்த நிலையில் தொழிலாளர்கள் புரட்சிகரத் தலைமை இல்லாமல், திருத்தல்வாத அரசியல் கருத்தியல் மற்றும் முதலாளியக் கருத்தியல் ஆகியவற்றின் ஆதிக்கத்தின் கீழ் விடப்பட்டுள்ளனர். அவர்களின் புரட்சிகர ஆற்றல் தவறான கருத்தியல்களின் ஆதிக்கத்தால் முடமாக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் கடுமையான அரசியல், பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கும் மாபெரும் ஆற்றல் தொழிலாளர் வர்க்கத்திடம் இருந்தபோதும் அவற்றைப் பயன்படுத்தமுடியாமல் இந்தக் கருத்தியல்கள் தடுத்து வருகின்றன.

புரட்சிகரத் திட்டம், அதன் அடிப்படையில் கட்டப்பட்ட பாட்டாளி வர்க்கக் கட்சி, அதன் தலைமையின் கீழ் திரட்டப்பட்ட மக்கள் திரள் ஆகியவை இல்லாவிட்டால் புரட்சி வெற்றி பெறாது. இதைத்தான் இலங்கையிலும் வங்கதேசத்திலும் அண்மையில் நடந்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் மெய்ப்பித்தன.

புதிய (மக்கள்) ஜனநாயகப் புரட்சி

இந்த மூன்று கட்சிகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தாலும் அவை அனைத்தும் ஒரே திட்டத்தைக் கொண்டுள்ளன என்பது அவற்றிற்கு இடையில் உள்ள ஒற்றுமையாகும்.

‘இந்திய அரசு பெரும் முதலாளிகள் மற்றும் ஏகபோக முதலாளிகளின் தலைமையில் உள்ள முதலாளிய அரசு. அது அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடனும், முதலாளிய நில உடைமையாளர்களிடமும் நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது. ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்துள்ளது. இங்கு நடைபெற வேண்டிய புரட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு - ஏகபோக முதலாளிய எதிர்ப்பு - நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் புரட்சி, ஏகாதிபத்தியத்திற்கு எதிரானதாக இருப்பதால் அது தேசிய ஜனநாயகப் புரட்சி என்றும், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராக இருப்பதால் அது மக்கள் ஜனநாயகப் புரட்சி என்றும் அழைக்கப்படும் என்கிறது இ.பொ.க.வின் திட்டம்.

‘இந்திய அரசானது பெரும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் தலைமையின் கீழ் முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவக் கூட்டால் ஆளப்படுகிற அரசு என்றும், ‘அது அந்நிய நிதி மூலதனத்துடன் நெருங்கிய கூட்டு வைத்துள்ளது. இப்பொழுது நடத்தப்பட வேண்டிய புரட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியாகும். அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சியாகும்’ என்றும் இ.பொ.க.(மா) திட்டம் கூறுகிறது.

‘இந்தியா ஒரு அரைக் காலனிய - அரை நிலப்பிரபுத்துவ நாடு. அமெரிக்காவின் தலைமையில் இயங்கும் ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகாரவர்க்க மூலதனம், நிலப்பிரபுத்துவம் ஆகிய நான்கும் இந்திய மக்களின் எதிரிகள். அனைத்து முரண்பாடுகளுள் நிலப்பிரபுத்துவத்திற்கும், பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் முதன்மையான முரண்பாடு. நமது புரட்சியின் கட்டம் மக்கள் ஜனநாயகப் புரட்சி. பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சி நிறைவு பெறும்.’ என்றும் இ.பொ.க.(மா-லெ) கட்சித் திட்டம் கூறுகிறது.

இந்திய அரசு பெரும் முதலாளிகளின் மற்றும் ஏகபோக முதலாளிகளின் அரசு. அது நிலப்பிரபுத்துவத்துடனும் ஏகாதிபத்தியத்துடனும் நெருங்கிய கூட்டு வைத்துள்ளது. எனவே இங்கு நடத்தப்பட வேண்டிய புரட்சி பெரும் முதலாளிய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் ஜனநாயகப் புரட்சியாகும் என்று இ.பொ.க.வும், இ.பொ.க.(மா)வும் கூறுகின்றன.

இ.பொ.க.(மா- லெ) கட்சித் திட்டமும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, தரகு அதிகாரவர்க்க முதலாளிய எதிர்ப்பு ஆகியவற்றைத்தான் கொண்டுள்ளது. அதே சமயத்தில், நிலப்பிரபுத்துவத்துக்கும் பரந்துபட்ட மக்களுக்கும் இடையிலான முரண்பாடுதான் முதன்மை முரண்பாடு எனக் கூறி, இங்கு நடத்தப்பட வேண்டிய புரட்சி பாட்டாளி வர்க்கத்தின் கீழ் புதிய ஜனநாயகப் புரட்சி என்கிறது. சாராம்சத்தில் மூன்று திட்டங்களும் மக்கள் ஜனநாயகப் புரட்சி அல்லது புதிய ஜனநாயகப் புரட்சி பற்றித்தான் கூறுகின்றன.

புதிய ஜனநாயகப் புரட்சி என்பது சாராம்சத்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் ஆட்சி நிலவும் ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்கத் தலைமையில் நடக்கும் ஒரு முதலாளியப் புரட்சியாகும். ரசியாவில் ஜாரின் ஆட்சியின்போது போல்சுவிக் கட்சி பாட்டாளி வர்க்கத் தலைமையில் அனைத்து விவசாயிகளையும் திரட்டி ஜனநாயகப் புரட்சியை நடத்துவதற்கான திட்டத்தைக் கொண்டிருந்து. 1905ல் ஜார் மன்னனுக்கு எதிராக நடந்த முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் போது, அந்தப் புரட்சிக்கு பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க வேண்டும் என்றும், அதனுடைய புரட்சிப் போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் வர்க்கத்தையும் தனது கூட்டாளியாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் லெனின் கூறினார். பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ‘முழுமையாக வெற்றியடையும் புரட்சிதான் விவசாயச் சீர்திருத்தத்தில் விவசாயிகள் வர்க்கத்திற்கு யாவற்றையும் கொடுக்கும். விவசாயிகள் மனப்பூர்வமாக விரும்புகிற யாவற்றையும், கனவு காணுகின்ற யாவற்றையும், உண்மையிலேயே அவர்களுக்குத் தேவையாயுள்ள யாவற்றையும் அளிக்கும் என்றார் லெனின். அதே சமயத்தில் வேறு வகையில் முதலாளிய ஜனநாயகப் புரட்சி நடந்தால், அதாவது முதலாளிகள் தலைமையில் ஜனநாயகப் புரட்சி நடந்தால் அந்த வர்க்கம் சீர்திருத்தப் பாதையையே தேர்ந்தெடுக்கும். அந்தச் ‘சீர்திருத்தப் பாதை காலதாமதம் செய்யும் பாதையாகும். ஆமை வேகத்தில் ‘மதமத வென்று சென்று, காலத்தை வீணாக்கும் பாதையாகும். தேசிய உடலில் அழுகிப் போன பகுதிகளை, மனத்திற்கு மிகுந்த வேதனையைக் கொடுக்கும் வகையில், மிகவும் மெதுவாகப் பிரித்து அகற்றும் பாதையாகும். அவ்வுடல் அழுகிப் போயிருப்பதால் அதிகமாகத் துயருறுவது பாட்டாளி வர்க்கமும் விவசாயி வர்க்கமுமே. அழுகிப் போன பாகத்தை ஒரு நொடியில் வெட்டி எறியச் செய்வதுதான் புரட்சிகரமான பாதை. பாட்டாளி வர்க்கத்திற்கு மிக மிகக் குறைவான வேதனையைக் கொடுக்கக் கூடிய பாதை. அழுகிப் போய் தொந்தரவு கொடுக்கும் பாகங்களை நேரடியாக அகற்றி விடும் பாதை. மன்னன் ஆட்சிக்கும், அதைச் சார்ந்து நிற்கின்ற மிகவும் வெறுக்கத் தக்க, இழிவான, நாற்றமடிக்கிற, நோயைப் பரப்புகின்ற உறுப்புகளுக்கு கொஞ்சம் கூட சலுகை கொடுக்காத, கொஞ்சம்கூட பரிவு காட்டாத பாதை என்றார் லெனின் (ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயலுத்திகள்- லெனின்).

இந்த இடத்தில் நாம் 1947 இந்தியாவில் நடந்த அதிகார மாற்றத்தை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தேச விடுதலைப் போராட்டத்தின் தலைமையைக் கைப்பற்றி அரசியல் அதிகாரத்திற்கு வந்த இந்திய முதலாளிய வர்க்கம் இந்தியாவில் இருந்த 563 சமஸ்தானங்களையும் இந்திய ஒன்றியத்துடன் வலுக்கட்டாயமாக இணைத்தது. நாட்டின் நிர்வாகத்தை. மையப்படுத்தியது. இங்கு தனி ஆட்சிப்பரப்பையும் தனிப்படையையும் கொண்டுள்ள சமஸ்தானமோ நிலப்பிரபுவோ அதற்குப் பிறகு இல்லை. ஆட்சி அதிகாரத்திற்கு வந்த முதலாளிய வர்க்கம் விவசாயத்தில் சீர்திருத்தப் பாதையைப் பின்பற்றி வருகிறது. அது நிலப்பிரபுத்துவத்திற்குப் பரிவு காட்டுவதாகவும், சலுகைகள் கொடுப்பதாகவும், படிப்படியாக அவர்களை முதலாளிய விவசாயிகளாக மாற்றுவதாகவும் உள்ளது. இந்தச் சீர்திருத்தப் பாதை லெனின் குறிப்பிட்டுள்ளதைப் போல பாட்டாளி வர்க்கத்திற்கும், விவசாயி வர்க்கத்திற்கும் மிகவும் நீண்ட துயரம் அளிக்கும் பாதையாக உள்ளது.

ரசியாவில் 1905 புரட்சி தோல்வி அடைந்தது. முதலாளியப் புரட்சி நிறைவுறவில்லை. ஆனால் 1917 பிப்ரவரிப் புரட்சி வெற்றியடைந்து முதலாளிய வர்க்கத்தின் தற்காலிக அரசாங்கம் தோன்றியது. இதை லெனின், “முதலாளிகளுடைய பிரதிநிதிகளையும், ஏற்கனவே முதலாளிகளாக மாறுதலடைந்து விட்ட நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளையும் கொண்ட புதிய அரசு ஒன்று ரசியாவில் தோன்றிற்று என்கிறார். அதாவது முதலாளிய வர்க்கத்தின் தலைமையில் நடந்துள்ள முதலாளியப் புரட்சி என்கிறார்.

“புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.

இந்த அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று விட்டது.இவ்வாறு லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையில் எழுதினார்.

ஆனால் முதலாளிகளுடைய பிரதிநிதிகளையும், ஏற்கனவே முதலாளிகளாக மாறுதலடைந்து விட்ட நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளையும் கொண்ட புதிய அரசாங்கம் முதலாம் உலக யுத்தத்திலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு மக்களுக்கு சமாதானத்தை வழங்கவில்லை. ஏனென்றால் அந்த அரசாங்கம் பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு ஏகாதிபத்தியங்களின் நலன்களுடன் கட்டுண்டு இருந்தது. அந்த நாட்டில் இருந்த அந்நிய ஏகாதிபத்தியங்களின் மூலதனங்களுக்குக் காவலனாகவும் இருந்தது. அதனால் நாட்டைத் தொடந்து யுத்தத்தில் ஈடுபடுத்தி வந்தது.

நிலப்பிரபுக்களிடமிருந்தும், பெரும் பண்ணையார்களிடமிருந்தும் நிலங்களைக் கைப்பற்றி விவசாயிகளுக்கு வழங்கவில்லை.

மேலும் மக்கள் தமது போராட்டத்தின் மூலம் வென்றெடுத்திருந்த பேச்சுரிமை, பத்திரிக்கை உரிமை, சங்கம் சேரும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை, ஊர்வலம் போகும் உரிமை ஆகிய ஜனநாயக உரிமைகளின் மீது நேரடியான தாக்குதலைத் தொடுத்தது.

இந்தச் சூழ்நிலையில்தான் லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையை முன் வைத்தார். அது முதலாளித்துவப் புரட்சிக் கட்டத்திலிருந்து மாறுதலடைந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதற்குக் கட்சிக்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் வழி காட்டியது.

அந்த ஆய்வுரையில், “புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்திற்கு மாறுதலடைந்து செல்லும் கட்டத்தை இன்றைய ரசிய நிலைமை குறிக்கிறது. இதுதான் இன்றைய ரசிய நிலைமையில் காணப்படும் குறிப்பான அம்சம். முதல் கட்டத்தில் பாட்டாளிகளிடம் போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்பு பலமும் இல்லை. அதனால் அரசியல் அதிகாரத்தை முதலாளிகளிடம் புரட்சியின் முதல் கட்டம் ஒப்படைத்தது. புரட்சியின் இரண்டாவது கட்டம் பாட்டளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாகக் கீழ்ப்படியில் உள்ளவர்களிடமும் ஒப்படைக்க வேண்டும் என லெனின் கூறுகிறார்.

முதலாளியப் புரட்சிக் கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அனைத்து விவசாயிகள் வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டை லெனின் வலியுறுத்தினார். ஆனால் சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஏழை விவசாயிகள் வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டை லெனின் வலியுறுத்துகிறார்.

மேலும் அக்டோபர் புரட்சி பற்றி 1927ல் ஸ்டாலின் கூறுவதைப் பார்ப்போம்:

“1917 பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் சர்வாதிகாரம் மற்றும் “அனைத்து விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற பழைய மூல உத்தி முழக்கத்திற்குப் பதிலாக, பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயி வர்க்கத்தின் சர்வாதிகாரம் மற்றும் “ஏழை விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற புதிய மூல உத்தி முழக்கத்தைக் கட்சி வைத்தது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

“பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயி வர்க்கத்தின் சர்வாதிகாரம் என்ற புதிய மூல உத்தி முழக்கத்தை வெற்றிகரமாக நடைமுறையில் வைத்ததால்தான் அக்டோபரில் கட்சி வெற்றி பெற முடிந்தது என நான் உறுதியாகக் கூறுகிறேன்; அனைத்து விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற பழைய முழக்கத்திற்குப் பதிலாக ஏழை விவசாயி வர்க்கத்துடன் கூட்டணி என்ற புதிய முழக்கத்தைக் கட்சி வைத்திருக்காவிட்டால், அது அக்டோபரில் வெற்றியையோ அல்லது அக்டோபர் புரட்சியின் போக்கில் அனைத்து விவசாயிகளின் ஆதரவையோ பெற்றிருக்காது; அதாவது, போல்சுவிக்குகள் முதலாளியப் புரட்சியை நிறைவடையும் நிலைக்கு எடுத்துச் செல்லும் வரையில்தான் அனைத்து விவசாயிகளும் போல்சுவிக்குகளை ஆதரித்தார்கள், அக்டோபர் புரட்சியின் அடிப்படை நோக்கம் முதலாளியப் புரட்சி அல்ல, மாறாக சோசலிசப் புரட்சிதான் என்பதால் அனைத்து விவசாயிகளின் ஆதரவு என்பது நிபந்தனைக்கு உட்பட்டதாகவும், வரையறைக்கு உட்பட்டதாகவும் இருந்தது. (எஸ்.போக்ரோவ்ஸ்கிக்கு பதில்-ஸ்டாலின் தொகுதி.9)

நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், ரசியாவில் பிப்ரவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் நாட்டின் பொருளாதாரத்தில், அதாவது உற்பத்தி உறவுகளில் குறிப்பிடத்தக்க எந்த விதமான மாற்றமும் ஏற்படவில்லை. நாட்டில் ஏற்பட்ட ஒரே மாற்றம் அரசியல் அதிகாரத்தில் நடந்த மாற்றம்தான். அதுவரையிலும் ஜார் மன்னனிடமிருந்த அரசியல் அதிகாரத்தை பிப்ரவரிப் புரட்சியின்போது முதலாளிய வர்க்கம் கைப்பற்றியதுதான். அதுவே முதலாளியப் புரட்சி எனப்பட்டது.

ஆனால் அந்த முதலாளியப் புரட்சி மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாளிய வர்க்கம் அந்த நாட்டில் இருந்த பிரஞ்சு, ஆங்கில ஏகாதிபத்திய மூலதனங்களைக் கைப்பற்றவில்லை. ஏகாதிபத்தியங்களுடன் தனக்கு இருந்த உறவை முறித்துக் கொள்ளவில்லை. நிலப்பிரபுக்களிடமிருந்தும், பெரும் பண்ணையார்களிடமிருந்தும் நிலங்களைப் பறிமுதல் செய்து விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கவில்லை. இந்த நிலையில் ரசியா தொடர்ந்து முதலாளியப் புரட்சிக் கட்டத்தில்தான் உள்ளது என லெனின் கூறவில்லை. அதற்கு மாறாக, அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, நாடு முதலாளியப் புரட்சிக் கட்டத்திலிருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு மாறுதலடைந்துள்ளது என லெனின் கூறுகிறார். அதற்கான திட்டத்தை வைக்கிறார்.

அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றம்தான் புரட்சியின் கட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அரசியல் அதிகாரத்தில் இருந்த முதலாளிகளுக்கு எதிரான புரட்சி சோசலிசப் புரட்சியாக மாறியது. எனவே புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிப்பது அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் உள்ளது என்பதைப் பொறுத்தது தானே தவிர உற்பத்திமுறையில் நிலவி வரும் எச்சங்களை வைத்தல்ல. அதிகாரத்திலிருப்பது முதலாளிய வர்க்கமாக இருந்தால் அது அங்கு நிலவி வரும் முதலாளியத்திற்கு முந்திய நிலப் பிரபுத்துவ, அரைநிலப்பிரபுத்துவ உற்பத்தி முறைகளையும், பிற உற்பத்தி முறைகளையும் படிப்படியாகத் தனது நலன்களுக்கு ஏற்ற வகையில் முதலாளிய உற்பத்திமுறைக்குக் கொண்டு வரும் என்பதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாத விதியாகும். அந்த விதியின் படிதான் இந்தியாவில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய முதலாளிய வர்க்கமும் முதலாளியத்திற்கு முந்திய நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையை படிப்படியாகச் சீர்திருத்த முறையில் முதலாளிய உற்பத்தி முறையாக மாற்றி அமைத்துள்ளது.

அது போலவே அதிகாரத்திற்கு வரும் பாட்டாளி வர்க்கமும் அங்கு நிலவி வரும் முதலாளிய உற்பத்தி உறவுகளையும், முதலாளியத்திற்கு முந்தைய உற்பத்தி உறவுகளையும் புரட்சிகரமான முறையில் சோசலிச உற்பத்திமுறைக்கு மாற்றி அமைக்கும். இந்த வகையில், ரசியாவில் நடந்த சோசலிசப் புரட்சிதான் ஏகாதிபத்திய மூலதனங்களைக் கைப்பற்றியது; முதலாளிகளின் தொழிற்சாலைகளைக் கைப்பற்றியது. நிலங்களைத் தேச உடைமையாக்கியது; அதாவது முதலாளியப் புரட்சியின் கடமையை சோசலிசப் புரட்சி நிறைவு செய்தது. பிறகு சோசலிச உற்பத்திமுறைக்கான அடித்தளத்தை இட்டது.

ஆனால் 1947ல் பிரிட்டனிடமிருந்து இந்திய முதலாளி வர்க்கத்தின் கையில் அரசியல் அதிகாரம் வந்ததையும், அதன் மூலம் முதலாளியப் புரட்சி முடிவுற்று, இந்தியப் புரட்சி சோசலிசக் கட்டத்தில் நுழைந்ததையும் இந்தக் கட்சிகள் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கு மாறாக, ஏகாதிபத்தியத்துடனும் நிலப்பிரபுத்துவத்துடனும் அதிகாரத்தில் உள்ள முதலாளிய வர்க்கம் நெருங்கிய உறவு கொண்டுள்ளது எனக் கூறி இன்னும் இந்தியப் புரட்சி புதிய ஜனநாயகக் கட்டத்தில்தான் உள்ளது எனத் தவறாகக் கணித்தன. அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்தின் கையில் உள்ளது என்பதைப் பார்க்காமல், அரை நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை, ஏகாதிபத்திய மூலதனங்களுடன் உறவு ஆகியவற்றைக் காட்டி இன்னும் இந்த நாடு மக்கள் ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில், அதாவது முதலாளியப் புரட்சிக் கட்டத்தில்தான் உள்ளது என்கின்றன. இது முழுக்க முழுக்கப் பொருளாதாரவாதம்தானே தவிர மார்க்சிய-லெனினியம் அல்ல.

இந்தியாவில் 1947ல் அரசியல் அதிகாரத்திற்கு வந்த முதலாளிய வர்க்கம் நிலப்பிரபுத்துவு உற்பத்தியைப் படிப்படியாக சீர்திருத்த முறையில் மாற்றி முதலாளிய உற்பத்திமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. ஆனால் இங்கு இன்னும் வேளாண்மையில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே நீடிக்கிறது என்று கூறி புறநிலை உண்மையைக் காண மறுக்கின்றன. மார்க்சியத்திற்கு அடிப்படையான இயங்கியல் பார்வையை மறுத்து இயங்கியல் மறுப்புப் பார்வை கொண்ட கட்சிகளாகவே இவை உள்ளன.

முதலாளிய வர்க்கத்தின் கைகளில் அரசியல் அதிகாரம் வந்தததைக் கணக்கில் கொள்ளாமல் அக்கட்சிகள் தங்கள் திட்டத்தை வகுத்தன. அந்தத் தவறான திட்டமே எதிரிகளையும் நண்பர்களாகக் கருதும் சந்தர்ப்பவாதத்துக்கும், மீண்டும் மீண்டும் வர்க்க சமரசத்திற்கும், சீர்திருத்தவாதத்திற்கும், பிளவுகளுக்கும், கலைப்புவாதத்திற்கும் இட்டுச் செல்கின்றன.

லெனினின் வழிகாட்டுதலின் அடிப்படையில் பார்க்கும்போது நமது நாட்டில் அரசியல் அதிகாரத்தை வைத்துள்ள முதலாளிகளுக்கு எதிராக நடத்தப்பட வேண்டியது தொழிலாளர்கள் மற்றும் ஏழை விவசாயிகள் வர்க்கங்களின் தலைமையிலான சோசலிசப் புரட்சிதான். அவ்வாறு நடத்தப்படும் சோசலிசப் புரட்சியே முதலாளியப் புரட்சியின் கடமைகளையும் நிறைவு செய்யும். சோசலிச உற்பத்தி உறவைக் கட்டமைக்கும்.

புரட்சிகரத் திட்டம் இல்லாமல் புரட்சி இல்லை

ஒரு கட்சியின் திட்டம் சரியாக இருக்கும்போதுதான், புரட்சியின் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதைச் சரியாகத் தீர்மானித்து, அதன் அடிப்படையில் வர்க்க அணி சேர்க்கைகளை உருவாக்கி வழி நடத்திச் செல்லும்போதுதான் புரட்சி வெற்றி பெறும்.

இதைத்தான் மாவோ “புரட்சிக்கு முதல் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியே யார் நமது எதிரிகள்? யார் நமது நண்பர்கள்? என்பதாகும். சீனாவில் முந்தைய அனைத்துப் புரட்சிகரப் போராட்டங்களிலும் மிகச் சிறிய அளவே சாதிக்கப்பட்டதற்கான அடிப்படைக் காரணம், உண்மையான எதிரிகளைத் தாக்குவதற்கேற்ற உண்மையான நண்பர்களுடன் தம்மை ஒன்றிணைத்துக்கொள்ளத் தவறியதுதான் என்கிறார் (சீன சமூகத்தில் வர்க்கங்களின் பகுப்பாய்வு - மாவோ தே.ப.1).

ஒரு சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ள புரட்சியின் கட்டத்தைப் பொறுத்து வர்க்க அணி சேர்க்கைகளில் மாறுதல் ஏற்படும். புரட்சியின் கட்டத்தைச் சரியாகத் தீர்மானிக்கும்போதுதான் நண்பர்கள் யார், எதிரிகள் யார் என்பதையும் தெளிவாக வரையறுக்க முடியும். புதிய ஜனநாயகப் புரட்சிக் கட்டத்தில் பாட்டாளி வர்க்கம் அனைத்து விவசாயிகளுடனும் கூட்டணி வைக்கும். ஆனால் சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் ஏழை விவசாயி வர்க்கத்துடன் மட்டும் கூட்டணி வைக்கும். எனவே ஒரு திட்டம் புரட்சியின் கட்டத்தைச் சரியாகத் தீர்மானித்ததாக இருக்க வேண்டும்.

ஒரு சரியான புரட்சிகரத் திட்டம், அந்தத் திட்டத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஜனநாயக மத்தியத்துவத்தைக் கொண்ட பாட்டாளி வர்க்கக் கட்சி, அந்தக் கட்சியின் தலைமையின் கீழ் திரட்டப்பட்ட மக்கள் திரள் ஆகியவை புரட்சியின் வெற்றிக்கு இன்றியமையாதவை.

இன்றைய இந்திய சமூகம் சோசலிசப் புரட்சி கட்டத்தில்தான் உள்ளது. எனவே இன்று சரியான புரட்சிகரத் திட்டம் என்பது சோசலிசப் புரட்சித் திட்டமே. அத்தகைய புரட்சிகரத் திட்டத்தின்படி,

சோசலிசப் புரட்சியின் தலைமை பாட்டாளி வர்க்கத்தின் கையில் இருக்கும். ஏழை விவசாயி வர்க்கம் அதன் நெருங்கிய கூட்டாளியாக இருக்கும். புரட்சியின் எதிரிகள் முதலாளிய வர்க்கம் (ஏகபோக முதலாளிகள், ஏகபோகமற்ற முதலாளிகள், முதலாளியப் பெரும் நில உடைமையாளர்கள் ஆகியோர் இவற்றில் அடங்குவர்), இவர்களின் கைகளில்தான் இங்குள்ள அரசியல் அதிகாரம் இருக்கிறது. இங்கு ஏகாதிபத்தியச் சுரண்டலுக்குப் பாதுகாவலர்களாகவும், சமூக அடித்தளமாகவும் இவர்கள்தான் உள்ளனர்.

புரட்சியின் நோக்கங்கள்

மக்கள் நேரடியாகப் பங்கு கொள்ளும், சட்டமியற்றும் அதிகாரத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்ட ஜனநாயக அமைப்புகளுடன் கூடிய, சோவியத் வடிவிலான பாட்டாளி வர்க்கம் மற்றும் ஏழை விவசாயிகளின் சர்வாதிகாரத்தை நிறுவுவது, தேசிய இனங்களின் இறையாண்மையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரித்த சோசலிசக் குடியரசுகளின் ஒரு கூட்டரசை நிறுவுவது, ஏகபோக முதலாளிகள், ஏகபோகமற்ற முதலாளிகள், அந்நிய முதலாளிகளின் ஆகியோரின் மூலதனங்களைக் கைப்பற்றி, உற்பத்தியையும், விநியோகத்தையும் பாட்டாளி வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது, அனைத்து வங்கிகளையும் தேச உடைமையாக்குவது, நிலம் அனைத்தையும் தேச உடைமையாக்குவது, கூட்டு வாழ்வு மற்றும் சோசலிசத்திற்கான கல்வி மற்றும் பண்பாட்டை மேலெடுத்துச் செல்வது ஆகியவற்றைச் சோசலிசப் புரட்சி தனது முதன்மையான நோக்கங்களாகக் கொண்டிருக்க வேண்டும்.

இன்றைய கட்டத்தில் புரட்சிகரத் திட்டம் சோசலிப் புரட்சிக்கான திட்டம்தான். எனவே கம்யூனிசப் புரட்சியாளர்கள் அனைவரும் புரட்சிகரமான சோசலிசத் திட்டத்தின் கீழ் ஐக்கியப்பட்டு ஒரு புரட்சிகரப் பாட்டாளி வர்க்கக் கட்சியைக் கட்டமைக்க வேண்டும். அதனுடைய தலைமையின் கீழ் மக்களை அணி திரட்டி விடுதலையை நோக்கி வழி நடத்திச் செல்ல வேண்டும்.

 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ் நாடு

Comments

  1. சோசலிச புரட்சி என்பது சரியான முடிவு தான். ஆனால் ஆயுதம் தாங்கிய புரட்சி இன்று அவசியமா...! காஸ்ட்ரோ தனது இறுதி காலத்தில் அமைதியான முறையிலேயே சோசலிசம் அமைக்க முடியும் என்கிறார். புரட்சிகர கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்று நமது அரசியல் சட்டத்தை மாற்ற முடியாதா...? நான் இ. பொ. க, இ.பொ.க (மா) , இ. பொ. க (மா-லெ) ஆகியவற்றை ஆதரிக்க வில்லை. மேலும் ரகசிய கட்சி என்பதும் இப்போது சாத்தியம் இல்லை என கம்யூனிஸ்ட் உணர வேண்டும். புரட்சியின் கட்டம் மட்டும் சரியாக இருந்தால் போதாது. அதிகாரம் மாற்றம் எப்படி கொண்டு வருவது என்று யுத்த தந்திரமும் சரியாக இருக்க வேண்டும். நாம் நடத்த வேண்டியது சோசலிச புரட்சி தான். ஆனால் அதை எப்படி கொண்டு வருவது என்ற யுத்த தந்திரம் மற்றும் போர் தந்திரம் சரியாக கணிக்க வேண்டும்.

    தோழரே...!
    நீங்கள் முன் வைத்த சோசலிச புரட்சி திட்டத்திற்கு இடதுசாரி சிந்தனையாளர்களின் சிந்தனை மற்றும் கருத்து என்னவாக இருந்தது.
    என்றும் அன்புடன்,
    ஆர் சத்திய நாராயணன் நன்றி வாழ்த்துக்கள்
    21-09-2024

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...