Skip to main content

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

 

சென்னை, சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள், இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர். ஊதியம், வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல், கழிவறை, உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும், நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர்.

எனவே, சிஐடியூவுடன் இணைந்து 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது. சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்டு, அதனை வேதவாக்காக எடுத்துக் கொண்டு தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதைக் கிடப்பில் போட்டு தமிழக அரசு நாடகமாடி வருகின்றது.

பெரும்பான்மை தொழிலாளர்களின் பிரதிநிதித்துவம் பெற்றசாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை' அங்கீகரிக்க வேண்டும் என்று சாம்சங் நிர்வாகத்தை வலியுறுத்தித் தொழிலாளர்கள் செப்டம்பர் 9 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தொழிலாளர்களை நயவஞ்சகமாக ஏமாற்றி அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி வருகின்றது திமுக அரசு.

தொழிற்சங்கத்தின் பெயரில் சாம்சங் என்ற பெயர் இருப்பதாகவும், அதனால் அதனை பதிவு செய்யக்கூடாது என சாம்சங் நிர்வாகத்தின் தரப்பில் ஆட்சேபம் தெரிவித்திருப்பதாகவும் தமிழக அரசு சென்னை உயர்நீதி மன்றத்தில் எந்தவிதமான வெட்கமும் இல்லாமல் வாதாடுகின்றது. ஆனால், சாம்சங் நிறுவனமானது, ஆலையின் பெயரில் 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்’ என்று இந்தியாவை அடையாளமாக இணைத்துக் கொண்டுள்ளது. இந்த ஆலை இந்தியாவில் செயல்படுவதனால் எவ்வாறு இந்தியா என்ற பெயரை தன்னுடைய ஆலையின் பெயரில் இணைத்துக் கொள்வதற்கு தார்மீக உரிமை உள்ளதோ, அதே போன்று தான் அந்த ஆலையின் உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் முதன்மையான பங்காற்றி வரும் தொழிலாளர்களுக்கு தங்களை 'சாம்சங் தொழிலாளர்கள்' என்றும் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்றும் அழைத்துக் கொள்வதற்கு முழு உரிமையும் உள்ளது.

சாம்சங் தொழிலாளர்களின் மீது தமிழக அரசு அக்கறையுள்ளது போன்று காட்டிக் கொண்டு, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக சாம்சங் தொழிற்சங்கம் மற்றும் ஆலை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த மூன்று அமைச்சர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. அந்தக்குழு சாம்சங் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற முதன்மையான கோரிக்கை குறித்துக் காதில் கூட வாங்கி கொள்ளாமல், போராடும் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை வெளியே அனுப்பி விட்டு, ஆலை நிர்வாகத்திற்கும் சாம்சங் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட 'தொழிலாளர் குழு'விற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கி சமரசம் ஏற்பட்டு விட்டதாக அறிவிப்பு செய்தது.

அமைச்சர்கள் குழுவின் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில் சாம்சங் ஆலையானது தன்னுடைய பெயரை 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்' என்றும், சுருக்கமாக 'சாம்சங் சென்னை’ என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிற்கும், சென்னைக்கும் எந்தவிதத் தொடர்புமில்லாத சாம்சங் முதலாளி, அந்தப் பகுதியில் ஆலையை இயக்கி வருவதால் தன்னை அந்த இடங்களோடு அடையாளப்படுத்திக் கொள்ளும் பொழுது, இந்தியக் குடிமக்களாக உள்ளவர்களும் சென்னை ஆலையில் வேலை செய்பவர்களுமான தொழிலாளர்கள் தங்களைசாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்’ என்று ஏன் அழைத்துக் கொள்ளக் கூடாது என்பது குறித்து இந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் ஆலை நிர்வாகத்தை நோக்கி கேட்கவில்லை.

பெரும்பான்மை தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட சங்கத்தை அங்கீகரிக்காமல், தொழிற்சங்கத்திற்கு வெளியே இருக்கும் குறைந்த அளவேயான தொழிலாளர்களைக் கொண்டு 'தொழிலாளர் குழுவை உருவாக்கி அதனை தொழிலாளர்களின் பிரதிநிதியாகச் சித்தரித்து அதனுடன் பேச்சுவார்த்தை நடந்து முடிந்து விட்டதாக அறிவிக்கின்றது தமிழக அரசு. பாமர மக்கள் கூட எளிதாகப் புரிந்துக் கொள்ள கூடிய இந்தப் பிரச்சனையில், தமிழக அரசு எவ்வளவு அயோக்கியத்தனத்துடன் சிறிதும் நேர்மறையற்றமுறையில் நடந்துகொண்டுள்ளது என்பதை சாம்சங் தொழிலாளர்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் உணர்ந்துள்ளார்கள்.

தொழிற்சங்கத்தைபப் பதிவு செய்வது குறித்தான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்தப் பிரச்சனை மட்டும் நிலுவையில் உள்ளதாகவும், மற்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும் தமிழக அமைச்சர் பெருமக்கள் கூறுகின்றனர். ஆனால், தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வது மற்றும் பெரும்பான்மை தொழிலாளர்களின் அமைப்பானசாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை’ அங்கீகரிக்க ஆலை நிர்வாகம் மறுப்பது ஆகியவை குறித்து தமிழக அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது.

மேலும், தொழிற்சங்கப் பதிவை சட்டத்திற்குட்பட்டு முறையாகப் பதிவு செய்யாதததன் காரணமாகத்தான் தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளனர் என்பதையும், தொழிலாளர்களின் முதன்மையான கோரிக்கையே தொழிற்சங்க அங்கீகாரம் தான் என்பதையும் மறைத்து நாடகமாடி வருகின்றது தமிழக அரசு.

ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளை மதிப்பதில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் திமுக அரசு, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மதிப்பதில்லை. தொழிலாளர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து அவர்களின் போராட்டத்தை இழிவுபடுத்துகின்றது. முன்னணி தொழிலாளர்களை இரவோடு இரவாகக் கைது செய்து, யாருக்கும் தெரியாத இடத்தில் அடைத்து வைத்துள்ளது. அனுமதி வாங்கி நடத்தப்பட்ட போராட்டப் பந்தலைத் தூக்கி எறிந்து போராட்டத்தை ஒடுக்கத் துடிக்கின்றது. தொழிலாளர்கள் போராட்டத்தைத் தொடரலாம் என்று நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்பும், தொழிலாளர்களைக் கைது செய்வதும், போராட்டத்தை முடக்குவதும் என தமிழக அரசு சாம்சங் முதலாளிக்கு தன்னுடைய விசுவாசத்தைக் காட்டி வருகின்றது.

சாம்சங் விவகாரத்தில் மட்டுமல்ல, ஒட்டு மொத்தமாகத் தொழிலாளர்கள் நலன் விசயத்தில் திமுக அரசு முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலனகாவே செயல்பட்டு வருகின்றது. தொழிலாளி வர்க்கத்தின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தி முதலாளிகளைக் கொழுக்க வைக்கும் வகையில் கடந்த ஆண்டு ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக திமுக அரசு மாற்றியமைத்தது, தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அதனை விலக்கிக் கொண்டது. ஆனால், புதிய தொழிலாளர் சட்டங்களில் 12 மணிநேர வேலை நேர சட்டத்தை வகுத்து அதனை அமல்படுத்தத் தயாராக உள்ளது. மேலும் அரசு ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியிலமர்த்தி அவர்களின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்துகின்றது. நிரந்தரமாக உள்ள தூய்மைப் பணியாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்தப் பணியாளர்களை அமர்த்தி ஒப்பந்தகார முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறது. முதலாளிகளுக்கு முன்மாதிரியாக குறைந்த கூலியில் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்புச் சக்தியை சுரண்டுகின்றது.

தமிழகத்தில் திமுக அரசு மட்டுமல்ல, அனைத்து மாநிலத்திலும் ஆட்சியதிகாரத்தில் இருக்கும் பாஜக, காங்கிரசு, இதர கட்சிகளின் மாநில அரசுகளும் தொழிலாளி வர்க்கத்திற்கு எதிராக இத்தகைய போக்குகளையே கையாளுகின்றன. மத்தியில் இருக்கும் பாஜக அரசும், இதற்கு முன்பு ஆட்சியதிகாரத்தில் இருந்த காங்கிரசும் இத்தகைய போக்கையே கையாண்டு வருகின்றன என்பதை பாட்டாளி வர்க்கம் உணர்ந்து வருகின்றது. பாஜக அரசு எவ்வித ஜனநாயக முறைகளையும் பின்பற்றாமல் சர்வாதிகாரப் போக்கில் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாகச் சட்டங்களைத் திருத்தம் செய்து மாநில அரசுகளின் வழியாக அமல்படுத்தத்  தயாராக உள்ளது.

ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழல்களாகச் செயல்படும் ஊடகங்கள் தொழிலாளர்களின் போராட்டத்தின் காரணமாக சாம்சங் நிறுவனத்தின் முதலீடு தமிழ்நாட்டை விட்டு வெளியேறி விடும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றன. தொழிலாளர்களுக்கு வேலை பறிபோகும் என அச்சுறுத்துகின்றன. குறைந்த கூலியில் உழைப்புச் சக்தியைச் சுரண்டவும், இயற்கை வளங்களைக் குறைந்த விலையில் சூறையாடவும், மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை எவ்வித கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தவும், நிலம், மின்சாராம், நீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் குறைந்த விலையில் அனுபவிக்கவுமே இந்த மூலதனங்கள் இங்கு வருகின்றன. தொழிலாளர்கள் தங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடினால் தாங்கள் வெளியேறுவதாக முதலாளிகள் அச்சுறுத்தினால், அந்த ஆலையை அரசுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கையை தொழிலாளி வர்க்கம் முன்னெடுக்கும்.

ஒரு புறம் சாம்சங் நிர்வாகமும், அதிகார வர்க்கமும், தமிழகத்தை ஆளும் திமுகவும் ஒன்றிணைந்து தொழிலாளர்கள் சங்கமாவதைத் தடுக்கும் நோக்கோடு கைகோர்த்துச் செயல்படுகின்றன. மற்றோர் புறம் சிஐடியூவும் அதனை வழிநடத்தும் சீர்த்திருத்தவாத சி.பி.அய்.(மா) கட்சியும் தொழிலாளர்களை தொழிற்சங்கவாத கண்ணோட்டத்தில் மூழ்கடித்து வருகின்றன. தொழிலாளர்கள் வர்க்க உணர்வு பெறாமல் தடுத்து வருகின்றன. இந்திய அரசின் வர்க்கத் தன்மை பற்றி தொழிலாளர்கள் மத்தியில் அவை பேசுவதில்லை. அரசு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் பொதுவானது என்னும் மாயையை தொழிலாளர்கள் மத்தியில் பரப்பி வருகின்றன. அது மாநிலமாக இருந்தாலும் சரி, ஒன்றியமாக இருந்தாலும் சரி. இங்கு இருப்பது முதலாளிய வர்க்கத்தின் நலனுக்கான அரசுதான் என்பதையும், இங்கு நடப்பது முதலாளிய நலன்களுக்கான அதிகார வர்க்கத்தின் ஆட்சிதான் என்பதையும், ஆட்சியில் உள்ள கட்சிகள் அனைத்தும் முதலாளிகளின் ஏஜண்டுகள்தான் என்பதையும் அவை தொழிலாளர்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதில்லை.

பாட்டாளி வர்க்கத்தின் தலமையில் அரசியலதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்த போதனையை அவை மறந்தும் தொழிலாளர்களிடம் கொண்டு செல்வதில்லை. ஏனெனில் அவர்களுக்கு அந்தத் திட்டம் இல்லை. கம்யூனிஸ்டுகள் என்ற போர்வையில் தொழிலாளர்களையும், விவசாயிகளையும் அணிதிரட்டி பாராளுமன்றப் பதவிகளில் சுகம் காண்பதே இவர்களின் இலக்காக உள்ளது. ”சாம்சங் தொழிலாளர்களுக்கு கருணை காட்டி அவர்களின் வாக்கு வங்கியை உறுதிப்படுத்தி உங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள்” என்று சிஐடியூ மாநிலத் தலைவர் சவுந்திரராஜன் போராட்டப் பந்தலில் திமுக அரசிடம் கோருகின்றார்.

சாம்சங் தொழிலாளர்களுக்கு வர்க்க உணர்வோடு பல்வேறு பகுதிகளிலிருந்து ஆதரவு தெரிவிக்க வரும் தொழிற்சங்கங்களையும், தொழிலாளர்களையும் போராட்டக் களத்திற்கு உள்ளே நுழையாமல் பார்த்துக் கொள்வதில் சிஐடியூ தலைமை கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டு வருகின்றது. சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் இதர தொழிலாளர்களின் ஆதரவோடு ’அரசியல் போராட்டமாக’ வீரியம் பெறுமானால், அது தனது இருப்புக்கே ஆபத்தை விளைவிக்கும் என்று அஞ்சி, சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்தை அவர்களோடு மட்டுமே சுருக்கிக்கொள்ளும், குறுங்குழுவாதப் போக்கைக் கையாள்கின்றது. சிஐடியூவின் மீதான அதிகார வர்க்கத்தின் தாக்குதலைச் சமாளிக்க அவ்வப்பொழுது மட்டும் அதன் இதர தொழிற்சங்கங்களைக் கொண்டு அடையாளப் போராட்டங்களை நடத்தி வருகின்றது.

தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவைப் புறக்கணித்த சிஐடியூ, முதலாளித்துவ- குட்டி முதலாளித்துவக் கட்சிகளின் பிரதிநிதிகளைத் தம்முடைய போராட்டத் திடலுக்குள் அழைத்து வந்து, தமக்குப் பின்னால் பெரும் பலம் வாய்ந்த சக்திகள் இருப்பது போன்று தொழிலாளர்களை ஏமாற்றுகின்றது. ஆனால், இந்த முதலாளித்துவ - குட்டி முதலாளித்துவக் கட்சிகள் எப்பொழுதும் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கு எதிராகவே செயல்படும் என்பதையும், தொழிலாளிகளின் போராட்டக் களத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பவாதிகள் என்பதையும் தொழிலாளி வர்க்கம் விரைவில் உணர்ந்து கொள்ளும்.

தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கத்தைப் பதிவு செய்யவும். அங்கீகரிக்கவும் போராடும் சாம்சங் தொழிலாளர்களுக்கு மற்ற அனைத்துத் தொழிலாளர்களும் வர்க்க உணர்வோடு உறுதுணையாக இணைந்து செயல்பட வேண்டும், தொழிற்சங்கத்தில் இணையாமல் தனித்து இருக்கும் தொழிலாளர்களையும் வர்க்கமாக ஒன்றுதிரட்டும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஆளும் கட்சிகளும், அதிகார வர்க்கமும் எப்பொழுதும் இந்திய மற்றும் பன்னாட்டு மூலதனத்திற்கு ஆதரவாகவே செயல்பட்டு வருவதை அம்பலப்படுத்தி, தொழிற்சங்கத் தலைமைகள் முதலாளித்துவக் கட்சிகளுடன் கொண்டுள்ள உறவைத் துண்டித்துக் கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் ஐக்கியத்தை நோக்கி வருவதற்கு நிர்ப்பந்திக்க வேண்டும். இதுவே போராட்டக் களத்தில் இருக்கும் சாம்சங் தொழிலாளர்கள் மற்றும் அனைத்துத் தொழிலாளர்கள் முன்னே இருக்கும் கடமையாக இப்பொழுது உள்ளது.

 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...