Skip to main content

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

 

தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின்போராட்டம், அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை, வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும், அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால், போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல், ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது. 

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்த சிஐடியூ, கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்த பின்பு, அந்தப் போராட்டக் களத்தைத் தம்மோடு மட்டும் சுருக்கிக் கொண்டது. சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் தங்களுடைய ஆதரவுக் கரங்களை நீட்டினர். ஆனால், சாம்சங் தொழிலாளர்கள் பிற தொழிலாளர்களோடு இணைந்தால் அது வர்க்க உணர்வு மேலோங்க வழிவகுக்கும் என்பதால் பிற தொழிற்சங்கங்களின் ஆதரவை சிஐடியூ புறந்தள்ளியது; போராட்டக் களத்தில் சாம்சங் தொழிலாளர்களைச் சந்திக்க பிற தொழிற்சங்கங்கள் முயற்சி செய்தபொழுது பல்வேறு சாக்குப் போக்குகளைக் கூறித் தவிர்த்தது. 

சிபிஎம் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் உள்ள சிஐடியூ, சாம்சங் தொழிலாளர்களை தமது தலைமையின் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொள்வது, அதன் மூலம் நிதி திரட்டும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வது, நாடாளுமன்ற-சட்டமன்ற தேர்தலுக்கான பேரம் பேசத் தமது கட்சியின் பலத்தை வலிமைப்படுத்திக் கொள்வது ஆகிய நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த நினைத்தது. அதற்காக சாம்சங் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும், அரசின் தாக்குதலை எதிர்கொள்ளவும் சிஐடியூ அணியைச் சார்ந்தவர்களை மட்டுமே பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்த சிஐடியூ தலைமை வழிகாட்டியது. முதலாளித்துவ – குட்டிமுதலாளித்துவ கட்சியினரை போராட்டக் களத்திற்குள் அனுமதித்து, தொழிலாளர்களின் போராட்டத்திற்கு இந்த சக்திகளின் ஆதரவும் இருக்கிறது என்ற போலியான பிம்பத்தை கட்டமைத்தது. 

இடதுசாரிகள் இணைப்புடன் கூடிய தொழிற்சங்கங்கள் என்றாலே பீதியுறும் முதலாளி வர்க்கம், ஆளும் வர்க்கத்தின் கூட்டாளியான சிஐடியூவை கூட அச்சத்தோடுதான் பார்க்கிறது. ஏனெனில் சிஐடியூவிற்கு அரசியல் தலைமை அளிக்கும் சிபிஎம் கட்சிக்கு முதலாளித்துவ வர்க்கத்தைத் தூக்கியெறிந்து பாட்டாளி வர்க்கத்தைக் கூலி அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற திட்டம் எதுவும் இல்லையென்றாலும், இடதுசாரி என்ற பதாகையின் கீழ் தொழிலாளர்கள் அணிதிரட்டப்பட்டால், சீர்த்திருத்தவாத தலைமையையும் மீறி தொழிலாளர்களின் வர்க்க உணர்வு மேலோங்குவதற்கு இது வழிவகுக்கும் என்று முதலாளி வர்க்கம் அஞ்சுகின்றது. 

எனவே தான் சாம்சங் ஆலை நிர்வாகம் தங்கள் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களை மட்டுமே தொழிற்சங்கப் பிரதிநிதியாக ஏற்க முடியும் என்றும், இடதுசாரி அணியின் கீழ் உள்ள தொழிற்சங்கத்தை ஏற்க முடியாது என்றும் மறுத்து வருகின்றது. தமிழக அரசு சங்கத்தைப் பதிவு செய்யுமானால், சாம்சங் நிர்வாகத்திற்கு தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்பதால், அரசு சங்கத்தைப் பதிவு செய்யாமல் கிடப்பில் போட்டது. 

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் வெகு மக்களின் கவனத்தைப் பெற்று வந்ததால், இது அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கி வந்தது. எனவே, போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு தமது நாடகத்தைத் தொடங்கியது. பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்க அமைச்சர் குழுவை நியமித்தது. போராடும் தொழிலாளர்களின் பிரதிநிதியாக சிஐடியூ உள்ளே வரக்கூடாது என சாம்சங் நிர்வாகத்தின் கோரிக்கையையே அப்படியே அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டு அதை 07.10.2024 அன்றைய பேச்சுவார்த்தையில் நிர்ப்பந்திக்கவும் செய்தார்கள். இது தமது இருப்புக்கே ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் சிஐடியூ முதலில் அதனை ஏற்க மறுத்தது. 

ஆனால், தமிழக அரசோ நிர்வாகத் தரப்பால் உருவாக்கப்பட்ட சிறுபான்மை தொழிலாளர்களின் பிரதிநிதியான தொழிலாளர் குழு’ என்ற பொம்மைச் சங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி பிரச்சனை முடிந்து விட்டதாக அறிவித்தது. போராட்டக் களத்தில் இருக்கும் தொழிலாளர்களின் பிரதிநிதியான சிஐடியூ அதனை ஏற்காமல் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்தது.  

ஆனால், ஆளும் வர்க்கத்தின் பாதுகாவலனாக இருக்கும் முதலாளித்துவக் கட்சியான திமுக, முதலாளி வர்க்கத்தின் நலனைக் காக்க தொழிலாளர்கள் மீது காவல்துறை அடக்குமுறைகளை ஏவியது. இரவோடு இரவாகத் தொழிலாளர்களைக் கைது செய்தது, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கிய பின்பும், தொழிலாளர்கள் போராட்டக் களத்தில் ஒன்று சேராதவாறு அவர்களை விரட்டியது. போராட்டப் பந்தல்களைப் பிரித்து எறிந்தது. காவல்துறையைக் கொண்டு தொழிலாளர்களையும், அவர்களின் குடும்பங்களையும் அச்சுறுத்தியது. 

சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் மட்டுமே கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு வாய்ப்பை உருவாக்கி விடும் என்ற எண்ணத்தில் சிஐடியூ போராட்டக் களத்தை விரிவுபடுத்தவில்லை. ஆனால், சாம்சங் நிர்வாகமோ, தொழிலாளர் நலத்துறையோ தொழிலாளர்களின் சட்டப்படி உரிமையான தொழிற்சங்க உரிமையை அங்கீகரிப்பதற்குச் சிறிது கூடத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. 

இந்த நிலையில், தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஆதாயம் அடையத் துடிக்கும் சிஐடியூ தலைமையோ, தாம் முன்வைத்த கோரிக்கைகளில் முதன்மையான கோரிக்கையான சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு, தாங்கள் அப்படி ஒரு கோரிக்கையை வைக்கவே இல்லை எனக் கூறி வருகிறது. சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பது எமது கோரிக்கையல்ல என்று சிஐடியூ தலைவர் சவுந்திரராசன் 15.10.2024 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில் நா கூசாமல் கூறுகிறார். 

15.10.2024 அன்று தொழிலாளர் துறை அலுவலர்கள் முன்னிலையில் ஆலை நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கத்திற்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தில் நிர்வாகத் தரப்பினரை 'சாம்சங் நிர்வாகப் பிரதிநிதிகள்' எனக் குறிப்பிட்டுள்ள அரசு, தொழிற்சங்கப் பிரதிநிதிகளை 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்' என்று குறிப்பிடவில்லை. சங்கத்திற்கு எந்தப் பெயரும் இல்லாமல் 'தொழிற்சங்கப் பிரதிநிதிகள்' என்று பொதுவான பெயரை அரசு பயன்படுத்தியுள்ளது.  

'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை’ அங்கீகரிக்க வேண்டும் மற்றும் 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்துடன்' அது எழுப்பியுள்ள கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைமை வலியுறுத்தவேயில்லை; மேலும்தொழிலாளர்கள் தாக்கல் செய்துள்ள கோரிக்கைஎன்று அந்த ஒப்பந்தத்தில் சங்கத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கோரிக்கை மனுவை தொழிலாளர்களின் பிரதிநிதியாக தொழிற்சங்கம்தான் அளித்துள்ளதே தவிர, தொழிலாளர்கள் அல்ல என்பதைத் தொழிற்சங்க தலைமையும், நிர்வாகமும், அரசும் சேர்ந்தே மறைத்து விட்டன. 

சாம்சங் ஆலை நிர்வாகமோ "கோரிக்கைகள் தொடர்பாக தங்களது தொழிலாளர்களுடன் மட்டுமே நேரடியாகப் பேசித் தீர்வு காணப்படும்" என்ற தமது நிலைபாட்டை எழுத்துபூர்வமாக ஒப்பந்தத்தில் முன்வைத்துள்ளது. 

நிர்வாகமும், அரசும் தொழிலாளர் விரோதப் போக்கில் உறுதியாக இருந்தன. ஆனால் சிஐடியூ தனது கட்சியின் கூட்டணி தர்மத்திற்காகவும், சட்டமன்ற இலாபத்திற்காகவும் போராட்டத்தைக் கைவிட்டது; முதன்மையல்லாத கோரிக்கையின் மீது தமது பதிலை சாம்சங் நிர்வாகம் அளிக்க வேண்டும் என அரசு அதிகாரிகள் சொன்னதையே தலைமை ஏற்றுக்கொண்டு போராட்டத்தின் வெற்றியாகச் சித்தரித்தது; முதன்மைக் கோரிக்கையான சங்க அங்கீகாரம் என்ற கோரிக்கையை நாங்கள் கேட்கவேயில்லை என்று முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. 

ஆனால், 08.09.2024 அன்று சிஐடியூ தமது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் வேலை நிறுத்தக் கோரிக்கையின் முதல் கோரிக்கையாக 'சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும்’ என்பதைத்தான் வைத்திருந்தது. அதை சிஐடியூ தலைவர் அ.சவுந்திரராஜன் மறைத்து விட்டார் அல்லது வேண்டுமென்றே மறந்து விட்டார். போராட்டம் ஆரம்பித்த நான்காவது நாளில் செப்டம்பர் 12 ஆம் தேதி சிஐடியூ தமிழ்நாடு மாநிலக்குழு வெளியிட்ட அறிக்கையில் தொழிற்சங்கம் அமைத்துக் கொள்ளும் உரிமையை ஏற்க வேண்டும் என்பது தான் எமது முதன்மைக் கோரிக்கை என்றும் மற்ற கோரிக்கைகளை உடனே பேசி முடிவெடுக்க வேண்டும் எனக் கோரவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

07.10.2024 அன்று அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அரசின் போக்கைக் கண்டித்து வெளியேறிய பிறகு சிஐடியு தலைவர் அ.சவுந்திரராஜன் மற்றும் பொதுச்செயலாளர் ஜி சுகுமாறன் இருவரும் வெளியிட்ட கூட்டறிக்கையில், வேலைநிறுத்தம் திரும்ப பெறுவதற்கான உடனடி நிபந்தனை ஊதிய உயர்வோ அல்லது இதர கோரிக்கைகளோ அல்ல, சங்கம் அமைக்கும் உரிமையே என்று அறிவித்தனர். அக்டோபர் 9 ஆம் தேதி ப்ரண்ட்லைன் பத்திரிக்கைக்கு சிஐடியூ மாநிலத் தலைவர் அ.சவுந்திரராஜன் அளித்த பேட்டியில் சங்க அங்கீகாரமே முதன்மை கோரிக்கை என்றும், இது நிறைவேற்றப்பட்டால் வேலைநிறுத்தம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

ஒட்டுமொத்தமாக சாம்சங் தொழிலாளர்களுடைய போராட்டத்தின் முதன்மைக் கோரிக்கை சங்க அங்கீகாரம் மட்டுமே என்பது வெளிப்படை. சங்கத்தைப் பதிவு செய்வது மற்றும் ஊதியம், பணி நிலைமைகள் குறித்தான கோரிக்கைகள் உடனடி கோரிக்கைகள் அல்ல என்றும் சிஐடியூ தொடர்ந்து சொல்லி வந்தது.  

தொழிற்சங்கம் அமைப்பதும் அதனை அரசு பதிவு செய்வதும் தொழிலாளர்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும். ஆனால் இந்த அடிப்படை உரிமையை அங்கீகரித்து தொழிலாளர் நலத்துறை தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தது. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையைச் செயல்படுத்த வேண்டும் என்று கூட்டணி கட்சியான திமுகவின் தலைமையில் உள்ள அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் திராணி சிஐடியூவிற்கு இல்லை. அவ்வாறு நெருக்கடி கொடுத்தால் கூட்டணியிலிருந்து வெளியேற நேரிடும். அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அவர்கள் கொடுக்கும் ஒன்றிரண்டு சட்டமன்ற இடங்கள் கூட இல்லாமல் போய்விடும் என்பதால் மென்மையான போக்கைக் கையாண்டனர்; பிரச்சனையை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று கிடப்பில் போட்டனர். 

திமுக அரசு தமது வர்க்க நலனுக்காக கூட்டணி தர்மத்தைக் கைவிட்டு தொழிலாளர்களின் மீது அடக்குமுறையை ஏவியது. ஆனால், சிஐடியூவோ தமது கூட்டணி நலனுக்காக போராடும் தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கைவிட்டு, தாம் அப்படி கோரவே இல்லை என்று தொழிலாளர் வர்க்க நலனை அடகு வைத்தது. 

குறுங்குழுவாதப் போக்கில் விழுந்து விட்ட சிஐடியூ, திமுக அரசின் வர்க்கப் பா(சி)சத்திற்கு முன்னால் நிற்க முடியாமல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது; 15.10.2024 அன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டு விட்டதாகவும், போராட்டத்தைக் கைவிடுவதாகவும் அறிவித்தது. 

எனினும் இந்தப் போராட்ட முடிவை அனைவரும் வெற்றியாகக் கொண்டாட முடிவு செய்தனர். தொழிலாளர்களின் பொது கோரிக்கைகளின் மீது நிர்வாகம் எழுத்துபூர்வமாக பதிலளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதையே தமது வெற்றியாக அறிவித்து சிஐடியூ தலைமை வெற்றியைக் கொண்டாடுகிறது. ஆனால் உண்மை என்னவென்றால் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றை மறுத்தும் நிர்வாகம் எழுத்துபூர்வமாக பதில் அளிக்கலாம். 

தொழிற்சங்க உரிமையைக் காலில் போட்டு மிதித்தும், போராடும் உரிமை, கூட்டம் கூடும் உரிமை ஆகியவற்றை மறுத்தும், காவல்துறையைக் கொண்டு தொழிலாளர்களை வேட்டையாடியும் அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்ட தமிழக முதல்வரோ 'நடந்தவற்றை கடந்தனவாகக் கருதி நாம் அவற்றை பின் தள்ள வேண்டும்" என்றும், திமுக அரசு எப்பொழுதும் தொழிலாளர்களின் பக்கம் தாம்’ என்றும் கூறி இதனைத் தம் வெற்றியாகக் கொண்டாடுகின்றது. 

உண்மையில் தமிழக அரசுக்கும் சிஐடியூ தலைமைக்கும் இது வெற்றி தான். சாம்சங் நிறுவனத்தின் வர்க்க நலனைக் காத்ததன் மூலம் தமிழக அரசு வெற்றி கண்டது. சாம்சங் தொழிலாளர்களை பிற தொழிலாளர்களோடு ஒன்றிணையாமல் தடுத்து வர்க்க உணர்வும் வர்க்க ஒற்றுமையும் வலுப்பெறாமல் தடுத்ததன் மூலம் சிஐடியூ வெற்றி கண்டது.  

போராட்டக்களத்தில் எஃகுறுதியுடன் போராடிய தொழிலாளர்கள் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் ஒருபுறம், அரசின் முதலாளி வர்க்கச் சார்பையும், முதலாளிய வர்க்கத்தினைக் காப்பாற்ற அதிகார வர்க்கம் மேற்கொள்ளும் அடக்குமுறைகளையும், இன்னொருபுறம், சிஐடியூ தொழிற்சங்கத் தலைமையின் குறுங்குழுவாதப் போக்கு மற்றும் சீர்த்திருத்தவாதப் போக்கையும் தொழிலாளர்கள் உணர்வதற்கு இந்தப் போராட்டம் பெரும் படிப்பினையாக அமைந்துள்ளது. இதுபோன்ற போராட்டக் களத்தின் படிப்பினைகள் இனிவரும் காலங்களில், தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி அணிதிரள தமது தலைமைகளை நிர்ப்பந்திக்கவும், அனைத்துத் தொழிலாளர்களும் வர்க்க உணர்வோடு போராட்டக் களத்தை முன்னெடுக்கவும் தொழிலாளர்களுக்கு வழிகாட்டும்.

  

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு







Comments

Popular posts from this blog

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின் ...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...