2004
முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பதினான்காம் பிரதம மந்திரியாக இருந்த திரு.
மன்மோகன் சிங் அவர்கள் தனது 92 ஆம் வயதில் 26.12.2024 அன்று
மறைந்தார்.
சிறந்த
பொருளாதார அறிஞர், நவீன இந்தியாவிற்கு வித்திட்டவர், கண்ணியமான அரசியல்வாதி, நேர்மையானவர்,
கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், மென்மையான அணுகுமுறையைக் கொண்டவர் எனப்
பல்வேறு விதமாக இந்தியாவில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க் கட்சியினரும்,
பன்னாட்டுத் தலைவர்களும் மறைந்த மன்மோகன் சிங் அவர்களுக்குப் புகழாரங்களைச்
சூட்டியுள்ளனர்; இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி
கற்றவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்
பெற்றவர், இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் எனப் பத்திரிகைகளும்
தொலைக்காட்சிகளும் அவருடைய சிறப்புகளைப் பற்றிப் புகழ் பாடியுள்ளன.
மன்மோகன்
சிங் 1991 முதல் 1996 வரை ஒன்றிய அரசில் காங்கிரசின் நரசிம்மராவ் தலைமையில் இருந்த
அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர். அவருடைய காலத்தில்தான். தாராளமயமாக்கல்,
தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற புதிய தாராளவாத முதலாளியத்திற்கு இந்தியாவில்
கதவு திறந்து விடப்பட்டது. உலக வங்கி, சர்வதேச நிதியம்(IMF) ஆகியவற்றின் விருப்பப்படி
சர்வதேச ஏகபோக மூலதனத்தின் கொள்ளை இலாபத்திற்காக இந்தியாவின் சந்தை திறந்து
விடப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீது
சராசரியாக 85% ஆக இருந்த வரிகள் சராசரியாக 25% ஆகக் குறைக்கப்பட்டன. இறக்குமதி
செய்யப்படும் பொருட்களின் அளவு மீது இருந்த கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டன.
இந்தியத் தொழில்களில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு இருந்த 40% என்ற கட்டுப்பாடு 51%
ஆக உயர்த்தப்பட்டது. சில தொழில்களில் 100% அந்நிய நேரடி முதலீடு செய்ய
அனுமதிக்கப்பட்டது. பொதுத்துறையில் இருந்த தொழிற்சாலைகளின் பங்குகள் தனியாருக்கு
விற்கப்பட்டன.
உள்நாட்டில்
சந்தை மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன; பெரும் குழுமங்களின் மீதான வரிகள்
குறைக்கப்பட்டன; நிதிப்பற்றாக் குறையை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று
சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் காரணமாக கல்வி, மருத்துவம் போன்ற
மக்கள் நலனுக்கான செலவுகள் குறைக்கப்பட்டன. விவசாயத்திற்கு கொடுக்கப்பட்டு வந்த உர
மானியங்கள் குறைக்கப்பட்டன. விவசாய உற்பத்தி உலகச் சந்தையுடன் இணைக்கப்பட்டது.
விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை உலகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு
உட்படுத்தப்பட்டது; உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததாலும்,
இடுபொருட்களின் விலை ஏற்றங்களாலும், கந்து வட்டிக் கொடுமையாலும் பெரும் கடன்
சுமைக்கு ஆளாகி இலட்சக்கணக்கான விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும்
நிலைக்குத் தள்ளப்பட்டனர். சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைத்தல் என்ற பெயரில்
விவசாயிகளின் நிலம் பறிக்கப்பட்டது. நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டமும்
ஏற்றத்தாழ்வும் அதிகரித்தன.
சுற்றுச்
சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கனிம வளங்கள் கொள்ளையடிக்க வழிவகுக்கப்பட்டன.
கனிம வளக் கொள்ளைக்குத் தடையாக இருந்த பழங்குடி மக்கள் அவர்களுடைய இடங்களிலிருந்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். 2005, ஜூன் 4 ந்தேதி சட்டிஷ்கர் மாநிலத்தில்
உள்ள பஸ்தாரில் எஃகு ஆலை அமைக்க டாட்டாவிற்கு மன்மோகன் சிங்கின் தலைமையில் இருந்த
அரசு அனுமதி அளித்தது. அதே நாளில் பஸ்தாரில் சல்வா ஜுடும் (சுத்திகரிப்பு வேட்டை)
என்னும் பெயரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரகுமார் என்பவர் பெயரில்
தனியார் படை உருவாக்கப்பட்டது. எஃகு ஆலை அமைக்கத் தடையாக இருந்த பழங்குடி மக்கள்
நக்சலைட்டுகள் என்ற பெயரில் வேட்டையாடப்பட்டனர், இருப்பிடங்களிலிருந்து
வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட்டனர்.
அப்பொழுது அந்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த ராமன் சிங் தலைமையில் இருந்த பாஜக
அரசு அதற்கு முழு ஆதரவு அளித்தது. இவ்வாறு கனிம வளங்களை முதலாளிகள் கொள்ளையடிக்க
மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஒன்றிய அரசும், மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக
அரசம் கைகோர்த்துக் கொண்டு பழங்குடி மக்களை அடக்கி ஒடுக்கின. காங்கிரசின் அரசும்
பாஜக அரசும் எப்பொழுதும் முதலாளிகளின் நலன்களுக்குச் சேவை செய்யும் விசுவாசமான ஏஜண்டுகள்தான்
என்பதை நிரூபித்தன.
முதலாளிய
வர்க்கத்தின் மீதான விசுவாசம்தான் 2006 ஆண்டு ஏப்ரல் மாதம், மாவோயிஸ்ட்டுகள்
செயல்பட்டு வந்த பதின்மூன்று மாநிலங்களின் முதல் அமைச்சர்கள் கூட்டத்தில், “சுதந்திரம்
பெற்ற காலத்திற்குப் பிறகு உள்நாட்டுப் பாதுகாப்புக்கு உள்ள ஒரே பெரிய ஆபத்து
நக்சலிசப் பிரச்சினைதான்” என மன்மோகன் சிங் பேசினார். அதே மொழியைத்தான் இன்று
உள்நாட்டு அமைச்சராக உள்ள அமித் சாவும் பேசி வருகிறார். அப்பொழுது மன்மோகன்
சிங்கிற்கு பாஜக வடிவில் வளர்ந்து வந்து கொண்டிருந்த பாசிசம் முக்கியமான ஆபத்தாகத்
தெரியவில்லை. மாறாக பழங்குடி மக்களின் நலன்களுக்காகவும் உரிமைகளுக்காகவும் போராடி வரும்
நக்சல்பாரிப் புரட்சியாளர்கள்தான் பேராபத்தாகத் தோன்றினார்கள்.
மன்மோகன்
சிங் போட்ட பாதையை மேலும் பன்மடங்கு விரிவுபடுத்தி ராஜபாட்டையாக மாற்றியது 1999ல்
ஆட்சிக்கு வந்த வாஜ்பாயின் பாஜக அரசு. பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை
வார்க்கப்படுவது வேகப்படுத்தப்பட்டது. 2014ல் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடியின்
அரசு அதே பாதையில் பயணித்து பொதுத்துறை நிறுவனங்களான விமானப் போக்குவரத்து,
இரயில்வே, விமான நிலையங்கள் துறைமுகங்கள் என அனைத்தையும் அதானிக்கும்
அம்பானிக்கும் டாட்டாவிற்கும் விற்று வருகிறது.
மன்மோகன்
சிங் காலத்தில்தான் வேலைக்கான உரிமைச் சட்டம், உணவுக்கான உரிமைச் சட்டம்,
கல்விக்கான உரிமைச் சட்டம், தகவல் உரிமைச் சட்டம் போன்ற சட்டங்கள் கொண்டுவரப்பட்டன
என அவருடைய சாதனைகளாக அவற்றைச் சுட்டிக் காட்டுகின்றனர். இந்தச் சட்டங்களால்
அனைவருக்கும் வேலை கிடைத்துள்ளதா? அனைவருக்கும் உணவு கிடைத்துள்ளதா? அனைவருக்கும்
கல்வி கிடைத்துள்ளதா? என்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. இது போன்ற சட்டங்கள் வெற்று
அலங்கார வார்த்தைகளாகவே சட்டப் புத்தகங்களில் இருக்கும். முதலாளிகளின் ஏஜண்டாக உள்ள
அதிகார வர்க்கம் முதலாளிகளுக்கான சட்டங்களை உடனடியாக முழுமையாக விசுவாசத்துடன் நடைமுறைப்படுத்தும்.
ஆனால் மக்களுக்கான சட்டங்களைச் சிறிதும் சட்டை செய்யாது, கிடப்பில் போடும். அதுதான்
இந்தச் சட்ட விடயங்களிலும் நடந்தது.
புதிய
தாராளவாதக் கொள்கையால் முதலாளிகளுக்கு இலாபங்கள் பெரும் அளவு பெருகுகின்றன. ஆனால்
உழைக்கும் மக்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிப்பதில்லை. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப
அவர்கள் கூலியிலும் உயர்வு ஏற்படுவதில்லை. அதனால் சந்தையில் தேக்கமும், தொழில்
நெருக்கடியும் ஏற்படுகிறது. எனவே பொருட்களின் விற்பனையை அதிகரிக்க உழைக்கும்
மக்கள் கைகளில் பணம் இருப்பது அவசியம். அதற்காக கீனிசியப் பொருளாதாரத்தை நன்கு
அறிந்திருந்த பொருளாதார அறிஞர் மன்மோகன் சிங் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் மூலம் சந்தையில் பொருட்களுக்கான தேவையை
(Demand) அதிகரிக்க நடவடிக்கை எடுத்தார். உண்மையில் அந்தத் திட்டத்தை உழைக்கும்
மக்களுக்கானது என்பதை விட முதலாளிகளை நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதற்கான
திட்டம் என்றே கூற வேண்டும். ஆனால் அந்தத் திட்டத்திற்குக் கூடப் போதிய நிதியை
ஒதுக்காமல் அதை ஒழிக்கும் வகையில் இன்றைய பாஜக ஆட்சி செயல்பட்டு வருகிறது.
மன்மோகன்
சிங் ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் 2G அலைக்கற்றை ஊழல், நிலக்கரிச் சுரங்க
ஒதுக்கீடு ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல் என ஊழல்கள் பெருத்தன. முதலாளிய வர்க்கத்திற்கு அவசியமான
சீர்திருத்தங்களை எல்லாம் படு வேகத்தில் செயல்படுத்தி வந்த மன்மோகன் சிங் இந்திய
முதலாளிகளுக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கும் வீர நாயகனாகத் தோன்றினார். ஆனால்
அவருடைய செயல்பாடுகள் இந்தியாவைப் பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளின. ஊழல்கள்
அதிகரித்தன. முதலாளிகளின் கொள்ளை இலாபம் அதிகரித்தது. நாட்டில் ஏற்றத்தாழ்வு
அதிகரித்தது. விலைவாசி உயர்ந்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் அதிகரித்தது.
நெருக்கடிகள் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், பழங்குடியினர், மாணவர்கள்,
வழக்குரைஞர்கள், வணிகர்கள் என அனைத்து மக்களையும் போராட்டப் பாதைக்கு இழுத்து
வந்தன.
நாட்டில்
ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும் அதிகரித்திருந்த ஊழல்களும் காங்கிரஸ் கட்சியின்
மீதும், மன்மோகன் சிங் மீதும் மக்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தின. முதலாளிய
வர்க்கத்திற்கு மன்மோகன் சிங் தேவைப்படாத மனிதர் ஆனார்; தனது சுரண்டலையும்
ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொள்ள ஒரு புதிய முகம் தேவைப்பட்டது. முதலாளிய
வர்க்க ஊடகங்கள் மன்மோகன் சிங் “செயல்படாத பிரதமர்” என்ற கருத்தைப் பரப்பின.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின்
ஊதுகுழலான டைம் இதழ் பிரதமர் மன்மோகன் சிங் “குறை சாதனையாளர், அரசு மீதான
நம்பகத்தன்மைக் குறைவுக்குப் பொறுப்பானவர், பணவீக்கம், ஊழல்களால் மக்களின்
அதிருப்திக்கு உள்ளானவர், ரூபாய் மதிப்புக் குறைவுக்குக் காரணமானவர், அமைச்சர்களைக்
கட்டுப்படுத்தமுடியாமல் திணறுபவர், திசை தெரியாமல் தடுமாறும் பொருளாதாரத்தை
நெறிப்படுத்த முடியாதவர்” என எழுதியது. காங்கிரசிற்கும் மன்மோகன்
சிங்குக்கும் மாற்றாக பாஜகவும் நரேந்திர மோடியும் ஊடகங்களால் முன்
நிறுத்தப்பட்டனர். 2014ல் மன்மோகன் சிங்கின் பத்தாண்டு ஆட்சி முடிவுக்கு வந்தது.
நாட்டின் வளங்கள் தங்கு தடையின்றி கொள்ளையடிக்க முதலாளிகளுக்கு மென்மேலும்
வழிவகுக்கப்பட்டது.
இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கும்,
மக்களிடையே நிலவும் பெரும் அளவு ஏற்றத்தாழ்வுகளுக்கும் அடிப்படைக் காரணமான புதிய
தாராளவாத முதலாளியத்திற்கு இந்தியாவின் கதவைத் திறந்து விட்டவர் மன்மோகன்
சிங்தான்; அவருடைய காலத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளைப் பயன்படுத்திக் கொண்டு பாஜகவின்
மோடி ஆட்சிக்கு வரவும், அவர் தனது பாசிசத் திட்டங்களால் முதலாளிய வர்க்கத்தின்
கொள்ளையையும் அதிகாரத்தையும் மேலும் வலுப்படுத்தவும் வழி அமைத்துக் கொடுத்தவரும்
அவர்தான்.
சிறந்த பொருளாதார அறிஞர், கறைபடாக்
கரங்களுக்குச் சொந்தக்காரர், கண்ணியமான அரசியல்வாதி என்ற பல சிறப்புகளை மன்மோகன்
சிங் பெற்றிருந்தாலும் அவருடைய கல்வியும் அறிவும் திறமையும் பெரும்பான்மையாக உள்ள
உழைக்கும் மக்களுக்குப் பயன்படாமல் சிறுபான்மையாக உள்ள முதலாளிய வர்க்கத்திற்கே
பயன்பட்டது என்ற வகையில் அவர் நம்முடைய வருத்தத்திற்கு உரிய மனிதராகவே உள்ளார்.
மு.வசந்தகுமார்
Comments
Post a Comment