ஜனவரி
29ந் தேதி விடியற் காலைப் பொழுது உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் (முன்பு
அதன் பெயர் அலகாபாத்) திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவை ஒட்டி குளிக்க வந்த பக்தர்களுக்கு
பெரும் துயர நாளாக அமைந்தது. கூட்ட நெரிசலில் மிதிபட்டு 30 பேர் உயிரிழந்தனர். 60 பேருக்கும்
மேல் படுகாயமடைந்துள்ளனர் என யோகி ஆதித்யநாத்தின் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால்
உண்மையில் உயிர் இழப்பு அதை விட அதிகமாக இருக்கும் என்று செய்திகள் கூறுகின்றன.
மகா கும்ப மேளா
பிரயாக்ராஜில் ஜனவரி 13 ல் தொடங்கி பிப்ரவரி 26 முடிய நடைபெற உள்ள இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா என அழைக்கப்படுகிறது. கங்கை, யமுனை என்ற இரு நதிகளுடன் சரஸ்வதி என்னும் கற்பனை நதியும் சேர்ந்து, மூன்று நதிகளும் ஒன்று கலக்கும் இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. 45 நாட்கள் நடக்கும் இந்த மேளாவில் நீராட பல கோடி மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மவுனி
அமாவாசை அன்று (ஜனவரி 29) அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் திரிவேணி சங்கமத்தில்
குளிப்பது, 'அமிர்த ஸ்நானம்,' என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு குளித்தால் செய்த பாவங்கள்
எல்லாம் கழுவப்பட்டு புனிதமடைந்து மோட்சத்திற்குச் செல்லலாம் என்றும், இனி பிறப்பு,
இறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை அடைந்து விடலாம் என்ற நம்பிக்கை இந்து மத மக்கள்
மனங்களில் பாரம்பரியமாக ஆழமாகப் பதிக்கப்பட்டு வந்துள்ளது. இந்த ஆழமான நம்பிக்கையின்
காரணமாகவே அன்று கோடிக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர்.
அரசியல்வாதிகளின் விளம்பர மோகமும் அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையும்
ஆனால்
யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் விளம்பர மோகத்தாலும் பொறுப்பற்றதன்மையாலும் 30க்கும்
மேற்பட்டோர் தமது இன்னுயிரை இழக்க நேரிட்டது. மக்கள் சங்கமத்தை அடைவதற்கு 15-20 கி.மீ. தூரம்
வரிசையில் ஊர்ந்து
செல்ல பல மணி நேரங்கள் பிடித்தன. அதே சமயத்தில்
அரசியல்
பெரும் புள்ளிகளும் செல்வாக்குப் படைத்தவர்களும் சங்கம இடத்திற்கு அருகில் செல்லும்
அளவிற்கு கார்களில் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு அரசியல் தலைவர் வரும்போதும் மக்கள்
பல மணி மணி நேரம் காக்க வைக்கப்பட்டனர். ஆதித்யநாத் மட்டும் 10-12 தடவை தன்னுடைய அமைச்சரவை
சகாக்களுடன் சங்கமத்தில் குளித்து தனது பாவங்களைக் கழுவி "புனிதமடைந்து
" அதை ஒளிப்படம் எடுத்துப் பரப்பியுள்ளார். அது மட்டுமல்லாமல் பாபா ராம்தேவ்,
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் சா ஆகியோரும் இந்த அரிய வாய்ப்பைத் தவற விடவில்லை. அவர்களும்
திரிவேணி சங்கமத்தில் குளித்துத் தாங்கள் செய்துள்ள பாவங்களைப் போக்கிக் கொண்டுள்ளனர்.
ஆனால் ஒவ்வாரு முறையும் இந்தப் "பெரிய மனிதர்கள்" திரிவேணி சங்கமத்தில் தங்கள்
பாவங்களைக் கழுவிக் கொண்டிருந்த போதும் சாதாரண மக்கள் பல மணி நேரம் கால் கடுக்கக் காக்க
வைக்கப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில்தான் 29-ந் தேதி காலையில் சங்கமத்தை அடைவதற்குப்
போடப்பட்டிருந்த மிதக்கும் பாலங்கள் திடீரென்று அடைக்கப்பட்டன. கூட்ட நெரிசலில் தடுப்புத்
தடைகள் உடைபட்டு மக்கள் சிதறி ஓடும் போது மிதிபட்டு உயிரிழந்துள்ளனர்.
பக்தியை பணமாக்கும் பா.ஜ.க. அரசியல் வணிகர்கள்
இந்தக் கும்ப மேளாவை நடத்துவதற்காக ரூ.7500 கோடியை ஒதுக்கியுள்ளது பாஜகவின் ஆதித்ய நாத் அரசாங்கம். கும்ப மேளாவிற்கு இந்தியா முழுவதுமிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வருவார்கள். அதன் மூலம் வணிகம் பெருகும். பெரும் இலாபம் கிடைக்கும் என அரசாங்கம் கருதுகிறது. இதன் மூலம் 2 இலட்சம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என ஆதித்யநாத் கூறுகிறார். அதே போல இப்போது பிரயாக்ராஜில் வணிகர்கள் பக்தி என்ற பெயரில் பொருட்களை அதிக விலைக்கு விற்று மக்களைக் கொள்ளையடிக்க வழிவகுத்துள்ளது. பக்தர்கள் தங்க பல்லாயிரக்கணக்கான தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொன்றுக்கும் நாள் ஒன்றுக்கு வாடகையாக ரூபாய் 10,000, 20,000 என கொள்ளையடிக்கப்படுகிறது. ஊசி,பாசி மணிகள். பூஜை சாமான்கள், பொம்மைகள், உடைகள், செருப்புகள், தின்பண்டங்கள், தற்காலிக உணவு விடுதிகள் என ஒரு திடீர் சந்தையே அங்கு உருவாக்கப்பட்டு கொள்ளை இலாபத்திற்கு விற்கப்பட்டு மக்களிடமிருந்து பணம் பறிக்கப்படுகிறது.
உயிர்களைப் பலி வாங்கும் கும்ப மேளாக்கள்
கும்ப மேளாக்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது ஒரு தொடர்கதை. வட இந்தியாவில் பிரயாக்ராஜ், ஹரித்துவார், நாசிக், உஜ்ஜயினி ஆகிய நான்கு இடங்களிலும் ஏதாவது ஒரிடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடந்து வருகிறது ஒவ்வொரு முறையும் பல உயிர்கள் பலியாகி வருவது வாடிக்கையாக உள்ளது. 1954ல் பிப்ரவரியில் இதே பிரயாக்ராஜில் நடந்த கும்பமேளாவில் 800 பேர் இறந்துள்ளனர். 2013 பிப்ரவரியில் நடந்த கும்ப மேளாவில் 42 பேர் உயிழந்துள்ளனர்.
1992 பிப்ரவரியில் கும்பகோணத்தில் நடந்த மகாமகத்தில் ஜெயலலிதாவும் அவருடைய தோழி சசிகலாவும் குளித்த போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 48 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து கும்ப மேளாக்களின் போது மக்கள் உயிரிழந்து வருகின்ற போதும் மக்கள் தொடர்ந்து அவற்றில் கலந்து கொண்டு வருவதற்கு அவர்கள் மனதில் காலங் காலமாகப் பதிக்கப்பட்டு வந்துள்ள நம்பிக்கைகள்தான் காரணம்.
சுரண்டலையும் ஆதிக்கத்தையும் பாதுகாத்து வரும் கருத்தியலாக மூட நம்பிக்கைகள்!
சமூகம் சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் எனப் பிளவுபட்ட போது அதை நியாயப்படுத்தக் கூடிய கருத்தியல்களும் தோன்றுகின்றன. பிறப்பின் அடிப்படையில் வேலைப் பிரிவினைகளை நிரந்தரமாக்கிச் சாதி அமைப்பைக் கெட்டிப்படுத்த புராணங்களும் கதைகளும் படைக்கப்பட்டன. முற்பிறவியில் செய்த பாவங்கள்தான் இப்பிறவியில் தீண்டத்தகாதவர்களாகவும், சூத்திரர்களாகவும் பிறக்கக் காரணம். போன பிறவியில் புண்ணியம் செய்தவர்கள் இப்பிறவியில் பார்ப்பனர்களாகவும் உயர்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்களாகவும் பிறக்கின்றனர். இந்தப் பிறவியில் ஏழைகளாக இருப்பதற்கும், வறுமையில் வாடுவதற்கும், பணக்காரனாக இருப்பதற்கும், செல்வத்தில் திளைப்பதற்கும் காரணமே சென்ற பிறவியில் செய்த பாவங்களும் புண்ணியங்களும்தான் என்ற கருத்தியல்கள் சமூகத்தில் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. இந்தக் கருத்தியல்கள் மக்களின் மனங்களை இமயமலை போல அழுத்திக் கொண்டிருக்கின்றன. சமூக உண்மைகளைப் பார்க்க விடாமல் மக்களின் அறிவைக் குருடாக்கி வருகின்றன; பிறவி பற்றிய கருத்துகளும், பாவ, புண்ணியங்கள் பற்றிய கருத்துகளும் பொய்யானவை என்பதை மக்கள் அறிய விடாமல் தடுத்து வருகின்றன.
எல்லா உயிர்களும், மனிதர்கள் மட்டும் அல்லாமல், பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிர்களும் ஒரே ஒரு பிறவியைத்தான் கொண்டுள்ளன. இறந்த பிறகு உடலிலிருந்து உயிர் பிரிந்து சென்று மோட்சத்திற்கோ நரகத்திற்கோ செல்வது என்பதெல்லாம் கட்டுக்கதை. அது போல உயிர் இன்னொரு பிறவி எடுக்கிறது என்பதும் கட்டுக்கதை. உடலையும் உயிரையும் பிரிக்க முடியாது. ஒன்றில்லாமல் ஒன்று இருக்க முடியாது. ஆணின் விந்தும் பெண்ணின் கருமுட்டையும் இணைந்து உருவாவதுதான் உயிர். உடலிலுள்ள உயிரணுக்களின் இயக்கம்தான் உயிர். மூளை, நரம்பு மண்டலம், இரத்த ஓட்ட மண்டலம், இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் என மனித உடலின் உறுப்புகள் அனைத்தும் ஆரோக்கியமாகவும், அதில் உள்ள உயிர் அணுக்களுக்குத் தேவையான சத்துகளும், ஆக்சிஜனும் கிடைக்கும் வரை உடல் இயங்கும். இவற்றில் கோளாறு ஏற்பட்டால் உயிர் அணுக்கள் இறந்து விடும். உடல் இயக்கம் நின்று விடும். இது தான் இறப்பு எனப்படுகிறது. உயிர் இயக்கத்தை இழந்த உடல் நீடித்திருக்க முடியாது. அழுகத் தொடங்கி விடும். இந்த உண்மையை இன்றைய அறிவியல் தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
இந்த
உண்மையை, இந்த அறிவியல் பார்வையை மக்கள் பெற்று விட்டால், இந்தச் சமூகத்தில் நீடித்து
வரும் சாதிய வேறுபாடுகளுக்கும், ஏழ்மைக்கும், வறுமைக்கும் காரணம் முந்தைய பிறவியில்
தாங்கள் செய்த பாவங்கள் அல்ல. இந்தச் சமூகத்திற்குள்ளேயே தங்கள் உழைப்பைச் சுரண்டிக்
கொழுத்து வரும் உடைமை வர்க்கங்களும் அவற்றைக் காப்பாற்றி வரும் இந்த அரசியல் ஆதிக்கக்
கட்டமைப்பும்தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இந்த உண்மைகளை உழைக்கும்
மக்கள் புரிந்துகொண்டால் தங்களுடைய சுகபோக வாழ்வுக்கு அழிவு வந்து விடும் எனக் கருதித்தான்
சுரண்டும் ஆளும் வர்க்கமும் அதற்குச் சேவை செய்து வரும் சாமியார்களும் புராணப் புளுகர்களும்
கும்பமேளாவின் பெருமைகளைப் பற்றித் தொடர்ந்து பரப்புரை செய்து வருகின்றனர். ஆட்சியில்
உள்ள அவர்களின் ஏஜண்டுகளான அரசியல்வாதிகளும் மக்கள் மத்தியில் அறிவியல் பார்வையைப்
பரப்புவதற்குப் பதிலாக இது போன்ற மேளாக்களை அரசாங்கத்தின் சார்பில் பெரும் செலவில்
அவ்வப்போது நடத்தி மக்களைத் தொடர்ந்து மூட நம்பிக்கைகளில் மூழ்கடித்து வருகின்றனர்.
இந்த உண்மைகளை எல்லாம் அறியும் போது மக்கள் கும்ப மேளாக்களுக்கு ஒரு முழுக்கு போடுவார்கள். அவர்களே பெருவெள்ளமாகத் திரண்டு எழுவார்கள். அந்தப் பெருவெள்ளத்தில் மக்களின் ஏழ்மைக்கும், வறுமைக்கும், துயரங்களுக்கும், இழிநிலைகளுக்கும் காரணமானவர்கள் அனைவரும் அடித்துச் செல்லப்படுவார்கள். அனைத்து அழுக்குகளும் கழுவப்பட்டு சமூகம் சுத்தமடையும்.
Comments
Post a Comment