நாம் மிக மிக அபாயகரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். சுயநலம் கொண்ட சிறு கும்பலின் ஆட்சி மற்றும் எதேச்சதிகாரம்
ஆகியவற்றின் அச்சுறுத்தல்களுக்கு
எதிராக நம்முடைய ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாம் துணிவு கொண்டிருந்தோமா என்பதை வருங்காலத்தில் நமது
சந்ததியினர் நினைவு கூர்வார்கள். கெட்டிஸ்பர்க்கில் 1863---ஆம் ஆண்டு, அடிமை முறைக்கு எதிராக போராடி
ஆயிரக்கணக்கான வீரர்கள் உயிர் நீத்த போர்க்களத்தில், "இந்த தேசம், கடவுளின் கீழ், ஒரு புதிய சுதந்திர பூமியாக
உருவாகும் --- மக்களுடைய மக்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அரசாங்கம் இந்த
பூமியில் மடிந்து போகாது" என்று முழங்கிய அமெரிக்காவின் அதிபர் ஆபிரகாம்
லிங்கன்
பக்கம் நாம் நின்றோமா என்பதை அவர்கள் நினைவு கூர்வார்கள். நாம் அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த
லிங்கனின் கனவின்
பக்கம் நிற்கப் போகிறோமா, இல்லை, இந்த நாட்டில் கோடீஸ்வர்களுடைய, கோடீஸ்வரர்களுக்காக, கோடீஸ்வரர்களால் ஆன ஒரு அரசாங்கம் அமைவதை நாம்
அனுமதிக்கப் போகிறோமா?
ஆனால் சிறு கும்பல் ஆட்சி பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதாது. உண்மையில் அமெரிக்காவில் மூன்று மிகப்பெரிய பணக்காரர்களிடம், சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் பாதிக்கும் அதிகமான, அதாவது 17 கோடி அமெரிக்கர்களிடம் இருப்பதைவிட அதிகச் சொத்து உள்ளது. பணக்காரர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் பொருளாதார இடைவெளி அதிகப்பட்டு கொண்டே இருப்பது மட்டுமல்லாமல், முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றில் பெரும் அளவு ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது.
மேலும் இப்போது நாடு அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் தலைமையில் எதேச்சாதிகாரத்தை நோக்கி வேகமாகச் செல்வதை நாம் காண்கிறோம்; மிக மிக அதிக அளவிலான அதிகாரம், மிகச் சிலரின் கைகளில் குவிந்து கொண்டு வருகிறது.
இப்பொழுது, உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மாஸ்க், உழைப்பாளர்களின் குடும்பங்கள் மற்றும் ஆதரவற்ற மக்கள் ஆகியோரின் அவசியத் தேவைகளைக் காப்பதற்காக கூட்டு அரசாங்கம் அமைத்துள்ள ஏராளமான அமைப்புகளை கலைக்க முயற்சிக்கிறார். இந்த அமைப்புகள் அமெரிக்க காங்கிரசால் (பாராளுமன்றம்) மக்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்டவை; இந்த அமைப்புகளைக் காப்பதும் சீர்திருத்தம் செய்வதும் அல்லது அவற்றை முடிவுக்கு கொண்டு வருவதும் அமெரிக்கக் காங்கிரஸின் பொறுப்பாகும். இது எலான் மாஸ்கின் பொறுப்பல்ல. அவர் இவ்வாறு செய்வது வெளிப்படையாக சட்டத்திற்கு விரோதமானது ; அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; எனவே அவரது செயல்கள் உறுதியாக நிறுத்தப்பட வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு, அதிபர் ட்ரம்ப் அமெரிக்க மக்களுக்கான, கூட்டரசாங்கத்தின் அனைத்து நிதியுதவிகளையும், கடன்களையும் நிறுத்தி வைக்க முயன்றார்---- இது மிக அதிர்ச்சி ஊட்டுகிற மூர்க்கத்தனமான மற்றும் வெளிப்படையாகவே அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலாகும். அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், நம்முடைய அரசாங்கத்தின் விதிகளின்படியும் அமெரிக்க அதிபர், ஒரு சட்ட வடிவத்தைப் பரிந்துரைக்கலாம், அதை ஆதரிக்கலாம், சபையின் மற்ற உறுப்பினர்கள் ஒப்புதல் தந்திருந்த போதிலும் தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்தச் சட்டத்தைத் தள்ளுபடி செய்யலாம்.; ஆனால் காங்கிரஸ் அனுமதித்த நிதி உதவிகளை, தனிநபராக தான் மட்டுமே நிறுத்தி வைக்கும் அதிகாரம் அவருக்குக் கிடையாது என்பது அமெரிக்காவில் ஆறாவது வகுப்பு படிக்கும் சிறுவருக்குக் கூடத் தெரியும். காங்கிரசும் செனட்டும் மட்டுமே மக்களுக்கான நிதித் திட்டங்களுக்கு பொறுப்பானவர்கள்.
ஆனால் காங்கிரஸ் மட்டுமே இங்கு தாக்கப்படவில்லை; மக்களுடைய நீதித்துறையும் தாக்கப்படுகிறது.
சென்ற வார இறுதியில், ஏல் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிக்கு எழுத்தராகப் பணிபுரிந்து வந்த அமெரிக்காவின் துணை அதிபர், "அதிகாரிகளின் சட்ட பூர்வ உரிமைகளைக் கட்டுப்படுத்த --- நீதிபதிகள் அனுமதிக்கப்படுவதில்லை" என்கிறார். இது உண்மையா? நீதிமன்றங்களின் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று, நமது அரசியலமைப்புச் சட்டத்திற்குச் சரியான விளக்கம் அளிப்பதும், தேவையான சந்தர்ப்பங்களில் அரசியல் அமைப்புக்கு எதிரான---- நிர்வாக அமைப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதும் அதன் கடமையாகும் என்றே நான் நினைத்தேன்.
திரு.மஸ்க், "அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் மோசமானவர்கள் 1% பேரை ஒவ்வொரு வருடமும் வேலையிலிருந்து வெளியேற்ற வேண்டும்'' என்கிறார். மேலும் அமெரிக்கா கருவூலத் துறையிலுள்ள முக்கியமான கோப்புகளைப் பெறுவதில் இருந்து அவரைச் சட்டப்படி தடுக்கும் நீதிபதிகளை பதவியிலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றும் கூறுகிறார். சந்தேகத்திற்கு இடம் இன்றி, எலான் மாஸ்க்கின் ஆட்சியின் கீழ், அவரும் அவரைப் போன்ற கோடீஸ்வர நண்பர்களுமே "மோசமான" நீதிபதிகள் யார் என்று தீர்மானிப்பார்கள். ஆனால், திரு. மாஸ்க் அவர்களே! உங்களுக்கு எதிரான நீதிபதிகளை நீங்கள் பதவியில் இருந்து விலக்க முடியாது. உங்களுக்கு இது தெரியுமா தெரியாதா என்று தெரியவில்லை. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின்படி எங்களுக்குத் தனி அதிகாரங்கள் உண்டு; அவை 1770 களில் இந்த நாட்டை உருவாக்கியவர்களால் மிகத் திறமையாக உருவாக்கப்பட்டவை.”
ஆகையால் அரசியலமைப்பின் மீதும் நீதி அமைப்பின் மீதும் திட்டமிடப்பட்ட தாக்குதலை நாம் பார்க்கிறோம்.
ஆனால் ட்ரம்ப்பும் அவருடைய நண்பர்களும் அரசியலமைப்பின்படி அமைக்கப்பட்ட அமெரிக்க அரசாங்கத்தின் மூன்று தூண்களில் இரண்டை மட்டும் –காங்கிரஸ் (மக்கள் சபை) மற்றும் . நீதிமன்றங்கள் – சீர்குலைக்க முயற்சி செய்யவில்லை, கூடவே நாம் இதுவரை நவீன வரலாற்றில் காணாத அளவுக்கு ஊடகங்களையும் பலி வாங்குகின்றனர்.
ஊடகங்களில் உள்ளவர்களும் ஊடக நிறுவனங்களும் நியாயமானவையாக இல்லை என்று மக்கள் சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் சொல்லுவார்கள். எல்லோரையும் போலவே அவர்களும் தினந்தோறும் தவறுகள் செய்கிறார்கள்; ஆனாலும், சுதந்திரமான பத்திரிகைகளும், அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் ஆளாகாத -- தாங்கள் பார்த்தவற்றை அப்படியே எழுதவும் சொல்லவும் வல்ல பத்திரிக்கையாளர்களும் இல்லாமல், ஒரு சிறந்த ஜனநாயகம் இயங்க முடியாது என்பதை மக்கள் சபையின் ஒவ்வொரு உறுப்பினரும் புரிந்து கொண்டுள்ளனர். இதன் அடிப்படையில், நான் என் சக நண்பர்களுக்கு சமீப மாதங்களில் இந்த அதிபர் என்ன செய்திருக்கிறார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
அதிபர் டிரம்ப், அமெரிக்காவின்
மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான வால்ட் டிஸ்னி--யின் மீது வழக்குத் தொடர்ந்து 1.5 கோடி அமெரிக்க டாலர்களை இழப்பீடாகப் பெற்றார். அவர் 'முகநூல்' மற்றும் 'இன்ஸ்டாகிராம்' இணையதளங்களின் தாய் நிறுவனமான "மெட்டா"
மீதும் வழக்கு தொடர்ந்து 2.5 கோடி அமெரிக்க டாலர்களைப் பெற்றார்; மேலும் பாராமௌன்ட் நிறுவனத்தின்
மீதும் அதன் துணை நிறுவனமான 'வணிக ரீதியில் ஒளி,
ஒலி பரப்பு செய்யும் 'CBS' நிறுவனத்தின்
மீதும் வழக்குத் தொடர்ந்து, தீர்வுக்கான பேச்சு
வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் டெஸ் மொய்னிஸ் ரெஜிஸ்டர்
நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்து உள்ளார்; அவருடைய நிறுவனமான FCC அமெரிக்க மக்களுக்கு கல்வி கலாச்சாரம்
மற்றும் விஞ்ஞானம் இவை சார்ந்த பல நிகழ்ச்சிகளையும் அமெரிக்காவின் பிற ஊடகங்களுக்கு இலவசமாக அளிக்கும் லாப
நோக்கமற்ற PBS (Public Broadcasting service) என்ற நிறுவனத்தின் மீதும், ஏறத்தாழ
ஆயிரம் சிறு நிறுவனங்களுக்கு ரேடியோ செய்திகளை வழங்கும் NPR (National Public
Radio) என்னும்
நிறுவனத்தின் மீதும் விசாரணை என்ற பெயரில் அச்சுறுத்துகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், இந்த நாட்டில் அவருக்கு
பிடிக்காதவற்றை சொல்லும் ---- செய்யும் ஊடகங்களைப் பழிவாங்க தனது அதிகாரத்தை பயன்படுத்தும் ஒருவரை
அமெரிக்க அதிபராக பெற்று இருக்கிறோம். உலகத்தின் மிக அதிகாரம் வாய்ந்த ஒருவர் தங்களின் எழுத்துக்களுக்காக தங்கள்
மீது வழக்குத்தொடுக்கலாம் என்ற தொடர்ந்த அச்சத்தில் வாழ வேண்டிய நிலையில், நாம் எப்படி சுதந்திரமான
பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கொண்டிருக்க முடியும்?
நாம் மிக எளிமையான ஒரு கேள்வியைக் கேட்க வேண்டிய நேரமிது. உண்மையில் மாஸ்க், ட்ரம்ப் மற்றும் அவர்களது மகா கோடீஸ்வர நண்பர்கள் என்ன விரும்புகின்றனர்? அவர்களது இலட்சியம்தான் என்ன?
இதற்கான பதில் மிக சிக்கலானது என்று நான் கருதவில்லை. இது புதுமையான ஒன்றுமல்ல; புதிதானதும் அல்ல. இதுதான் வரலாறு முழுவதும் ஆளும் வர்க்கம் விரும்பியதும், தங்களுடைய உரிமை என்றும் நம்பியதாகும்: அவை அதிக அதிகாரம், ஏராளமான கட்டுப்பாடு மற்றும் அதிகமான செல்வம் ஆகியவையே ஆகும். ஆகவே அவர்கள் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் தங்களுடைய பாதையில் குறிக்கிடக் கூடாது என்று உறுதியாக உள்ளனர்.
சாதாரண மக்களின் தேவைகளும் அக்கறைகளும் கருத்துகளும் மற்றும் கனவுகளும், எலான் மாஸ்க் மற்றும் அவரைப் போன்ற மற்ற மகா கோடீஸ்வரர்களுக்கு, அவர்களுக்கு உரிமையானவற்றை அடைவதற்கான தடைகள் ஆகும்; இதையே அவர்கள் உண்மையாக நம்புகிறார்கள்.
இந்தப் போக்கை நமது நாட்டின் வரலாற்றில் நாம் முதன்முறையாகப் பார்க்கவில்லை.
புரட்சிக்கு முந்தைய அமெரிக்காவில் 1770 களுக்கு முன்பு, அன்றைய ஆட்சியாளர்கள் 'இறைவனால் அரசர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம்' என்ற பெயரில் மக்களை ஆண்டனர்; அதாவது இங்கிலாந்தின் அரசன், 'இறைவனால் அனுப்பப்பட்ட தூதன்' ; பூமியில் மக்களை ஆள்வதற்காக இறைவன் அவரை நியமித்துள்ளார்; ஆகையால், 'அரசரை சாமானியர்கள் அதாவது சாதாரண மக்கள் கேள்வி கேட்க முடியாது' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மக்களின் குரல் ஒடுக்கப்பட்டது.
இப்போதைய நவீன காலத்தில், 'இறைவனால் கொடுக்கப்பட்ட ஆட்சி அதிகாரம்' என்ற கருத்து மறைந்து விட்டது. ஆனால் இப்போது நாம், சுயநலம் மிகுந்த கும்பலால், புரட்சிகரமான புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன் படைத்த மிகச் சிறந்த அறிவாளிகளான மிகப்பெரும் பணக்காரர்களால் அவர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு கருத்தியலைக் கொண்டுள்ளோம். அதாவது நம்மை ஆள்வது "அவர்களின் முழு உரிமை" என்ற கருத்தியலைக் கொண்டுள்ளோம். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சுயநலம் கொண்ட சிறு கும்பலே நவீன அரசர்கள்.
உண்மையில் அவர்களுக்கு வேண்டியது வெறும் அதிகாரம் மட்டுமல்ல. அளவிட முடியாத செல்வம் அவர்களிடத்தில் இருந்தாலும் அவர்களுக்கு,இன்னும் வேண்டும், இன்னும் அதிகம் வேண்டும் என்ற அடங்காத பசி. செல்வத்தின் மீதான அவர்களது பேராசைக்கு எல்லையே இல்லை. இன்று உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மாஸ்க் 40200 கோடி டாலர்களுக்கும், முகநூல் இணையதளத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தின் தலைவர் ஸுக்கர்பெர்க் 25200 கோடி டாலர்களுக்கும், அமேசானின் பெஜோஸ் 24900 கோடி டாலர்களுக்கும் அதிபதிகளாக உள்ளனர். இந்த மூன்று பேரின் மொத்தச் சொத்து மதிப்பு 90300 கோடி டாலர்களாக்கும்; இது அமெரிக்காவின் அடித்தளத்தில் இருக்கும் 17 கோடி மக்களிடம் உள்ள சொத்து மதிப்பை விட அதிகமாகும்.
ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதும் இவர்களது சொத்து மின்னல் வேகத்தில் அதிகரித்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்து எலான் மாஸ்க்கின் சொத்து மதிப்பு 13800 கோடி டாலர்களும், ஸுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு 4900 கோடி டாலர்களும், பெஜோசின் சொத்து மதிப்பு 2800 கோடி டாலர்களும் அதிகரித்துள்ளன.
மிகப்பெரும் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகிக் கொண்டிருக்கும்போது, 60% அமெரிக்க மக்கள் சேமிப்பு எதுவுமின்றி வாழும் நிலையில் உள்ளனர், 8.5 கோடி அமெரிக்கர்கள் காப்பீடு இல்லாமலும் அல்லது மிகக் குறைந்த காப்பீடு பெற்ற நிலையிலும் உள்ளனர், 25% முதியவர்கள் 15000 டாலர்கள் அல்லது அதற்கும் குறைவான ஆண்டு வருமானத்தில் வாழந்து வருகின்றனர்.; 8 லட்சம் அமெரிக்கர்கள் வீடற்றவர்களாக உள்ளனர்; உலகின் மற்ற எந்தப் பெரிய நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிக அதிகமான வறுமையில் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், விலைவாசி அதிகரிப்புக்கு ஏற்ப சம்பளம் அதிகரிக்கப்படாமல் சாதாரண அமெரிக்கத் தொழிலாளியின் கூலி ஐம்பது ஆண்டுகளாகத் தேக்கமடைந்துள்ளது.
இந்தச் சிறு கும்பல் ஆட்சியினர் இந்தச் சாமானியர்களின் மீது சிறிதாவது அக்கறை கொண்டார்களா? இல்லவே இல்லை. பிற உலக நாடுகளுக்கு அமெரிக்கா வழங்கும் உதவி நிறுத்தப்படும் என்னும் மாஸ்கின் முடிவால் உலகில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை மக்கள் பசி பட்டினி வறுமையில் தள்ளப்பட்டு அல்லது தடுக்கக்கூடிய வியாதிகளினால் மடிந்து போவார்கள்.
ஆனால் இது பிற நாடுகளில் மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஏராளமான மக்களின் சுகாதாரம், சத்தான உணவு, குடியிருப்பு மற்றும் கல்வித்திட்டங்களுக்கான நிதி உதவிகள் விரைவில் நிறுத்தப்படும். அதே வேளையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் சபை ஏராளமான வரிச் சலுகைகளை இந்தப் பெரும் கோடீஸ்வரர்களுக்கும் இவர்களது சகாக்களுக்கும் வழங்க முடியும். தங்களுக்கு மக்களை ஆட்சி செய்யும் முழு உரிமையும் உள்ளதாகக் கருதும் இன்றைய நவீன அரசர்களான இவர்கள், தங்களுடைய சலுகைகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, சிறிதும் தயங்காமல், உழைக்கும் மக்களின் வாழ்வை அழிக்கிறார்கள்.
மேலும், இவர்களின் கொள்கைகளால் தாங்கள் மரணத்துக்குள் தள்ளப்படுவதை உணராத அளவுக்கு மக்களின் கவனத்தைத் தங்களது பெரும் ஊடகங்களின் மூலம் திசை திருப்புவார்கள். எலான் மாஸ்க் ட்விட்டரையும், ஸுக்கர்பெர்க்கு மெட்டா இணையதளம், அதன் துணை நிறுவனமான முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றையும், பெஜோஸ் 'வாஷிங்டன் போஸ்ட்' ஐயும் சொந்தமாகக் கொண்டுள்ளனர். மேலும், இவர்களும் இவர்களது சகாக்களான சுயநலமிக்க கும்பலும் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளிலும் உள்ள உறுப்பினர்களையும் விலைக்கு வாங்கத் தொடர்ந்து பெரும் அளவு பணம் செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.
சுயநலம் வாய்ந்த இந்தச் சிறு கும்பல் தங்களுக்கு இருக்கும் பெரும் மூலாதாரங்களின் மூலம் அமெரிக்காவின் உழைக்கும் வர்க்கத்தின் மீது பெரும் போர் தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ---- அவர்களது நோக்கம் இந்தப் போரில் வெல்வதே.
இப்போது இது கேலி விளையாட்டல்ல. இந்த நாடு இப்போது எதிர்நோக்கி கொண்டிருக்கும் பிரச்சினைகள் மிக அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை -----எளிதாக தீர்க்கப்படக் கூடியவை அல்ல. நமது பொருளாதாரம் சிதைக்கப்பட்டு உள்ளது; நமது தேர்தல் பிரசார நிதி அமைப்பு ஊழல் நிறைந்தவை; நாம் பல முக்கியமான பிரச்சினைகளோடு சேர்த்து பருவநிலை மாற்றத்தினால் உருவாகும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் போராடிக் கொண்டிருக்கிறோம்.
ஆனால் இது நிச்சயமான உண்மையாகும்.
கருப்பு, வெள்ளை மற்றும்
லத்தின் அமெரிக்கர்கள், நகரங்களில்
வாழ்பவர்கள், கிராமங்களில்
வாழ்பவர்கள், தன் பாலினத்தவர், வழக்கமான முறையில் திருமணங்களில் இணைந்தவர்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள் என்ற
அனைவரும் ஒன்றுகூடி, தங்கள் அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்துக் கூடிய அரசாங்கத்தை
--சில செல்வந்தர்களின் அரசாங்கத்தை அல்ல—கோருவார்கள் என்று இந்த நாட்டின் ஆளும் வர்க்கம் மிக
அதிகமாகப் பயந்து கொண்டிருக்கின்றது.
இந்தச் சுய நலக் கும்பலின் பெரும் அச்சம் என்னவென்றால், நாம் இனம், மதம், பாலினம், நாம் பிறந்த நாடு, தனிமனித விருப்பம் ஆகிய எவற்றாலும் நம்மைப் பிளவுபடுத்த அனுமதிக்க மாட்டோம் என்பதும், அவர்களை ஒன்று சேர்ந்து எதிர்க்கும் வலிமை நமக்கு உள்ளது என்பதும்தான்.
அப்படி என்றால் இந்தப் போராட்டம் எளிதாக இருக்குமா? நிச்சயமாக இல்லை!
இந்த போராட்டம் எளிதாக இருக்காது என்பதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று என்னவென்றால், தங்களிடம் எல்லா விதமான அதிகாரங்களும் இருக்கிறது என்று இந்த நாட்டின் ஆளும் வர்க்கம் நமக்குத் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறது----- அவர்கள் அரசாங்கத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்! அவர்கள் ஊடகங்களின் சொந்தக்காரர்கள்!
ஆனால் கடினமான இந்த நேரத்தில் நமது கடமை என்னவென்றால், கோடிக்கணக்கான மக்கள், பல நூற்றாண்டுகளாக, ஜனநாயகமும் நீதியும் மனித நேயமும் நிறைந்த சமூகத்தைப் படைப்பதற்காக மேற்கொண்ட வீரம் மிகுந்த போராட்டங்களையும் தியாகங்களையும் மறக்காமல் நெஞ்சில் நிறைத்திருப்பதுதான்.
அப்போது மக்கள் என்ன கூறினார்கள் என்பது பற்றிச் சிந்திப்போம்.
- இங்கிலாந்தின் அரசனை வீழ்த்தி மக்களாட்சி கொண்ட புதிய தேசத்தை படைப்பது--- சாத்தியமில்லை.
- பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமையை உருவாக்குவது---- சாத்தியமில்லை. .
- அடிமை முறைகக்கும் மக்களிடையே நிலவும் பிரிவினைகளுக்கும் முடிவு காட்டுவது. --- சாத்தியமே இல்லை.
- தொழிலாளர்களுக்கு சங்கம் அமைக்கும் உரிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் முறையை அடியோடு ஒழிப்பது ------ சாத்தியமில்லை.
- பெண்களுக்கு அவர்களது உடலின் மீது அவர்களுக்கான முழுக் கட்டுப்பாட்டையும் வழங்குவது------ சாத்தியமில்லை.
- சமூகப் பாதுகாப்பு, மருத்துவ சேவை, மருத்துவ உதவிகள், குறைந்தபட்ச ஊதியம், சுத்தமான காற்று மற்றும் தரமான குடிநீர் –ஆகியவற்றை வழங்குவதற்கான சட்டம் ---- சாத்தியமே இல்லை
வேறு வார்த்தைகளில் சொல்வதானால், நெல்சன் மண்டேலா நம்மிடம் கூறியது போல,
"எதுவும்
அதைச் செய்து முடிக்கும் வரை சாத்தியம்
இல்லை" என்பதுதான்.
பெர்னி சாண்டர்ஸ்
தமிழில்:கவிதா
நன்றி:Countercurrents
Comments
Post a Comment