இந்தியக்
கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஏப்ரல் 2 முதல் 6 வரை மதுரையில் நடைபெற உள்ள
தனது 24வது காங்கிரசுக்காக முன் வைத்துள்ள வரைவு அரசியல் தீர்மானம் மற்றும்
அரசியல் பரிசீலனை அறிக்கை பற்றி சில கருத்துகளை அந்தக் கட்சியிலுள்ள அணியினரின்
சிந்தனைக்கு இங்கு முன் வைக்கின்றோம்.
1. கிராமப்புறங்களில்
ஆளும் வர்க்கங்களில் ஒரு பகுதியாக கிராமப்புறச் செல்வந்தர்கள் இருக்கின்றனர்’
என்றும், ‘கிராமப்புறச் செல்வந்தர்களுக்கும் ஏழை விவசாயிகள், நடுத்தர விவசாயிகள்,
விவசாயம் மற்றும் இதரத் துறைகளில் ஈடுபட்டு வரும் கிராமப்புற உடலுழைப்புத்
தொழிலாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே கிராமப் பகுதிகளில் நிலவும் அடிப்படை
முரண்பாடாகும்’ என்றும், .‘கிராமப்புறங்களில் வர்க்கப் போராட்டத்திற்கான ஆணி வேராக
அமைகின்ற கிராமப்புற செல்வந்தர்களின் கூட்டுக்கு எதிராக கிராமப்புற ஏழைகளின்
போராட்டங்கள் எதுவுமில்லை. தற்போது மாறிவிட்ட நிலைமைகளைக் கருத்தில் கொண்டு
பார்க்கும்போது நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமான நிலத்தைக் கைப்பற்றி அதை ஏழை
விவசாயிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான போராட்டங்களை நீடித்த வகையில்
தொடர்வது மிகவும் கடினமாக உள்ளது. விவசாயக் கூலி உயர்வுக்கான நீடித்த போராட்டத்தை
நடத்துவது எளிதல்ல என்பதையும் நமது சமீபத்திய அனுபவங்கள் காட்டுகின்றன’ என்றும் ‘அரசியல்
பரிசீலனை அறிக்கை கூறுகிறது. மேலும் “கட்சிக் குழுக்கள் நீடித்த அடிப்படையில்
உள்ளூர் அளவிலான போராட்டங்களை நடத்தாமல் இருப்பதற்கான முக்கியமான காரணங்களில்
ஒன்று, கட்சியை வர்க்கப்போராட்டங்களின்றி சுமூகமான முறையில் வளர்த்து விடலாம்
என்னும் சீர்திருத்தவாத அணுகுமுறையே ஆகும்’ என்றும், ‘நாடாளுமன்றவாதப் போக்கு
கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களுடன் சமரசம் செய்து கொள்ள வழி
வகுக்கிறது’ என்றும் கூறுகிறது. மேலும் ‘நாடாளுமன்றவாதம் என்பது ஒரு
சீர்திருத்தவாதக் கண்ணோட்டமாகும். இது கட்சின் செயல்பாடுகளை தேர்தல் வேலைகளோடு
மட்டுமே சுருக்கி விடுகிறது’ என்றும், இத்தகைய காரணங்களால் கட்சி மக்கள்
செல்வாக்கை இழந்துள்ளது என்றும் கூறுகிறது. இவற்றை எல்லாம் கட்சியின் சுய
விமர்சனமாகக் கருதலாம்.
2.
கட்சியின் நடைமுறையில் உள்ள இந்தத் தவறுகளுக்குக் காரணாமாக இருப்பது கட்சியின்
திட்டம்தான் என்பதை அணிகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறச்
செல்வந்தர்கள் ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதியினராக உள்ளனர் என அரசியல் பரிசீலனை
அறிக்கை கூறுகிறது. ஆனால் கட்சித் திட்டமோ பணக்கார விவசாயிகள் விவசாய வர்க்கத்தில்
செல்வாக்குமிக்க பகுதியினராக உள்ளனர் என்றும், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அவர்கள்
மக்கள் ஜனநாயக முன்னணிப் பக்கம் வந்து விடுவார்கள் என்றும், அவர்கள் ஊசலாடும்
சக்திகளாக இருந்தாலும் மக்கள் ஜனநாயகப் புரட்சியில் ஒரு பாத்திரம் ஆற்றுவார்கள்
என்றும் கூறுகிறது. பணக்கார விவசாயிகளை புரட்சியின் பக்கம் வென்றெடுக்க வேண்டும்
என்று கூறும் திட்டத்தைக் கொண்டுள்ள கட்சி எவ்வாறு அவர்களை எதிர்த்து சமரசம்
இல்லாத வர்க்கப் போராட்டத்தை நடத்த வழி காட்டும்?
3. ’கிராமப்புறச்
செல்வந்தர்களின் பிரதிநிதிகளாக உள்ள பிராந்தியக் கட்சிகள் உள்ளிட்ட முதலாளியக்
கட்சிகளுடன் தேர்தலில் பலனடைவதற்காக நாம் கொண்டுள்ள உறவு அந்தக் கிராமப்புறச்
செல்வந்தர்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்தத் தடையாக உள்ளது’
என்றும்,நாடாளுமன்றவாதப் போக்கு கிராமப்புறங்களில் ஆதிக்கம் செலுத்தும்
குழுக்களுடன் சமரசம் செய்து கொள்ள வழி வகுக்கிறது’ என்றும் அரசியல் பரிசீலனை
அறிக்கை கூறுகிறது. இதற்கான அடிப்படையும் கட்சித் திட்டத்திலேயே உள்ளது. ‘இன்றைய
ஆளும் வர்க்கங்களை அகற்றி விட்டு தொழிலாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் உறுதியான
கூட்டணியின் அடிப்படையில் அமைக்கப்படும் புதிய ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கத்தை
நிறுவும் நோக்கத்தை மக்கள் முன் வைக்கும் அதே சமயத்தில், கிடைக்கும் வாய்ப்புகளைப்
பயன்படுத்திக் கொண்டு அமைக்கப்படும் அரசாங்கங்களின் மூலம் மக்களுக்கு நிவாரணம்
அளிக்கக்கூடிய திட்டத்தை கட்சி நிறைவேற்றும் மற்றும் நிலவும் வரையறுக்கப்பட்ட
நிலைமைகளில் மாற்றுக் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சி செய்யும்.’ என்று திட்டம்
கூறுகிறது. திட்டம் புதிய ஜனநாயக அரசு மற்றும் அரசாங்கம் அமைப்பதை நோக்கமாகக்
கொண்டுள்ளது எனக் கூறினாலும் அந்தப் புதிய ஜனநாயக அரசும் அரசாங்கமும் எத்தகைய
வடிவில் இருக்கும் என்பது பற்றி திட்டம் விளக்கவில்லை. இப்பொழுது உள்ள முதலாளிய
ஆட்சி வடிவமான சட்டமியற்றும் நாடாளுமன்றம் ஒருபுறம், நிலையான அதிகார வர்க்கத்தைக்
கொண்ட நிர்வாக இயந்திரம் இன்னொரு புறம் என்ற ஆட்சி முறையே தொடருமா, இல்லை,
சட்டமியற்றும் அதிகாரத்தையும் அதை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தையும் ஒருங்கே
கொண்ட மக்கள் பிரதிநிதிகளின் சோவியத் வடிவிலான ஆட்சிமுறை உருவாக்கப்படுமா என்பது
பற்றி எந்த விதமான விளக்கத்தையும் திட்டம் கொண்டிருக்கவில்லை; பாட்டாளி
வர்க்கத்தின் தலைமையிலான அரசின் ஆட்சி வடிவத்தைத் தெளிவுபடுத்தவில்லை.
1871ல்
நடைபெற்ற பாரிஸ் கம்யூன் எழுச்சியின் அனுபவத்தைத் தொகுத்த மார்க்ஸ் நிலவி வரும் முதலாளிய
அரசு வடிவத்தை பாட்டாளி வர்க்கம் அப்படியே பயன்படுத்திக் கொள்ள முடியாது என்றும்,
தனக்கான அரசு வடிவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும், பாரிஸ் கம்யூன்
அத்தகைய அரசு வடிவத்தை நடைமுறைப்படுத்தியது என்றும் எடுத்துரைத்தார். அத்தகைய
ஆட்சி அதிகாரத்தைத்தான் சோவியத் என்ற பெயரில் லெனின் தலைமையில் இருந்த போல்சுவிக்
கட்சி அமைத்தது. ஆனால் இ.பொ.க.(மா) கட்சித் திட்டமோ பாட்டாளி வர்க்க ஆட்சி
வடிவத்தைப் பற்றி மவுனம் சாதிக்கிறது.
எனவே
நாடாளுமன்றவாதத்திற்கும் சந்தர்ப்பவாதத்திற்கும் இடமளிப்பதாகவே கட்சித் திட்டம்
உள்ளது. அதன் காரணமாக நிலவுகின்ற அரசாங்கங்களில் ஆட்சி அமைக்க முதலாளியக்
கட்சிகளுடன் கூட்டுச் சேர்வதும், நாடாளுமன்றப் பணியே கட்சிக்கான ஒரே பணியாக
மாறுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
4. ஒரு
பக்கம் திட்டம், ‘பணக்கார விவசாயிகள் குறிப்பிட்ட நிலைமைகளில் மக்கள் ஜனநாயகப் புரட்சியின்
பக்கம் வருவார்கள்’ எனக் கூறுகிறது. இன்னொரு பக்கம் அரசியல் பரிசீலனை அறிக்கை
‘கிராமப்புறப் பணக்கார விவசாயிகளை ஆளும் வர்க்கத்தின் ஒரு பகுதி’ எனக் கூறுகிறது. இந்த
முரண்பாட்டிற்குக் காரணாமாக இருப்பது 1947ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்தியா
சுதந்திரம் பெற்ற பிறகு அமைந்த அரசின் வர்க்கத் தன்மை பற்றி தவறாகக் கட்சி
கணித்ததுதான். இந்திய அரசை அது ‘பெரும் முதலாளிய வர்க்கத்தினரின் தலைமையின் கீழ்
முதலாளிய- நிலப்பிரபுத்துவக் கூட்டால் ஆளப்படுகிற அரசு’ என வரையறுத்தது. ‘அது
அந்நிய நிதி மூலதனத்துடன் நெருங்கிய கூட்டு வைத்துள்ளது. இப்பொழுது நடத்தப்பட
வேண்டிய புரட்சி நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, ஏகபோக
எதிர்ப்பு ஜனநாயகப் புரட்சியாகும். அதாவது மக்கள் ஜனநாயகப் புரட்சியாகும்’, என
வரையறுத்தது. அரசியல் அதிகாரத்தில் நிலப்பிரபுத்துவ வர்க்கம் கூட்டாக உள்ளதால் அது
நிலப்பிரபுத்துவத்தைக் காப்பாற்றும் எனக் கருதியது. அதனால் நிலப்பிரபுத்துவ அமைப்பை
ஒழிக்கும் மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன் வைத்தது. மக்கள் ஜனநாயகப் புரட்சி
விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்டது. கிராமப்புறங்களில் விவசாய உற்பத்தியில் நிலப்பிரபுத்துவத்தை
ஒழித்து முதலாளிய வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான திட்டமாகும். அந்த
அடிப்படையிலேயே, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராக பணக்கார விவசாயிகள் மக்கள்
ஜனநாயகப் புரட்சியின் பக்கம் வருவார்கள் எனத் திட்டம் கூறியது.
ஆனால்
உண்மையில் நடந்தது என்ன? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து அரசியல்
அதிகாரத்தைப் பெற்றது முதலாளி வர்க்கமும் முதலாளிகளாக மாறி இருந்த பெரும்
நிலவுடைமையாளர்களும்தான். . அது நிலப்பிரபுத்துவ வர்க்கத்துடன் கூட்டாக அமைந்துள்ள
அரசு அல்ல. அவ்வாறு அது கூட்டாக அமைந்திருந்தால் நிலப்பிரபுத்துவத்தைக்
காப்பாற்றுவதாகவே இருந்திருக்கும். ஆனால் அது நிலப்பிரபுத்துவத்தைக் காப்பாற்ற
வில்லை. அதற்குப் பதிலாக ஆட்சியில் இருந்த முதலாளி வர்க்கம் நாட்டில் அப்பொழுது
இருந்த 563 சமஸ்தானங்களை ஒழித்து தனது மத்தியத்துவப்படுத்தப்பட்ட அரசு
அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்தது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்
பொருட்களுக்காகவும், சந்தைக்காகவும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மாற்றி அமைக்க
வேண்டிய நிர்ப்பந்தம் முதலாளிய வர்க்கத்திற்கு இருந்தது. அதன் காரணமாக படிப்படியாக
சீர்திருத்த முறைகளின் மூலம் விவசாயத்தில் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை ஒழித்து
முதலாளிய உற்பத்தி முறையைக் கொண்டு வந்தது. கடந்த எழுபத்தைந்து ஆண்டுகளாக நடந்தது
இதுதான். விவசாயத்தில் நிலவும் முதலாளியப் போட்டிகள், சந்தை ஏற்ற இறக்கங்கள்
ஆகியவற்றால் சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் இன்று நிலத்தை இழந்து வேலை தேடிக்
குடும்பம் குடும்பமாக நகரங்களை நோக்கி புலம் பெயர்ந்து வருகின்றனர். விவசாயத்தில்
முதலாளிய வளர்ச்சிக்கான இந்தச் சீர்திருத்தப் பாதை லெனின் கூறுவது போல
நீண்டதாகவும், துயரம் மிக்கதாகவும், பாட்டாளி வர்க்கத்திற்கும் விவசாயி
வர்க்கத்திற்கும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.
5.
இதற்கெல்லாம் காரணமாக இருப்பது கட்சியின்
தவறான திட்டம்தான். 1947ல் இந்திய முதலாளிகள் அரசியல் அதிகாரத்திற்கு வந்ததும்
கட்சி சோசலிசப் புரட்சி திட்டத்தை மக்கள் முன் வைத்திருக்க வேண்டும். அதற்குப்
பதிலாக மக்கள் ஜனநாயகப் புரட்சியை முன் வைத்து சரியான எதிரிகளைக் கணிக்கத்
தவறியது. பணக்கார விவசாயிகளையும் நண்பர்களாகக் கருதியது. அந்தத் தவறான
கணிப்புத்தான் இன்று நடைமுறையில் வெளிப்படுகிறது.
ரசியாவில்
1917ல் பிப்ரவரி புரட்சி முடிந்து அரசியல் அதிகாரம் முதலாளி வர்க்கத்தின் கைகளில்
வந்ததும், “முதலாளிகளுடைய பிரதிநிதிகளையும், முதலாளிகளாக மாறுதலடைந்து விட்ட
நிலப்பிரபுக்களின் பிரதிநிதிகளையும் கொண்ட புதிய அரசாங்கம் ஒன்று ரசியாவில்
தோன்றிற்று” என லெனின் கூறினார். முதலாளியப் புரட்சி முடிவுற்றது என்றும் புரட்சி
அடுத்த கட்டத்திற்கு, அதாவது சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்குச் செல்ல வேண்டும் எஎன்றும்
லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரையில் எழுதினார். மேலும், ‘புரட்சியின் முதலாவதும்,
முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து
இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை
அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான். இந்த அளவில்
ரசியாவில் முதலாளியப் புரட்சி முடிவுற்று விட்டது” என லெனின் தனது ஏப்ரல்
ஆய்வுரையில் குறிப்பிடுகிறார்.
1917
பிப்ரவரி புரட்சி நடந்து முடிந்ததும் உடனே நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை ஒழிந்து
விடவில்லை. ரசியா அப்பொழுது பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்சு மூலதனத்தின்
கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் அது முதலாம் உலக யுத்தத்திலிருந்து தன்னை விலக்கிக்
கொண்டு மக்களுக்கு சமாதானத்தை வழங்கவில்லை. அதாவது நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறை
நிலவிய போதும், ஏகாதிபத்திய மூலதனங்களோடு ரசிய முதலாளி வர்க்கம் உறவு
கொண்டிருந்தபோதும் லெனின் சோசலிசப் புரட்சி திட்டத்தை முன் வைத்தார். அவர்
கணக்கில் எடுத்துக் கொண்டது அரசியல் அதிகாரம் யாருடைய கையில் உள்ளது என்பதைத்தான்.
ஆனால் இங்குள்ள கட்சி முதலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கு வந்த பிறகும்
முதலாளியப் புரட்சி முடியவில்லை என்றும், ஏகாதிபத்தியங்களுடன் உறவு கொண்டுள்ளது
என்றும், நிலப்பிரபுத்துவத்துடன் கூட்டாக உள்ளது என்றும் கூறி மக்கள் ஜனநாயகப்
புரட்சியைத் தனது நிகழ்ச்சி நிரலாக வைத்தது.
மேலும்
புரட்சியின் இரண்டாவது கட்டத்தை, அதாவது சோசலிசப் புரட்சிக் கட்டத்தைப் பற்றிக்
கூறும்போது அதில் வர்க்க அணி சேர்க்கையில் ஏற்படும் மாற்றத்தைப் பற்றி லெனின்
குறிப்பிடுகிறார். புரட்சியின் இரண்டாவது கட்டம் பாட்டாளி வர்க்கத்திடமும் விவசாய
வர்க்கத்தில் மிக மிக ஏழையாகக் கீழ்ப்படியில் உள்ளவர்களிடமும் அரசியல் அதிகாரத்தை
ஒப்படைக்க வேண்டும் என லெனின் கூறினார்.
முதலாளியப்
புரட்சிக் கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் அனைத்து விவசாயிகள்
வர்க்கத்திற்கும் இடையிலான கூட்டை லெனின் வலியுறுத்தினார். ஆனால் சோசலிசப்
புரட்சிக் கட்டத்தில் தொழிலாளர் வர்க்கத்திற்கும் ஏழை விவசாயிகள் வர்க்கத்திற்கும்
இடையிலான கூட்டை வலியுறுத்தினார். அதன் அடிப்படையிலேயே அக்டோபர் சோசலிசப் புரட்சி
வெற்றி பெற்றது.
மேலும்
சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் நிலத்தை தேச உடைமையாக்குவதையும், விவசாயிகள்
பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் நிலத்தைக் கூட்டுப்
பண்ணைகளாக மாற்றுவதைப் பற்றியும் லெனின் கூறினார்.
ஆனால் இங்குள்ள கட்சியோ புரட்சியின் கட்டத்தைத் தவறாகக் கணித்தது. அதன் காரணமாக வர்க்க எதிரிகளை நண்பர்களாகக் கணித்து அவர்களுடன் கூட்டு வைத்தது. சோசலிசப் புரட்சித் திட்டத்தை முன் வைத்து தொழிலாளிகள் மற்றும் ஏழை விவசாயிகளின் கூட்டை உருவாக்கத் தவறியது. நிலத்தை தேச உடைமையாக்குவது பற்றியும் விவசாயப் பிரதிநிதிகளைக் கொண்ட சோவியத்துகளின் கட்டுப்பாட்டில் நிலத்தை வைப்பது பற்றியும் கட்சி திட்டம் கூறவில்லை. அதன் காரணமாகவே இன்று கட்சி மக்களிடம் செல்வாக்கு இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது.
6. வரைவு
அரசியல் தீர்மானம், ”ஒரு பிற்போக்குத்தனமான இந்துத்துவ நிகழ்ச்சி நிரலைத்
திணிக்கும் அழுத்தமும், எதிர்க் கட்சிகளையும் ஜனநாயகத்தையும் ஒடுக்கும்
எதேச்சதிகார உந்துதலும் அதன் நவ பாசிச குணாம்சங்களைக் காட்டுகின்றன” என பாஜக
ஆட்சியைப் பற்றிக் குறிபிடுகிறது. இந்தக் கருத்து பற்றி அந்தக் கட்சியின் மத்தியக்
குழு தனது சுற்றறிக்கை எண் 5/2025ல் மேலும் சில விளக்கங்களை அளிக்கிறது. இப்போதைய பாசிசம்
முசோலினி, ஹிட்லர் காலத்திலிருந்த பாசிசம் போன்றதல்ல என்பதால் இதை நவ பாசிசம் எனக்
குறிப்பிடுகிறோம் என அது கூறுகிறது. அப்பொழுது அதிகாரத்தைக் கைப்பற்றிய பாசிச
சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்ததுடன், ஆயுத உற்பத்தியை
அதிகப்படுத்தவும், பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கவும் போரை ஒரு வழி முறையாகப்
பயன்படுத்தினார்கள். இந்தச் சக்திகளுக்கான முழு ஆதரவை வழங்கிய ஏகபோக மூலதனம்
நெருக்கடியைச் சமாளிப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளுக்காக அவர்களைச்
சார்ந்திருந்தது என்கிறது அறிக்கை.
ஹிட்லர்
மற்றும் முசோலினி காலத்திய பாசிச சக்திகள் முதலாளிய ஜனநாயகத்தை ஒழித்தது எனக் கூறும்
சுற்றறிக்கை நவ பாசிசக் கட்சிகள் தம் அரசியல் திட்டத்தை முன்னெடுப்பதற்கு
தேர்தல்களைப் பயன்படுத்துவது பழைய பாசிசத்திலிருந்து மற்றொரு வேறுபாடாகும்
என்றும், ஆட்சிக்கு வந்த பிறகும் அவை தேர்தல் முறையைக்க் கைவிடுவதில்லை,
தேர்தல்முறையைப் பராமரித்துக் கொண்டே, எதிர்க் கட்சிகளை ஒடுக்கவும், ஆதாயங்களைத்
திரட்டவும் எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்துகிறார்கள். அரசுக் கட்டமைப்பிற்கு
உள்ளிருந்து இயங்குவதன் மூலம் அதில் நீண்ட கால மாற்றங்களைக் கொண்டு வர
முயற்சிக்கிறார்கள் என்கிறது சுற்றறிக்கை.
அதிகாரத்தைக்
கைப்பற்றியதும் பழைய பாசிச சக்திகள் முதலாளித்துவ ஜனநாயகத்தை ஒழித்தன. நவ பாசிச
சக்திகள் தேர்தல் முறையைப் பராமரித்துக் கொண்டே எதேச்சதிகார முறைகளைப் பயன்படுத்தி
முதலாளிய ஜனநாயகத்தை ஒழிக்கின்றன. பழைய பாசிசம் உடனடியாக முதலாளிய ஜனநாயகத்தை
ஒழித்தது. நவ பாசிசம் படிப்படியாக அரசுக் கட்டமைப்பிற்குள்ளிருந்தே முதலாளிய
ஜனநாயகத்தை ஒழிக்கிறது. உண்மையில், முதலாளிய ஜனநாயகத்தை ஒழிக்கும் முறையில்தான்
வேறுபாடே தவிர சாராம்சத்தில் இரண்டும் முதலாளிய ஜனநாயகத்தை ஒழிக்கின்றது.
மேலும்
அந்தச் சுற்றறிக்கை, “20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால பாசிசத்தில் காணப்பட்ட அதே
சில கூறுகள் நவ- பாசிசத்திலும் உள்ளன. அவை, வரலாற்றில் செய்யப்பட்ட அநீதிகள்,
தவறுகள், என்று உருவாக்கப்பட்ட உணர்வுகளை அடிப்படையாகக் கொண்ட தீவிர தேசியவாதம்,
இனம், மதம், அல்லது இனக்குழு அடிப்படையில் சிறுபான்மையாக உள்ள “மற்றவர்களைக்” குறி
வைப்பது, அத்துடன் வலதுசாரிகள்/ நவ பாசிசக் கட்சிகள் அல்லது சக்திகளுக்கு பெரும்
முதலாளிகள் தரும் ஆதரவு ஆகியவையாகும். இந்தியாவில் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன்
இந்துத்துவ சித்தாந்தத்தினதால் நவ பாசிசம் வடிவமைக்கப்பட்டுள்ளது” என்று அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கை பாஜக –ஆர்.எஸ்.எஸ். கீழுள்ள தற்போதைய அரசியல் கட்டமைப்பு,
“நவ-பாசிச குணாம்சங்களை” வெளிப்படுத்தும் ஒரு இந்துத்துவ கார்ப்பரேட் எதேச்சதிகார
ஆட்சி என்று கூறுகிறது. மேலும் “குணாம்சங்கள்” என்ற சொல் அம்சங்களையோ அல்லது
போக்குகளையோ குறிக்கிறது. ஆனால் அவை ஒரு நவபாசிச அரசாங்கமாகவோ – அரசியல்
அமைப்பாகவோ வளர்ச்சியடையவில்லை. எனவே பாஜக- ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எதிர்த்துப்
போராடித் தடுத்து நிறுத்தாவிட்டால் இந்துத்துவ –கார்ப்பரேட் எதேச்சதிகாரம்
நவபாசிசத்தை நோக்கிச் செல்லும் என்ற அபாயத்தைப் பற்றி அரசியல் தீர்மானம்(வரைவு)
சுட்டுகிறது என அறிக்கை கூறுகிறது.
பாஜக
ஆட்சி பாசிச ஆட்சி அல்ல. நவ பாசிச “குணாம்சங்கள்’ மட்டும்தான் இருக்கின்றன. அவை
போக்குகள்தான். அவற்றைத் தடுத்து நிறுத்தாவிட்டால் அது நவ பாசிச ஆட்சியாக மாறும்
என தீர்மானம் கூறுகிறது.
அதைத்
தடுத்து நிறுத்துவதற்கான அரசியல், பொருளாதாரத் திட்டமாக கட்சி எதை முன்மொழிகிறது என்பதுதான்
நம் முன் உள்ள கேள்வி.
பாசிச
அபாயத்திற்கு மாற்றாக கட்சி, இடது ஜனநாயக வேலைத் திட்டத்தை முன் வைக்கிறது. பாசிச
அபாயத்திற்குக் காரணமாக இருப்பது நவீன தாராளமய, பெருமுதலாளித்துவ –நிலப்பிரபுத்துவ
சார்புக்கொள்கைகள்தான் என்று தீர்மானம் கூறுகின்றது. ஆனால் அதை வீழ்த்துவதற்கான
திட்டமாக அது வைத்துள்ள வேலைத் திட்டமோ நவீன தாராளமய முதலாளித்துவ –
நிலப்பிரபுத்துவ அமைப்பை வீழ்த்துவதற்கான திட்டமாக இல்லை. அரசியல் அமைப்பின்படி
ஜனநாயகம், மதச் சார்பின்மை கூட்டாட்சியை வலுப்படுத்துதல். தற்சார்பும் மக்கள்
சார்பும் கொண்ட வளர்ச்சிப் பாதை, உழைக்கும் மக்களின் உரிமைகள், கல்வி மற்றும்
கலாச்சாரம், சமூக நீதி, தேர்தல் சீர்திருத்தங்கள், வெளியுறவுக் கொள்கை ஆகிய
தலைப்புகளின் கீழ் கட்சி வைத்துள்ள திட்டம் அனைத்தும் முதலாளியச் சீர்திருத்தத்
திட்டங்கள்தான். நிலவும் முதலாளியப் பொருளார அமைப்பைத் தக்க வைத்துக் கொண்டே அதில்
சில சீர்திருத்தங்களைச் செய்வதன் மூலம் பாசிசத்தைக் கட்டுப்படுத்தி விடலாம் எனக்
கட்சி கருதுகிறது.
ஆனால்
முதலாளியம் நீடிக்கும் வரையிலும், அது தனது நெருக்கடிகளைத் தீர்க்க மீண்டும்
மீண்டும் பாசிச ஆட்சி முறையைக் கொண்டு வரும் என்பதுதான் நமக்கு வரலாறு உணர்த்தும்
உண்மை. ஆனால் முதலாளியத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அரசியல், பொருளாதாரத்
திட்டத்தை கட்சி முன்வைக்கவில்லை; நாடாளுமன்ற ஆட்சி அமைப்புக்குள்ளேயே
பாசிசத்திற்குத் தீர்வு தேடுகிறது.
அரசியல்
நிலைப்பாடாக மார்க்சிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் ‘இந்தியா’ அணி சேர்க்கையில் உள்ள
கட்சிகளுடன் ஒத்துழைப்பு நல்கியும், மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியே
ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளுடன் ஒத்துழைத்தும் கட்சி செயல்படும்’ என்றும்,
பாஜகவை உறுதியுடன் எதிர்த்திடும் பிராந்தியக் கட்சிகளுடன் மார்சிஸ்ட் கட்சி
ஒத்துழைக்கும் என்றும் தீர்மானம் கூறுகிறது. இதன் மூலம் பாசிச அபாயத்தைத் தடுத்து
நிறுத்திவிடலாம் எனக் கட்சி கருதுகிறது.
ஆனால் 1935
ஆம் ஆண்டு மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் ஏழாவது காங்கிரசில் தோழர்
டிமிட்ரோவால் முன் வைக்கப்பட்ட பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணித் தந்திரம்
எந்த இடத்திலும் முதலாளியக் கட்சிகளுடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி கட்டுவது
பற்றிக் கூறவில்லை. அவர் பாசிசத்திற்கும் முதலாளிய வர்க்கத்திற்கும் எதிரான
தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணி, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி ஆகியவை பற்றியே
குறிப்பிடுகிறார்.
நாடு
முழுவதும் உள்ள தொழிலாளர்களும் விவசாயத் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும்
ஓரணியில் ஐக்கியப்படுவது பற்றியே அவர் கூறுகிறார். முதலாளியக் கட்சிகளின் கீழ்
உள்ள தொழிற்சங்கங்கள், சீர்திருத்தவாத சோசலிச ஜனநாயகக் கட்சியின் (Social
Democratic party) கீழ் உள்ள தொழிற்சங்கங்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் உள்ள தொழிற்சங்கங்கள்
எனப் பல்வேறு தொழிற்சங்கங்களிலும் தொழிலாளர்கள் பிளவுபட்டுக் கிடக்கின்றனர். கட்சி
வேறுபாடின்றி அனைத்துத் தொழிலாளர்களின் செயல் ஒற்றுமையை பாசிசத்திற்கு எதிராக
நிறுவ வேண்டும் என அவர் கூறுகிறார். பாசிச எதிர்ப்புத் தொழிலாளர் ஐக்கிய
முன்னணியைக் கட்டுவது பற்றிக் கூறுகிறார்.
அடுத்து,
பாசிச எதிர்ப்புத் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிய முன்னணியின்
அடிப்படையில் சகல பகுதி மக்களையும் ஒன்றிணைத்து ஒரு விரிவான பாசிச எதிர்ப்பு
மக்கள் முன்னணியைக் கட்ட வேண்டும் எனக் கூறுகிறார். பாசிச எதிர்ப்பு மக்கள்
முன்னணியில் நாட்டின் மக்கள் தொகையில் மிகப் பெரும்பான்மையாக உள்ள உழைக்கும்
விவசாயிகளையும் நகர்ப்புறக் குட்டி முதலாளிய வர்க்கத்தினரையும் கை வினைஞர்களையும்
படிப்பாளிப் பகுதியினரையும் முதலாளியக் கட்சிகளின் செல்வாக்குகளிருந்து விடுவித்து
பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைக்க வேண்டும் என்கிறார்.
இத்தகைய
பாசிச எதிர்ப்பு முன்னணிகள் மூலமே பாசிசத்திற்கு முடிவு கட்ட முடியும்; முதலாளியச்
சுரண்டலிலிருந்தும் அடக்குமுறையிலிருந்தும் மக்கள் விடுதலை பெற முடியும். அதை
விடுத்து, தாங்கள் பலமாக இல்லை என்று கூறி முதலாளிய வர்க்கக் கட்சிகளை மாற்றி
மாற்றி ஆதரிப்பதன் மூலமும், அவற்றின் வாலாகச் செயல்படுவதன் மூலமும், அல்லது
முதலாளியக் கட்சிகளுடன் ஐக்கிய முன்னணி அமைப்பதன் மூலமும் எப்பொழுதும்
கம்யூனிஸ்டுகள் பலம் பெற முடியாது. மக்கள் முதலாளியச் சுரண்டலிலிருந்தும்
அடக்குமுறையிலிருந்தும் விடுதலை பெற முடியாது.
இத்தகைய
ஒரு பாசிச எதிர்ப்பு முன்னணி முதலாளிய ஆட்சிமுறையான நாடாளுமன்றமன்ற ஆட்சிமுறைக்கு
மாற்றாக பாட்டாளி வர்க்கத்தின் ஆட்சிமுறையான சோவியத் ஆட்சி முறையையும், முதலாளிய
அரசியல் பொருளாதாரத்திற்கு மாற்றாக சோசலிச அரசியல், பொருளாதாரத் திட்டத்தையும்
மக்கள் முன் வைத்து அவர்களை அணி திரட்ட வேண்டும். அது மட்டுமே பாசிசத்திற்கு
முடிவு கட்டும்; பாட்டாளி வர்க்கத்திற்கும் அனைத்து உழைக்கும் மக்களுக்கும்
உண்மையான விடுதலையையும் முரணற்ற ஜனநாயகத்தையும் வழங்கும்.
சோசலிசத் தொழிலாளர் இயக்கம்
தமிழ் நாடு
Comments
Post a Comment