Skip to main content

பயங்கரவாதத் தாக்குதலும் – பாஜகவின் திசைதிருப்பலும்!

ஏப்ரல் 22 அன்று காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் "சின்ன கவிட்சர்லாந்து" என அழைக்கப்படும் பைசரன் புல் வெளிப் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகளின் கொடூரமான துப்பாக்கித் தாக்குதலுக்கு இரையாகி 26 அப்பாவி மக்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்களில் 24 பேர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா வந்த பயணிகள். ஒருவர் நேபாள நாட்டைச் சேர்ந்தவர். ஒருவர் பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்த சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்ற முயற்சி செய்த சையத் அடில் ஹுசேன் ஷா. அவர் குதிரையில் பயணிகளை அழைத்து வந்தவர்.

இந்தக் கொடூரமான, மிருகத்தனமான செயலுக்கு எதிர்ப்பு முன்னணி (The Resistance Front) என்னும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் தாய் அமைப்பு லஸ்கர் இ- தைபா எனக் கூறப்படுகிறது.

உலகிலேயே இராணுவத்தினர் அதிக எண்ணிக்கையில் குவிக்கப்பட்டுள்ள இடமாக காஷ்மீர் பகுதி இன்று உள்ளது. காஷ்மீரின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் இராணுவம், போலீஸ் ஆகியவற்றின் கண்காணிப்பிலிருந்து யாரும் அவ்வளவு எளிதாகத் தப்ப முடியாது எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் இந்தக் கொடூரமான தாக்குதல் நடைபெற்றுள்ளது. அங்குள்ள இராணுவமும் போலீசும் என்ன செய்து கொண்டிருந்தது? இதுதான் மக்கள் முன் உள்ள கேள்வி.

2019, ஆகஸ்ட்டில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியிருந்த சட்டப்பிரிவு 370 ஐ மோடி அரசு இரத்து செய்ததும், அங்கு பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும், அமைதி திரும்பி விட்டதாகவும், ஜம்மு - காஷ்மீரில் வேகமான வளர்ச்சி ஏற்பட்டு வருவதாகவும் பாஜகவின் கோயபல்ஸ் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டன. இந்த அபத்தமான, முழுக்க முழுக்கப் பொய்கள் நிறைந்த பிரச்சாரங்களைத் தவிடு பொடியாக்கி விட்டது பஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல்.

பயங்கரவாதிகளின் செயலைக் கண்டு நாடெங்கும் கொதித்துப் போய் உள்ளனர் மக்கள். அதே சமயத்தில் ஏராளமான இராணுவத்தினரையும் போலீசையும் குவித்து வைத்துள்ள ஜம்மு- காஷ்மீர் பகுதியில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் ஓர் இடத்தில், மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க இராணுவத்தினரோ போலீசோ இல்லாததைக் கண்டு மக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் ஐயமும் அடைந்துள்ளனர்; மோடி அரசாங்கத்தின் மீது கடுங் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

அரசாங்கத்தின் கையாலாகாத்தனம், பொறுப்பற்றதன்மை ஆகியவற்றைக் கண்டு கடுங்கோபம் கொண்டுள்ள மக்களின் கவனத்தைத் திசை திருப்ப மோடியும் அவருடைய பரிவாரங்களும் பல கபட நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன.

'சுற்றுலாப் பயணிகள் பஹல்காம் செல்லும் விவரத்தை அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் உரிமையாளர்கள் போலீசுக்குத் தெரிவிக்கவில்லை அதனால்தான் பாதுகாப்புக் கொடுக்க முடியவில்லை' என ஒரு ஒன்றிய அமைச்சர் அபத்தமான, யாரும் நம்ப முடியாத ஒரு பொய்யைக் கூறுகிறார். உடனே அந்தப் பொய் அம்பலப்பட்டுப் போகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பைசரன் பள்ளத்தாக்கைப் பார்க்கச் சென்று வருவதும், அதைப் பார்க்க கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதும் ஊரறிந்த விசயம் என மக்களும் பத்திரிகைகளும் அம்பலப்படுத்தியுள்ளன.

இன்னொரு அமைச்சரோ அதற்கும் மேலே சென்று 'நாட்டிலுள்ள 140 கோடி மக்களுக்கும் நாட்டுப்பற்று இருந்தால்தான் இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க முடியும்' என்கிறார். பயங்கரவாதத் தாக்குதலிலிருந்து மக்களைக் காப்பாற்ற இயலாத, அரசாங்கத்தின் பொறுப்பற்ற தன்மையை மறைக்க மக்களுக்கு நாட்டுப் பற்றில்லை. அதனால்தான் இத்தகைய தாக்குதல்கள் நடக்கின்றன எனக் கூறி மக்கள் மீது பழி போடுகிறார்.

பயங்கரவாதிகளின் தாக்குதலைக் கேட்டு, தனது சவுதி அரேபியப் பயணத்தை இடையிலேயே நிறுத்தி விட்டு நாடு திரும்பிய பிரதமர் மோடி "கனவிலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள்" எனப் பேசி கோபம் கொண்டுள்ள 'மக்களைச் சமாதனப்படுத்த முயற்சி செய்கிறார்.

இந்துத்துவ வெறியர்கள் பஞ்சாபிலும் அரியானாவிலும் படித்து வரும் காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ளனர். அதன் மூலம் இந்த நாட்டில் வாழும் முஸ்லீம்கள் எல்லோரும் பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணம் என்ற கருத்தைப் பரப்பி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளைப் பயங்கரவாதிகளின் தாக்குதலிலிருந்து காப்பாற்றுவதற்குத் தனது உயிரைப் பறி கொடுத்தவர் காஷ்மீரத்தைப் சேர்ந்த ஒரு முஸ்லீம். துப்பாக்கிக் குண்டில் காயம்பட்டவர்களையும், தப்பியவர்களையும் காப்பாற்றுவதற்காக அனைத்து வழிகளிலும் உதவியவர்கள் முஸ்லீம் இளைஞர்கள். இவற்றை எல்லாம் மறைத்து விட்டு இந்துத்துவ வெறியர்கள் முஸ்லீம்களைத் தாக்கியுள்ளனர். 

பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான் தான் எனக் கூறி மோடியின் அரசாங்கம் பாகிஸ்தானுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்துள்ளது. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நுழைவிசைவுகளை (Visa) இரத்து செய்து 48 மணி நேரத்திற்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளது. அதில் பலர் மருத்துவச் சிகிச்சைக்காக இங்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தீடீர் ஆணையினால் பல ஆண்டுகள் இங்கு குடும்பமாக வாழ்ந்து வந்தவர்கள் பிரிக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுகின்றனர். இந்த நடவடிக்கைக்கு எதிராக . பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கைகளினால் அங்கிருந்து பல குடும்பங்களுக்கும் இதே கதி ஏற்பட்டுள்ளது. இரு நாட்டு ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையினால் அப்பாவி மக்கள் கடும் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பது பாகிஸ்தான்தான் என இங்குள்ள ஆட்சியாளர்கள் குற்றம் சொல்வதும், பாகிஸ்தானில் நடைபெறும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் இருப்பது இந்தியா தான் என அந்நாட்டு ஆட்சியாளர்கள் குற்றம் சொல்வதும் கடந்த எழுத்தைந்து ஆண்டு காலமாகத் தொடரும் கதையாக உள்ளது. ஒவ்வொரு நாட்டின் ஆட்சியாளரும் அண்டை நாட்டின் மீது பழி போட்டு தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழித்து வருகின்றனர்; பழிவாங்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்; அண்டை நாட்டு மக்கள் அனைவரும் நமக்கு எதிரிகள் எனச் சித்தரித்து வருகின்றனர்.

இவ்வாறு அண்டை நாட்டின் மீது மக்களின் வெறுப்பை உருவாக்கி மக்களின் கவனங்களைத் திசை திருப்புவதன் மூலம் இரு நாட்டிலுமுள்ள ஆளும் முதலாளிய வர்க்கங்களும் தங்கள் நாட்டில் நிலவும் ஏழ்மைக்கும், வறுமைக்கும், ஏற்றத்தாழ்வுகளுக்கும் தங்களின் சுரண்டல்தான் காரணம் என்பதை மூடி மறைத்து வருகின்றன.

1960 ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் ஏற்பட்ட சிந்து நதி ஒப்பந்தத்தை மோடி அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. நீர் வள அமைச்சர் சி.ஆர்.பட்டீல், "ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்குச் செல்லாது" எனக் கூறுகிறார்.

சிந்து நதி மற்றும் அதன் கிளை நதிகளினால் பாகிஸ்தானில் 4 கோடி ஏக்கர்கள் நீர்ப் பாசன வசதியைப் பெற்று வருகின்றன. அந்த நாட்டிலுள்ள 70 விழுக்காடு மக்களின் குடிநீர்த் தேவையை இந்த நதிகள் நிறைவு செய்து வருகின்றன.

இந்த நதிகளின் நீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானைப் பாலைவனமாக்கி விடலாம் என்ற நடைமுறை சாத்தியமில்லாத ஒரு பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறது மோடி அரசாங்கம்; பாகிஸ்தான் மக்கள் மீது வெறுப்பையும் கோபத்தையும் பரப்புவதன் மூலம் மோடி அரசாங்கத்தின் மீது இங்குள்ள மக்களின் கோபத்தைத் திசை திருப்பி வருகிறது; தேசிய வெறியையும் போர் வெறியையும் பரப்பி பதற்றத்தை உருவாக்கிவருகிறது. போரை உருவாக்கி ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரை வீண் பலி கொடுப்பதன் மூலம் மக்களின் கவனத்தைத் திசை திருப்பி விடத் திட்டமிடுகிறது.

முன்பு புல்வாமா பயங்கரவாதத் தாக்குலைப் பயன்படுத்திக் கொண்டு தேசிய வெறியையும், இந்துத்துவ வெறியையும், போர் வெறியையும் மக்களிடம் பரப்பி 2019 தேர்தலில் பாஜக. வெற்றி பெற்றது. இப்பொழுது பஹல்காம் தாக்குதலை அதே மாதிரி பீகார் தேர்தலில் வெற்றி பெறப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறது.

'மாப்பிள்ளை இறந்தாலென்ன, பெண் இறந்தாலென்ன, தனக்கு மாலைப் பணம் வந்தால் போதும்' என்பதைப் போல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும், பயங்கரவாதிகளால் மக்கள் கொல்லப்பட்டாலும் அதைத் தனது இந்துத்துவ வெறியைப் பரப்பவும், தேர்தலில் வெற்றி பெறவும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதில் குறியாக இருக்கிறது பாஜக.

காங்கிரசு ஆட்சியிலிருந்த போது நடந்த ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலின்போதும், "மக்களைக் காப்பாற்ற இயலாத ஆட்சியை மக்கள் தூக்கி எறிய வேண்டும்" என மோதியும் அவரது பரிவாரங்களும் நாடெங்கும் மேடைதோறும் முழங்கினர். அதை நாம் இப்பொழுது திருப்பிக் கூறுவோம், "மக்களைக் காப்பாற்ற முடியாத மோடி அரசாங்கத்தை மக்கள் தூக்கி எறிய வேண்டும்".

-புவிமைந்தன்


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...