4.6.2025 புதன்கிழமை அன்று இஸ்ரேலிய
பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் 1200 பேராசிரியர்களும் நிர்வாகிகளும், இஸ்ரேல் ராணுவம்
காசாவில் நடத்தி வரும் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதநேயத்திற்கு எதிரான கொடிய குற்றங்களை
எதிர்த்து வெளிப்படையான கண்டனக் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள்.
இஸ்ரேலின் பல்கலைக்கழகங்களின் தலைவர்களின்
சங்கம், பொதுக் கல்லூரிகளின் பேராசிரியர்களின் மன்றம், இஸ்ரேல் விஞ்ஞானம் மற்றும் மானுடவியல்
கழகம் மற்றும் இஸ்ரேல் ஜனநாயகத்திற்கான கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு இந்தக் கடிதத்தை
எழுதி உள்ளனர். மார்ச் மாதத்தில் இருந்து கிடியோன்'ஸ் சேரியட்ஸ் நடவடிக்கை
(Operation Gideon’s chariots) என்ற பெயரில் காசாவின் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு
வரும் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தக் கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின்
நோக்கம் பாலஸ்தீன மக்களைப் பட்டினியில் தள்ளி முற்றிலுமாக அழித்தொழித்து காசாவைத் தூய்மைப்படுத்தும்
இஸ்ரேலின் கொள்கையின் வெளிப்பாடாகும்
இந்தக் கடிதம் பின் வருமாறு கூறுகிறது:
18.03.2025ல் போர் நிறுத்த விதிகளை
இஸ்ரேல் மீறியதில் இருந்து, காசாவில் ஏறத்தாழ 3000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில்
மிகப் பெரும்பாலானவர்கள் பொது மக்கள். போரின் துவக்கத்திலிருந்து 15,000 குழந்தைகள்
மற்றும் குறைந்தபட்சம் 41 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உட்படக் குறைந்தபட்சம் 53,000 பேர்
காசாவில் கொல்லப்பட்டுள்ளனர்; அதே சமயத்தில் ஏராளமான சர்வதேச அமைப்புகள் கொடூரமான பட்டினி
குறித்தும், இஸ்ரேல் அரசாங்கத்தின் உள்நோக்கம் கொண்ட கொள்கையின் விளைவாக காசா மனிதர்கள்
வாழ்வதற்குத் தகுதியற்ற இடமாக்கப்படும் என்பது குறித்தும் எச்சரித்து வருகின்றன. இஸ்ரேல்
தொடர்ந்து இடைவிடாமல் காசாவின் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற நிறுவனங்களின்
மீது குண்டுமழை பொழிந்து அழித்துக் கொண்டிருக்கிறது. கிடியானின் சேரட் ராணுவ நடவடிக்கையின்
நோக்கங்களில் ஒன்று "காசா மக்களை முகாம்களில் அடைப்பது மற்றும் அவர்களை வெளியேற்றுவது”
என்பதாகும். இது போர்க் குற்றங்களின் கொடூரமான வழிபாட்டுப் பாடலாக, மனித குலத்துக்கு
எதிரான குற்றங்களாக, நாம் அனைவரும் சேர்ந்து செய்யும் செயலாகும்.
கல்வியாளர்களாக நாங்கள் இந்தக்
குற்றங்களில் நமது பங்கு என்ன என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். இது அரசாங்கங்கள்
மட்டும் தனியாக அல்லாமல், மனித சமூகங்கள் மனித குலத்திற்கு எதிராகச் செய்யும் குற்றங்களாகும்.
சிலர் நேரடியான வன்முறைகளின் மூலம் இதைச் செய்கிறார்கள். மற்றவர்கள் இந்தக் குற்றங்களைச்
செய்வதற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலமும், அவற்றை நியாயப்படுத்துவதன் மூலமும் இதைச் செய்கின்றனர்.
அமைதி காப்பதன் மூலமாகவும் கல்வி நிலையங்களில் எழுப்பப்படும் எதிர்ப்புக் குரலை அடக்குவதன்
மூலமாகவும் இதனைச் செய்கின்றனர். மனித குலத்திற்கு எதிரான, அப்பாவி மக்களுக்கு எதிரான
கொடூரமான குற்றங்களை தொடர்கிறார்கள். இந்த அமைதிதான் மிகத் தெளிவாக வெளிப்படையாக கொடூரமான
குற்றங்கள் தங்கு தடை இன்றி தொடர்வதை அனுமதிக்கிறது.
இந்தக் கடிதம் இஸ்ரேலுக்கு உள்ளிருந்தே
போருக்கு எதிராக எழுந்துள்ள மக்களின் எதிர்ப்பைக் குறிக்கிறது. இந்த எதிர்ப்பு எவ்வளவு
பரவலானது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சமீபத்தில் நடந்த கருத்துக்கணிப்பு
இன்னும் அங்கே பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு ஆதரவாக மிகப் பரவலான மக்களின்
ஆதரவு இருப்பதாக அறிவிக்கிறது; இந்தக் கருத்துக் கணிப்பு உண்மையாக இருக்குமானால், அது
நெடுங்காலமாக அங்கு இருக்கும் பிற்போக்கு ஜியோனிசக் கொள்கைகளும் பிரச்சாரங்களும் ஏற்படுத்தியுள்ள
ஆழமான சமூகக் குழப்பத்தையே வெளிப்படுத்துகிறது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் அரசாங்கத்தின்
சற்றும் இடைவிடாத, அளவற்ற பெருவெள்ளம் போன்ற அடுக்கடுக்கான பொய்கள் மக்களிடையே ஏராளமான
தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், ஆயிரத்திற்கும் அதிகமான சிறந்த கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள்
அரசாங்கத்தின் இந்தக் கொள்கைகள் குற்றத்தன்மை கொண்டவை என்று வெளிப்படையாகக் கண்டித்திருப்பது
ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஆகும்.
இந்தக் கடிதம் நெதன்யாகுவின் அரசாங்கத்தின்
மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை; கூடவே அதற்குப் பெரும் பக்கபலமாக உள்ள வாஷிங்டன்,
லண்டன், பெர்லின் மற்றும் பிற ஐரோப்பிய தலைநகரங்களைத் தலைமை இடமாகக் கொண்ட நாடுகளின்
தலைவர்கள் மீதும் குற்றம் சாட்டுகிறது; பாலஸ்தீனத்தின் காசாவில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை
மீதான விமர்சனங்களை அந்தத் தலைவர்கள் “யூத எதிர்ப்புத்தன்மை கொண்டது” எனக் கண்டிக்கின்றனர்.
ஹாரெட்ஸ் (Haaretz) மற்றும் அல் ஜஷீரா (Al jazeera) செய்தித் தளங்கள் இந்த கடிதம் குறித்து
மிகப் பெரும் அளவில் செய்திகளும் கட்டுரைகளும் வெளியிட்டபோதும் நியூ யார்க் டைம்ஸ்
பத்திரிக்கையும் பிற ஏகாதிபத்திய ஊடகங்களும் இந்த கடிதம் பற்றி சிறு செய்தியைக் கூடப்
பிரசுரிக்கவில்லை.
2023ம் ஆண்டு, நெதான்யாகுவின் அரசாங்கம்
நீதித்துறையை ஒடுக்க முயற்சி செய்தபோது அதற்கு எதிராகப் பெரும் மக்கள் போராட்டங்கள்
வெடித்தன; அந்தப் போராட்டங்களில் பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகித்தன; அதே சமயத்தில்
இப்பொழுது நடைபெற்று வரும் இனப்படுகொலை பற்றி அவை மவுனம் சாதிக்கின்றன. இந்த முரண்பாட்டை
இந்தக் கடிதம் சுட்டிக் காட்டுகிறது.
கடிதம் கூறுகிறது:
நீதித்துறையை மாற்றி அமைப்பதற்கு
எதிராக நடந்த போராட்டத்தில் இஸ்ரேலின் உயர் கல்வி நிறுவனங்கள் ஒரு மையமான பாத்திரத்தை
வகித்தன. இந்தப் பின்னணியில், காசாவில் இஸ்ரேலிய ராணுவம் இனப்படுகொலை செய்வது, பட்டினி
போடுவது, காசாவை அழிப்பது, காசாவின் கல்வி நிறுவனங்களை, மக்களை, அதன் கட்டுமானங்களை
அடியோடு அழித்து ஒழிப்பது ஆகிய செயல்களில் ஈடுபடும்போது அவை அமைதி காப்பது மிகவும்
முரண்பாடானதாகும்.
காசாவில் இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும்
இனப்படுகொலைக்கு எதிர்ப்பு வளர்ந்து கொண்டிருப்பதை வேறு சில நிகழ்வுகளும் காட்டுகின்றன.
3.06.2025 அன்று இஸ்ரேல் முழுவதும்
பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் பேராசிரியர்களும் காசாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்
இனப் படுகொலையை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து இந்தக் கடிதம் வெளியிடப்பட்டது.
"எங்களுடைய பெயரால் நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிராக நாங்கள் ஆற்றும் முதல்
எதிர்வினையாகும் இது.” என போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஹாரேட்ஸ் பத்திரிகைக்குத்
தெரிவிக்கிறார். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் இந்த இனப்படுகொலையை எதிர்த்துப் போராடிய
மாணவர்களும் பேராசிரியர்களும் காவல்துறையினரால் பல்கலைக்கழக வளாகத்தில் தாக்கப்பட்டனர்.
போராட்டத்தின் அமைப்பாளர்களில்
ஒருவரான பெண் பேராசிரியர் ஹாரெட்ஸ் செய்தியாளரிடம்,”இது குறிப்பிடத்தக்க முக்கியமான
நிகழ்வாகும்; இது மீண்டும் பின்னடைவைப் பார்க்காது" என்று கூறினார்.
சமூகம் முழுவதும் ஒரு வகையான கண்காணிப்பு,
தணிக்கை, மூச்சுத்திணற வைப்பது போன்ற சமூக முடக்கம், தொண்டைக் குழியில் அடக்கப்பட்ட
கதறல் இந்த நிலைமைகளில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மாணவர்களிடமிருந்து நமக்கு கிடைத்த
மிக முக்கியமான செய்தி ---- அமைதியாக இருப்பதை நிறுத்துங்கள் என்று சொல்வதற்கு அவர்களுக்கு
நாம் தேவையாக உள்ளது.
ஹைஃபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்
திரு. ஆயெலெட் பென்--இஷாய், "இஸ்ரேல் இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதிக்காமல் மீறியதாலேயே பலர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்."
என்கிறார். “இந்த விதி மீறலும் மேலும் காசாவில் நாம் உருவாக்கும் பட்டினியும் நமது
இந்த போராட்டத்திற்கு அடிப்படையாகும்." என்கிறார்.
இந்தக் கடிதத்தை பொது வெளியில்
பிரசுரித்த குழு "கருப்புக் கொடி நடவடிக்கைக் குழு" என்று அழைக்கப்படுகிறது.
டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பாரக் ஹாரெட்ஸ் செய்தித்தளத்துக்கு அளித்த
பேட்டியில் இந்தக் குழுவின்பெயர் "முந்தைய ஜெருசலேம் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தின்
நீதிபதி பெஞ்சமின் ஹாலெவி,1956ஆம் ஆண்டு கஃப்ர் ஹாசிமில் இஸ்ரேலின் எல்லை பாதுகாப்பு
போலீசாரால் 48 அப்பாவி பாலஸ்ததீனர்கள் படுகொலை செய்யப்பட்ட " நிகழ்வைப் பற்றித்
தனது தீர்ப்பில் குறிப்பிட்ட வார்த்தையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது ஆகும் என்கிறார்.
மேலும், திரு. பாரக், இஸ்ரேலியர்கள்
மத்தியில் நிலவும் காசா மக்களுக்கு எதிரான இந்தப் பரவலான அலட்சியப் போக்குக்கு காரணம்
காசா மக்களுக்கு எதிரான தீவிரமான மனிதநேயமற்ற பிரச்சாரம்தான் என்றும், இந்தப் பிரச்சாரம்
முழு வலிமையுடன் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்றும் கூறுகிறார்.
இஸ்ரேலின் நேகேவ் என்னும் இடத்தில்
உள்ள பென்-குரியோன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் யேல் ஹாஷிலோனி-டோலெவ், ஹாரெட்ஸ்
செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில், ‘மெல்லிய கீற்று போல மிகச் சிறிதளவு பொறுப்பு
அல்லது மனித நேயம் இருப்பவர்கள் யாரும் இதற்கு மேலும் இத்தகைய பிரச்சாரத்தை ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு விரோதமான குற்றங்கள்
காசாவில் மிக வெளிப்படையாக செய்யப்படுகின்றன என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். அறநெறிக்
கோட்பாடுகளின் சிதைவின் நடுவில் நாம் இப்போது இருக்கிறோம்’ என்கிறார்.
உயர்ந்த கல்வியாளர்களின் இந்த வெளிப்படையான
கடிதம், “பாலஸ்தீனர்களின் துயரங்களுக்கு அடிப்படைக் காரணமான இந்தப் போருக்கான உறுதியான
எதிர்ப்பை அதன் இதயத்தில் தாங்கி உள்ளது” என்று அல் ஜஷீரா தெளிவாக குறிப்பிடுகிறது.
இந்தப் பத்திரிகை நிருபரிடம் “பாலஸ்தீனர்களின் துன்பங்களே எங்களது கோரிக்கைகளின் முக்கியமான
அடிப்படையான விஷயமாகும். நாங்கள் பாலஸ்தீனர்களுடன் ஒன்றிணைந்து உறுதியுடன் நிற்கிறோம்
என்று சொல்ல விரும்புகிறோம்; மேலும் இஸ்ரேலியர்கள் காசாவில் நடத்திக் கொண்டிருக்கும்
கொடுமைகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதோடு, அந்தக் கொடுமைகளுக்கு எதிராகப் பொதுமக்களின்
கண்களைத் திறக்கச் செயல்படுகிறோம்" என்று பேராசிரியர் பென் இஷாய் கூறுகிறார்.
அந்த கடிதம் இந்த நாட்டின் “எல்லா
மக்களுக்கும், யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் வேண்டுகோள் விடுகிறது”.
‘அப்பாவி மக்களின் வாழ்க்கைக்காகவும்,
இந்த மண்ணின் அனைத்து மக்களின் பாதுகாப்புக்காகவும் பாலஸ்தீனர்கள் மற்றும் யூதர்கள்
அனைவருக்காகவும், பணயக் கைதிகள் மீண்டு வருவதற்காகவும், நாம் இந்தப் போரை உடனடியாக
நிறுத்துவதற்குக் குரல் கொடுக்காவிட்டால் வரலாறு நம்மை மன்னிக்காது!’ என்று கடிதம்
கூறுகிறது.
அறநெறிக்கான வேண்டுகோளை இந்தக்
கடிதம் கொண்டுள்ளது. இந்தக் கடிதத்தை எழுதிய கல்வியாளர்கள் இந்த இனப் படுகொலைக்கு அடிப்படையான
வரலாற்று, அரசியல் பிரச்சினைகளைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் இந்தப் போருக்கு எதிரான
தீவிரமான கோபத்தை கடிதம் வெளிப்படுத்துகிறது; இந்தக் கொடூரத்தைச் செய்யும் அரசாங்கத்திற்கு
எதிரான உறுதியான எதிர்ப்பின் வளர்ச்சிக்கு ஜியோனிசத்தின் கொள்கை மற்றும் கருத்தியலிலிருந்து
முற்றிலும் முறித்துக் கொள்வது அவசியமாகிறது. 1948ல் பிற்போக்கான அரசியலின் அடிப்படையில்
உருவாக்கப்பட்ட “யூத அரசுதான்” இந்தப் போரின் உச்சகட்ட இனப் படுகொலைக்குக் காரணமாக
உள்ளது.
"இந்த பூமியின் எதிர்காலத்தைக்
காக்க என்னவெல்லாம் எஞ்சியுள்ளதோ அவற்றைக் காப்பது எங்களின் கடமை" என்று இந்தக்
கடிதத்தை எழுதிய கல்வியாளர்கள் கூறுகிறார்கள். இஸ்ரேல் என்பதற்கு மாறாக "இந்த
பூமியின்" என்று பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகள், பாலஸ்தீன மக்களைச் சுரண்டுவது,
கொல்வது ஆகியவற்றின் அடிப்படையில் இஸ்ரேல் அரசு இருத்தல் என்பது தொடர்ந்து படுகொலைகளைத்தான்
உருவாக்கும்; எந்தவகையான எதிர்காலத்தையும் உருவாக்காது என்ற விழிப்புணர்வு வளர்ந்து
வருவதைக் காட்டுகிறது.
ஒரே சாத்தியமான எதிர்காலம் என்பது
தற்போது உள்ள பிற்போக்கு ஜியோனிச அரசை புரட்சி மூலம் வேரோடு வீழ்த்தி விட்டு ஒரு சோசலிசக்
குடியரசில் பாலஸ்தீனிய மற்றும் யூத உழைக்கும் வர்க்கம் ஒன்றிணைவதுதான்.
ஆங்கிலத்தில்: அன்ட்தர் தாமன் மற்றும்
டேவிட் நார்த்
தமிழில்: சூர்யா
(Monthly Review Onlineல் ஜூன்
4, 2025 ல் வெளிவந்த கட்டுரை)
ReplyDeleteமிக அவசியமான கட்டுரை. இது சாதாரண மக்களின் பார்வையை மனதை அடைவது அவசியம்.