Skip to main content

வேலைநேரம் நீட்டிப்பும், முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை அதிகரிக்க வழிவகுக்கும் முதலாளித்துவக் கட்சிகளும்!

 

கர்நாடக அரசு கடை மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் (Karnataka Shops and Commercial Establishments (Amendment) Bill 2024) திருத்தம் செய்வதற்கான மசோதா ஒன்றை கர்நாடக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டு வந்தது. தொழிற்சங்கங்களின், தொழிலாளர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக அதனைச் சட்டமாக்குவதைக் காலம் தாழ்த்தி வந்தது. ஆனால், ஆந்திர அரசு வேலைநேர அதிகரிப்பிற்கான சட்ட முன்வடிவைக் கொண்டு வந்த பின் கர்நாடக அரசும் மீண்டும் செயல்படுத்துவதற்கான முயற்சிகளைச் செய்துவருகின்றது.

மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், அரியானா, ஹிமாச்சல்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் வேலைநேரத்தை அதிகரிப்பதற்கான வழிவகைகளைச் செய்திருக்கும் நிலையில், ஆந்திரப்பிரதேசத்தில் தெலுங்குதேசம் தலைமையிலுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஒரு நாளின் வேலைநேரத்தை 10 மணிநேரமாக உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கு ஏற்பத் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் மற்றும் மக்கள் தொடர்பு அமைச்சர் கே. பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். அந்தச் சட்டத்தில் வழக்கமான வேலைநேரத்தைத் தாண்டிக் கூடுதலாக வேலை செய்வதற்கான கூடுதல் வேலைநேரம், ஒரு காலாண்டிற்கு 75 மணிநேரம் என்றிருந்ததை 144 மணி நேரமாக அதிகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி ஒரு நாளின் வழக்கமான வேலைநேரம் 10 மணி எனவும், கூடுதல் வேலைநேரம் 2 மணிநேரம் எனவும் அரசு நிர்ணயித்துள்ளதால், நாள்தோறும் தொழிலாளர்கள் 12 மணிநேரம் வேலை செய்யவேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

பாஜகவின் மாற்று என்றும், பாசிச எதிர்ப்புச்சக்தி என்றும், ஜனநாயகச்சக்தி என்றும் கூறிக்கொள்ளும் காங்கிரசுதான் கர்நாடகாவில் ஆட்சிக்கட்டிலில் உள்ளது. கர்நாடக அரசும், ஒருநாளின் வேலைநேரத்தை அதிகரிக்க நீண்டநாட்களாக முயற்சி செய்து வருகின்றது. கர்நாடக அரசு கொண்டு வந்துள்ள மசோதாவின்படி ஒருநாளின் வேலைநேரம் 14 மணிநேரம் என்றும் வாரத்திற்கு 70 மணிநேரம் என்றும் வரையறை செய்துள்ளது.

கடை மற்றும் வணிக நிறுவனங்களில் ஒருநாளின் வேலைநேரமானது கூடுதல் ஊதியத்துடன் கூடிய கூடுதல் வேலைநேரம் உட்பட 10 மணிநேரம் என்ற அளவிலும் ஒருவாரத்தின் வேலைநேரம் 48 மணிநேரம் என்ற அளவிலும் இருந்ததைத் தற்பொழுது மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 10 மணிநேரம் சாதாரண வேலைநாளாகவும், கூடுதல் பணியையும் சேர்த்து 14 மணிநேர வேலைநேரத்தை கொண்டுவர இந்தச் சட்டத்திருத்தம் வழிவகை செய்கின்றது.

இந்தச் சட்டத்திருத்தத்தை ஐ.டி. நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென முதலாளிகள் கர்நாடக அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில் ஐ.டி. நிறுவனங்களுக்கும் கொண்டு வர முயற்சி செய்து வருகின்றது.

தற்போதைய நிலையில் ஐ.டி. நிறுவனங்களில் வேலைநேரம் மேலும் அதிகரித்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்புகள் 35 சதவீத அளவிலும், இதய நோயால் ஏற்படும் இறப்புகள் 17 சதவீத அளவிலும் அதிகரிக்ககூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை செய்துள்ளது.

ஐ.டி. நிறுவனங்களின் கூட்டமைப்பான நாஸ்காம் தொழிலாளர்களிடையே எழுந்த எதிர்ப்புகளைக் கண்டு, நாங்கள் இந்த வேலைநேர அதிகரிப்பைக் கோரவில்லை என்றும், இந்த மசோதாவின் நகலைக்கூட நாங்கள் பார்க்கவில்லை எனவும் கூறுகின்றது, வாரத்திற்கு 48 மணிநேர வேலை என்பதையே நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் இதில் நெகிழ்வுத்தன்மையை எதிர்ப்பார்க்கின்றோம் என்றும் நாஸ்காம் துணைதலைவர் ஆசிஷ் அகர்வால் கூறுகிறார்.

ஆனால், கர்நாடகா தொழிலாளர்துறை அமைச்சரான சந்தோஷ் லத், ஐ.டி. நிறுவனங்களின் வற்புறுத்தலின் பெயரிலேயே இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்தோம் எனவும், ஐ.டி.துறை அமைச்சரின் விருப்பத்தின் பெயரில் இதனைக் கொண்டுவரவில்லை எனவும் கூறுகின்றார்.

எல்&டி குழுமத்தின் தலைவர் சுப்பிரமணியன், நிறுவன ஊழியர்களின் கூட்டத்தில் பேசும்போது இந்தியா உலகின் தலைசிறந்த நிலையை அடைய வேண்டுமென்றால் வாரம் 90 மணிநேரம் தொழிலாளர்கள் உழைக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். ”வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்எனத் தொழிலாளர்களிடம் கேட்ட சுப்பிரமணியம், “உங்கள் மனைவியை எவ்வளவு நேரம் தான் பார்த்துக் கொண்டு இருப்பீர்கள் எனவும்; அவர்களும் உங்களை எவ்வளவு நேரம் பார்த்துகொண்டு இருப்பார்கள் எனவும்தொழிலாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.

இன்போசிஸ் நாராயணமூர்த்தி தொழிலாளர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்யவேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஓலா நிறுவனத்தின் இணை நிறுவனர் பாவிஷ் அகர்வால் மற்றும் ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிந்தால் போன்றோர் நாராயணமூர்த்தியின் கருத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனர். அதன்முலமே உற்பத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த முடியும் எனவும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

பிரதமர் மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணிநேரம் வேலை செய்வதைப் போன்று தொழிலாளர்களும் அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வோடு வேலை செய்ய வேண்டும் என்கின்றார் இன்போசிஸ் நாராயணமூர்த்தி. மோடியின் இந்த உழைப்பு நாராயணமூர்த்தி போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களின் வளத்தை மேலும் வளப்படுத்துவதற்கானது தானே தவிர, வறுமையில் வாடும் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலனுக்காக அல்ல. மேலும், தொழிலாளர்கள் தினமும் 12 மணிநேரம் வேலை செய்து வந்தாலும், அவர்களின் அன்றாடத் தேவையை நிறைவேற்றம் செய்வதற்குக் கூட முடியாத நிலையில் வறுமையிலும், கடனிலும் சிக்கித் தவித்து வருகின்றனர்.

தொழிலாளர்களின் உழைப்பின் பெரும்பகுதியை உபரிமதிப்பாக இந்த மூலதன உடைமையாளர்கள் அபகரித்துக் கொள்வதுதான் தொழிலாளர்கள் வறுமையில் உழல்வதற்கு காரணம் என்பதை மறைத்து, இன்னும் அதிக நேரம் உழைக்க வேண்டும் என முதலாளிகள் கோருகின்றனர். வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் இன்னும் அதிகமான அளவு உபரி மதிப்பைச் சுரண்டி அவர்களுடைய இலாபத்தைப் பெருக்கிக் கொள்ளத் துடிக்கின்றனர்.

முதலாளித்துவம் நெருக்கடியிலிருந்து தப்பிக்கவும், இலாபத்தை மென்மேலும் பெருக்கவும், தொழிலாளர்களின் ஊதியம் கொடுக்கப்படாத உழைப்பை அதாவது உபரி உழைப்பை அதிகப்படுத்த வேண்டும். எனவே, கூலியின் அளவில் எந்த மாற்றமும் இல்லாமல் வேலைநேரத்தை அதிகரிப்பதன் மூலம் சுரண்டபடும் உபரி மதிப்பை அதிகரிக்க முதலாளிகள் முனைகின்றனர். இதுவரையிலும் சட்டத்திற்குப் புறம்பாக செய்துவந்த வேலையைச் சட்ட அங்கீகாரம் பெற்று செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களின் சுரண்டலுக்குத் துணை செய்வதற்கான திட்டத்தின் ஒரு பகுதி தான் தொழிலாளர்களின் குறைந்த அளவிலான உரிமைகளைக் கூட பறிப்பதற்கான புதிய தொழிலாளர் சட்டங்களாகும்.

பாஜக அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு ஜூலை 22 இல் நாடாளுமறத்தில் முன்வைத்திருந்த பொருளாதார ஆய்வறிக்கையில் தொழிலாளர்களின் வேலைநேரங்களில் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்க வேண்டும் எனவும், ஒருநாளின் வேலைநேரத்திற்கு உள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக அகற்றவேண்டும் எனவும், இதன்மூலம் கூடுதல் வேலைநேரத்திற்கு இரட்டிப்பு ஊதியம் நடைமுறையை அகற்றி கூடுதல் வேலைநேரத்திற்காக முதலாளிகள் செலவழிக்கும் தொகையைக் குறைத்து அவர்களை வாழவைக்க வேண்டும் எனவும் கூறுகின்றது. ஒருநாளின் வேலைநேரத்தை எட்டு மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்துவதன் மூலம் கூடுதலான நான்குமணி நேரத்திற்காக செலவிடப்படும் தொகையில் பாதியை முதலாளிகள் சேமிக்க சட்டப்படியாக வழிவகை செய்ய இந்த அறிக்கை ஆலோசனைகளை முன்வைக்கின்றது.

ஒருநாளின் வேலைநேரத்திற்கு வரையறைகள் இல்லாமல் கட்டுப்பாடுகள் இல்லாமல் தொழிலாளர்களிடம் வேலை வாங்குவதற்கான நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்ற முதலாளிகளின் வேட்கையையே இந்த ஆய்வறிக்கை பிரதிபலிக்கின்றது. மேலும், முதலாளிகள் இலகுவாகத் தொழிலை நடத்தும் வகையில் தொழிலாளர் சட்டங்களில் இன்னும் அதிகளவில் நெகிழ்வுத்தன்மை வேண்டும் என இந்த அறிக்கை கூறுகின்றது.

வேலைநேரம் மட்டுமல்லாமல், ஒப்பந்தத் தொழிலாளர்களின் மீதான சுரண்டல், குறித்தகால வேலைமுறை (Fixed Term Employment), இரவு நேரங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது, அதிகாரிகளின் ஆய்விலிருந்து ஆலைகளுக்கு விலக்களித்தல், ஆட்குறைப்பு, நிறுவனத்தை மூடல் ஆகியவற்றிற்கு அரசின் அனுமதியைப் பெறுவதற்கான உச்சவரம்பை அதிகரித்தல் என ஏராளமான வகையில் தொழிலாளர்களின் நலனுக்கு விரோதமாக இந்திய அரசும், மாநில அரசுகளும் சட்டங்ளைத் திருத்தம் செய்து வருகின்றன.

முதலாளி வர்க்கத்தின் வெட்ககேடான இத்தகைய சுரண்டல் நலனுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதில் எந்த முதலாளித்துவ கட்சிகளும் விதிவிலக்கல்ல, ஆளும் பாஜக கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவின் மாற்று எனக் கூறி கொள்ளும் காங்கிரசாக இருந்தாலும் சரி, மாநில மக்களின் நலனை பிரதிபலிப்பதாகக் கூறி ஏமாற்றிவரும் மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அவை தமது வர்க்க நலனை அப்பட்டமாக வெளிக்காட்டி வருகின்றன. ஆனால் அதே சமயத்தில் தொழிலாளர்களின் நலன்களுக்காவே செயல்பட்டு வருவதாக இந்தக் கட்சிகள் போலியாக வேடமிட்டு வருகின்றன. தொழிலாளி வர்க்கம் இந்த முதலாளியக் கட்சிகளின் போலித்தனத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்; முதலாளிகளின் சுரண்டலை ஒழித்து விடுதலை பெற தொழிலாளர்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஓரணியில் திரள வேண்டும்.

 

குமணன்

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

Comments

  1. இந்தக் கட்டுரை, முதலாளி வர்க்கத்தின் கொடூரமான, உழைக்கும் மக்கள் விரோத கருத்தைப் பிரதிபலிக்கும் சட்டத் திருத்தத்தை மிகவும் தெள்ளத் தெளிவாக பல பின்னணி விவரங்களோடு எடுத்துக் காட்டுகிறது.

    தொழிலாளர்களுடைய வேலை நேரத்தை அதிகரிப்பது முதலாளி வர்க்கத்தின் இலாபத்தைப் பெருக்கும் என்பதும், தொழிலாளிகளை மேலும் ஒட்டச் சுரண்டும் என்பது வெட்ட வெளிச்சமான உண்மையாகும். எல்&டி, இன்போசிஸ் மற்றும் பிற பெரும் முதலாளிகளுடைய ஆணவமான கருத்துக்கள், தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டுப் போராடி தன் 8 மணி நேர வேலை என்ற உரிமை பறிபோகாமல் காத்துக் கொள்ள வேண்டியத் தேவையை கட்டுரை உணர்த்துகிறது.

    "முதலாளி வர்க்கத்தின் வெட்ககேடான இத்தகைய சுரண்டல் நலனுக்கு விசுவாசமாக நடந்து கொள்வதில் எந்த முதலாளித்துவ கட்சிகளும் விதிவிலக்கல்ல, ஆளும் பாஜக கட்சியாக இருந்தாலும் சரி, பாஜகவின் மாற்று எனக் கூறி கொள்ளும் காங்கிரசாக இருந்தாலும் சரி, மாநில மக்களின் நலனை பிரதிபலிப்பதாகக் கூறி ஏமாற்றிவரும் மாநிலக் கட்சிகளாக இருந்தாலும் சரி, அவை தமது வர்க்க நலனை அப்பட்டமாக வெளிக்காட்டி வருகின்றன...முதலாளித்துவ சுரண்டலை ஒழிக்க தொழிலாளிகள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி ஓரணியில் திரள வேண்டும்" என்ற கட்டுரையின் மையக் கருத்து, வரவேற்று செயல்படுத்த வேண்டியதாகும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...