Skip to main content

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.

ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு.

சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்பதைப் பாப்போம்.

“புரட்சி என்றால் அதிகார மாற்றம்தான். இதனடிப்படையில், ருசியாவில் பிப்ரவரியில் நடந்தது முதலாளியப் புரட்சி என்றால் அடுத்து நடத்த வேண்டியது சோசலிசப் புரட்சி என்று ஏப்ரல் ஆய்வுரைகளில் லெனின் கூறியதாக சிலர் தவறாக விளக்கம் கொடுக்கின்றனர். இந்தத் தவறான புரிதலில் அடிப்படையில், இந்தியாவில் 1947ஆம் ஆண்டு நடந்தது முதலாளியப் புரட்சி என்றால், இனி நடத்த வேண்டியது சோசலிசப் புரட்சி என்று எளிதாக முடிவெடுக்கின்றனர்.” என ஈஸ்வரன் கூறுகிறார்.

லெனின் தனது ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூலில் புரட்சி பற்றி என்ன கூறியுள்ளார் என்பதைப் பார்ப்போம்.:

“1917 பிப்ரவரி-மார்ச் புரட்சிக்கு முன்பு, அரசியல் அதிகாரம் நிக்கோலஸ் ரோமானோவ் தலைமையில் இருந்த நிலப்பிரபுத்துவ நிலவுடைமை மேட்டுக் குடி வர்க்கத்தின் கைகளில் இருந்தது.

“புரட்சிக்குப் பிறகு, அதிகாரம் முதலாளிகள் என்ற வேறுபட்ட புதிய வர்க்கத்தின் கைகளில் உள்ளது.

புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கறாரான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.

“இந்த அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று விட்டது.” (அழுத்தம் லெனின் அவர்களுடையது. April Theses, p.15).

புரட்சி என்பது அதிகார மாற்றம்தான் என்பதை இங்கு லெனின் தெள்ளத்தெளிவாக விளக்குகிறார்.

மேலும் புரட்சியின் கட்டம் பற்றி லெனின் கூறும்போது

“இன்றைய ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம் என்னவென்றால், நாடு புரட்சியின் முதல் கட்டத்தைக் கடந்து அதனுடைய இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. பாட்டாளிகளிடம் போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்புப் பலமும் இல்லாததால் முதல் கட்டத்தில் அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. இரண்டாவது கட்டத்தில் அரசியல் அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள பகுதியினரிடமும் வர வேண்டும்.” (அழுத்தம் லெனின் அவர்களுடையது. April Theses, p.8).

இங்கு தெளிவாகவே முதலாவது கட்டத்தில் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அடுத்த கட்டத்தில், அதாவது சோசலிசக் கட்டத்தில், அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள பகுதியினரிடமும் வர வேண்டும் என்கிறார் லெனின்.

இவை புரிந்து கொள்ளமுடியாத விடயங்கள் அல்ல. இதைப் புரிந்து கொள்ள யாருடைய பொழிப்புரையும் தேவை இல்லை. ஆனால் ஈஸ்வரன் லெனின் அவ்வாறு கூறியதாகச் சிலர் தவறாக விளக்கம் அளிக்கின்றார்கள் எனக் கூறுகிறார். இவர்களின் பார்வை ஆட்சி மாற்றத்தோடு சுருங்கிப் போனதற்கு லெனினது கருத்தைத் துண்டாக, தனித்து எடுத்துப் புரிந்து கொண்டதே காரணமாகும் என்கிறார். லெனினை “முழுமையாகப்” புரிந்து கொண்டு, அவர்களுடைய “தவறுகளைக் களைந்து” அறிவொளி ஊட்ட புதிய பொழிப்புரை ஒன்றை எழுதுகிறார்.

ஏப்ரல் ஆய்வுரைகளில் லெனின் கூறிய கருத்துக்கு இதுவரையிலும் யாரும் கூறாத புதிய விளக்கத்தைக் கொடுத்து பொழிப்புரை எழுதியுள்ளார். புராண, இதிகாசங்களுக்குப் பொழிப்புரையும் விளக்கமும் எழுதுபவர்கள் தமது கண்ணோட்டத்திலிருந்து தமது கருத்துகளை அவற்றில் திணித்து அவைதான் சரியானது என்று வாதாடுவார்கள். ஈஸ்வரனும் லெனினின் கருத்துக்கு தனது பார்வையில் இருந்து புதிய பொழிப்புரை எழுதி விளக்கம் கொடுக்கிறார். புதிய கோட்பாட்டை உருவாக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்தக் கோட்பாடு எவ்வளவு அபத்தமானது என்பது விரைவில் அமபலப்பட்டுப் போகிறது.

ஆனால் அவர் தனது பொழிப்புரையில் 1947 ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய முதலாளிகளின் கைகளில் வந்த அதிகார மாற்றம் முதலாளியப் புரட்சி முடிவுற்றதைக் குறிக்கின்றதா இல்லையா என்பது பற்றியோ, அடுத்த கட்டப் புரட்சி புதிய ஜனநாயகப் புரட்சியா சோசலிசப் புரட்சியா என்பது பற்றியோ எதுவும் கூறாமல் மவுனம் சாதிக்கிறார். ரசிய நிலைமையின் குறிப்பான நிலைமை இங்கு இல்லாததால் சோசலிசப் புரட்சியை இங்கு நடத்த முடியாது என்று மட்டும் கூறுகிறார்.

அவருடைய கோட்பாட்டைச் சிறிது விரிவாகப் பார்ப்போம்.

தனது நூல் அறிமுக உரையில் பின்வருமாறு ஈஸ்வரன் கூறுகிறார்: “இரண்டாவது ஆய்வுரையில், ருசியாவில் பிரத்யேக இயல்பாக புரட்சியின் இரண்டு கட்டங்களான மாற்றத்தை லெனின் குறிப்பிடுகிறார். புரட்சியின் முதல் கட்டத்தில் ஆட்சி அதிகாரம் முதலாளித்துவ வர்க்கத்திடம் சென்றது. புரட்சியின் இரண்டாவது கட்டமாக ஆட்சி அதிகாரம் உழைப்பாளர்களிடம் வந்தடைய வேண்டும் என்று கூறியுள்ளார்.

“இங்கு லெனின் ஆட்சி அதிகாரம் மாறுவது பற்றிய பிரத்யேக நிலைமையினைப் பற்றித்தான் பேசியுள்ளார்.

“ஏப்ரல் ஆய்வுரையில் கூறியதில் இவைதான் முக்கியமானது. இதைப் புரிந்து கொள்வதில் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் நம் நாட்டில் சிலர் தாமும் குழம்பி, மற்றவர்களையும் குழப்பி வருகின்றனர். குழப்பத்துக்குக் காரணம் என்னவென்பதைப் பார்ப்போம்.”

ஈஸ்வரன் கூறும் பிரத்யேக நிலைமை அல்லது குறிப்பான நிலைமை என்பது ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சி என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும் என்றார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சியை நடத்தக் கூடாது. என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு.

ரசியாவிற்கே உரிய குறிப்பான நிலைமை என்ன? தனது இரண்டாவது ஆய்வுரையில் லெனின் கூறுவதைப் பார்ப்போம்:

“இன்றைய ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம் என்னவென்றால், நாடு புரட்சியின் முதல் கட்டத்தைக் கடந்து அதனுடைய இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. பாட்டாளிகளிடம் போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்புப் பலமும் இல்லாததால் முதல் கட்டத்தில் அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. இரண்டாவது கட்டத்தில் அரசியல் அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள பகுதியினரிடமும் வர வேண்டும்.” (அழுத்தம் லெனின் அவர்களுடையது. April Theses p.8).

புரட்சி முதலாவது கட்டத்தைக் கடந்து இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்ததுதான் ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம் என்று லெனின் கூறுகிறார். முதலாவது கட்டத்தில் அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அந்த வகையில் முதலாளியப் புரட்சி முடிவுற்றது. ஆனால் புரட்சி அத்தோடு நின்று விடாமல் இரண்டாவது கட்டத்தில் நுழைந்துள்ளது. இரண்டாவது கட்டத்தில் அதாவது சோசலிசப் புரட்சிக் கட்டத்தில் அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள பகுதியினரிடமும் வர வேண்டும் என்கிறார்.

மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் முதலாளியப் புரட்சிகளின் சகாப்தம் 1789 முதல் 1871 வரையிலான காலப் பகுதியாகும் என்கிறார் லெனின். இந்தக் காலப் பகுதியில் முதலாளியப் புரட்சிகளின் போது, முதலாளிய வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றியதும் புரட்சி முடிவுக்கு வந்தது. முதலாளிய வர்க்கம் தனது ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்டது. உடனடியாகத் தொடர்ந்து புரட்சி அடுத்த கட்டத்திற்குச் செல்லவில்லை. ஏனென்றால் அப்பொழுது பாட்டாளி வர்க்கம் அரசியல் அரங்கில் புரட்சிக்குத் தலைமை தாங்கும் சக்தியாக வளர்ந்திருக்கவில்லை.

ஆனால் ரசியாவில் நிலைமையோ முற்றிலும் வேறுபட்டிருந்தது. பாட்டாளி வர்க்கக் கட்சி இருந்தது. 1905ல் ஏற்கனவே ஒரு புரட்சியை நடத்திய அனுபவம் அதற்கு இருந்தது. அந்தப் புரட்சியின் போதே சோவியத்து என்ற வடிவம் தோன்றியிருந்தது. ஆனால் அந்தப் புரட்சி தோல்வி அடைந்தது.

போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்பு பலமும் பாட்டாளி வர்க்கத்திடம் இல்லாததால் ரசியாவில் மக்களின் எழுச்சியைப் பயன்படுத்திக் கொண்டு முதலாளிய வர்க்கம் 1917 பிப்ரவரியில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியது. இருப்பினும் தனது அரசியல் அதிகாரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. புரட்சி அலை அதனைக் கடந்து இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தது. முதலாளியப் புரட்சியைக் கடந்து சோசலிசப் புரட்சிக்குச் சென்று கொண்டிருந்தது. ஒரு பக்கம் முதலாளிய வர்க்கத்தின் தற்காலிக அரசாங்கம் இருந்தது. இன்னொரு பக்கம் தொழிலாளர்களின் பிரதிநிதிகளையும், படை வீரர்களின் பிரதிநிதிகளையும் கொண்டிருந்த சோவியத்துகள் இருந்தன. இதுதான் ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம்.

லெனின் ரசியாவில் புரட்சிக் கட்டம் முதலாளியப் புரட்சிக் கட்டத்தில் இருந்து சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்கு மாறி விட்டது என்று கூறியது சோவியத் அதிகாரம் தோன்றியதாலோ, இரட்டை ஆட்சி ஏற்பட்டதாலோ அல்ல. அரசியல் அதிகாரத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் கொண்டே லெனின் இவ்வாறு வரையறுக்கிறார். அன்றைய நிலையில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி, புரட்சி இரண்டாவது கட்டத்திற்குத் தொடர்ந்து செல்லாமல் இருந்திருந்தாலும், இரட்டை ஆட்சி உருவாகாமல் இருந்திருந்தாலும் அடுத்து நாம் நடத்த வேண்டிய புரட்சி சோசலிசப் புரட்சி என்றுதான் லெனின் வரையறுத்து இருப்பார்.

புரட்சியின் கட்டம் அரசியல் அதிகாரம் எந்த வர்க்கத்திடம் உள்ளது என்பதை வைத்துத்தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளாமல், குறிப்பான நிலைமையை வைத்துத்தான் தீர்மானிக்க வேண்டும் எனக் கருதிக் கொண்டு ரசியாவின் குறிப்பான நிலைமை அனைத்து நாடுகளிலும் நிலவும்போதுதான் சோசலிசப் புரட்சி நடத்த முடியும் என்ற அபத்தமான முடிவுக்கு ஈஸ்வரன் வருகிறார். இந்த அபத்தமான முடிவுக்குக் காரணம் செயல்தந்திரங்களுக்கும் திட்டத்திற்கும் இடையில் உள்ள வேறுபாட்டை அவர் புரிந்துகொள்ளாதுதான். சோசலிசப் புரட்சியை அவர் ஒரு செயல்தந்திரம் எனத் தவறாகப் புரிந்து கொண்டு குழப்பிக் கொண்டதுதான்.

ஈஸ்வரன் கூறுவதை பார்ப்போம்:

"தனிப்பட்ட நபர்களை அன்றி எதார்த்த நடப்பு, மக்கள் திரள் மற்றும் வர்க்கங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய மார்க்சியவாதிகளுக்கு, மேலே சித்தரிக்கப்பட்டுள்ள மெய்யான நிலைமையின் பிரத்யேகத்தன்மை, இன்றைய தருணத்திற்கான போர்த்தந்திரங்களின் பிரத்யேகத் தன்மையினை நிர்ணயம் செய்ய வேண்டும். (நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் கடமைகள் -54) 

மேலே அவர் எடுத்தாண்டுள்ள லெனினின் மேற்கோளைக் காட்டி "சோசலிப் புரட்சி என்கிற செயல்தந்திரத்தை லெனின் தேர்ந்தெடுத்தது இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேகச் சூழ்நிலையில் இருந்தே என்பதில் எந்தச் சந்தேகமும் எழாத வகையில்தான் லெனின் விளக்கி இருக்கிறார்" என்று கூறுகிறார் ஈஸ்வரன். 

“இரட்டை ஆட்சி என்கிற பிரத்யேக நிலை காரனமாகவே சோசலிசப் புரட்சி என்கிற செயல்தந்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை லெனின் எந்த வகையிலும் மறக்கவில்லை” என்று மீண்டும் வலியுறுத்துகிறார். 

அதாவது, 'மெய்யான நிலைமையின் பிரத்யேகத்தன்மையிலிருந்து நிர்ணயம் செய்யப்பட்ட பிரத்யேகமான செயல்தந்திரம்தான் சோசலிப் புரட்சி' என்பது ஈஸ்வரன் தனது பொழிப்புரை மூலம் வந்தடைந்துள்ள புதிய கண்டுபிடிப்பு.

ஆனால், லெனின் பிரத்யேகமான நிலைமையிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட பிரத்யேகமான செயல்தந்திரம் சோசலிசப் புரட்சி என எங்கும் கூறவில்லை. என்பதுதான் உண்மை. லெனின் குறிப்பிடும் குறிப்பான செயல்தந்திரங்கள் என்பவை முற்றிலும் வேறானவை. அவர் மேற்கோள் காட்டியுள்ள லெனினின் பத்தியை முழுமையாகப் பார்ப்போம். 

"தனி நபர்களை அன்றி புறநிலை உண்மைகள், மக்கள் திரள் மற்றும் வர்க்கங்கள் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய மார்க்சியவாதிக்கு, மேலே விவரிக்கப்பட்டுள்ள மெய்யான நிலைமையின் குறிப்பான தன்மை இன்றைய தருணத்திற்கான செயல்தந்திரங்களின் குறிப்பான தன்மையை நிர்ணயம் செய்யவேண்டும்". 

இந்தப் பத்தியைத் தொடர்ந்து லெனின் அடுத்த பத்தியில் அந்தப் செயல்தந்திரங்களின் குறிப்பான தன்மை பற்றி விளக்குவதைப் பற்றிப் பார்ப்போம். 

"முதலாவதாக, நிலைமையின் குறிப்பான தன்மை "புரட்சிகர ஜனநாயக வாய்வீச்சுகளை " அம்பலப்படுத்த வேண்டும் எனக் கோருகிறது. விமர்சனம் என்பது நமது கட்டாயப் பணியாகும். குட்டி முதலாளியக் கட்சிகளான சோசலிசப் புரட்சியாளர்கள் கட்சி மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் தவறுகளை விளக்க வேண்டும்; உணர்வு பூர்வமான பாட்டாளி வர்க்க மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் சக்திகளைத் தயாரித்து உறுதிப்படுத்த வேண்டும்; "பொதுவான" குட்டி முதலாளியப் போதையிலிருந்து பாட்டாளிவர்க்கத்தை குணப்படுத்த வேண்டும்." . (அழுத்தம் லெனின் அவர்களுடையது. -The Peculiar Nature of the Tactics which Follow from Alove, April Theses, page. 31)

இந்தப்பத்தியைத் தொடர்ந்து அடுத்தடுத்த பத்திகளில் பிற செயல்தந்திரங்களாக பரப்புரையின் முக்கியத்துவத்தைப் பற்றியும், முதலாளிய வர்க்கத்தின் மீது மக்களுக்குள்ள அர்த்தமற்ற நம்பிக்கைகளை அம்பலப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றியும், ஆளும் வர்க்கம் மக்களை ஏமாற்றும் வழிகளான வஞ்சப் புகழ்ச்சி, நயமான சொற்றொடர்கள், சிறுசிறு சலுகைகள், தேவையானதை வைத்துக் கொண்டு தேவையற்ற சலுகைகளை வழங்கல் ஆகியவற்றை அம்பலப்படுத்துவது பற்றியும் விரிவாக விளக்குகிறார். (சுருக்கம் கருதி அந்தப்பத்திகளை முழுமையாக மொழியாக்கம் செய்யவில்லை. அவற்றின் சுருக்கமான சாரம் மட்டும் இங்கு தரப்பட்டுள்ளது.) 

லெனின் கூறும் செயல் தந்திரங்கள் இவைதான். லெனின் எங்கும் சோசலிசப் புரட்சியை செயல் தந்திரமாகக் குறிப்பிடவில்லை. ஆனால் ஈஸ்வரனோ சோசலிசப் புரட்சியைத்தான் பிரத்யேகமான செயல் தந்திரமாக லெனின் கூறுவதாகக் சிறிதும் கூசாமல் திரிக்கிறார். 

நிலைமையின் குறிப்பான தன்மைகள் செயல்தந்திரங்களின் குறிப்பான தன்மைகளைத்தான் நிர்ணயம் செய்கின்றன. அவை புரட்சியின் கட்டத்தை நிர்ணயிப்பதில்லை. புரட்சியின் கட்டத்தை எந்த வர்க்கத்திடம் அதிகாரம் இருக்கிறது, அடுத்து எந்த வர்க்கத்திடம் அதிகாரம் வர வேண்டும் என்ற விடயங்கள்தான் தீர்மானிக்கின்றன இந்த அடிப்படை விடயங்கள் கூடத் தெரியாமல், லெனின் குறிப்பான தன்மைக்கு ஏற்ற செயல்தந்திரமாக சோசலிசப் புரட்சியைத் தேர்ந்தெடுத்தார் என லெனினைத் “தனித்தனியாக” “ துண்டு துண்டாக” இல்லாமல் “முழுமையாகப் புரிந்து கொண்ட” ஈஸ்வரன் கூறுகிறார். சோசலிசப் புரட்சியை குறிப்பான நிலைமைக்கான செயல்தந்திரமாக லெனின் தேர்ந்தேடுத்தார் என்று லெனினைத் திரித்து புதிய கோட்பாட்டை உருவாக்குகிறார். 

1917 பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு சோவியத்துகள் ஒரு பக்கம், முதலாளிகளின் தற்காலிக அரசாங்கம் இன்னொரு பக்கம் என இரட்டை அதிகாரம் தோன்றினாலும் சோவியத்துகளில் போல்சுவிக்குகள் சிறுபான்மையாக இருந்தனர். சோசலிசப் புரட்சியாளர்களும், மென்சுவிக்குகளும்தான் பெரும்பான்மையாக இருந்தனர். சோவியத்துகள் தங்களுடைய அதிகாரத்தைத் தற்காலிக அரசாங்கத்திடம் விட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தன. 

இந்த நிலைமையில் கட்சியின் வேலை எவ்வாறிருக்க வேண்டும் என்பது பற்றி லெனின் கூறும்போது, “தொழிலாளர் பிரதிநிதிகளுடைய சோவியத்துகள்தான் புரட்சிகரமான அரசாங்கத்திற்கு சாத்தியமான ஒரே அமைப்பாக இருக்க முடியும். இதைப் பொதுமக்களுக்கு விளக்கிக் கூற வேண்டும். ஆகவே நம்முடைய வேலை என்னவென்றால் இந்த அரசாங்கம் எவ்வளவு நாட்களுக்கு முதலாளிகளுடைய செல்வாக்கிற்கு அடி பணிகிறதோ, அவ்வளவு நாட்களுக்கு அவர்களுடைய செயல்தந்திரங்களின் (Tactics) தவறுகளை எடுத்துக்காட்டி பொறுமையுடன் ஒழுங்குமுறைப்படி விடாமல் விளக்க வேண்டும். இந்தப் பிரச்சாரம் மக்களுடைய நடைமுறைத் தேவைகளைப் பிரதிபலிக்கக்கூடிய விளக்கமாக இருக்க வேண்டும். நாம் எவ்வளவு நாட்களுக்கு சிறுபான்மையாக இருக்கிறோமோ அவ்வளவு நாட்களுக்கு தவறுகளை எடுத்துக்காட்டி, விமர்சனம் செய்து கொண்டிருப்போம்.” என்கிறார். (அழுத்தம் லெனின் அவர்களுடையது.Lenin, April Theses, p.9). இவை லெனின் வைத்த செயல்தந்திரங்கள். 

லெனினின் கூற்றை விளக்கி ‘சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சின் வரலாறு’ கூறுவதைப் பார்ப்போம். “இதற்கு, அந்தச் சமயத்தில் சோவியத்துகளுடைய நம்பிக்கையைப் பெற்றிருந்த தற்காலிக அரசாங்கத்தை எதிர்த்து ஆர்த்தெழுந்து புரட்சி செய்ய வேண்டும் என்று மக்களை லெனின் அழைக்கவில்லை என்று அர்த்தம். அந்த அரசாங்கத்தை தலைகுப்புறக் கவிழ்த்து வீழ்த்த வேண்டுமென்று அவர் கூறவில்லை. ஆனால், விளக்கப் பிரச்சார வேலையைச் செய்வது; சக்திகளைச் சேர்ப்பது; சோவியத்துகளின் கொள்கையை மாற்றும் பொருட்டு, இவ்விரண்டு வேலைகள் மூலம் சோவியத்துகளில் பெரும்பான்மையைக் கஷ்டப்பட்டு அடைய வேண்டும். சோவியத்துகள் மூலம் அரசாங்கத்தின் கொள்கையையும் அரசாங்கத்தில் வீற்றிருந்த நபர்களையும் மாற்ற வேண்டும் என்று லெனின் விரும்பினார். 

புரட்சியின் வளர்ச்சி சமாதான முறையில் ஏற்படும் என்று இப்பாதை பார்த்தது.” (‘சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சின் வரலாறு’ பக்.303-304). 

ஆனால் 1917 ஜூலையில் நடந்த தொழிலாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் எழுச்சிக்குப் பிறகு பிப்ரவரியில் இருந்த குறிப்பான நிலைமை மாறியது. இந்த எழுச்சியை ஒடுக்கிய பிறகு “மென்சுவிக்குகளும், சோசலிசப் புரட்சியாளர்களும் முதலாளிகளுடனும் வெள்ளைப் படை ஜெனரல்களுடனும் சேர்ந்து கொண்டு போல்சுவிக் கட்சி மீது பாய்ந்தார்கள். ‘பிராவ்தாவின்’ கட்டிடத்தை இடித்தார்கள்.” (மேலே குறிப்பிடப்பட்ட நூல், பக்,316-317). 

செந்தொண்டர்களிடமிருந்த ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். லெனின் மீதும் பல போல்சுவிக்குகள் மீதும் “இராஜத் துரோகக்” குற்றச் சாட்டு வைக்கப்பட்டது. 

இந்த நிலைமை பற்றி, கட்சி வரலாறு கூறுவதாவது, “முதலாளிகளுடைய பிரதிநிதிகளான குச்சுகோவும், மில்யூகோவும் எதைச் செய்யத் தயங்கினார்களோ, அதை “சோசலிச” கெரன்ஸ்கியும், செரிடேல்லியும், செர்னோவும் தயங்காமல் செய்தார்கள். 

இரண்டு இடங்களில் இருந்த இரண்டு அதிகார அரசாட்சி ஒரு முடிவிற்கு வந்து விட்டது. 

முதலாளிகளுக்குச் சாதகமாக அது முடிவுற்றது. ஏனெனில் சோசலிசப் புரட்சியாளர்களையும் மென்சுவிக்குகளையும் சோவியத்துகள் பெரும்பான்மையினராகப் பெற்று தலைவர்களாகக் கொண்டிருந்தன. இந்த சோவியத்துகள் தற்காலிக அரசாங்கத்தின் வெறும் தொங்குசதையாக மாறிவிட்டபோது அரசு அதிகாரம் முழுவதும் தற்காலிக அரசாங்கத்தின் கைக்குச் சென்று விட்டது. 

சமாதான முறையில் வளர்ச்சியடைந்த காலம் முடிவுற்றது. ஏனெனில், இப்போது நிகழ்ச்சி நிரலில் துப்பாக்கியும் கத்தியும் வைக்கப்பட்டன.  

நிலைமை மாறுதலடைந்திருந்ததை உத்தேசித்து போல்சுவிக் கட்சி தன்னுடைய போர்த்தந்திரத்தை மாற்றிக் கொள்வதென்று தீர்மானித்தது; தலை மறைவாகச் சென்றது. ...ஆயுத பலம் கொண்டு முதலாளிகளின் அதிகாரத்தை வீழ்த்தி சோவியத்துகளின் அதிகாரத்தை உருவாக்குவது என்ற நோக்கத்தை மனதில் கொண்டு ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு வழிகோல ஆரம்பித்தது. (அழுத்தம் எமது. மேலே குறிப்பிடப்பட்ட நூல், பக்.317-318) 

மேலே விவரித்த நிகழ்வுகள் எதைக் குறிக்கின்றன.? சோவியத்துகளும் இரட்டை அதிகாரம் நிலவிய குறிப்பான நிலைமையில் அதற்கே உரிய செயல்தந்திரங்கள் வைக்கப்பட்டன. இரட்டை அதிகாரம் நிலவாத சூழலில் வேறு வகையான செயல்தந்திரங்கள் முன் வைக்கப்பட்டன என்பதுதான். ஆனால் இரண்டு நிலைமைகளிலும் சோசலிசப் புரட்சி என்ற திட்டம் மாறவில்லை. ஆனால் ஈஸ்வரனோ குறிப்பான நிலைமைக்கு ஏற்ற செயல்தந்திரம்தான் சோசலிசப் புரட்சி என்று குழப்பிக் கொண்டு, மற்றவர்களையும் குழப்புகிறார். 

தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தலைமையிலான முதலாளிய ஜனநாயகப் புரட்சித் திட்டம்தான் ரசியப் புரட்சியில் தொடக்கத்திலிருந்தே போல்சுவிக்குகளின் திட்டமாக இருந்தது. I905 புரட்சியின் போதும் அதுதான் திட்டமாக இருந்தது. 1917 பிப்ரவரிப் புரட்சியில் முதலாளி வர்க்கத்தின் கைகளுக்கு அரசு அதிகாரம் செல்லும் வரை அதுதான் போல்சுவிக்குகளின் திட்டமாக இருந்தது. 1905 க்கும் 1917 க்கும் இடையில் டூமாவின் தோற்றம், புரட்சி அலையின் ஏற்ற இறக்கங்கள் போன்ற குறிப்பான நிலைமைகள் தோன்றின. நிலைமையின் குறிப்பான நிலைமைகளுக்கு ஏற்ப, டூமாவைப் புறக்கணித்தல், டூமாவில் பங்கேற்பு, தாக்குதல், தற்காப்பு போன்ற குறிப்பான செயல் தந்திரங்களைத்தான் கட்சி மேற்கொண்டதே தவிர ஜனநாயகப் புரட்சி என்ற திட்டத்தை மாற்றிக் கொள்ளவில்லை. 1917 பிப்ரவரிப் புரட்சியின் போது போல்சுவிக்குகளின் திட்டத்தின்படி அதிகாரம் தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் வரவில்லை. அதன் காரணமாகவே அடுத்த கட்டமாக தொழிலாளர்களிடம் வறிய விவசாயகளிடமும் அதிகாரம் வந்தடைய வேண்டும் எனக் கருதி சோசலிசப் புரட்சித் திட்டம் முன்வைக்கப்பட்டது. இங்கு சோசலிசப் புரட்சி திட்டத்தை முன்வைத்ததற்குக் காரணம் ஏற்கனவே அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்குச் சென்று விட்டதுதானே தவிர நிலைமைகளின் குறிப்பான தன்மை காரணமல்ல. 

மேலும், போல்சுவிக்குகளுக்கும் மென்சுவிக்குகளுக்கும் ஜனநாயகப் புரட்சி என்பதுதான் தொடக்கத்திலிருந்தே திட்டமாக இருந்தது. ஆனால் அவர்களுடைய செயல்தந்திரங்கள் மாறுபட்டிருந்தன. இரு பிரிவினரின் செயல்தந்திரங்களுக்கு இடையில் இருந்த வேறுபாட்டை லெனினின் ‘ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு செயல்தந்திரங்கள்’ நூல் விரிவாக விளக்குவதை இங்கு நினைவு கூர்வது அவசியம். புரட்சியின் கட்டம் ஒன்றாக இருக்கும்போதே செயல்தந்திரங்கள் இங்கு வேறுபடுவதை இங்கு பார்க்கலாம். ஒன்று புரட்சிகரமான செயல்தந்திரங்கள்; இன்னொன்று சந்தர்ப்பவாதமும் வர்க்க சமரசத்தையும் கொண்ட செயல்தந்திரங்கள். 

புரட்சியின் திட்டத்திற்கும் செயல்தந்திரங்களுக்கும் இடையிலான அடிப்படையான வேறுபாட்டைக் கூடப் புரிந்துகொள்ளாமல் புரட்சியின் திட்டத்தை செயல்தந்திரம் எனக் குழப்பிக் கொண்டு மற்றவர்களையும் குழப்புகிறார் ஈஸ்வரன்.

இந்தக் குழப்பத்தின் காரணமாகவே அவர், “இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது என்று லெனின் கூறியதையும் இப்படிப்பட்டவர்கள் கருத்தில் கொள்ளவில்லை” என்று கூறி, அத்தகைய குறிப்பான நிலைமை இல்லாததால் சோசலிசப் புரட்சி என்ற “செயல்தந்திரத்தை” இங்கு வைக்க முடியாது என்ற அபத்தமான முடிவுக்கு வருகிறார்.

சோசலிசப் புரட்சி என்பது திட்டம். அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள்தான் செயல் தந்திரங்கள். ஆனால், அவரோ திட்டத்திற்கும் செயல்தந்திரங்களுக்கும் இடையிலான வேறுபாட்டைக் கூடப் புரிந்து கொள்ளாமல் சோசலிசப் புரட்சியை செயல்தந்திரங்கள் என்கிறார். புரட்சியில் முதலாளிய வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு புரட்சி அத்தோடு நின்று விடாமல் சோசலிசப் புரட்சிக் கட்டத்திற்குச் சென்றதும், தற்காலிக அரசாங்கமும் அதற்கு இணையாக சோவியத் வடிவ அரசாங்கமும் தோன்றியது ரசியப் புரட்சியின் குறிப்பான நிலைமை. ஆனால் இந்தக் குறிப்பான நிலைமை புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்க வில்லை. புரட்சியின் கட்டம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. முதலாளிய வர்க்கத்தின் கைக்குச் சென்றுவிட்ட அதிகாரம் தொழிலாளர்கள் மற்றும் வறிய விவசாயிகளின் கைகளுக்கு வர வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. சோசலிப்புரட்சி என்ற திட்டத்தை நிறைவேற்றும்போதுதான் அந்த இலக்கை அடையமுடியும். 

இவருடைய அபத்தமான கோட்பாட்டின்படி முதலாளியப் புரட்சி நிறைவுற்ற எந்த நாட்டிலும், சோவியத்துகளும் இரட்டை ஆட்சியும் இல்லாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற திட்டத்தை வைக்க முடியாது. 

ஈஸ்வரனின் குழப்பத்தினால் உருவாக்கப்பட்ட இந்த அபத்தமான கோட்பாட்டைத்தான் புதிய ஜனநாயகப் புரட்சி பேசுபவர்கள் தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அதை உயர்த்திப் பிடித்து வருகின்றனர். ‘ஏப்ரல் ஆய்வுரைகள்’ என்ற நூலில் உண்மையில் லெனின் என்ன கூறுகிறார் எனபதைப் புரிந்து கொள்ளாமல் ஈஸ்வரனின் தவறான பொழிப்புரையை லெனின் கூறியதாகப் பரப்பி வருகின்றனர். பாவம், இந்த அளவில்தான் அவர்களுடைய மார்க்சியம்- லெனினியம் பற்றிய புரிதல் உள்ளது. 

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ் நாடு

 

சான்று நூல்கள்:

1.Lenin, April Theses, Progress Publishers, Moscow, 1980

2.சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சியின் வரலாறு. தமிழில்:எம்.இஸ்மத் பாஷா, சவுத் விசன், சென்னை-2006.


Comments

  1. ருஷ்யாவில் அக்டோபரில் லெனின் சோஷலிசப் புரட்சி நடத்தியதற்கு காரணம், ருஷ்யாவில் தோன்றிய இரட்டை ஆட்சி முறை என்று கூறியதற்கு நான் ஆதாரங்களை முன்வைத்துள்ளேன். அந்த ஆதாரத்தை வைத்து விமர்சித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    எனது முடிவுக்கான லெனின் கருத்துக்கள்.

    “நமது புரட்சியின் மிகவும் குறிப்பிடத்தக்கதான இயல்பு என்னவென்றால் இது இரட்டை ஆட்சியைக் கொண்டுவந்திருக்கிறது என்பதே. இந்த உண்மையை முதலாவதாயும் முதன்மையாயும் புரிந்து கொள்ள வேண்டும்: இது புரிந்து கொள்ளப்படாவிட்டால் நாம் முன்னேற முடியாது.”
    (இரட்டை ஆட்சி -39)

    “நமது புரட்சியின் பிரதான இயல்புக்கூறு, கவனமாகச் சிந்தித்துத் தெளிய வேண்டும் என்று மிகவும் அவசர கட்டாயமாகக் கோருகிற ஓர் இயல்புக்கூறு இரட்டை ஆட்சி”
    (நமது புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள் -49)

    “5. தொழிலாளர்களின் பிரதிநிதிகளடங்கிய சோவியத் தோன்றிய பிறகு, நாடாளுமன்றக் குடியரசுக்குத் திரும்புதல் என்பது பின்நோக்கிச் செல்வதாகும். “ (ஆய்வுரை ஐந்தில்)
    (இன்றைய புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் பணிகள்)

    ReplyDelete
  2. நமது இறுதிக்குறிக்கோள் கம்யூனிச சமூகமே, அதற்கு இடையில் உள்ளது தான் சோஷலிச சமூகம். இது லெனின் காலத்திய கம்யூனிஸ்டுகளின் சொற்கள். மார்க்ஸ் கம்யூனிசத்தின் முதல் கட்டம் உயர் கட்டம் என்று கூறியுள்ளார். மார்க்ஸ் கூறிய முதற்கட்டம் நமது இறுதி குறிக்கோளாக இருக்காது, உயர் கட்டமே இறுதி குறிக்கோள் (strategy.) இறுதி கட்டத்தை அடைவதற்கான செயல்தந்திரமே முதற்கட்டம்.

    வார்த்தை விளையாட்டைக் கடந்து விமர்சனம் வையுங்கள் தோழர் பதிலளிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. அ.கா. ஈஸ்வரனின் பதில் மீது சில கருத்துகள்!

    நீங்கள் கூறுவது போல ரசியாவில் அக்டோபரில் லெனின் சோசலிசப் புரட்சியை நடத்தியதற்குக் காரணம் ரசியாவில் தோன்றிய இரட்டை ஆட்சிமுறை காரணமல்ல. முதல் கட்டத்தில் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. அதனால் முதலாளியப் புரட்சி கட்டம் முடிவுற்றது. அதன் காரணமாகவே சோசலிசப் புரட்சி திட்டத்தை லெனின் முன் வைத்தார். அதனைத் தெளிவாகவே லெனின் கீழ்க்காணும் வரிகளில் குறிப்பிடுகிறார்.

    “இன்றைய ரசிய நிலைமையின் குறிப்பான அம்சம் என்னவென்றால், நாடு புரட்சியின் முதல் கட்டத்தைக் கடந்து அதனுடைய இரண்டாவது கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கிறது. பாட்டாளிகளிடம் போதிய வர்க்க உணர்வும், போதிய அமைப்புப் பலமும் இல்லாததால் முதல் கட்டத்தில் அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்தது. இரண்டாவது கட்டத்தில் அரசியல் அதிகாரம் பாட்டாளிகளிடமும் விவசாய வர்க்கத்தில் மிகமிக ஏழையாக உள்ள பகுதியினரிடமும் வர வேண்டும்.” (அழுத்தம் லெனின் அவர்களுடையது. April Theses, p.8).

    மேலும் “புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கண்டிப்பான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.

    இந்த அளவில் ரசியாவில் முதலாளிய அல்லது முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவுற்று விட்டது.” தனது ஏப்ரல் ஆய்வுரையில் எழுதினார். (லெனின், மேலே குறிப்பிடப்பட்ட நூல், பக்.15)

    இரட்டை ஆட்சி தோன்றியது சோசலிசப் புரட்சியைத் தொடர்ந்து மேலே கொண்டு செல்வதற்கு ரசியாவில் சாதகமாக அமைந்த ஒரு அம்சம்தான். ஆனால் அது புரட்சியின் கட்டத்தைத் தீர்மானிக்கவில்லை. அரசியல் அதிகாரம் முதலாளிகளின் கைகளுக்கு வந்ததுதான் புரட்சியின் கட்டத்தைத் தீர்மானித்தது.. அதை லெனின் தெளிவாகவே மேலே குறிப்பிட்டுள்ளார்.

    “பழைய போல்சுவிக்குகள்” எனப்படுபவர்கள் அதை ஏற்றுக் கொள்ள மறுத்தனர். ‘“பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் புரட்சிகரமான ஜனநாயக சர்வாதிகாரத்தினால்தான்” முதலாளிய ஜனநாயகப் புரட்சி முடிவு பெறும் என நாம் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருக்கவில்லையா?” என்று கேட்டனர்.

    அவர்களுக்குப் பதில் கூறும் விதமாகவே, லெனின் பின்வருமாறு கூறுகிறார்: ‘புதிய, நிலவி வரும் உண்மை நிலையின் குறிப்பான அம்சங்களை ஆய்வு செய்யாமல் புரிதலற்று மனப்பாடம் செய்துள்ள சூத்திரங்களை வலியுறுத்தி வருகின்றனர்’ என “பழைய போசுவிக்குகளை” லெனின் விமர்சிக்கிறார். முதலாளிய ஜனநாயகப் புரட்சி இன்னும் முடிவுறவில்லை எனச் சூத்திரம்போலத் திரும்பத் திரும்பக் கூறும் பழைய போல்சுவிக்குகளைத்தான் லெனின் இவ்வாறு விமர்சிக்கிறார். முதலாளியப் புரட்சி முடிவுற்றது என்பதை வலியுறுத்தும் விதமாக அவர்களுக்கு விளக்குகிறார்.

    இன்னொரு பக்கம் மென்சுவிக்குகள் நாடாளுமன்றக் குடியரசு அமைக்க வேண்டும் கூறுகின்றனர். அவர்களுக்குப் பதில் அளிக்கும் விதமாகவே ஒரு பக்கம் ஏற்கனவே சோவியத் அதிகாரம் தோன்றியுள்ள நிலையில் நாடாளுமன்றக் குடியரசு அமைப்பது என்பது சோவியத் குடியரசிலிருந்து பின் நோக்கிக் செல்வதாகும் என லெனின் பதில் அளிக்கிறார்.

    ReplyDelete
  4. அ.கா. ஈஸ்வரனின் பதில் மீது சில கருத்துகள்! - - - - தொடர்ச்சி. . .

    ரசியாவில் சோவியத் ஆட்சி என்ற இணை ஆட்சி தோன்றியது ரசியா தொடர்ந்து சோசலிசப் புரட்சியை நடத்தி முடிக்கச் சாதமாக இருந்தது. அதனால்தான் அந்தக் குறிப்பான நிலைமைக்கு ஏற்ற குறிப்பான செயல்தந்திரங்களாக விளக்கப் பிரச்சார வேலையைச் செய்ய வேண்டும்; சக்திகளைச் சேர்க்க வேண்டும்; இவ்விரண்டு வேலைகள் மூலம் சோவியத்துகளில் பெரும்பான்மையைக் கஷ்டப்பட்டு அடைய வேண்டும்; அதன் மூலம் சோவியத்துகளின் கொள்கையை மாற்ற வேண்டும்; சோவியத்துகள் மூலம் அரசாங்கத்தின் கொள்கையையும் அரசாங்கத்தில் வீற்றிருந்த நபர்களையும் மாற்ற வேண்டும் என்று லெனின் விரும்பினார். இவைதான் குறிப்பான நிலையில் லெனினால் முன் வைக்கப்பட்ட செயல் தந்திரங்கள். நீங்கள் கூறுவது போல சோசலிசப் பரட்சி என்ற செயல் தந்திரத்தை அவர் முன் வைக்கவில்லை. ஏனென்றால் சோசலிசப் புரட்சி என்பது செயல் தந்திரமல்ல. லெனின் சொல்லாததை நீங்கள் லெனின் கூறியதாகக் கூறுகின்றீர்கள். அவ்வாறு லெனின் எங்கு கூறியுள்ளார், சுட்டிக் காட்டுங்கள் என்று கேட்டால் மழுப்பலான பதிலைக் கூறுகின்றீர்கள்


    ஆனால் மென்சுவிக்குகளும் சோசலிசப் புரட்சியாளர்களும் பெரும்பான்மையினராக இருந்த அந்த சோவியத்துகள் கூட 1917 ஜூலையில் நடந்த தொழிலாளர்கள், படை வீரர்களின் எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்ட பிறகு முதலாளிகளின் தற்காலிக அரசாங்கத்தின் தொங்கு சதையாக மாறி விட்டது. சோவியத் அதிகாரம் முடிவுக்கு வந்தது. அந்தக் கட்டத்தில் போல்சுவிக்குகள் தங்களுடைய செயல்தந்திரத்ததை மாற்றிக் கொண்டனர்.


    ‘நிலைமை மாறுதலடைந்திருந்ததை உத்தேசித்து போல்சுவிக் கட்சி தன்னுடைய செயல்தந்திரத்தை மாற்றிக் கொள்வதென்று தீர்மானித்தது; தலை மறைவாகச் சென்றது. ... ஆயுத பலம் கொண்டு முதலாளிகளின் அதிகாரத்தை வீழ்த்தி சோவியத்துகளின் அதிகாரத்தை உருவாக்குவது என்ற நோக்கத்தை மனதில் கொண்டு ஆயுதம் தாங்கிய எழுச்சிக்கு வழிகோல ஆரம்பித்தது.’ (அழுத்தம் எமது. சோவியத் கம்யூனிஸ்ட் (போல்சுவிக்) கட்சியின் வரலாறு , பக்.317-318)


    இவ்வாறு இரட்டை ஆட்சி இருக்கும்போது அமைதியான முறையில் தொழிலாளர்களையும் படை வீரர்களையும், விவசாயிகளையும் வென்றெடுத்து சோவியத்தில் பெரும்பான்மையாக மாறுவதற்காக வைக்கப்பட்ட செயல்தந்திரங்கள் வேறு; அதே சமயத்தில் இரட்டை ஆட்சி முடிவுக்கு வந்ததும் வைக்கப்பட்ட ஆயுதமேந்திய புரட்சி என்ற செயல்தந்திரம் வேறு. 1917 பிப்ரவரிப் புரட்சிக்கும் அக்டோபர் புரட்சிக்கும் இடையில், இரு வேறுபட்ட செயல் தந்திரங்கள் வைக்கப்பட்டதைப் பார்க்கின்றோம். ஆனால் கட்டம் ஒன்றுதான் ,அது சோசலிசப் புரட்சிக் கட்டம். உங்களுடைய கருத்துப்படி இரட்டை ஆட்சி என்ற குறிப்பான நிலைமை முடிந்ததும் “சோசலிசப் புரட்சி என்ற செயல்தந்திரத்தைக்” கை விட்டிருக்க வேண்டுமல்லவா? ஆனால் கட்சி சோசலிசப் புரட்சியைக் கைவிடவில்லை. ஏனென்றால் சோசலிசப் புரட்சி என்பது திட்டம், நீங்கள் கூறுவது போல குறிப்பான நிலைமைக்கு வைக்கப்படும் செயல்தந்திரமல்ல.


    அதே போல 1905 முதல் 1917 பிப்ரவரிப் புரட்சி வரையிலும் புரட்சியின் கட்டம் முதலாளியப் புரட்சிக் கட்டமாக இருந்தாலும் புரட்சி அலையின் ஏற்றஇறக்கங்களுக்கு ஏற்ப பலவேறு செயல்தந்திரங்கள் கடைப்பிடிக்கப்பட்டதை ஏற்கனவே உங்களுடைய கட்டுரையின் மீதான எமது விமர்சனத்தில் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால் அவற்றை நீங்கள் உள்வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.


    ஆனால் இன்னும் நீங்கள் உங்களுடைய தவறை ஒப்புக்கொள்ள மறுப்பதோடு மட்டுமல்லாமல் அதை நியாயப்படுத்தவும் செய்கிறீர்கள். கம்யூனிசக் கட்டம் என்னும் இறுதிக் கட்டத்தை அடைவதற்கான “செயல்தந்திரமே” சோசலிசம் என்று கூறி வார்த்தை விளையாட்டில் ஈடுபடுகின்றீர். ரசியாவில் இரட்டை ஆட்சி அதிகாரம் என்னும் குறிப்பான நிலையில் வைக்கப்பட்டது சோசலிசப் புரட்சி என்ற “செயல்தந்திரம்” என ஒரு பக்கம் கூறுகின்றீர்கள். இன்னொரு பக்கம் சோசலிசப் புரட்சி முடிந்ததும் கம்யூனிசத்தை அடைவதற்கும் சோசலிசம் ஒரு “செயல்தந்திரம்” என்று இன்னொரு அபத்தமான கருத்தை வைக்கின்றீர்கள்? இது உங்களுக்கே அபத்தமாகத் தெரியவில்லையா?


    உங்களுடைய அபத்தமான முடிவுகளுக்கு எல்லாம் காரணம் திட்டம் (programme), மூலவுத்தி (strategy), செயல்தந்திரம் (tactics) ஆகியவற்றுக்கு இடையிலுள்ள வேறுபாடுகளைப் பற்றியும், அவற்றுக்கு இடையில் உள்ள உறவுகள் பற்றியும் உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பதுதான். முதலில் அவற்றைத் தெரிந்து கொள்ளுங்கள். பிறகு விவாதிப்போம்.


    சோசலிசத் தொழிலாளர் இயக்கம்


    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடி...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...